Sunday, April 5, 2015

வற்றாநதி - கார்த்திக் புகழேந்தி (சிறுகதை தொகுப்பு)





                   சுஜாதாவின்  கதைகளை படித்து வாசிப்பு பழக்கத்தை துவங்கிய எனக்கு கி.ரா. அவர்களின் 'கோபல்லகிராமம்' தான் ஊர் வழக்கில் நான் வாசித்த முதல் புத்தகம். படிப்பதற்கு சற்றே சிரமப்பட்ட போதும் எழுத்தின் சுவை உணர்ந்த போது எல்லாம் எளிமையானது. இளம் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி அவர்களின் வற்றாநதி சிறுகதை தொகுப்பினை வாசிக்க ஆரம்பித்த போதும் கிட்டத்தட்ட அதே போன்ற உணர்வு. அந்த தொகுப்பில் உள்ள கதைகளை வாசித்து முடிக்க சில மாதங்கள் தேவைப்பட்டது. எனக்கு பிடித்த சில கதைகளை மீண்டும் மீண்டும் வாசித்தது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

                'வற்றாநதியில்' நான் மிகவும் ரசித்து படித்த ஒரு கதை... அது கதை அல்ல கடிதம். 'வணக்கத்திற்குரிய ' என்ற பெயரில் ஒருவர் பி.டி. வாத்தியாரான  தன் வருங்கால மாமனாருக்கு எழுதும் கடிதம். அம்மா, அப்பா, தம்பி தங்கை, காதலி, மனைவிக்கு எழுதிய கடிதங்களை கூட கேள்விப் பட்டிருக்கிறேன். இது கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் இருந்தது, இதில் ஒரு இடத்தில் 'சுவாதியிடம் நீங்கள் கொடுத்தனுப்ப வேண்டியதெல்லாம் அன்பையும், இந்த தலைமுறை இழந்துவிட்ட பாசத்தையும் தான்' என்று சொல்லி  இன்றைய தலைமுறையினருக்கு ஆசிரியர்  ஒரு குட்டும் வைக்கிறார்.

                விடலைப் பருவ காதலை சொல்லும் 'பச்ச', மனதை கனக்க வைக்கும் 'அப்பாவும் தென்னை மரங்களும்' , மனம் கரைய வைக்கும் 'பிரிவோம் சந்திப்போம்' என ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு அனுபவச் சிதறல்களாய் நம்முன் கொட்டிக் கிடக்கிறது. ஆசிரியரின் எழுத்தை வாசிக்கையில் நெல்லையில் எங்கோ ஓரிடத்தில் சுற்றி அலைந்து கொண்டிருப்பதாய் ஓர் உணர்வு மேலிடுகிறது. ஒவ்வொரு கதையின் தொடக்கமும், தொய்வின்றி கதை சொல்லும் பாங்கும், இயல்பாய் அந்தக் கதைக்கு ஒரு முடிவு அமைப்பதும் கார்த்திக் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தை விரைவில் பிடிப்பார் என்பதையே சொல்கிறது.

               'சிவந்திப்பட்டி கொலை வழக்கு' ஒரு குறும்படத்திற்கான கதை போன்று நேர்த்தியாக இருக்கிறது, 'லைட்ஸ் ஆப்' மனதை நெருடிச் செல்லும் எதார்த்த கதை. 'நிலைக்கதவு' சிறுகதை நிச்சயம் நம்மில் பலருக்கும் தன் வாழ்க்கையில் கூட இது போன்று நடந்திருக்கக் கூடும். பால்ய கால 'சைட்' பற்றி சொல்லும் 'ஜெனி', திகிலோடு முடியும் 'டெசி கதை' என படிப்பவர்களுக்கு சுவையான படையலை படைத்திருக்கிறார் ஆசிரியர். 



நூலின் பெயர்         :  வற்றா நதி  
ஆசிரியர்                 :     கார்த்திக் புகழேந்தி  
பக்கங்கள்                :    128
 விலை                   :    ரூ. 120

பதிப்பாளர்              :   அகநாழிகை பதிப்பகம்,
                                        #390, அண்ணா சாலை,
                                        KTS காம்ப்ளெக்ஸ், 
                                        சைதாபேட்டை ,
                                        சென்னை - 600 015
                                        தொலைபேசி - 999 454 1010
                            

6 comments:

  1. வணக்கம்
    புத்தகத்தின் விமர்சனத்தை படித்தபோது... வாங்கி படிக்க வேண்டும் என்ற உணர்வு தூண்டுகிறது.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. படிக்கத் தூண்டும் விமர்சனம். நன்றி ஆவி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்

      Delete
  3. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  4. நறுக்குன்னு.. நான் சொல்ல வந்தது இன்னின்னவைதான்னு சொல்றது மாதிரி எழுதி இருக்கீங்க ஆவி.
    எதேச்சையா ஒரு பழைய போட்டோவை தேடும்போது கண்ணிலே சிக்குச்சு வாசகர் கூடம். அரட்டலா இருக்கே..

    ReplyDelete

இது... உங்க ஏரியா!