Wednesday, August 5, 2015

காமரூப கதைகள் - சாருநிவேதிதா

டிஸ்கவரியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது ஜீரோ டிகிரியைக் கையில் எடுத்த ஆவி 'சீனு இத வாங்கிருங்க என்றார்', ஜீரோ டிகிரிக்கு பக்கத்திலேயே காமரூப கதைகளும் ஒளிந்து கொண்டிருந்தது. 'பாஸ் இதை ஏன் விட்டுடீங்க, இதையும் வாங்கிரலாமே' என்றேன். மொதல்ல இதப் படிச்சிப் பார்ப்போம் நல்லா இருந்தா அதை வாங்குவோம் என்றார். ' இல்ல பரவாயில்ல ரெண்டையும் வாங்கிருவோம். மனசு மாறிட்டா கடைசி வரைக்கும் வாங்கவே மாட்டோம்' என்றேன். 

சாருவின் பத்தி எழுத்துக்களை மட்டுமே வாசித்து வந்த எனக்கு அவருடைய நாவல்களை வாசிக்க வேண்டும் என்பது நெடுநாள் அவா. அவருடைய புதிய எக்சைலைக் கூட முன்வெளியீட்டுத் திட்டத்தின் போதே வாங்கி பத்திரமாக பூட்டி வைத்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் மிகப்பெரிய புத்தகமும் அதுதான். புதிய எக்சைலை படிக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த போதே மயிலன் ஒரு தகவல் அனுப்பி இருந்தார் 'ராசலீலா படிக்காமல் புதிய எக்சைலை படிக்க வேண்டாம்' என்று. 

டிஸ்கவரியில் முதலில் கேட்டது ராசலீலாவைத் தான், அன்றைக்கு பார்த்து ஸ்டாக் இல்லை. அதனால் காமரூப கதைகளை நானும் ஜீரோ டிகிரியை ஆவியும் வாங்கிக் கொண்டோம். 

**

ஐந்து வருடங்கள் இருக்கும். அண்ணா நகரில் புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். சாருவின் ஜீரோ டிகிரியை அண்ணன் வாங்கி வந்திருந்தான். அப்போது நான் சாருவை அறிந்திராத பிள்ளைப் பருவத்தில் இருந்தேன். அண்ணனோ விகடன் காலத்தில் இருந்தே சாருவின் வாசகன் என்பதால் அவரின் எழுத்துக்களில் மயங்கி ஜீரோ டிகிரியை வாங்கி இருந்தான். 

'யாரு இது புது ரைட்டரோ' 

'போடா லூஸு, இவர் எவ்ளோ பெரிய ரைட்டர் தெரியுமா. அதான் விகடன்ல கூட நிறைய எழுதி இருக்காரே'

'இல்ல நான் படிச்சது இல்லை'

'நீ எல்லாம் என்னத்த விகடன் படிச்சு கிழிச்சியோ' 

'கத, ஜோக்ஸ், ஹாய் மதன் அப்புறம் எதாவது எனக்கு புடிச்சது இருந்தா படிப்பேன், இவரோடது படிச்சது இல்ல' 

அதற்கு பின் சாருவைக் குறித்து என்ன என்னவோ கூறினான். சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர். அடுத்த சுஜாதா அது இது என்று. சரி இவ்ளோ விஷயம் பேசுறான், படிச்சுதான் பார்ப்போம் என்று ஜீரோ டிகிரியைக் கையில் எடுத்தேன். முதல் பக்கத்தைக் கூடத் தாண்ட முடியவில்லை. என்ன எழுதி இருக்கிறார். என்ன கூற வருகிறார் எதுவும் புரியவில்லை. 

'ஏ என்னடே புக்கு இது' 

'ஏன் என்னாச்சு'

'இத நீ தான் படிக்கணும், ஒண்ணும் வெளங்கல' 

அப்படியே நாட்கள் நகர நகர, அந்தப் புத்தகம் மேஜையிலேயே கிடக்கும். அதைப் பார்க்கும் போதெல்லாம் படிச்சியா படிச்சியா என்று கேட்பேன் 'ம்கும்' என்று தலையசைப்பான். 

ஒருநாள் என்னிடம் வந்து 'ஒருவழியா முடிச்சிட்டேன்' என்று கூறியவனை ஆச்சரியமாகப் பார்த்தேன். 

'புரிஞ்சதா'

'ம்ம் புரிஞ்சது, அது ஒரு வித்தியாசமான புக்கு. ஆனா இப்போதைக்கு அதப் படிக்காத' என்று மட்டும்  கூறினான். 

அன்றைக்கு மேஜையில் இருந்து காணாமல் போன புத்தகம் இன்றைக்கு வரைக்கும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கே ஒளித்து வைத்துள்ளான் என்பது அவனுக்குத்தான் வெளிச்சம் .      

**

காமரூப கதைகளை முதல் இணைய நாவல் என்று குறிப்பிடுகிறார் சாரு. சாரு ஆன்லைனில் அவர் எழுதிய 108 குட்டிக் கதைகளை தொகுத்து நாவல் என்ற பெயரில் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. 

குட்டி என்றால் சிறிய என்றும் வல்லிய பெண்குட்டி என்று பொருள்படும். புத்தகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பது பெண்குட்டிகள் தான். சாருவின் வாசகனாக படித்தால் கொண்டாட்டம், கலாச்சாரக் காவலராகப் படித்தால் அத்தனையும் ஆபாசம் ;-). 

சாரு ஆன்லைனை தொடர்ந்து வாசித்து வருவதால் அவருடைய எழுத்தின் ரசிகனாவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. இதில் இன்னொரு ப்யூட்டி என்னவென்றால் சாரு ஆன்லைன் வாசகன் ஆவதற்கு முன்னரே சாரு விமர்சகர் வட்டத்தின் வாசகன் ஆகிவிட்டேன். அது எவ்வளவு நல்ல விஷயமென்பது காமரூப கதைகளை  படிக்கும் போதுதான் புரிந்தது. 

கண்ணாயிரம் பெருமாள், மீரா, விஷால், நிக்கி, அலெக்ஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன், மதனா, ஷாலினி, அர்பனா, நந்தினி, ஜெஸ்சி என்ற பல பாத்திரங்களால் நிறைந்தது தான் இந்தக் குட்டிக் கதைகள். இதில் வரும் பெரும்பாலான குட்டிகளை பெருமாள் & கோ சுவைத்துள்ளார்கள் அல்லது குறைந்தபட்சம் ஓரல் செக்சாவது உண்டு. 

பெருமாள் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியாக பதிவு செய்திருக்கிறார். இதில் எந்த அளவு நிஜம் என்பது பற்றி தெரிந்துகொள்ள பெருமாளின் ரூபமான சாருவைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். முழுக்க முழுக்க குறிகளாலும் குறியீடுகளாலும் நிறைந்த புத்தகம். இந்தப் புத்தகம் எழுதிய காலகட்டத்தில் உத்தம தமிழ் எழுத்தாளன் மீது அப்படி ஒரு கோவத்தில் இருந்திருக்கிறார் போலும். இப்போது அப்படி இல்லை சக உதிரனாகி விட்டார்கள். 

பெருமாளின் வாழ்க்கை கொண்டாட்டமானது என்ற ஒற்றை வரியைத் தவிர பெருமாளைப் பற்றி தொடர்ந்து எழுவது என்னால் இயலாத காரியமாக உள்ளது. இதுதான் பெருமாள் என்று அவருடைய பிம்பத்தை என்னால் ஒரு வரையறைக்குள் கட்டமைக்க முடியவில்லை. அவருக்கு தோன்றியது அத்தனையும் நியாயம். அவர் எதிர்ப்பது அத்தனையும் அநியாயம் என்பதால் இங்கே எனக்குத் தோன்றுவது அவருக்கு எதிராகத் தோன்றிவிட்டால்!

பெருமாள் தன் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் மட்டும் அல்லாமல் தன்னை பாதித்த அயல் தேசத்து மனிதர்களையும் குறித்து எழுதியுள்ளார், அதில் பெரும்பாலனவர்கள் இசை சார்ந்தவர்கள். இது ஒரு இணைய நாவலாக இருவம் பெற்றது என்பதால் ஆங்காங்கு யுட்யுப் சுட்டியும் கொடுத்துள்ளார். பின்னொருநாள் அதனை சாவகாசமாக கேட்டு உய்ய வேண்டும். 

மேலும் காமரூபக் கதைகளை படிக்கும் முன் ஜீரோ டிகிரி - ராசலீலா படித்துவிடுவது உத்தமம். அவையிரண்டின் தொடர்ச்சியாகத்தான் இதப் பார்க்கமுடிகிறது. சீக்கிரம் அவற்றையும் படிக்க வேண்டும்.  

ஒவ்வொரு நாவலும் எதாவது ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தரும். அதில் ஒரு கதை இருக்கும். அந்தக் கதை நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் என்ன கிடைத்து என்று யோசித்தால் தாக்கம் எல்லாம் எதுவும் இல்லை. ஒரு நல்லவாசிப்பு அனுபவம். என்ன இந்த நாவலை வாசிப்பதற்கு முன் சாரு விமர்சகர் வட்டத்தை ஒரு எட்டு படித்துவிடுவது நல்லது. பெருமாள் வைக்கும் குறியீடுகள் விளங்க அதை விடச் சிறந்ததொரு இடம் வேறு இல்லை :-)

இதனை நாவலாக ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது. சாரு நினைத்ததைப் போல 108 குட்டி கதைகள் என்றே பெயர் வைத்திருக்கலாம். நாவல் என்ற அடைமொழி நெருடுகிறது. அல்லது இதனை நாவலாக ஏற்றுகொள்ள நான் இன்னும் வளர வேண்டும் போலும். 


16.05.2008 இல் இருந்து 21.12.2008 வரைக்கும் பெருமாளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், அதில் அவர் வைக்கும் குறியீடுகளின், அவர் திட்டிய விதத்தையும், அவர் அனுபவித்த குட்டிகளையும் அது போக அவர் ரசித்த இசையையும் குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் துணிந்து வாசிக்கலாம். அலுப்பு தட்டாத ஒரு புத்தகம். ஒருவேளை இந்த வகையறா எழுத்து உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதையும் கேட்டுக்கொள்ள பெருமாள் இருக்கிறார். காரணம் இந்த உலகத்தில் இருக்கும் மொத்த அன்பையும் சேர்த்து தன்னை உருவாக்கிக் கொண்டதாக அவரே ஆங்காங்கு கூறியுள்ளார். ம்யு.  

4 comments:

  1. சாருவை எந்த வட்டத்திலும் சுருக்கி விட முடியாது என்பது என் எண்ணம் அதைப்போலவே அவரின் எழுத்துக்களும் போல ...

    #நமக்கு நாமே திட்டம் தோழர்

    ReplyDelete
    Replies
    1. #நமக்கு நாமே திட்டம் தோழர்

      வேறு வழியில்லை தோழர் :-) அப்படியாவது உயிர்ப்புடன் இருக்கட்டும் :-)

      Delete
  2. இதுவரை இவரது எந்த ஆக்கமும் படித்ததில்லை சீனு. படிக்கும் எண்ணமும் இல்லை! :)

    ReplyDelete
  3. "காமரூப கதைகளை முதல் இணைய நாவல் என்று குறிப்பிடுகிறார் சாரு". ... தகவலுக்கு நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!