Sunday, October 2, 2016

நல்ல தமிழில் எழுத வாருங்கள்..!!

முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால் கூட பிழை திருத்தப்பட்டு, கச்சிதமாக பத்திரிகைகளில் வெளிவரும். இன்றைய தினத்தில் இணையம் கட்டிக் கொண்ட புண்ணியத்தால் அனைவரும் எழுத்தாளர்களே. அனைவரும் எடிட்டர்களே. இந்த மட்டற்ற ‘அவிழ்த்துவிட்ட’ சுதந்திரத்தின் விளைவு... இணையத்தில் எழுதுபவர்கள் ஒன்று தப்பும் தவறுமாக, எழுத்துப் பிழைகள் மலிய எழுதிக் கொள்(ல்)கிறார்கள், அல்லது நன்றாக தமிழ் எழுதுகிறேன் பேர்வழி என்று ‘பேட்டிக் கண்டேன்’, ‘செய்துக் கொண்டிருந்தேன்’ என்று கண்ட கண்ட இடங்களில் ஒற்றுக்களைப் பெய்து தமிழை வாழ(?) வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான ஒரு சூழ்நிலையில் தான் ‘நல்ல தமிழில் எழுதுவோம்’ என்கிற என்.சொக்கன் எழுதிய நூல் இன்றியமையாததாகிறது.


இவன். அவன், இது, அது என்று அருகில் தொலைவில் உள்ளவற்றைக் குறிப்பிடுவது போல இடையிலுள்ளதை உவன், உது என்று அழைக்கிற அழகிய தமிழ் வார்த்தையை இன்று நாம் இழந்திருக்கிறோம். இது ஈழத் தமிழில் இப்போதும் உண்டு. அதேபோல அங்காடி என்கிற வார்த்தையைத் தொலைத்து மார்க்கெட் என்பதையே தமிழ் வார்த்தையாக்கியாயிற்று இன்று. மலையாளத்தில் அங்காடியை பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.

பள்ளிகளில் தமிழ் இலக்கணம் கற்றுத் தரப்படும்போது அது மதிப்பெண் பெறுதலுக்கான அவசியம் என்பதாலேயே படித்து வைக்கிறோம். இயந்திரத் தனமாக கல்வி நிலையங்களில் சொல்லித் தரப்படும் நம் மொழியை என்.சொக்கன் விளக்குவதுபோல தோளில் கை போட்டுப் பேசுகிற பாணியில் ஆசிரியர்கள் நடத்தியிருந்தால் தமிழ் படிப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கும்.

எடுத்துக்காட்டாக, வினா எழுத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. ‘ஏ’ என்ற வினா எழுத்து மட்டும் சொல்லுக்கு முன்பாகவும் வரும் (உதா : ஏன்?), சொல்லுக்குப் பின்பாகவும் வரும் (உதா : ஆரே?). கொஞ்சம் பொறுங்கள். ஆரே என்பது எப்படிக் கேள்வியாகும்? இந்தச் சந்தேகம் நியாயமானதுதான். காரணம் ஆரே என்ற சொல் இப்போது வினாவாகப் புழக்கத்தில் இல்லை. ஆனால் பழைய பாடல்கள், உரைநடைகளில் நிறையப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரபலமான உதாரணம் வேண்டுமா? ஒரு நல்ல கண்ணதாசன் பாடல் இருக்கிறது. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா? இங்கே ஆடாதாரே என்பதில் ஏ என்ற எழுத்து சொல்லின் பின்பகுதியில் வந்து, கேள்வியாக நிற்கிறது இல்லையா?

இதேபோல பகுதி, விகுதி ஆகியவற்றை விளக்குகிற பகுதியில் பெரிய உணவகங்களில் அமைந்திருக்கும் பலப்பல பகுதிகளை உதாரணம் காட்டி விளக்கியது மிகவே ரசிக்க வைக்கிறது. போலவே மனதிலும் எளிதில் பதிந்து விடுகிறது.

எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் ஆகியவை பற்றிய வகுப்பில் நான் சற்றே கண்ணயர்ந்துவிட, தமிழய்யா என்னைப் பார்த்து, “நீ எழுவாய். இங்கிருப்பதால் பயனிலை, நீ வெளியேறுவதே செயப்படு பொருள்” என்று தலையில் தட்டி வெளியேற்றினார். புத்தகத்தில் கூறியிருப்பது போல காரையும், இன்ஜினையும் உதாரணம் காட்டி விளக்கி பாடம் நடத்தியிருந்தாரானால்  அன்று அப்படியொரு துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டிராது. அப்போது இப்படியொரு புத்தகம் எழுத என்.சொக்கரும், படிக்க இன்றைய நானும் இல்லாமல் போய் விட்டோமே..  என்னத்தைச் சொல்ல..? 

இப்படி புத்தகம் முழுவதிலும் நடைமுறை வாழ்வில் கேட்கிற, பார்க்கிற விஷயங்களைக் கொண்டு  எளிமையாக தமிழ் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. சினிமா வசனங்களை உபயோகப்படுத்தி அளபெடையை விவரித்துள்ளது போல எளிமையான விஷயங்கள் இருந்தாலும், ஆங்காங்கே இலக்கியங்களிலிருந்தும் உதாரணங்கள் காட்டப்பட்டிருப்பது சிறப்பான ஒன்று. இலக்கியமும் மெல்ல நம்மிடம் புகுத்தப்படுகிறது.

முதல் 134 பக்கங்கள் இப்படி எளிமையான இலக்கணப் பாடங்களாக அமைந்துள்ளது. அடுத்த 120 பக்கங்களில் இணையத்தில் தான் எழுதிய குறுங்கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். இந்த பின்பகுதிக் கட்டுரைகள் தமிழ் வார்த்தைகள் பற்றிய சுவையான அலசலாக அமைந்துள்ளன. ஒவ்வொரு குறுங்கட்டுரையும் ஏதோ கதை படிப்பது போன்ற சுவாரஸ்யத்துடன் ஒரு புதிய விஷயத்தை உங்கள் மனதில் ஏற்ற முடிகிறது என்பது ஒரு கூடுதல் சிறப்பு.

போகிற போக்கில் படிப்பது போல் இந்தப் புத்தகத்தைப் படிக்காமல், ஒவ்வொரு அத்தியாயத்தையும் மனதில் உள்வாங்கி படித்தாரென்றால் அந்த நபர் தமிழைத் தப்பும் தவறுமாக எழுத மாட்டாரென்பது நிச்சயமான ஒன்று. தினம் ஒரு அத்தியாயம் என்ற ரீதியில் படித்தாலும் நல்லதே. எது எப்படியாயினும் நம் மொழியைச் சிறப்புற, பிழையின்றி எழுத வேண்டும் என்பது உங்கள் விருப்பமெனில் நீங்கள் தவறவிடக் கூடாத ஒன்று இந்தப் புத்தகம்.

நூல் பெயர் ; நல்ல தமிழில் எழுதுவோம்
நூலாசிரியர் : என்.சொக்கன்
பக்கங்கள்   : 256
விலை      : ரூ.200/-
வெளியீடு   : கிழக்குப் பதிப்பகம்,
              177.103, முதல் தளம், அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு,
               சென்னை - 600 014.
தொடர்பெண் : 91-44-4200-9603

2 comments:

  1. நல்லதொரு அறிமுகம் கணேஷ். நன்றி.

    ReplyDelete
  2. நல்ல அழகு தமிழில் எழுத்து, சொல், பொருள், கருத்து பிழைகள் இன்றி எழுதலாம். வாசிக்கும் வாசகர் பலருக்குப் புரியுமா ?...நான் ஏராளம் எழுதுபவனே ...இவர்களுக்கு புரியும் விதமாய் எழுத வேண்டி உள்ளதால் ....கால விரயம்...எழுத்தின் ஆக்கமே சிதைவு பட்டு மூளியாகி விடும்...வாசகர் பலருக்குப்புரியும் விதம் எழுதுவதே உசிதம் .......

    ReplyDelete

இது... உங்க ஏரியா!