Monday, June 2, 2014

உருமாற்றம் - பிரான்ஸ் காப்கா

படைப்பாக்கம் : டினேஷ்சாந்த்

“நல்ல நூல்கள் நல்ல நண்பர்களுக்கு ஒப்பானவை” என்பார்கள்.உண்மை தான் நல்ல நூல்கள் சுகமான வாசிப்பனுபவத்தைத் தருவதுடன் நாம் அவற்றுடன் செலவழித்த ஒவ்வொரு மணித்துளிக்கும் அர்த்தம் தந்து எம்மை மகிழ்விக்கின்றன. அந்த வகையில் எனக்கு நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தந்த “உருமாற்றம்” என்ற நூலைப் பற்றிய எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.   


   
சில நேரங்களில் காலத்தின் கட்டாயத்தாலோ இல்லை வேறு சில நிர்ப்பந்தங்களாலோ எம் விருப்பத்துக்கு மாறாக செயற்படவேண்டிய ஒருநிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்.எதுவும் செய்ய முடியாத அந்த நிலையில் நாம் ஒரு தத்தி போல் உணர்ந்திருப்போம் அல்லவா? ஆனால் இந்நூலிலோ கதாநாயகனான கிரகர் சேம்சா உண்மையிலேயே அருவருக்கத்தக்க ஒரு பூச்சியாக மாறிவிடுகின்றான்.சேம்சா பூச்சியாக மாறிய பின்னர் அவனது வீட்டில் நடக்கும் சம்பவங்களைத் அவனால் அவனது குடும்பத்தார் படும் கஷ்டங்களையும் சிறப்பாக எடுத்துக் காட்டியிருந்தார் காப்கா.பூச்சியாக மாறிய பின்னர் கிரகர் சேம்சா அனுபவிக்கும் கஷ்டங்களையும் இதன் காரணமாக அவனும் அவனது குடும்பத்தாரும் எதிர்நோக்கும் பிரச்சனைகளை யதார்த்தமான முறையில் நாவலூடாக வெளிப்படுத்துகின்றார் பிரான்ஸ் காப்கா.

உண்மையில் இந்நாவலில் வரும் பூச்சி என்பது ஓர் குறியீடே ஆகும்.தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக பிறரில் தங்கி வாழும் ஒருவரை குறிப்பதாகவே இந்த "பூச்சி" கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் குடும்ப நிலையை எண்ணியே அதிகம் கவலைப்படும் சேம்சாவின் எண்ணங்களை அவன் வாழ்வின் தனிமையும் வெறுமையும் எப்படி மாற்றியமைக்கின்றது என்பதையும் அவன் மீதான குடும்பத்தினரின் அக்கறை குறிப்பாக அவனது தங்கையின் அக்கறை காலத்தோடு மாற்றமடையும் விதத்தையும் காப்கா மிக அழகாக எடுத்துக்காட்டியிருந்தார்.குறிப்பாக நாவலின் முதல் அத்தியாயத்தில் கதவைத் திறப்பதற்கு முதல் சேம்சாவின் எண்ண ஓட்டங்களையும் கதவைத் திறப்பதற்கு அவன் படும் கஷ்டங்களையும் விவரித்த விதம் கலக்கல்.பூச்சி என்ற ஒரு குறியீட்டினூடாக மனித வாழ்வின் ஒரு படிநிலையை,அப் படிநிலையின்  உண்மையான முகத்தை மிகைப்படுத்தலின்றி எமக்கு எடுத்துக்காட்டுகின்றது இந்த “உருமாற்றம்” நாவல்.  
   
கொஞ்சம் சுவாரசியம் குறைந்த நாவலாக இருப்பினும் கதை சொல்லப்பட்ட விதமும் அதனுள் பொதிந்து கிடக்கும் கருத்துகளுக்காகவும் பொட்டில் அறைந்தது போல் சொல்லப்படும் சில உண்மைகளுக்காகவும் இந்த நாவலை இன்னொருமுறை வாசித்தால் என்ன என்றே எனக்கு தோன்றுகின்றது. நாவலின் ஜீவனைச் சிதைக்காமல் மொழிபெயர்த்தமைக்கு மொழிபெயர்ப்பாளர் சிவகுமாரை பாராட்டலாம்.இலக்கிய ரசிகர்களுக்கு இந்நாவல் ஒரு நல்விருந்தாக அமையும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.நாவலை வாசிப்பவர்கள் நாவலுடன் இணைக்கப்பட்டுள்ள பிரம்மராஜனின் “பிரான்ஸ் காப்கா-ஒரு அறிமுகம்” மற்றும் க.நா.சு அவர்கள் எழுதிய “காப்காவும் ஒரு தமிழ் எழுத்தாளரும்” ஆகிய கட்டுரைகளையும் வாசிக்கத் தவறாதீர்கள்.   
  
எனது ரேட்டிங் 4.5/5

6 comments:

  1. இதற்கு 4.5 ரேட்டிங் கொடுத்திருப்பதிலிருந்து இதன் முக்கியத்துவம் புரிகிறது.. வாய்ப்பு கிடைக்கையில் படிக்கிறேன்..

    ReplyDelete
  2. நம்ம ஊர்ல பட்டுக்கோட்டை பிரபாகர்னு பேர் வெச்சுக்கிட்ட மாதிரி பிரான்ஸ்ல பிறந்த காப்கா போல.... சுவாரஸ்யமான நாவல்னு சொல்லிட்டீங்க.... படிக்க முயற்சிக்கறேன். ஆன்லைன்ல படிக்க விரும்பறவங்களுக்கு இன்னொரு தளத்துல லிங்க் இருக்குது. இங்கே செல்லவும்...

    http://wordsofpriya.blogspot.com/2013/11/mettamorphism.html

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லையே அண்ணா... என் பதிவும் இவ்வளவு தூரம் நியாபகத்திலா? ஆச்சர்யப் படுத்துகிறீர்கள்....

      Delete
  3. மிகவும் அருமையான நாவல்... நானும் இது குறித்து ஒரு பதிவு எழுதி உள்ளேன்... நான் அனுமானித்த வரை இக்கதையின் நாயகனூடே காப்கா தன்னிலைக் குறித்தே விவரித்ததாக தோன்றுகிறது... அவரது வாழ்வு குறித்தும் அறிகையில் இந்த எண்ணம் எழுந்தது...

    ReplyDelete
  4. நல்ல புத்தகம் என்று தெரிகிறது.... வாசிக்க முயல்கிறேன் டினேஷ்....

    ReplyDelete
  5. “ஒரே ஒரு நல்ல நூல் ... நல்ல நண்பர்கள் 100 பேருக்கு சமம்" >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!