Sunday, May 25, 2014
சுபாவின் நாவல்கள் என்று சொன்னால் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது எது...? கரெக்ட்! நரேந்திரனும் வைஜயந்தியும்தான். நரேந்திரனின் குறும்பும் சாகசங்களும், வைஜயந்தியின் இளமையும் புத்திசாலித்தனமும் அனைவரையும் கட்டிப் போட்ட விஷயங்கள். சுபாவின் நரேந்திரன் வைஜயந்தி துப்பறியும் கதைகளை மட்டும் தொகுத்து ஒரு புத்தகத்தில் மூன்று நாவல்கள் என்ற கணக்கில் ஐந்து தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார்கள் பூம்புகார் பதிப்பகத்தினர். புத்தகத்தின் பக்கங்களைப் பொறுத்து ரூ.140லிருந்து 250 வரை விலை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால ஹார்ட் பௌண்டாக (கடினமான கெட்டி அட்டை) பதிப்பித்துத் தந்திருப்பதால் அதிக விலை என்ற எண்ணம் எழவில்லை.
இந்த ஐந்து தொகுதிகளில் நான் வாங்கிப் படித்தது நான்காவது தொகுதியை. அதைப் பற்றி அலசுமுன் சுபா இந்த ந. வை., கேரக்டர்களை எப்படி உருவாக்கினார்கள் என்பதைப் பற்றி புத்தகத்தில் அவர்களே சொல்லி இருப்பதைக் கேளுங்கள்...
படிக்கும் வாசகர்கள் குற்றவாளியின் புத்திசாலித்தனத்தையும் அதைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளனின் சாதுர்யத்தையும் மாறி மாறி அனுபவிக்க வேண்டும். சிலசமயம் மர்மக் கதைகள் தவிர துப்பறியும் கதைகள் எழுதினால் இது சாத்தியம் என்று தோன்றியது, அடுத்து வரம்புகளை அமைத்துக் கொண்டோம். எங்கள் நாயகன் போலீஸ் அதிகாரியாகவோ, வக்கீலாகவே இருக்கக் கூடாது. வெறும் விசாரணை, துப்புத் துலக்குதல் என்று பேசிக் கொண்டேயிராமல் அவன் நேரடியாக களத்தில் இறங்கிச் செயல்படும் சாகச நாயகனாக இருக்க வேண்டும். வெகு சுருக்கமாகச் சொன்னால் அவன் அறிவும் ஆற்றலும் ஒருங்கே அமையப் பெற்றவனாக இருக்க வேண்டும்.
அப்படி ஒரு நாயகனை மனதளவில் உருவாக்கியதும் அவனுக்குப் பெயர் வைக்கும் கட்டம் வந்தது. எல்லோருக்கும் பிடித்த பொதுவான பெயரைத் தேர்ந்தெடுக்க விழைந்தோம், எங்களுடைய ஆதர்ச நாயகர்களில் மிக முக்கியமானவரான விவேகானந்தரின் இயற்பெயரான நரேந்திரன் எங்கள் நாயகனுக்குச் சூட்டப்பட்டது. பெண்மையின் அழகும், தரம் தழையாத கம்பீரமும் உள்ள நாயகியாக வைஜயந்தியை உருவாக்கினோம்,
துப்பறியும் நாயகன் என்பதைவிட துப்பறியும் நிறுவனம் ஒன்று அமைத்து, அதில் வெவ்வேறு திறமைகள் கொண்ட சில நாயகர்களை அதில் பணியமர்த்தலாம் என்று அடுத்த சிந்தனை வந்தது. ராணுவத்தின் மீது எங்களுக்கு இருந்த பெரும் மதிப்பால் அதன் தலைமைப் பொறுப்பை ராணுவப் பின்னணி கொண்ட ஒருவரிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தோம், கட்டுப்பாடும் கண்ணியமும் மிக்க, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராம்தாஸ் தலைமையில் “ஈகிள்ஸ் ஐ டிடெக்டிவ் ஏஜன்ஸி” (கழுகுக்கண் துப்பறியும் நிறுவனம்) உதயமானது. அவருக்குக் கீழ் இயங்க நரேந்திரன், கருணாகரன், ஜர்ன்சுந்தர் என்று ஓர் இளைஞர் பட்டாளம் அமைக்கப்பட்டது. எழுத ஆரம்பித்த பிறகு நரேனுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். அவர்களில் நாங்களும் இருவர். ஆம், நரேந்திரன் - வைஜயந்திக்கு முதல் ரசிகர்களாக நாங்கள் இருக்கிறோம்.
‘சுபாவின் நரேந்திரன் வைஜயந்தி’’ நான்காவது தொகுப்பில் 1) மதிப்பிற்குரிய மகாராணி, 2) கரையோரம் காத்திரு, 3) கண்மணி, கண்ணைத் திற ஆகிய மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன, மூன்று கதைகளுமே விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல், வாசக சுவாரஸ்யத்திற்குச் சரியான தீனி போடும் படைப்புகளாக அமைந்துள்ளன. அவற்றை இங்கே அலசலாம்.
மதிப்பிற்குரிய மகாராணி - சீஃப் பைலட் விஜயகுமார் ட்ரிப் முடிந்து வீட்டிற்கு வர மனைவி ஷீலாவையும் மகள் ஸ்வப்னாவையும் காணவில்லை. ஒரு மர்ம கும்பல் அவன் மனைவி, மகளை கடத்தி வைத்துக் கொண்டு, அவர்கள் தரும ஒரு பொருளை அடுத்த அவனுடைய நியூயார்க் ட்ரிப்பில் அங்கு ஒரு நபரிடம் ஒப்படைத்தால் திரும்பக் கிடைப்பார்கள் என்று மிரட்டுகிறது. விஜய், ஈகிள்ஸ் ஐயின் உதவியை நாட, நரேந்திரன், வைஜயந்தி மற்றும் ஜான்சுந்தர் துணையுடன் துப்பறிந்து, சில பல சாகசங்கள் செய்து அவர்கள் இருவரையும் மீட்கிறான். எத்தனையோ பைலட்கள் இருக்க, விஜயகுமாரை மட்டும் அந்தக் கும்பல் ஏன் செலக்ட் செய்து அவன் மனைவி, மகளைக் கடத்தினார்கள் என்கிற காரணத்தையும் கண்டுபிடிக்கிறான்.
கரையோரம் காத்திரு - விஜயநகரத்தைத் தாண்டிய ஒரு ஒதுக்குப்புறமான ஏரிக்கரையில் ஓர் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. அவள் யார், கொன்றது யார் என்கிற விசாரணையில் போலீஸ் ஈடுபட, அந்தப் பெண்ணின் தந்தை நரேந்திரனின் உதவியை நாடுகிறார், சமூகத்தில் பெரும்புள்ளியான அவர் தன் மகள் காதலனோடு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும், அவளைக் கொன்றவன் அவன்தான் என்றும் கூறி இருவரின் போட்டோக்களை தருகிறார். தன் பெயர் வெளிவராமல் அவனை நரேந்திரன் மடக்க வேண்டும் என்கிறார். நரேந்திரன் ரகசியமாகத் துப்பறிய, போலீஸின் செயல்பாடுகளில் அவன் குறுக்கிடுவதாக இன்ஸ்பெக்டர் பால்ராஜ் கொந்தளிக்கிறார். இறுதியில்... வேறென்ன.. கதாநாயகனாக லட்சணமாக அந்தப் பெண் வினரதாவைக் கொன்றவன் அவள் காதலன் அல்ல, வேறொருவன் என்பதை (அஃப்கோர்ஸ் சில சாகசங்களுக்குப் பின்) நரேந்திரன் கண்டறிந்து போலீசில் ஒப்படைக்கிறான்.
கண்மணி, கண்ணைத் திற - முந்தைய இரு கதைகளை விட அடுத்தடுத்து நிகழும் மர்மம் + மரணம் காரணமாக இது விறுவிறுப்பின் உச்சம் தொட்டது. ஒரு கட்டிடத்தில் திருஷ்டி பொம்மைக்கு பதிலாக சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் பிணம் இருப்பதை வாக்கிங் செல்பவர்கள் பார்த்து போலீசில் சொல்ல, போலீஸ் விசாரித்து சந்தேகத்தின் பேரில் அவள் (மாலதி) கணவன் மணிவண்ணனை கைது செய்கிறது, அவன் போலீஸிடமிருந்து தப்பி தலைமறைவாகி நரேந்திரனின் உதவியை வேண்டுகிறான். குற்றவாளியை நரேன் கண்டுபிடித்தால் தான் சரண்டராவதாகக் கூறுகிறான்.
நரேந்திரன் களத்தில் இறங்கி, மாலதியின் பிணம் கண்டெடுக்கப்பட்ட கட்டிடத்தில் ஒரு சிறுவனின் ரத்தக் கைரேகை (போலீஸ் தவறவிட்ட) இருப்பதை கண்டறிகிறான். தொடரும் விசாரணைகளுக்கிடையில் மிரட்டல் எச்சரிக்கைகள் வர, தொடர்ந்து நரேந்திரன் மர்ம உருவம் ஒன்றினால் தாக்கப்படுகிறான். மணிவண்ணனின் பார்ட்னர் ராம்நாத் தான் தன்னை அடித்தது என்பதைக் கண்டறிந்து அவனை போனில் எச்சரித்து விட்டு நரேன் அவனைப் பார்க்கச் செல்ல... ராம்நாத்தின் பிணமாகக் கிடப்பதைப் பார்க்கிறான். துப்பறிதல் வேகம் எடுக்கிறது. இறுதியில் நரேந்திரன் கொலை செய்தவனைக் கண்டுபிடிக்க, அவன் போலீசில் சரண்டராக, மணிவண்ணன் விடுதலையாகிறான். க்ளைமாக்ஸில் கொலைக்காக அவன் கூறும் காரணமும் கொலை நடந்த அன்று இரவு நடந்த சம்பவங்களையும் விவரிக்கையில் படிப்பவருக்கு திடுக் உணர்வை ஏற்படுத்துவது சுபாவின் வெற்றி. மூன்றில் சிறந்தது எதுவெனக் கேட்டால் இதைக் கூறலாம்.
237 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை 235 ரூபாய் விலையில் பூம்புகார் பதிப்பகம் (127, ப,எண்,63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை/600 108. போன்: 044/25267543) வெளியிட்டிருக்கிறது. ஐந்து தொகுதிகளையும் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை இந்தப் புத்தகம் தருகிறது. ஆனால் விலையைக் கணக்கிடுகையில் அந்த ஆர்வத்தை அட்க்கு அடக்கு என்று பட்ஜெட் போடும் மனைவி தலையில் தட்டுகிறாள். ஹி... ஹி... ஹி...! உங்களுக்கு ஆர்வமும், விருப்பமும், பட்ஜெட் பிரச்னையும் இல்லாதபட்சத்தில் ஐந்தையும் படிக்கலாம் என்பதே என் சிபாரிசு.
Subscribe to:
Post Comments (Atom)
ஹி... ஹி... படிக்கலாம்...
ReplyDeleteஇன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்.
இருப்பினும் நச்சுனு கதை சுருக்கம் தந்தமைக்கு நன்றிகள்.
மிக விரிவான அலசல் பாலா. நானும் நரேந்திரன் வைஜெயந்திக்கு ரசிகைதான். :)
ReplyDeleteஉங்க சுறுசுறு விமர்சனம் விறுவிறு நாவல்களை படிக்கும் ஆர்வத்தை தூண்டுதே.!
ReplyDeleteஆவலை தூண்டிவிட்டீர்கள்! நரேந் வைஜயந்தி நாவல்கள் சில படித்து இருக்கிறேன்! இந்த மூன்றையும் படிச்சது இல்லை! பார்ப்போம்!
ReplyDeleteசிறப்பான விமர்சனம் - ரத்தினச் சுருக்கமாய் கதையைச் சொல்லி படிக்கத் தூண்டியது பிடித்தது.....
ReplyDeleteவாசிப்பை நேசிப்போம்....
துப்பறியும் கதைகள் உண்மையிலேயே கொஞ்சம் இதய துடிப்பை அதிகரிக்கத்தான் செய்யும் ... திரில்லிங்கிற்காக படிக்கலாம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete