Sunday, March 2, 2014
சிறு வயதில் பள்ளிக்கு செல்லும்போது எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டே செல்வது வழக்கம். அப்படி செல்லும் வழியில் ஏதோ ஒரு நாற்றம் குடலை புரட்டுவது போல் தோன்ற தின்பண்டத்தை விட்டுவிட்டு மூக்கை பொத்திக் கொள்வேன். சாலையின் நடுவே தூர் வாரிக்கொண்டிருந்த மக்களை பார்த்து அந்த கழிவின் நாற்றம் இந்த தூரத்திலேயே இவ்வளவு மோசமாக இருக்கிறதே, இதை எப்படித்தான் இவ்வளவு அருகில் நின்று சுத்தம் செய்கிறார்களோ என்று வியந்தபடியே வேகமாக அந்த இடத்தை விட்டு கடந்து விடுவேன். நம்மில் பலரும் இந்த கடைநிலை தொழிலாளர்களை பலமுறை கடந்து வந்திருப்போம். ஆனால் அவர்கள் வாழ்க்கை நிலை என்ன? அந்த ஜீவன்களின் மனசுக்குள் தோன்றும் அன்பு, பாசம், காதல், சோகம் போன்ற பல உணர்வுகளையும், அவர்கள் செய்யும் தொழிலின் காரணமாய் அவர்கள் இழந்துவிட்ட பொக்கிஷங்கள் என்ன என்பதை மலையாளக் கலப்போடு கூடிய நாகர்கோவில் தமிழில் அழகுற வடித்திருக்கும் ஓர் புதினம் இது.
ஒரு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணிபுரியும் கனகம் தன் கணவனால் கைவிடப்பட்டு ஒற்றை ஆளாக தன் மகள் பூவரசியை வளர்த்து வருகிறார். தன் மகள் தன்னை போல் கழிவுகளுக்கு நடுவே நிற்காமல் அந்தஸ்தாக இருக்கவேண்டுமென நினைத்து நன்றாக படிக்க வைக்கிறாள். பூவரசியும் தாயின் சிரமம் புரிந்து நடக்கிறாள். பூவரசிக்கு மாரி என்ற தூப்புக்காரனின் சம்பந்தத்தோடு வரும் ப்ரோக்கரை நிராகரிக்கிறாள் கனகம். அவ்வூரில் வாடகை டாக்ஸி கம்பெனி வைத்து நடத்தும் பெரிய குடும்பத்து மனோவை பூவரசிக்கு பிடித்திருக்கிறது. இருவரும் காதலிக்கின்றனர், ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலே. ஒரு சந்தர்ப்பத்தில் மனோவின் குடும்பத்தால் அவமானப்படுத்தப்பட்டு கூனிக் குறுகி உடல்நலம் குன்றிப் போகிறாள் கனகம். தாயின் உதவிக்கு மனோவை அழைக்கும் பூவரசி அவனிடம் மனதையும் உடலையும் தாரை வார்க்கிறாள். தாயின் உடல்நலம் மோசமாக, உடன் பணிபுரியும் ரோஸ்லியின் கட்டாயத்தின் பேரில் தாயின் பணிக்கு தள்ளப் படுகிறாள் பூவரசி.
தன்னுடைய தூப்புக்காரி அவதாரத்தை பார்த்து தன்னை மனோ வெறுத்துவிடக் கூடாது என்று ஏங்குகிறாள். ஆனால் மனோவோ தன் தந்தையின் வாக்கை தட்ட முடியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்கிறான். முன்பு கனகம் நிராகரித்த மாரி பூவரசியின் பாதுகாவலனாகிறான். தன் மகளின் காதலை நிறைவேற்ற முடியாத கனகம் இறந்து போக, நிராதரவாய் நிற்கும் பூவரசி கர்ப்பம் தரிக்கிறாள். மனோவின் அந்த குழந்தையையும், பூவரசியையும் ஏற்றுக் கொள்கிறான் மாரி. ஒரு விபத்தில் மாரியும் இறந்து போக தான் தூப்புக்காரியாய் வேலை செய்யும் மருத்துவமனையின் மூலம் தன் பெண் குழந்தையை தத்துக் கொடுக்க முடிவு செய்கிறாள்.. தன் மகள் தன்னுடைய இந்த தூப்பு பணியை செய்யாமல் நன்றாக வளர வேண்டுமென ஆசைப்படுகிறாள். அவள் ஆசை நிறைவேறியதா? பிள்ளையை பிரிந்து பூவரசியால் இருக்க முடிந்ததா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு மதிய வேளையில் பொழுது போகாமல் போகவே இந்த தூப்புக்காரி புத்தகம் வாசிக்க தொடங்கினேன். ஆனால் வாசிக்க தொடங்கிய சில பக்கங்களிலேயே எழுத்தாளர் மலர்வதியின் வசீகரிக்கும் எழுத்தாலும், பொட்டில் அறைந்தாற் போல் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லிய விதத்திலும் ஈர்க்கப்பட்டு ஒரே மூச்சில் படித்துவிட்டு தான் புத்தகத்தை கீழே வைத்தேன். மலர்வதி அவர்களுக்கு இது இரண்டாவது நாவல் தான் என்பதை மனம் நம்ப மறுக்கிறது. வட்டார மொழியின் ஆளுமை, வாசகர்களின் ஆர்வத்தை கட்டிப் போடும் எழுத்து நடை இப்படி ஒவ்வொன்றிலும் அனுபவ எழுத்தாளரின் முத்திரை தெரிகிறது. இந்த கதைக்கு சாகித்ய அகாடமி கிடைத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. கதைக்கு இடையிடையே இவர் எழுதியிருக்கும் சிறுசிறு கவிதைகளும் அழகான கிரீடத்தில் வைத்த வைரக்கல் போன்றிருந்தது.
மலம் அள்ளுதல், சாக்கடை துப்புரவு, மருத்துவமனை கழிவுகள் அகற்றுதல் போன்றவற்றை எல்லாம் இதுவரை அருவருப்பாய் பார்த்திருப்போம். அந்த தொழிலாளர்களையும் நமக்கு சமமாக எண்ண மறுத்திருப்போம். அவர்கள் செய்யும் இந்த தூப்புப் பணிதான் நம்மையும் நம் சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைக்கிறது என்பதை இந்த நாவல் நமக்கு உணர்த்துகிறது. நமக்கு சரிசமமாய் நடத்த மனம் ஒப்பாவிட்டாலும் அவர்களை இழிந்து பேசாமலாவது இருக்கலாமே!! என்று சில சாதி வெறியர்கள் கன்னத்தில் அறைந்து சொல்வது போல் இருந்தது. எழுத்தாளர் மலர்வதியின் பார்வையில் கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் நல்லவர்களே.. சூழ்நிலையால் கட்டுண்டு சில நேரம் தவறிழைப்பது போன்று சித்தரித்திருக்கும் அழகை நான் ரசித்தது போலவே நீங்களும் படித்து மகிழுங்கள்!
*******************
Subscribe to:
Post Comments (Atom)
இந்த படைப்பு பற்றி அது வெளிவந்த சமயம் படித்திருக்கிறேன். நாவலைப் படித்ததில்லை.
ReplyDeleteகண்டிப்பா படிங்க சார்.. சமூக விஷயங்களை போரடிக்காம சொல்றது ஒரு சிலருக்கு தான் அழகா வரும்.. இவங்க நல்லா எழுதியிருக்காங்க..
Deleteயாரும் நினைத்துக் கூட பார்க்காத விசயங்கள்... மலர்வதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆமா DD.. இன்னும் இதுபோல் சிறந்த நாவல்களை அவங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன்..
Deleteவிருது பெற்ற நாவல் என்றால் விறுவிறுப்புக் குறைவான நாவல், தூக்கத்தை வரவழைக்கும் புத்தகம் என்பதுதான் என் கருத்து. அதனால் இதைப் படிக்கத் தோன்றாமல் புறக்கணித்து விட்டேன். அந்தப் பணத்தின் போது நீ அவ்வளவு ஈடுபாடா படிச்சதைப் பாத்ததும், இப்ப இந்த விமர்சனத்தைப் படிச்சதும் உடனே இதையும் படிச்சிடறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன். டாங்ஸ் ஆனந்து!
ReplyDeleteகண்டிப்பா சார். சீனுப் பயகிட்ட தான் புத்தகம் இருக்கு!!
Deleteபலர் மாளிகைகளில், மலர்த் தோட்டத்தில் பிறந்து இருந்தும் மனத்தைக் கழிவாக வைத்திருக்க,
ReplyDeleteசிலர், ஒரு சிலர், கழிவுகளுக்கு இடையே பிறந்தும் வளர்ந்திருந்தாலும்
தம் மனதினை மலர் வனம் போல மணக்கச் செய்கின்றனர்.
சுப்பு தாத்தா
ஆமா தாத்தா.. அழகா சொன்னீங்க..
Deleteஎழுத்து நடையை சிலாகிக்க... அதிலிருந்து ஒருசில மேற்கோள்களை சுட்டி இருக்கலாம் ..
ReplyDeleteஅதை யோசித்தேன்.. பெரும்பாலான வரிகளில் மலையாள வார்த்தைகள் நிரம்பி காணப்பட்டது. எனக்கு மலையாளம் ஓரளவு புரியும்ங்கறதால ஒக்கே.. அந்த வரிகள் ஒருவேள வாசகர்களுக்கு புரியலேன்னு இந்த கதைய ஸ்கிப் பண்ணிடக் கூடாதுன்னு தான் குறிப்பிடலை.. இப்ப யோசிக்கிறேன்..
Deleteவிருது பெற்ற நாவல் என்றால் தொய்வான கதையாகவும் நடையாகவும் இருக்கும் என்றும் நானும் நினைத்திருந்தேன்... என் நினைப்ப்ஃஇத் தவிடுபொடியாக்கியது உங்கள் விமர்சனம்...
ReplyDeleteநல்லா இருக்கு ஸ்பை.. வாசிங்க..
Deleteவிமர்சனமே இப்படி மனசை கலங்க வைக்கிறதே மக்கா, ஊருக்கு வரும்போது வாங்கி படிக்கணும்.
ReplyDeleteகண்டிப்பா அண்ணே.. அவங்க நம்பர் வாங்கியிருக்கேன்.. கூப்பிட்டு வாழ்த்து சொல்லனும்னு நினைச்சிருக்கேன்.
Deleteவிமர்சனம் மெய்யாலுமே அருமை பாஸ்.. தேர்ந்த எழுத்து நடை, தேர்ந்தெடுத்த வார்த்தைகள்...
ReplyDeleteநன்றி சீனு.. எவ்ளோ பேர் விமர்சனம் செய்தாலும் நான் அதிகம் எதிர்பார்க்கிற விமர்சனங்கள் ஒரு சிலரிடமிருந்து தான். அதுல நீங்களும் ஒருத்தர். காரணம் நிறைகள மட்டும் சொல்லாம குறைகளையும் சொல்லி திருத்தற விஷயம் எனக்கு பிடிக்கும்.. அதான்..
Deleteநாவலை படிப்பதற்கு முன்பே மலர்வதியிடம் போன்ல பேசினேன்.. வட்டார தமிழ்ல ஒரே வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காம பேசியது மறக்க முடியாதது... மறு நாளே புத்தகம் அனுப்பி வச்சாங்க... நான் படிச்சதோட நிறைய பேருக்கு படிக்க கொடுத்தேன்.... எல்லா கதாபாத்திரங்களும் மனசில நின்னு போன ஏழைகளின் வாழ்க்கை காவியம்....! இதில என்னன்ன இந்த புத்தகம் நிறைய பேரை போய் சேரலை என்பதுதான் வருத்தமான விஷயம்.. இன்னமும் அவங்க போற ஊருக்கெல்லாம் எடுத்துட்டு போய்தான் விற்பனைக்கு கொடுத்துப்பாருங்க... அதிலும் கூட நிறைய உதவிகள் கிடைக்க வில்லை...எத்தனையோ செலவழிக்கிறோம்... இது போன்ற சமுதாய நோக்குள்ள உள்ளத்திற்கு உதவுவோம்.... இந்த பதிவு மூலம் ஒரு பத்து பேர் படிச்சா கூட அதுவும் நல்ல விஷயம்தான்... நன்றி உங்க விமர்சனதுக்கு...!
ReplyDeleteகண்டிப்பாங்க.. நல்ல விஷயத்துக்கு நிச்சயம் ஊக்கம் கொடுக்கணும்.. நானும் அவங்ககிட்ட பேசணும்னு ஆவலா இருக்கேன்.. சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூப்பிட்டு வாழ்த்தணும்.. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Deleteஅண்ணே வணக்கம் ....
ReplyDeleteஉங்களின் வழமையான நடை போலில்லாமல் சற்று மாறுபட்டு இருக்கிறது எழுத்தின் நடை ... இதே போல் அவ்வவ்போது தொடர கேட்டுக் கொள்கிறேன் ... (தூப்புக்காரி இப்போ என் கிட்ட தான் இருக்கா ...)
நன்றி "அண்ணே"!!
Deleteபடிச்சுட்டு கருத்து சொல்லுங்க..
தோட்டியின் மகன் கெடச்சா படிச்சுபாருங்க...
ReplyDeletehttp://goo.gl/ujYwD9
படித்துப் பார்க்கிறேன் அருண்.. நன்றி..
Deleteஇந்த புத்தகம் பற்றி தில்லி நண்பர் ஷாஜஹான் முன்பு எழுதி இருந்தார். அப்போதே வாங்க வேண்டும் என நினைத்த புத்தகம். இன்னும் வாங்கவில்லை.....
ReplyDeleteநல்ல புத்தகம் பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி......
கண்டிப்பா படிச்சுப் பாருங்க பாஸ்!!
Deleteஇது போன்ற அடித் தட்டு மக்களின் வாழ்க்கைக் கூறுகளைப் பிரதிபலிக்கும் நாவல்களை தேடித்தேடி படிக்கும் பழக்கம் உள்ள என் போன்றவர்களுக்கு சாகித்திய அகாடமியின் விருதினை வென்ற இந்த நாவல் நிச்சயம் நல்ல தீனியாக இருக்கும்.. விரைவில் படிக்கிறேன்... நல்ல அறிமுகம்...
ReplyDeleteசேற்றிலே மலர்ந்தாலும் செந்தாமரை மணம் வீச மறுப்பதில்லையே..
ReplyDeleteஅருமையான விமர்சனம்..!
மனதை மரத்திடச் செய்கிறது இந்நாவல் தயைகூர்ந்து கேட்கிறேன் சகோதரி யின் தொலைப்பேசி எண் இருந்தால் தாருங்கள் என் எணீணங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள்.... நன்றி...
ReplyDelete"தூப்புக்காரி" மிக பிரபலமாக பேசப்பட்ட நாவல் என்பது தெரியும். கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete