Sunday, March 1, 2015

மோகமுள் - தி. ஜானகிராமன்






இவ்வளவு நாள் வாசிக்காமல் விட்டுவிட்டோமே என்று என்னை நானே கடிந்து கொண்ட புத்தகம் இந்த மோகமுள். இதை வாசிக்கத் தூண்டிய அண்ணாச்சி மயிலனுக்கு அனேக வணக்கங்கள். 

இசையார்வம்/பாடும் வல்லமை கொண்ட ஒரு வாலிபன் வெளியூரில் தங்கி படிக்கிறான், தன்னைவிட வயதில் மூத்த பெண்ணொருத்தியை ஒருதலையாக காதலிக்கிறான், அந்தக் காதல் கை கூடியதா? இல்லையா? என்ற மையச்சரடை வைத்து 686 பக்கங்களுக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார் ஆசிரியர் தி. ஜானகிராமன். சுருக்கமாக சொல்கையில் பேரரசு படம் போன்று பீதியை கிளப்பினாலும், படிக்கையில் மகேந்திரன் படங்கள் போன்று மனதை தைக்கிறது.
  
ஒரு நடுத்தர பிராமண/சங்கீத குடும்பத்தின் ஆண்வாரிசான பாபு, கும்பகோணத்தில் தங்கி BA பயின்று வருகிறான். அப்பா வைத்தி, அம்மா, அக்கா பாபநாசத்தில் வசித்து வருகிறார்கள். இவனுக்கென, இவனை புரிந்து கொண்ட ஒரே நண்பனான இராஜம். மராத்திய ராஜ வம்ச வழியான பார்வதிபாய் தஞ்சாவூர் அய்யர் ஒருவருக்கு இரகசிய மனைவியாகவும் அதற்கு சாட்சியாக நாயகி யமுனா எனும் பேரழகி இருப்பதாக சொல்ல துவங்கி கதையை மிக நுட்பமாக செலுத்துகிறார்.

கும்பகோணத்தில் தங்கி படித்துக்கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டு வயதான மனிதரின் இளம் மனைவி தங்கம்மாளுடன் ஏற்பட்ட மொட்டை மாடி தனியறை சுகானுபவம், பின்பு பாபு குற்ற உணர்ச்சியில் உழலுதல், அடுத்தடுத்து தங்கம்மாள் வந்து கதவு தட்டுவதையும், யமுனாவிடம் சென்று தனது காதலை தெரிவிக்க, யமுனா மறுப்பு தெரிவிக்க, யமுனாவின் மீது கொண்டுள்ள தனது ஒருதலைக்காதலை ராஜத்திடமும் சொல்ல, இராஜம், பாபுவுக்கு வகுப்பெடுப்பது, பாபுவிற்கு கடிதம் எழுதி வீசிவிட்டு தங்கம்மாள் மகாமக குளத்தில் விழுந்து இறத்தல், அந்த வயதான கணவரின் பின்னணியை அவரின் முதல்தாரத்து மகனை வைத்தே சில பக்கங்களில் விவரிப்பது என்று பட்டாசாக வெடித்திருக்கிறார் ஆசிரியர் தி. ஜா.

பாபு, கும்பகோணத்தில் இருக்கையில் பாட்டுவாத்தியார் ரங்கண்ணா வும், சென்னை வந்த பிறகு பாலூர் இராமு இவர்கள் இருவரைக்கொண்டே சங்கீத சம்பாஷணைகளை தொடர்ந்து நாவலில் பதிந்து கொண்டு வருகிறார். சென்னையின் மாடியறை ஒன்றில் பாபு பாடுவதாகவும், இராமு கேட்பதாகவும் நாவலில் ஓரிடத்தில் வரும், அதை வாசிக்கையில் அனிச்சையாக நமக்கும் அந்த பாடல் ஒலி கேட்பதாக ஒரு உணர்வு தோன்றும். இதுதான் தி.ஜா அவர்களின் பேனாமுனை இரகசியம்.    

ஆறொன்று ஓடிக்கொண்டிருக்கையில், கிளையொன்று பிரிந்து வேறெங்கோ ஊர்சுற்றி பின்பு கடலிலோ அல்லது அதற்கு முன்பு பிரிந்த ஆறுடனோ இணைந்து கொள்வது போல, இந்நாவலில் ஏகப்பட்ட கிளைக்கதைகள் இருக்கிறது. கிளைக்கதைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் தாக்கம் மனதை விட்டு அகலாத அளவிற்கு அழுத்தமாய் இருக்கிறது.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் பாபுவின் பெரியப்பா பிள்ளை சங்கு பற்றிய சிறுகுறிப்பும், அப்புறம் பாபுவின்  அக்கா கணவர் இறப்பு, சொத்துக்களை பறித்துக்கொண்டு ஏமாற்றும் கணவன் வழி சொந்தம், அக்காவின் பெண் குழந்தை "பட்டு" இறந்து போவது போன்றவற்றை போகிற போக்கில் சொல்லிவிட்டு போனாலும் மனதில் அப்படியே வேர் விட்டு விழுதிறங்கிவிடுகின்றன அந்த சின்ன சின்ன பாத்திர படைப்புகள். 

முக்கியமாக, ஆணின் உள்ளத்து ஆசைகளையும், அதை பெண்ணொருத்தியிடம் வெளிப்படுத்திய பின்னர் ஏற்படும் சூழலையும் சொன்ன விதம் நறுக். உருவாக்கிய ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் அதன் இயல்பிலேயே முடித்திருப்பது நன்று. கண்ணியம் பிறழாத சொற்களை கொண்டு கிளுகிளுப்பான சம்பவங்களை சொன்னமைக்காகவே இந்த நாவல் தனித்துவமாக மனதில் நின்றுவிடுகிறது. 


இந்த நாவலில் நான் பிரமித்த விஷயங்கள் :


அ ) கதைக்குள் கிளைக்கதை, கிளைக்கதைக்குள் கிளைக்கதை என்று நகர்ந்தாலும் தெளிந்த நீரோட்டமாய் இருப்பது வியப்பாக இருக்கிறது.

ஆ) எத்தனை பாத்திரங்களை புகுத்தியிருந்தாலும் தெளிவான கட்டமைப்பினால் எவ்வித குழப்பமுமில்லாமல் இருப்பது.

இ) 30 ஆம் பக்கத்தில் சொல்லப்பட்ட கதாப்பாத்திரம் 600 வது பக்கத்தில் வந்தாலும், வாசிக்கையில் எளிதில் நினைவு கூற கூடிய வசீகரம்.

ஈ) சங்கீத சம்பாஷனைகள் கொண்டு பிண்ணப் பட்டாலும் எங்கும் அயற்சியை தரவில்லை.

உ) பாபு-யமுனா உரையாடல்கள் எதார்த்தமாய் இருக்கிறது கொஞ்சம் கூட நாடகத்தன்மையினறி இருக்கிறது. புத்தகத்தின் ப்ளஸ் இதுதான். 

ஊ) புத்தகம் முழுதும் ஏதோ ஒரு வித எதிர்பார்ப்போடு நகர்த்தி செல்வது, இப்படி சொல்ல நிறைய இருக்கிறது, வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப்பாருங்கள்.


ஐந்திணை பதிப்பகம் - 300/-

காலச்சுவடு (கிளாசிக் வரிசை) - 475/-

காலச்சுவடுக்கும், ஐந்திணை பதிப்பகத்தின் புத்தகத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை, (கிளாசிக் வரிசை என்ற கவர்ச்சியை தவிர) ஆகையால் ஐந்திணை தான் என்னோட பரிந்துரை. 

நூல் வாங்க:
ஐந்திணை முகவரி:-


No 279, Pycrofts Road Bharathi Street, Triplicane, Chennai - 600005 
   

படித்துச் சொன்னது 

அரசன் 
http://www.karaiseraaalai.com/


7 comments:

  1. சுவையான விமரிசனம். கச்சிதமான பரிந்துரை. வாங்கிப் படிக்கத் தூண்டினாலும் அத்தனை பக்கங்களா என்ற திகிலும்.
    திரைப்படமாக வந்ததோ?

    ReplyDelete
  2. மோகமுள் திஜாவின் உச்சப்படைப்பு என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  3. செம்மை!! கட்டாயம் read list ல் வைத்துக்கொள்கிறேன் :)

    ReplyDelete
  4. நல்ல கதையம்சம் உள்ள நாவல். மலர் மஞ்சமும் வாசியுங்கள். இதெல்லாம் நான் பதினைந்து, பதினாறு வயதிலேயே படித்தது. அப்போ அவ்வளவாப் புரியலைனு தான் சொல்லணும். அதன் பின்னர் பல முறை படித்திருக்கேன். மோகமுள்ளைப் படமாக எடுத்துக் கெடுத்து விட்டார்கள். கதையின் ஜீவன் படத்தில் இல்லை. அபிஷேக் மட்டும் பாபு பாத்திரத்துக்குப் பொருந்தி வந்தார். யமுனாவுக்கும் அப்போதைய கொங்கணி நாடக நடிகை, பெயர் மறந்து போச்சு( வாவ், தாஜ், விளம்பரங்களில் கூட நடிப்பார், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிச்சிருக்கார்) அவர் தான் யமுனா என்னும் கதாநாயகியாக நடித்திருந்தார். விரும்பிப் பார்த்த படம். ஏமாற்றத்தைத் தந்தது.

    ReplyDelete
  5. ப்ரொஃபைலைப் பார்த்து வாசகர் கூடத்துக்கு வந்தேன். பிரபலமானவர்களின்நூல்களுக்குத்தான் விமரிசனம் எழுதுவீர்களோ. “வாழ்வின் விளிம்பில் நினைவுக்கு வரவில்லையா. நான் தான் இன்னும் பிரபலமாகவில்லையே.!

    ReplyDelete
    Replies
    1. எல்லாரின் நூல்களுக்கும் தான் அய்யா எழுதிக் கொண்டிருக்கிறோம். இதில் பிரபலம், பிரபலமில்லாதோர் என்ற பாகுபாடு கிடையாது. இதிலிருக்கும் மொத்த பதிவுகளை பாருங்கள் உங்களுக்கு விளங்கும். வாழ்வின் விளிம்பு என்று எதை வைத்து அளவீடு செய்கிறீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் ஏதும் புத்தகம் எழுதியிருந்தால் தலைப்பை சொல்லுங்கள் வாங்கி வாசித்துவிட்டு எங்களது பார்வையை எழுதுகிறோம் அய்யா .. நன்றி

      Delete
  6. மோகமுள் பற்றி அறிந்ததுண்டு ... ஆனால் இதுவரை படித்ததில்லை ... அறியும் முயற்சியில் இருக்கிறேன் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!