Sunday, July 13, 2014

எ.மூ.வீ.நாத் படைத்த ‘பணம்!’

திகாலத்தில் மனிதர்கள் தங்களிடமிருக்கும் பண்டங்களைக் கொடுத்து அதற்கு மாற்றாக தங்களுக்கு வேண்டிய பண்டங்களைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்தினர். இந்தப் பண்டமாற்று முறையை மாற்றி மன்னராட்சிக் காலத்தில் செப்புக் காசுகளும், பொற்காசுகளும் புழங்கலாயின. பின்வந்ததுதான் கரன்சி என்கிற பணம். மனிதன் தன் வசதிக்காகக் கண்டுபிடித்த, அவனின் கட்டுப்பாட்டில் இருந்த பணம் நாளடைவில் மனிதனைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆதிக்கம் புரியலாயிற்று.

பணம் சம்பாதிப்பதையே வெறியாகக் கொண்டு மனிதர்களைச்  செயல்படச்  செய்தது. நிறையப் பணம் இருப்பதால் கிடைக்கும் வசதிகளும், செல்வாக்கும் மனிதர்களுக்குப் போதை தர, பிறரை மதிக்காத, அந்தஸ்து என்கிற ஒன்றை பெரிதாகக் கருதும் குணத்தை அது ஏற்படுத்தியது. பணத்தை அடைவதற்காக எத்தகைய சூழ்ச்சிகளும், துரோகங்களும் செய்கிற துணிவை மனிதர்களுக்கு அது ஊட்டியது. 

பிரபல எழுத்தாளரான எண்டமூரி வீரேந்திரநாத் எழுதி ஆந்திர மக்களிடம் பெரும் வரவேற்பைப்  பெற்று ஹிட்டடித்த நாவல் ‘டப்புடப்பு’ நாவல் இதைத்தான் அலசியது. தமிழில் சுசீலாகனகதுர்கா அவர்களால் ‘பணம்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது இந்த நாவல். 

காந்தி படித்த வேலையற்ற இளைஞன். மிகபுத்திசாலி, கணக்கில் புலி. தாயார் இறந்தசமயம் இறுதிச் சடங்குகள் செய்யவும் பணமில்லாத அளவு வறுமை. பணக்காரர் ராஜாராமின் மனைவியை ஹார்ட் அட்டாக்கினால் அட்மிட் செய்ய வந்திருக்க, அவர் மகள் ஹாரிகாவிடம் தன் கணிதத் திறமையைக் காட்டி பணம் சம்பாதித்து, தன் தாயை உலகிலிருந்து வழியனுப்புகிறான். பின் வாழ்க்கையில் வெறுப்புற்று, காலில் கல்லைக் கட்டிக் கொண்டு ஆற்றில் குதிக்கிற காந்தி, அங்கே ஒரு பெண் ஆற்றில் தத்தளிப்பதைக் கண்டு அவளைக் காப்பாற்றுகிறான். அவள் பெயர் லக்ஷ்மி. காந்தியினுள் தன்னம்பிக்கையை விதைக்கிறாள் அவள்.

பேப்பரில் வித்தியாசமான ஆட்கள் தேவை விளம்பரத்தைப் பார்க்கும் காந்தி அதற்கு (வேண்டுமென்றே) ஸ்டாம்ப் ஒட்டாத கவரில் விண்ணப்பிக்கிறான். அந்த விளம்பரம் தந்தவரான ராஜாராம் அவனை இண்டர்வியூவுக்கு அழைக்கிறார்.  பேசுகையில் காந்தி மிக அறிவாளி என்பதை கணக்கிடுகிறார் அவர். பணம் சம்பாதிப்பதற்கும் பிறரை மோசம் செய்வதற்கும் தொடர்பு இருந்தே தீரும் என்கிற காந்தியின் சித்தாந்தத்தை மறுத்து விவாதிக்கிறார். ஒரு கட்டத்தில் ஐந்து வருஷத்தில் ஐம்பது லட்சம் சம்பாதிப்பது ஒன்றும் முடியாத காரியமில்லை என காந்தி சொல்ல, அதுவே பந்தயமாகிறது அவர்களுக்குள். அப்படி அவன் சாதித்துவிட்டால் தன் மகளைத் தருகிறேன் என்று உணர்ச்சி வசப்பட்டு பந்தயமிடுகிறார் ராஜாராம். சம்பாதிப்பதற்கான நிபந்தனை - சட்டத்திற்குப் புறம்பாக ஒரு பைசாகூட சம்பாதித்திருக்கக் கூடாது என்பது.

கோடீஸ்வரனிடம் பந்தயம் போட்டுவிட்டு வந்த காந்தியின் கையில் அப்போது இருப்பது பத்துப் பைசா மட்டும்தான். ‘நீ என்ன அமிதாப்பச்சனா, மே கஸம் கர்தாஹும்னு சவால் விட்டு ஜெயிக்கறதுக்கு’ என்று கேலி செய்யும் லக்ஷ்மி அவனுக்கு துணை செய்கிறாள். சம்பாதிக்கத் துவங்குகிறான். அந்தக் கடினமான போராட்டத்தில் பணம் அவனுக்கு வசப்பட்டு பணக்காரனாகும் நேரம். பரபமபத பாம்பு கடித்தாற் போன்று நஷ்டம் தாக்கி மீண்டும் பழைய நிலையை அடைகிறான். பின்னே... அவனை ஜெயிக்கவிட்டு  மகளைத்தர ராஜாராம் முட்டாளா என்ன.... அவர் செய்த திட்டம் (சூழ்ச்சி?)யின் விளைவுதான் அது.

அப்போது பந்தயம் விட்டு நான்காண்டுகள் நிறைந்திருக்கின்றன. எஞ்சிய ஓராண்டு தீர்மானிக்கப் போகிறது அவன் வெற்றியாளனா இல்லை தோற்றவனா என்று. அந்த சுவாரஸ்யமான போட்டியில் ராஜாராமை மீறி காந்தி எப்படி சாதித்தான்? லக்ஷ்மி அவனை விரும்ப, ஹாரிகா வெளியே காட்டிக் கொள்ளாமல் மனதிலேயே அவனை விரும்பி அவனுக்கு மறைமுக உதவிகள் செய்ய. இருவரில் யாரை அடைந்தான் அவன்? அவன் பெற்ற வெற்றி உண்மையில் வெற்றிதானா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையை பரபரப்பாக பக்கங்களைப் புரட்ட வைக்கும் ‘பணம்’ புத்தகம் உங்களுக்குப் பகரும்.

மிக சீரியஸான, கனமான ஒரு விஷயத்தைக் கையாளும் போது நிறையத் தகவல்களும் தரவேண்டியிருப்பதால் படிப்பதற்கு விறுவிறுப்பிருக்காது என்ற பொதுக்கருத்தைத் தகர்க்கிற புத்தகம் இது.  அடுத்தடுத்த சம்பவங்களும், துரோகங்களும் சேர்ந்து கதையை விறுவிறுப்பாகப் படிக்கச்  செய்வதுடன் நிறைய விஷயங்களை நமக்கு அதனுனூடாகப் பரிமாறியிருக்கிறார் எ.மூ.வீ.நாத். எப்படி சில  தொழிலதிபர்கள் அந்தத் துறையில் அவர்கள் அறியாமல் ஒரு துரும்பும் அசையாது என்கிற அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதில் துவங்கி பங்குச் சந்தை, ஷேர்கள் போன்ற பணம் சம்பாதிப்பதற்கான ஆதார வழிகளை அலசி, படிப்பவர்களுக்குள் சற்றேனும் விஷயஞானத்தை ஏற்றி விடுகிறார் எ.மூ.வீ.நாத். 

364 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை சென்னை உஸ்மான் சாலையில் உள்ள பாரதி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. 1985ம் ஆண்டில் வெளியான பதிப்பு (விலை உள்ள பக்கம் இல்லாததால் தெரியவில்லை). இப்போது கௌரி கிருபாநந்தன் மொழிபெயர்ப்பில் அல்லயன்ஸ் பதிப்பம் வெளியிட்டுள்ளது இந்தப் புத்தகத்தை.

டெய்ல் பீஸ் :  இந்தப் படம் சிரம்சீவி ச்சே... சிரஞ்சீவி, சுஹாசினி நடிக்க படமாக வெளிவந்து தமிழிலும் ‘டப்’பப்பட்டது.  நாவல் நமக்குள் உருவகப்படுத்தும் காந்தி திரையில் இல்லை. சிரஞ்சீவிக்காக சண்டைக் காட்சி, டூயட் காட்சிகள் என்றெல்லாம் வைத்து படுத்தியிருந்தது படம். எ.மூ.வீ.நாத் பார்த்திருந்தால் நிச்சயம் கதறி அழுதிருப்பார்.

4 comments:

  1. எனக்கு மிகவும் படித்த கதை இது தமிழில் முதலில் குங்குமத்தில் தொடர்கதையாக வந்தது அதை தொகுத்து வைத்து இருந்தேன், மிக சுவாராஸ்யமாக இருக்கும், இது நெட்டில் இருந்தால் தெரியப்படுத்தவும்

    ReplyDelete
  2. "குமுதம்" அல்லது "குங்குமம்" பத்திரிகையில் தொடராக வந்தப்போப் படிச்ச நினைவு இருக்கு. இதுவும் துளசி, துளசிதளம், மீண்டும் துளசி, போன்ற நாவல்களும், ஆங்கிலத்தில் வந்த "ஃபீவர்" என்னும் நாவலின் மொழியாக்கம் ஒன்றும் என்டமூரியின் கைவண்ணத்தில் படிச்சேன். :))) இந்தப் பணம் நாவலும் கூட ஆங்கிலத்தில் வந்தது தான் என்பார்கள். ஆனால் ஆங்கில நாவலின் பெயர் தெரியவில்லை.

    ReplyDelete
  3. எண்டமூரியின் ஏதோ ஒரு கதை மட்டும் படிச்சிருக்கேன். இது இல்லை. படமாக வேறு வந்ததா? சரிதான்!

    ReplyDelete
  4. ஆந்திர நாவலான "டப்புடப்பு" ... அதுக்குள்ளாக டப்புடப்புன்னு "பணம்" என்கிற பெயருல மொழி பெயர்த்துட்டாங்களா?... பார்ரா !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!