Thursday, January 7, 2016
சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஆண் வர்க்கத்தினை திட்டித் தீர்க்கவும், வசை மொழிகளின் குவியலை தங்களது படைப்பென்று அடையாளப் படுத்திக்கொண்டிருக்கும் பல பெண் படைப்பாளிகளுக்கு மத்தியில், எவ்விதச் சத்தமுமின்றி மிக நேர்த்தியான, காலந்தாண்டியும் பேசக் கூடிய எழுத்துக்களை படைத்துக் கொண்டு வருகிறார் சு. தமிழ்ச்செல்வி. இவரின் அடையாளமாய் 'கீதாரி' நாவலைச் சொல்லலாம். 'கீதாரி' நாவலைப் படித்த பின்பு, இவரைப்பற்றி இணையத்தில் தேடினேன் சொல்லிக் கொள்ளும்படியான தரவுகள் இல்லை என்பது காலத்தின் சோகம்.
கீதாரி நாவலை வாசித்த பின், அது தந்த உந்துதலில் இவரின் இன்னொரு படைப்பான 'பொன்னாரம்' நாவலை வாங்கி வைத்திருக்கிறேன் நேரமின்மையால் வாசிக்க முடியாமல் கிடப்பில் இருக்கிறது. விரைவில் வாசித்து விட வேண்டும்.
சென்ற மாதத்தில் 'டிஸ்கவரி' புக் பேலஸில் உயிரெழுத்து பதிப்பக புத்தகங்களை ஐம்பது சதவிகிதத் தள்ளுபடியில் விற்பனை செய்கிறோம் என்ற தகவலைப் பார்த்ததும் கடைக்குச் சென்றேன். ஆச்சர்யமாக அந்தத் தொகுப்பில் சு. தமிழ்ச்செல்வி அவர்களின் சில நூல்களும் இருந்தன. அதில் இந்த நூலை வாங்கினேன். வாங்கிய கையோடு வாசித்தும் முடித்துவிட்டேன்.
கூலி வேலைக்குச் சென்று, அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சிகளை முன் வைத்தே தனது கதைகளை கூறுகிறார். எந்தக் கஷ்டத்திலும் மனம் சோர்ந்து முடங்கி விடாமல் தங்களது கடின உழைப்பை முன்வைத்து வாழத் துடிக்கும் கடைநிலைப் பெண்மணிகளின் வியர்வை நிரம்பிய உவர் சுவைகளை கதையின் மூலம் சுவைக்கத் தருகிறார். அவர்களின் வலி நிரம்பிய, கண்ணீரை ஆவணப் படுத்தியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.
"தொம்பா" எனும் கதையில் கட்டிவந்த கணவனும் ஊதாரித் தனமாக குடித்துத் திரிகையில், அதே ஊரிலிருக்கும் அப்பனும் ஆத்தாளும் இவளை சுமையென்று கருத, சுயமரியாதையை இழக்காமல் தனக்குச் சீதனமாய் வந்த மாடுகளை மேய்த்து, அதனைப் பெருக்கி அதன் மூலம் கிடைக்கும் கணிச வருவாயில் கடைக்குழியில் கிடக்கும் குடும்பத்தினை உயர்த்த நினைக்கையில், அவள் கணவன், மேய்ச்சலுக்குப் போயிருந்த மாடுகளை தொம்பாவிற்கு தெரியாமல் ஒட்டிக்கொண்டு போய் விற்று விட்டு அதை வைத்து சாராயக் கடையை துவக்க போவதாய் முடித்திருப்பார். தொம்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழும் காட்சி கண் முன் விரிவது போலிருக்கும் அவ்வளவு ஈரமான எழுத்து.
இது இப்படியென்றால், "யதார்த்தம்" என்றக் கதையில் வேலைக்கு போனாத்தான் சோறு என்ற குடும்ப நிலையில் காய்ச்சல் வந்த மகனுக்கு வைத்தியம் பாக்க நேரமில்லாமல் ஊர்க்கடையில் மாத்திர வாங்கி கொடுத்து படுக்க வைத்துவிட்டு, புருசனும் பொஞ்சாதியும் வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பினால், காய்ச்சல் அதிகமாகி ஜன்னி வந்து கிடக்கும் மகனைத் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போயி வைத்தியம் பார்த்தும் பலனில்லாமல் இறந்து போகிறான். இறந்த புள்ளையை வூட்டுக்கு எடுத்து வர காசில்லாமல் புருசனும் பொஞ்சாதியும் யாருக்கும் தெரியாமல் இறந்த மகனை பேருந்தில் உட்கார வைத்துக்கொண்டு வருகையில் தன்னிலை தாளாமல் வெடித்து அழுவாள் மகனைப் பறிக்கொடுத்த தாய். அந்த ஏழைத்தாயின் பரித்தவிப்பை, கண்ணீரின் பிசுபிசுப்பை நமக்கும் உணர்த்துகிறது அந்தக் கதை.
அடுத்து கொடும்பாவி கதையில், பக்கவாதம் வந்த கணவனை வைத்துக் கொண்டு, மகன் வீட்டுப் பேரப்பிள்ளைகளை வளர்த்துக்கொண்டு வரும் அம்மணி, எங்காவது வேலை கிடைக்காதா? என்று காடு காடா, ஊரு ஊரா அலைகையில் வறட்சியினால் எங்கும் வேலையில்லை என்று எல்லோரும் கைவிரிக்கையில், மனம் நொந்து எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைச்சு கொடும்பாவி இழுத்தால் மழை வருமென்று ஒப்பாரி வைக்கும் நிகழ்வைப் பேசுகிறது.
ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு வலியை கூறியிருக்கிறார். ஓடாய் தேய்ந்து தமது குடும்பங்களை, முதுகில் சுமக்கும் பெண்களின் வாழ்வியல் துயரங்களை, அவர்களின் இன்னல் மொழியினை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். எங்கும் எதிலும் பசப்பு வார்த்தைகளில்லை. வலிகளை வலிகளாகவே பதிவு செய்திருக்கிறார்.
இவரின் எழுத்துக்களின் சிறப்பம்சம் என்று நான் கருதுவது, மொழியாளுமை தான். எந்தக் கதையிலும் சோகத்தைப் பிழிந்து வாசிப்பவர்களை பாரிதாபம் கொள்ள வைக்காமல் கடை நிலை மாந்தர்களின் கண்ணீரை அப்படியே காட்சி படுத்தியிருக்கிறார். சொல்லாமல் கிடக்கும் இன்னும் இன்னும் எத்தனையோ கதைகளை அவர் எழுதித் தீர்க்க வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறெந்த வேண்டுதலுமில்லை அவரிடத்தில்.
========================================================================
பதிப்பகம் : உயிர் எழுத்து
வெளியான ஆண்டு : 2010
பக்கங்கள் : 149
விலை : 95/-
========================================================================
கீதாரி நாவல் பற்றி அறிந்து கொள்ள: இங்கு கிளிக்குங்கள்
கீதாரி நாவல் பற்றி அறிந்து கொள்ள: இங்கு கிளிக்குங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Nice write up. I'll get it from you
ReplyDeleteNice write up. I'll get it from you
ReplyDeleteசெம விமர்சனம்...
ReplyDeleteயதார்த்தம்
ReplyDeleteஅருமையான விமரிசனம்
ReplyDeleteநல்ல விமர்சனம்...தொடர்கிறேன்....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான விமரிசனம்...
ReplyDeletenice write up
ReplyDeleteநல்ல வாசிப்பனுபவம்...... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஜீவனுள்ள விமரிசன வரிகள். இந்த ஆசிரியர் எழுத்துக்களை என் வாசிப்பில் சேர்த்துக் கொள்கிறேன். நன்றி.
ReplyDeleteசு. தமிழ்ச்செல்வி மேலும் வளர்ந்து காவியம் பல படைக்க சேர்ந்தே வாழ்த்துவோம் !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDeleteசு. தமிழ்செல்வி சிறுகதையை வெளியிட்ட பதிப்பகம் தொடர்பு எண் இருந்தால் தரவும்
ReplyDelete