Sunday, February 2, 2014
லீனியர் மற்றும் நான் லீனியராக நகரும் ரத்தம் ஒரே நிறம், சுஜாதா எழுதிய இரண்டு சரித்திர நாவல்களுள் இதுவும் ஒன்று. தனக்கு சரித்திரம் எழுத வருமா என்ற கேள்வியை தனக்குத்தானே கேட்டுக்கொண்ட பின்னரே எழுதத் தொடங்கிய நாவல் ரத்தம் ஒரே நிறம். இந்த புத்தகத்தின் முதல் சில பக்கங்களை வாசீத்தீர்கள் என்றாலே புரியும், சுஜாதா ஏன் சரித்திர நாவலை எழுத தயங்கினார் என்பது. காரணம் இதன் முதல் சில பக்கங்களிலேயே இதனை எழுதியது சுஜாதாவா இல்லை சுஜாதா பெயரில் வேறு யாரேனுமா என்றெல்லாம் சிந்திக் கத் தொடங்கிவிடுவோம்.
ஆனால் அந்த அயர்ச்சியை எல்லாம் ஒரு சில பக்கங்களிலேயே தூக்கி தூர எறிந்துவிட்டு சரித்திரத்துக்குள் அழைத்துச் சென்றுவிடுவார் சுஜாதா. எங்குமே அலுக்காத எழுத்து நடை, தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஹாஸ்யம். தேவைப்படதா இடங்களில் கூட நேர்த்தியாக கதை சொல்லும் வல்லமை. நல்லவேளை இந்த கருவை சுஜாதா பிரசவித்துவிட்டார்.
சிப்பாய் கலகம் சிறுகுறிப்பு வரைக?
பள்ளிக்காலத்தில் இப்படியொரு கேள்விக்கு விடையளிக்காமல் உங்கள் சமூக அறிவியல் பாடத்தை நீங்கள் கடந்திருக்கவே முடியாது.
பிரிடிஷ்காரர்கள் தங்களுடைய என்பீல்டு ரக துப்பாக்கியில் பன்றி கொழுப்பினை பயன்படுத்தினார்கள், மேலும் தங்களுடைய ராணுவத்தில் இருந்த இந்திய சிப்பாய்களையும் உபயோகிக்கும்படி கட்டாயப்படுத்தினார்கள். இதனால் கொதித்தெழுந்த இந்துக்களும் இஸ்லாமியர்களும் கூட்டாக ஒன்றிணைந்து தங்கள் ரகசிய திட்டம் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள், இதுவே இந்தியாவின் முதல் சிப்பாய் கலகம் அல்லது முதல் சுதந்திரப் போராட்டம் என்றழைக்கப்படுகிறது.
மேற்கூறிய ஒரு சிறுகுறிப்பைக் கொண்டு ஒரு நாவல் எழுத முடியுமா என்றால் அதையும் சுஜாதா எழுதினால்... அதுதான் ரத்தம் ஒரே நிறம்.
நாவலை படிக்கத் தொடங்குவதற்கு முன் சுஜாதா எழுதிய பழைய மற்றும் புதிய முன்னுரைகளையும், ரா.கி.ர வின் உரையையும் படித்துவிட்டு நாவலினுள் நுழையுங்கள். முன்னுரைகளே அத்தனை சுவாரசியம்.
1857-ல் மதராசபட்டினத்தில் இருந்து தொடங்குகிறது கதை. முத்துகுமரன், பூஞ்சோலை, பைராகி என்ற மூன்று தமிழர்கள். எட்வர்ட் மக்கின்சி, எமிலி அட்கின்சன், ஆச்லீ ப்ரேசர் என்ற மூன்று ஆங்கிலேயர்களையும் பிரதானமாகக் கொண்டு, சிப்பாய் கலகம் என்ற ஒற்றை வரியை மையமாகக் கொண்டு நகரும் கதை.
இதே கதையை முதலில் கருப்பு சிவப்பு வெளுப்பு என்ற பெயரில் குமுதம் இதழில் எழுதத் தொடங்கிய போது ஒரு குறிப்பிட்ட இன மக்களிடம் இருந்து எதிர்ப்புகளும் கொலைமிரட்டலும் கிளம்பவே அந்த முயற்சியை கைவிட்டுவிட்டார் சுஜாதா. அதே நாவல் இரத்தம் ஒரே நிறம் என்ற பெயரில் மறுவடிவம் பெற்று வெளிவந்துள்ளது. இந்த நாவலில் எந்த ஒரு ஜாதியையும் மையமாகக் கொண்டிராத நிலையில் ஏன் எதிர்ப்பு கிளம்பியது என்பது சுஜாதாவுக்கே தெரியவில்லை.
'மேலும் தொடர்ந்து எழுதினால் என் வலது கையை வெட்டுவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கு இடது கையால் எழுத வேறு பழக வேண்டும். நிறுத்திவிடுங்கள்' என்று தனக்கே உரிய ஹாஸ்யத்துடன் தனக்கு நேர்ந்த அனுபவத்தை குறிப்பிடுகிறார் சுஜாதா.
ரத்தம் ஒரே நிறம்
தன் தந்தையைக் கொன்ற முரட்டு ஆங்கிலேயே அதிகாரி எட்வர்ட்டை கொன்று பழி தீர்ப்பதற்காக ஆலப்பாக்கத்தில் இருந்து சென்னை நோக்கி கிளம்புகிறான் முத்துகுமரன். இடையில் பூஞ்சோலை மற்றும் பைராகியின் அறிமுகம் கிடைகிறது. இரண்டுமுறை எட்வர்ட்டை கொலைசெய்ய முயன்றும் காயங்களுடன் தப்பிவிடுகிறான் முத்துகுமரன். முதல்முறை பூஞ்சோலையாலும் சிலமுறை ஆஸ்லியாலும் காப்பற்றப்படும் முத்து எட்வர்ட்டை கொன்றானா? என்பது ஒரு கிளைக்கதை.
சென்னையில் கர்னல் நீலின் தலைமையில் இருக்கும் ராணுவத்தில் எட்வர்ட் என்ற முரட்டு இளைஞனும், ஆஷ்லி என்ற தன் பதவிக்கு சற்றும் பொருந்தாத மென்மையான இளைஞனும் பணிபுரிகிறார்கள். இருவருமே எமிலியை காதலிக்கிறார்கள், இருந்தும் எட்வர்ட் தனது முரட்டு குணத்தாலும், தைரியத்தாலும் எமிலியை மணமுடிக்கின்றான். மணமான பின்பும் ஆஷ்லி எமிலியை விரும்புகிறான். எமிலி என்ன ஆனாள்? இது மற்றொரு கிளைக்கதை.
சிப்பாய் கலகம் வர வாய்ப்பிருப்பதாக ஜெனெரல் வீலரிடம் இருந்து தகவல் வர நீலின் தலைமையில் சென்னை ரெஜிமெண்ட் கடல் மற்றும் தரை மார்க்கமாக கல்கத்தா நோக்கி பயணிக்கிறது. இக்குழுவில் எட்வர்ட் தனது மனைவி எமிலியுடனும், ஆஸ்லியும் பயணிக்கிறார்கள். அதே நேரம் பைராகியின் துணையோடு முத்துவும், முத்துவின் விருப்பம் இல்லாமல் பூஞ்சோலையும் வடக்கு நோக்கி நகர்கிறார்கள். மேற்கூறிய இரு கிளைக்கதைகளையும் இணைக்கப்போகும் புள்ளி கான்பூரில் நடைபெற இருக்கும் சிப்பாய் கலகம்.
வெகுநாட்களாகவே எனக்கிருந்த சந்தேகம், ஏன் ஒரு சாதாரண பன்றிக் கொழுப்பிற்காக புரட்சி செய்ய வேண்டுமென்பது. பன்றிக் கொழுப்பிற்காக நடைபெற்ற போராட்டம் அல்ல அது. அக்கொழுப்பை காரணியாகக் கொண்டு ஆங்கிலேயக் கொழுப்பை அடக்க மேற்கொள்ளப்பட்ட புரட்சி என்பதை மிக அழகாக விளக்கியிருப்பார் சுஜாதா.
நோக்குமிடங்களில் எல்லாம் கருப்பன், பார்க்கும் பெண்களையெல்லாம் படுக்கைக்கு அழைக்கும் வெள்ளையன் என்று அடிமை இந்தியாவில் நாம் எப்படியெல்லாம் அவமானபடுத்தப்பட்டோம், என்னமாதிரியான இன்னல்களையெல்லாம் அனுபவித்தோம் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் இந்தநூல் மிகச்சரியான ஆரம்பநூல்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறை மட்டுமல்லாது, நமது மூடநம்பிக்கைகளையும் மிக அழகாக சுட்டிக் காட்டியிருப்பார் சுஜாதா. எட்வர்ட்டும், ஆஷ்லியும் கங்கையில் பயணிக்கும் போது உடன்கட்டை ஏற்றும் அவலத்தை காண நேரிடும். இந்த புத்தகத்தில் நம்மை கலங்கடிக்கச் செய்யும் இடமொன்று உண்டென்றால் அது இந்த சம்பவம் தான். மிக நேர்த்தியாக எழுதியிருப்பார். படிக்கும் நம்மை ஒருநிமிடம் உணர்வற்றுப் போகச் செய்துவிடும். நல்லவேளை ஒழித்துவிட்டார்கள். ராஜாராம் மோகன்ராய்க்கும், வில்லியம் பெண்டிங் பிரபுவுக்கும் நன்றி.
சிப்பாய் கலகத்தின் போது இந்தியர்கள் செய்த வன்முறைகள். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆங்கிலேயர்கள் செய்த வன்முறைக்கு வன்முறைகள் என்று நாவல் முழுவதுமே ஒரே ரத்தமயம்தான், என்னவொன்று எல்லா இடங்களிலும் சிந்தப்பட்ட ரத்தங்களின் நிறமும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நாவல் இது.
எழுத்தாளர்கள் ஜெயமோகனும், எஸ் ராமகிருஷ்ணனும் பரிந்துரைத்த நூறு சிறந்த தமிழ் நாவல்களில் இடம் பெற்றிருக்கும் ஒரே ஒரு சுஜாதாவின் நூல் உண்டென்றால் அது ரத்தம் ஒரே நிறம் நாவல் தான். ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய நூல். முத்துகுமரனையும் பூஞ்சோலையையும் தெரிந்து கொள்வதற்காக அல்ல. எட்வர்ட்டையும், ஆஷ்லியையும் தெரிந்துகொள்வதற்காக.
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
Subscribe to:
Post Comments (Atom)
இன்றைய பல மருந்துகளில் பன்றி கொழுப்பு இருக்கிறது.
ReplyDeleteபன்றியின் பான்கிரியாஸ் இருந்து எடுக்கப்படும்
என்சைம் இருக்கிறது.
சுஜாதா பாவம்.
அவருக்கு எழுத மட்டும் தான் தெரியும்.
எழுத்திலே எல்லோரா படைக்க தெரியும்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.in
எழுத்திலே எல்லோரா படைத்தவர்...! சூப்பர் சுப்புத்தாத்தா!
Deleteசுப்பு தாத்தா : இன்றைய தேதிகளில் நிறைய மருந்துகளில் பன்றியின் கொழுப்பு இருக்கிற விஷயம் ஏதோ உலகிலேயே உங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்ற ரீதியில் பாவம் சுஜாதா என்று தேவையில்லாமல் அனுதாபட்டுள்ளீர்கள். சுஜாதாவுக்கு நன்றாகவே தெரியும். அவர் விஞ்ஞானபூர்வமான தகவல்களுடன் எழுதிய "தலைமைச் செயலகம்" உட்பட பல நூல்களை / கட்டுரைகளை பாவம் நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் ரத்தம் ஒரே நிறத்தில் சிப்பாய்க் கலகம் ஏற்பட பின்னணி காரணம் பன்றிக் கொழுப்பு என்று குறிப்பிட்டதற்கு உண்மையில் சான்றுகள் இருக்கின்றன.இரண்டாவது, சிப்பாய் கலகம் நடந்த காலத்தில் யாரும் மருந்துகளில் பன்றிக் கொழுப்பை கலக்கவில்லை. மிகச் சமீபத்தில்கூட, அமெரிக்காவில் உருளைக்கிழங்கு வறுவல் வறுப்பதற்கு எண்ணையுடன் பன்றிக் கொழுப்பைச் சேர்த்து பெரிய கலாட்டா ஆனது. எனவே, இது உலகறிந்த விஷயம், சுஜாதாவிற்கு தெரியாமல் இருக்குமா என்ன?
Deleteபுத்தகத்தை படிக்க தூண்டும் எழுத்து நடை.. நல்ல பதிவு...
ReplyDeleteஅனுபவித்த முந்தைய இன்னல்களை அறிந்து கொள்ள உதவும் நூல்... விமர்சனம் நன்று... நன்றி...
ReplyDeleteநல்ல அறிமுகம்... விரைவில் படிக்கத் தூண்டும் விவரிப்பு...
ReplyDeleteபுஸ்தகம் வாசிக்க தூண்டும் விமர்சனம்...!
ReplyDeleteதொடர்கதையாக வந்தபோதும் படித்திருக்கிறேன். என்னிடம் புத்தகமாகவும் உள்ளது! நல்ல பகிர்வு.
ReplyDeleteபுத்தகம் வாங்க தூண்டுது. இங்க விமர்சனம் போடும் இந்தப் புத்தகம்லாம் வாங்க எதாவது லோனுக்கு ஏற்பாடு பண்ணிங்கன்னா நல்லா இருக்கும்.
ReplyDeleteஆஹா... நல்லாச் சொன்னீங்க ராஜி மேடம்...! :)))
Deleteஎன்னது... நல்லாச் சொன்னீங்க ராஜி மேடமா...? ஸ்ரீராம், பின்வரும் வரிகளை நாயகன் கமல் ஸ்டைலில் படிக்கவும்.... ‘‘சினிமாப் பதிவுகளை எழுதற சிவகுமாரை நாலு படத்துக்கு டிக்கெட் வாங்கித்தரச் சொல்லுங்க... நாங்க தர்றோம்! சாப்பாட்டுக் கடை எழுதற கேபிள் சங்கரை நாலு ஹோட்டல்ல சாப்பாடு வாங்கித் தரச் சொல்லுங்க... நாங்க தர்றோம்!’’ ஹி... ஹி... ஹி...!
Deleteஅப்போ சோகமான பதிவுகள் எழுதறவங்க கிட்ட என்ன எதிர்பார்ப்பீங்க கணேஷ்?
Delete1980 களில் குமுதம் வர இதழில் ரத்தம் ஒரே நிறம் என்ற பெயரில் தொடர்கதையாக வந்தது அருமையான கதை
ReplyDeleteஐயா 1978 ல் குமுதத்தில் வந்தது. 1978 ஜூலைக்கு முன்பே எமிலி யின் அடல்ட் விஷயம் வந்து விட்டது 😀🙏🤔
Deleteஅருமையான எழுத்து நடை, விமர்சனம்! சுஜாதாவின் எழுத்துக்களை உயிர் மூச்சில் கலந்து ரசித்ததால்/ரசிப்பதால் இன்னும் சுவாரசியம் கூடியது! இந்தக் கதையை ஏற்கனவே படித்தாகிவிட்டது என்றாலும் தற்போது இன்னும் வாசிக்கத் தூண்டிவிட்டது! அருமையான் ஒரு எழுத்தாளரை தமிழ் உலகம் இழந்து விட்டது என்று சொன்னாலும் மிகையில்லை! அவரது எல்லா எழுத்துக்களையும் வாசித்திருக்கின்றோம்!
ReplyDeleteமிக்க நன்றி பகிர்வுக்கு! அந்த அருமையான எல்லோர் மனதிலும் இருக்கும் சுஜாதாவை நினைவு கூர்ந்ததற்கு!!
வாழ்த்துக்கள்! தொடர்கின்றோம்!
என்றென்றும் சுஜாதா என்ற புத்தகத்தில் திரு அமுதவன் கருப்பு சிவப்பு வெளுப்பு கதையினால் சுஜாதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையை மிக விவரமாக எழுதியிருக்கிறார். படிக்கும்போது நமக்கே சுஜாதாவின் மீது இரக்கம் உண்டாகும் அளவுக்கு தெளிவான நடையில் இருக்கும்.
ReplyDeleteரத்தம் ஒரே நிறம் படித்த பின்தான் எவ்வாறு துப்பாக்கி தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்பதை நான் அறிந்துகொண்டேன்.பத்துபேர் சுட்டால் சுட்டவர்கள் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட அதில் ஒருவரின் துப்பாக்கியில் மட்டுமே உண்மையான குண்டு இருக்கும் என்பதை சுஜாதாவின் எழுத்திலிருந்தே அறிந்தேன். பதிவுக்கு நன்றி.
ஆமாம் காரிகன் ஸார்... சுஜாதாவின் அருகிலேயே இருந்த அமுதவன் அந்த அனுபவங்களை விவரித்ததைப் படிக்கையில் மனம் நெகிழ்ந்துதான் போனது. அப்புறம்... யானையின் காலடியில் மனிதனின் தலையை சிதறுதேங்காய் போல மிதித்துச் சிதற வைப்பதை நாவலில் சுஜாதா சொல்லியிருப்பார் பாருங்கள்... ம.செ.யின் ஓவியத்தில் அந்தக் காட்சியைப் பார்த்து, படிக்கையில் உண்மையில் மனம் நெகிழ்ந்து ஆங்கிலேயர்களின மீது வெறி+கோபம் வரச் செய்து விடும்! அதான் சுஜாதா!
Deleteசீனு... இந்த ‘ரத்தம் ஒரே நிறம்’ கதையில் கேப்டன் ஆஷ்லி ட்ரெவரின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமானது. வெறித்தனமாக நடந்து கொண்ட 90 சதவீத ஆங்கிலேயர்களினூடே மனிதாபிமானம் கொண்ட ஆங்கிலேயர்களும் சிலர் இருந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகையில் நாவலும், சுஜாதாவின் எழுத்தும் மின்னுகிறது. அப்புற்ம... இது சுஜாதா எழுதிய ஒரே சரித்திர நாவல் என்பது என் அழுத்தமான கருத்து. இரண்டாவதாக அவர் எழுதிய ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ சரித்திரக் கதையா என்ன? சரியான கேலிக்கூத்து! சுஜாதாவின் எழுத்தில் எனக்குப் பிடிக்காத ஒரே படைப்பு அதுதான்!
ReplyDeleteசுஜாதாவின் படைப்பில் பிடிக்காத ஒரே படைப்பு? மண்மகன் எப்படி?
Deleteஒரே படைப்பா..? சுஜாதா எழுதுனதுல பாதி டாப்புனா பாதி ப்பு..
Deleteகடைசியில் ஜெரா சொன்னாங்கன்னு படிக்கச் சொல்றீங்களே.. நீங்க உண்மையிலேயே சுஜாதா ரசிகர் தானா?
ReplyDeleteகுமுதத்தில் க.சி.வெ. என ஆரம்பித்து 5 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டபின், ஆரம்பமான இந்தத் தொடரின் முதல் சில அத்தியாயங்கள் மட்டும் படித்த எனக்கு... தொடர வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் தேடித் பிடிக்கிறேன்; நாடிப் படிக்கிறேன்... இறைநாட்டம்.
ReplyDeleteநான் படிக்காமல் விட்டுபோன சுஜாதாவின் கதைகளுள் இதுவும் ஒன்று. எனக்கு எப்போதுமே சுஜாதாவின் கதைகளில் கணேஷ் வசந்த் வருகின்ற கதைகள் தான் மிகவும் பிடிக்கும். அந்த எண்ணத்தை விட்டொழித்து, அவரின் ஸ்ரீரங்கத்து தேவதைகளை படித்தேன்.
ReplyDeleteஇப்போது தங்களின் இந்த விமர்சனத்தால், இந்த புத்தகத்தையும் வாங்கிப் படித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. விமர்சனத்தை மிகவும் அழகாக சோல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
நான் 11 வது படிக்கும் காலத்தில் குமுதத்தில் வெளியானது இந்த கதை எனக்கு கொலையுதிர்காலம் அடுத்து சுஜாதாவின் அடுத்த கதையாக இதை தான் படித்தேன் அந்த தொடர்கதைக்கு ஓவியர் மணியம் செல்வன் படங்கள் வரைந்திருந்தார் இன்னும் என் கண்களில் அவை நிற்கிறது உதாரணத்திற்கு யானை முத்து குமரனை காலால் இடற வரும் காட்சி சிலம்ப சண்டை காட்சி என்று சொல்லி கொண்டே போகலாம்
ReplyDeleteபுத்தகமாக வங்கியும் படியது விட்டேன்
சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் தான் இது
பல வருடங்களுக்கு முன்னர் படித்தது. மீண்டும் படிக்கத் தூண்டும் விமர்சனம் சீனு. பாராட்டுகள்.
ReplyDeleteசமீபத்தில் விகடனில் படித்தது:
ReplyDeleteசுஜாதாவிடம் ஏன் சரித்திர நாவல்கள் எழுதுவதில்லை என்று கேட்டதற்கு பள்ளியில் சரித்திர பாடத்தில் குறைந்த மதிப்பெண்களே எடுப்பேன் அதனால் தான் என நகைச்சுவையாக குறிப்பிட்டு உள்ளார்.
சுஜாதா கூறுகிறார்...
ReplyDeleteதமிழில் சரித்திர நாவல்களுக்கு உண்டான சம்பிரதாயத்தை வகுத்தவர்கள் கல்கியும், சாண்டில்யனும். தற்போது எழுதப்படும் சரித்திர நாவல்கள் அனைத்தும் இவ்விருவர் பாணியில்தான் எழுதப்படுகின்றன. லேசான சரித்திர ஆதாரங்கள்; நிறைய சரடு; நீண்ட வாக்கியங்கள் – இவைகளின் உள்ளே ஒரு நவீனக் கதைதான் மறைந்திருக்கும். குஞ்சரமல்லர்கள், கத்திச் சண்டைகள், சல்லாத் துணித் திரைகளுக்குப் பின் கரிய கண்கள் கொண்ட பெண்கள் – இவைகள் எல்லாம் சரித்திர நாவலுக்கு உண்டான ‘ஃபார்முலா’ க்களாக இன்றும் இருக்கின்றன. இவைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆசையுடன் ‘கருப்பு, சிவப்பு, வெளுப்பு’ என்னும் நாவலை குமுதத்தில் துவங்கினேன். சாதிக்கலவரம் எழுந்து அதை நிறுத்த வேண்டியிருந்தது. சிப்பாய் கலகத்தை ஆராய்ச்சி செய்து அதில் ஒரு தமிழன் கலந்து கொள்வதாக ஆரம்பித்தேன். ‘கையை வெட்டுவேன் நிறுத்து’ என்றார்கள். எனக்கு இடது கையால் ஷேவ் செய்து பழக்கமில்லாததால் நிறுத்தி விட்டேன். ஒரு விதத்தில் சமரசம் பண்ணிக்கொண்டு, அதை ‘ரத்தம் ஒரே நிறம்’ என்று சில தினங்கள் விட்டு துவங்கி முடிக்க முடிந்தது. என்னதான் ‘ரத்தம் ஒரே நிறம்’ என்று எழுதினாலும் ஆரம்ப உற்சாகத்தை இழந்துவிட்டேன்.
நான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறேன். ‘ரத்தம் ஒரே நிறம்’, ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’. ‘ரத்தம் ஒரே நிறம்’ கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ என்ற தலைப்பில் குமுதத்தில் தொடர்கதையாக அட்டகாசமாகத் துவங்கியது, மணியம் செல்வனின் அழகான சித்திரங்களுடன். மூன்று வாரங்கள் சிறப்பாக வந்த பின் எதிர்பாராத ஓர் எதிர்ப்பு அதற்கு நாடார் இனத்தவரிடமிருந்து வந்தது. நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது திட்டுவார்த்தைகள் எல்லாம் எனக்கு பாடமாயின. தொலைபேசியில் கொலை பேசினார்கள். குமுதம் இதழைக் கடையில் எரித்தார்கள். அதன் ஆசிரியருக்கு நாடார் சங்கத்தைச் சார்ந்தவர்கள் கதையை உடனே நிறுத்தும்படியும் மன்னிப்புக் கேட்கும்படியும் வற்புறுத்தினார்கள்.
ReplyDeleteஆசிரியர் ஏ.எஸ்.பி. எனக்கு போன் போட்டு ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் ‘ஓர் இனத்தின் மனத்தைப் புண்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. அவர்களின் தற்போதைய கோபத்தில் கதையின் நோக்கம் அதுவல்ல, அடுத்துவரும் அத்தியாயங்களைப் படித்தால் தெரியும் என்று என்னதான் விவாதித்தாலும் உணர்ச்சிபொங்கும் இந்தக் கணத்தில் யாரும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. மேலும் தொடர்ந்து எழுதினால் என் வலது கையை வெட்டுவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கு இடது கையால் எழுதவேறு பழகவேண்டும். நிறுத்திவிடுங்கள். அடம்பிடித்து மரணத்துடன் விளையாட இது ஒன்றும் பிரெஞ்சுப் புரட்சி அல்ல’ என்றேன். கதை நிறுத்தப்பட்டது.
ஆசிரியர் ஏ.எஸ்.பி ஆறுமாதம் கழித்து கோபம் அடங்கியதும் இதே கதையை தலைப்பை மாற்றி வெளியிடலாம் என்றார். ‘கருப்பு சிவப்பு வெளுப்பு’ அதேபோல் ஆற அமர ‘ரத்தம் ஒரே நிறமாக’ வெளிவந்தது. சிப்பாய்க்கலகத்தைப் பற்றிப்படித்தபின் அதில் ஒரு தமிழன் கலந்துகொண்டால் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்த கதை இது.
இப்போது இதைப்படிக்கும்போது எதற்காக இதை எதிர்த்தார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை மறுபடி கிளற எனக்கு இஷ்டமில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் எனக்குப் பல விஷயங்கள் புலனாயின. தமிழ் சமூகத்தில் சில கதைகளை சிலர்தான் எழுதலாம் என்ற எழுதப்படாத ஓர் விதி இருக்கிறது. அதை மீறினதால் வந்த வினை என்பது இப்போது புரிகிறது. எழுத்தின் மேல் பிடிவாதம் இருப்பதோ, எழுதினது வேதவாக்கு, அதை யாராவது வழிமறித்தால் உயிருள்ளவரை போராடுவேன் என்பதெல்லாம் விஞ்ஞானச் சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு சிறுபிள்ளைத்தனம்.
எல்லாப் போராட்டங்களும் அலுத்துவிடுகின்றன. புதிய காரணங்கள் தேடப்படுகின்றன. ‘ரத்தம் ஒரே நிறம்’ மீண்டும் வந்தபோது முதலில் அதை எதிர்த்தவர்கள் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்தப் புதியபதிப்பை சிறப்பாக வெளியிடும் உயிர்மை பதிப்பகத்தார்க்கு என் நன்றிகள்.
-சுஜாதா (18.12.2005)
”குட்மார்னிங் ஸார்! ”மக்கின்ஸி அவனிடம் ஓரணா நாணயத்தை வீசி எறிந்தான்.
ReplyDeleteபொறுக்கிக்கொண்டு அடைப்பத்துடன் விலகினான். வெளியே, “துரை எழுந்துட்டாரு” கேட்டது. மூன்று வேலைக்காரர்கள் மெளன வரிசையாக உள்ளே நுழைந்தார்கள்.
மக்கன்ஸி தன் உள்ளாடைகளில் நடந்து, அறையை விட்டு வெளியே வந்து, அருகே இருந்த குளியலறைக்குள் நுழைந்து, தன் உடைகளை கழற்றி எறிய, அவற்றை ஒரு கருப்பன் பிடித்துக் கொள்ள, மக்கன்ஸி இப்போது உரித்த கோழியைப் போல பிறந்த மேனியாக இருந்தான். வெள்ளை வெளேர் என்று உருவி விட்ட அம்புத்தனமான உடற்கட்டு. கொப்புளிக்கும் தசை நார்கள். திருகி விட்ட கயிறு போல, ஒரு அவுன்ஸ் ஊளைச்சதை இல்லாத ஆரோக்கியம்.
வேளையாட்களில் ஒருவன் மண்பானையிலிருந்து குளிர்ந்த நீரை ஆதரவுடன் ஊற்ற அவன் தன்னை தேய்த்துக்கொண்டு கைநீட்டும்முன் மற்றொரு கருப்புக்கை சோப்புடன் தயாராக இருந்தது. மக்கின்ஸி உற்சாகமாக பாடத் துவங்கினான்.
- கருப்பு சிவப்பு வெளுப்பு (அ) ரத்தம் ஒரே நிறம், ஆகஸ்ட் 1983.
டோண்டு ராகவன் கூறுகிறார்…
ReplyDeleteஇந்தத் தலைப்பில் சுஜாதா குமுதத்தில் எழுத ஆரம்பித்தத் தொடர் கதையைப் பற்றிப் பேசப் போகிறேன். இக்கதை தொடங்கி சில வாரங்களுக்குள் நிறுத்தப் பட்டது. ஏனெனில் இது ஒரு ஜாதிப் பிரச்சினைக்கு வழி வகுக்கும் போல் தோன்றியது.ஆனால் சில வார இடைவெளிக்குப் பிறகு அதே கதையை சுஜாதா சில மாற்றங்களுடன் “ரத்தம் ஒரே நிறம்” என்றத் தலைப்பில் வெற்றிகரமாக அதே குமுதத்தில் எழுதி அவருக்கு எதிராக திரை மறைவில் வேலை செய்தவர் மூக்கை அறுத்தார்.
முதலில் எழுதப்பட்டக் கதையில் மாடன் என்னும் நாடார் ஜாதியைச் சேர்ந்த வாலிபனைப் பற்றி விவரிக்கப் பட்டது. அவன் தங்கை வெள்ளைக்காரன் வீட்டுக்கு வேலைக்காரியாகச் செல்கிறாள். காலம் 1857-ஆம் வருடத்துக்கு முந்தியது. அதில் வரும் வில்லன் வெள்ளைக்காரன் செங்கல்பட்டுக்கு வேட்டைக்குச் செல்லும் தருணத்தில் கதை மேலே சொன்னபடி நிறுத்தப் பட்டது.
இப்போது இரண்டாம் கதைக்கு வருவோம். இதில் கதை செங்கல்பட்டு வேட்டையுடன் ஆரம்பிக்கிறது. வில்லன் கோட்டைக்குத் திரும்பும் வழியில் முத்துக்குமரன் (அதுதான் பெயர் என்று ஞாபகம்) என்பவனுடன் சண்டை போட்டு அவன் அப்பாவைக் கொன்று விடுகிறான்.
இரண்டாம் கதை போன போக்கிலிருந்து என்னால் சில விஷயங்களை ஊகிக்க முடிந்தது.முதல் கதை நிறுத்தப்படாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? முத்துக்கருப்பன் யானையடியில் வைத்துக் கொல்லப்பட்டிருப்பான். மாடன் தப்பித்துச் சென்று முத்துக்குமரன் காதலியோடு சேர்ந்து வட இந்தியா சென்றிருப்பான். மாடன் தன் தங்கையைக் கொன்றதற்காக வில்லன் வெள்ளைக்கரனை பழி வாங்கத் திட்டம் தீட்டியிருப்பான். அது நடக்காதலால் இரண்டாம் கதையில் கொல்லப்படுவதற்கென்று ஒரு கொள்ளைக்காரன் தாண்டவராயன் வர வேண்டியிருந்தது. ஆக முத்துக்குமரனுக்கு ஒரு பதவி உயர்வு.
இக்கதையால் உருவான பிரச்சினைகளைப் பற்றி பிற்காலத்தில் சுஜாதா எழுதும்போது எஸ்.ஏ.பி அச்சமயம் தனக்குப் பொறுமையாக இந்த விஷயத்தின் கருப்பு, சிவப்பு மற்றும் வெளுப்பு பற்றிக் கூறியது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பிரச்சினையில் எஸ்.ஏ.பி மற்றும் சுஜாதா பெருந்தன்மையாக நடந்து கொண்டனர்.
ஆனாலும் சுஜாதா ஓரிரு முறை இது பற்றி வேடிக்கையாகக் கோடி காட்டியுள்ளார். கணேஷ் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஜாதியைப் பற்றிக் கூற, வசந்த் கூறுவான்: “பாஸ் வேண்டாம். தொடர்கதையை நிறுத்திருவாங்க” என்று.கதை முடிந்ததும் சுஜாதா வெளியிட்டிருந்த சான்றுச் சுட்டிகள் மிக அருமை. இக்கதையில் வந்த நீல் என்பவன்தான் நீலன் துரை என்று ஊகிக்கிறேன். அவனது சிலை வெல்லிங்டன் தியேட்டர் எதிரில் வைக்கப் பட்டிருந்தது என்றும் பொது மக்கள் போராட்டத்துக்குப் பிறகு அது அகற்றப்பட்டது என்றும் படித்ததாக ஞாபகம். அந்த இடம் சிலைகளுக்கு ராசியில்லாத இடம் என்று எனக்குப் படுகிறது.
திரு சுஜாதாவின் கடிதம்...
ReplyDeletehttp://rathnavel-natarajan.blogspot.com/2012/05/blog-post_03.html
சுஜாதா பற்றி ஜ. ரா. சுந்தரேசன்...
ReplyDeleteஅவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள்.
ஆனால், தானொரு வி.ஐ.பி. என்ற எண்ணமே அவருக்கு எழுந்ததில்லை என்பதற்குச் சான்று வேண்டுமா? ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவன் ஓட்டலில் ஓர் ஒதுக்குப்புறமான சாளரத்தருகே நின்றவாறு மதிய நேர சிற்றுண்டியைப் பொறுமையாக ஸ்பூனினால் சாம்பாரின் கொத்துமல்லிகளையும், கறிவேப்பிலைகளையும் இதர ஜட வஸ்துக் களையும், சீராக எடுத்துத் தட்டின் ஒரு மூலையில் போடுவதைப் பார்த்திருக்கிறேன்.
அவரை அங்கே சந்தித்தபோது, அந்தக் கல்விக் கடலுடன் பேச அறிவார்ந்த வார்த்தைகளின்றி மிகச் சாதாரண வசனங்களை, ‘எப்படி யிருக்கீங்க, சவுக்கியமா, டிபன் இங்கேதான் சாப்பிடுவீங்களா?’ என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளையே கேட்டிருக்கிறேனென்றாலும், அவரது உயிரைக் காப்பாற்றிய ஓர் அதி உன்னதமான சாகஸத்தையும் நான் செய்திருக்கிறேன்.
அவர் குமுதத்தில் எழுதிய ‘ரத்தத்தின் நிறம் சிவப்பு’ என்ற ஓர் அற்புதமான சரித்திர நாவலில் சில வரிகள் ஒரு சிலரின் மனம் புண்படுமாறு அமைந்திருந்ததாக ஒரு கலவரம் ஏற்பட்டது.
‘எங்கே அந்த சுஜாதா?’ என்று வெறித் தனமான கூட்டம் அன்று குமுதம் அச்சகத்துக்குள் மூர்க்கத்தனமாகப் பிரவேசித்தது.
ஏறக்குறைய முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது.
‘சுஜாதாவை அனுப்பு வெளியே’ என்று வெறிக் கூச்சல்.
எவருடைய மனத்தையும் புண்படுத்தக்கூடிய விஷயங்களைப் போட விரும்பாத நெறியைக் கடைப்பிடித்து வந்த குமுதம் ஆசிரியர் அவர்கள், மேற்படி தொடர்கதையை அன்றே, அங்கே அப்பொழுதே நிறுத்திவிட்டு, அதை நிறுத்திவிட்டதான அறிவிப்பை யும் மாலைப் பத்திரிகையான ‘மாலை முரசு’வில் அறிவிப்பு விடும்படி செய்தார்.
மாலை முரசு பத்திரிகைக்கு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சமாசாரத்தை குமுதம் அச்சகத்தில் சொல்லிவிடலாம் என்று நான் அச்சகம் வந்தால், காம்பவுண்டு பூரா கோபக் கும்பல் _ கைகளில் கிடைத்த உருட் டுக் கட்டைகள் சகிதம்.
உள்ளே செல்ல முடியாது. கதவு உட்புறம் தாழிடப்பட்டுள்ளது. ‘சரி, வாபஸாவதே விவேகம்’ என்று திரும்புவதற்குள் சிலர் (என்னையும் என் உதவி ஆசிரியர் பணியையும் அறிந்த வர்கள்) ‘அந்த ஆளைப் பிடியுங்கள்’ என்று குரல் கொடுத்ததும், ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்து கொண்டு ‘சுஜாதாவை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் குத்திவிடுவோம், கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர்.
தொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீஸுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு.
நான், ‘சுஜாதா இங்கிருந்து எழுதமாட்டார். வெளியூரிலிருந்து எழுதுவார்’ என்றேன்.
அதுகள் என் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘எந்த ஊர் என்று சொல்லு. அட்ரஸ் என்ன? எங்க ஆளுங்க எல்லா ஊரிலும் இருக்காங்க. கிழிச்சுடணும் கிழிச்சு’ என்று ஆவேசப்பட்டார்கள்.
நான் நிதானமாக சட்டையை விடுவித்துக்கொண்டு நிதானமாக யோசித்து., நிதானமாக ஒரு பொய்யான முகவரியை மனசுக்குள் சிருஷ்டித்து மனப்பாடம் செய்துகொண்டு, அவர் களிடம் இன்ன நம்பர், இன்ன தெரு, பெங்களூர் என்றேன்.
குறித்து வைத்துக் கொண்டு கும்பல் கலைந்தது.
குமுதம் ஆசிரியருக்கு சுஜாதாவின்மீது அளவு கடந்த பிரியம், மதிப்பு, பாசம்.
சுஜாதாவைப் பாராட்ட எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு எப்போதுமே வெகு பிரியம். ஆனாலும் அடிக்கடி அவருக்கு போனில் தன் அபிப்பிராயத்தைக் கூறிக் கொண்டிருக்கமாட்டார். ரசனை தாங்க முடியாதபோது ரா.கி.ர. அவர்களிடம், ‘அவருக்கு வேணும்னா லைன் போடறீங்களா, ‘நான் பேசறேன்’ என்று தொலைபேசியில் கூப்பிடச் செய்து பேசி மகிழ்வார்.
ஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தைவிடவோ, சினிமா டைரக் டரின் அந்தஸ்தை விடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடையவராகவே சுஜாதா கடைசி வரை இருந்தார்.
இத்தனைக்கும் அவர் தன் விளம்பரத்துக்காக ஓர் உள்ளங்கை அளவு சின்னத் தம்பட்டத்தைக் கூட உபயோகித்தது இல்லை. அவரது ஓரோர் எழுத்துமே அவரது புகழைப் பாடின. இனியும் பாடிக்கொண்டிருக்கும்..
--ஜ. ரா. சுந்தரேசன் (குமுதம் 12.3.2008 )
சுஜாதாவின் ஒரே சரித்திர கதை என்பதில் மாற்றமேயில்லை. காந்தளூர் கதை படித்து எரிச்சல்தான் எனக்கு மிச்சம். இதிலும் கொஞ்சம் போரடிக்கும் பகுதிகள் இருக்கின்றன.தொடர்கதையின் தொல்லை. அதைவிட்டால் இது ஒரு முக்கிய சரித்திரநாவல் (ஏதேனும் கால வரையறை உள்ளதா, எத்தனை வருடத்து முந்தைய கதைகள் சரித்திர கதைகள் எனப்படலாம்)
ReplyDeleteபடித்தது அவ்வளவாக நினைவில் இல்லை . மீண்டும் படிக்கத் தூண்டி விட்டீர்கள்.சரித்திரக் கதைக்குத்த்தான் பின்னணி இருக்கும் என்றால் அதை எழுதியதற்கு பின்னணியில் எவ்வளவு நடந்துள்ளது.
ReplyDeleteநானும் இங்கு எழுத இயலுமா...?
ReplyDeleteஆஹா! பதிவு படிக்கும் போதே புத்தகம் வாங்கி படிக்கும் ஆவல் வருகிறது.. சுஜாதா சரித்தர நாவல் எழுதி இருப்பது இப்போதும் தான் தெரியும்.
ReplyDeleteதெளிவாகவும் அழகாகவும் பகிர்ந்தமைக்கு நன்றி!!!
எவ்வளவு ரசிகர்கள் ???
ReplyDeleteசுஜாதாவின் அறிவியல் சார்ந்த நூல்களை படித்துள்ளேன் ... சிறுகதைகளையும் படித்துள்ளேன் ... நாவல் படிக்க ஆவல் ஏற்படுகிறது ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete