Wednesday, June 11, 2014
படைப்பாக்கம் : கீதா சாம்பசிவம்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திரு நல்லபெருமாளின் நாவல்கள்
அநேகமாய்ப் படித்திருக்கிறேன். இவற்றிலே 'போராட்டங்கள்' நாவலும்,
'கல்லுக்குள் ஈரம்' நாவலும் மிகவும் பெயர் பெற்றவை. போராட்டங்கள்
கம்யூனிஸ்ட்கள் குறித்த ஒரு அலசல் என்றால் கல்லுக்குள் ஈரம் சுதந்திரப்
போராட்ட நிகழ்வுகள் குறித்த ஒரு கதை. இது அறுபதுகளில் கல்கி வெள்ளிவிழா
நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருந்தது. முதல் பரிசுக்கே தகுதி
வாய்ந்தது தான் என்றாலும் இரண்டாம் பரிசு தான் கொடுத்திருந்தார்கள்.
மூன்றாம் பரிசு மணக்கோலம் என்னும் பிவிஆர் நாவலுக்குக் கிடைத்திருந்தது.
முதல் பரிசு உமாசந்திரனின் முள்ளும் மலரும் கதைக்குக் கிடைத்திருந்தது.
வேடிக்கை என்னவெனில் மூன்றிலுமே கதாநாயகி தான் தியாகங்கள் செய்திருப்பாள்.
இந்த நாவல் சுதந்திரப்போராட்ட வீரனான ரங்கமணி என்னும்
இளைஞனைக் குறித்தது. அவன் தந்தையை வெள்ளையர்கள் ரங்கமணியின் கண்ணெதிரேயே
அடித்துக் கொல்கின்றனர். அதைப்பார்க்கும் ரங்கமணியின் இதயம் கல்லாக மாறி
விடுகிறது. வ.உ.சி.யின் நெருங்கிய நண்பராக இருந்த ரங்கமணியின் தந்தை
கொல்லப்பட்டதும் பழிவாங்க வேண்டும் என்னும் வெறி அவனிடம் அதிகமாக ஆகிறது.
சிறுவனான அவன் மனதை மாற்ற குடும்ப நண்பர் தீக்ஷிதர் காந்தியிடம் அழைத்துச்
செல்கிறார். ஆனாலும் ரங்கமணி மனம் மாறவில்லை. காந்தி அவனுக்குப்
பரிசாகக் கொடுத்த ஏசுபிரான் சிலுவையில் இருக்கும் விக்ரஹத்தை மட்டும்
தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறான். சட்டக்கல்லூரியில் படித்துக்
கொண்டிருந்த ரங்கமணி விடுதலைப்போரில் தீவிரமாகக் கலந்து கொள்ள வேண்டி
படிப்பை விட்டுவிட்டு தீவிரவாதக் கும்பலில் சேர்கிறான். ரங்கமணியின்
கல்லான இதயத்தில் எப்படி ஈரம் கசிந்தது என்பதே கதை.
ஏற்கெனவே தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்கத்
துடித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்தக் கும்பலின் சதிவேலைகள் ஆறுதலைத்
தந்தன. ஆனால் யார் தலைமையில் அவன் இந்தக் கும்பலின் உறுப்பினராக ஆனானோ
அந்தத் தலைவரின் மகள் ஒரு அஹிம்சாவாதி. திரிவேணி என்னும் பெயருள்ள அந்தப்
பெண் சத்தியாகிரகியும் கூட. அவள் பேச்சுக்குத் திருநெல்வேலியே
கட்டுப்படும். போலீஸாரைக் கூடத் தன் அஹிம்சாப் பேச்சால் தன் வயப்படுத்தி
இருந்த திரிவேணி, ரங்கமணியிடம் மட்டும் தோற்றுத் தான் போனாள். அவனுள் ஏதோ
இனம் புரியாத சோகமும், தீவிரவாதப் பற்றையும் கண்டு அவனை காந்தியைச்
சந்திக்கும்படி வற்புறுத்துகிறாள். ஆனால் ரங்கமணிக்கோ தன் மேலேயே
சந்தேகம். திரிவேணியின் அஹிம்சாவாதம் எங்கே தன்னையும் மாற்றிவிடுமோ எனக்
கலங்குகிறான். மெல்ல மெல்ல திரிவேணி அவனை ஈர்க்கிறாள். ஆனால் ரங்கமணியின்
மனமோ!!! ஏற்கெனவே காதலில் ஈடுபட்டு அதில் தோல்வி கண்டு, பிரிவு ஏற்பட்டு
மீண்டும் காதலியைக் காணமாட்டோமா என ஏங்கும் ரங்கமணி. ஆனால் இப்போதோ
காதலியை நினைக்கையிலேயே திரிவேணியும் கூடவே வருகிறாள். ஏற்கெனவே
அஹிம்சாவாதத்திலும், தீவிரவாதத்திலும் சிக்கிக் கொண்டு தவிக்கும்
ரங்கமணிக்கு இந்தப் போராட்டமும் புதுமையாக இருக்கிறது. தன் காதலியை விட
திரிவேணி தன் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டதை உணர்கிறான்.
கதையில் வரும் கமலவாசகியின் திமிரும்,
ஆங்காரமும், பழி வாங்கும் உணர்ச்சியும் திகைக்க வைத்தாலும் போகப் போகக்
காரணம் புரிகிறது. ஆனாலும் அவள் பழிவாங்கும் உணர்வு கடைசி வரை அடங்கவே
இல்லை.. ஒரு உயிர் போயும் அதிலும் மகிழ்ச்சியைக் காட்டுபவள் பின்னர் மனம்
மாறுகிறாள். இந்தக் கமலவாசகி யார் என்பதைத் தெரிந்தால் நமக்கும் அதிர்ச்சி
ஏற்படுகிறது. இவளால் ரங்கமணியின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் அவனைத்
தீவிரவாதத்தில் இருந்து சிறிதும் விலக்கவில்லை. திரிவேணியின் தியாகமே அவனை
மனம் மாற வைக்கிறது. திரிவேணியின் அஹிம்சாவாதத்தில் உள்ளூர மனம்
ஈர்க்கப்பட்ட ரங்கமணி தீவிரவாதத்துக்கும், அஹிம்சாவாதத்துக்கும் இடையில்
போராடுகிறான்.
காந்தியைச் சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவ
விடுகிறான். கடைசியில் மனம்மாறி காந்தியைச் சந்திக்கச் சென்றபோது அதுவே
கடைசி சந்திப்பாக ஆகிறது. ரங்கமணியின் கண்ணெதிரே காந்தி சுடப்படுகிறார்.
காந்தி சிறுவயதில் தனக்கு அளித்த சிலுவை விக்ரஹத்தைக் கையில் வைத்திருந்த
ரங்கமணி காந்தியைத் தாங்கும்போது அந்தச் சிலுவையும் ரத்தத்தால்
குளிப்பாட்டப்படுகிறது. கல்லான ரங்கமணியின் இதயமும் நெகிழ்ந்து மெல்ல
மெல்ல ஈரத்தைக் கசிய விடுகிறது.
கிட்டத்தட்ட 720 பக்கங்கள்! கையில் எடுத்தால் கீழே
வைக்க மனம் வராது. ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மீண்டும் படிக்கையில் கூட
ஒவ்வொரு சமயமும் புதுப்புது உணர்வுகள். சுதந்திரப் போராட்ட வரலாற்றை
வரலாற்றில் இடம் பெற்ற மனிதர்களும் நடமாடிய காலத்தோடு பின்னிப் பிணைந்து
எழுதுவது கடினம். ர.சு.நல்லபெருமாள் அதைச் சாதித்திருக்கிறார்.
சுதந்திரப் போராட்டம் குறித்து அதிகம் அறியாத இன்றைய இளைஞர்கள் அவசியம்
படிக்க வேண்டிய நூல். முதல் பதிப்பு கதை வெளிவந்த சில ஆண்டுகளீலேயே 1969
ஆம் ஆண்டே வந்திருக்கிறது. என்னிடம் இருப்பது ஐந்தாம் பதிப்பு 2005 ஆம்
ஆண்டு வந்தது.
வானதி பதிப்பகம் வெளியிடு.
விலை 230ரூபாய் (2005-ஆம் ஆண்டில்)
Subscribe to:
Post Comments (Atom)
தொடராக வருகையிலேயே
ReplyDeleteநான் விரும்பிப் படித்த நாவல்
அற்புதமாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.
Deleteகல்கியில் தொடர்கதையாக வந்தபோது என் அப்பா ரசித்துப் படித்து பைண்ட் செய்து வைத்திருந்தார். பின்னாளில் சிலமுறை படித்து ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் கிஞ்சித்தும் போரடிக்காமல், நல்ல கருத்துக்களை சத்தமின்றி திரிவேணி போல அமைதியாக நம்முள் விதைத்துச் செல்லும் வித்தக எழுத்து ர,சு,நல்லபெருமாளுடையது. அவசியம் படிக்க வேண்டிய வகை புத்தகம்தான் இது.
ReplyDeleteநன்றி பால கணேஷ், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் வரிசையில் எத்தனை முறை படித்தாலும் அலுக்காத புத்தகம் இது. (என்னைப் பொறுத்தவரை) :)))))
Deleteநான் படித்ததில்லை.. அடுத்த முறை சென்னை செல்லும் போது வாத்தியாரிடம் "ஆட்டைய" போட்டுட வேண்டியது தான்..! ;-)
ReplyDeleteஹிஹிஹி, உங்க ட்ரேட் மார்க் புன்னகையைச் சிந்துங்க, பயந்துண்டு கொடுத்துடுவார். :)))) உங்க பின்னூட்டத்தை இப்போத் தான் பார்த்தேன். :0)
Deleteபடித்ததில்லை. மிஸ் செய்து விட்டேனோ!
ReplyDeleteமுதல் பரிசு கதை 'முள்ளும் மலரும்' அற்புதமான கதை. மூன்றாம் பரிசான பி வி ஆர் கதை பற்றி அறிய ஆவல். பி வி ஆர் குமுதம் தவிர்த்து வெளியிலும் எழுதியுள்ளாரா? எனக்கு அவர் எழுத்துகள் பிடிக்கும்.
முள்ளும் மலரும் படிச்சிருந்தால் இதுவும் படிச்சிருக்கணுமே! :)))) மணக்கோலம் மூன்றில் என்னைக் கவர்ந்த கதை. ஜானா என்னும் பெண் தான் கதாநாயகி. அருமையான முடிவு!
Deleteஇன்னொண்ணு மறந்துட்டேனே, முள்ளும் மலரும் சினிமாவுக்காகக் கதையை மாத்தி இருந்தாங்க. கதையில் வேறே மாதிரி, சினிமாவில் வேறே மாதிரினு இருந்தது. என்றாலும் படம் வெற்றி பெற்றது ரஜினியால்னு நினைக்கிறேன். :)))
Deleteபி.வி.ஆர், "சென்ட்ரல் " என்ற பெயரில் கல்கியில் ஒரு தொடர்கதை எழுதி இருந்தார். தெரியுமா? கல்கியில் நிறையவே எழுதி இருக்கார். சாவி ஆசிரியராக இருந்தப்போ தினமணி கதிரிலும் நிறைய எழுதி இருக்கார். அந்த தினமணி கதிரில் ஶ்ரீவேணுகோபாலன் நீ -- நான் --நிலா னு ஒரு தொடர்கதை உருகி உருகி எழுதி இருந்தார். அப்புறமா ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது. ஹிஹிஹி, எங்கேயோ போயிட்டேன்! :)
Deleteநீ நான் நிலா ராணிமுததுவில் படித்திருக்கிறேன். கதையின் கடைசி வரி நீ நான் நிலா - தேன் பால் பலா என்று முடியும். ஊ.க.சி படமாக வந்தது தெரியும்.படித்ததில்லை. மு.ம. கூட அப்படித்தான்!
Deleteராணி முத்துவில் வருவது/வந்தது எல்லாம் கதைச் சுருக்கம் தான். நிறையவே வெட்டி இருப்பாங்க. ஒரிஜினலாப் படிக்கணும்.:))))
Deleteகதைச் சுருக்கம் ஈர்க்கிறது.
ReplyDelete720 பக்கங்களா.. கொஞ்சம் பயமாக. இருக்கிறது.
படிச்சுடலாம், ஒண்ணும் கஷ்டமில்லை. தமிழில் தானே இருக்கு! இரண்டு நாட்கள் ஆகின்றன. :))))
Deleteசரிதான்!
Deleteஇந்தக் கதை திரைப்படமாக வந்ததா?
ReplyDeleteஅப்பாதுரை, உலகநாயகர் இதைக் காப்பி, பேஸ்ட் செய்திருக்கார்னு கேள்விப் பட்டேன். இதற்கு ர.சு.நல்லபெருமாள் அவர்களே(உயிருடன் இருந்தப்போ) குமுறிட்டார். ஆனாலும் உலகநாயகர் அதை எல்லாம் அவ்வளவு லேசில் ஒத்துக்கலை. உலகநாயகராச்சே. காப்பி அடிப்பது அவர் பிறப்புரிமை! :(
Deleteஇரண்டு நாட்களில் 720 பக்கங்களா... மற்ற வேலைகள்? :)))))
Deleteஉலக நாயகர் இதை எதில் காபி அடித்தார்? ஐ மீன் என்ன படத்தில்?
மருதநாயகம் கூட வேறு கதையாச்சே...!
Deleteம்ம்ம்ம்ம்ம்???"ஹேராம்" அல்லது "ஶ்ரீராம்?" தெரியலை. நான் உலக நாயகர் படங்களின் விமரிசனங்களைக் கூடப் படிக்கிறதில்லை. சிதம்பர ரகசியம் தொடர் எழுதுகையில் தான் அவரோட தசாவதாரம் படம் வந்து என்னோட பதிவில் அவரோட ரசிகர்களும் பெருமாளின் பக்தர்களுமாக கோவிந்தராஜப் பெருமாளை நானே தூக்கிக் கடலில் போட்டமாதிரி குற்றப்பத்திரிகை! :)))))))
DeleteOh... ஹே ராம் படமாக இருக்கலாம். அதில்தான் காந்தி மீது கோபம் கொண்டு செல்லும் (உலக) நாயகன் கடைசியில் மனம் மாறுவான். வகுப்புக் கலவரம் மெய்ன் சப்ஜெக்ட்.
Deleteநாயக்கர் உருட்டாத உலக்கையா? அம்பது வருஷமா மனசுல இருந்துச்சுனு வேறே சொல்லியிருப்பாரே?
Deleteஅவரோட எல்லாப் படங்களுமே காப்பி, பேஸ்ட் தான். ஆனாலும் எங்கே ஒத்துண்டிருக்கார்! :(
Delete//இரண்டு நாட்களில் 720 பக்கங்களா... மற்ற வேலைகள்? :)))))//
ReplyDeleteஇதுக்கு பதில் கொடுத்திருந்தேன். அதுக்குள்ளே இணையம் போயிட்டுப் போயிட்டு வந்ததில் காக்கா ஊஷ் ஆயிடுச்சு போல! :)
வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு மத்தியானமாய்த் தான் படிப்பேன். ஒன்றரை அல்லது இரண்டிலிருந்து நாலு, நாலரை வரைக்கும் தொடர்ச்சியாகப் படிப்பேன். அப்புறமா வேலைகளை முடித்துக்கொண்டு ஆறிலிருந்து ஏழு வரை. அஃப் கோர்ஸ், விளக்கேற்றி வைச்சுட்டு, சாயந்திரச் சாப்பாடுக்கான ஏற்பாடுகளை எல்லாம் பண்ணிட்டுத் தான். :)
Deleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதலில் இதைக் கவனிக்கலை! :)))))
நானும் படித்திருக்கிறேன்.... சுவாரசியமான கதை. மீண்டும் படிக்க வேண்டும் - நூலகத்தில் இருக்கிறதா பார்க்க வேண்டும்...
ReplyDeleteகல்லுக்குள் ஈரம் - மிக அருமையான புத்தகம். வாலிப வயதில் படித்தது. விலைக்கு வாங்கலாம் என்றால் கிடைக்கவில்லை. யாராவது உதவமுடிந்தால், ம்கிழ்ச்சி!
ReplyDeleteஹிஹிஹி, வாங்க செல்வம், நான் ஓசியிலே தான் வாங்கிப் படிச்சேன். அது மாதிரி யாரானும் தராங்களானு பாருங்க! :)
Deleteமன்னிக்கவும். நான் அதனை சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகின்றேன். பழைய புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை.தயவு செய்து உதவி செய்யுங்கள்.
Deleteமன்னிக்கவும். நான் அதனை சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகின்றேன். பழைய புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை.தயவு செய்து உதவி செய்யுங்கள்.
Deleteகல்லுக்குள் ஈரம் - மிக அருமையான புத்தகம். வாலிப வயதில் படித்தது. விலைக்கு வாங்கலாம் என்றால் கிடைக்கவில்லை. யாராவது உதவமுடிந்தால், ம்கிழ்ச்சி!
ReplyDeleteஇந்த நாவலின் மீதான ஈர்ப்பே பிரபாகரனை தீவிரவாத பாதையில் செலுத்தியது.பிரபாகரனுக்கு பிடித்த புத்தகம்.
ReplyDeleteஇந்த நாவலின் மீதான ஈர்ப்பே பிரபாகரனை தீவிரவாத பாதையில் செலுத்தியது.பிரபாகரனுக்கு பிடித்த புத்தகம்.
ReplyDeleteஇந்த நாவலின் மீதான ஈர்ப்பே பிரபாகரனை தீவிரவாத பாதையில் செலுத்தியது.பிரபாகரனுக்கு பிடித்த புத்தகம்.
ReplyDeleteநேற்றுக் கூட சிந்துபூந்துறை சாலையில் நடக்கும்போது ர.சு.நல்லபெருமாள் பற்றி நினைவு கூர்ந்தோம். அவர் அஹிம்சையை ஆதரித்தே இதை எழுதி இருக்கிறார். அஹிம்சாவாதியான காந்தியின் கருத்துக்களுடன் ஒத்துப்போகாத தீவிரவாதியான ரங்கமணியின் மனம் எப்படி மாறியது என்பதே கதையின் முக்கியக்கரு.
ReplyDeleteகடைசியில் இம்சை ஓய்ந்து அகிம்சைதான் ஜெயித்ததா !!! வாழ்த்துக்கள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDeleteஇரண்டு நாட்களில் 720 பக்கங்களா... ??? சுவாமி விவேகானந்தருக்கு புத்தகங்களை நம்மை போல வார்த்தை வார்ததையாக படிக்காமல் பக்கம் பக்கமாக படிக்கும் திறமை இருந்ததாம் ... அதுபோன்றதொரு திறமை இருக்குமோ !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDeleteஹாஹாஹா, இதெல்லாம் ஜுஜுபி ஒருகாலத்தில்! இப்போக் கண் தொந்திரவு! அதிகம் படிக்க முடிவதில்லை. :(
Deleteதிரு பிரபாகரன் அவர்கள் தன் வாழ்வில் ஐந்துமுறை படித்த நாவல்..
ReplyDelete'' நிழல் வரலாற்றை படித்து நியவரலாறு படைத்த வரலாறு''