Wednesday, April 2, 2014
எழுத்தாளர்களை ஆண் எழுத்தாளர், பெண் எழுத்தாளர் என்று பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எழுத்துக்களில் கருத்துக்களில் ஆண், பெண் வித்தியாசம் உண்டா என்ன? அப்படிச் சொல்லக் காரணம் பொதுவாக பெண் எழுத்தாளர்கள் குடும்பம், உறவு சார்ந்த கதைகளை அதிகம் எழுதி வருகிறார்கள் என்பதாகத்தான் இருக்க முடியும். அந்த வகையில் வாஸந்தியின் எழுத்துக்கள் மிகவே வித்தியாசமானவை. அரசியல் பிரச்னைகளையும் சமூகப் பிரச்னைகளையும் அவரின் எழுத்து புயலாய் அலசும். காதல் கதைகளையும், மென்மையான மன, உறவுச் சிக்கல்களை அலசி தென்றலாகவும் நம்மைத் தீண்டும். இந்த ‘ஜனனம்’ என்ற நூலில் தென்றலாய் மூன்று குறுநாவல்கள் அணிவகுத்திருக்கின்றன. அவற்றைப் பற்றிச் சொல்கிறேன்.
ஜனனம் - அஸ்ஸாமில் வசித்த சமயம் வாஸந்தி கேள்விப்பட்ட ஒரு விபத்துச் செய்தி இந்தக் கதைக்குக் கரு தந்திருக்கிறது. ஒரு பஸ் விபத்தில் சிக்கி அனைவரும் இறந்துவிட, ஒரே ஒரு பெண் மட்டும் உயிர் பிழைக்கிறாள். ஆனால் விபத்தின் விளைவாக அவள் தன் பெயர், கடந்தகால நினைவுகள் அனைத்தையும் இழந்து விடுகிறாள். அவளுக்குச் சிகிச்சை தரும் டாக்டர் அவளின் அழகினால், பழகும் தன்மையால் ஈர்க்கப்பட்டு காதலாக, இவளுக்குள்ளும் காதல் பூ பூக்கிறது. அவர்கள் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கும் சமயத்தில் அவளின் கடந்தகாலம் எதிர்ப்படுகிறது. விளைவாக... அவர்கள் பிரிந்தனரா, சேர்ந்தனரா என்பது க்ளைமாக்ஸ். எந்த இடத்திலும் சலிப்புத் தட்டாத தங்குதடையற்ற எழுத்தில் இந்தக் கதையைக் கொண்டு செல்கிறார் வாஸந்தி. இந்தக் கதை ஆனந்த விகடனில் வெளியாகி, (மலையாள) மாத்ருபூமியில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘இந்நிலே’ என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக பத்மராஜன் இயக்கத்திலும், ‘யாரோ எழுதிய கவிதை’ என்ற தலைப்பில் தமிழில் ஸ்ரீதர் இயக்கத்திலும் வெளியானது என்பதற்கு மேல் சிறப்பாக நான் என்ன சொல்ல..?
மூங்கில் பூக்கள் - இந்தக் கதை மிஜோரம் மாநிலத்தை கதைக்களனாகக் கொண்டது. மிஜோ பழங்குடியினர் வாழும் மாநிலம். அங்கே பள்ளி ஆசிரியையாக இருக்கும் கதாநாயகி ஷீலா தன்னிடம் படிக்கும் முரட்டு பழங்குடி மாணவன் சுங்காவின் மேல் அன்பு செலுத்துகிறாள். ஷீலா காதலிக்கும் மிலிட்டரி ஆசாமியான ராஜீவுக்கு அது சுத்தமாகப் பிடிப்பதில்லை. ராஜீவ் ஜாலி ஆசாமி என்பது வரை அறிந்திருக்கும் ஷீலாவிடம், அவன் பெரும் குடிகாரன் என்றும், பழங்குடி இனப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறான் என்றும், ராஜிவ் நல்லவன் அல்ல என்றும் புகார் சொல்கிறான் சுங்கா. சுங்காவை ஒரு தீவிரவாதி என்றும் ஷீலாவை அடைவதற்காக அவன் செய்யும் ட்ரிக்தான் தன் மீது பழி சொல்வது என்றும் சொல்கிறான் ராஜீவ். எது உண்மை என்பதை ஷீலா விரைவில் அறிய நேர்கிறது. அதன் விளைவு... பரபர்ப்பான, நாம் சற்றும் எதிர்பாராத க்ளைமாக்ஸ். இந்தக் கதையும் மாத்ருபூமியில் மொழிபெயர்க்கப்பட்டு, அதே பத்மராஜன் இயக்கத்தில் ‘கூடெவிடே’ என்கிற படமாக வெளியாகி, தேசிய, மாநில விருது வென்றது என்பது கூடுதல் சிறப்பு.
ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன - அப்பா, அம்மா, அடலசண்ட் வயது மகன் என்கிற முக்கோண உறவுகளுக்கிடையிலான மனப்போராட்டங்கள் தான் கதை. ஆகவே கதைச் சுருக்கத்தைச் சொல்ல இயலாது. படிக்கையில் இந்தக் கதையில் வரும் நாயக்ன் (சிறுவன்? வாலிபன்?) சந்திக்கும் மனப் பிரச்னையை பல இடங்களில் நாம் பார்த்திருப்பதை உணர்வோம். உணர்வுகளைப் பேசினாலும் அழகான வர்ணனைகள். இயல்பான உரையாடல்கள், ஷில்லாங் (மேகாலயா தலைநகர்) பின்னணி என்று படித்து முடிக்கும் வரை நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.
படித்து முடித்ததும் இந்தக் கதைகளின் நிகழ்வுக்களம் தமிழ்நாடாக இல்லாமல் வேறு மாநிலப் பின்ணணியில் இருந்தாலும் அதுவே ஒரு வித்தியாசமான ரசனையை நமக்குத்தர விறுவிறுப்பாகப் படித்துவிட முடிகிறது. கதை மாந்தர்கள் அனைவரும் தமிழர்கள்தான் என்பதாலும் கதைகளின் விறுவிறுப்பும் நிச்சயம் ஏமாற்றாதவை. 272 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்திற்கு ரூ.90 என்று நியாயமான (சில பதிப்பங்கள் போல் 160 வைத்து கொள்ளையடிக்காமல்) விலை வைத்திருப்பது மகிழ்வு. சென்னையில் தி.நகரில் மாசிலாமணி தெருவில் 8ம் இலக்கத்தில் இயங்கும் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். (போன் - 24364243, 2432177, 24336502),
நூலாசிரியர் குறிப்பு : பங்கஜம் என்ற இயற்பெயர் கொண்ட வாஸந்தி கர்நாடகாவில் உள்ள தும்கூரில் 26.7.1941இல் பிறந்தவர். மைசூர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் வரலாறில் பட்டம் பெற்றவர். திருமணத்திற்குப் பின் நாட்டின் பல பகுதிகளில் தன் கணவருடன் வசித்தவர். உசிலம்பட்டி பெண்சிசுக் கொலைகள் பற்றியும், தமிழக பீடி பெண் தொழிலாளர்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவரின் ‘ஆகாச வீடுகள்’ நாவல் யுனெஸ்கோ தொகுப்பு வெளியீடாக வந்துள்ளதுடன் ஆங்கிலம், செக், ஜெர்மன், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாப் சாகித்ய அகாதமி விருது, உத்திரப்பிரதேச இந்தி ஸஸைதானிக் விருது உட்பட பல விருதுகள் வென்றவர்.
Subscribe to:
Post Comments (Atom)
ஜனனம் கதை ஆனந்தவிகடனில் வாசித்து இருக்கிறேன்! வாசகர் கூடம் நல்ல நூல்களை அறிமுகம் செய்வது மகிழ்ச்சி தருகிறது! சிறப்பான புத்தக பகிர்வு. ஆசிரியர் குறிப்புடன் கதை சுருக்கமும் தந்து புத்தகத்தை வாங்க தூண்ட வைக்கிறது பதிவு! நன்றி!
ReplyDeleteரசித்த உஙகளுக்கு மகிழ்வான நன்றி.
Deleteஎன்னுடைய தளம் வந்து எனது சிறுகதைக்கு விமர்சனம் செய்ததற்கு மிக்க நன்றி சார்! நேற்று மின் வெட்டினால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை! நன்றி!
ReplyDeleteபுத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்
ReplyDeleteமிக்க நன்றி.
Deleteஜனனம் கதைக்கு மாருதியின் ஓவியங்கள் அட்டகாசமாக இருக்கும். (என்னிடம் இருக்கிறது!) அடுத்த இரண்டு கதைகள் நான் படித்ததில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் கூடெவிடே படம் கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது.
ReplyDeleteபுத்தகத்தின் விலைக்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டு சொல்லியே ஆகா வேண்டும்.
மாருதி...? எனக்கு அவரின் ஒவியங்கள் ரொம்பப் பிடிக்கும். அவசியம் அந்த ஜனனம் தொகுப்பை பார்க்கணும். நன்றி ஸ்ரீ.
Deleteவிமர்சனம் அருமை பாலா :)
ReplyDeleteதேனக்கா... உங்களுக்குப் பிடிச்சிருந்ததுன்றதுல மிக்க மகிழ்ச்சி எனக்கு. மிக்க நன்றி.
Delete'மூங்கில் பூக்கள்' அந்தக் காலத்தில் 'மணியன்' மாத இதழில் (1981) வந்தபோதே படித்துச் சிலிர்த்துப்போனவன் நான். பின்னால் 1989-
ReplyDelete92 ஆகிய மூன்றாண்டுகள் டில்லியில் வாசம் செய்தபோது அவரை நேரில் சந்தித்தும் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் அடிக்கடி கருத்துப் பரிமாறியும் இருந்த இனிமையான நாட்களை எண்ணிப்பார்க்கிறேன்! இந்தியாடுடே-யில் பணியாற்ற சென்னை வந்தபோது அடிக்கடி பார்ப்பேன். எப்போதோ சாகித்ய அகதெமி பெற்றிருக்கவேண்டும். அவரது எல்லா நாவல்களையும் நான் படித்திருப்பேன். தங்கள் இனிய பகிர்வுக்கு நன்றி. புதிய வாசகரைப் படிக்கத்தூண்டும் வகையில் எழுதினீர்கள். இதுதான் இன்றைய தேவை. நெகட்டிவ் விமர்சனம் பிறகு வைத்துக்கொள்ளலாம். முதலில் அனைவரையும் படிக்க வைப்போம். வாழ்த்துக்கள்!
வாவ்...! மணியன் மாத இதழில் வந்ததைக்கூட நினைவில் வைத்திருக்கீங்களே... எனக்கும வாஸந்தியின் எழுத்துக்கள் மிகப் பிடித்தமானவை. மகிழ்வு தந்த கருத்திற்கு என் மனம் நிறைய நன்றி நண்பரே.
Deleteஅநேகமாய் வாசந்தியின் எல்லா நாவல்களையும் படிச்சிருக்கேன். ஆனாலும் ப்ளம் மரங்கள் குறித்துச் சரியாய் நினைவில் வரலை. முதல் கதை படிச்சிருக்கேன். தமிழில் வந்த திரைப்படமும் பார்த்திருக்கேன். ஜெயஶ்ரீயும், சிவகுமாரும் நடிச்சிருப்பாங்க. ஆனால் கதையின் முடிவும், படத்தின் முடிவும் மாறி இருக்கும்னு நினைக்கிறேன். கதையில் அவள் நினைவுகள் திரும்பாமலே இருக்கட்டும்னு கணவன் விட்டு விட்டுப் போய்விடுவான். திரைப்படத்தில் அப்படி இல்லை. கணவனோடு போய்ச் சேருவாள். :))))
ReplyDeleteஆஹா... கதையின் முடிவைச் சொல்ல வேணாமே படிக்கறவங்க சுவாரஸ்யம் போயிடுமேன்னு தவிர்த்தேன். பட்டுன்னு உடைச்சுட்டீங்களே... கதை, பட முடிவுகள் விஷயத்துல அழகா நினைவுகூர்ந்து அசத்திட்டீங்க மேம்...
Deleteகிட்டத்தட்ட இதே கதைக்கருவை வைத்து 1950களின் கடைசியிலேயே அந்தக் காலக் கலைமகளில் (கி.வா.ஜ. ஆசிரியராக இருந்தப்போ) திரு எல்லார்வி(?) என்னும் எழுத்தாளர் எழுதி ஒரு கதை வந்து நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் பரிசு பெற்றதாக நினைவு. எங்க அம்மா அந்தக் கதையைப் படிச்சுட்டு எங்களுக்கெல்லாம் கதை சொல்வாங்க. பின்னால் பைன்டிங்காக அதே கதையை நானும் படிச்சிருக்கேன். கதையின் பெயர் தான் நினைவில் இல்லை. வாசந்தியின் இந்தக் கதையை விகடனில் படிக்கும்போதும் அந்தக் கதை நினைவுக்கு வந்தது.
ReplyDeleteகதாநாயகி பெயர் உமானு நினைக்கிறேன். அவள் கல்யாணம் செய்து கொள்வது "கோபால்" என்று அவளை விட வயது வித்தியாசம் அதிகம் கொண்ட மாமா மகனை. அவர் தான் போரில் இறந்துவிட்டார் என்று தகவல் வர அவள் மாமனார் ஆன மாமாவே ரவி என்பவர் உமாவை விரும்புவதைத் தெரிந்து கொண்டு மணம் செய்து வைப்பார். ஒரு குழந்தையும் பிறந்த பின்னர் கணவன் போர்முனையிலிருந்து திரும்பி வருவான். மின் வெட்டு, அப்புறமா வரேன்.
வந்துட்டேன். திரும்பி வந்த கணவன் வீட்டுக்கு வரும்போது இவங்க இருவரும் இருக்கமாட்டாங்க. கோபாலின் அப்பாவும் இறந்துட்டார்னு நினைவு. குழந்தை மட்டும் வீட்டில் இருக்கும். வேலைக்காரனோடு. விபரம் தெரிந்து கொண்ட கணவன் தான் இறந்தது இறந்ததாகவே இருக்கட்டும்னு திரும்பிப் போயிடுவான். அதான் முடிவு. அப்ப்ப்ப்ப்ப்பாடா!
ReplyDeleteஅந்தக் காலகட்டத்தில் இது ஒரு புரட்சிக்கதை. ஶ்ரீதர் கூட இப்படி ஒரு சினிமா எடுத்த நினைவு.
ஆஹா... இந்தக் கலைமகள் கதையின் சுருக்கமும் நல்லா சுவாரஸ்யமாவே இருக்குதே... இதை நினைவுகூர்ந்து எமது ரசனையைக் கூட்டி, ரசிக்கும்படியான கருத்தினை வழங்கிய உங்களுக்கு இதயம் நிறை நன்றி. (கரண்ட வந்ததும் ரீவிஸிட் அடிச்சதுக்கு ஸ்பெஷல் சல்யூட்!)
Deletehihihiஇன்னிக்குப் பொழுதுக்கு நீங்க வகையா மாட்டினீங்க! வர்ட்ட்ட்டா????:))))
ReplyDeleteசிறப்பானதோர் புத்தகம். ஜனனம் படித்திருக்கிறேன். மற்ற இரு கதைகள் படித்த நினைவில்லை காணேஷ்.
ReplyDeleteபுத்தகம் பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
ஜனனம் கரு தோசைமாவு தான். கீதா அவர்கள் சொல்லியிருப்பது போல பலவாறு கையாளப்பட்டது. வாஸந்தியின் எழுத்து வித்தியாசமானதாக இருந்தால் படிக்கும்படி இருக்கும். கதை படம் ரெண்டும் மிஸ் பண்ணிட்டேன். இந்துமதி தவிர தமிழில் ஆர்வத்தோடு எந்த எழுத்தையும் படித்த நினைவில்லை.
ReplyDeleteநல்ல விமரிசனம். அறிமுகம். நன்றி .
ஹிஹிஹிஹிஹி,அப்பாதுரை, இந்துமதியோட எழுத்துப் பிடிக்குமா? ஹிஹிஹிஹி! அவங்க "தரையில் இறங்கும் விமானங்கள்" கதைக்கு அப்புறமா எதுவுமே எழுதினதாத் தெரியலையே! :)))))
Deleteஅருமையான கதை தொகுப்பு!! கண்டிப்பாக படிக்க வேண்டும்... பகிர்விற்கு நன்றி!!
ReplyDeleteI think that Kalaimagal story is 'Thutippin Ellai' by S. Lakshmi Subramaniam.
ReplyDeleteI am not sure if Ellarvi wrote un that name. (I am writing this from memory.) I apologize for writing in English (not familiar with typing in Tamil, yet)
அநானி ஐயா/அம்மா, ஆம், எல்லார்வி எழுதிய துடிப்பின் எல்லை தான் நான் சொன்ன நாவல். சரியாச் சொல்லிட்டீங்க. லட்சுமி சுப்பிரமணியம் கலைமகளில் எழுதினதா எனக்கு நினைவில் இல்லை. :)
DeleteMs. Sambasivam,
DeleteHere is the novel I was thinking of:
துடிப்பின் எல்லை
Other Title: thutippin ellai by latsumi suppiramaniyam .Author: லட்சுமி சுப்பிரமணியம் .
Copies available for loan: Kaniyakumari District Central Library (1) Call Number: O31,3N N5 Accession Number: KKM42825
எல்லா கதைகளுமே திரையிலே வந்துவிட்டதா ... பலே... பலே .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete