Wednesday, February 25, 2015
பிறக்காத குழந்தைக்கு இவள் எதற்காக கடிதம் எழுத வேண்டும் !!,
அதுவும் நாவல் நீளத்திற்கு பெரிய கடிதம் !!. மேற்கத்தியக் கலாச்சார வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பே இணை சேர்தல் என்பது
மிகச்சாதாரணமாகிவிட்டது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தின் வசத்தால், அசந்தர்ப்பவசமாக அவள் கர்ப்பமாகிறாள்,
அவளது கர்ப்பத்திற்கு காரணமானவன் அவளை கண்டுகொள்ளாமல்,அவளை கவனித்துக்கொள்ளாமல்
அந்த எதிர்பாரா கருவை கலைக்கச் சொல்கிறான், அந்த கரு ஒரு அவசியமற்றது ,
அவமானகரமானது என்று சொல்லி காணாத இடத்திற்கு மறைகிறான்.
அவளது வாழ்வுக்கு பொருள் சேர்க்க அவள் பார்க்கும் வேலைக்கு அந்த கரு
தேவையற்றது எனவும், இப்போது அவளிருக்கும் நிலையில் அந்த கரு தேவையில்லை எனவும்
அலுவலக முதலாளியும் கலைக்கச்சொல்கிறார். கலைக்காமல் காத்து அந்த கருவை குழந்தையாக்கி உலகத்திற்கு தர வேண்டும் ,
“ஏதுமறியா கருவை நான் ஏன் கொலை செய்ய வேண்டும்” என்று அதை குற்றவுணர்வு
சிறிதுமின்றி “ஒரு தாயாக இருக்கறதுங்கறது ஒரு
வியாபாரமில்லை, ஒரு கடமை கூட இல்லை, அது பல உரிமைகள்ள ஒண்ணு...” என தன்
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையாக மாறக் காத்திருக்கும் அந்த கருவுக்கு தத்துவம்
சொல்லியபடி அதை சுமக்க ஆயத்தமாகிறாள்,சுமந்து கொண்டும் திரிகிறாள்.
அந்த கருவின் வளர்ச்சியோடு சேர்ந்தே கதையும் வளர்கிறது.அவள் டாக்டரிடம்
செல்கிறாள், ஸ்கேனிங்க் செய்து கொள்கிறாள், வேலைக்குச் செல்கிறாள் , அவளது மணமாகாத
கனவன் அவளோடு பேசுகிறான், ... கதையில் நிகழ்கிற எல்லாவற்றையும் தனது கருவுக்கு
கடிதமாக சொல்வது மாதிரியே கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு டயரிக்குறிப்பு மாதிரி அவ்வப்போது தனக்கு தோன்றுவதையெல்லாம் தனக்குள்
உருவாகிக்கொண்டிருக்கும் அந்த குழந்தையோடு வார்த்தைகளால் ஊடாடிக்கொண்டே
செல்கிறாள். அந்த கரு ஆணா, பெண்ணா என்று தெரிவதற்கு முன்பே , உலகம் எவ்வளவு மோசமானது
என்றும், பெண்ணாக பிறந்தால் உலகை
எவ்விதமாக எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் பயமுறுத்துகிறாள், அல்லது அது ஆணாகப்
பிறந்தால் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று கூறி, பெற்றுக்கொள்வதற்கு முன்பே
அதை வளர்க்க ஆரம்பிக்கிறாள்.
“ஒரு ஆணாக இருக்குறதுங்கறது முன்னால ஒரு வாலோட
இருக்குறது மட்டுமில்லனு உனக்குச் சொல்ல நான் முயற்சி செய்யறேன்,அது நீ ஒரு ‘நபரா’
இருக்கறதுல இருக்கு என்னைப் பொறுத்த அளவுல நீ ஒரு நபரா இருக்கறதுங்கறது எல்லாத்தையும்விட
முக்கியமானது நபர்ங்கறது ஒரு அற்புதமான வார்த்தை, ஏன்னா அதுக்கு ஆண்,பெண் ங்கிற
வரையறை இல்ல, வால் இருக்குறவங்களுக்கும், இல்லாதவங்களுக்கும் அது எல்லையை
வகுக்கிறதில்ல. இதயத்துக்கும், மூளைக்கும் பாலியல் வேறுபாடு கிடையாது,
இதயமும், மூளையும் கொண்ட நபரா நீ இருக்கனும்னா ஆணுன்னும் பொண்ணுன்னும் இருக்கறதால
ஒருத்தர் இப்படியிப்படித்தான் இருக்கனும்னு வற்புறுத்துறவங்கள்ள ஒருத்தனா நிச்சயம்
நீ இருக்கக் கூடாது...“
என்னை நிராகரித்து விட்டுச்சென்றுவிட்டு உன்னைக் கலைக்கச்சொல்லும் உன் அப்பனை
போல அல்லாமல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்கிறாள். உலகத்தின் சாலைகள் எப்படிப்பட்ட கரடுமுரடான கற்களாலும், முற்களாலும் ஆனது, அதை
எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்கிறாள், பயமுறுதலோடு நின்று கொள்ளாமல் எதற்கும்
அஞ்சாமல் தைரியமாக உலகை எதிர்கொள்ள வேண்டும் என தைரியமூட்டுகிறாள். “எனது பேச்சை வேறு யாராவது
கேட்டால், எனக்கு கிறுக்கென்று குற்றஞ்சாட்டுவாங்களா” என உங்களுக்குள் அந்தக் கேள்வி தோன்றுவதற்கு முன்பே
முந்திக்கொள்கிறாள். தத்துவங்கள் சொல்கிறாள், தன் வாழ்வை கதையாக்கி, அந்த கருவுக்கு சில கதைகள்
சொல்கிறாள்.. பேசிக்கொண்டே இருக்கிறாள்.
இந்த புத்தகத்தில் கடைசி சில பக்கங்களில் வாழ்வின் எதார்ததத்தை, கற்பனைக்கும்
நிதர்சனத்திற்குமான வேறுபாட்டை தன் கண்களுக்குத் தெரியும் அந்த குழந்தையிடம் அந்த
தாய் பேசுகிறாள், இந்த உரையாடலை இந்த புத்தகத்தின் இதயம் என்று சொல்வேன் நான்.,
அந்த இதயத்தின் துடிப்புகளை கேட்டவன் என்ற முறையில் சொல்கிறேன், நீங்களும் கூட
அந்த துடிப்புகளை கேட்க முடியும். அவள் அந்த குழந்தையைப் பெற்றுக்கொள்வாளா?
அந்த குழந்தை எப்போது பிறக்கும் ?, அதன் அப்பா அவளோடு சேர்வானா ? , என
வினாக்களின் விரட்டல்கள் கதையோடு சேர்த்து
நம்மை ஓடச் செய்கின்றன.
இந்த படைப்பு ஒரு சமூக நாவலா, தத்துவ விளக்க நாவலா, கடிதமா, திரில்லரா, என
வகைகளுக்குள் . யோசிக்கிற போது இது ஒரு புதுவித படைப்பாக்கம். இந்நாவல் இத்தாலியப் பெண் எழுத்தாளர் ஓரியானா ஃபெல்லாசி எழுதிய “Lettera a un bambino mai nato” என்ற புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம். பிற பயமுறுத்தும் வார்த்தைக்கோர்வை மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் போலன்றி , இந்நாவலை திலகவதி பேச்சுத்தமிழ் வழக்கில் மிக அழகாக மொழியாக்கம் செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கிடைத்துவிட்ட எதிர்பாராத கர்ப்பத்தை சுமந்து திரியும் , பெண்ணிய சிந்தனையுள்ள, வேலைக்குச்செல்லும் ஒரு பெண் தன் கருவோடு புலம்பும் புலம்பல்கள். வலி, வேதனை, ஆழ்மன அலைகளின் ஆழமான பதிவு.
-விஜயன் துரைராஜ்
சில குறிப்புகள்:
இத்தாலிய மூலம் : Lettera a un
bambino mai nato
படைப்பு: Oriana Fallaci (இத்தாலிய எழுத்தாளர்)
இத்தாலிய மூலம்
பதிப்பிக்கப்பட்ட வருடம்: 1975
தமிழ் மொழியாக்கம் : திலகவதி
பதிப்பகம்: அம்ருதா, சென்னை
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
ReplyDeleteபுத்தகத்தின் கதையை படித்த போது உருக்கமாக உள்ளது எதிர்பாராத விதமாக வாழ்வில் நடக்குமநிகழ்வை சித்தரிக்கும் நிகழ்வாக உள்ளது படிக்க தூண்டுகிறது... விமர்சனத்தை சிறப்பாக சொல்லியமைக்கு வாழ்த்துக்கள் ஆவியப்பா...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//எதிர்பாராத விதமாக வாழ்வில் நடக்குமநிகழ்வை சித்தரிக்கும் நிகழ்வாக உள்ளது // வாழ்த்துக்கள். நன்றி. அன்புடன் .ரூபன்
Deleteஹ்ம்ம் எல்லா ஊர்லயும் ....மனிதன் ஒன்றே.
ReplyDeleteநாவலைப் படிக்கத் தூண்டும் பதிவு.
நன்றி அக்கா
Deleteநல்ல நூல் அறிமுகம் விஜயன்.மற்ற நாடுகளிலும் பெண்கள் நிலை இப்படித்தானா? படிக்க வேண்டும்
ReplyDeleteஎப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சையாக த்தான் தெரிகிறது சார் :) நன்றி சார்
Deleteதிலகவதின்னா யாரு? நம்ம ஐ பி எஸ் திலகவதியா? படிக்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றுகிறது.
ReplyDeleteசிறப்பானதோர் நாவல் அறிமுகம். நன்றி நண்பரே......
ReplyDeleteநல்ல பகிர்வு. நன்றி.
ReplyDeleteபுத்தகம் குறித்த நல்ல அறிமுகம்... நான் இதுபோன்ற புத்த்கங்களைபடிக்க நினைச்சதுண்டு.... இந்தியா வரும்போது புத்தகத்தை தேடிப் படிக்கிறேன்....
ReplyDeleteஆகா ..இதை படிக்கும்போது நாவல் மனதை உருக்குவதாகவும், நெகிழவைப்பதாகவும் இருக்கும் என நினைக்கிறேன் ... கண்ணீருடந்தான் படிக்கவேண்டும்போல் இருக்கிறது .. நாவலை வடித்த இத்தாலியப் பெண் எழுத்தாளர் ஓரியானா ஃபெல்லாசிக்கு வாழ்த்துக்கள். >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete