Thursday, November 19, 2015

மலைச்சாமி - வளவ. துரையன்





கடந்த வருட சென்னைப் புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகங்களில் கூடுமானவரை படித்தாயிற்று, இன்னும் சில புத்தகங்கள் கிடப்பில் இருந்தாலும் வரும் ஜனவரிக்குள் படித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அலுவலகப் பணி நிமித்தமாக வடபழனியிலிருந்து திருப்போரூர் வரை பேருந்தில் சென்று வர வேண்டிய சூழல். எதற்கும் இருக்கட்டுமே என்று எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினேன் இந்த மலைச்சாமியை. வளவ.துரையன் என்பவர் எழுதி இருக்கிறார் இந்த மலைச்சாமியை. பின்னட்டையில் இருந்த மண் மண எழுத்துக்களை பார்த்ததுமே வாங்கிவிட்டேன். வடபழனியில் ஏறுகையில் உச்சி வெயிலின் தாக்கம் மூர்க்கமாக இருந்தது, ஏறியதோ குளிர்சாதன பேருந்து, என்னோட பிரச்சினை என்னவெனில் குளிர்சாதன வண்டிகளில் ஏறிய குறுகிய நேரத்தில் உறங்கிவிடுவேன், ஆனால் அன்றைக்கு அதிசயமாக இந்த நூலை புரட்டத் துவங்கினேன். முதல் சில பக்கங்களில் ஒருவித அயர்ச்சியை தந்தாலும் அடுத்தடுத்து விறுவிறுவென நகரத் துவங்கியது. இடையிடையே சின்ன சின்ன தொய்வுகள் வெளிப்பட்டாலும் மூடி வைக்குமளவிற்கு தூண்டவில்லை. கேளம்பாக்கத்தை சேர்கையில் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை முடித்திருந்தேன்.

எளிமையிலும் எளிமையான கதைக்களன், நான்கைந்து மனிதர்களை மையப்படுத்தி புனைந்திருக்கும் நாவல். பெரும்பாலும் எழுத்தாளர்கள்,  தாம் எப்படி வாழ்கிறோம் இல்லை எப்படி வாழ நினைக்கிறோமோ அப்படியொரு மையச்சரடை தனது நூல்களில் எங்காவது ஓரிடத்தில் புகுத்தியிருப்பர். இதில் ஏகப்பட்ட பாத்திரங்கள் அவ்வாறு புகுத்தப்பட்ட உணர்வைத் தருகிறது.

கதைச்சுருக்கம்:

ஒரு இளம்பெண் எதையோ பார்த்து பயந்து விடுகிறாள், அதனால் அவள் புத்தி பேதலிச்ச மாதிரி நடந்து கொள்கிறாள். அவளின் அப்பா குப்புசாமி, பக்கத்து ஊரில் தனியாக வாழ்ந்து வரும் தனது அம்மா மீனாட்சியம்மாவிற்கு  தகவல் அனுப்பி வரவழைத்து விசயத்தை சொல்ல, மீனாட்சியம்மா பலவித யோசனைகளுக்குப் பின் ஊருக்குப் புதிதாய் வந்திருக்கும் மலைச்சாமியிடம் காண்பிக்க வண்டி கட்டிக்கொண்டு போய் தரிசித்து வருகின்றனர்.

மலைச்சாமி சொன்னது போல் இளம்பெண் மாலதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறது.

இதற்கிடையே குருமணி எனும் அய்யர் தனது விருப்பபடி நடக்க பிரியப்பட்டு தனது அப்பாவிற்கு செய்ய வேண்டிய திதி சடங்குகளை தவிர்த்துவிட்டு தன் விருப்பபடி படத்திறப்பு செய்யப் போவதாகவும், அதற்கு அவர்களின் உறவுகள் எதிர்ப்பு தெரிவிப்பது போல தனியொரு பாதையில் பயணிக்கிறது.

இன்னொரு கிளைக்கதையாக முருகேசன், பெரியசாமி, சுமதி இவர்கள் சம்பந்தப்பட்ட நகர்வு. முருகேசன் பெரியசாமி இருவரும் சித்தப்பா, பெரியப்பா மக்கள். முருகேசனுக்கு பக்கத்து ஊரிலிருக்கும் சுமதியை பெண் பார்த்துவிட்டு திரும்புகையில் விபத்தில் குடும்பத்தையே பறிகொடுத்துவிட்டு முருகேசனும் பெரியசாமி இருவர் மட்டும் உயிர் பிழைக்கின்றனர். அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு திரும்புகையில் தான் இப்படியொரு சம்பவம் நடந்தது அதனால் அப்பெண் வேண்டாம் என்று முருகேசன் தவிர்க்க, பெரியசாமியும், ஊர் நாட்டாமையும் பேசி ஒருவழியாக திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். நிலப் பிரச்சினை காரணமாக முருகேசன், ஊர்க்காரன் ஒருவனை கொலைசெய்துவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிட, அப்போது ஜெயிலுக்குள் நடக்கும் ஒரு விபத்தில் முருகேசன் இறந்துவிடுவதாய் நம்பி பெரியசாமிக்கும் சுமதிக்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறார் ஊர் நாட்டாமை. ஆனால் உண்மையில் இறக்காத முருகேசன் தண்டனை முடிந்து வெளியே வந்து ஊருக்கு வர எத்தனிக்கையில் நாட்டாமை கண்ணில் இவன் பட, அவர் எல்லா உண்மையையும் முருகேசனிடம் சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு இறந்துபோகிறார். தன்னால் திருமணம் புரிந்து கொண்டு வாழும் தன் தம்பியும் மனைவியும் மீண்டும் தன்னால் நிம்மதி இழக்க கூடாது என்றெண்ணி கொல்கத்தா செல்கிறான் முருகேசன். அங்கே ஒரு தமிழ் மளிகை கடைக்காரர் பார்த்து இவனுக்கு உதவி தன் வீட்டில் தங்கவைத்து வேலைகொடுக்க, கொஞ்ச நாட்கள் சென்றதும் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் முதலாளியின் மகள் இவனோடு திருட்டு உறவு கொள்ள நேரிடுகிறது. அவளும் திருமணம் முடிந்து சென்று விட, முருகேசனுக்கு தனிமையின் பிரிவும், குற்ற உணர்ச்சியும் வாட்டியெடுக்க தூரத்திலிருந்தாவது தம்பியையும் மனைவியையும் பார்த்து வருவதாக சொல்லி விடைபெற்று ஊருக்கு வந்து மலைச்சாமி ஆகிறான் பெரியசாமி.   

இதற்கெல்லாம் உச்சமாக கோபு எனும் படித்த இளம்பையன் சுலோச்சனா என்ற திருமணமான பெண்ணோடு கள்ள உறவு வைத்திருப்பதாகச் சொல்லி கதையை நகர்த்துகிறார். அந்த கள்ள உறவையும் நியாயப் படுத்த ஒரு முன்கதைச் சுருக்கம் சொல்லி படிப்பவர்களை கலங்கடிக்கிறார்.

முன் திட்டமிடலின்றி வாங்கிய பல புத்தகங்கள் இன்பஅதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன, ஆனால் இப்புத்தகம் பேரதிர்ச்சியை தந்தது தான் மிச்சம். இந்தப் புத்தகத்தில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் பல்வேறு வழிகளில் பயணித்த கதைகளை ஒருங்கிணைத்து முடித்து வைத்திருப்பது தான்.

ஒட்டுமொத்தமாக இந்த நாவலை படித்து முடிக்கையில் தொண்ணூறுகளின் தமிழ் சினிமாவை பார்த்த உணர்வை தருகிறது. மற்றபடி இந்த நாவலை வாசிப்பதினால் எவ்வித பயனுமில்லை. நேரமும், பணமும் நிறைய இருந்தால் இந்த நூலை வாங்கி வாசிக்கலாம் என்பது என்னோட தனிப்பட்ட கருத்து.   

========================================================================

மருதா பதிப்பகம்

விலை : 100/-

மொத்தப் பக்கங்கள் : 175

========================================================================

வாசித்துச் சொன்னது

அரசன்
http://www.karaiseraaalai.com/ 

3 comments:

  1. நீங்களே சொல்லிட்டீங்க! நேரமும் பணமும் மிச்சம்! நன்றி!

    ReplyDelete
  2. பலவேறு திசைகளில் பயணிக்கும் கதைகளை ஒருங்கிணைப்பதுதான் பின் நவீனத்துவம். தங்களைப்போன்றவர்களைக் கடைசி பக்க வரை படிக்க வைத்து அத்கு குறித்த ஒரு பதிவையும் பரிமாற வைத்துருக்கிறதே அதுவே நாவலின் வெற்றி

    ReplyDelete

இது... உங்க ஏரியா!