Tuesday, June 17, 2014

புறாக்கள் மறைந்த இரவு - பழநி பாரதி


பேஸ் புக்கின் மூலமாக அனைவரும் கவிஞர்களாக உருமாறி வரும் வேளையில் ஒரு நல்ல கவிதை நூலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். சிறந்த படைப்பாளியும், திரைப்பட பாடல் ஆசிரியருமான திரு. பழநி பாரதி அவர்களின் "புறாக்கள் மறைந்த இரவு" எனும் கவிதை தொகுப்பில் புதைந்திருக்கும் அழுத்தமான, ஆவேசமான சமூக கோபத்தை நூலை வாசிக்கையில் நீங்களும் உணரலாம்!



மாய கோவ்ஸ்கி அவர்களின் சிறந்த கருத்தோடு முதல் பக்கம் வரவேற்கிறது, 

"அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் 
அப்போது சாவுமங்கே அழிந்து போகும் 
மிச்சத்தைப் பின் சொல்வேன்"  என்று இரண்டாம் பக்கத்தில் முண்டாசு கவிஞன் நம்மை மிரட்டலுடன் வரவேற்கிறார்!

கீழ்த தட்டு மக்களின் நியாயமான கோபங்களில் தொடங்கி, சுனாமியின் நீ(ள)ல நாக்கையும், கோத்ரா படுகொலையையும், ஈராக் மக்களின் அவல வாழ்வையும் நடு மண்டையில் இறக்குகிறார் எழுத்தாணி கொண்டு. 

"உருகிய தார்ச்சாலையில் 
பதிந்து கிடக்கிறது 
தலைச் சுமையைத் 
தாங்க முடியாமல் நடந்த 
யாரோ ஒருத்தியின் 
பாதச் சுவடு"

இப்படி வெயிலை பற்றி எழுதியிருக்கும் எட்டுக் கவிதைகளும் நம்மை சுய பரிசோதனை செய்ய வைக்கும் வல்லமையை தாங்கி நிற்கிறது!

"வெளியிலிருந்து 
வந்த கிளியை 
வீட்டுக்குள் 
வளர்க்கத் தொடங்கினோம்

அது எங்கள் மொழியைப் 
பேசுவது 
இனியமையாக இருந்தாலும் 
வருத்தம் தான் 
தாய் மொழியை மறந்தது"


"குழந்தை இல்லாதவளின் 
இரவை 
மேலும் இருட்டாக்குகிறது 
நடுநிசிப் பூனைகளின் 
குழந்தைக் குரல்"

இப்படி சின்ன சின்ன கவிதைகள் சொல்லும் வலிகளும், வாழ்க்கையின் இரணங்களும் ஏராளமாக இருக்கிறது. புத்தகத்தை திறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக வாசித்து முடித்துவிடலாம். ஆனால் இப்புத்தகம் தரும் சுமையை இறக்கி வைப்பது என்பது கடினம் தான், அந்த அளவுக்கு அழுத்தமான கருத்துக்கள் நிரம்பிய இந்த "புறாக்கள் மறைந்த இரவை" வாய்ப்பு கிடைக்கும் போது வாங்கி வாசித்து விடுங்கள்.

குமரன் பதிப்பகம் 
19, கண்ணதாசன் தெரு, தி. நகர் ,
சென்னை - 17. 
இரண்டாம் பதிப்பு : 2008 டிசம்பர் 

பக்கங்கள் - 72
விலை : ரூ. 50/-

படைப்பாக்கம்: அரசன் 
http://karaiseraaalai.blogspot.in/

  

10 comments:

  1. அறிமுகத்திற்கு நன்றி..காதல் கடந்து வரும் கவிதைகளை இன்னும் வரவேற்க வேண்டும்

    ReplyDelete
  2. அருமையான நூல் அறிமுகம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. பழனிபாரதி ரசிக்கவும் பாராட்டவும் பட வேண்டிய படைப்பாளி...

    ReplyDelete
  4. பழனி பாரதியின் கவிதைகள் ரசிக்கக் கூடியவை.

    ReplyDelete
  5. எடுத்துக் காட்டியிருக்கும் கவிதகள் புத்தகத்தை படிக்கும் ஆவல் தந்தது.... அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  6. நல்ல அறிமுகம் எடுத்துக் காட்டியிருக்கும் கவிதைகள் அத்தனையும் அழகு....

    ReplyDelete
  7. மரபு சாராக் கவிதைகள் பல நடை போடுகின்றன எனினும்
    ஒளிருவது சிலவே.

    காரணம் கருப்பொருள்.

    பஞ்சு போல் மென்மை சில.
    பாய்ந்து வரும் புலி சில.
    மாய்ந்து மாய்ந்து எழுதிய
    மரபிலோ மோனை இருக்கிறது.
    சந்தம் இருக்கிறது. எனினும்
    நம்முடனே
    பந்தம் இல்லை.

    பழனி பாரதியின்
    புதுக்கவிதைகள்
    அஞ்சும்
    பஞ்சாமிர்தம்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  8. அடையாளப்படுத்திய கவிதை வரிகள் அனைத்துமே ஆழமாய் சிந்திக்க வைப்பவை..நன்றி..

    ReplyDelete
  9. அடையாளப்படுத்திய கவிதை வரிகள் அனைத்துமே ஆழமாய் சிந்திக்க வைப்பவை..நன்றி..

    ReplyDelete
  10. இப்போதெல்லாம் திரைப்பட பாடல்களில் பழனிபாரதியை பார்க்க முடியவில்லையே ... மனுஷன் அங்கிட்டு உட்கார்ந்து என்னா பண்ணுறாரு .. ம் .. ம் .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!