Thursday, October 1, 2015

ஒரு வெயில் நேரம் - நர்சிம் (சிறு கதைகள்)


சில நாட்களுக்கு முன் எனது புத்தக அலாமரியை மேய்ந்து கொண்டிருக்கையில் கையில் சிக்கியது இந்த "ஒரு வெயில் நேரம்", எப்போது இந்நூலை வாங்கினோம் என்ற ஆச்சர்யத்துடன் எடுத்து சில பக்கங்களை புரட்டுகையில் நினைவுக்கு வந்தது. இந்த நூலை வாங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகிறது, எப்படி தவற விட்டேன் என்கிற சிந்தனையில் படிக்கத் துவங்கினேன். அமிர்தம் சூர்யாவின் அணிந்துரையை படித்ததும் கொஞ்சம் மிகைப் படுத்தி புகழ்ந்திருப்பாரோ என்ற நினைப்புடன் வாசிக்கத் துவங்கிய என்னை, உன் நினைப்பு தவறென்றது முதல் கதை. வாசித்து முடிக்க மிகச் சரியாக இரண்டு நாட்கள் ஆனது எனக்கு, இடையிடையே நிறுத்தி நிறுத்தி தான் வாசித்தேன். ஒழுங்கான வாசிப்பாளனுக்கு ஒரு நாள் போதுமானது என்று நம்புகிறேன்.



பதினைந்துக்கும் மேற்பட்ட கதைகளால் உள்ளடங்கியிருக்கும் இந்த வெயில் நேரம் வாசிக்க வாசிக்க குளுமையாக இருக்கிறது. தன்னை கடந்து போன மனிதர்களையும், தாம் கடந்து வந்த மனிதர்களையும் அவர்தம் வாழ்வியலையும் கதைக்களனாக தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் திரு. நர்சிம். ஒவ்வொரு கதைக்குப் பின் ஒரு அழுத்தமான வலி இருக்கிறது. சிலவற்றை படித்து அறிந்து கொள்ள முடிகிறது, இன்னும் சிலவற்றை உணரவும் முடிகிறது.

வாசிப்பாளனையும் கதையின் பங்குதாரியாக ஆக்குவதில் இருக்கிறது கதையாளனின் வெற்றி, அது நர்சிமுக்கு மிக அழகாய் கை கூடி வருகிறது. இந்த தொகுப்பிலுள்ள எந்த கதையிலும் இலகுவாய் நம்மை இணைத்துக் கொள்ள முடிகிறது. வாசகனை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைத்து கதை சொல்கிறேன் என்று வகுப்பெடுக்காமல் எவ்வித சிக்கலுமில்லாமல் கதைக்குள் புகுத்தி கதை சொல்வது புது இரகம். ஒரு நாவலுக்கான கருவை சுமந்து நிற்கின்றன இவரது ஒவ்வொரு கதைகளும்.

இத்தொகுப்பில் என்னை பெரிதும் ஈர்த்தது என்றால் 'புளிக்காரக்கா' கதை தான், காதலியோடும், அவளின் அம்மாவோடும் நிகழ்த்தும் காதலன் ஒருவனின் காம களியாட்டம், அக்கதையை வாசித்து முடிக்கையில், உச்சிக்கிளையில் ஏறி காலின் பெருவிரலால் அழுத்தி புளியை உலுக்கும் அந்த உதறலை நமக்கும் வரவைக்கிறது. அந்த நடுக்கம் குறைய சில நாட்கள் தேவையாய் இருக்கிறது.

 'அம்பத்தாறு' கதையில் கிராமத்து ஆணின் மனதுக்குள் ஒளித்து வைத்திருக்கும் வன்மத்தை வெளிச்சம் போட்டு காட்டுகையில் மனது பக்கென்று அடித்துக் கொள்கிறது, வாழையடி வாழை கதையில் இறப்பினை வைத்து ஒருத்தன் கொண்டாடுவதும், ஒருத்தன் அதை துக்கமாய் அனுஷ்டிப்பதுமாக இருவேறு மன நிலையை அவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருப்பார்.

'மதுரம்' கதையில் வரும் தங்கைய்யா போன்று ஊருக்கு ஒன்றேனும் இருப்பர், அப்படி ஒரு மனிதரோடு கொஞ்ச நாள் நானும் பழகி இருக்கேன் என்பதினால் இக்கதை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்கைய்யா இறந்த பின்பு அவரின் பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட காதல் கடிதத்தை வாசித்த எவராலும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது அந்த சோக சுரத்தை!

உச்சமாக 'வேப்பம் பழங்கள்' கதையில் வரும் பழனி செய்யும் செயல் நெஞ்சை பிசைந்தாலும் தன்னால் இல்லறத்தில் ஈடுபடமுடியாமல் தன்னோட தந்தையிடம் கதறுகையில் பழனி மேல் வரும் மரியாதை கலந்த அனுதாபத்தை கண்டு  பிரமித்து நிற்கையில், அவரின் அப்பா தரும் அதிர்ச்சியை பழனி மட்டுமல்ல வாசிக்கும் நம்மாலும் தாங்கி கொள்ள இயலாத பெருஞ்சுமை.

இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும், அது என்னவெனில் சில கதைகளை வாசிக்க கொஞ்சம் அதீத கவனம் தேவையாய் இருக்கிறது. அவ்வளவு எளிதில் சில கதைகளை புரிந்து கொள்ள இயலாமல் வாசகர்கள் தடுமாறலாம் என்பது எனது கருத்து. இந்த "ஒரு வெயில் நேரம்" வாசிக்கையில் நிச்சயம் ஒரு மழை நேரமாக நம்முள் படரக் கூடிய வல்லமை கொண்டுள்ளது, நேரம் கிடைக்கையில் வாசிக்க மறந்து விட வேண்டாம்.

இந்த நூலைப் பற்றியும், திரு. நர்சிம் அவர்களைப் பற்றியும் இணையத்தில் துழாவிப் பார்த்துவிட்டேன் ஒன்றும் கிடைக்க வில்லை, உங்களுக்கு யாரேனும் தகவல் தெரிந்தால் கருத்துரையில் மறக்காமல் தெரிவித்து செல்லுங்கள்.

--------------------------------------------------------------------------

பதிப்பகம்: பட்டாம்பூச்சி
                      28/A, கிருஷ்ணன் கோயில் தெரு,
                      ஆழ்வார் திருநகர்,
                      சென்னை - 600 087.
                      mobile: 9841003366

பக்கங்கள் : 112

விலை : ரூபாய் 50/-

--------------------------------------------------------------------------

வாசித்து எழுதியது

அரசன்
http://www.karaiseraaalai.com/