Friday, February 14, 2014

என் பெயர் ரங்கநாயகி!

படைப்பாக்கம் : ஆதி வெங்கட்

மீபத்தில் தான் இந்த புத்தகத்தை வாசித்தேன். தில்லி தமிழ்ச் சங்கத்தின் நூலகத்திலிருந்து என்னவர் எடுத்து வந்திருந்தார். இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் நாவல் என்றால் விறுவிறுப்புக்கும் மர்மங்களுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் அவர் தான் ஆத்மார்த்தமாக எழுதிய நாவல் என இந்த நூலை குறிப்பிடுகிறார். தினமணி கதிரில் 36 வாரங்களுக்கு தொடராகவும், பின்பு தொலைக்காட்சியில் இந்த நாவல் நெடுந்தொடராகவும் வந்துள்ளது.

சரி! கதைக்குள் செல்வோமா! ஆச்சாரமான வைஷ்ணவ குடும்பத்தை சுற்றித் தான் இந்த கதை உள்ளது. அனந்தபத்மநாபன் என்கிற தொழில் அதிபரின் குடும்பத்துக்கு ரங்கநாயகி அறிமுகமாகிறாள். மனைவி காலமாகிவிட்ட நிலையில் மூன்று பெண் குழந்தைகள், மற்றும் அவரது தாயார், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் அனந்தபத்மநாபன் என்கிற .பி.என். இந்த நிலையில் தான் ரங்கநாயகி ஒரு குறிக்கோளுடன் அந்த குடும்பத்திற்கு அறிமுகமாகிறாள். அது என்ன குறிக்கோள்?

நீண்ட நாட்களாக திருமணம் கூடி வராத .பி.என் னின் தங்கைக்கு ரங்கநாயகி குடும்பத்தில் நுழைந்த வேளை நிச்சயமாகிறது. அதை தொடர்ந்து பல விபரீதங்களும் வீட்டில் நடைபெறுகிறது. மடிசார் கட்டுடன் கணவர் துபாயில் வேலைபார்ப்பதாக அறிமுகமாகும் ரங்கநாயகி ஒரு தாசியாக வெளியுலகுக்கு வேஷம் போடுகிறாள். ஆனால் அவள் ஒரு நெருப்பு என்பது உடன் பழகுபவர்களுக்கு புரிந்து விடுகிறது.

ரங்கநாயகி என்னும் புரியாத புதிருக்கான விடைகள் கதை முழுதும் தொடர்கிறது. உண்மையில் ரங்கநாயகியின் கணவர் யார்? எதற்காக இந்த வேஷம்? .பி.என் குடும்பத்தில் ரங்கநாயகி நுழைந்த காரணம் தான் என்ன? ரங்கநாயகியின் கதை என்ன? என்பது போன்ற உங்கள் கேள்விகளுக்கான விடைபுத்தகத்தில்.

இந்த புத்தகம் முழுவதும் லா.ச.ரா, ஜெயகாந்தன், பாலகுமாரன், கண்ணதாசன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், மாலன், அமரர் கல்கி போன்ற மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களில் உள்ள தனக்கு பிடித்த வரிகளை ஒவ்வொரு பகுதிக்கு முன்னும் பகிர்ந்து கொண்டுள்ளார் இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள். தன்னுடைய நூலில் மற்றவர்களுக்கும் ஒரு இடம் கொடுத்த்து மிகவும் சிறப்பான விஷயம் அல்லவா! அதுவும் அந்தந்த பகுதிக்கு ஏற்ற வரிகளாக!

விறுவிறுப்புக்கு பஞ்சமேயில்லாத இந்த நாவல் நடுவில் சற்று கொஞ்சம் இழுத்தடிப்பது போன்று தோன்றியது. ரங்கநாயகியின் குறிக்கோள் என்னன்னு உடனே சொல்லிட மாட்டாரா? என்று தோன்றியது. அதே போல் ரங்கநாயகி எடுத்த முடிவும், செய்த வேள்வியும் எந்த சராசரி பெண்ணாலும் செய்ய முடியாத, ஏற்க முடியாத ஒன்று எனவும் தோன்றியது. சற்றே பிசகியிருந்தாலும் வாழ்க்கையே சூன்யம் தான்.

இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த சில வரிகள்:-

ஸ்ரீ உன்னை விட மாட்டேன். எதைச் சொல்லி நீ என்னை விலக்க முயல்வாயோ அதுவே இனி என் ஆடை. நீ கண்டிராத ஒரு பெண்ணை என்னில் காண்பாய். உன் மனத்தடியில் தேங்கிக் கிடக்கும் அந்த தாபம் மிகுந்த சோரப் படிமங்களை நான் வழித்தெடுப்பேன்.

நடுவில் உன் இந்திர – தந்திரங்களையும் தாங்கிச் செயலாற்றுவேன். இதற்காக யார் உதவியையும் கோர மாட்டேன். எவர் அனுதாபத்தையும் பெற முயல மாட்டேன். இது சத்தியம். இதை யதார்த்தமாகச் சொல்கிறேன். காலம் எனக்கு நிச்சயம் கருணை செய்யும். செய்தே தீரும்!

“கடவுள் பக்தி – அதன் மேலே நாம வைக்கிற நம்பிக்கை எல்லாமே அந்த க்ஷணம் பகுத்தறிவுக்காரா சொல்ற மாதிரி ஒரு பெரிய பலவீனமான விஷயமாத்தான் தோணித்து. மனுஷன் மட்டுமல்ல, தெய்வமும் சேர்ந்து ஏமாத்திடுத்துன்னு நினைச்சு அழுதப்போ ஏமார்றவா இருக்கறவரை ஏமாத்தறவாளும் இருப்பான்னு ஒரு குரல் விழுந்தது. யாரோ யார்கிட்டேயோ சொல்லிண்டு போயிண்டிருந்தா. ஆனா, எனக்குச் சொன்ன மாதிரியே பட்டுது. அந்த நிமிஷம் ஒரு சின்ன மாற்றம் மனசுல…….”

 “வாழ்க்கைங்கறது எழுத்தாளர்கள் கற்பனைல உருவாக்கற நாவலோ, இல்லை பூதாகாரப் பொய் வடிவமான சினிமாவோ இல்லை. அது யாருமே நினைச்சுப் பார்க்காத திசையிலும் மேடு பள்ளங்களிலும் நம்மை இழுத்துகிட்டுப் போற ஒண்ணு. நாமளும் அது இழுப்புக்கு போய்த்தான் தீரணும். நாவல்லயும், சினிமாவுலையும் தான் நாம விரும்புற முடிவுகள் நமக்குக் கிடைக்கும். வாழ்க்கைல அப்படிக் கிடையாது.”

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:- திருவரசு புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 17. ஏப்ரல் 2001 ஆண்டு பதிப்பின் படி 248 பககங்கள் கொண்ட இதன் விலைரூ 65.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட், திருவரங்கம்.

18 comments:

  1. வணக்கம்
    நாவல் பற்றி சொல்லுகிற போது வாங்கி படிக்க தூண்டுகிறது.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இதே போன்ற ஒரு நிகழ்வினை ஒரு முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.wallposterwallposter.blogspot.in

    ReplyDelete
  3. சில சிறிய புதிர்களுடன் முன்னர் பி வி ஆர் எழுதுவார். இந்திரா சௌந்தரராஜன் கதைகள் படித்ததில்லை. ஆனால் இதுபோன்ற கதைக் களங்கள் மிகவும் பிடிக்கும். இ.சௌ எழுதிய புத்தகங்களைக் குறித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. இதை தொலைக்காட்சியில் பார்த்ததாய் ஞாபகம்.. "நறுக்" விமர்சனம்..தொடர்ந்து எழுதுங்க!!

    ReplyDelete
  5. ”படித்ததில் பிடித்ததை” இங்கு பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    வாசகர் கூட குழுவுக்கும், கணேஷ் சாருக்கும் மிக்க நன்றி.

    தொடர்ந்து பகிர முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இ.சௌ.ராஜனின ‘ரங்கநதி’ படிச்சிருக்கீங்களா ஆதி மேடம்? அதுதான் அவரது படைப்புகளில் சிறந்ததென்பேன் நான். அப்படி பிரமாதப்படுத்தியிரப்பார். நட்பூக்கரம் நீட்டி வாசகர் கூடத்திற்கான உங்களின் முதல் பங்களிப்பை வழங்கியதற்கு நன்றி! விமர்சனம் சுருக்கமாக, அழகாக வந்திருக்கிறது வாழ்த்துகள்! தொடர்ந்து கை கொடுக்க எங்களின் அன்பு வேண்டுகோள்!

      Delete
    2. அவருடைய நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களுள் அதுவும் ஒன்று.

      Delete
  6. உண்மை தான்... வாழ்க்கை வேறு... வாழ்வும் வேறு... நல்லதொரு நாவல் அறிமுகத்திற்கு நன்றி...

    நமது ஐயாவின் தளத்திலும் இதைப்பற்றி : http://wallposterwallposter.blogspot.in/2014/02/blog-post_15.html

    ReplyDelete
  7. அழகான புத்தக விமர்சனம், இந்திரா சௌந்தரராஜனின் புத்தகங்களை இதுவரை வாசித்ததில்லை, இனி விரைவில் வாசிக்க தொடங்க வேண்டும்

    ReplyDelete
  8. அருமையான விமர்சனம்..!

    ReplyDelete
  9. மிக அருமையாக சுருக்கமாக பகிரப்பட்ட விமர்சனம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. விமரிசனம் நன்றாக எழுதி இருக்கிறீர்கள், ஆதி. இந்திரா சௌந்திரராஜனின் கதைகள் படிக்கும்போது விறுவிறுப்பாக இருக்கும். முடிச்சுக்குமேல் முடிச்சு போட்டுக்கொண்டே போவார். கடைசியில் அவிழ்க்க முடியாமல் எப்படியோ முடித்தால் போதும் என்று முடித்துவிடுகிராரோ என்று தோன்றும். அதுவுமில்லாமல் எல்லா கதைகளும் ஒரே மாதிரி இருக்கிறதோ என்றும் தோன்றும்.
    வார இதழ்களில் வந்திருந்த சில தொடர்கதைகளைப் படித்திருக்கிறேன். அவ்வளவாக என்னை இவரது எழுத்துக்கள் ஈர்த்தது இல்லை.

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள், ஆதி!

    ReplyDelete
  11. நல்ல விமர்சனம். முதன் முதலில் தமிழில் ஸ்ப்ளிட் பெர்சானிலிட்டி பற்றி சொன்னவர் இ.சௌ என்று நினைக்கிறேன் அவரது விடாது கருப்பு தொலைக் காட்சி தொடர் பிரபலமானது. விகடனில் பொன்விழாவில் இவரது படைப்பு பரிசு பெற்றதாக எங்கோ படித்த நினைவு.
    இக் கதயும்தொளைக் காட்சி தொடராக வந்ததோ?

    ReplyDelete
  12. இந்திரா செளந்திரராஜன் கதைகளை நிறையப்படிச்சிருக்கேன். ஆனால் இது படித்தது இல்லை. இப்படி ஒரு சீரியல் வந்ததுனும் தெரியும். அதையும் பார்க்கவில்லை. :))) புத்தகம் கிடைச்சால் படிச்சுப் பார்க்கணும். இப்படி எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. என்னிக்குப் படிப்பேனோ தெரியலை! :))))

    ReplyDelete
  13. இந்த மாதிரி விமரிசனத்திற்கெனத் தனித் தளம் இருப்பதே இன்று தான் தெரியும். :)

    ReplyDelete
  14. விமர்சனம் மிக அருமை. சஸ்பென்ஸை காப்பாற்றி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. இந்த தொடர் டிவி ல வந்தப்ப பார்க்கவில்லை ... டிவி தொடர் பார்ப்பதில் விருப்பம் கிடையாது,,, இதனாலேயே.. சில நல்ல கதைகளும் மிஸ் ஆகிடுது... நூலகத்தில இந்த எழுத்தாளர் புத்தகம் நிறைய இருக்கு.. வாங்கி படிக்கனும்.. பகிர்விற்கு நன்றிகள்!!

    ReplyDelete
  16. இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் நாவலை படித்திருக்கிறேன் ... ஆனால் இந்த நாவல் படித்ததில்லை ... விரைவில் வாய்ப்பு கிடைக்குமென நம்புகிறேன் !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!