Wednesday, March 5, 2014

முகில் கண்ணா அசத்திட்டடா நீ!

சந்திரபாபு - கண்ணீரும் புன்னகையும் 

பதிவர் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடந்த சமயங்களில் டிஸ்கவரி புக் பேலஸில் மற்றவர்கள் வருவதற்காக காத்திருக்கும் சமயம், உள்ளிருக்கும் புத்தகங்களை நோட்டமிடுவது வழக்கம். அப்படி ஒரு நாள் புத்தகங்களை வலம் வருகையில் ஒரு படத்தின் அட்டையில் சந்திரபாபு இருக்க அதை நான் கையில் எடுத்து பார்த்த பொழுது அருகில் இருந்த 'மின்னல் வரிகள்' பால கணேஷ் சார் 'இந்தப் புத்தகம் நல்லா இருக்கும். முகில் அருமையா எழுதி இருப்பார்' என்றார். சந்திரபாபு ரசிகன் என்று சொல்லிக்கொண்டு திரியும் எனக்கு அவரது வாழ்கை கதையை அறியும் ஆவல் இருந்ததால், ஒரு கணமும் யோசிக்காமல் அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.        

தூத்துக்குடியில் பிறந்த சந்திரபாபுவின் தந்தை சுகந்திர போராட்டத்தில் வெள்ளையருக்கு எதிராய் கொடி பிடிக்க அவர் இலங்கைக்கு நாடு கடத்தப் படுகிறார். சிறு வயது முதல் நடிப்பதில் பாபுவிற்கு ஆர்வம் அதிகம், தன் நண்பர்கள் முன் நடித்து அவர்களை மகிழ்விப்பது அவர் வழக்கம். தந்தை மீண்டும் தாய் நாடு திரும்புகையில், சினிமாக் கனவுகளுடன் சென்னையில் கால் வைக்கிறார் பாபு. பெரும் போராட்டத்திற்குப் பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்து, தன் அசாத்திய திறமையினால் விரைவில் புகழின் உச்சத்திற்குச் செல்லும் பாபு, அதே வேகத்தில் சரிந்த வரலாறை சொல்லும் புத்தகம் தான் முகிலின் 'சந்திரபாபு - கண்ணீரும் புன்னகையும்'.        

முகில் கதையை தொடங்குவது ஜெமினி ஸ்டுடியோ கேண்டீனில், சந்திரபாபு தற்கொலை முயற்சி செய்ய முயல்வதில் இருந்து. அந்தத் தற்கொலை முயற்சிக்குப் பின் தான் பாபுவின் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது.  சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து படிப்படியாக முன்னேறி, பின் ஒரு காலத்தில் 'சந்திரபாபு இருந்தால் தான் படம் ஓடும்' என்ற உச்சக்கட்ட நிலையை அடைகிறார். இந்த நிகழ்வுகளை அழகிய நடையிலும் பத்திரிக்கை செய்திகளுடன் சுவாரசியத்துடன் தொகுத்து உள்ளார் முகில். 

சந்திரபாபு நேர்பட பேசிய பத்திரிக்கை பேட்டிகளை இன்று படிக்கும் பொழுது, யாருக்கும் எதுக்கும் அஞ்சாத ஒரு தன்னிகரற்ற கலைஞன் சந்திரபாபு என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. எந்தத் திலகத்திற்கும் சந்திரபாபு எப்போதும் பணிந்தது இல்லை என்பதை பாபுவின் பேட்டிகள் மூலம் நமக்கு உணர்த்துகிறார் முகில்.

மிகக் குறுகிய காலத்தில் யாராலும் இன்றளவும் நெருங்க முடியாத சாதனைகளை செய்தவர் சந்திரபாபு. ஹாசியம் மட்டுமல்லாமல் இவர் பாடும் பாடல்களுக்கு என்று ஒரு தனி வரவேற்பு இருந்துள்ளது. இவர் பாடல்களால் ஹிட் ஆன படங்களும் உண்டு என்ற. இன்றளவும் இவர் பாடல்களுக்கு என்று தனி சிறப்பு இருந்துதான் வருகிறது. ஆங்கில வார்த்தைகளுடன் பாடல்களை பாடும் பாணியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் பாபு தான்.       


இவரது மண வாழ்வு தோல்வியில்  முடிந்தாலும், அவரது திருமணக் கதையை பற்றி படிக்கும் பொழுது, நம் கண்களுக்கு, ஆங்கிலத்தில் சொல்வது போல்,சந்திரபாபு ஒரு ஜென்டில்மேனாகவே  காட்சியளிக்கிறார். தனது மனைவி பிரிந்த வேதனையில் குடி பழக்கத்திற்கு அடிமையானது, பிற்காலத்தில் அவர் சரிவுக்கு (இந்தப் பழக்கம்) பெரும் பங்காகியது.   

புகழின் உச்சத்தில் இருந்தாலும் மற்றவர்களை பாபு என்றுமே பாராட்டத் தவறியதில்லை. அவரிடம் பொறாமை என்பது அறவே கிடையாது. அவருக்கு ஒருவரின் செயல் பிடித்து விட்டால் அவரிடம் பாய்ந்து சென்று, கட்டிபிடித்து, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, 'கண்ணா அசதிட்டடா நீ!' என்று பாராட்டும் வெள்ளை மனம் கொண்டவர்.     

என் சிறு வயதில் இருந்து  சந்திரபாபு பற்றி பேச்சு எடுத்தால் அது கடைசியில் எம்.ஜி.ஆர் இடம் தான் வந்து முடிவது வழக்கம். இவர்கள் இருவருக்கும் என்னதான் தொடர்பு என்று எனக்கிருந்து பல நாள் சந்தேகத்தை முகில் தெளிவாக தீர்த்து வைத்துள்ளார். எம்.ஜி.ஆர்  என்ற நடிகர் மற்றும் தலைவரை போற்றும் குடும்பத்தில் எம்.ஜி.ஆர் ரசிகனாகவே வளர்ந்த எனக்கு, சந்திரபாபுவிற்கு எம்.ஜி.ஆரால் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி படித்தப் பிறகு, எம்.ஜி.ஆர் ரசிகன் என்று சொல்லி பெருமைப்பட மனம் சற்று யோசிக்கின்றது.         ​


'மாடி வீட்டு ஏழை' என்ற படத்தை ம்.ஜி.ஆரை வைத்து தயாரிக்க முயன்றார் பாபு. இந்த படத்தை உருவாக்குவதில் சில சிக்கல்கள் தோன்ற இந்த முயற்சியில் தோல்வி அடைந்து பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி, தனது கனவு வீட்டை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டார். ம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் பாபுவின் பெயர் கேட்டுப் போனது. அவர் மேலும் குடிக்கத் தொடங்கினார். கடன் அதிகமானது. நடிப்பில் கவனம் செலுத்தத் தவறி, படப் பிடிப்புகளுக்கும் அவர் சரிவர போகததால், அவரது வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அவரது தேய்பிறைக் காலமும் தொடங்கியது.
         
***********************************************************************
ஆசிரியர் குறிப்பு:
முகில் 
ம்.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் பயின்று எழுத்தின் மேல் இருந்த ஆர்வத்தால் மென்பொருளை கைவிட்டு எழுத்துத்துறைக்குள் வந்தவர் முகில். விகடன் மாணவ நிருபராக தன் பயணத்தை தொடங்கி, பின் கல்கி இதழில் பணியாற்றினார். கிழக்கு பதிப்பகத்தின் மூலம் புத்தகம் எழுதும் வாய்ப்பு பெற்றார். வரலாறுகளைத் தெரிந்து கொள்வதிலும், பிறருக்குப் பயன்படும் வகையில் எளிமையான, சுவாரசியமான நூல்களாக எழுதுவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவருகின்றார்.   

இவர்  இதுவரை எழுதிய புத்தகங்கள்: 

சரித்திரம்
1. வெளிச்சத்தின் நிறம் கருப்பு – மர்மங்களின் சரித்திரம் (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)
2. கிளியோபாட்ரா – உலகம் வியக்கும் பேரழகியின் சர்ச்சைக்குரிய சரித்திரம்
3. அகம் புறம் அந்தப்புரம் – இந்திய சமஸ்தானங்களின் வரலாறு
4. முகலாயர்கள் – பாபர் முதல் பகதூர் ஷா வரை – முழுமையான 330 ஆண்டு வரலாறு
5. மைசூர் மகாராஜா – மைசூர் சமஸ்தானத்தின் 550 ஆண்டுகால ராஜ வரலாறு.
6. செங்கிஸ்கான் – பேரரசர் செங்கிஸ்கான் வாழ்க்கையின் ஊடாக மங்கோலியாவின் வரலாறு
7. யூதர்கள் – இன வரலாறும் வாழ்க்கையும்
8. அண்டார்டிகா – உறைபனிக் கண்டத்தின் வரலாறு
சினிமா வாழ்க்கை வரலாறு
1. சந்திரபாபு – கண்ணீரும் புன்னகையும் – நடிகர் ஜே.பி. சந்திரபாபுவின் வாழ்க்கை (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)
2. எம். ஆர். ராதாயணம் – நடிகர் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை
(சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)
நகைச்சுவை
1. லொள்ளு தர்பார் – சமூக அங்கத கட்டுரைகள்
2. லொள் காப்பியம் – நம்மைச் சுற்றி வாழும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் பற்றிய கட்டுரைகள்
அரசியல்
1. துப்பாக்கி மொழி – இந்தியாவிலுள்ள தீவிரவாத இயக்கங்கள் குறித்த ஓர் ஆய்வு
2. மும்பை : குற்றத் தலைநகரம்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் கிழக்கு பதிப்பகம வெளியீடு
மாணவர் நூல்கள்
1. அக்பர்
2. ஔரங்கசீப்
3. யூத மதம்
4. மெகல்லன்
5. அண்டார்டிகா
6. துருவங்கள்
மேற்கண்ட நூல்கள் ப்ராடிஜி வெளியீடு.
கவிதைகள்
1. ஆ…
2. …ம்

சந்திரபாபு பற்றி முகில் தன் உரையில்: 

திங்கள்கிழமை கிடைத்த தகவல்கள் படி சந்திரபாபு 'செம ஜாலி ஆளுப்பா' என எண்ணத் தோன்றும். செவ்வாய்க் கிழமை, 'மனுஷனுக்கு லொள்ளு ஜாஸ்தி' என்று நினைப்பேன். புதன் கிழமை யாரிடமாவது பேசிட்டு வரும்பொழுது 'ச்சே, சந்திரபாபு கெட்ட பையன்' என்று மனம் நினைக்கும்.  வெள்ளிக்கிழமை 'அட இந்த ஆளு இவ்வளவு நேர்மையா வாழ்ந்திருக்காரே' என்று நினைப்பேன். சனிக்கிழமை, பழைய பத்திரிக்கைகளை புரட்டும் பொழுது 'என்ன தைரியம் இருந்தா மனுஷன் இப்படி சொல்வாரு' என்று தோன்றும். ஞாயிற்றுக் கிழமையோ, எல்லாவற்றையும் சேர்த்து வைத்து யோசிக்கும் பொழுது நாயகன் ஸ்டைலில் 'சந்திரபாபு நல்லவரா? கெட்டவரா?' என எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்.         

***************************************************************************
முகிலின் எழுத்து நடை மட்டுமல்லாமல், இந்தப் புத்தகத்தில் இருக்கும் சந்திரபாபுவின் புகைப்படங்களும் என்னைக் கவர்ந்தன. மொத்தத்தில் நிஜம் மட்டுமே பேசத் தெரிந்த நிஜக் கலைஞனின் வாழ்கை வரலாற்றை பல அரியப் புகைப்படங்களுடன் கொண்ட  புத்தகம் இது.  

சந்திரபாபு இந்தப் புத்தகத்தை இன்று படித்தால், முகில் மீது பாய்ந்து கட்டிபிடித்து, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, 'கண்ணா அசதிட்டடா நீ!' என்று மனமாரப் பாராட்டுவார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.  

வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
விலை : 125 ரூபாய்      ​
-------------------------------------------------------------------------------------------------------------------------
காதலுடன் 
ரூபக் 

14 comments:

  1. காதலுடன் ரூபக்! அட!

    சந்திரபாபு குறித்து நானும் ஆங்காங்கே படித்திருக்கிறேன். நல்ல அப்கிர்வு. முகில் எழுதி இருக்கும் சரித்திரம்' தலைப்பில் உள்ள புத்தகங்கள் ஆவலைத் தூண்டுகின்றன.

    ReplyDelete
  2. சந்திரபாபு திரையில் தோன்றினாலே சிரிக்கத் தயாராகி விடுவோம்... நடனம் - இன்றைய (?) பிரபுதேவா ஞாபகம் வரலாம்... தான் நடிக்கும் படங்களில் எல்லாம் சொந்த குரலில் ஒரு அருமையான பாட்டு இருக்கும்... முகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ரூபக், எளிய நடையில் அருமையான விமர்சனம். புத்தகத்தின் அட்டைப்படத்தை இணைத்தால் இன்னும் இந்தக் விமர்சனத்தின் தேஜஸ் கூடியிருக்கும். ஆசிரியரைப் பற்றிய தகவல்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறதோ என்று ஒரு சந்தேகம். சந்திரபாபு அவர்களின் மெஸ்மரிஸ குரலுக்கு மயங்காதவர் உண்டோ?

    ReplyDelete
  4. Comments Box - ஐ, தலைப்பில் இருந்து கடைசிக்கு மாற்றுங்கள். (2) சந்திரபாபுவைப் பற்றிய அழகிய நூல். முகிலின் கைவண்ணம் பாராட்டக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே!

    ReplyDelete
  5. எத்தனையோ குடும்பங்களில் விளக்கேற்றி வைத்தவர், கணக்கற்ற பேருக்கு கடவுளாகத் தெரிந்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் ஓரிரண்டு பேருக்கு மட்டும் இப்படி விதிவிலக்காய் காட்சியளித்திருக்கிறார். அதற்குக் காரணம் அந்தப் புலியை அவர்கள் தங்கள் வார்த்தைகளால்/செயல்களால் சீண்டியதுதான். இதனால் என்னைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆரின் மீதுள்ள மதிப்பு சரிந்து விடவில்லை ரூபக்! அவரும் மனிதர்தானே!

    சந்திரபாபுவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆங்கில பாணி பாடல் மட்டுமில்லை... ஆங்கில பாணி நடனத்தையும் தமிழில் முதலில் செய்தவர் சந்திரபாபுதான். அவர் நடித்த எல்லாப் படங்களிலும் அவருக்கென்று குறைந்தபட்சம் ஒரு பாடல் காட்சியாவது ஒதுக்கி விடுவார்கள். எல்லாப் பாடல்களையும் தானேதான் பாடி நடித்தார் & ஒரே ஒரு பாடல் தவிர! (பறக்கும் பாவை படத்தில் சுகம் எதிலே? பாடலை பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட, பாபு வாயசைத்து ஆடியிருப்பார்.) காரிலேயே பால்கனிக்குச் செல்லும் வகையில் ச.பாபு கட்டிய பங்களா அந்தக் காலத்தில் பெரும் பிரமிப்பை ஏற்படுத்திய ஒன்று.

    என் நண்பர் முகிலுக்கு அழகான ஆசிரியர் அறிமுகம் தந்தது வெகு சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் சிவாஜி கணேசனுக்கு சந்திரபாபு ஒரு பாடலுக்கு வாயசைத்திருப்பார் என்று நினைவு.

      Delete
  6. அருமையான விமர்சனம் ரூபக்.. ஆவி கூறியது போல தெளிவான எளிமையான விமர்சனம்.. சந்திரபாபு பாடலில் நானொரு முட்டாளுங்க பாடல் தான் என்னளவில் கவனத்தை ஈர்க்கச் செய்த பாடல். என்னாட இந்தாளு 'நானொரு முட்டாளுங்க ' ன்னு பாடுறாரேன்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன்...

    ஏற்கெனவே சொன்னவங்க ஏமாளியானாங்க
    எல்லாந்தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க

    நானொரு முட்டாளுங்க என்ற வரிகளின் அர்த்தம் புரித்தபோதுதான் அந்த பாடலில் ஒளிந்திருந்த புத்திசாலித்தனம் விளங்கியது..



    சீக்கிரம் படிக்க வேண்டும்...

    ReplyDelete
  7. உங்க பதிவு படிக்கும் போதே புத்தகம் வாங்கி படிக்க ஆவல் வருகிறது. அதிசயம் என்னன்னா ... இந்த காலத்துல, காமெடி நடிகர் பொது வாழ்கைலயும் காமெடி தான் தெரியறாங்க... ஆனால் அந்த காலத்துல தனக்கென ஒரு அடையாளத்தோட கலைஞர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்...

    எம்.ஜி.ஆர். பத்தின ச.பாபுவின் புரிதல் வேற மாதிரி இருந்து இருக்கலாம்.. அதுக்காக எம்.ஜி.ஆர் -தப்புன்னு சொல்ல மனசு எடம் கொடுக்கல....

    ReplyDelete
  8. சூப்பர் தல ... முகிலனை பற்றி கொஞ்சம் அரைகுறையாய் அறிந்திருந்த எனக்கு கொஞ்சம் மேலும் அறிந்து கொள்ள வாய்ப்பு இது ... அடிச்சி விளையாடுங்க பாஸ்

    ReplyDelete
  9. அருமையான விமர்சனம். சந்திரபாபு அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. உடனே அந்த புத்தகத்தை வாங்கி வாசிக்க ஆசை வருகிறது. பாராட்டுகள்.

    என்னிடம் இப்போ வாசிக்க ஏதும் புத்தகமே இல்லை என்பது தான் என் கவலை....:)

    ReplyDelete
  10. மிகச் சிறந்த பன்முகத் திறமை கொண்ட கலைஞர் சந்திரபாபு. நானொரு முட்டாளுங்க போன்ற எதிர்மறை பாடல்களைப் பாடியதாலேயே அவர் வாழ்வும் சோகமயமாக இருந்தது என்றும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். 'எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'புத்தியுள்ள மனிதரெல்லாம்...'.

    நிச்சயம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். திரு முகில் (சின்ன வயதுக்காரராக இருக்கிறார், இத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறாரா?) அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    அவரையும் அவரது புத்தகங்களையும் அறியக் கொடுத்ததற்கு திரு ரூபக் ராமிற்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  11. அருமையான விமர்சனம் ரூபக்.......

    ரூபக் கண்ணா அசத்திட்டடா நீ! :))))

    ReplyDelete
  12. எம்ஜியாருக்கும் ஒரு மறுப்பக்கம் இருந்திருப்பது புரிகிறது !

    ReplyDelete
  13. முகில் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நூலகள் எழுதியுள்ளது அவருடைய திறமையை காட்டுகிறது ... மேலும் வளர வாழ்த்துக்கள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!