Thursday, July 31, 2014

தாயார் சன்னதி - திரு. சு.கா.


சில புத்தகங்களை முடிக்கும் வரை கீழே வைக்க மனம் இடம் கொடுக்காது, ஆனால் சில புத்தகங்களை இடைவெளி விட்டுத்தான்  வாசித்தாக வேண்டுமென மனம் கூப்பாடு போடும். அந்த வரிசையில் இரண்டாம் இரகத்தை சேர்ந்தது இந்த தாயார் சன்னதி. அதற்காக புத்தகம் வேறு மாதிரியோ என்ற ஐயம் வேண்டாம். மழைக்கால சாயந்திர வேளைகளில் நொறுக்குத் தீனியோடு கிடைக்கும் வெது வெதுப்பான தேநீர் போல சுவையான புத்தகம்! வளர்ந்து வரும் எழுத்தாளர் திரு. சீனு அவர்கள், உச்சி வெயில் மண்டையை பதம் பார்க்கும் ஒரு மதிய வேளையில், "தலைவரே இது உங்கள் இரசனைக்குரிய புத்தகம், தொடர்ந்து வாசிக்க வேண்டாம், இடைவெளி விட்டு வாசித்தால் உங்களுக்கே காரணம் புரியும்" என்று சொல்லி கொடுத்தார்! அவர் சொன்னது போல் சின்ன சின்ன இடைவெளி விட்டே வாசித்தேன்!  அழகான புத்தகம்!


ஆசிரியரைப்பற்றி....

சுகா எனும் பெயரில் எழுதி வரும் திரு. சுரேஷ், திருநெல்வேலியை சார்ந்தவர். விகடனின் "மூங்கில் மூச்சு" என்ற தொடரின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர்! அமரர். பாலு மகேந்திராவின் வளர்ப்புகளில் இவரும் ஒருவர். விரைவில் திரைப்படங்களில் இயக்குநர் என்ற இடங்களில் இவரின் பெயரை பார்க்கலாம் என்று நம்புகிறேன்! மேலும் திரு. சுகாவை பற்றி அறிய வேணுவனம் செல்லுங்கள். 



நூலைப்பற்றி ...

முதலில் இவரின் எழுத்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும், ரொம்பவும் மெனக்கெடாமல் தானாக வந்து விழும் வார்த்தைகள் இவரின் நடை. திருநவேலி மீது இவரிருக்கும் காதலை நுணுக்கமாக சொல்லியிருக்கிறார் என்பதை இந்நூலை வாசித்தவர்களுக்கு விளங்கும்! தேர்ந்த இசை ஞானம் உள்ளவர் என்பதற்கு இந்நூலின் உள்ள சில கதைகளே சாட்சி! இரண்டு பதிப்புகளை கடந்து மூன்றாம் பதிப்பாக வந்திருக்கும் இந்நூல் 45 குறுங்கதைகளால் நிரம்பியிருக்கின்றது! ஒவ்வொன்றும் திருநவேலியை மட்டுமே சுழன்றாலும் இடையிடையே இவரின் வாத்தியார் பற்றியும், மற்றும் சினிமா உலக நண்பர்கள் பற்றியும் பேசுவது படிக்க சுவையாக இருக்கிறது.

உச்சிமாளி, சொக்கப்பனை, கோட்டி, தாயார் சன்னதி, பிரமனாயகத் தாத்தாவும் விஜயலலிதாவும், க்ளோ, இடுக்கண் களைவதாம், சந்திராவின் சிரிப்பு, பாம்பு என்ற பூச்சி, சின்னப்பையன், யுகசந்தி இவைகள் படித்தவுடன் மனதில் பதிந்துவிடும் தன்மை கொண்டவைகள்...       

இசையைப் பற்றி வரும் சில இடங்களில் என் போன்ற இசை ஞானம் அறவே இல்லாதவர்கள் கொஞ்சம் பொறுமை இழக்க கூடிய அபாயமும் இருக்கிறது! மற்றபடி வாசிப்பவர்களை நிச்சயம் இந்நூல் ஏமாற்றாது என்பது கருத்து... 

பதிப்பகம் : சொல்வனம் 
வெளியீடு : கிழக்கு பதிப்பகம் 
மொத்தப் பக்கங்கள் : 280.
விலை : 200/- 

படித்து சொன்னது: அரசன் 
http://karaiseraaalai.blogspot.in/

Wednesday, July 16, 2014

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்

1944ஆம் ஆண்டு அக்டோபர் பதினாறாம் தேதி - தீபாவளித் திருநாள் - அன்று வெளியான ஹரிதாஸ் திரைப்படம் தொடர்ந்து 110 வாரங்கள் ஓடியது. அதாவது எண்பது வருட தமிழ்த் திரையுலகில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் இது தான். மயில்கண் சரிகை வேஷ்டி, சில்க் சட்டை, ஜவ்வாது மணம், பளபளக்கும் சரீரத்துடன் அனைவரையும் வியக்க வைக்கும் சாரீரத்தையும் பெற்றிருந்த எம்.கே.தியாகராஜா பாகவதர்தான் அந்த சாதனையின் நாயகன்.

Sunday, July 13, 2014

எ.மூ.வீ.நாத் படைத்த ‘பணம்!’

திகாலத்தில் மனிதர்கள் தங்களிடமிருக்கும் பண்டங்களைக் கொடுத்து அதற்கு மாற்றாக தங்களுக்கு வேண்டிய பண்டங்களைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்தினர். இந்தப் பண்டமாற்று முறையை மாற்றி மன்னராட்சிக் காலத்தில் செப்புக் காசுகளும், பொற்காசுகளும் புழங்கலாயின. பின்வந்ததுதான் கரன்சி என்கிற பணம். மனிதன் தன் வசதிக்காகக் கண்டுபிடித்த, அவனின் கட்டுப்பாட்டில் இருந்த பணம் நாளடைவில் மனிதனைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆதிக்கம் புரியலாயிற்று.

பணம் சம்பாதிப்பதையே வெறியாகக் கொண்டு மனிதர்களைச்  செயல்படச்  செய்தது. நிறையப் பணம் இருப்பதால் கிடைக்கும் வசதிகளும், செல்வாக்கும் மனிதர்களுக்குப் போதை தர, பிறரை மதிக்காத, அந்தஸ்து என்கிற ஒன்றை பெரிதாகக் கருதும் குணத்தை அது ஏற்படுத்தியது. பணத்தை அடைவதற்காக எத்தகைய சூழ்ச்சிகளும், துரோகங்களும் செய்கிற துணிவை மனிதர்களுக்கு அது ஊட்டியது. 

பிரபல எழுத்தாளரான எண்டமூரி வீரேந்திரநாத் எழுதி ஆந்திர மக்களிடம் பெரும் வரவேற்பைப்  பெற்று ஹிட்டடித்த நாவல் ‘டப்புடப்பு’ நாவல் இதைத்தான் அலசியது. தமிழில் சுசீலாகனகதுர்கா அவர்களால் ‘பணம்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது இந்த நாவல். 

காந்தி படித்த வேலையற்ற இளைஞன். மிகபுத்திசாலி, கணக்கில் புலி. தாயார் இறந்தசமயம் இறுதிச் சடங்குகள் செய்யவும் பணமில்லாத அளவு வறுமை. பணக்காரர் ராஜாராமின் மனைவியை ஹார்ட் அட்டாக்கினால் அட்மிட் செய்ய வந்திருக்க, அவர் மகள் ஹாரிகாவிடம் தன் கணிதத் திறமையைக் காட்டி பணம் சம்பாதித்து, தன் தாயை உலகிலிருந்து வழியனுப்புகிறான். பின் வாழ்க்கையில் வெறுப்புற்று, காலில் கல்லைக் கட்டிக் கொண்டு ஆற்றில் குதிக்கிற காந்தி, அங்கே ஒரு பெண் ஆற்றில் தத்தளிப்பதைக் கண்டு அவளைக் காப்பாற்றுகிறான். அவள் பெயர் லக்ஷ்மி. காந்தியினுள் தன்னம்பிக்கையை விதைக்கிறாள் அவள்.

பேப்பரில் வித்தியாசமான ஆட்கள் தேவை விளம்பரத்தைப் பார்க்கும் காந்தி அதற்கு (வேண்டுமென்றே) ஸ்டாம்ப் ஒட்டாத கவரில் விண்ணப்பிக்கிறான். அந்த விளம்பரம் தந்தவரான ராஜாராம் அவனை இண்டர்வியூவுக்கு அழைக்கிறார்.  பேசுகையில் காந்தி மிக அறிவாளி என்பதை கணக்கிடுகிறார் அவர். பணம் சம்பாதிப்பதற்கும் பிறரை மோசம் செய்வதற்கும் தொடர்பு இருந்தே தீரும் என்கிற காந்தியின் சித்தாந்தத்தை மறுத்து விவாதிக்கிறார். ஒரு கட்டத்தில் ஐந்து வருஷத்தில் ஐம்பது லட்சம் சம்பாதிப்பது ஒன்றும் முடியாத காரியமில்லை என காந்தி சொல்ல, அதுவே பந்தயமாகிறது அவர்களுக்குள். அப்படி அவன் சாதித்துவிட்டால் தன் மகளைத் தருகிறேன் என்று உணர்ச்சி வசப்பட்டு பந்தயமிடுகிறார் ராஜாராம். சம்பாதிப்பதற்கான நிபந்தனை - சட்டத்திற்குப் புறம்பாக ஒரு பைசாகூட சம்பாதித்திருக்கக் கூடாது என்பது.

கோடீஸ்வரனிடம் பந்தயம் போட்டுவிட்டு வந்த காந்தியின் கையில் அப்போது இருப்பது பத்துப் பைசா மட்டும்தான். ‘நீ என்ன அமிதாப்பச்சனா, மே கஸம் கர்தாஹும்னு சவால் விட்டு ஜெயிக்கறதுக்கு’ என்று கேலி செய்யும் லக்ஷ்மி அவனுக்கு துணை செய்கிறாள். சம்பாதிக்கத் துவங்குகிறான். அந்தக் கடினமான போராட்டத்தில் பணம் அவனுக்கு வசப்பட்டு பணக்காரனாகும் நேரம். பரபமபத பாம்பு கடித்தாற் போன்று நஷ்டம் தாக்கி மீண்டும் பழைய நிலையை அடைகிறான். பின்னே... அவனை ஜெயிக்கவிட்டு  மகளைத்தர ராஜாராம் முட்டாளா என்ன.... அவர் செய்த திட்டம் (சூழ்ச்சி?)யின் விளைவுதான் அது.

அப்போது பந்தயம் விட்டு நான்காண்டுகள் நிறைந்திருக்கின்றன. எஞ்சிய ஓராண்டு தீர்மானிக்கப் போகிறது அவன் வெற்றியாளனா இல்லை தோற்றவனா என்று. அந்த சுவாரஸ்யமான போட்டியில் ராஜாராமை மீறி காந்தி எப்படி சாதித்தான்? லக்ஷ்மி அவனை விரும்ப, ஹாரிகா வெளியே காட்டிக் கொள்ளாமல் மனதிலேயே அவனை விரும்பி அவனுக்கு மறைமுக உதவிகள் செய்ய. இருவரில் யாரை அடைந்தான் அவன்? அவன் பெற்ற வெற்றி உண்மையில் வெற்றிதானா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையை பரபரப்பாக பக்கங்களைப் புரட்ட வைக்கும் ‘பணம்’ புத்தகம் உங்களுக்குப் பகரும்.

மிக சீரியஸான, கனமான ஒரு விஷயத்தைக் கையாளும் போது நிறையத் தகவல்களும் தரவேண்டியிருப்பதால் படிப்பதற்கு விறுவிறுப்பிருக்காது என்ற பொதுக்கருத்தைத் தகர்க்கிற புத்தகம் இது.  அடுத்தடுத்த சம்பவங்களும், துரோகங்களும் சேர்ந்து கதையை விறுவிறுப்பாகப் படிக்கச்  செய்வதுடன் நிறைய விஷயங்களை நமக்கு அதனுனூடாகப் பரிமாறியிருக்கிறார் எ.மூ.வீ.நாத். எப்படி சில  தொழிலதிபர்கள் அந்தத் துறையில் அவர்கள் அறியாமல் ஒரு துரும்பும் அசையாது என்கிற அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதில் துவங்கி பங்குச் சந்தை, ஷேர்கள் போன்ற பணம் சம்பாதிப்பதற்கான ஆதார வழிகளை அலசி, படிப்பவர்களுக்குள் சற்றேனும் விஷயஞானத்தை ஏற்றி விடுகிறார் எ.மூ.வீ.நாத். 

364 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை சென்னை உஸ்மான் சாலையில் உள்ள பாரதி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. 1985ம் ஆண்டில் வெளியான பதிப்பு (விலை உள்ள பக்கம் இல்லாததால் தெரியவில்லை). இப்போது கௌரி கிருபாநந்தன் மொழிபெயர்ப்பில் அல்லயன்ஸ் பதிப்பம் வெளியிட்டுள்ளது இந்தப் புத்தகத்தை.

டெய்ல் பீஸ் :  இந்தப் படம் சிரம்சீவி ச்சே... சிரஞ்சீவி, சுஹாசினி நடிக்க படமாக வெளிவந்து தமிழிலும் ‘டப்’பப்பட்டது.  நாவல் நமக்குள் உருவகப்படுத்தும் காந்தி திரையில் இல்லை. சிரஞ்சீவிக்காக சண்டைக் காட்சி, டூயட் காட்சிகள் என்றெல்லாம் வைத்து படுத்தியிருந்தது படம். எ.மூ.வீ.நாத் பார்த்திருந்தால் நிச்சயம் கதறி அழுதிருப்பார்.

Wednesday, July 2, 2014

குற்றப்பரம்பரை - பேரன்பும் பெருங்கோபமும்

படைப்பாக்கம் : சீனு 


அரசன் அறம் புத்தகத்தை என்னிடம் கொடுக்கும் போதேமற்றுமொரு இலவச இணைப்பாக 'வேலராம மூர்த்தியின் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பையும் கொடுத்து 'அறம் படிக்கையோ இல்லையோ இத மொதல்ல படி' என்று கூறியிருந்தார். வேலராம மூர்த்தியின் கதைகளை முதலில் வாசிக்கத் தொடங்கினேன். அப்படி ஒன்றும் பிரமாதமாய் இல்லை. அல்லது அந்த எழுத்து எனக்குப் புரியவில்லை. சரி அப்புறம் வாசித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ஒரு ஓரமாய் வைத்துவிட்டேன். புத்தகம் கொடுத்ததில் இருந்து சிலநாட்களுக்கு அரசன் 'யோவ் படிச்சியா படிச்சியா' கேட்டுக் கொண்டே இருந்தார். 'வாசிக்கப் பொறுமையில்லை' என்றேன். 'பரவாயில்ல, பொறுமையா படி ஒன்னும் அவசரம் இல்ல' என்றார். பதிலுக்கு புன்னகையைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை.



சிறிது நாட்கள் கழித்து 'தலைவரே குற்றப்பரம்பரைன்னு ஒரு நாவல் நம்மாளு வேலராம மூர்த்தி எழுதினது. பட்டாசா இருக்கும் படி' என்று கொடுத்தார். திணித்தார் என்பது கூட ஒருவகையில் சரிதான். 'தலைவரே மொத கொடுத்த புக்கே இன்னும் முடிக்கல அதுக்குள்ள இதுவா, வேணாம்யா நமக்கு செட் ஆகாது' என்றேன். 'இல்ல தலைவரே நீ படிச்சே ஆகனும். தவறவிடக் கூடாத புத்தகம்' என்றார். 

'அரவான் படம் கூடகுற்றபரம்பரை நாவலின் சில பகுதிகள் தான். அட மதயானைக் கூட்டம் படத்துல வில்லனா நடிச்சவர் கூட இவர் தான்' என்று என்னவெல்லாமோ கூறினார். மீண்டும் மறுத்தேன். 'சரி நீ படிக்க வேணாம். ஆனா புத்தகம் உன்கிட்டயே இருக்கட்டும் அப்ப தான் நீ என்னிகாது படிப்ப' என்றபடி திணித்தார். படிக்கக் கூடாது என்றில்லை. படிக்க வேண்டும் என்று வாங்கிய புத்தகங்களே க்யூவில் நிற்க இதையும் வாங்கி என்ன பண்ணவது என்ற தயக்கம்தான். போதாக்குறைக்கு இது இலக்கிய வகையறாப் புத்தகம். நாலு வெங்கயாத்தை கண்ணில் பிழியாமல் விடமாட்டார்கள். இலக்கியம் என்ற பெயரில் வந்த ரா.கா சாலையின் தாக்கமே இன்னும் என்னில் இருந்து விலகவில்லை அதற்குள் இதுவேறா. புத்தகத்தின் பக்கங்களைப் பார்த்தேன். மிகக் குறைவு தான் வெறும் நானூறு. வேறுவழியில்லை வாங்கிக் கொண்டேன். வேலராம மூர்த்தியின் கதைகள் புத்தகத்தின் அருகில் குற்றபரம்பரைக்கும் ஒரு இடம் இருந்தது. 

வாரங்கள் ஓடின. ஒவ்வொரு வாரமும் அரசன் தவறாமல் 'தலைவரே படிச்சியா' என்று கேட்பதும் நான் 'ஹிஹிஹி' என்று கூறுவதுமே வழக்கமாய் இருந்தது. சமீபகாலங்களில் கேட்பதை நிறுத்தியிருந்தார். அல்லது 'இவன்ட்ட கேட்டு பிரயோசனம் இல்ல, கழுத படிக்கும் போது படிக்கட்டும்' என்று விட்டுவிட்டார். அவ்வபோது கண்ணில் படும். எடுத்துப்பார்ப்பேன். மீண்டும் எடுத்த இடத்திலேயே பத்திரமாய் வைத்து விடுவேன்.

சமீபத்தில் கொடைக்கானல் சென்றபோது எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துக் கொண்டேன். எடுத்துச்சென்றது வீண் போகவில்லை. கொடைக்கானல் மலையேறும் போது மெல்ல குற்றபரம்பரையினுள் காலடி எடுத்துவைத்தேன். இது போன்ற இலக்கியப் புத்தகங்கள் படிக்கும் சில முன் தயாரிப்புகள் அவசியம். அதில் ஒன்று எவ்வளவு கொடூரமான சம்பவங்கள் வந்தாலும் மனம் தளரக்கூடாது, தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற மன உறுதி தான். எளிமையாய்ச் சொல்வதென்றால் இந்தப் புத்தகங்களை பாலா படங்களோடு ஒப்பிடலாம். ஆங்காங்கு சிரிப்பு நையாண்டி சந்தோசம் போன்ற விஷயங்கள் வந்தாலும் கதை நெடுக ஒரு மெல்லிய சோகமும் நம்மோடு பயணிக்கும். (கிட்டத்தட்ட நம் வாழ்க்கையே அப்படித்தான் இருக்கிறது என்பது வேறு விஷயம்). இலக்கிய நாவல்களில் எடுத்தாளப்படும் எளிய மனிதர்களின் வாழ்வியல் அப்படித்தான் இருக்கும். அதைத் தவிர்க்க முடியாது. தவிர்க்க நினைத்தால் இலக்கியம் பிறக்காது என்பது இலக்கிய விமர்சகர்களின் கருத்து. சரி அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். இதற்குமேலும் குற்றப்பரம்பரையினுள் நுழையவில்லை எனில் நீங்கள் தம் அடிக்கப் போய் விடக்கூடும்.            

கள்ளர் இன மக்களின் வாழ்வை, அவர்களின் சமுதாய நிலைபாட்டை, அந்த சமுதாயத்தோடு இணக்கமாக வாழ்ந்தவர்கள் எதிர்த்து நின்றவர்கள் என வெவ்வேறு தளங்களில் வாழும் மக்களின் வாழ்வியலை குற்றபரம்பரை என்னும் நாவல் மூலமாக பதிவு செய்ய முற்பட்டுள்ளார் வேல ராமமூர்த்தி. அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா என்றால்? தொடர்ந்து வாசியுங்கள்!    

யாரும் கண்டறிய முடியாத காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் கள்ளர் கூட்டத்தை சுற்றி வளைத்துப் பிடிக்க முயலுகிறது சர்கார். சில பல உயிர்களைப் பலிகொடுத்து சர்காரின் தாக்குதலில் இருந்து தப்பி ஓடுகிறது கள்ளர் கூட்டம். தப்பியோட வழியில்லாமல் ஆர்பரித்து ஓடும் சம்பங்கி நதியில் விழுந்து எங்கோ கண்காணாத ஓரிடத்தில் குத்துயிரும் குலையுயிருமாக கரை ஒதுங்குகிறார்கள் கள்ளர் இன மக்கள். இவர்களை பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் வில்லுத்துரை காப்பாற்றுகிறான் என்றபடி ஆரம்பமாகிறது கதை. இதுவரை கொஞ்சம் மெதுவாகப் பயணிக்கும் கதை இங்கிருந்து சுவாரசியத்தின் அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. 

கொம்பூதி என்னும் மலைக்கிராமத்தில் தங்கள் மறுவாழ்வைத் தொடங்குகிறார்கள் கள்ளர் இன மக்கள். இவர்களை தலைவனாக நின்று வழி நடத்துகிறார் மிஸ்டர் வேயன்னா. கொம்பூதி கிராமத்தின் அருகில் இருக்கும் பெரும்பச்சேரி மக்கள் அனைவரும் பெருநாழி கிராமத்து மக்களுக்கு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் தலித் மக்கள். கிட்டத்தட்ட கள்ளர் இன மக்களும் தலித்துக்களாகவே பார்க்கப்படுகின்றனர். இருந்தாலும் கள்ளர்கள் அனைவரும் பார்ப்பதற்கும் செயலில் இறங்குவதிலும் முரடர்களாக இருப்பதால் அவர்களிடம் யாரும் நெருங்கிப் பழகுவதில்லை. அவர்கள் விசயத்தில் தலையிடுவதும் இல்லை. ஆனால் பெரும்பச்சேரி மக்களை கிட்டத்தட்ட அடிமைகளைப் போலவே நடத்துகின்றனர் பெருநாழி மக்கள்.

சுற்றுவட்டாரத்தில் எங்குமே இல்லாத நல்ல தண்ணீர்க் கிணறு பெருநாழி கிராமத்தில் மட்டுமே இருக்கிறது. இங்கு தலித் மக்கள் நீர் இறைக்கத் தடை. வேண்டுமானால் பெருநாழி மக்கள் ஆளுகொரு வாளி இறைத்து பெரும்பச்சேரி மக்களின் பாத்திரத்தில் ஊற்றலாம். இப்படி ஒவ்வொரு வாளியாக நிறைவதற்கு எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் ஆகலாம். இந்தக் கிணற்றில் இருந்துதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. 

பத்துநாள் கைக்குழந்தை வைத்திருக்கும் பச்ச உடம்புகாரி ராக்கு ஒரு இக்கட்டான சூழலில் தன்னுடைய வாளிபோட்டு பெருநாழிக் கிணற்றில் இருந்து நீர்ந இறைத்து விடுகிறாள். இதை பார்த்த பெருநாழி கிராம மக்கள் ராக்கின் கணவன் துருவனுக்கு மிகக் கொடூரமான தண்டனையை வழங்குகிறார்கள். அதாவது துருவனின் உடல் முழுக்க சர்க்கரைப் பாகை ஊற்றி அவனை எறும்புகள் நிறைந்திருக்கும் மரத்தில் கட்டி வைத்து விடுகிறார்கள். 

பெருநாழிக்கு வேலைக்குப் போன புருஷன் வீட்டிற்கு வராததை நினைத்து பதறும் ராக்கு கொம்பூதி வேயன்னாவிடம் சென்று முறையிடுருகிறாள். விஷயமறிந்த வேயன்னா பெருநாழி நோக்கிக் கிளம்புகிறார். அங்கே இரண்டு நாட்களாக எறும்புகளுக்கு மத்தியில் கட்டிவைக்கப்பட்டு துன்புறுத்தபட்ட துருவன் சாகக்கிடக்கிறான். இதைப் பார்த்து கொதித்தெழும் வேயன்னா இன்றிலிருந்து பெரும்பச்சேரி  மக்கள் பெருநாழி கிணத்தில் தன் வாளி போட்டுத்தான் நீர் இரைப்பார்கள் உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள் என்று சவால் விட்டுச் செல்கிறார். அடுத்தநாளே வேயன்னா தலைமையில் பெரும்பச்சேரி கிராமமே நீர் இரைக்க வருகிறது. இந்நேரத்தில் பெருநாழி வேறு ஒரு கணக்கு போடுகிறது. 

ஆவலோடு நீர் இரைக்க வந்த பெரும்பச்சேரி மக்களுக்கு மிகபெரிய அதிர்ச்சி காத்துள்ளது. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் தன் கிணற்றில் நீர் எடுப்பதா, இதைவிட பெரிய அசிங்கம் வேறு இல்லை என்று பொருமி, நல்ல தண்ணீர்க் கிணறு முழுக்க மனித மலத்தால் நிரப்புகிறது பெருநாழி. இதைப் பார்த்த வேயன்னாவின் கோபம் இன்னும் பல மடங்கு அதிகரிக்க, தனது கூட்டத்தோடு சேர்ந்து ஒட்டு மொத்த பெருநாழியையும் அடித்து நாசமாக்குறார். 



வேயன்னாவை அடக்க ஒரே வழி ஆங்கிலேய சர்க்காரை தன் ஊரில் போலீஸ் கச்சேரி தொடங்க அனுமதியளிப்பது தான் என்று பெருநாழி முடிவு செய்கிறது. வேயன்னாவைப் பற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருந்த போலீஸ் கச்சேரி வேயன்னா கையில் விலங்கு மாட்டியே தீருவது என்ற சூளுரையுடன் பெருநாழியில் காலடி எடுத்துவைக்கிறது. அப்படி நுழைந்த முதல் போலீஸ் அதிகாரியை வேயன்னாவின் கூட்டம் ஊரைவிட்டே துரத்துகிறது. இரண்டாவது உயரதிகாரியை உலகத்தை விட்டே துரத்துகிறது. மூன்றாவதாக சேது என்னும் இளைஞன் வருகிறான். பல வருடங்களுக்கு முன் சர்கார் துரத்திய போது காட்டுபகுதியில் இருந்து வேயன்னா மற்றும் அவர் கூட்டத்தார் தப்பிப் பிழைக்கும் போது தனது ஒரு மகனை தொலைத்திருந்தார். அந்த மகன் தான் தற்போது தன் கூட்டத்தை வேரறுக்க போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கும் சேது.

இந்தவிசயம் சேதுவிற்க்கும் தெரியும். சேதுவின் வளர்ப்புப் பெற்றோர்கள் ஆங்கிலேயர்கள். கள்ளர்களை திருத்தி நல்வழிபடுத்த வேண்டும் என்ற அக்கறையுள்ளவர் சேதுவின் வளர்ப்புத் தந்தை. அதற்காகவே சேதுவை போலீஸ் அதிகாரியாக மாற்றியிருப்பவர். இந்நேரத்தில் சேது பதவி ஏற்றதும் கள்ளர் கூட்டம் திருந்தியதா இல்லை வேரோடு அழிந்ததா? வேயன்னா என்ன ஆனார்? என்பதே மீதிக் கதை. இக்கதையில்  வைரப் புதையல் தேடும் நாகமுனி, அதற்காக அவன் பலி கொடுக்க வேண்டும் என்றே வளர்க்கும் கன்னி கழியா அழகுப் பதுமை வஜ்ராயினி. அந்த வஜ்ராயினி மேல் மையல் கொள்ளும் வேயன்னாவின் புதல்வன் வில்லாயுதம். இந்தக் காதலை அறிந்த நாகமுனி வில்லாயுதத்தை சொக்கபனையினுள் வைத்து கொளுத்தி பலியாக்கும் கொடூர சம்பவம் என்று மற்றொரு கிளைக்கதையும் உண்டு.

குற்றப்பரம்பரை நாவலானது கள்ளர்களை மையமாக வைத்து பல கிளைக் கதைகளுடன் பின்னப்பட்ட சற்றே சிக்கலான கதை. இருந்தும் கதையின் மையக் கருவை மட்டும் கூற முயன்றுள்ளேன். மையக்கருவே இவ்வளவு பெரிதா என நினைக்க வேண்டும். இது நாவலின் மையக்கருவின் ஒரு சதவீதத்தின் ஒரு சதவீதம் அவ்வளவே. 

நாவலை வாசிக்கத் தொடங்கும் போது முதல் ஐம்பது பக்கங்கள் மிக மெதுவாக சென்றபோதிலும் அதற்கு அடுத்த பக்கங்கள் மிக மிக விறுவிறுப்பாக நகர்ந்தன. நாவலின் கடைசி இருநூறு பக்கங்களை அலுவலகம் முடித்து வந்த ஒரு நள்ளிரவில் ஆரம்பித்து அடுத்தநாள் அதிகாலையில் முழுவதுமாக வாசித்து முடித்த பின்பே தூங்கச் சென்றேன். அத்தனை விறுவிறுப்பான நாவல். 

ஒருவேளை பிடிவாதமாக குற்றபரம்பரை நாவலை நான் வாங்காது போயிருந்தாலோ இல்லை அரசன் பிடிவாதமாக இந்த நாவலை என்னிடம் கொடுக்காமல் இருந்தாலோ தமிழின் மிக முக்கியமான நாவலை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பை இழந்திருப்பேன். நல்லவேளை அப்படியெல்லாம் நடந்து விடவில்லை. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் தவற விடக்கூடாத நாவலில் ஒன்று குற்றபப்ரம்பரை. கதை கிட்டத்தட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடப்பது போல் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் பார்க்காத ஒரு நூற்றாண்டை, நாம் பார்க்காத ஒரு சமுதாயத்தை கற்பனை செய்து பார்ப்பதென்பதே கொஞ்சம் சுவாரசியம் தரக்கூடிய சவால் தான். அந்த சுவாரசியத்திற்காகவே இந்த நாவலை நிச்சயம் படிக்கலாம். 

ஜூனியர் விகடனில் கூட்டாஞ்சோறு என்ற பெயரில் தொடர்கதையாக வந்து பின் குற்றபரம்பரை என்ற நாவல் வடிவம் பெற்றுள்ளது. 

பதிப்பகம் காவ்யா
விலை 200