Wednesday, March 19, 2014

காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவின் தோல்வியடைந்த முயற்சி

'ரத்தம் ஒரே நிறம்' என்பது சுஜாதா எழுதிய முதல் சரித்திர நாவல் என்பதை சீனுவின் பதிவின் மூலம் அறிந்தேன். பின் சுஜாதா எழுதிய மற்றொரு சரித்திர நாவல் 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' என்பது தெரியவந்தது. இது ராஜ ராஜ சோழன் காலத்தில் நடப்பது போன்ற கதை என்றும், இதில் கணேஷ்-வசந்த் சரித்திர நாயகர்களாக தொன்றிகின்றனர் என்ற தகவல் எனது எதிர்பார்ப்பை கூட்டியது. பொன்னியின் செல்வன் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்துடன், 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' படிக்கத் தொடங்கினேன்.



வசந்தகுமாரன் மது, மாது மற்றும் சூது இவை மூன்றில் முழுகித் தத்தளிக்கும் இளைஞன். அவனது குரு கணேசபட்டர் என்னும் பிரம்மதேயத்துக்காரர். குருவின் அறிவுரை கேட்டு திருந்தி வாழ விரும்பும் வசந்தகுமாரன், துறைமுகம் சென்ற பொழுது ஒரு கிரேக்க நாட்டுக் காரனுடன் குதிரை வியாபாரம் செய்ய முற்படுகிறான். இருவருக்கும் பொதுவாக சோழ நாட்டுப் பெண்கள் மீது இருக்கும் மோகம் காரணமாக அவர்களுக்குள் நட்பு மலர்கிறது. அந்த கிரேக்க நட்டானின் காமப் பசிக்கு தீனி போட அவனை ஆட்டசாலைக்கு அழைத்துச் செல்கிறான் வசந்தகுமாரன். அங்கு அந்த கிரேக்க நாட்டான் மர்மமான முறையில் கொலை செய்யப்பட அவனுடன் வந்த வசந்தகுமாரன் மீது கொலைப் பழி விழுகிறது.

சோழ ராஜ்ஜியத்திற்கு எதிராக சதி செய்யும் பாண்டிய ஒற்றர்கள் தான் அந்த கொலைக்கு காரணம் என்று வசந்தகுமாரன் அறியும் பொழுது, விஷம் பொருந்திய சிற்றம்பால் அவனும் தாக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை செல்கிறான். கணேஷபட்டரின் உதவியுடன் உயிர் பிழைத்து, அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து தப்பித்து செல்லும் சமயம், சாலையில் அவன் அபிமதி என்னும் இளவரசியை சந்திக்கின்றான். காவலர்கள் 'நீ எந்த ஊர்?' என்று இவனை கேட்க, இவன் விளையாட்டாக 'காந்தளூர்' என்று சொல்ல, காந்தளூர் சேர நாட்டில் இருப்பதால், இவன் சேர நாட்டு ஒற்றன் என்ற செய்தி சோழ நாடெங்கும் பரவுகின்றது. இளவரசி அபிமதி இவனை காவலர்களிடம் இருந்து காக்க, இருவருக்கிடையிலும் காதல் மலர்கின்றது.

இளவரசி அபிமதியை சாளுக்கிய மன்னன் விக்ரமனுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்வது பிடிக்காமல், அவள் வசந்தகுமாரனுடன் அரண்மனையை விட்டு தப்பிச் செல்ல, வசந்தகுமாரன் தேச துரோகியாக மாறிவிடுகிறான். இளவரசியை மணக்க இருக்கும் விக்ரமன் இவன் மீது கடுங்கோபம் கொள்கின்றான். கணேஷபட்டருக்கு அரசாங்கத்திலும் ராஜராஜ சோழனிடமும் இருக்கும் செல்வாக்கின் மூலம், வசந்தகுமாரன் நிரபராதி என்று போராடுகிறார். கணேஷபட்டர் வசந்தகுமாரனை தண்டனையில் இருந்து காப்பதும், அவனது காதல் வேல்வதுமே மீதிக் கதை.

புத்தகத்தில் நான் நொந்தவை:

முதல் அத்தியாத்தில் வசந்தகுமாரனும், அந்த கிரேக்க நாட்டானும் சோழ நாட்டுப் பெண்களைப் பற்றி பேசுவது சற்று கொச்சையாகவே இருந்தது.

ஒரு சில காட்சிகளில், ஒன்றுக்கு மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் உறையாடும் பொழுது, எந்த வசனத்தை யார் பேசுகின்றனர் என்றத் தெளிவு சரியாக இல்லை.

இழுக்கப்படவேண்டிய காட்சிகள் சுருக்கப்பட்டதும், சுருக்க வேண்டிய சில காட்சிகள் இழுத்ததும் , கதையின் சுவாரசியத்தை குறைக்கின்றன

சரித்திர நாவல் எழுதவேண்டும் என்பதற்காக, இயல்பான கதையில் சரித்திர தடையங்களைப் புதைத்தது போன்ற ஓர் உணர்வு தான் இந்தப் புத்தகத்தை படித்த பொழுது தோன்றியது. உதாரணத்திற்கு காரில் செல்லும் வசந்திற்கு பதிலாக குதிரையில் செல்லும் வசந்தகுமாரனை இதில் காண முடிகின்றது.

'பொன்னியின் செல்வனில்' மிகவும் கம்பீரமாக பார்த்த ராஜராஜ சோழன், இதில் மிக சாதரணமாக காட்சியளிப்பதை ஏனோ மனம் ஏற்க மறுக்கின்றது. ராஜ ராஜ சோழன் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் 'குந்தவை' இதில் அதே சிறப்புடன் தோன்றுவது ஆறுதல் தருகின்றது.

எல்லாமே குறை என்று சொல்ல முடியாது. சில இடங்களில் பயன்படுத்தப் பட்ட சரித்திரச் சொற்களுக்கு, பக்கத்தின் முடிவில் விளக்கம் தந்தது, பொருள் அறிந்து படிக்க உதவியது.

'ஆணல்ல பெண்ணல்ல' என்று பெண் வேடம் பூண்டு வசந்தகுமாரன் அரண்மனைக்குள் செல்லும் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தன.

தஞ்சை பெரிய கோயில் கட்டியதால் பொது மக்களுக்கு எவ்வளவு துன்பங்கள் நேர்ந்தன என்று பொது மக்கள் வாயிலாக கணேஷபட்டர் அறிவது பாராட்டத்தக்க சுஜாதாவின் டச்.

கல்கியின் சரித்திர நாவல்களை படித்து முடித்த பொழுது தோன்றிய ஒரு வித புத்துணர்ச்சி, இந்த நாவலை முடிக்கும் பொழுது கிடைக்க வில்லை. இவ்வளவு ஏன், சுஜாதாவின் மற்ற படைப்புகளில் இருக்கும் சிறப்புகளில் ஒன்றுகூட இதில் இல்லை என்பது வருத்தம் தான். இந்தக் கதையை முடித்த பின் சுஜாதாவிற்கு அடுத்த பகுதியை தொடர எண்ணங்கள் இருந்த போதும், இந்த முயற்சியை மேலும் தொடராமல் கைவிட்டது உத்தமம் என்றே தோன்றுகிறது.

29 comments:

  1. நிறைகுறைகளுடன் விமர்சனம் நன்று...

    ReplyDelete
  2. சுஜாதாவின் எழுத்தில் எனக்கு அறவே பிடிக்காத ஒரு விஷயம் இந்தக் கதைதான். ஏன்தான் இப்படி ஒன்றை எழுதித் தொலைத்தாரோ என்று பலமுறை நினைத்ததுண்டு. எதற்குமே திருஷ்டிப் பரிகாரம் என்ற ஒன்று வேண்டுமல்லவா? சுஜாதாவின் எழுத்திற்கு இது1

    ReplyDelete
    Replies
    1. அப்படித் தான் சொல்ல வேண்டும்

      Delete
  3. //முதல் அத்தியாத்தில் வசந்தகுமாரனும், அந்த கிரேக்க நாட்டானும் சோழ நாட்டுப் பெண்களைப் பற்றி பேசுவது சற்று கொச்சையாகவே இருந்தது//

    ரா.கா. சாலையை விடவா?

    ReplyDelete
    Replies
    1. நான் ரா.கா. சாலையை படிக்கலையே :)

      Delete
  4. கணேஷ் வசந்த் என்கிற பிராண்ட் நேமை அவசர தேவைக்காக உபயோகப் படுத்தியிருப்பதாய் தெரிகிறது. விடுங்க பாஸ்.. சிறப்பா ஆடுன டான் பிராட்மேன் ஆல ஆவரேஜ் நூறைத் தொட முடியல.. ஒண்ணு சொச்சம். அதுபோல சுஜாதாக்கு இதுவா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா. நீங்க படிக்க கூடாது என்று ஒரு விழிப்புணர்ச்சி பதிவு

      Delete
  5. ரஜினி என்ன நடிச்சாலும் எப்படி நடிச்சாலும் எனக்குப் பிடிக்கும் அதே போல் காந்தளூர் வசந்தகுமாரனும் :-)

    நல்ல விமர்சனம் ரூபக்

    ReplyDelete
    Replies
    1. ரஜினிக்கும் பாபா மாதிரி சுஜாதாவிற்கு இது. தீவிர ரசிகர்கள் மட்டும் வேறு வழியின்றி திட்டிக்கொண்டே ரசிக்க வேண்டியதுதான்

      Delete
    2. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே :)

      Delete
    3. :) நானும் இந்த கதை வாசித்திருக்கிறேன், எனக்கும் இந்த கதை பிடித்திருந்தது, Boring , வீண் என்றெல்லாம் சொல்ல முடியாது . ஆனா இந்த கதையோட முடிவு தான் எனக்கு வெளங்கல !!

      Delete
  6. மகாமகா போரான நாவல். அவரின் சுமாரான நாவல்கள் கூட பல முறை படிக்கும் படி இருக்கும். இது இரண்டாம் முறை கூட படிக்கும் படி தூண்டவில்லை. வழக்கமாக வசந்தின் குறும்புகள் ரசிக்கும் படி இருக்கும், இதில் எரிச்சலை வரவழைக்கும் படி இருக்கும். அரசர்களை சாதரண மனிதர்களாக வைத்து, யதார்த்தமாக கதை எழுத நினைத்தவர், அவரின் ஃபேண்டசி கதாபத்திரங்களை இறக்கிவிட்டு இரண்டுங்கெட்டானாக்கி விட்டார்.

    கதை எதில் வந்தது என்று தெரியவில்லை, பெரிய கதையாக எழுத திட்டமிட்டு, வேறுவழியின்றி முடித்தது போல இருக்கும். வாசகர் கடிதங்களின் விளைவு போல. கதையின் முடிவு முழுமையானதல்ல.

    இதைவிட கோவி. மணிசேகரன், உதயணன் சரித்திர நாவல்கள் பல மடங்கு மேல்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி

      Delete
  7. ராஜராஜ சோழன் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை நானும் உணர்ந்தேன். வசந்தகுமாரனின் விளையாட்டுத்தனங்கள் ரசிக்க வைத்தன. சில புதிய சொற்களையும் அறிந்துகொண்டேன். இன்று புகழ் பெற்றுவிளங்கும் கோவிலைக் கட்டுவதற்கு அன்றைய மக்கள் பட்ட துன்பம் புரிகிறது. வருங்காலப் புகழுக்காக மன்னர் மக்களைத் துன்பப்பட வைக்கிறார் என்று மக்கள் உணர்வதுபோல எழுதியிருந்தாலும் ராஜராஜசோழன் மேல் எக்குறையையும் ஏற்க முடியவில்லை என்பதே உண்மை.
    நல்ல விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. நான் உணர்த்து போல் நீங்களும் உணர்ந்ததில் மகிழ்ச்சி. பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Delete
  8. நல்ல விமர்சனம்... பாராட்டுகள் ரூபக்.

    ReplyDelete
  9. வித்தியாசம் என்று நினைத்து எழுதுவது சில நேரங்களில் சொதப்பலாகிவிடுவது புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் என்பதை உணர்த்தி விட்டது போலும் இந்த நாவல்

    ReplyDelete
  10. ‘யவனிகா’ நாவலின் கடைசியில் வசந்த் சொல்வதாக ஒரு வரி வரும். “இந்த கதையைப் படமா எடுத்தா புரொடியூசர் வெடிகுண்டுக்கு செலவு பண்ணியே போண்டி ஆகிடுவார்”. சுஜாதா என்றும் தன் நாவல்களை திரைப்படமாக எடுக்கப் பட விரும்பியதில்லை. அதை தனது நாடகம் ஒன்றில் அவரே தெரிவித்து இருந்தார். ஆனால் என்னமோ இந்த நாவலைப் படிக்கும் போது மனதில் ஒரு பெரிய பிரம்மாண்டமான திரைப்படம் ஓடியது. கல்கியின் சரித்திர நாவல்களுக்கு, முக்கியமாக ‘பொன்னியின் செல்வனுக்கு’ ஒரு சமர்ப்பணம் போல் தான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. இந்த நாவலின் இன்னொரு பாகம் ஏன் வெளிவரவில்லை என்ற ஏக்கம் தான், ஏனோ ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.

    ReplyDelete
  11. சுஜாதா பதில்கள் – பாகம் 1

    செ. செல்லமுத்து, நத்தக்காடையூர்.
    ?காந்தளூர் வசந்தகுமாரன் கதையின் இரண்டாம் பாகம் என்னவாயிற்று ?

    !எனக்கு வேளையும், ‘மூடு’ ம் வரக் காத்திருக்கிறது.

    சிவக்குமார், அரக்கோணம்.
    ?முன்பு போல் சரித்திர நாவல்கள் இப்போது எழுதப்படுவதில்லையே ஏன்? எழுத்தாளர்கள் இல்லையா அல்லது ரசிகர்கள் குறைந்து விட்டார்களா ?

    !சரித்திரச் சம்பவங்கள் குறைந்து விட்டன. இனிச் சரித்திர நாவல்கள் அடுத்த நூற்றாண்டில்தான் சாத்தியம்.

    ReplyDelete
  12. குமுதம் ஆசிரியராக சுஜாதா பொறுப்பேற்றவுடன் 1994ல் ஆரம்பித்து 1995 ஜூன் மாதம் குமுதத்தில் நிறைவு பெற்ற நாவல் இது



    சுஜாதா குமுதம் ஆசிரியராக விலகும் போது அவர் எழுதிய தொடர்கள் பலவும் திடீரென்று நின்றன (ஒரு வேற்று கிரக விஞ்ஞான படக்கதை உட்பட)

    அதில் இதுவும் சிக்கியது துரதிர்ஷ்டம் தான்

    வசந்தகுமாரனுக்கும் அவசர திருமணத்துடன் நிறைவு பெற்றது சற்றும் எதிர்பார்க்காதது.

    ReplyDelete
  13. நண்பர் சுஜாதா தேசிகன் எழுதிய சிறப்புப் பதிவு இது.

    சுஜாதாவுடன் ஸ்ரீரங்கம் பயணத்தின் போது காந்தளூர் வசந்தகுமாரன் கதை பற்றி பேச்சு வந்தது. “அதனுடைய இரண்டாம் பாகம் ஒன்று எழுத முடிவு செய்திருந்தேன்” என்றார்.

    “அட எப்ப சார் எழுதப் போறீங்க?”

    “இப்ப முடியாது, கதை எனக்கே மறந்துவிட்டது” என்றார். ஆனால் இரண்டாம் பாகத்துக்கான சில விஷயங்களை முதல் பாகத்தின் கதை நெடுகிலும் விட்டிருப்பதாகச் சொன்னார்.

    சென்னை வந்த பிறகு கதை முழுவதும் படித்துவிட்டு அவருடன் ஒரு சனிக்கிழமை ஒவ்வொரு பாகத்தின் கதைச் சுருக்கத்தையும் சொன்னேன். குதிரை வியாபாரி இடம் வந்த போது “இங்கே தான்” ஒரு சம்பவம் இருக்கு என்றார். முழுக் கதையும் கேட்ட பிறகு “சரி எழுதலாம்” என்றார்.

    “இப்பவே ஆரம்பியுங்க”

    “நிறைய படிக்க வேண்டும்… “

    “என்ன என்ன புத்தகம் ? என்ன குறிப்பு வேண்டும் என்று சொல்லுங்க நான் உதவி செய்கிறேன்” என்றேன்

    ReplyDelete
  14. சில சோழர் வரலாறு புத்தகங்கள், மற்றும் சில புத்தகங்கள் பற்றி சொன்னார். இதற்காக சில புத்தகங்களை வாங்கி அவை இப்போது குமுதம் நூலகத்தில் இருக்கு என்றார். பத்திரிகை நண்பருடன் இரண்டாம் பாகம் பற்றி பேசினேன். அவரும் நிச்சயம் இதை அந்தப் பத்திரிகையில் போடலாம் என்றார்.

    ஆனால் அது நிறைவேறாது போனது நமக்கு துரதிர்ஷ்டம். இன்றும் கா.வ.க புத்தகத்தைப் பார்க்கும் போது அதன் இரண்டாம் பாகம் அதனுள் ஒளிந்து கொண்டு இருப்பது தான் எனக்கு ஞாபகம் வரும். யோசித்துப் பார்த்தால் எல்லா புத்தகங்களிலும் ஏதாவது ஒரு ஞாபகம் இருக்கிறது. ஞாபகம் இல்லாத புத்தகங்கள் நமக்கு தேவைப்படாது.

    ReplyDelete
  15. சுஜாதா பதில்கள்...

    ப்ரியா.
    ? கல்கிக்குப் பிறகு யாரும் வரலாற்று நாவல்கள் எழுதுவதில்லையே, ஏன் ? அப்படி எழுதினால் இக்கால மாணவர்களுக்கு வரலாற்றின் மேல் ஓர் ஆர்வம் வருமே !

    ! கல்கி வரலாற்றில் பல்லவ, சோழர்களின் பொற்காலங்களை விலாவாரியாக எழுதிவிட்டார். எஞ்சியிருப்பது குறுநில மன்னர்களும், ஒரு சில பாண்டியர்களும்.

    பெ.பாண்டியன், காரைக்குடி.
    ? சரித்திரக் கதைகள் எழுதுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதே..?

    ! சரித்திரக் கதைகள் என்ன, கதை எழுதுவோரின் எண்ணிக்கையே குறைந்து வருகிறதே… கவனித்தீரா ? தமிழர்கள் தொலைக் காட்சி மயக்கத்தில் கதை படிப்பதையே மறந்து வருகிறார்கள்.

    ReplyDelete
  16. Another review by Harish Ragunathan...

    I was pleasantly surprised on reading this historical novel. The reason was that two of the leading characters-Ganesa Pattar and Vasantha Kumaran bore striking resemblance to the Ganesh-Vasanth duo that Sujatha wrote. Another was the period of the story-during the times of Raja Raja Chjola I. .

    The story is more about the exploits of Vasantha Kumaran, disciple of Ganesa Pattar, an important officer in Raja Raja Chola's administration. The details collected and presented to the reader is typical of Sujatha, with not a shade of the legends like Sandilyan or Kalki. Sujatha presents the story in his own way, focusing more on his leading characters and providing us a chuckle in every page.

    Ganesa Pattar is the epitome of brilliance and discipline, just like Sujatha's modern day Ganesh(one can say that Ganesh-Vasanth are the reincarnated Ganesa Pattar and Vasantha Kumaran) whereas Vasantha Kumaran is a hopeless flirter, falling in lve with every girl he meets. His playfulness hides a keen energy which he puts to use then and now, stunning his mentor in the process, eve going to the extend of kidnapping the princess in a horse dressed as a woman!

    As said earlier, the book is a treasure for those keen on information about the particular time, what with information on the various types of horses or the distinction between a Roman coin and that of a Chola coin(as enumerated by Vasantha Kumaran0 giving a rich tone to the story.

    An enjoyable read, indeed.

    ReplyDelete
  17. குமுதத்தில் வந்தபோது சல பகுதிகள் படித்திருக்கிறேன். ஆனால், முழுமையாகப் படித்ததில்லை.
    படிக்கலாமா என்று தெரியவில்லை!!

    ReplyDelete
  18. நன்றி .. அறிமுகம் செய்ததற்கு ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
  19. கலையரசன் தங்கவேல்June 4, 2021 at 8:42 AM

    காந்தளூர் வசந்தகுமாரன் கதை நன்றாகத்தான் இருந்தது.. தமிழ் மொழியில் வெளிவந்த வேலைக்காரன் என்ற திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி போல இன்னும் சில காட்சிகள் இருந்து கதை தொடர்ந்திருந்தால் கதை நன்றாக இருக்கும் என்ற உணர்வுதான் கடைசியில் ஏற்பட்டது.

    ReplyDelete
  20. இப்போது எழுதினால் வாசகர்கள் கிடைப்பார்களா

    ReplyDelete

இது... உங்க ஏரியா!