Wednesday, June 24, 2015

லாக்கப் - மு.சந்திரகுமார் ; விசாரணை - வெற்றிமாறன்

நீங்கள் நான் மற்றும் நம் நண்பர்கள் நால்வருமாக ஆந்திராவில் ஒரு பிளாட்பார்மில் வசிக்கிறோம். உங்களுக்கும் எனக்கும் சுத்தமாக தெலுங்கு தெரியாது. புரியும். மற்ற இருவரும் ஓரளவிற்கு தெலுங்கில் கெட்டி. பகல் முழுவதும் கிடைக்கின்ற வேலை. இரவில் அலுப்பு தீர கொஞ்சம் கட்டிங். ரொம்பவே போரடித்தால் சினிமா. இதில் நம் நண்பர் நெல்சன் மட்டும் தீவிர சினிமா பைத்தியம். தினம் ஒரு சினிமா பார்த்தே ஆக வேண்டும். அப்படியொரு இரவில் சினிமா பார்க்கச் சென்ற நெல்சன் திரும்பி வராமல்போக எதிர்பாராத விதமாக அடுத்தநாள் உங்களைத் தேடி போலீஸ் வருகிறது. தெரியாத ஊர். தெரியாத பாசை. தெரியாத நபர்கள். கைது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவில் வரும் போலீசார். எப்படிப் புரிய வைப்பீர்கள் நீங்கள் குற்றவாளி இல்லை என்று. ஒருநிமிஷம்! நீங்கள் குற்றவாளி இல்லையென நிருபிக்கும் முன் 'நீங்கள் செய்த குற்றம் என்ன எனத் தெரிந்து கொள்வது அவசியமில்லையா?' அந்த உரிமைகூட மறுக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். சிறிய பத்துக்குப் பத்து அறையில் அடைக்கப்டுகிறீர்கள். ஏற்கனவே அங்கே அனுபவஸ்தர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள். இப்படித்தான் ஆரம்பமாகிறது லாக்கப் நாவல். 

குமார், ரவி, மொய்தீன், நெல்சன் - இவர்கள்தான் அந்த நால்வர்கள். இரவுக் காட்சி முடிந்து திரும்பிக்கொண்டிருந்த நெல்சனை சந்தேகத்தின் பேரில் விசாரிக்கும் ஆந்திரப் போலீஸிடம் மொழி புரியாமல் தடுமாறுகிறான் நெல்சன். மேலும் அவர்கள் எதையோ கேட்க இவன் வேறு எதையோ அரைகுறையாகப் புரிந்துகொண்டு மண்டையை ஆட்டுகிறான். நெல்சனிடம் இருந்து வரும் முன்னுக்குப் பின்னான பதில்களால் விசாரணைக்கு இழுத்துச் செல்கிறது போலீஸ். பயத்தில் தன் நண்பர்கள் என குமார் ரவி மொய்தீனை அடையாளம் காட்ட போலீஸ் அவர்களையும் விசாரணைக்கு இழுத்து வருகிறது. எலக்ட்ரிகல் கடை ஒன்றில் நடைபெற்ற திருட்டுக்கு இவர்களை பலியாடாக்குகிறது. செய்யாத குற்றத்தை எப்படி ஒப்புகொள்வது. இவர்கள் நால்வரும் மாறுகிறார்கள். குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான விசாரணை தொடங்குகிறது. 

இங்கிருந்து நாவல் முழுவதுமே கொஞ்சம் அழுத்தமாக நகரக்கூடிய சம்பவங்களைக் கொண்டதாக உள்ளது. பத்துக்குப் பத்து அறையில் இவர்கள் படும் அவஸ்தைகள், ஒரேயொரு வேளை மட்டுமே கிடைக்கக்கூடிய கேவலமான உணவு, ஏற்கனவே அங்கு தங்கியிருக்கும் அனுபவஸ்தர்கள் பட்ட, பட்டுகொண்டிருக்கும் அவஸ்தை, அவர்கள் உதிர்க்கும் அனுபவ மொழிகள் என நாம் அறிந்திராத ஒரு இருட்டு உலகம் நம்முன் விரிகிறது. இவர்களுக்காக பேசி அழைத்துச் செல்லவும் யாருமற்ற நரகத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் இந்த நால்வரும். தங்கள் நிலைமை இப்படி ஆனதற்காக நெல்சன் மெது கொலைவெறி கொள்கிறான் ரவி. வெளியில் வந்தால் கொல்லாமல் விடபோவதில்லை என சபதம் எடுக்கிறான். அதற்கு முதலில் வெளியில் செல்ல வேண்டுமே?

கையில் லத்தி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக வருகிறவர்கள் போறவர்கள் எல்லாம் அடிக்கிறார்கள். நாளாக நாளாக சிதரவதையின் வீரியம் கூடுகிறது. குற்றத்தைக் ஒப்புக்கொள்ளும்படி தினமும் சித்தரவதை நடக்கிறது. கயிற்றில் கால்களைக் காட்டி சிலமணி நேரங்களுக்கு பாதத்தில் மட்டும் அடிக்கிறார்கள். அதன்மூலம் இவர்கள் அடையும் வலி, வேதனை, அவஸ்தை என இவை அனைத்தையும் நாம் உணரத் தொடங்கம்போது உடல் நடுங்குகிறது. கனவிலும் இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது என மனம் தன் போக்கில் பிராத்திக்கத் தொடங்குகிறது. 

முடிவே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனைகு முடிவு காண்பதற்காக லாக்கபினுள் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கிறார்கள். உடன் இருக்கும் அனுபவஸ்தர்கள் வேண்டாமென எச்சரித்த போதும் குமாரின் உந்துதலில் நால்வரும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க, இதில் கடுப்பான காவல் குமாரை மட்டும் அதே லாக்கப்பில் வைத்துவிட்டு மற்ற மூவரையும் வேறொரு காவல் நிலையத்திற்கு மாற்றுகிறது. மேலும் இதற்கெல்லாம் காரணியான குமாருக்குக் கொடுக்ககூடிய சித்ரவதைகளின் அளவு எல்லை மீறுகிறது. 

உடலின் ஒரே பகுதியில் தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டிருந்தால், ரத்தம் கட்டி, சீழ் பிடித்து, அப்பகுதி மட்டும் அழுகி கேட்டுப் போய்விடுமாம். இது போக உள்ளுக்குள் ஆங்காங்கு உடைந்து போகும் எலும்புகள் ஏற்படுத்தக்கூடிய வலி தனி. எவ்வளவு அடி வாங்கினாலும், ஏன் அடி வாங்கி செத்தே போனாலும் செய்யாத குற்றத்தை மட்டும் செய்தேன் என ஒத்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறான் குமார். இப்படியே சென்று கொண்டிருக்கும் இவர்களின் நிலை கடைசியில் என்னதான் ஆனது என்பதுதான் மீதி கதை. 

இதில் மற்றுமொரு முக்கியமான விஷயம், கதைசொல்லியான குமார்தான் நாவலாசிரியர் சந்திரகுமார் என நாவலின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் பின்குறிப்பு மூலம் தெரியவரும்போது மேலும் அதிர்ச்சியாக இருக்கிறது. மனிதாபினம் என்றால் கிலோ என்னவிலை எனக் கேட்கும் இந்த லாக்கப் பல அதிர்ச்சிகரமான உணமைகளை உரக்கப் பேசுகிறது. 


வெற்றிமாறன் விசாரணை என்னும் திரைப்படத்தை இயக்காமல் இருந்திருந்தால் இந்த நாவல் குறித்து நான் பேசியிருப்பேனா தெரியவில்லை. ஏன் அறிந்திருப்பேனா என்பது கூட சந்தேகமே. பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர்கள் யாருமே இலக்கியத்தில் சோடை போனதாகத் தெரியவில்லை. அதில் வெற்றிமாறனின் இலக்கிய ரசனை என்பது பிரமிக்கத்தக்கது. உலகபுகழ் பெற்ற நாவலான ஓநாயின் குலச்சின்னம் நாவலை தமிழ்மொழி பெயர்ப்பதர்காகவே அதிர்வு என்னும் பதிப்பகம் ஆரம்பித்தவர். தற்கால கலைச்சூழலில் 'மொக்கையா கதை எழுதி படம் எடுத்தாலும் எடுப்பனே தவிர, நல்லதொரு நாவலை, படைப்பை படம் ஆக்குவதற்கு இம்மியும் முனைய மாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வலம்வருகிறார்கள் திருவாளர் இயக்குனர்கள். இவர்களுக்கு மத்தியில் வெற்றிமாறனும், சமுத்திரக்கனியும் இலக்கிய நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் பின்னணியில் கதைகளம் அமைத்துக் கொண்டிருப்பது வரவேற்கப்பட விஷயம்.    

Friday, June 12, 2015

விலங்கு பண்ணை - பி.வி. ராமசாமி


மேலோட்டமாக பார்க்கையில் இது ஒரு சாதாரண பண்ணையில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட சிறுவர்களுக்கான புத்தகம் போன்று தோன்றினாலும் சற்று கம்யூனிச ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்வுகளுடன் ஒப்பிட்டால் இதன் ஆழம் புரியும். 1945-ல் வெளிவந்து அக்காலகட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் இது.


ஒரு பண்ணையில் பண்ணை வேலைக்காகவும் இன்ன பிற காரணங்களுக்காவும் வளர்க்கப்படும் பன்றி, குதிரை, கழுதை, செம்மறி ஆடு, மாடு, நாய், பூனை, கோழி, காகம் போன்ற பண்ணை மிருகங்களும், பறவைகளும் எஜமானர் தங்களுக்கு  இழைக்கும் அநீதியை எதிர்த்து ஒரு புரட்சியின் மூலம் தாங்கள் விடுதலை பெற வேண்டும் என்று திட்டமிடுகின்றன. 
சரியான அளவு தீவனம் மற்றும் ஓய்வு வழங்கப்படாதது , கோழிகளின் முட்டைகளை முழுவதுமாக சந்தைக்கு அனுப்பி விடுவது, இளம் பன்றிகளும் ஆடுகளும் இறைச்சிக்கு விற்கப்படுவது, மாடுகளின் பால் கன்றுகளுக்கு வழங்கப்படாமல் வெளி சந்தையில் விற்கப்படுவது இதுவே அவைகளின் வெறுப்புக்குக் காரணம். 


ஒரு நாள் விலங்குகளில், வயதில் மூத்த ஓல்ட் மேஜர் என்ற வெள்ளை நிறப் பன்றி அனைவரையும் தான் கண்ட ஒரு கனவு குறித்து கூற இருப்பதாகக்  கூறி அழைக்கிறது . அனைத்து விலங்குகளும் இரவில் எஜமானருக்குத்  தெரியாமல்  ஒன்று கூடுகின்றன. கூட்டத்தில் ஓல்ட் மேஜர் தான் கண்ட கனவில் இங்கிலாந்தில் புரட்சி வெடித்ததாகவும் இங்கிலாந்து முழுவதிலும் பண்ணைகள் மனிதர்களின்  வசமிருந்தது முழுவதுமாக விலங்குகளின் வசம் வந்ததாகவும் மனிதர்களின் காலடியே படாத சொர்க்க பூமியாக இங்கிலாந்து மாறி விட்டதாகவும் கூறியது.


இதன் மூலம் விலங்குகளின் மனதில் புரட்சிக்கான விதையையும் தூவிவிட்டு தனக்கு தன் முன்னோர்கள் கற்று தந்ததாகக்  கூறி இங்கிலாந்தின் விலங்கினமே என்ற பாடலையும் அனைவருக்கும் கற்றுக்  கொடுக்கிறது. இது நடந்து சிறிது நாட்கள் கழித்து அந்த வெள்ளை பன்றி வயோதிகத்தின் காரணமாக இறந்தும் விடுகின்றது. பின்னர் சிறிது நாட்கள் கழித்து   எதிர்பாராத விதமாக எதிர்பாராத  நேரத்தில் நடந்த ஒரு புரட்சியின் மூலம் பண்ணையை எஜமானரிடமிருந்து பறித்து அவரையும் அவரது குடும்பம் மற்றும் பணியாட்கள் அனைவரையும் அங்கிருந்து  விரட்டி விட்டு விலங்குகள்  பண்ணையைக் கைப்பற்றி  தாங்களே நிர்வகிக்கத்  தொடங்குகின்றன. முதலில் அனைத்தும் நன்றாகவே நடக்கிறது அங்குள்ள விலங்குகளில் அதிகம் புத்தி கூர்மை உள்ள விலங்குகளாக அறியப்பட்ட பன்றிகளிடம் பண்ணையை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படுகின்றது. பண்ணையின் பெயர் "மேனார் பண்ணை " என்பதிலிருந்து  "விலங்குப்  பண்ணை" என்று மாற்றப்படுகிறது.ஸ்நோபால், நெப்போலியன் என்ற இரண்டு  பன்றிகளும் நிர்வாகப்  பொறுப்பை ஏற்று நடத்துகின்றன. 


விலங்கு பண்ணைக்கான ஒழுங்கு விதியாக சில கட்டளைகள் வகுக்கப்பட்டு அவை 7 கட்டளைகளாக அனைவரின் கண்ணிலும் படும் விதமாக அங்குள்ள உயரமான சுவற்றில் எழுதப்படுகிறது.(இடைப்பட்ட காலத்தில் பண்ணை வீட்டில் கண்டெடுக்கப்பட்ட எஜமானரின் குழந்தைகளின் பள்ளிப் புத்தகங்களைப் பயன்படுத்தி பன்றிகள் எழுதப் படிக்க கற்றுக் கொண்டன). ஒவ்வொரு ஞாயிறன்றும் கூட்டம் கூட்டப்பட்டு பண்ணைக்குத் தேவையான தீர்மானங்கள்  நிறைவேற்றப்படுகின்றன. கூட்ட இறுதியில் கொடி ஏற்றப்பட்டு 'இங்கிலாந்தின் விலங்கினமே' பாடல் பாடப்படுகிறது.சில நாட்களுக்கு அனைத்தும் நன்றாகவே நடந்து அக்கம் பக்கம் பண்ணைகளில் விலங்குப் பண்ணையின் புகழ் பரவத் தொடங்குகிறது.  ஸ்நோபால்  நிறைய நல்ல திட்டங்களைத் தொடங்க தீர்மானங்கள் கொண்டு வருகிறது . விலங்குகளுக்கு எழுத படிக்கக்  கற்றுக் கொடுப்பது, பண்ணையில் காற்றாலை தொடங்குவது போன்றவை இதில் அடங்கும். ஆனால் நெப்போலியனுக்கும் ஸ்நோபாலுக்கும்  ஒற்றுமை என்பது சிறிதும் இல்லை. இதனிடையில் மேனார் பண்ணையின் உரிமையாளர்  சில ஆட்களைத் திரட்டிக் கொண்டு பண்ணையைத் தாக்க வருகிறார். இறுதியில் விலங்குகளால் வெற்றியடையப்பட்ட "மாட்டுத் தொழுவ யுத்தம்" என்று பெயரிடப்பட்ட அந்த யுத்தத்தில் ஸ்நோபால் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அதற்கு 'விலங்கு நாயகன் முதல் வரிசை' என்ற பட்டம் வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இதன் பிறகு காற்றாலை விவகாரத்தில்  வேற்றுமை வெடித்து ஸ்நோபால் நெப்போலியனால் பண்ணையை விட்டே விரட்டப்படுகிறது.
இது நடந்த பிறகு நெப்போலியனின் நடவடிக்கையில் மாற்றம் வரத் தொடங்குகிறது. சிறிது சிறிதாக தன் அதிகாரத்தை நிலை நிறுத்தி சர்வாதிகாரியாக மாறுகிறது. சுவற்றில் எழுதப்பட்ட 7 கட்டளைகளும் மீறப்படுகின்றன. பண்ணையில் பன்றிகளையும் நாய்களையும் தவிர மற்ற 
விலங்குகள் அடிமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன. முந்தைய எஜமானரிடம் இருந்ததை விட விலங்குகளின் நிலை இன்னும் மோசமாகிறது. 

இதனையடுத்து 'காற்றாழை யுத்தம்' என்ற இரண்டாவது யுத்தம் பக்கத்து பண்ணையாளருடன் நடக்கிறது இதில் விலங்குகள் வென்றாலும் பல விலங்குகள் பலத்த காயமடைகின்றன.  ஆனால் தாங்கள் விலங்குப் பண்ணையின் அங்கத்தினர், மனிதர்களின் அடிமை இல்லை என்ற எண்ணம் அந்த விலங்குகளை அனைத்து துயரங்களையும் தாங்கிக் கொள்ளச் செய்கிறது. ஆனால் சிறிது சிறிதாக மாறிய நெப்போலியன் இறுதியில் அனைத்து வகைகளிலும் மனிதனைப் போலவே நடந்து கொள்கிறது. 


பக்கத்து பண்ணைகளுடன் வர்த்தகம் செய்யத் தொடங்குகிறது. கோழிகளின் முட்டைகள் விற்கப்படுகின்றன. விலங்குகளுக்கு ஒய்வு பெரும் வயது அறிவிக்கப்பட்டு அவைகளுக்கு ஒய்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு காற்றில் விடப்படுகிறது. அதிகமாக வழங்கப்படுவதாக சொல்லப்பட்ட தீவனத்தின் அளவும் முன்பை விட குறைக்கப்படுகிறது. ஆனால் பன்றிகளுக்கான தீவனம் மட்டும் அதிகரிக்கப்பட்டு அவைகள் கொழுத்தும், எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படுகின்றன. இடைப்பட்ட காலத்தில் பன்றிகள் இரண்டு கால்களால் நடக்கவும் மனிதர்களைப் போல மது அருந்தவும் கூட கற்றுக் கொள்கின்றன.பார்லி அதிகம் பயிரிடப்பட்டு பண்ணை  வீட்டின் ஒரு பகுதியில் பியர் காய்ச்சப்படுகிறது.


இறுதிப் பகுதியில் ஒரு நாள் பண்ணையில் பக்கத்து பண்ணைகாரர்களுக்காக சிறப்பான விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த விருந்து நிகழ்ச்சியினை அறையின் வெளியிலிருந்து ஜன்னலின் வழியாக  மறைந்து நின்று காணும் அனைத்து விலங்குகளும், பன்றிகள் முற்றிலும் மனிதர்களைப் போல நடந்து கொள்வதைப் பார்த்தும் அவைகளின் முகம் சிறிது சிறிதாக மனிதர்களைப் போல மாறுவதைக் கண்டும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன......--பிரியா   

===================================================================

நூலின் பெயர் : விலங்கு பண்ணை 
மூலம் : ஆங்கிலம் (Animal  Farm)
எழுத்தாளர் : ஜார்ஜ் ஆர்வெல் 
தமிழில் : பி.வி. ராமசாமி 
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம் 

===================================================================

Saturday, June 6, 2015

வீடியோ மாரியம்மன் - இமையம்
இமையம் அவர்களைப் பற்றி பெரிதும் அறிந்திடாத எனக்கு, இந்த வீடியோ மாரியம்மன் என்ற தலைப்புத்தான் என்னை வாங்கத் தூண்டியது. ஒருவித தயக்கத்துடன் தான் இந்த நூலை திறந்தேன், கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை, இப்புத்தகத்தை வாங்குகையில், என்ன மதிப்பீடு உள்மனதில் இருந்ததோ அதையும் தாண்டி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நேரடி அனுபவங்களை கதையாக்குவதில் பல சிக்கல்கள் இருக்கிறது, இமையம், அதையெல்லாம் தகர்த்து எறிந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவரின் பெரும்பான்மையான கதைகள் உண்மை நிகழ்வுகளாக இருக்க கூடும் என்று நம்புகிறேன். கதை நகர்வும் அதன் மாந்தர்கள் பற்றிய விவரிப்பும் அப்படித்தான் இருக்கிறது.

கதை எழுதுவதாக நினைத்துக் கொண்டு, சமூகத்துக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் இயல்பின் வரம்பு மீறாமல், வாசகனின் முடிவுக்கு கதையை விட்டுவிட்டு ஒதுங்கி கொள்கிறார் திரு. இமையம். அறிவுரை சொல்லவில்லை என்பது சற்று ஆறுதல். இருப்பினும் கதையை வாசித்து முடித்துவிட்டு அதன் மையக் கருத்து என்னவென்று சிந்திக்க துவங்கினால், ஒவ்வொரு கதையும் பெரிய வகுப்பெடுத்துச் செல்கிறது. ஆசிரியர் என்பதினால் இந்த நெளிவு சுளிவு வந்திருக்குமோ என்னவோ? உண்மையில் ஒவ்வொரு கதையும் ஒரு சுயபரிசோதனை செய்யத் தூண்டும் அளவிற்கு வலுவான முடிச்சுக்கள் கொண்டுள்ளன!

இக்கதைகள் அனைத்துமே, கிராமத்து மனிதர்களையும் அவர்களின் தினசரி வாழ்வியலை பற்றி பேசுவதினால், அதே சூழலில் வளர்ந்த என்னால் வெகு எளிதாக கதையுடன் ஒன்றிவிட முடிந்தது. மொத்தம் 11 சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலான கதைகள் பல முன்னணி இதழ்களில் வெளி வந்திருக்கின்றன! அவற்றில் இரண்டு மூன்று கதைகளை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்!

உயிர்நாடி:

தனியார் கம்பெனிக்காரன் அதிக விலை கொடுத்து விவாசய நிலங்களை வாங்கி கொண்டிருக்க, ஒரு கிழவர் மட்டும் விற்க மனமில்லாமல் இருக்கிறார், ஊரில் எல்லோரும் விற்று விட்டார்கள் உனக்கு மட்டும் விற்க ஏன் மனசு வரமாட்டேங்குது என்று சண்டை போடும் புள்ளைக்கும், அப்பனுக்குமான நிகழ்வு தான் கதை. எளிதான சம்பவம் தான் என்று கடந்து போக முடியாது அதனுள் அவ்வளவு உணர்வுகளை புதைத்து வைத்திருக்கிறார். காலம் மாறிக்கொண்டு இருக்கிறது, ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்குமான இடைவெளி எப்படி உருவாகிறது, அதன் நன்மை தீமைகள் என்ன? என்று அழுத்தமாக சொல்லிருக்கிறார். விவசாயத்தையே உயிரென நேசித்த ஒரு கிழவனின் மனசை சிதறு தேங்காயைப் போல் உடைத்து, எழுத்துக்களாய் நம்முன் வைத்திருக்கிறார்.      

அம்மா :

குடும்பத்தோடு நகரத்துக்கு குடிப்பெயர்ந்துவிட்ட ஒரு தாழ்த்தப் பட்ட இளைஞன், ஊரில் ஒரு நிகழ்விற்காக வந்திருக்கையில் தனது ஆதங்கங்களை கொட்டி தீர்க்கும் தாயின் உரையாடலே அம்மா எனும் கதை. "நீ, மாறிட்டே, உன் பொண்டாட்டி சொந்தம் தான் முக்கியமுன்னு போயிட்டே" என்று சொல்லுகையில் கூட பாசத்தின் ருசி, வாசிக்கும் நமக்கும் தெரியுமளவிற்கு எழுதியிருப்பார் திரு. இமையம். "கருவாடுன்னா உனக்கு ரொம்ப புடிக்குமென்று எடுத்து வைச்சேன், நான் ஒருத்தி மட்டும் தின்னு என்ன பண்ண போறேன், எடுத்துக் கொண்டு போய் வைச்சி கொடுக்க சொல்லி சாப்புடு " என்று ஓடிப்போய்  அடுக்குப்பானையில் இருக்கும் கருவாட்டை அள்ளி கடுதாசியில் போட்டு அனுப்பி வைப்பாள் அந்த தாய். கதை முழுக்க தொண தொணவென்று பேசிக்கொண்டு இருப்பதாக காட்டியிருந்தாலும் அதிலொரு அழுக்குப் பாசம் ஒளிந்திருக்கும். 

   
பயணம்:

கணவனை பறிக்கொடுத்த ஒருத்தி, அதிகாலையில் எழுந்து பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன்னோட காட்டில் விளைந்து நிற்கும் கொத்த மல்லியை அறுத்தெடுக்க செல்லுவதை பயணமென்று கதையாக எழுதி இருக்கிறார். எழுத துவங்கியிருக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கு இது ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்ளுமளவிற்கு நேர்த்தியான கதை. இப்படி ஒவ்வொன்றும் ஒருவித உணர்வின் குவியல் தான். 

இந்த மூன்றுகதைகளும் என்னை வெகுவாய் பாதித்தது, மற்ற கதைகளும் ஆணிவேராய் உள்ளுக்குள் இறங்கும் வல்லமை கொண்டவைகள் தான். வாசிக்க வேண்டிய புத்தகம், தவற விடவேண்டாம் என்பது எனது கருத்து.


ஆசிரியரைப் பற்றி:கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த அண்ணாமலை என்று இயற்பெயரைக் கொண்ட திரு. இமையம் பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார். சமகாலத்திய படைப்பாளிகளில் முதன்மையானவர்கள் வரிசையில் வரக்கூடியவர். அதிகம் எழுதவில்லை என்றாலும் இவரது கதைகள் பெரும்பாலனாவைகள் மொழிப்பெயர்த்து வெளியிடப்பட்டு வருகின்றன. முதல் நாவலான "கோவேறு கழுதைகள்" 1994 வெளிவந்துள்ளது அதிலிருந்து அவ்வப்போது சிறுகதை தொகுப்பும், நாவலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன! 

மேலும் தகவலுக்கு: http://www.writerimayam.com/===========================================================

மொத்த பக்கங்கள் : 227

பதிப்பகம் : க்ரியா 

விலை : 150/-

============================================================

படித்துச் சொன்னது 

அரசன்