Wednesday, April 30, 2014

சித்ராலயா கோபுவின் “ஞாபகம் வருதே”ஸ்ரீதர். சடகோபன். ரங்கநாதன் என்று செங்கல்பட்டில் மூன்று நண்பர்கள். இன்று வயது எழுபதைக் கடந்துவிட்ட மூவரும் பள்ளிக் காலங்களில் இருந்து நாளது வரை இணைபிரியாத நெருக்கமான நண்பர்க்ள். இவர்களில் ஸ்ரீதர் சினிமாவில் இயக்குனராகப் பரிமளித்து விதவிதமான சப்ஜெக்ட்களில் படங்களை எழுதி இயக்கி, கதை சொல்லும் உத்தி, கேமரா கோணங்கள் ஆகியவற்றால் தமிழ் சினிமாவுக்குப் புத்துயிர் ஊட்டியவர். பல மறக்க முடியாத வெற்றிப் படங்களைத் தந்தவர். சடகோபன் என்பவரை ‘சித்ராலயா கோபு’ என்றால் சுலபமாகப் புரிந்து கொள்வீர்கள். ஸ்ரீதர்-கோபு இணைந்து அளித்த நகைச்சுவைத் திரைப்படங்கள் காலத்தை வென்ற நிற்பவை. மூன்றாமவரை பி.எஸ்.ரங்கநாதன் என்று சொல்வதை விட அகஸ்தியன், கடுகு என்று சொன்னால் சுலபமாகப் புரிந்து கொள்வீர்கள். எண்ணற்ற நகைச்சுவைக் கதைகளையும், நகைச்சுவை அல்லாத கதைகளையும் படைத்து இப்போதைய எழுபது ப்ளஸ் வயதிலும் ப்ளாகில் எழுதிக் கொண்டிருக்கும் உற்சாக இளைஞர்.

கடுகு ஸார் டில்லியில் வேலை கிடைத்துச் சென்று பிஸியான எழுத்தாளராகி இருந்த சமயத்தில் கோபு நண்பருடனேயே திரைப்படப் பணியாற்றினார், ஸ்ரீதரின் படங்கள் தவிர தனியாக பல படங்களுக்கு கதை வசனம் எழுதியதுடன் சில வெற்றி. ஒன்றிரண்டு தோல்விப் படங்களை இயக்கியும் இருக்கிறார் சித்ராலயா கோபு. சமீபத்தில் இயக்குனர் ஸ்ரீதர் மறைவிற்குப் பின். தான் ஸ்ரீதருட்ன் இணைந்து பணி புரிந்த அனுபவங்களை ‘இயககுநர் ஸ்ரீத்ர் நினைவலைகள் ஞாபகம் வருதே’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார். ஸ்ரீதரின் திரையுலக வாழ்க்கையுடன் அவரின் சொந்த வாழ்க்கையையும் அருகில் இருந்து கவனித்த இந்த நண்பர் அவற்றை விவரித்திருக்கும் நினைவலைகளைப் படிக்கையில் தெரியாத பல சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

••• ‘‘சிலோனிலிருந்து ஒரு பையன் வந்திருக்கிறான். திருச்சியைச் சேர்ந்த பையன்தான்” என்று ஸ்ரீதரிடம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பையன்’ யாரென்று தெரியுமா உங்களுக்கு..? ••• தயாரிப்பாளர் கோவை செழியன் கோவையிலிருந்து விமானத்தில வந்தபோது பார்த்த ஒரு அழகான ஏர்ஹோஸ்டஸைப் பற்றி ஸ்ரீதரிடம் கூற... ஸ்ரீதரால் பிரபல நடிகையான அவர் யார் தெரியுமா...? ••• ஒருநாள படப்பிடிப்புக்கு தாமதமாக வந்த பத்மினிக்கு ஸ்ரீதர் தந்த தண்டனை என்ன தெரியுமா..? ••• வெண்ணிற ஆடை படத்தில் நிர்மலா நடித்த கேரக்டரில் நடித்திருக்க வேண்டிய ஹேமமாலினி ஏன் நீக்கப்பட்டார்... தெரியுமா உங்களுக்கு..? - இவையும் இன்னும் பல சுவாரஸ்யங்களும் இந்த அனுபவப் புதையலுக்குள் குவிந்து கிடக்கின்றன. சாம்பிளுக்கு ஒன்று :

டுத்த படம் சஸ்பென்ஸ் கதை, அதுவும் கலரில் என்றதும் யூனிடடே பரபரப்பானது. வழக்கம்போல் ஸ்ரீதர் கதையெல்லாம் சொல்லாமலே ஒரு பாடலைப் பதிவு செய்து படத்தைத் துவக்கி விட்டார். வின்சென்ட் - சுந்தரத்துக்கு இது முதல் கலர்ப்படம். கலர் கலர் செலஃபோன் பேப்பர்களை லைட்டுகளுக்கு அலங்காரம் செய்யவே நேரம் போதவில்லை. எம்.எஸ்.வி. கோஷ்டியில் வயலின் வாசித்த ஹென்றி டேனியல் என்பவரை வில்லனாக அறிமுகப்படுத்த முடிவு செய்து அவரை வைத்து ஒரு காட்சியையும் எடுத்துவிட்டார் ஸ்ரீதர். திடீரென்ற என்ன தோன்றியதோ... ஸ்ரீதர் என்னை அழைத்து, “இப்பொழுது எடுத்ததை எல்லாம் மறந்து விடுவோம், வேறு கதை எடுப்போம் என்றார். நாங்கள் யாருமே ‘ஏன், என்ன’ என்று கேட்கவில்லை, அதன் பிறகு உருவானதுதான் ‘காதலிக்க நேரமில்லை’.

“ஏன் ஒரு முழுநீள நகைச்சுவைப் படம் எடுக்கக் கூடாது?” என்று ஸ்ரீதரிடம் நான் கேட்டேன். “கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள் போன்ற உருக்கமான கதைகளைக் கொடுத்தவன் நகைச்சுவைக் கதை எழுதி டைரக்ட் செய்தால் ரசிகர்கள் விரும்புவார்களா?” என்றார் ஸ்ரீதர், “உன் கைவசம் ரொமான்ஸ் இருக்கிறது, காதல் காட்சி எடுப்பதில் நீ மன்னனாயிற்றே... காதலையும் நகைச்சுவையையும் வைத்து ஒரு கதை செய்தால் போகிறது” என்றேன். ஸ்ரீதர் உடனே மடமடவென்று கதாநாயகன் நாயகி காதல் செய்யும் ஆரம்பக் காட்சிகளை கூறிக் கொண்டு வந்தார், அதில் கதாநாயகியின் தந்தையிடம் வேலை போனவுடன் அவர் வீட்டு எதிரிலேயே கதாநாயகன் போராட்டம் செய்யும் காட்சிகளை விளக்கினார், உடனே நான். “அந்த முதலாளியின் பையனை ஒரு சினிமா பைத்தியமாக நாம் சித்தரித்தால், அவன் தன் பணக்காரத் தந்தையிடம் பணம் கேட்பதைப் போல நிறைய காட்சிகளை வேடிக்கையாக வைக்கலாம்” என்றேன்.

தினமும் சென்னை மெரீனா பீச்சில் டிஸ்கஷன். கதை மளமளவென்று வளர்ந்தது. ஒருநாள் டிஸ்கஷன் முடிந்து வீடு திரும்பும் போது, “என் ஸ்ரீதர்... அப்பா வேடத்தில் நண்பன் நடிக்கும் போது நண்பனின் அப்பாவே அங்கு எதேச்சையாக வந்தால் எப்படி இருக்கும்?” என்று கேட்டேன். ஸ்ரீதருக்கு அந்தத் திருப்பம் ரொம்பவும் பிடித்துப் போயிற்று. “திருப்பு காரை” என்றார். மறுபடியும் பீச்சுக்குத் திரும்பினோம், விட்ட இடத்திலிருந்து பேசினோம், வேகம் என்றால் அப்படி ஒரு வேகம், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முழுக் கதையும் அனறே ரெடி. வீட்டுக்கு வந்து கதையின் காட்சிகளை ஒரு வரியில் வரிசைப்படுத்தி யூனிட் நண்பர்களுக்கு கதையை விவரித்துச் சொன்னபோது அவர்கள் கதையை மிகவும் ரசித்தனர்.


ப்படித் துவங்கி ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் சுவாரஸ்யங்களை அவர் விவரிப்பதைப் படிக்கையில் மனதில் மகிழ்வு நிறைகிறது. ஸ்ரீதருடன் பணியாற்றிய ஒவ்வொரு படங்களைப் பற்றியும்,. தானே எழுதி இயக்கிய படங்களைப் பற்றியும் சித்ராலயா கோபு சொல்லிக் கொண்டே வர...  மொத்தப் பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைக்க முடிந்தது. எத்தனையெத்தனை சுவாரஸ்யங்கள்..! உங்களுக்கு (பழைய) தமிழ் சினிமா பிடிக்கும் என்றாலும் ஸ்ரீதரை ரசிப்பீர்கள் என்றாலும் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தில் எனக்குப் பெரிய குறை என்னவென்றால்... லேமினேட்கூட செய்யாத சாதாரண அட்டைப்படம், நல்ல பேப்பர் இல்லாமல் நியூஸ் பிரிண்ட் பேப்பரில் அச்சிடப்பட்டுள்ள 192 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்திற்கு 150 ரூபாய் விலை வைத்திருப்பது மிகமிக அநியாயமாகப் பட்டது. (நான் இதை ஒரு பழைய புத்தகக் கடையில் பாதி விலைக்குத்தான் வாங்கினேன் என்ற ரகசியம் நமக்குள் இருக்கட்டும்!) வெளியிட்டிருப்பவர்கள் : ப.எண்.151, பு.எண்.306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-10ல் இருக்கும் குமுதம் பு(து)த்தகம் பதிப்பகத்தினர். (போன் : 26426124/45919141 / puduthagam#kumudam.com) இங்கே வாங்கிப் படித்தாலும் சரி... இல்லை என்போல் வாங்கிப் படித்தாலும் சரி... சுவாரஸ்யமான இந்தப் புத்தகம் தவறவிடக் கூடாத புத்தகம்தான்.

Sunday, April 27, 2014

நழுவும் நேரங்கள்-- வாசந்தியின் கதை விமரிசனம்

படைப்பாக்கம் : கீதா சாம்பசிவம்


 வழக்கமான வாசந்தியின் கதைகளில் இதுவும் ஒன்று என்ற கணக்கில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.  புத்தகம் முதல் பதிப்பு கண்ட வருடம் 1984.  அதன் பின்னர் 20 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பதிப்புக் கண்டிருக்கிறது.  இப்போது மேலும் பத்து வருடங்கள் ஆகிவிட்டன.  ஆனாலும் கதையின் சூழ்நிலையிலோ, கருக்களத்திலோ மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

 குடும்ப வாழ்க்கையில் கணவன் - மனைவிக்கிடையே உள்ள ஒற்றுமையின்மை குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைச் சொல்லும் கதை. இதைப் பல எழுத்தாளர்களும் கையாண்டிருக்கிறார்கள்.  வாசந்தியின் கதைக்களம் அவரது வழக்கம்போல் பணக்காரக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களையே கொண்டிருக்கிறது. பணம் மட்டும் இருந்தால் போதாது என்பதை உணர்த்தும் கதாநாயகி ஷீலா!  தாய், தந்தைக்கு இடையே உள்ள மாபெரும் இடைவெளியைத் தன் முயற்சியால் அகற்ற முயல்கிறாள்.

 வழக்கமான முக்கோணக் காதல் தான் அடிப்படையும் கூட. கதாநாயகியின் அம்மா மெத்தப் படித்தவளாக இருந்தும், தன் கணவனின் மாறுபட்ட நடத்தைக்குக் காரணம் என்ன என்பதைக் கணவனோடு விவாதிக்கக் கூட இல்லாமல்  தன் மனதைப் பூட்டுப் போட்டு இறுக மூடிவிடுகிறாள்.  நாளடைவில் அது பாறையைப் போல் இறுகிவிட, அவள் குழந்தைகளின் மேல் வைத்திருக்கும் அன்பும், பாசமும் கூட வெளிப்பட வழியின்றி ஒரு மோசமான தாயாகத் தெரிகிறாள் அவள் குழந்தைகளுக்கு.  தந்தை மேல் எந்தத் தவறும் இருக்காது என உறுதியாக நம்பும் கதாநாயகி ஷீலா, தாயின் இந்த குணத்தால் மிகவும் பாதிக்கப்படுகிறாள்.  என்றாலும் அவள் மன உறுதி அவளை முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வைக்கிறது.  அதே சமயம் தன் தம்பியின் சகவாசம் சரியில்லை என்பதை உணர்ந்ததும், அதைத் திருத்தவும் முயல்கிறாள்.  வெற்றியும் அடைகிறாள்.  அவளுக்கு அதிர்ச்சி அளிப்பது தந்தையின் முன்னாள் காதலியோடு அவருக்கு இப்போதும் தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்தது தான்.  ஆனாலும் அவள் மனம் ஒப்பவில்லை.  

தந்தையின் காதலியோடு தந்தைக்கு உடல் உறவு உண்டா?  அவளை அவர் ஏன் மணக்கவில்லை?  அவள் ஏன் இப்போதும் தந்தையோடும் உறவு வைத்திருக்கிறாள்?  அவளால் தான் தங்கள் குடும்பம் இந்த நிலைக்கு வந்திருப்பது அவளுக்குத் தெரியாமலா இருக்கும்?  இதற்கு எப்படி முடிவு கட்டுவது?  ஷீலா யோசித்து யோசித்து மூளை குழம்புகிறாள். இதற்கிடையில் ஷீலாவின் வீட்டு அவுட்ஹவுசில் குடி இருக்க வரும் டாக்டர் அவள் மனதில் மெல்ல மெல்ல இடம் பிடிக்கிறான்.  ஆனால் அவர்கள் நடுத்தரக் குடும்பம் என்பதால் தாய் ஒப்பமாட்டாள் என ஷீலாவுக்குக் கவலையாகவும் இருக்கிறது.  அதே சமயம் அந்த டாக்டரும் தன்னை விரும்புகிறானா என்பதில் சந்தேகமும் வருகிறது.  ஏனெனில் அவன் சென்னைக்குப் பெண் பார்க்கவும் போகிறான்.

 ஷீலாவின் கவலைகள் தீர்ந்தனவா?  அவள் தாயும், தந்தையும் ஒன்று சேர்ந்தனரா?  ஷீலாவின் காதல் நிறைவேறியதா?  இவை அனைத்தும் தெரிந்து கொள்ளப் படியுங்கள்.  சில இடங்களில் கொஞ்சம் மிகையான நிகழ்வுகளாகவும், சினிமாத்தனமாகத் தெரிந்தாலும் ஒருமுறை படிக்கலாம்.


நூலின் பெயர்   :    நழுவும் நேரங்கள் 
ஆசிரியர்           :    வாஸந்தி  
விலை              :    ரூ. 65 ( பத்து வருடங்களுக்கு முன்பு, இப்போ நிச்சயம் விலை ஏறியிருக்கும்) 
வெளியிட்டோர் :   வானதி பதிப்பகம் 


Sunday, April 20, 2014

வசந்த்! வசந்த்! - பழைய பஞ்சாங்கம்..!

                 
                    பெயரின் வசீகரத்தில் கணேஷ் வசந்த் கலக்கி இருப்பார்கள் என்ற எண்ணத்தில் புத்தகத் திருவிழாவில் வாங்கிய நாவல் இது. சுஜாதா 1983 ல் எழுதியது. செல்போன்கள், இன்டர்நெட் இல்லாத காலத்தில் துப்பறிந்ததை இன்று படிக்கும் பொழுது கொஞ்சம் பழைய பஞ்சாங்கமாக தெரிந்தது. இருந்தும் கதையின் விறுவிறுப்பு நம்மை இதைப் பற்றியெல்லாம் யோசிக்க விடாமல் நகரச் செய்கிறது.                      

 உக்கல் என்ற கிராமத்தில் உள்ள "இராஜராஜன்" கிணற்றை பற்றி ஒரு விரிவுரையாளர் எழுதப் போக, அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை திருடிப் போக ஒரு கும்பல் வருவதில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. அந்த விரிவுரையாளரின் மகள் இனியாவை காதலிக்கும் வசந்த். வசந்தின் சேட்டை, கணேஷின் பொறுமை. உக்கல் கிராமம் சென்று இதைப் பற்றி விசாரிக்க செல்லும் இருவருக்கும் வரும் கொலை மிரட்டல்கள், அங்கே நடக்கும் கொலைகள் என ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றிச் செல்கிறது கதை.

                           சுஜாதாவின் தீவிர வாசகனான எனக்கு இந்தக் கதை எதோ அவசர கதியில் எழுதியது போன்று இருந்தது. கிணறு, ஆராய்ச்சி, துரத்தும் கும்பல் என்றதுமே நம்மால் கதையை ஆரம்பத்திலேயே  ஊகித்து விட முடிகிறது. தவிர சில இடங்களில் சினிமா திரைக்கதை போல் வடிவெடுக்கும்போது கொஞ்சம்  சலிப்பு தட்டுகிறது. ஒரு கட்டத்தில் கணேஷை சில தடியர்கள் சுற்றி வளைத்து விட்ட நிலையில் அங்கிருந்து தப்பிப்பது அக்மார்க் சினிமாத்தனமான விவரிப்பு. இந்த ஒரு நெருடலைத் தவிர நமக்கு வழக்கமான சுஜாதா ஸ்டைல் எழுத்துகள் அப்படியே இருக்கின்றன.

                             இனியாவிடம் வசந்த் செய்யும் காதல் லீலைகள், குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கிறது. கணேஷ் தனியாக இனியாவை சந்திக்க செல்லும்போது வசந்த் இருந்திருந்தால் அவளை எப்படியெல்லாம் வர்ணித்திருப்பான் என்று கணேஷ் கற்பனை செய்து பார்ப்பது போன்றவை கொஞ்சம் அபத்தமாக இருக்கிறது. கேஸை வெற்றிகரமாக முடித்தபின் இனியாவை வசந்திற்கு திருமணம் செய்துவைக்க கணேஷ் முயற்சி செய்யாதது ஏன் என்பது சுஜாதாவிற்கே வெளிச்சம். (ஒரு வேளை ஜேம்ஸ் பாண்ட் போல் காதல் ரசம் சொட்ட மட்டுமே வசந்த் எனும் கதாப்பாத்திரத்தை படைத்திருப்பாரோ? )

                             மொத்தத்தில் வசந்த் வசந்த் ஒரு ஜாலியான துப்பறியும் கதை. சுஜாதாவின் சிறந்த நாவல்களுள் ஒன்றாக இதைக் கூற முடியாவிட்டாலும் சுஜாதா ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தரும் வகையில் இல்லை.  உயிர்மை பதிப்பகத்தில் நான் வாங்கிய புதிய பதிப்பின் விலை ரூ.140. ஆனால் அதே புத்தகம் வேறொரு பதிப்பகத்தில் இருபத்தி ஏழு ரூபாய்..

     

நூலின் பெயர்   :    வசந்த்! வசந்த்!
ஆசிரியர்           :    சுஜாதா 
பக்கங்கள்          :    176
 விலை              :    ரூ.140
வெளியிட்டோர் :   உயிர்மை பதிப்பகம்  
                              11/29, சுப்பிரமணியம் தெரு,
                              அபிராமபுரம் 
                               சென்னை  - 600 018Monday, April 14, 2014

உழவுக்கும் உண்டு வரலாறு - நம்மாழ்வார்

வரலாற்றையும் கலாசாரத்தையும் புரிந்து கொள்ளாமல் சமுதாயம் முன்னேறுவது முயற்கொம்பே. இந்தியாவானது இன்னும் மிகப்பெரிய அளவில் உவு சார்ந்த ஒரு நாடுதான். சுதந்திரம் அடைந்த போது இருந்த மக்கள் தொகை போல, இரு மடங்கு மக்கள் (73 கோடி பேர்) கிராமத்தில் வாழ்கிறார்கள். உழவுக்கு அடிப்படையான உழவர்கள், விடுதலைக்கு முன்போ... பின்போ நலமாக இருந்த வரலாறு கிடையாது, என்ற முன்னுரையுடன் தொடங்குகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி அமரர் நம்மாழ்வார்.விகடன் குழுமத்தில் இருந்து பசுமை விகடன் தொடங்குவதற்காக ஆலோசனை பெறச் சென்ற விகடன் குழுமம் அய்யா நம்மாழ்வார் அவர்களையே ஒரு தொடர் எழுதும்படி கூற, தொடராக வெளிவந்து பின் புத்தகமாக உருப்பெற்றது தான் உழவுக்கும் உண்டு வரலாறு.

இப்புத்தகம் மூலம் நம்மாழ்வார் அவர்கள் வலியுறுத்த விரும்புவது இயற்கை விவசாயத்தையும் கடந்த சில நூற்றாண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஏற்பட்டு வரும் பரிணாமங்கள் மற்றும் செயற்கை உரங்கள் பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கத்தால் மலடாகிப் போகும் மண் மற்றும் உழவு என்ற தனது விரிவான பார்வையை பதிவு செய்துள்ளார். 

இயற்கை வேளாண் விவசாயத்தின் மகத்துவமும் அதன் முக்கியத்துவமும் பற்றி உலகத்தில் இருக்கும் பல்வேறு வேளாண் விஞ்ஞானிகள் அவர்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் குறித்து எழுதி இருக்கும் நம்மாழ்வார் அத்தகைய பன்னாட்டு விஞ்ஞானிகளுக்கு ஆய்வகமாக உறுதுணையாக இருந்தது இந்திய விவசாயிகளும் இந்திய நிலங்களுமே என்ற தரும் தகவல் ஆச்சரியத்தின் உச்சம். இயற்கை வேளாண்மையை பற்றி தனது ஆழப்பார்வையை விதைத்த முதல் வேளாண் விஞ்ஞானி ஆல்பர்ட் ஓவர்ட் தனக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாக செயல்பட்டவர்கள் இந்திய உழவர்களே என்ற கூற்று ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் விஷயம்.

ரசாயன உரங்களும் பூச்சிகொல்லிகளும் எப்படி ஒரு உயிர்ச் சுழற்சியையே இல்லாமல் ஆக்குகிறது என்பது குறித்து நம்மாழ்வார் விளக்கும் பகுதிகள் தேர்ந்த ஆசிரியன் மாணவனுக்கு விளக்கும் லாவகம் நம்மாழ்வார் எழுத்தில். 

மண் என்பது திடப்பொருள் அல்ல, உயிரோட்டமுள்ள ஓர் அமைப்பு. மண்ணில் கழிவு  என்று எதுவும் இல்லை.  சங்கிலியில் பல கண்ணிகள் உள்ளன. மேல்மட்ட கழிவு, கீழ்மட்டத்தின் உணவு. மனிதர்கள் கழித்ததை கால்நடைகள் உண்ணுகின்றன. கழிவு புழுக்களுக்கும் நுண்ணுயிர்களுக்கும் உணவாகிறது. நுண்ணுயிர் செயல்பாடு செடி வளர்ச்சிக்கும் தேவைபடுகிறது. உணவுச் சங்கிலியை புரிந்து செயல்பட்டால் பண்ணைக்குத் தேவைப்படும் சக்தியின் அளவு குறையும்.

இந்த புத்தகம் முழுக்க முழுக்க வேளாண்மை சார்ந்த கட்டுரைகளே. மண்ணுக்குள் ஒரு பயணம் என்ற கட்டுரையில் பயிர் வளர்ப்புக்கு தேவையான புறக் காரணிகளை விளக்குகிறார் நம்மாழ்வார்.அமீபா, பூஞ்சைகள், வாலிகள், பாக்டீரியாக்கள், கார்பன், நைட்ராஜன் என்று நம்மாழ்வார் விளக்கும் ஒவ்வொரு விசயங்களும் என்றோ தாவரவியல் புத்தகத்தில் படித்ததை நினைவூட்டுகின்றன. 

நிலம் வளமானதா இல்லையா என்பதை காட்டித்தரும் உயிரினம் மண்புழு.  காற்றோட்டத்தை உண்டுபண்ணுகிறது. தனிமங்களை செடி ஏற்கும் வண்ணம் உதவுகிறது. நிலத்தில் ஒரு சான் அளவுக்குள் இருக்கும் மேல் மண்ணே பயிர்வளர்ப்பில் முக்கியம். அந்த மேல் மண்ணில் கோடி கோடியாக நுண்ணுயிர்கள் உள்ளன. அவை தாவரங்கள், விலங்குகளின் கழிவுகளை சிதைக்கின்றன. பயிர் வளர்ச்சிக்கு தேவையான தனிமங்களை பயிர் வளர்ச்சிக்கு ஊட்டி விடுகின்றன. சிதைவுக்கும் வளர்ச்சிக்கும் பாலமாக நுண்ணுயிர்கள் இருக்கின்றன. இந்த நுண்ணுயிர்களை ரசாயனம் அழிக்கும் என்பதாலேயே எந்திரங்களையும் ரசாயனங்களையும் எதிர்க்க வேண்டும் என்கிறார் நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள். மேலும் 1960 முதலாக இந்தியாவில் நடத்தப்பட்டிருப்பது பசுமைப் புரட்சி அல்ல பசுமை சார்ந்த வியாபாரப் புரட்சி என்கிறார். 

இப்படி வியாபாரப் புரட்சியின் மூலமும் பன்னாட்டு வேளாண் ஒப்பந்தங்கள் மூலம் மண்ணை மலடாக்கும் முயற்சிகளையும் உழவர்களுக்கு பாதுகாப்பளிக்காமல் தற்கொலைக்கு தூண்டும் அரசாங்கத்தையும் கடுமையாக சாடுகிறார். மேலும் உழவைப் பாதுகாப்பது உழவரைப் பாதுகாப்பது உணவைப் பாதுகாப்பது என்று ஆணித்தரமாக குறிப்பிடும் வாசகம் பொன்னேட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் அரசு ஏட்டிலும் பொறிக்கப்பட வேண்டிய விஷயம். 

2008ம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்து கிட்டத்தட்ட தற்போது வரையிலும் பத்து பதிப்புகள் வெளிவந்துவிட்ட இப்புத்தகத்திற்கு ஓவியர் ஹரன் வரைந்த சித்திரங்கள் பாராட்டப்பட ஒன்று 

நகரத்துவாசியான என்னை போன்ற பலருக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் அவர்கள் கையைப் பிடித்து இது தான் விவசாயம் கற்றுகொள் என்கிறார் நம்மாழ்வார். இப்புத்தகம் விவசாயம் சார்ந்த முழுமையான கையேடோ ஆழமாகப் பேசும் புத்தகமோ அல்ல. வேளாண்மை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் ஆரம்ப நிலை வாசகனுக்கான புத்தகம். ஒருவேளை இருந்தால் தவறவிடாதீர்கள். 

படித்துவிட்டு 'நல்லாத்தான் சொல்லப்பட்டிருக்கு' என்று சொல்வதற்கு அல்ல இந்த நூல்... 'வருங்கால சந்ததிக்காக ஏதாவது ஒன்றைச் செய்யாமல் ஓயமாட்டேன்' என்று முடிவெடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் கையிலும் ஆணின் கையிலும் இருக்க வேண்டிய கைவிளக்கு இது. அவர்களுக்கு இவ்விளக்கு ஒளி உமிழும்! நெஞ்சுக்கு நெருக்கமானவர்களே உங்களை ஆரத்தழுவுகிறேன்  என்கிறார் நம்மாழ்வார்.  

உழவுக்கும் உண்டு வரலாறு - நம்மாழ்வார் - விகடன் பிரசுரம் ரூபாய் 75/-

Sunday, April 6, 2014

நீலகேசி - சரித்திர மர்ம நாவல்!

னவரியில் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இந்நாளில் சரித்திரத்தை சுவாரஸ்யமாக எழுதும் எழுத்தாளர்கள் இல்லையே என்ற ஆதங்கம் என்னுள்ளிருந்ததால் பின் அட்டைக் குறிப்பு மற்றும் எழுத்தாளரின் உரை ஆகியவற்றைப் படித்துவிட்டு இந்தச் சரித்திரக் கதையை வாங்கினேன். பொதுவாய் புத்தகங்களை படிக்கும்படி வாசகனை உள்ளிழுப்பதில் அதன் அழகான அட்டைப்படத்துக்கும் ஒரு பங்கு உண்டு. இந்த நூலின் அட்டைப்படம் அப்படிக் கவராததால் ஓரமாகப் போட்டு வைத்து விட்டேன். சென்ற வாரம் ஓர் (அ)சுபதினத்தில் இரவு 2 மணிக்குப் போன மின்சாரம் மறுதினம் பகல் 2 மணிக்கு வந்த இடைநேரத்தில் இதைக் கையிலெடுத்தவன் அன்று மாலையில் இதை முடித்துவிட்டுத்தான் கீழே வைத்தேன். வாழ்க தமிழக அரசு!

மிழ்நாடு சேரர்,. சோழர், பாண்டியர் என்று மூவேந்தர்களால் ஆளப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மன்னர் பரம்பரையினர் மேலோங்கி ஆதிக்கம் செலுத்த, மற்ற வேந்தர்கள் சிற்றரசர்களாக இருப்பதை வரலாற்றில் காணலாம். சேரர்கள் பலம் ஓங்கியிருந்த காலகட்டத்தில் இக்கதை புனையப்பட்டிருக்கிறது. இமயம் வரை படையெடுத்துச் சென்று வென்றதால் இமயவரம்பன் என்று சிறப்புப் பெயர் கொண்ட நெடுஞ்சேரலாதன் காலத்தில் கதை நிகழ்கிறது. சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் காலத்தில் எரித்திரியக் கடலில் உலாவி வந்த கடற்கொள்ளையர் முசிறி, தொண்டி துறைமுகங்களில் பெரும் தொல்லை கொடுத்து வந்ததை முற்றிலுமாக அழித்தான் என்பது வரலாறு கூறும் செய்தி. அந்தச் செய்தியுடன் பாண்டியப் பேரரசின் சிக்கலையும் இணைத்து ‘நீலகேசி’ என்ற இந்த சுவாரஸ்யமான கற்பனைப் புதினத்தை வனைந்திருக்கிறார் ‘பரதவன்’.

பாண்டிய உபசேனாதிபதி இளையநம்பியிடம் தான் இளவரசனாக இருந்தபோது காதலித்த பெண்ணைப் பற்றியும், அரசனானதும் சூழ்நிலைகளால் அவளை அடைய முடியாமல் போனதையும். அவளின் அண்ணன் ஒருவன் மட்டும் கடுஞ்சினத்தோடு தன்னிடம் சண்டையிட்டதையும், பின்னொரு சமயம் அவன் (இயக்கன்) பாண்டிய நாட்டின் பொக்கிஷம் ஒன்றை (மலயத்துவஜ பாண்டியனின் வாள், கிரீடம்) கொள்ளையிட்டுச் சென்றதையும் கூறி. அதனை மீட்டு வரும்படியும். பாண்டிய சேனாதிபதியாக இருந்து தற்சமயம் கொள்ளைக்காரனாக மாறிவிட்ட ஆதன் அழிசி என்பவனைக் கைது செய்து வரும்படியும் இரட்டைப் பொறுப்புகளை தருகிறான் பாண்டிய மன்னன். (ஹை! சாண்டில்யன் மாதிரி நானும் நீள வாக்கியம் எழுதிட்டேனே..!) இயக்கன் என்ன காரணத்தாலோ முகத்தை மறைத்து உலவுவதாக இளைய நம்பிக்குத் தகவல் தருகிறான் பாண்டியன். தொண்டிக்கு இளையநம்பி வர, அத்துறைமுகம் கடற்கொள்ளையரால் திடீரென ஆக்கிரமிக்கப்படுகிறது.

அந்த இரவில் எதிர்பாராத இரண்டு சம்பவங்களில் அவன் சிக்கிக் கொள்கிறான். 1) ஹீரா என்ற யவன அழகியை காப்பாற்றப் போய் கடற்கொள்ளையர் தலைவனான நாகனின் தம்பி இளநாகனைக் கொன்று விடுகிறான். 2) அவளை அவள் அணணனிடம் சேர்த்துவிட்டு வருகையில் சேர இளவரசி இமயவல்லி குறுவாளால் குத்துப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அவளைக் காப்பாற்றுகிறான். அவள் மூலம் கொள்ளையர்கள் சேரனின் அன்புக்குப் பாத்திரமான புலவர் கண்ணனாரை கடத்திச் சென்று விட்டதையும், கடல்வழி, தரைவழி தொடர்புகளை அடைத்து விட்டதையும் அறிகிறான். இவ்ற்றின் விளைவாக தொண்டியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி சேர இளவரசி வேண்டியதை அவனால் மறுக்க இயலாமல் பொறுப்பு ஏற்கிறான் இளையநம்பி.

பொறுப்பேற்ற பின்தான் தனக்குக் கிடைத்திருப்பது இருக்கையல்ல, ஒரு திரிசூலத்தின் முனையில் தான் அமர வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறான். ஒருமுனையில் கடற்கொள்ளையருக்கு சேரனின் பொக்கிஷத்தை திருட ஆசை காட்டி அழைத்து வந்திருக்கும் ஆதன் அழிசி, இன்னொருபுறம் இயக்கனைப் போலவே முகத்தை மூடி தன்னை ‘குடநாட்டு மன்னன்’ என்று சொல்லிக் கொண்டு சதி செய்யும் மர்ம மனிதன், மூன்றாம்புறம் தன் தம்பியைக் கொன்றவனைப் பழிவாங்கத் துடிக்கும் கொள்னையன் நாகன்... இப்படி மூன்று சிக்கல்களை சமாளிக்க வேண்டியவனாகிறான். இதனிடையில் சேரன் மகளின் காதல் கிடைக்க, தான் தேடிவ்ந்த இயக்கன் தொண்டிக்கருகிலுள்ள தீவில் மறைந்திருப்பதை அறிகிறான். பாண்டியனின் கடமையையும் நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் கூடுகிறது. இவையெல்லாவற்றையும் இளையநம்பி தன் புத்திசாலித்தனம். வீரம் இவற்றின் உதவி கொண்டு எப்படிச் செய்தான் என்பதை 47 அத்தியாயங்களில் விவரிக்கிறது கதை.

சரித்திர நாவல் படித்திருப்பீர்கள்... மர்ம நாவல் படித்திருப்பீர்கள்... இந்தக் கதையை சரித்திர மர்ம நாவல் என்று புதுப் பெயரிட்டுத்தான் அழைக்க வேண்டும். கதையை பெரும்பாலும் சாண்டில்யனின் பாணி கதைசொல்லலில் சொல்லியிருக்கிறார் பரதவன். வழக்கமான காதல் மற்றும் வீரத்தை ரசிக்கும் அதேவேளையில் க்ளைமாக்ஸில் அந்த மர்ம மனிதன் பிடிபட்டதும் அவன் யார் என்பதையும் ஏன் செய்தான் என்பதையும் இளைய நம்பி விவரிக்கையில் பிரமிப்பு ஏற்படுகிறது. அகதாகிறிஸ்டி பாணியிலான மர்ம முடிச்சைத்தான் அவர் போட்டிருக்கிறார் என்றாலும் சரித்திரக் கதையில் இந்த சஸ்பென்ஸை சற்றும் எதிர்பாராததில் மிதமிஞ்சிய வியப்பு எனக்கு. கதைக்கான சரித்திர ஆதாரங்களை ஆசிரியர் நாவலின் முடிவில் அடுக்கியிருக்கிறார். அது தேவைப்படாமலேயே நம்மால் கதையின் விறுவிறுப்பை நிச்சயம் ரசிக்க முடியும்.

“பரதவன்’ என்ற புனைபெயருக்குள் மறைந்திருக்கும் நூலாசிரியர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவரின் மற்றப் படைப்புகளையும் படித்துவிட வேண்டும் என்ற ஆவலை மட்டும் நிறையவே தூண்டி விட்டு விட்டார் என்னுள். 288 பக்கங்கள் கொண்ட இந்த நூலை 140 ரூபாயில் எண் 34.1, பூரணம் பிரகாசம் சாலை, பாலாஜி நகர், இராயப்பேட்டை, சென்னை-14ல் இயங்கி வரும் முற்றம் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். (செல் : 98847 14603)

சரித்திரக் கதை உங்களுக்குப் பிடிக்கும் என்றாலும் மர்மக் கதை உங்களுக்குப் பிடிக்கும் என்றாலும் இரண்டு ப்ளேவர்கள் கலந்த ஐஸக்ரீம் போன்ற இ(க)தை நிச்சயம் அருந்த(படிக்க)லாம். ரசிப்பீர்கள் நிச்சயம்!

Wednesday, April 2, 2014

வாஸந்தியின் ‘ஜனனம்’

ழுத்தாளர்களை ஆண் எழுத்தாளர், பெண் எழுத்தாளர் என்று பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எழுத்துக்களில் கருத்துக்களில் ஆண், பெண் வித்தியாசம் உண்டா என்ன? அப்படிச் சொல்லக் காரணம் பொதுவாக பெண் எழுத்தாளர்கள் குடும்பம், உறவு சார்ந்த கதைகளை அதிகம் எழுதி வருகிறார்கள் என்பதாகத்தான் இருக்க முடியும். அந்த வகையில் வாஸந்தியின் எழுத்துக்கள் மிகவே வித்தியாசமானவை. அரசியல் பிரச்னைகளையும் சமூகப் பிரச்னைகளையும் அவரின் எழுத்து புயலாய் அலசும். காதல் கதைகளையும், மென்மையான மன, உறவுச் சிக்கல்களை அலசி தென்றலாகவும் நம்மைத் தீண்டும். இந்த ‘ஜனனம்’ என்ற நூலில் தென்றலாய் மூன்று குறுநாவல்கள் அணிவகுத்திருக்கின்றன. அவற்றைப் பற்றிச் சொல்கிறேன்.

ஜனனம் - அஸ்ஸாமில் வசித்த சமயம் வாஸந்தி கேள்விப்பட்ட ஒரு விபத்துச் செய்தி இந்தக் கதைக்குக் கரு தந்திருக்கிறது. ஒரு பஸ் விபத்தில் சிக்கி அனைவரும் இறந்துவிட, ஒரே ஒரு பெண் மட்டும் உயிர் பிழைக்கிறாள். ஆனால் விபத்தின் விளைவாக அவள் தன் பெயர், கடந்தகால நினைவுகள் அனைத்தையும் இழந்து விடுகிறாள். அவளுக்குச் சிகிச்சை தரும் டாக்டர் அவளின் அழகினால், பழகும் தன்மையால் ஈர்க்கப்பட்டு காதலாக, இவளுக்குள்ளும் காதல் பூ பூக்கிறது. அவர்கள் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கும் சமயத்தில் அவளின் கடந்தகாலம் எதிர்ப்படுகிறது. விளைவாக... அவர்கள் பிரிந்தனரா, சேர்ந்தனரா என்பது க்ளைமாக்ஸ். எந்த இடத்திலும் சலிப்புத் தட்டாத தங்குதடையற்ற எழுத்தில் இந்தக் கதையைக் கொண்டு செல்கிறார் வாஸந்தி. இந்தக் கதை ஆனந்த விகடனில் வெளியாகி, (மலையாள) மாத்ருபூமியில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘இந்நிலே’ என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக பத்மராஜன் இயக்கத்திலும், ‘யாரோ எழுதிய கவிதை’ என்ற தலைப்பில் தமிழில் ஸ்ரீதர் இயக்கத்திலும் வெளியானது என்பதற்கு மேல் சிறப்பாக நான் என்ன சொல்ல..?

மூங்கில் பூக்கள் - இந்தக் கதை மிஜோரம் மாநிலத்தை கதைக்களனாகக் கொண்டது. மிஜோ பழங்குடியினர் வாழும் மாநிலம். அங்கே பள்ளி ஆசிரியையாக இருக்கும் கதாநாயகி ஷீலா தன்னிடம் படிக்கும் முரட்டு பழங்குடி மாணவன் சுங்காவின் மேல் அன்பு செலுத்துகிறாள். ஷீலா காதலிக்கும் மிலிட்டரி ஆசாமியான ராஜீவுக்கு அது சுத்தமாகப் பிடிப்பதில்லை. ராஜீவ் ஜாலி ஆசாமி என்பது வரை அறிந்திருக்கும் ஷீலாவிடம், அவன் பெரும் குடிகாரன் என்றும், பழங்குடி இனப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறான் என்றும், ராஜிவ் நல்லவன் அல்ல என்றும் புகார் சொல்கிறான் சுங்கா. சுங்காவை ஒரு தீவிரவாதி என்றும் ஷீலாவை அடைவதற்காக அவன் செய்யும் ட்ரிக்தான் தன் மீது பழி சொல்வது என்றும் சொல்கிறான் ராஜீவ். எது உண்மை என்பதை ஷீலா விரைவில் அறிய நேர்கிறது. அதன் விளைவு... பரபர்ப்பான, நாம் சற்றும் எதிர்பாராத க்ளைமாக்ஸ். இந்தக் கதையும் மாத்ருபூமியில் மொழிபெயர்க்கப்பட்டு, அதே பத்மராஜன் இயக்கத்தில் ‘கூடெவிடே’ என்கிற படமாக வெளியாகி, தேசிய, மாநில விருது வென்றது என்பது கூடுதல் சிறப்பு.

ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன - அப்பா, அம்மா, அடலசண்ட் வயது மகன் என்கிற முக்கோண உறவுகளுக்கிடையிலான மனப்போராட்டங்கள் தான் கதை. ஆகவே கதைச் சுருக்கத்தைச் சொல்ல இயலாது. படிக்கையில் இந்தக் கதையில் வரும் நாயக்ன் (சிறுவன்? வாலிபன்?) சந்திக்கும் மனப் பிரச்னையை பல இடங்களில் நாம் பார்த்திருப்பதை உணர்வோம். உணர்வுகளைப் பேசினாலும் அழகான வர்ணனைகள். இயல்பான உரையாடல்கள், ஷில்லாங் (மேகாலயா தலைநகர்) பின்னணி என்று படித்து முடிக்கும் வரை நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.

டித்து முடித்ததும் இந்தக் கதைகளின் நிகழ்வுக்களம் தமிழ்நாடாக இல்லாமல் வேறு மாநிலப் பின்ணணியில் இருந்தாலும் அதுவே ஒரு வித்தியாசமான ரசனையை நமக்குத்தர விறுவிறுப்பாகப் படித்துவிட முடிகிறது. கதை மாந்தர்கள் அனைவரும் தமிழர்கள்தான் என்பதாலும் கதைகளின் விறுவிறுப்பும் நிச்சயம் ஏமாற்றாதவை. 272 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்திற்கு ரூ.90 என்று நியாயமான (சில பதிப்பங்கள் போல் 160 வைத்து கொள்ளையடிக்காமல்) விலை வைத்திருப்பது மகிழ்வு. சென்னையில் தி.நகரில் மாசிலாமணி தெருவில் 8ம் இலக்கத்தில் இயங்கும் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். (போன் - 24364243, 2432177, 24336502),


நூலாசிரியர் குறிப்பு : பங்கஜம் என்ற இயற்பெயர் கொண்ட வாஸந்தி கர்நாடகாவில் உள்ள தும்கூரில் 26.7.1941இல் பிறந்தவர். மைசூர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் வரலாறில் பட்டம் பெற்றவர். திருமணத்திற்குப் பின் நாட்டின் பல பகுதிகளில் தன் கணவருடன் வசித்தவர். உசிலம்பட்டி பெண்சிசுக் கொலைகள் பற்றியும், தமிழக பீடி பெண் தொழிலாளர்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவரின் ‘ஆகாச வீடுகள்’ நாவல் யுனெஸ்கோ தொகுப்பு வெளியீடாக வந்துள்ளதுடன் ஆங்கிலம், செக், ஜெர்மன், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாப் சாகித்ய அகாதமி விருது, உத்திரப்பிரதேச இந்தி ஸஸைதானிக் விருது உட்பட பல விருதுகள் வென்றவர்.