Monday, March 17, 2014

வாடிவாசல் - வாழ்க்கையில் தவறவே விடக்கூடாத நாவல்

வாடிவாசல் :

ஒவ்வொருமுறை தமிழகம் பொங்கலை நெருங்கும் போதும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் 'இந்த வருஷம் ஜல்லிக்கட்டு உண்டா இல்லையா' என்பதுவாகத்தான் இருக்கும். ஒரு சாராருக்கு அது வீர விளையாட்டு. இன்னும் சிலருக்கு அது மிருகவதை, இன்னும் சிலருக்கு அது மனிதவதை. தமிழன் கேவலம் தன் வீரத்தை ஒரு மிருகத்திடமா காண்பிக்க வேண்டும்? என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பும் நிலையில் நம்மில் எத்தனை பேர் தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்புடன் காட்டப்படும் ஜல்லிக்கட்டை நிதானமாக பார்த்திருப்போம் என்று தெரியவில்லை. நம்மில் எத்தனை பேருக்கு வாடிவாசல் என்றாலென்ன, திட்டிவாசல் என்றால் என்ன, வாடிவாசல் மைதானம் ஏறுதழுவதலின் போது எப்படியிருக்கும் என்பதெல்லாம் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. 



கதைச்சுருக்கம் 

உசிலனூர் சாட்டில் காரி என்னும் காளை தன் அப்பாவின் உயிரைக் குடிக்க, அப்பன் எடுத்துக்கொண்ட சபதத்தை நிறைவேற்றுவதற்காக காரியை அடக்க உசிலனூர்க்கார்களான பிச்சியும் அவனுக்கு துணையாளாக மருதனும் செல்லாயி சாட்டிற்கு வருகிறார்கள். வந்த இடத்தில் பெயர் தெரியாத பாட்டையா ஒருவன் அறிமுகமாகி நாவல் முழுவதும் பிச்சி மற்றும் மருதனுடன் பயணிக்கிறான். ஜமீன்தாருடைய காளையான காரியை யாருக்கும் தொடக்கூட தைரியம் கிடையாது. முதல் காரணம் காரியின் மீதான பயம் என்றாலும் ஒருவேளை காரியை அடக்கிவிட்டால் ஜமீனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சம் அவர்களை காரியை நெருங்கவிடாமல் தடுக்கிறது. யாரும் அடக்க பயப்படும் காரியை அடக்கியே தீருவது என வந்திருக்கும் பிச்சியிடம் ஜமீன் நேரடியாகவே காரியை தொட்டுவிடுவாயா என்று கேட்கிறார். 'நோக்கம் பாத்ரனும்' என்கிறான் பிச்சி. 

பிச்சி காரியை அடக்க வாடியினுள் குதித்த நொடியில் முருகு என்பவன் மூலமாக காரியை அடக்குவதில் தொல்லை ஏற்படுகிறது. இந்நிலையில் பிச்சியின் தொடை கிழிபட, பிச்சி காரியை அடக்கினானா இல்லையா என்பது தான் வாடிவாசலின் பரபரப்பான இறுதிக்கட்டம்.

நாவல் கட்டமைப்பு :

வெறும் அறுபத்து மூன்று பக்கங்களே இருக்கும் இந்த நாவலில் மிக அதிகமான கதாபாத்திரங்களை இணைக்காமல் மின்னல் வேகத்தில் கதையை நகர்த்தியிருப்பார் சிசு.செல்லப்பா. கதாநாயகன் பிச்சி. அவனுக்கு துணையாள் மருதன். சிறுவயதில் இருந்து ஒவ்வொரு சல்லிக்கட்டையும் விடாது பார்த்துவரும் பாட்டையா. தன் அப்பனின் உயிரைக் குடித்த காரி. இவர்கள் நால்வரும் தான் வாடிவாசலின் மிக முக்கியக் கதாபாத்திரங்கள். இவர்களைத் தவிர்த்து காளையை அடக்குகையில் தொல்லைதரும் முருகுவும், காரியின் சொந்தக்காரன் ஜமீனும்.  

வாடிவாசலுக்கு மாடணைய வருபவர்களால் மாடணைவதின் தந்திரங்கள் அனைத்தையும் அவ்வளவு சுளுவாக அறிந்துகொள்ள முடியாத நிலையில், ஜல்லிகட்டுக்கு காளைகளை அழைத்துவரும் நொடிபொழுதில் ஒவ்வொரு காளையின் உடல் அசைவையும் அதனை அணைவது எப்படி என்பதை கணிக்க வேண்டும். இந்த இடத்தில் தான் பாட்டையாவின் ஜல்லிக்கட்டு அனுபவம் கைகொடுகிறது. தான் தவறாது பார்த்துவரும் ஜல்லிக்கட்டுகள் மூலம் ஒவ்வொரு காளைகளைப் பற்றியும் அதை அணையை வேண்டிய வழிமுறைகளையும் பிச்சிக்கும் மருதனுக்கும் கூறிக்கொண்டே இருக்கிறார்.  

தேர்ந்த தீரமான மாடணைபவர்கள் ஜல்லிக்கட்டுக்கு வரும் அத்தனை மாடுகளையும் அணைவதில்லை. அவரவர் வீரத்திற்கு நிகரான மாடுகளையே அணைகின்றனர். அதேநேரம் பிச்சியும் எடுத்தவுடன் காரியுடன் மோதவில்லை. காரியுடன் மோத பிச்சி ஒருவனுக்கு தான் வீரம் இருக்கிறது என்பதை ஊராருக்கு புரிய வைப்பதற்காக முதலில் பில்லைகாளையுடனும் பின்பு கொராலுடனும் மோதுகிறான். பில்லைகாளை முரடு என்றால் கொரால் தந்திரக்காளை. காரியோ இரண்டும் சேர்ந்தது.         

இறுதியாக திட்டிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும் காரியை அடக்க தயாராகிறான் பிச்சி. மாடணைக்க வந்த இடத்தில் மற்றொரு மாடணைபவனான முருகுவுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு எப்படி கதையின் போக்கை மாற்றுகிறது என்பதை கொஞ்சமும் பரபரப்பு குறையாமல் வளர்த்திருப்பார் சி.சு.செல்லப்பா.

1959-ல் முழுக்கமுழுக்க ஜல்லிகட்டை மட்டுமே மையமாக வைத்து வாடிவாசலை எழுதிய சி.சு.செல்லப்பா அவர்களுக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை தான் செய்தது மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு என்று. வாடிவாசலை நாவல் என்று கூறுவதை விட குறுநாவல் அல்லது ஒரு மிகப்பெரிய கதை என்ற வட்டத்திற்குள் அடைக்கலாம். ஒரு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடிய மின்னல் வேக நாவல்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தவறவே விடக்கூடாத நாவல் வாடிவாசல்.

காலச்சுவடு பதிப்பகம் 
விலை ரூபாய் 60

21 comments:

  1. இதுபோன்ற புத்தகங்கள் மறுபதிப்பில் வருவது பாராட்டத் தக்கது. இந்தக் கதை நான் படித்து 40 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்! பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
  2. விமர்சனமும் விறுவிறுப்பு... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாசகர் கூடம் தளம் - வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

      Link : http://blogintamil.blogspot.in/2014/03/blog-post_18.html

      Delete
  3. அடுத்த முறை சென்னை வரும்போது கொடுத்தனுப்புப்பா.. பதிலுக்கு நான் ரத்தம் ஒரே நிறம் ன்னு ஒரு நாவல் இருக்கு. அத தர்றேன்.. ஹிஹிஹிஹி

    ReplyDelete
  4. நல்ல நாவல்..... இங்கே அதன் அறிமுகம் பார்த்து மகிழ்ச்சி.....

    ReplyDelete
  5. ஆகப்பெரும் நாவலாக மாறச் சந்தர்ப்பமுள்ள, கொஞ்சம் பெரிய சிறுகதை!

    ;-)

    ReplyDelete
  6. புத்தகத்தை பற்றிய இத்தனை விறுவிறுப்பான உங்களது விமர்சனம் அதை உடனே வாங்கி படித்திட வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது

    ReplyDelete
  7. dey antha bookuku promote pandriya.. kadaya solluda?

    ReplyDelete
  8. நல்ல அறிமுகம் தோழர்

    ReplyDelete
  9. என்றோ படித்தது இன்றும் நினைவில் நிற்கிறது எனக்கு. சி.சு.செல்லப்பாவுக்கு அது வாடிவாசல் அல்ல... வாடா வாசல்!

    ReplyDelete
  10. அடடா! நான் மதிப்புரை எழுத வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகம் இது. என்னிடம் இருப்பது மிக மிகப் பழைய புத்தகம். எனது மாமா 1962 வருடம் வாங்கி திரு செல்லப்பா அவர்களிடமே ஆட்டோக்ராப் வாங்கிய புத்தகம்.

    நிச்சயம் எல்லோரும் படிக்க வேண்டிய நாவல். கதாநாயகி இல்லாமல், காதல் இல்லாமல் அற்புதமாக ஒரு பெரிய கதை - நீங்கள் சொல்லியிருப்பதைப் போல!
    ஏற்கனவே படித்திருந்தாலும் வாசகர் கூடத்தில் மதிப்புரை எழுத மறுபடியும் படித்தேன். துளிக்கூட சுவாரஸ்யம் குறையவில்லை.
    பாராட்டுக்கள், சீனு.

    ReplyDelete
  11. ஜல்லிக்கட்டு மக்களுடன் கலந்துள்ளது எனபதற்கு ஜமீந்தாரே உதாரணம். தன் காளையைத்தான் அவன் அடக்க வந்துள்ளான் என்ற போதும், நல்லா பிடி என்று ஊக்குவிப்பதும், அவன் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணுவதும், அவ்விளையாட்டை பெருமைக்காக அல்லாது மனதார விரும்பி, ரசிப்பவனால்தான் முடியும். விளையாட்டு முடிந்ததும் ஜமீனின் பரம்பரை ரத்தம் சுதாரித்து பாய ஆரம்பிக்கின்றது.

    பாட்டையா ஜல்லிக்கட்டை பார்ப்பதன் மூலம் அனைத்து காளைகளையும் அணைந்து கொண்டிருக்கின்றார். யாரும் தவற விடக்கூடாத நாவல்.

    ReplyDelete
  12. இன்னும் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது வாசகர் கூட விமர்சனங்கள்! கட்டாயம் வாங்கிப்படிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  13. அருமையான கதை.. படித்திருக்கிறேன்..விறுவிறுப்பான விமர்சனத்திற்கு பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  14. நல்லதொருநாவலுக்கு நல்லவிமர்சனம்.

    ReplyDelete
  15. இப்படி ஒரு புத்தகத்தை இப்பொழுது தான் கேள்விப்படுகின்றேன். இது போன்ற புத்தகங்களைத் தான் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அற்புதமான விமர்சனம்.

    ReplyDelete
  16. நல்ல விமர்சனம்! புத்தக அறிமுகத்திற்கு நன்றி! உங்கள் மூலம் தான்!

    நன்றி!

    ReplyDelete
  17. விமர்சனம் நாவலை படிக்க தூண்டுகிறது. நிச்சயம் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  18. முன்னர் படித்த நினைவு இருக்கு அருமையான விமர்சனத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  19. பதிவின் மேற்பகுதியில் posted by என்ற பகுதியில் தேதியைப் பதிவிடுவதில்லையே நீங்கள் வெறும் நேரம் மட்டும் தான் தெரிகிறது! இதை சரி செய்யலாமே! (2) வாடிவாசலை அநேகமாக எல்லாருமே மறந்துவிட்டார்கள். இளைய தலைமுறையில் நீங்கள் நினைவில் பதித்திருப்பது தமிழுக்கும் என் பெயர் கொண்ட சி.சு. அவர்களுக்கும் பெருமையாகும்!

    ReplyDelete
  20. வாடிவாசல் அறிந்ததுதான், திட்டிவாசல் இப்போதுதான் கேள்விப்படுகிறேன், புத்தக அறிமுகத்திற்கு நன்றி! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!