Monday, April 14, 2014

உழவுக்கும் உண்டு வரலாறு - நம்மாழ்வார்

வரலாற்றையும் கலாசாரத்தையும் புரிந்து கொள்ளாமல் சமுதாயம் முன்னேறுவது முயற்கொம்பே. இந்தியாவானது இன்னும் மிகப்பெரிய அளவில் உவு சார்ந்த ஒரு நாடுதான். சுதந்திரம் அடைந்த போது இருந்த மக்கள் தொகை போல, இரு மடங்கு மக்கள் (73 கோடி பேர்) கிராமத்தில் வாழ்கிறார்கள். உழவுக்கு அடிப்படையான உழவர்கள், விடுதலைக்கு முன்போ... பின்போ நலமாக இருந்த வரலாறு கிடையாது, என்ற முன்னுரையுடன் தொடங்குகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி அமரர் நம்மாழ்வார்.விகடன் குழுமத்தில் இருந்து பசுமை விகடன் தொடங்குவதற்காக ஆலோசனை பெறச் சென்ற விகடன் குழுமம் அய்யா நம்மாழ்வார் அவர்களையே ஒரு தொடர் எழுதும்படி கூற, தொடராக வெளிவந்து பின் புத்தகமாக உருப்பெற்றது தான் உழவுக்கும் உண்டு வரலாறு.

இப்புத்தகம் மூலம் நம்மாழ்வார் அவர்கள் வலியுறுத்த விரும்புவது இயற்கை விவசாயத்தையும் கடந்த சில நூற்றாண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஏற்பட்டு வரும் பரிணாமங்கள் மற்றும் செயற்கை உரங்கள் பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கத்தால் மலடாகிப் போகும் மண் மற்றும் உழவு என்ற தனது விரிவான பார்வையை பதிவு செய்துள்ளார். 

இயற்கை வேளாண் விவசாயத்தின் மகத்துவமும் அதன் முக்கியத்துவமும் பற்றி உலகத்தில் இருக்கும் பல்வேறு வேளாண் விஞ்ஞானிகள் அவர்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் குறித்து எழுதி இருக்கும் நம்மாழ்வார் அத்தகைய பன்னாட்டு விஞ்ஞானிகளுக்கு ஆய்வகமாக உறுதுணையாக இருந்தது இந்திய விவசாயிகளும் இந்திய நிலங்களுமே என்ற தரும் தகவல் ஆச்சரியத்தின் உச்சம். இயற்கை வேளாண்மையை பற்றி தனது ஆழப்பார்வையை விதைத்த முதல் வேளாண் விஞ்ஞானி ஆல்பர்ட் ஓவர்ட் தனக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாக செயல்பட்டவர்கள் இந்திய உழவர்களே என்ற கூற்று ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் விஷயம்.

ரசாயன உரங்களும் பூச்சிகொல்லிகளும் எப்படி ஒரு உயிர்ச் சுழற்சியையே இல்லாமல் ஆக்குகிறது என்பது குறித்து நம்மாழ்வார் விளக்கும் பகுதிகள் தேர்ந்த ஆசிரியன் மாணவனுக்கு விளக்கும் லாவகம் நம்மாழ்வார் எழுத்தில். 

மண் என்பது திடப்பொருள் அல்ல, உயிரோட்டமுள்ள ஓர் அமைப்பு. மண்ணில் கழிவு  என்று எதுவும் இல்லை.  சங்கிலியில் பல கண்ணிகள் உள்ளன. மேல்மட்ட கழிவு, கீழ்மட்டத்தின் உணவு. மனிதர்கள் கழித்ததை கால்நடைகள் உண்ணுகின்றன. கழிவு புழுக்களுக்கும் நுண்ணுயிர்களுக்கும் உணவாகிறது. நுண்ணுயிர் செயல்பாடு செடி வளர்ச்சிக்கும் தேவைபடுகிறது. உணவுச் சங்கிலியை புரிந்து செயல்பட்டால் பண்ணைக்குத் தேவைப்படும் சக்தியின் அளவு குறையும்.

இந்த புத்தகம் முழுக்க முழுக்க வேளாண்மை சார்ந்த கட்டுரைகளே. மண்ணுக்குள் ஒரு பயணம் என்ற கட்டுரையில் பயிர் வளர்ப்புக்கு தேவையான புறக் காரணிகளை விளக்குகிறார் நம்மாழ்வார்.அமீபா, பூஞ்சைகள், வாலிகள், பாக்டீரியாக்கள், கார்பன், நைட்ராஜன் என்று நம்மாழ்வார் விளக்கும் ஒவ்வொரு விசயங்களும் என்றோ தாவரவியல் புத்தகத்தில் படித்ததை நினைவூட்டுகின்றன. 

நிலம் வளமானதா இல்லையா என்பதை காட்டித்தரும் உயிரினம் மண்புழு.  காற்றோட்டத்தை உண்டுபண்ணுகிறது. தனிமங்களை செடி ஏற்கும் வண்ணம் உதவுகிறது. நிலத்தில் ஒரு சான் அளவுக்குள் இருக்கும் மேல் மண்ணே பயிர்வளர்ப்பில் முக்கியம். அந்த மேல் மண்ணில் கோடி கோடியாக நுண்ணுயிர்கள் உள்ளன. அவை தாவரங்கள், விலங்குகளின் கழிவுகளை சிதைக்கின்றன. பயிர் வளர்ச்சிக்கு தேவையான தனிமங்களை பயிர் வளர்ச்சிக்கு ஊட்டி விடுகின்றன. சிதைவுக்கும் வளர்ச்சிக்கும் பாலமாக நுண்ணுயிர்கள் இருக்கின்றன. இந்த நுண்ணுயிர்களை ரசாயனம் அழிக்கும் என்பதாலேயே எந்திரங்களையும் ரசாயனங்களையும் எதிர்க்க வேண்டும் என்கிறார் நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள். மேலும் 1960 முதலாக இந்தியாவில் நடத்தப்பட்டிருப்பது பசுமைப் புரட்சி அல்ல பசுமை சார்ந்த வியாபாரப் புரட்சி என்கிறார். 

இப்படி வியாபாரப் புரட்சியின் மூலமும் பன்னாட்டு வேளாண் ஒப்பந்தங்கள் மூலம் மண்ணை மலடாக்கும் முயற்சிகளையும் உழவர்களுக்கு பாதுகாப்பளிக்காமல் தற்கொலைக்கு தூண்டும் அரசாங்கத்தையும் கடுமையாக சாடுகிறார். மேலும் உழவைப் பாதுகாப்பது உழவரைப் பாதுகாப்பது உணவைப் பாதுகாப்பது என்று ஆணித்தரமாக குறிப்பிடும் வாசகம் பொன்னேட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் அரசு ஏட்டிலும் பொறிக்கப்பட வேண்டிய விஷயம். 

2008ம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்து கிட்டத்தட்ட தற்போது வரையிலும் பத்து பதிப்புகள் வெளிவந்துவிட்ட இப்புத்தகத்திற்கு ஓவியர் ஹரன் வரைந்த சித்திரங்கள் பாராட்டப்பட ஒன்று 

நகரத்துவாசியான என்னை போன்ற பலருக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் அவர்கள் கையைப் பிடித்து இது தான் விவசாயம் கற்றுகொள் என்கிறார் நம்மாழ்வார். இப்புத்தகம் விவசாயம் சார்ந்த முழுமையான கையேடோ ஆழமாகப் பேசும் புத்தகமோ அல்ல. வேளாண்மை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் ஆரம்ப நிலை வாசகனுக்கான புத்தகம். ஒருவேளை இருந்தால் தவறவிடாதீர்கள். 

படித்துவிட்டு 'நல்லாத்தான் சொல்லப்பட்டிருக்கு' என்று சொல்வதற்கு அல்ல இந்த நூல்... 'வருங்கால சந்ததிக்காக ஏதாவது ஒன்றைச் செய்யாமல் ஓயமாட்டேன்' என்று முடிவெடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் கையிலும் ஆணின் கையிலும் இருக்க வேண்டிய கைவிளக்கு இது. அவர்களுக்கு இவ்விளக்கு ஒளி உமிழும்! நெஞ்சுக்கு நெருக்கமானவர்களே உங்களை ஆரத்தழுவுகிறேன்  என்கிறார் நம்மாழ்வார்.  

உழவுக்கும் உண்டு வரலாறு - நம்மாழ்வார் - விகடன் பிரசுரம் ரூபாய் 75/-

4 comments:

 1. இந்தியாவானது இன்னும் மிகப்பெரிய அளவில் உளவு சார்ந்த ஒரு நாடுதான் ///இதை உழவுன்னு மாத்திடு சீனு. நீ சொல்ல வந்த அர்த்தமே மாறிடுது.

  நம்மாழ்வார் தன்னால் இயன்ற அளவுக்கு இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தைப் போதித்து நிறைய விவசாயிகளுக்கு வழிகாட்டிய பெருந்தகை. இந்தப் புத்தகத்தை நான் இதுவரை படிக்கவில்லை. விவசாயம் பற்றி அடிப்படை அறிவு மட்டுமே கொண்டிருக்கும் என் போன்றோருக்கு பயன்தரும் புத்தகம் என்றே தோன்றுகிறது. படிச்சிடறேன்.

  ReplyDelete
 2. உழவுக்கும் உண்டு வரலாறு -
  கை விளக்குபோன்று பயனுள்ள விமர்சனம்.!

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம். புத்தகம் வாங்கி படிக்க முயல்கிறேன் சீனு.

  ReplyDelete
 4. விவசாயத்தின்மீது எனக்குஎப்போதும் மரியாதை உண்டு.
  இயற்கை விவசாயம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர முடிகிறது. அரசும் இதனை ஊக்குவிக்க வேண்டும்.

  ReplyDelete

இது... உங்க ஏரியா!