Thursday, February 6, 2014

6174 - வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த த்ரில்லர்!


                         தமிழில் முதுகலைப் பட்டதாரியான என் தந்தை பள்ளியில் பெரும்பாலும் எடுத்தது கணிதப் பாடத்தைத்தான். சிறு வயதில் இது எனக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் ஒரு தமிழாசிரியர் கணிதப் பாடத்தை சிறப்பாய் எடுக்க முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. பதின்ம வயதில் செய்யுள்களில் கலந்திருந்த கணிதப் புதிர்களை படித்த போது கணிதத்திற்கும், தமிழுக்குமாய் தொன்றுதொட்டு இருந்துவந்த தொடர்பினை என்னால் உணர முடிந்தது. நீண்ட நாட்களாய் தொடர்பற்றிருந்த செய்யுளில் கணக்கு, கோலப் புள்ளிகளில் எண் கணிதம் போன்றவற்றை "6174" எனும் இந்த புதினத்தில் படிக்கத் துவங்கியபோது என்னையும் அறியாமல் ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது.

         
ஒரு புத்தகத்தை படிக்கத் தூண்டும் காரணிகளில் ஒன்றாய் நான் கருதுவது அதன் தலைப்பும் அட்டைப்படமும். ஒரு வாசகனை முதல் பார்வையிலேயே ஈர்க்கும் வசீகரத்தோடு இந்த இரண்டும் அமைந்துவிட்டாலே புத்தகத்தின்  முதல் வெற்றியாக கருதப்படும். அது இரண்டுமே இந்தப் புத்தகத்திற்கு அமைந்திருக்கிறது. கருஞ்சுழி எண் (அ) கப்ரேகர் கான்ஸ்டன்ட் என்று சொல்லப்படக்கூடிய 6174 என்ற இந்த எண் தான் கதையின் மையப்புள்ளி. கதையில் வரும் பல முடிச்சுகளை அவிழ்க்க உதவும் திறவுகோல். இந்த எண்ணை விளக்கிய விதத்திலும் அதை கதையின் ஓட்டத்திற்கு பயன்படுத்திய விதமும் அழகு.


அழிந்துவிட்ட லெமூரியா கண்டத்தின் வாரிசுகளாக தங்களை எண்ணிக் கொள்ளும் ஒரு கும்பல் மனித இனத்தையே அழித்துவிட திட்டமிடுகிறது. இந்த திட்டத்தை எப்படியோ அறிந்து கொள்ளும், (ஸ்)படிகங்களை பற்றி ஆராயும் ஒரு ப்ரோபசர் தன் தேர்ந்த சில மாணாக்கர்களின் உதவியுடன் அதை தடுத்து நிறுத்த முயல்கிறார். பணத்திற்காக (ஸ்)படிகத்தை தேடும் பல கும்பல்களாலும், லெமூரியா கும்பலாலும் ஏற்படும் இடையூறுகளை எதிர்கொண்டு உலகை அழிவினின்றும் காப்பாற்றினார்களா என்பதே கதையின் முடிச்சு.

அனந்த், ஜானகி, சம்பத், தேவராஜ், சடகோபன், சாரங்கன் போன்ற கதாப்பாத்திரங்களுடன் இணைந்து நம்மையும் லெமூரியன் சீட் கிறிஸ்டலை தேட வைக்கிறார் எழுத்தாளர் சுதாகர். நாவலை படிக்கும் ஒவ்வொருவரும் மூன்றாம் பக்கத்திலிருந்து தன்னையும் ஒரு துப்பறிவாளனாய் எண்ணிக் கொண்டு கதையில் வரும் கணிதப் புதிர்களையும், தமிழ் செய்யுள்களையும் பகுத்து ஆராயத் துவங்கும் ஆச்சரியமும் நிகழ்கிறது. கணிதம், செய்யுள், தொல்பொருள், அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு, லெமூரியா என பல நுட்பமான விஷயங்களையும் படிப்பவர்கள் மனதில் எளிதில் பதியும் வண்ணம் கொடுத்திருப்பது சிறப்பு.

லெமூரியா கண்டத்தில் துவங்கும் இந்தக் கதையினுள் ஆராய்ச்சியாளர்களாய் வரும் நாயகன் மற்றும் நாயகியின் அறிமுகங்களே ஒரு சஸ்பென்ஸ் முடிச்சோடு சொல்லப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியின் பொருட்டு இந்தியாவின் பல பாகங்களுக்கும் இவர்கள் பயணிக்கும் போது இவர்களுக்குள் இருந்த மெல்லிய காதலும் சொல்லபடுகிறது. (கதையின் ஓட்டத்தை துளியும் பாதிக்காத வகையில் காதலை சொல்லியிருப்பது எழுத்தாளரின் தேர்ந்த நடைக்கு ஒரு சான்று). ஒன்றன்பின் ஒன்றாக இவர்கள் கண்டறியும் தடயங்களும், அவிழ்க்கும் புதிர் முடிச்சுகளும் சுவாரஸ்யத்தை கூட்டும் கணங்கள். ஒரு கட்டத்தில் இவர்களுக்கு நேரும் ஆபத்துகளை நாமும் திகிலுடன் எதிர்கொள்வதை போன்ற ஒரு மாயபிம்பத்தை உருவாக்கி விடுகிறார்.

குறிப்பாக மயன்மார் பகோடாவில் நிகழும் சம்பவங்கள் அனைத்தையும் தன் எழுத்துகளால் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். சம்பவங்களை மட்டுமல்லாது கதாப்பத்திரங்களின் குணாதிசயங்களையும் பாங்குடன் விவரித்து அவர்களை நமக்கு பரிச்சயமான நபர்களாய் மாற்றிவிடுகிறார் சுதாகர். ஆராய்ச்சியின் முடிவு வெற்றி அடைந்ததா, நாயகன், நாயகியின் காதல் என்னவாயிற்று என்பதையெல்லாம் சுவைபட கடைசி பக்கம் வரை சஸ்பென்சாக கொண்டு சென்றிருப்பதும், கதையின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான ஒரு கமா போட்டு நிறுத்தி இருப்பதும் நாவலின் வெற்றிக்கு வித்தாக அமைகிறது. சுஜாதாவையும், ராஜேஷ்குமாரையும் கலந்து செய்த எழுத்துகள் வாசகனை புத்தகத்தை கீழே வைக்க விடாமல் படிக்க வைக்கும்.

ஒரு சில செய்யுள்கள் என்னைப்போன்ற சாமான்யனால் கூட புரிந்து கொள்ளும் வகையில் இருந்ததும், அதை டீகோட் செய்ய கதாபாத்திரங்கள் மிகவும் சிரமப்படுவது போல் காட்டியிருப்பது நெருடல். கதையின் துவக்கத்தில் ஒரு காட்சியிலிருந்து மற்றொரு காட்சிக்கு செல்லும் வேளையில் பத்திகள் தொடர்ச்சியாக இருப்பது, நான்கைந்து பக்கங்களுக்குள் பல கிளைக் கதைகள் தொடங்கியிருப்பதும் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தினாலும், கதையின் விறுவிறுப்பான ஓட்டத்தில் அதை மறந்து விடுகிறோம்.  இதுபோன்ற படைப்புகளுக்கு நிறைய புத்தகங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களை படித்தல் அவசியம். அவ்வாறு கடினமாக உழைத்து முதல் முயற்சியிலேயே மிக சிறந்த படைப்பைக் கொடுத்த சுதாகர் அவர்களை "இந்தியாவின் டான் பிரவுன்" என்று அழைத்தாலும் மிகையாகாது.






நூலின் பெயர்   :    6174
ஆசிரியர்           :    சுதாகர் கஸ்தூரி 
பக்கங்கள்          :    400
 விலை              :    ரூ. 300
வெளியிட்டோர் :   வம்சி புக்ஸ் 
                              19, டி.எம் சாரோன்,
                              திருவண்ணாமலை - 606 601
                              94448 67023



ஆசிரியர் அறிமுகம்: மும்பையில் இருபது ஆண்டுகளாக வசித்து வரும் சுதாகர் கஸ்தூரி, தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவர். ஆறு ஆண்டுகளாக இணையதள இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதி வரும் சுதாகரின் முதல் புதினம் இது.

24 comments:

  1. முதல் பாலில் சிக்ஸர்...! கமா அடுத்து சிக்ஸராகவும் இருக்க, க.சுதாகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    விமர்சனம் பாதிக்காத வகையில் காதலை கண்டுபிடித்து சுருக்கமாக சொன்ன நண்பர் ஆவிக்கு பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. புதிய எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரியின் முதல் புதினம் இது என்பதும் ஆனால், பல ஆராய்ச்சிகளோடு சிறப்பாய் எழுதியுள்ளார் என்பதும் சிறப்பு. படிக்கவேண்டிய நூல்களில் ஒன்றாக இதைக் குறித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்..நல்லதொரு நாவல்.. சுதாகர் இதுபோன்ற இன்னும் பல புதினங்களை படைப்பார் என நம்புகிறேன்.. கருத்துக்கு நன்றிங்க முஹம்மது..

      Delete
  3. அருமையான விமர்சனம் கோவை ஆவி :-) வாழ்த்துக்கள்...

    இந்த நூலின் ஆசிரியரை சமீபத்தில் இங்கே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அலுவலக வேலையாக ஒரு வாரம் அமெரிக்கா வந்திருந்தார். அவர் ஒரு தகவல் பொக்கிஷம். இரண்டு மணி நேரம் அவருடன் நேரம் போனதே தெரியவில்லை.

    திண்ணை, மரத்தடி என்று இலக்கியப் பின்னணி உடையவர். பழகுவதற்கு இனிய சுபாவம் உள்ளவர். அன்று அவரை சந்தித்த நண்பர்கள் யாரும் இந்த நாவலை படித்திருக்கவில்லை. டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் நான் ஆர்டர் செய்திருந்த புத்தகம் அடுத்த வாரம் தான் என் கைக்குக் கிடைத்தது. ஒரே மூச்சில் படித்து முடித்தேன் :-)

    சில நாட்கள் முன்னர் கைக்குக் கிடைத்திருந்தால் சுதாகர் கஸ்தூரியின் ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கலாம் :-(

    இந்த நாவலுக்கு பி.ஏ. கிருஷ்ணன் முன்னுரை எழுதியிருக்கிறார், கவனித்தீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. இந்த புத்தகத்தை படித்த பிறகு அவரை முகநூலில் தேடிப் பிடித்து நட்பாக்கிக் கொண்டேன். அவர் பகிரும் பல விஷயங்களும் சுவாரஸ்யமும் ஹாஸ்யமும் நிறைந்திருக்கிறது.

      பி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் முன்னுரையும் நன்றாக இருந்தது..:)

      Delete
  4. விரைவில் படித்தே ஆக வேண்டிய புத்தகம் ஆவி பாஸ்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணன் படித்து முடித்ததும் வாங்கிப் படியுங்க. ;-)

      Delete
  5. சிறப்பானதோர் புத்தகம் பற்றிய அறிமுகம். மிக்க நன்றி ஆவி. விரைவில் படிக்க வேண்டும் எனும் தூண்டுதல் தந்தது உங்கள் அறிமுகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்..

      Delete
  6. வாசிக்கத் தூண்டும் புஸ்தகம் விமர்சனம் அருமை தம்பி, ஊர் வந்தால் வாங்கி வாசிக்க நிறைய புத்தகங்கள் பெயரை எழுதி வைத்துள்ளேன், அதில் இதையும் சேர்க்கிறேன் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அண்ணே!!

      Delete
  7. இந்தப் புத்தகத்துக்குப் பல்வேறு விமர்சனங்கள் படித்து விட்டேன். எல்லோரும் ஒருமனதாகப் பாராட்டுகிறார்கள். பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்குங்க ஸார்.. படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க..

      Delete
  8. மற்றுமொரு நண்பரின் விமர்சனமும் இங்கே http://killadiranga.blogspot.in/2014/02/6174.html

    ReplyDelete
    Replies
    1. படிச்சுட்டேன் DD.. அருமை.. நன்றி..

      Delete
  9. சூப்பர் தல... அண்ணன் டிடி சொல்லிதான் நானும் இங்கே வந்தேன்.. புத்தகத்தப்பத்தி கனகச்சிதமா சொல்லிருக்கீங்க தல.. :) அருமையான விமர்சனம்.

    ப்ளாக் டெம்ப்ளேட் சூப்பரோ சூப்பர். அதுவும் புத்தகங்களுக்காகவே ஒரு ப்ளாக்கா ? உடனே புக்மார்க் தான்..

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி Andichamy.. தொடர்ந்து வாங்க..

      Delete
  10. நல்ல விமர்சனம். படிக்க துண்டும்படியாக எழுதியமைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

      Delete
  11. விமர்சனத்தின் வசீகரத்தன்மை வாசிப்பவரையும் புத்தகம் வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தும் படி இருக்கிறது. வாழ்த்துக்கள் ஆவி.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.. ரொம்ப நாளே ஆளே காணோம்??

      Delete
  12. http://subadhraspeaks.blogspot.in/2014/05/6174.html

    ReplyDelete
  13. அருமையான விமர்சனம் ... படிக்கத் தூண்டுகிறது !! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!