Sunday, August 3, 2014
ஹாரிபாட்டர்..! தன்னை உருவாக்கிய ஜே.கே.ரோலிங் என்ற பெண்மணியை உலகப்புகழ் பெற வைத்த கதாபாத்திரம்! 7 நாவல்கள் அடங்கிய ஹாரிபாட்டர் கதைகள் பல விமர்சனங்களுக்கு உள்ளானாலும்கூட முதல் நாவல் வெளியான 1997ம் ஆண்டிலிருந்து கடந்த 2013 வரை 450 மில்லியன் பிரதிகளுக்கு மேல் ஹாரிபாட்டர் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஹாரிபாட்டரின் கடைசி 7வது புத்தகம் வெளியான 24 மணி நேரத்திற்குள் 11 மில்லியன் காப்பிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது. உலகெங்கிலும் இதுவரை 73 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (இப்போது தமிழுடன் சேர்த்து 74)
பிரிட்டிஷ் பெண்மணியான ஜே.கே.ரோலிங் ஒரு ரயில் பயணத்தின் போது அவர் மனதில் தோன்றிய ஹாரிபாட்டர் கதைக்கான கருவைக் கதையாக வளர்க்க இந்த 7 நாவல்களும் உலகப் புகழ் பெற்று விற்பனையில் சாதனை படைத்து ரோலிங்கை கோடீஸ்வரியாக்கி விட்டன. (நானும் ரயில் பயணம் பண்றப்பல்லாம் மண்டையக் குலுக்கி புரட்டித்தான் பாக்குறேன்.. ஒண்ணும் தோண மாட்டிங்குது..... அவ்வ்வ்வ்வ்). இப்படி ஒரே கதாபாத்திரத்தை வைத்து தொடர் நாவல்களாக தமிழில் எழுதினால் அந்த எழுத்தாளர் கோடீஸ்வரர் இல்லை... லட்சாதிபதியாகக் கூட சாத்தியமில்லை. ஆங்கில மொழியின் வீச்சு அத்தகையது.
அப்படி என்னதான்யா இருக்குது இந்தக் கதைங்கள்லன்னு படிக்கறதுக்கு நிறையவே ஆசை இருந்தாலும் இங்கிலீசுல படிச்சு அதை மனசுல தமிழாக்கிப் புரிஞ்சுக்கற அளவுக்கு நமக்கு ‘சமாசாரம்’ இல்லங்கறதால அந்த ஆசைய விட்டுட்டேன். சமீபத்துல ஹாரிபாட்டர் முதல் இரண்டு பாகங்கள் தமிழ்ல பெயர்க்கப்பட்டு வந்திருக்குன்னு பார்த்ததுமே வாங்கிட்டு வந்துட்டேன். முதல் புத்தகத்துல கேரக்டர்களை அறிமுகப்படுத்தி பேஸ்மெண்ட் போட்ருக்கறதால மெதுவாத்தான் படிக்க முடிஞ்சது. ரெண்டாம் பாகத்தை ஜெட் வேகத்துல படிச்சு முடிச்சுட்டேன்.
நம்ம நாட்ல விக்கிரமாதித்தன் கதைகள்னு ஒண்ணு இருக்கு. விக்ரமாதித்தன் தன் தம்பி பட்டி, வேதாளம் துணையுடன் மந்திரக் கம்பளத்தில் பறப்பார். நினைத்த உருவத்துக்கு மாறுவார். தன் மந்திர வாளால எப்பேர்ப்பட்டவனையும் வெட்டி வீழ்த்துவார் (கூடவே பாக்கற பொண்ணையெல்லாம் கல்யாணமும் செஞ்சுப்பார், ஹி... ஹி.. ஹி...) இப்படிப் பல சாகசங்கள் நிரம்பியதாயும் கதைக்குள் கதைக்குள் கதை என்று அவை எழுதப்பட்ட விதமும் பிரமிப்பைத் தரும் விஷயம். அத்தோட ஒப்பிட்டா ஹாரிபாட்டர் பொடியன்னுதான் சொல்லணும். ஆனாலும் இந்த மந்திர மாய விஷயங்கள் மேல்நாட்டினருக்குப் புதுசுன்றதாலயோ என்னவோ உலகப்புகழ் அடைஞ்சுட்டான் ஹாரிபாட்டர்.
ஹாரிபாட்டரை உரிச்சா... முதல் பாகமான ‘ஹாரிபாட்டரும் ரசவாதக்கல்லும்’ நாவல். வோல்டமார்ட் என்கிற தீய மந்திரவாதியுடன் மோதியதில் ஹாரியின் தாய் தந்தையர் இறந்துவிட. அதற்குப்பின் வோல்டமார்ட்டும் மறைந்துவிட, கைக்குழந்தையான ஹாரியை மந்திர மாயாஜாலங்கள் கற்றுத்தரும் ‘ஹாக்வர்ட்ஸ்’ பன்ளியின் தலைமையாசிரியரான டம்பிள்டோர் அவன் பெரியப்பா மற்றும் பெரியம்மாவிடம் சேர்ப்பிக்கிறார். ஹாரியின் பெற்றோர் மந்திரவாதிகளான காரணத்தால் அவர்களை வெறுக்கும் அந்தக் குடும்பத்தில் கஷ்டங்களை அனுபவித்து வளரும் ஹாரி. வளர்ந்ததும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக ஹாக்வர்ட்ஸ் பள்ளியில் சேர்கிறான்.
அங்கே அவனுக்கு ரான் என்கிற தோழனும் ஹெர்மயனி என்கிற தோழியும் கிடைக்கிறார்கள். மால்பாய் என்கிற எதிரியும் உருவாகிறான். மந்திரத் துடைப்பத்தால் விண்ணில் பறந்து விளையாடும் ‘குவிடிச்’ என்ற விளையாட்டில் சாம்பியனாகும் ஹாரி. அவ்விளையாட்டின் போது யாரோ தன்னை அழிக்க முற்படுவதை உணர்கிறான். தன் நண்பர்கள் உதவியுடனும் அவனுக்குக் கிடைக்கும் தந்தையின் சொத்தான மறைய வைக்கும் கம்பளத்தின் உதவியுடனும் துப்பறிதலில் ஈடுபடுகிறான். டம்பிள்டோரின் நண்பர் உருவாக்கிய ரசவாதக் கல்லைக் கைப்பற்றுவதற்காகத்தான் இவ்வளவும் நடைபெறுகிறது என்பதையும் வோல்டமார்ட்தான் அங்கிருக்கும் நபர் ஒருவரைக் கைப்பற்றி இதில் ஈடுபட்டதையும் அறிகிறான். ஹாரி அண்ட் ப்ரண்ட்ஸ் ஊகித்த நபராக அல்லாமல் வேறொருவர்தான் வோல்டமார்ட்டின் புகலிடம் என்பதைத் தெரிந்து திடுக்கிட்டலும் துணிவாக மோதும் ஹாரி. வோல்டமார்ட்டை அழிக்கிறான்.
இரண்டாம் பாகமான ‘ஹாரிபாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்’ நாவலில் இரண்டாமாண்டு மாணவனாக இருக்கும் ஹாரி, ரான் குடும்பத்தினருடன் மிக நெருக்கமாகிறான். சாதாரணமாகத் துவங்கும் அப்பள்ளியாண்டில் அசாதாரண சம்பவங்கள் நிகழத் துவங்குகின்றன. ஒரு மாணவியும், பேராசிரியரின் பூனையும் கல்லாக்கப்படுகின்றனர். அந்த இடத்தின் சுவரில் பாதாள அறை திறக்கப்பட்டு விட்டதாகவும், அதிலிருக்கும் ரகசிய விலங்கு வெளிப்பட்டு விட்டதால் எச்சரிக்கை என்றும் எழுத்துகள் மின்னிக் கொண்டிருக்கின்றன. அந்த மர்ம விலங்கின் குரல் அவ்வப்போது ஹாரிக்கு மட்டும் கேட்கிறது. நிஜமாகவே பாதாள அறை இருக்கிறதா? அதிலிருக்கும் ரகசிய விலங்கு என்ன? எப்படி அதன் குரல் ஹாரிக்கு மட்டும் கேட்கிறது என்கிற கேள்விகளுக்கு விடை தேடி துப்பறிய முற்படுகின்றனர் ஹாரி அண்ட் பிரண்ட்ஸ்.
பரபரப்பான சில திருப்பங்களுக்குப் பின் அந்த விடையை நெருங்கிக் கண்டறிகிற சமயத்தில் ஹெர்மயனியும் சிலையாக கண்டெடுக்கப்படுகிறாள். அவள் கையிலிருக்கும் ஒரு துண்டுச்சீட்டின் துப்பு மூலம் ரகசியத்தின் திறவுகோலை அறியும் ரானும் ஹாரியும் பாதாள அறையினுள் நுழைகின்றனர். அங்கே ரானைப் பிரிந்து ஹாரி தனியாக எதிரியுடனும் அந்த விலங்குடனும் மோத நேரிடுகிறது. இம்முறையும் அந்த விலங்கையும் எதிரியான வோல்டமார்ட்டையும் அழித்து ஜெயிக்கிறான் ஹாரி. கல்லாக்கப்பட்டவர்கள் மீண்டும் மனிதர்களாக்கப்படுகிறார்கள்.
மந்திரத் துடைப்பத்தில் பறப்பது, மாய அங்கியால் மறைவது. பேசும் குதிரை மனிதர்கள். கல்லூரியில் வசிக்கும் கெட்ட. நல்ல ஆவிகள், பறக்கும் கார், ராட்சத சிலந்திகள் என்று சகல மாயமந்திர மசாலா சமாச்சாரங்களும் தூவப்பட்டு விறுவிறுப்பாகத்தான் இருக்கின்றன ஹாரிபாட்டர் கதைகள். வர்ணணைகள் அப்படி இப்படி என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் சிம்பிளான எழுத்துநடை ஜே.கே.ரோலிங்கினுடையது. அதனால் படிப்பதற்கு சுவாரஸ்யம் என்பது என் கருத்து. அதேபோல அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயமாக அவர்கள் துப்பறிந்து கண்டுபிடிப்பதும், க்ளைமாக்ஸில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் மர்மக் கதைக்கான இலக்கணக் கட்டுக்கோப்பையும் கொண்டிருப்பதால்தான் இந்தத் தொகுதிகள் இப்படி உலகளாவிய வெற்றியைக் கண்டிருக்கின்றன.
முதல் பாகம் 299 ரூபாய் விலையிலும் இரண்டாம் பாகம் 350 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. பி.எஸ்.வி.குமாரசாமி என்பவர் தமிழாக்கம் செய்திருக்கிறார். குறை சொல்ல முடியாதபடி எளிமையாகவே இருக்கிறது தமிழாக்கம். மஞ்சுள் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட்னு போபால்ல இருக்கற கம்பெனி வெளியிட்டிருக்குது.
Subscribe to:
Post Comments (Atom)
//ஹாரிபாட்டரை உரிச்சா...// ஹஹஹா வாத்தியாரே நீங்களுமா? ;)
ReplyDeleteஹி.... ஹி.... ஹி....
Delete//துணிவாக மோதும் ஹாரி. வோல்டமார்ட்டை அழிக்கிறான்.// வோல்டமோர்ட்டை முதல் பாகத்திலேயே கொன்னுட்டீங்க.. அவ்வளவு கோபமா? ஹஹஹா..
ReplyDeleteவோல்டமார்ட்டை ஹாரி அழிச்சாலும் அடுத்த பாகத்தில் மீண்டு வந்துடறாரு. இரண்டாம் பாகத்திலயும் ஹாரியால அழிக்கப்படறாரு. கடைசி பாகத்துலதான் நிரந்தரமா அழிக்கப்படுவாரோ என்னவோ...? மத்த பாகங்கள் தமிழ்ல வர வெயிட்டிங்.
Deleteசூப்பர்..
ReplyDeleteputhaka vimarsanam super sir. theriyatha sila thakavalkal therinthu kolla mudinthathu. nandri sir.
ReplyDeleteபடிக்கும் ஆர்வம் வந்ததில்லை. நீங்கள் வேறு நம்ம விக்ரமாதித்தன் கதை மாதிரின்னு சொல்லிட்டீங்க... அப்புறம் என்ன விடுங்க!
ReplyDeleteபுத்தகச் சந்தையில் புக்கை பிரிச்சு பார்த்தேன் விலை நம்ம பட்ஜெட்டை உதைச்சதால் வைத்துவிட்டேன்! பார்ப்போம் படிக்க வாய்ப்பிருக்கான்னு!
ReplyDeleteஹாரிபாட்டர் சினிமாவாக எடுக்கப்பட்டு வெளியிட்ட போது நண்பர்களின் குழந்தைகளோடு பார்த்திருக்கிறேன்...... புத்தகமாகப் படிக்க ஏனோ தோன்றவில்லை......
ReplyDeleteபுத்தக விலை தான் அதிகமோ? :)
நல்லா தான் எழுதி இருக்கீங்க. ரெண்டு பந்தில ரெண்டு பாகங்களையும் அச்சுப் பிழைக்காமல் சொல்லிருக்கீங்க. அதனால குமாரசாமியின் உழைப்பு தேவையில்லை என்றாலும் உங்களால் அவரது புத்தகம் விற்கப்படாமல் போய்விட்டது என்ற அவப்பெயர் உங்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அப்புத்தகத்தை இணையம் மூலம் எங்கே எப்படி வாங்குவது என்ற விவரங்களை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteசிகரம் - வலை மின்-இதழ் - 001 இணையத்தில் வெளிவரும் முதலாவது வலை இதழ். இன்றே படியுங்கள்!
ReplyDeleteஹாரி பாட்டர் கதைத் தொடரின் இரு பாகங்களையும் அழகாக, சுவையாக விமர்சனம் செய்த விதம் நன்று! பாராட்டுக்கள்!
ReplyDeleteபுத்தகத்தின் விலைகள்தான் அதிகம் என்பதாகப் படுகின்றது.
புத்தகத்தின் உள்ளே சில படங்கள் அல்லது ஓவியங்கள் ஏதும்
இருக்கின்றனவா?
இந்தப் பதிவினை நீங்கள் எப்போது வெளியிட்டீர்கள் என்ற
ReplyDeleteதேதி-மாதம்-ஆண்டு விவரம் காணமுடியவில்லையே, ஏன்?
ஹாரிப்பாட்டர் எப்ப தமிழில் வரும் என்று காத்துக்கொண்டு இருந்தேன். உங்கள் கட்டுரைையை படித்தவுடன் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நன்றி.
ReplyDelete2புத்தகமும் செம.
ReplyDeletePart 3 tamil edition panrangillaye.
என்னாது ... நம்ம விக்கிரமாதித்தன் கதைக்கு பக்கத்துல கூட ஹாரிப்பாட்டர் நெருங்கமுடியதா !!!... அட தூ ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete