Thursday, March 26, 2015

மாங்கொட்ட சாமி - புகழ்




எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் வாங்கிய சில புத்தகங்கள் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன அப்படி ஒன்று தான் இந்த மாங்கொட்ட சாமி. வழக்கம்போல் ஒரு ஞாயிறின் அந்தியில் டிஸ்கவரி புக் பேலசின் புத்தக வரிசைகளை மேய்ந்து கொண்டிருக்கையில் கண்ணில் சிக்கியது இந்நூல். உண்மையில் இந்த மாதிரி புத்தகத்தைத் தான் வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன், முதல் பக்க எழுத்து நடை அப்படியே மனசில் ஒட்டிக்கொள்ள வாங்கி வந்த கையோட படித்தும் முடித்தாயிற்று. 

மொத்தம் பதிமூன்று கதைகளைக் கொண்ட இந்நூல் பழைய பாக்கெட் நாவல் சைசில் இருக்கிறது. எவ்வித அலங்காரமும், புனைவுமற்ற எழுத்து நடை. ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் இருக்கிறது. இக்கதைகள் ஒவ்வொன்றையும் வாசித்து முடிக்கையில் அருகில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கதையாக சொன்ன உணர்வை தருகிறது. பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் மனிதர்களோடு சில காலம் பழகிய மன நிறைவை தருகின்றன இக்கதைகள். வாழ்ந்து சலித்த கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை எந்த சலிப்புமில்லாமல் சொல்லுவதில் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்  இந்நூலின் ஆசிரியர் திரு. புகழ்.

கிராமங்களில் முன்னோர்கள் சொல்லும் செவி வழி கதைகளை கூர்ந்து கவனித்தால் அதிலொரு நேர்த்தி இருக்காது. அங்குமிங்கும் அலைபாயும் தன்மை கொண்டவைகளாக இருக்கும். கதை சொல்லிகள் தங்களின் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி கதை மாந்தர்களை உருவகப்படுத்தி உயர்த்திச் சொல்வர். புகழின் கதைகளைனைத்தையும் செவி வழி கதைகளின் அச்சுப் பதிவாக காண்கிறேன். இதிலொரு நேர்த்தி இருக்கிறது. இவரின் கதை மாந்தர்கள் அவ்வளவு வலுவாக புனையப்பட்டிருக்கின்றனர். இக்கதைகளைனைத்தையும் புனைவு என்று எளிதில் கடந்து விட முடியாது, உதாரணமாக,  "செங்காட்டு ஜோசியன்", "தொங்கட்டான் கெழவி" என்ற இரண்டு கதைகளையும் சொல்லலாம்.

தொங்கட்டான் கெழவி எனும் கதையில், இளம் வயதிலேயே கணவனை பறிகொடுத்த பெண்ணொருத்தி தனது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காடுகரையில் கூலி வேலைசெய்து அவனை வாத்தியார் வேலைக்கும் படிக்க வைத்து விட்டதாகவும், பிறகு அந்தப் பையன் சம்பாத்தியத்தில் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து கிராமத்தில் நிலபுலன்களை வாங்கி, சொந்தங்களில் பெண் தருவதாக சொல்லியும், தனக்கு தெரிந்த பக்கத்தூரில் வறுமை நிறைந்த குடும்பத்திலிருந்த பெண்ணை பையனுக்கு கட்டி வைத்திருக்கிறாள். இறுதியாக, முப்பது நாளுக்கும் மேலாக இழுத்துக் கொண்டிருந்த கெழவி தன் மகனின் முகத்தை பார்த்ததும் உயிர் பிரிந்ததாக கதையை எளிதாக முடித்திருக்கிறார். வழமையான கதைதானே, இதிலென்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? கதையில் ஒரு நாவலுக்குண்டான விசயங்களை அடக்கி சொல்லியிருக்கிறார். கிராமப்புற இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பதையும், ஒப்பாரி வைக்கத் தெரியாத இளம் பெண்களுக்கு எப்படி ஒப்பாரி என்று வகுப்பெடுப்பதையும், பேருந்து நடத்துனரின் தில்லு முல்லுகளையும் அதற்கு கெழவி செய்த அறிவுக் கூர்மையான செயல்களையும் ;தொகுத்து சொன்னால் ஒரு நாவலே எழுதலாம். அந்த அளவிற்கு விசயங்களை உள்ளடக்கி குறுங்கதையாக்கியிருக்கும் எழுத்தாற்றல்.

அடுத்து செங்காட்டு ஜோசியன் என்னும் கதை, செமத்தியான தீனி. கிராமப் புற மக்கள் இன்னும் ஜாதகம் ஜோசியம் ன்னு திரிந்து கொண்டிருக்கிறார்கள். செங்காட்டில் ஜோசியன் ஒருத்தன் உள்ளது உள்ளபடி அப்படியே சொல்வதகாவும் அதனால் பலரின் அந்தரங்கள் வெளிப்பட்டு மனைவி மார்களிடம் விளக்கு மாறு அடிவாங்குவதாக சொல்கிறார். கல்யாணம் பண்ணி நாலு மாசம் கூட இருந்துவிட்டு வெளிநாடு போன ஒருத்தன் நாலு வருஷம் கழிச்சி வந்து மனைவி குழந்தையோடு வந்து ஜோசியம் பாக்க சென்றிருக்கையில் இது உன் புள்ளையே இல்லை எப்படிப்பா நான் ஜாதகம் பார்ப்பது என்று உண்மையை போட்டு உடைக்க, மிரண்டு போனவன் ஆத்திரத்தில் ஜோசியக்காரனை அடிக்கப் போக, ஜோசியன் மீண்டும் ஆணித்தரமாக சொல்ல, வெளிய எழுந்து வந்து மனைவியை போட்டு மிதிக்க, அவள் வலி தாங்காமல், நாலு மாசம் கூட படுத்துவிட்டு நீ வெளிநாடு போய்டுவே, நாலு வருஷம் நான் சும்மா இருப்பதா ? எங்க நீ இருந்து பாரேன் ன்னு காட்டுக் கத்தலா கத்தியதாக சொல்லியிருக்கிறார். ஒலச்சான் எனும் பாத்திரம் ஜாதகம் நீட்ட, நீ என்னைக்கு உன் கள்ளத்தொடர்பை விடுறியோ அன்னைக்கு நல்லா இருப்பே ன்னு போட்டு உடைக்க அது ஓலச்சானின் பொண்டாட்டி தெரிஞ்சி குடும்பத்தில் சண்டையாகிப் போக கடுப்பில் மறு வாரம் வேறொரு ஜாதகத்தை தூக்கி கொண்டு போயி அவனிடம் இது என் மகள் ஜாதகம் எப்ப கல்யாணம் நடக்கும்னு பாரு என்று சொல்லிருக்கார் ஓலச்சான். செங்காட்டு ஜோசியன் வாங்கிய ஒடனே, இந்த புள்ளையோட அம்மாக்காரி எப்படி எவன் கூடவோ ஓடிப்போயி மூணு மாசம் கழிச்சி திரும்பி வந்து நல்லபடியா குடும்பம் நடத்துறாளோ, அப்படித்தான் இந்தப் புள்ளையும் கல்யாணத்துக்கு முந்தி யார் கூடவோ ஓடிப்போயி ஆறு மாசம் கழிச்சி மீண்டும் வந்து நல்ல படியா கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தும் னு சொல்லிட்டு ஜாதகத்தை மூடி கீழ வைச்ச ஜோசியனை பார்த்து இது எம்மகள் ஜாதகம் இல்ல உன் மகள் ஜாதகம் டா ன்னு சொல்லிட்டு இன்னொரு ஜாதகமும் இருக்கு பாக்குறியா ? ன்னு சொல்லிட்டு ஒரு நூறு ரூபா தாளை எடுத்து அவன் மூஞ்சியில் வீசிவிட்டு வெளிய வருவதாகவும், அதிலிருந்து ஜோசியன் தன் தொழிலை விட்டதாக  கதை முடியும். ஒவ்வொரு கதையின் முடிவில் செம சுவையான முடிவு காத்திருக்கிறது.

இதுமாத்திரமில்லாமல் இதிலிருக்கும் கதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவையில் மனதை தைக்க கூடிய விஷயம் அடங்கியிருக்கும். கொடுக்கும் காசிற்கு நிச்சயம் மன நிறைவை அடைவீர்கள்.

பக்கங்கள் : 152

பதிப்பகம் : க்ரியா 

வெளியீடு : 2009

விலை : ரூபாய் 125/-   


படித்துச் சொன்னது 

அரசன் 
http://www.karaiseraaalai.com/
   

 

Sunday, March 1, 2015

மோகமுள் - தி. ஜானகிராமன்






இவ்வளவு நாள் வாசிக்காமல் விட்டுவிட்டோமே என்று என்னை நானே கடிந்து கொண்ட புத்தகம் இந்த மோகமுள். இதை வாசிக்கத் தூண்டிய அண்ணாச்சி மயிலனுக்கு அனேக வணக்கங்கள். 

இசையார்வம்/பாடும் வல்லமை கொண்ட ஒரு வாலிபன் வெளியூரில் தங்கி படிக்கிறான், தன்னைவிட வயதில் மூத்த பெண்ணொருத்தியை ஒருதலையாக காதலிக்கிறான், அந்தக் காதல் கை கூடியதா? இல்லையா? என்ற மையச்சரடை வைத்து 686 பக்கங்களுக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார் ஆசிரியர் தி. ஜானகிராமன். சுருக்கமாக சொல்கையில் பேரரசு படம் போன்று பீதியை கிளப்பினாலும், படிக்கையில் மகேந்திரன் படங்கள் போன்று மனதை தைக்கிறது.
  
ஒரு நடுத்தர பிராமண/சங்கீத குடும்பத்தின் ஆண்வாரிசான பாபு, கும்பகோணத்தில் தங்கி BA பயின்று வருகிறான். அப்பா வைத்தி, அம்மா, அக்கா பாபநாசத்தில் வசித்து வருகிறார்கள். இவனுக்கென, இவனை புரிந்து கொண்ட ஒரே நண்பனான இராஜம். மராத்திய ராஜ வம்ச வழியான பார்வதிபாய் தஞ்சாவூர் அய்யர் ஒருவருக்கு இரகசிய மனைவியாகவும் அதற்கு சாட்சியாக நாயகி யமுனா எனும் பேரழகி இருப்பதாக சொல்ல துவங்கி கதையை மிக நுட்பமாக செலுத்துகிறார்.

கும்பகோணத்தில் தங்கி படித்துக்கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டு வயதான மனிதரின் இளம் மனைவி தங்கம்மாளுடன் ஏற்பட்ட மொட்டை மாடி தனியறை சுகானுபவம், பின்பு பாபு குற்ற உணர்ச்சியில் உழலுதல், அடுத்தடுத்து தங்கம்மாள் வந்து கதவு தட்டுவதையும், யமுனாவிடம் சென்று தனது காதலை தெரிவிக்க, யமுனா மறுப்பு தெரிவிக்க, யமுனாவின் மீது கொண்டுள்ள தனது ஒருதலைக்காதலை ராஜத்திடமும் சொல்ல, இராஜம், பாபுவுக்கு வகுப்பெடுப்பது, பாபுவிற்கு கடிதம் எழுதி வீசிவிட்டு தங்கம்மாள் மகாமக குளத்தில் விழுந்து இறத்தல், அந்த வயதான கணவரின் பின்னணியை அவரின் முதல்தாரத்து மகனை வைத்தே சில பக்கங்களில் விவரிப்பது என்று பட்டாசாக வெடித்திருக்கிறார் ஆசிரியர் தி. ஜா.

பாபு, கும்பகோணத்தில் இருக்கையில் பாட்டுவாத்தியார் ரங்கண்ணா வும், சென்னை வந்த பிறகு பாலூர் இராமு இவர்கள் இருவரைக்கொண்டே சங்கீத சம்பாஷணைகளை தொடர்ந்து நாவலில் பதிந்து கொண்டு வருகிறார். சென்னையின் மாடியறை ஒன்றில் பாபு பாடுவதாகவும், இராமு கேட்பதாகவும் நாவலில் ஓரிடத்தில் வரும், அதை வாசிக்கையில் அனிச்சையாக நமக்கும் அந்த பாடல் ஒலி கேட்பதாக ஒரு உணர்வு தோன்றும். இதுதான் தி.ஜா அவர்களின் பேனாமுனை இரகசியம்.    

ஆறொன்று ஓடிக்கொண்டிருக்கையில், கிளையொன்று பிரிந்து வேறெங்கோ ஊர்சுற்றி பின்பு கடலிலோ அல்லது அதற்கு முன்பு பிரிந்த ஆறுடனோ இணைந்து கொள்வது போல, இந்நாவலில் ஏகப்பட்ட கிளைக்கதைகள் இருக்கிறது. கிளைக்கதைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் தாக்கம் மனதை விட்டு அகலாத அளவிற்கு அழுத்தமாய் இருக்கிறது.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் பாபுவின் பெரியப்பா பிள்ளை சங்கு பற்றிய சிறுகுறிப்பும், அப்புறம் பாபுவின்  அக்கா கணவர் இறப்பு, சொத்துக்களை பறித்துக்கொண்டு ஏமாற்றும் கணவன் வழி சொந்தம், அக்காவின் பெண் குழந்தை "பட்டு" இறந்து போவது போன்றவற்றை போகிற போக்கில் சொல்லிவிட்டு போனாலும் மனதில் அப்படியே வேர் விட்டு விழுதிறங்கிவிடுகின்றன அந்த சின்ன சின்ன பாத்திர படைப்புகள். 

முக்கியமாக, ஆணின் உள்ளத்து ஆசைகளையும், அதை பெண்ணொருத்தியிடம் வெளிப்படுத்திய பின்னர் ஏற்படும் சூழலையும் சொன்ன விதம் நறுக். உருவாக்கிய ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் அதன் இயல்பிலேயே முடித்திருப்பது நன்று. கண்ணியம் பிறழாத சொற்களை கொண்டு கிளுகிளுப்பான சம்பவங்களை சொன்னமைக்காகவே இந்த நாவல் தனித்துவமாக மனதில் நின்றுவிடுகிறது. 


இந்த நாவலில் நான் பிரமித்த விஷயங்கள் :


அ ) கதைக்குள் கிளைக்கதை, கிளைக்கதைக்குள் கிளைக்கதை என்று நகர்ந்தாலும் தெளிந்த நீரோட்டமாய் இருப்பது வியப்பாக இருக்கிறது.

ஆ) எத்தனை பாத்திரங்களை புகுத்தியிருந்தாலும் தெளிவான கட்டமைப்பினால் எவ்வித குழப்பமுமில்லாமல் இருப்பது.

இ) 30 ஆம் பக்கத்தில் சொல்லப்பட்ட கதாப்பாத்திரம் 600 வது பக்கத்தில் வந்தாலும், வாசிக்கையில் எளிதில் நினைவு கூற கூடிய வசீகரம்.

ஈ) சங்கீத சம்பாஷனைகள் கொண்டு பிண்ணப் பட்டாலும் எங்கும் அயற்சியை தரவில்லை.

உ) பாபு-யமுனா உரையாடல்கள் எதார்த்தமாய் இருக்கிறது கொஞ்சம் கூட நாடகத்தன்மையினறி இருக்கிறது. புத்தகத்தின் ப்ளஸ் இதுதான். 

ஊ) புத்தகம் முழுதும் ஏதோ ஒரு வித எதிர்பார்ப்போடு நகர்த்தி செல்வது, இப்படி சொல்ல நிறைய இருக்கிறது, வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப்பாருங்கள்.


ஐந்திணை பதிப்பகம் - 300/-

காலச்சுவடு (கிளாசிக் வரிசை) - 475/-

காலச்சுவடுக்கும், ஐந்திணை பதிப்பகத்தின் புத்தகத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை, (கிளாசிக் வரிசை என்ற கவர்ச்சியை தவிர) ஆகையால் ஐந்திணை தான் என்னோட பரிந்துரை. 

நூல் வாங்க:
ஐந்திணை முகவரி:-


No 279, Pycrofts Road Bharathi Street, Triplicane, Chennai - 600005 
   

படித்துச் சொன்னது 

அரசன் 
http://www.karaiseraaalai.com/