Sunday, June 8, 2014
படைப்பாக்கம் : சசிகுமார்
வன உயிரியலாளரும் திரைப்பட ஆராய்ச்சியாளருமான திரு. தியோடார் பாஸ்கரன் எழுதிய இன்னும் பிறக்காத தலைமுறைக்கு எனும் அரிய புத்தகத்தை வாசித்தேன். காட்டுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
முதலில் காட்டுயிர்களை பேண வேண்டிய அவசியம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. உணவு சங்கிலியில் வன விலங்குகளின் பங்களிப்பு மற்றும் அவை அழிக்கப்படுவதால் ஏற்ப்படும் விளைவுகள் பற்றியும் அறிய முடிந்தது. இன்று அழிவின் விளிம்பில் உள்ள சிங்கவால் குரங்கு ,கருமந்தி ,வரையாடு ,வெளிமான் , இருவாசி மற்றும் கானாங்கோழி போன்ற உயிர்களை பற்றியும் அவற்றை அழிவிலிருந்து காக்கவேண்டிய அவசியத்தையும் அறிய முடிந்தது
சாம்பல் தலை ஈப்பிடிப்பன்
வனங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதாலும் , உணவு மற்றும் பிற தேவைக்காக வேட்டையாடப்படுவதாலும் இன்று தமிழகத்தில் சிவிங்கி புலி ,வரகுக் கோழி ,உப்பு நீர் முதலை போன்ற உயிரினங்கள் இருந்த சுவடே தெரியாமல் அழிந்து விட்டன. வேட்டையாடுதல் வீரத்தில் அடையாளமாக கருதப்பட்டதால் அதிகப்படியான அழிவை சந்தித்த புலிகள் பற்றியும் அதன் குணநலன்கள் பற்றியும் உல்லாஸ் கரந்த் கள ஆய்வு செய்து எழுதிய பல அரிய தகவல்களை அறிய முடிந்தது.புலிகளின் எண்ணிக்கையை அதன் கால்தடங்களை வைத்து கணக்கிடுவதால் துல்லியமாக கணிக்க முடியாது என கரந்த்இன் ஆய்வு சொல்கிறது. இன்று புலிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் எத்தனை உயிரோடு இன்னுமும் இருக்கின்றன என்பது தெரியவில்லை . இன்னும் புலிகள் பல்வேறு விதமாக கொல்லப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன .
சிங்கங்களின் நிலை இன்னுமும் பரிதாபகரமானது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் இருந்த சிங்கங்கள் இன்று குஜராத் மாநிலத்தின் கிர் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. ஒருவேளை நோய்தொற்று ஏற்பட்டால் மொத்த சிங்க இனமும் இந்தியாவில் அழிந்தே போய்விடும் அதேபோல் பல்வேறு வகையான காண்டாமிருகங்கள் வாழ்ந்த காடுகளில் இன்று ஒற்றை கொம்பன் காண்டாமிருகம் மட்டும் வாழ்கிறது (அஸ்ஸாம் மாநிலத்தில் காசிரங்கா சரணாலயம் காண்டாமிருகத்துக்கு பெயர்போனது )
அலங்கு
தமிழக சரணாலயங்களில் காணப்படும் பல்வேறு வகையான உயிரினங்கள் பற்றி அறிய முடிந்தது . இந்திய எறும்புதின்னி(Ant Eater ) என அழைக்கப்படும் உயிரினத்தின் பெயர் 'அலங்கு ' என்பதை அறிய முடிந்தது . மேலும் டால்பினின் தமிழ் பெயர் ஓங்கில் என்றும் தெரிந்து கொண்டேன் தமிழகத்தில் கிராமப்புற மக்களிடம் இருந்த உயிரினங்கள் சார்ந்த அறிவு சரியாக பதியப்படவில்லை. இதனால் நம் பாரம்பரிய உயிரினங்களின் பெயர்கள் மற்றும் அது சார்ந்த தகவல்கள் கிடைக்க பெறாமல் போய்விட்டது . தமிழில் உயிரியல் துறைசார்ந்த வார்த்தைகள் உருவாக்கப்படாததால் பல அரிய நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில்லை. மேலும் நம்மிடம் முறையான வகைப்பாட்டியல் (Taxonomy ) இல்லாததால் உயினங்களை இன ரீதியாக புரிந்து கொள்ள முடிவதில்லை போன்ற பல்வேறு இடர்ப்பாடுகளையும் பாஸ்கரன் தெளிவாக கூறுகிறார் தமிழகத்தில் வனஉயிரியல் குறித்து கள ஆய்வு செய்பவர்கள் பற்றியும் அரிய முடிகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் பல்வேறு வகையான ஆமைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பற்றி அறிய முடிந்தது . மேலும் இரலை ,கானமயில் போன்ற பல உயிரினங்களை அரிய முடிந்தது.
இருவாசி
சுற்றுசூழியல் என்பது வன உயிரினங்களின் வாழ்க்கையை பெருமளவு பாதிக்கிறது. இன்றைய காடுகள் அழிப்பு தான் யானைகள் விளைநிலங்களை நாசப்படுத்துவதர்க்கும் மற்ற உயிரினங்கள் உணவு தேடி ஊருக்குள் புகவும் காரணமாகிறது . தமிழகத்தில் மலைபகுதிகளில் காணப்பட்ட அலையாத்தி காடுகள்(மாங்குரோவ் காடுகள் ) அழிக்கப்பட்டதன் காரணமாக மழைநீர் பிடிப்பு குறைந்து, இன்று ஆறுகளும் ஓடைகளும் வெற்று மணலுடன் காட்சி அளிக்கின்றன.சுற்றுசூழியல் சமன்பாடு நிலைபெற நாட்டில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் வேண்டும். ஆனால் நம் நாட்டில் இப்பொழுது இருப்பது வெறும் 17% காடுகள் தான்.
காடுகள் அழிப்பை வெள்ளையர்கள் தங்கள் நாட்டின் தேவைக்காக துவங்கி வைத்தனர். விடுதலை அடைந்த பின்னரும் காடுகள் அழிப்பு பெருமளவில் நடைபெற்றது . பெரிய கட்டிடங்கள் கட்டவும் காகித தொழிற்சாலைகள் அமைக்க ,தேயிலை தோட்டங்கள் அமைக்க என பல்வேறு விதங்களில் காடுகள் அழிக்கப்பட்டன பசுமை மாறா காடுகள் மற்றும் அலையாத்தி காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டு இன்று மிக குறைந்த அளவில் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டில் காட்டுயிர் குறித்த விழிப்புணர்வும் ,காட்டுயிர் குறித்த அக்கறையில் ஊடகங்களின் பங்கும் மிக சொற்பம் .மரம் வளர்ப்பு எனும் பெயரில் தோல் பதனிடும் தொழிற்சாலைக்காக நடப்படும் சீகை மரங்களும் செயற்கை நூலிழைக்காக நடப்படும் தைல மரங்களும் சுற்றுசூழலை பாதிப்பதோடு மற்ற மரங்களின் வளர்ச்சியையும் தடுக்கின்றன வேட்டையாடிகளால் புனையப்பட்ட வேட்டை இலக்கியம் எனும் வாசிப்பையும் தெரிந்து கொள்ள முடிந்தது . இந்தியாவில் ஜிம் கார்பெட் எனும் ஆங்கிலேயர் தான் வேட்டை இலக்கியத்தின் தந்தையாக போற்றப்படுகிறார் . இந்தியாவில் அவர் கொன்று குவித்த மிருகங்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவரது நூல்கள் இங்கிலாந்தில் பெரிய வரவேற்ப்பை பெற்றவையாம்.
கடைசி பகுதி இந்திய காட்டுயிர் ஆய்வு மற்றும் களப்பணி செய்து தங்கள்
பங்களிப்பை கொடுத்தவர்கள் பற்றி இருந்தது அதில் ஆலன் அக்டேவியன் ஹியும் (இந்த பேரு எங்கயோ கேட்ட மாறி இருக்க ?? யோசிச்சு சொல்லுங்க பாப்போம் ) இந்திய வரலாற்றில் முக்கியமானவர் என தெரியும் ஆனால் இந்திய காட்டுயிர் ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. இந்தியா முழுவதும் சுற்றுபயணம் செய்து பல்வேறு உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் பற்றிய அரிய செய்திகளை உலகிற்கு சொன்னவர்
வேட்டையாடிகளால் உயிரினங்கள் அறியப்பட்ட காலகட்டத்தில் வேட்டையாடுதலை எதிர்த்து களப்பணி மூலம் பல்வேறு வகையான உயிரினங்கள் பற்றி சொன்னவர் திரு மா. கிருஷ்ணன் . இந்திய வனவியல் ஆராய்ச்சியின் முன்னோடியாக கருதப்படுகிறார் அருள்தந்தை பி.கே. மாத்யூ அவர்களின் பங்கு மகத்தானது . பல்வேறு வகையான உயிரினங்கள் மற்றும் தாவரங்களை வகைப்படுத்தி அதன் தமிழ் மூலப்பெயர்கள் குறித்தும் உரிய வகையில் ஆய்வு செய்து இன்னும் பிறக்காத தலைமுறைக்கு பல தகவல்களை விட்டு சென்றவர்.
மிகச்சிறந்த புத்தகம் . பொதுவாக கதை படிக்கும் போது வரும் ஒரு ஆர்வம் கட்டுரை சார்ந்த நூல்களில் வராது . ஆனால் படித்த இரு தினங்களும் ஒரு அபரிவிதமான ஆர்வத்தை ஏற்ப்படுத்திவிட்டது. சமீப காலத்தில் நான் படித்ததில் மிக சிறந்த புத்தகம்
நூல் : இன்னும் பிறக்காத தலைமுறைக்கு
வகை : காட்டுயிர் மற்றும் சுற்றுசூழியல் சார்ந்த கட்டுரைகள்
ஆசிரியர் : தியோடார் பாஸ்கரன்
பதிப்பகம் : உயிர்மை விலை : 120
நன்றி வணக்கம்
வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!
Subscribe to:
Post Comments (Atom)
பொருத்தமான பெயர்.. நல்ல புத்தகத்துக்கு அருமையான விமர்சனம். உயிர்மை பதிப்பகமா? அதுதான் வயிற்றை கலக்க வைக்கிறது.. :)
ReplyDeleteகாடுகள் அழிப்பு பற்றியும், விலங்குகள் பற்றிப் புதிய செய்திகளுமாக சுவாரஸ்யமான புத்தகமாக இருக்கும் போலருக்கே... ஆவிகு ஏற்பட் அதே பீதிதான் எனக்கும்..!
ReplyDeleteகுறித்துக் கொள்ள வேண்டியது தான் ... அடுத்த முறை வாய்ப்பு கிட்டுகையில் வாங்கி வாசித்து விடலாம் ...
ReplyDeleteசிறப்பான புத்தக அறிமுகம். குறித்து வைத்துக் கொண்டேன். ..
ReplyDeleteதியோடார் பாஸ்கரன் இயற்கை ஆர்வலர். அதைப் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்துபவர்....பல கட்டுரைகள் எழுதியுள்ளார். மிக அருமையான புத்தகமாகிய இந்தப் புத்தகம் வந்துள்ளது பற்றி அறிந்தோம்.....இப்போது அதன் உள்ளடக்கம் பற்றியும் .....மிக்க நன்றி! வாங்கிட்லாம்...
ReplyDeleteவன விலங்குகளை பற்றிய கட்டுரை என்பதால் கண்டிப்பாக போற்றி பாதுகாக்க வேண்டிய நூல்தான் ... அடுத்த தலைமுறைக்கும் பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டிய செய்தி ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete