Wednesday, May 28, 2014

புரட்சியின் உச்சகட்டம் - வே.பத்மாவதி

இந்த நாவல் பற்றி ஆசிரியர் வே.பத்மாவதி ஒரு இடத்தில் சொல்கிறார், "ஒரு பெண் வளரும்போது அண்ணனையும் திருமணம் முடிந்தவுடன் கணவனையும் சார்ந்து வாழ்ந்தவள், ஆனால் இன்றைய சூழலில் யாரையும் சார்ந்து வாழாமல் தனியே வாழப் பழகிக்கொண்டாள். அந்த தனிமை எத்தனை ஆண்டுகள் தொடரலாம், பெண் புரட்சி என்று எதைப் புரிந்துகொண்டால் டைவர்ஸ் செய்வதையா, ஆணுக்குச் சரிசமமாக புகைபிடிப்பதையா, "Boyfriend Out of Town" என்று டி-ஷர்ட்டில் எழுதி உடை அணிவதையா? இன்னும் பல அலசல்கள். இது புரட்சியின் உச்சகட்டமா அல்லது விரக்தியின் உச்சகட்டமா என்பதற்கான விடைதான் இந்நாவல்".அர்ச்சிதா! டெல்லியில் தனியாக வாழும் ஒரு பணக்காரப்பெண். இன்னும் திருமணமாகவில்லை. அவளுக்கு திருமணத்தில் நம்பிக்கையும் இல்லை. காரணம், அவளது அம்மா, அப்பா. அர்ச்சிதாவைப் பெற்ற சில வருடங்களிலேயே விவாகரத்து செய்துகொண்டு தனித்தனியாக வேறு திருமணங்களும் செய்துவிட்டு வெளிநாட்டில் வசிப்பவர்கள். இவளுடைய நலனில் அக்கறை கொண்டிருக்கிறார்களோ இல்லையோ, மாதாமாதம் பணம் மட்டும் தவறாமல் அனுப்பிவிடுவார்கள். அர்ச்சிதாவும் வீட்டிலேயே இருக்கப் பிடிக்காமல் டெல்லியிலேயே ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். கை நிறைய பணம், நிறைய நண்பர்கள் என்று செல்லும் அந்த அல்ட்ரா மாடர்ன் பெண்ணுடைய வாழ்வில் வருகிறான் ஸ்ரீதர் என்னும் சென்னைப் பையன்.

தாய் தந்தையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும், தங்கைகளுக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்பதற்காக சேரிப்பகுதியில் தனியாக வசிக்கிறான் ஸ்ரீதர். அவனுடைய சொந்தக் கதையைக் கேட்ட அர்ச்சிதா தன்னுடைய நான்கு படுக்கையறை கொண்ட வீட்டிலேயே அவனைத் தங்கவைத்துக்கொள்கிறாள். இந்த லிவிங் டுகதர் வாழ்க்கை அவனுக்குப் புதிதாக இருந்தாலும் போகப்போக பழகிவிடுகிறது. கூடவே அவனுக்கு அவள்மேல் காதலும் வருகிறது. அதற்கான காரணங்களை அழகாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

திருமணத்தில் கொஞ்சம்கூட நாட்டமே இல்லாத அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தி அர்ச்சிதாவின் கோபத்துக்கு ஆளாகிறான். வீட்டை விட்டும் வெளியேறுகிறான். அதன்பின் தனியாக வாழும் அர்ச்சிதாவுக்கு நிகழும் சில சம்பவங்கள் உறவுகள் எவ்வளவு பலம் வாய்ந்தவை என்று உணர்த்துகின்றன. இதையடுத்து அவள் ஸ்ரீதரைத் தேடிச் செல்கிறாள். பின் என்ன நடக்கிறது என்பதைப் படிக்கையில் கண்ணீர் வருகிறது.

கதையின் பெரும்பகுதி இரண்டு அல்லது மூன்று கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும் உரையாடலாகத்தான் செல்கிறது. நூலாசிரியர் அதிக அளவில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யாமல் கதைக்குத் தேவையான அளவில் வைத்திருப்பது கதை ஓட்டத்தை, சூழலைப் புரிந்துகொள்ள எளிதாக இருக்கிறது. அர்ச்சிதா பணக்காரி, அவளது வாழ்க்கை ஆடம்பரங்கள் நிறைந்தது என்பதற்காக ஆசிரியர் கொடுக்கும் வர்ணனைகள் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் முதல் மூன்று அத்தியாங்கள் கடந்ததும் இவை காணாமல் போய்விடுகிறது.

இந்த நாவலின் மற்றுமோர் முக்கிய சிறப்பு ஸ்ரீதரின் பாத்திரப்படைப்பு. தன் காதலை அர்ச்சிதாவிடன் எப்படிச் சொல்வது என்று தவிக்கும் வேளையும் அவளது கழுத்தில் தங்கச் செயின் ஒன்றைக் கட்டிவிடும் சமயம் தாலியே கட்டிய பிரமிப்பில் இருப்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். உதாரணத்துக்கு ஒன்று - "எண்பது வயசுல கணவன் மனைவி ஒண்ணா சேர்ந்து வாக்கிங் போவாங்களே, அந்த டேட்டிங் எவ்ளோ அழகு தெரியுமா? தொண்ணூறு வயசுல பொண்டாட்டி செத்துப் போயிட்டான்னு தெரியும்போது மகன், மருமகப் பேரன்னு யாரையுமே மதிக்காம, கையில் குச்சியப் பிடிச்சுக்கிட்டே தள்ளாடித் தள்ளாடி நடந்துபோய் சீக்கிரமே அவ போன இடத்துக்கு நான் போகமாட்டேனான்னு தனியா அழுகற காதல்"

இக்காலத்து நவநாகரீக நங்கையர் இந்த நாவலைப் படிப்பார்களாயின் கண்டிப்பாக தாம் எந்த ரீதியில் போய்க்கொண்டிருக்கிறோம் உணர்வார்கள்.

******************************************************************************************************
வெளியீடு: மதுரா பதிப்பகம், திருச்சி

பக்கங்கள்: 181

விலை: ரூ.100

தினமலரில் தொடராக வெளிவந்தது.

ஆசிரியரின் வலைப்பூ: http://kavingarpadmavathy.blogspot.com/
******************************************************************************************************

Sunday, May 25, 2014

சுபாவின் விறு விறு த்ரில்லர்கள்..!

சுபாவின் நாவல்கள் என்று சொன்னால் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது எது...? கரெக்ட்! நரேந்திரனும் வைஜயந்தியும்தான். நரேந்திரனின் குறும்பும் சாகசங்களும், வைஜயந்தியின் இளமையும் புத்திசாலித்தனமும் அனைவரையும் கட்டிப் போட்ட விஷயங்கள். சுபாவின் நரேந்திரன் வைஜயந்தி துப்பறியும் கதைகளை மட்டும் தொகுத்து ஒரு புத்தகத்தில் மூன்று நாவல்கள் என்ற கணக்கில் ஐந்து தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார்கள் பூம்புகார் பதிப்பகத்தினர். புத்தகத்தின் பக்கங்களைப் பொறுத்து ரூ.140லிருந்து 250 வரை விலை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால ஹார்ட் பௌண்டாக (கடினமான கெட்டி அட்டை) பதிப்பித்துத் தந்திருப்பதால் அதிக விலை என்ற எண்ணம் எழவில்லை.

இந்த ஐந்து தொகுதிகளில் நான் வாங்கிப் படித்தது நான்காவது தொகுதியை. அதைப் பற்றி அலசுமுன் சுபா இந்த ந. வை., கேரக்டர்களை எப்படி உருவாக்கினார்கள் என்பதைப் பற்றி புத்தகத்தில் அவர்களே சொல்லி இருப்பதைக் கேளுங்கள்...

டிக்கும் வாசகர்கள் குற்றவாளியின் புத்திசாலித்தனத்தையும் அதைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளனின் சாதுர்யத்தையும் மாறி மாறி அனுபவிக்க வேண்டும். சிலசமயம் மர்மக் கதைகள் தவிர துப்பறியும் கதைகள் எழுதினால் இது சாத்தியம் என்று தோன்றியது, அடுத்து வரம்புகளை அமைத்துக் கொண்டோம். எங்கள் நாயகன் போலீஸ் அதிகாரியாகவோ, வக்கீலாகவே இருக்கக் கூடாது. வெறும் விசாரணை, துப்புத் துலக்குதல் என்று பேசிக் கொண்டேயிராமல் அவன் நேரடியாக களத்தில் இறங்கிச் செயல்படும் சாகச நாயகனாக இருக்க வேண்டும். வெகு சுருக்கமாகச் சொன்னால் அவன் அறிவும் ஆற்றலும் ஒருங்கே அமையப் பெற்றவனாக இருக்க வேண்டும்.

அப்படி ஒரு நாயகனை மனதளவில் உருவாக்கியதும் அவனுக்குப் பெயர் வைக்கும் கட்டம் வந்தது. எல்லோருக்கும் பிடித்த பொதுவான பெயரைத் தேர்ந்தெடுக்க விழைந்தோம், எங்களுடைய ஆதர்ச நாயகர்களில் மிக முக்கியமானவரான விவேகானந்தரின் இயற்பெயரான நரேந்திரன் எங்கள் நாயகனுக்குச் சூட்டப்பட்டது. பெண்மையின் அழகும், தரம் தழையாத கம்பீரமும் உள்ள நாயகியாக வைஜயந்தியை உருவாக்கினோம்,

துப்பறியும் நாயகன் என்பதைவிட துப்பறியும் நிறுவனம் ஒன்று அமைத்து, அதில் வெவ்வேறு திறமைகள் கொண்ட சில நாயகர்களை அதில் பணியமர்த்தலாம் என்று அடுத்த சிந்தனை வந்தது. ராணுவத்தின் மீது எங்களுக்கு இருந்த பெரும் மதிப்பால் அதன் தலைமைப் பொறுப்பை ராணுவப் பின்னணி கொண்ட ஒருவரிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தோம், கட்டுப்பாடும் கண்ணியமும் மிக்க, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராம்தாஸ் தலைமையில் “ஈகிள்ஸ் ஐ டிடெக்டிவ் ஏஜன்ஸி” (கழுகுக்கண் துப்பறியும் நிறுவனம்) உதயமானது. அவருக்குக் கீழ் இயங்க நரேந்திரன், கருணாகரன், ஜர்ன்சுந்தர் என்று ஓர் இளைஞர் பட்டாளம் அமைக்கப்பட்டது. எழுத ஆரம்பித்த பிறகு நரேனுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். அவர்களில் நாங்களும் இருவர். ஆம், நரேந்திரன் - வைஜயந்திக்கு முதல் ரசிகர்களாக நாங்கள் இருக்கிறோம்.‘சுபாவின் நரேந்திரன் வைஜயந்தி’’ நான்காவது தொகுப்பில் 1) மதிப்பிற்குரிய மகாராணி, 2) கரையோரம் காத்திரு, 3) கண்மணி, கண்ணைத் திற ஆகிய மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன, மூன்று கதைகளுமே விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல், வாசக சுவாரஸ்யத்திற்குச் சரியான தீனி போடும் படைப்புகளாக அமைந்துள்ளன. அவற்றை இங்கே அலசலாம்.

மதிப்பிற்குரிய மகாராணி - சீஃப் பைலட் விஜயகுமார் ட்ரிப் முடிந்து வீட்டிற்கு வர மனைவி ஷீலாவையும் மகள் ஸ்வப்னாவையும் காணவில்லை. ஒரு மர்ம கும்பல் அவன் மனைவி, மகளை கடத்தி வைத்துக் கொண்டு, அவர்கள் தரும ஒரு பொருளை அடுத்த அவனுடைய நியூயார்க் ட்ரிப்பில் அங்கு ஒரு நபரிடம் ஒப்படைத்தால் திரும்பக் கிடைப்பார்கள் என்று மிரட்டுகிறது. விஜய், ஈகிள்ஸ் ஐயின் உதவியை நாட, நரேந்திரன், வைஜயந்தி மற்றும் ஜான்சுந்தர் துணையுடன் துப்பறிந்து, சில பல சாகசங்கள் செய்து அவர்கள் இருவரையும் மீட்கிறான். எத்தனையோ பைலட்கள் இருக்க, விஜயகுமாரை மட்டும் அந்தக் கும்பல் ஏன் செலக்ட் செய்து அவன் மனைவி, மகளைக் கடத்தினார்கள் என்கிற காரணத்தையும் கண்டுபிடிக்கிறான்.

கரையோரம் காத்திரு - விஜயநகரத்தைத் தாண்டிய ஒரு ஒதுக்குப்புறமான ஏரிக்கரையில் ஓர் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. அவள் யார், கொன்றது யார் என்கிற விசாரணையில் போலீஸ் ஈடுபட, அந்தப் பெண்ணின் தந்தை நரேந்திரனின் உதவியை நாடுகிறார், சமூகத்தில் பெரும்புள்ளியான அவர் தன் மகள் காதலனோடு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும், அவளைக் கொன்றவன் அவன்தான் என்றும் கூறி இருவரின் போட்டோக்களை தருகிறார். தன் பெயர் வெளிவராமல் அவனை நரேந்திரன் மடக்க வேண்டும் என்கிறார். நரேந்திரன் ரகசியமாகத் துப்பறிய, போலீஸின் செயல்பாடுகளில் அவன் குறுக்கிடுவதாக இன்ஸ்பெக்டர் பால்ராஜ் கொந்தளிக்கிறார். இறுதியில்... வேறென்ன.. கதாநாயகனாக லட்சணமாக அந்தப் பெண் வினரதாவைக் கொன்றவன் அவள் காதலன் அல்ல, வேறொருவன் என்பதை (அஃப்கோர்ஸ் சில சாகசங்களுக்குப் பின்) நரேந்திரன் கண்டறிந்து போலீசில் ஒப்படைக்கிறான்.

கண்மணி, கண்ணைத் திற - முந்தைய இரு கதைகளை விட அடுத்தடுத்து நிகழும் மர்மம் + மரணம் காரணமாக இது விறுவிறுப்பின் உச்சம் தொட்டது. ஒரு கட்டிடத்தில் திருஷ்டி பொம்மைக்கு பதிலாக சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் பிணம் இருப்பதை வாக்கிங் செல்பவர்கள் பார்த்து போலீசில் சொல்ல, போலீஸ் விசாரித்து சந்தேகத்தின் பேரில் அவள் (மாலதி) கணவன் மணிவண்ணனை கைது செய்கிறது, அவன் போலீஸிடமிருந்து தப்பி தலைமறைவாகி நரேந்திரனின் உதவியை வேண்டுகிறான். குற்றவாளியை நரேன் கண்டுபிடித்தால் தான் சரண்டராவதாகக் கூறுகிறான்.

நரேந்திரன் களத்தில் இறங்கி, மாலதியின் பிணம் கண்டெடுக்கப்பட்ட கட்டிடத்தில் ஒரு சிறுவனின் ரத்தக் கைரேகை (போலீஸ் தவறவிட்ட) இருப்பதை கண்டறிகிறான். தொடரும் விசாரணைகளுக்கிடையில் மிரட்டல் எச்சரிக்கைகள் வர, தொடர்ந்து நரேந்திரன் மர்ம உருவம் ஒன்றினால் தாக்கப்படுகிறான். மணிவண்ணனின் பார்ட்னர் ராம்நாத் தான் தன்னை அடித்தது என்பதைக் கண்டறிந்து அவனை போனில் எச்சரித்து விட்டு நரேன் அவனைப் பார்க்கச் செல்ல... ராம்நாத்தின் பிணமாகக் கிடப்பதைப் பார்க்கிறான். துப்பறிதல் வேகம் எடுக்கிறது. இறுதியில் நரேந்திரன் கொலை செய்தவனைக் கண்டுபிடிக்க, அவன் போலீசில் சரண்டராக, மணிவண்ணன் விடுதலையாகிறான். க்ளைமாக்ஸில் கொலைக்காக அவன் கூறும் காரணமும் கொலை நடந்த அன்று இரவு நடந்த சம்பவங்களையும் விவரிக்கையில் படிப்பவருக்கு திடுக் உணர்வை ஏற்படுத்துவது சுபாவின் வெற்றி. மூன்றில் சிறந்தது எதுவெனக் கேட்டால் இதைக் கூறலாம்.

237 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை 235 ரூபாய் விலையில் பூம்புகார் பதிப்பகம் (127, ப,எண்,63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை/600 108. போன்: 044/25267543) வெளியிட்டிருக்கிறது. ஐந்து தொகுதிகளையும் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை இந்தப் புத்தகம் தருகிறது. ஆனால் விலையைக் கணக்கிடுகையில் அந்த ஆர்வத்தை அட்க்கு அடக்கு என்று பட்ஜெட் போடும் மனைவி தலையில் தட்டுகிறாள். ஹி... ஹி... ஹி...! உங்களுக்கு ஆர்வமும், விருப்பமும், பட்ஜெட் பிரச்னையும் இல்லாதபட்சத்தில் ஐந்தையும் படிக்கலாம் என்பதே என் சிபாரிசு. 

Wednesday, May 14, 2014

சொர்க்கத் தீவு - சுஜாதா

'சொர்க்கத் தீவு', என் மனதைக் கவர்ந்த சுஜாதாவின் சயன்ஸ் பிக்ஷன் நாவல்கள் வரிசையில் 'என் இனிய இயந்திரா'விற்கு பின் நான் இரண்டாவதாக வைப்பது. அதே சமயம் சொர்க்கத் தீவு சுஜாதா எழுதிய முதல் சயன்ஸ் பிக்ஷன் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.


திருக்கடம்பூர் சுந்தரவரதன் சீனிவாச அய்ங்கார் என்னும் அய்ங்கார் கம்ப்யூட்டர் என்ஜினீயராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் இருபத்து எட்டு வயதான திருமணம் ஆகாத இளைஞன். அவனது பணி அவன் கம்பெனிக்கு சொந்தமான ஒரு கம்ப்யூட்டரை பராமரிப்பது. அந்த கம்ப்யூட்டரை IBM மைன்ப்ரெம் போன்ற ஒரு நவீன கணினி. அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்வது தான் இவன் வேலை. அமெரிக்காவிடம் இருந்து அவன் கம்பனி வாங்கிய அந்தக் கணினியை திறமையாக கையாள்வதில் இவனை விட்டால் வேறு எவரும் இல்லை. அந்தக் கணினியின் செயல்பாடுகளை அக்கு வேறு ஆணி வேராக அறிந்து வைத்திருந்தான். அந்தக் கம்ப்யூட்டரை உருவாக்கிய அமெரிக்கன் கூட இவன் அந்தக் கம்ப்யூட்டரை கையாளும் விதம் கண்டு பல சமயம் வியந்ததுண்டு.

அய்ங்கார் தனது தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த சமயம் லீலா என்னும் பெண் அவளது அண்ணனை தனது தங்கைக்கு பேச இவனை அணுகினாள். லீலாவின் அண்ணன் விமான பைலட்டாக பணி புரிவதாக அவள் சொல்ல, அவரைக் காண இருவரும் விமான நிலையம் செல்கின்றனர். அங்கு அய்ங்கார் தன்னை அறியாமல் ஒரு விமானத்தின் உள் தள்ளப்பட, அந்த விமானம் புறப்படுகிறது. அந்தப் பெண் லீலா தன்னை ஏமாற்றி கடத்திக் கொண்டுவந்ததை அய்ங்கர் அறியும் சமயம், அந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் எதோ ஒரு தீவில் தரையிறங்குகிறது.

'சொர்க்கத் தீவில்' இறங்கிய அய்ங்கார் முறையாக வரவேற்கப்பட்டு, விமான நிலையத்தில் இருந்து ஊருக்குள் அழைத்துச் செல்லப்படுகிறான். செல்லும் வழியில் எங்கும் 'சத்யா' என்பவரின் படங்கள் இருப்பதைக் காண்கிறான். மேலும் அந்தத் தீவின் வாசிகள் அனைவரும் ஒரே வகையான புஷ்டியான உடல் கட்டுடன் இருபதைக் கண்டு வியக்கிறான். எதற்காக இங்கு தான் கொண்டுவரப்பட்டோம் என்ற கேள்வி அவனை வாட்டத் தொடங்குகிறது. அவனை சர்வ வசதிகள் பொருந்திய ஒரு அறையில் தங்கவைத்து விட்டு, விரைவில் சத்யா அவனை சந்திப்பார் என்று சொல்லி அவனை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த அதிகாரி விடை பெற்றுச்செல்கின்றார்.

சத்யாதான் அந்தத் தீவை இயக்கும் சர்வாதிகாரி என்றும், அந்தத் தீவில் 58 வயதைக் கடக்கும் பிரஜைகள் கொல்லப் படுகிறார்கள் என்ற செய்தியையும் அவன் அறிந்து கொள்கின்றான். மேலும் அந்தத் தீவில் இருக்கும் '2080' என்னும் கம்ப்யூட்டரை பழுது பார்க்க தான் அவன் கடத்திவரப்பட்டான் என்ற உண்மையும் அவனுக்கு புலப்படுகிறது. அந்தத் தீவின் வினோதங்கள் ஒவ்வொன்றையும் அவன் சத்யாவின் பார்வையில் இருந்து அறிகின்றான்.

அந்தத் தீவில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் ஒரு வகையான இயந்திரக் கட்டுப்பாட்டில் தான் வளர்க்கப் படுகின்றனர் என்றும் அவர்களுக்கு சில மருந்துகள் கொடுக்கப் பட்டு அவர்களது அடிப்படை மனித உணர்சிகள் கட்டுப்படுத்தப் பட்டு ஒரு வகையான அடிமைத்துவம் வாய்ந்த பிரஜைகளை உருவாக்கு கின்றனர். இவர்களுக்கு உணவு என்பது மாத்திரைகள் தான். அந்தத் தீவில் இருப்பவர்களுக்கு அம்மா, அப்பா, என்னுடையது, உன்னுடையது, காதல், காமம், வெறி, சமூக ஜாதி, கதை, கட்டுரை, நிஜம், பொய், போன்ற ஒன்றும் தெரியாது. அந்தத் தீவில் இருக்கும் மக்கள் அமைதி, சந்தோஷம், ஆண், பெண், விஞ்ஞானம், மனதில் மற்றும் உடலில் வலிமை கொண்ட பொம்மைகள் போல் இயக்கப் பட்டனர். ​

அந்தக் கம்ப்யூட்டரை அவன் சரி செய்து விட்டால் அவனை திருப்பி அனுப்பி விடுவதாக சத்யா வாக்களிக்க, இரவு பகல் பாராமல் அந்தக் கம்ப்யூட்டரை பழுது பார்க்கும் பணியில் அய்ங்கார் ஈடுபடுகிறான். இந்நிலையில் அவனை நந்தினி என்னும் பெண் சுய உணர்சிகளுடன் அணுகி அவனது காதலனை சந்திக்க அய்ங்காரை பணியும் பொழுது அவன் அதிர்ந்து போகின்றான். அந்தத் தீவின் சட்ட திட்டங்களை மீறி அவளது காதலன் 'கௌதமை' தனிமையில் சந்திப்பதில் இருந்து கதை வேகம் கொள்கின்றது. கௌதம் நந்தினி இருவரும் அந்தக் கம்ப்யூட்டர் பிழையால் தங்கள் தினசரி மருந்தை உண்ணமால் இருக்க அவர்களுக்கு மனித உணர்சிகள் தோன்றியிருப்பதை கௌதம் வாயிலாக அறிகின்றான்.

சத்யாவின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய அய்ங்காரை தன் பக்கம் சேர்ந்துகொண்டு, இந்தத் தீவை கட்டுபடுத்தும் 2080 கம்ப்யூட்டரை அழிக்குமாறு வேண்டுகிறான். நவீனத்துவம் கொண்டு தீவை கட்டுபடுத்தும் சத்யாவின் கண்ணில் மண்ணைத் தூவி அந்த கம்ப்யூட்டரை அழித்து அந்தத் தீவின் மக்களை அய்ங்கார் எப்படிக் காப்பாத்துகின்றான என்பது தான் மீதி கதை.

சுஜாதாவின் மற்ற நாவல்கள் போல் இல்லாமல் இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

காரணம் ஒன்று:

இந்தக் கதையின் மையம் 2080 என்னும் ஒரு கம்ப்யூட்டர்.

நான் எனது அலுவலகத்தில் இந்தக் கதையைப் பற்றி சொன்ன பொழுது எனக்கு கிடைத்த பதில் 'என்ன டமில் புக்ல மைன்ப்ரெமா 1!'.

ஆம் இன்று நான் வேலை செய்து கொண்டிருக்கும் மைன்ப்ரெம் கம்ப்யூட்டரை போன்ற ஆனால் அதை விடவும் நவீனத்துவும் வாய்ந்த ஒரு கம்ப்யூட்டரை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே கற்பனை செய்த சுஜாதாவின் படைப்பாற்றலைப் பற்றி யாரால் வியக்காமல் இருக்க முடியும்.

காரணம் இரண்டு:

விறுவிறுப்பாக சென்ற கதையின் இறுதி பக்கங்களை படித்து விட்டு நான் எதிர்பார்த்த முடிவு ஏற்படாத விரக்தியில் இருந்த பொழுது, கடைசி சில வரிகள் என்னை மெய்சிலிர்க்கச் செய்தன. சுஜாதாவின் நுண்ணறிவிற்கு சிறந்த சான்றாக இந்தக் கதையின் முடிவு இருப்பதை கண்டு மகிழ்ந்தேன். சுவாரசியத்தை இழக்காமல் இருக்க வாசகர்கள் அந்தக் கடைசி பக்கங்களை காத்திருந்து படிப்பதே நலம்.

******************************************************************************************************
வெளியீடு : வீசா பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள் : 168

விலை : ரூ.  58     
******************************************************************************************************
காதலுடன் 
ரூபக்

Sunday, May 11, 2014

இரண்டு வரிக் காவியம்

படைப்பாக்கம் : ஸ்ரீனிவாஸ் பிரபு

லகிலேயே பைபிளுக்கு அடுத்து மிக அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதும், உலகப் பொதுமறை என்று கொண்டாடப்படுவதும், மனிதனால் மனிதனுக்குச் சொல்லப்பட்ட வாழ்க்கை வழிகாட்டியுமான திருக்குறளிற்கு சமீபத்தில் தமிழில் வந்திருக்கும் தெளிவுரை நூல் தான்... ‘இரண்டு வரி காவியம். ’

பிரபல நாவலாசிரியர்கள் திருக்குறளிற்கு தெளிவுரை எழுதுவது புதிதில்லை, இருபதாண்டுகளுக்கு முன் சுஜாதா எழுதியிருந்தார், இப்போது தன் வசீகர எழுத்து நடையால் படிப்பவர் மனதை கொள்ளை கொள்ளுகிற பட்டுக்கோட்டை பிரபாகர் தன் தெளிவுரையை தந்திருக்கிறார்.  எத்தனையோ பேர் திருக்குறளுக்கு இதற்கு முன் உரை எழுதியிருக்க... இந்த ‘இரண்டு வரிக் காவிய’த்தில் அப்படி என்ன சிறப்பு? என்று பார்த்தால் ஒன்றல்ல... பல சிறப்புகள் இருக்கின்றன.

முதலாவது... உரையாசிரியர் பி.கே.பி. மிகவும் சுருக்கமாக  எளிமையாக வள்ளுவரின் வரிகளுக்கு தெளிவுரை தந்திருப்பது!

இரண்டாவது.... இரண்டு வரிகளில் வள்ளுவர் எழுதிய திருக்குறள் அனைத்திற்கும் அளவெடுத்தது போல் அதே இரண்டே வரிகளில் பளிச் பளிச்சென தெளிவுரையை எளிமையாகவும், இயல்பான வார்த்தைகளாலும் தந்திருப்பது அழகாக அர்த்தப்படுத்துகிறது.

மூன்றாவது... ஒவ்வொரு குறளிற்கும் இரண்டு வரிகளில் அர்த்தம் தந்ததோடு, ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதியிலும் அந்த அதிகாரம் குறித்தான ‘தொகுப்பு‘ (நாலே வரிகளில்),

நான்காவது... அதிகாரத்தின் சுருக்கம் (இரண்டே வரிகளில்,

ஐந்தாவது... வள்ளுவன் நீதி என்று இரண்டே வார்த்தைகளில் வள்ளுவர் அந்த அதிகாரத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதை சிறு தலைப்புகளில் அடுக்கியிருப்பது. இத்தனை சிறப்புகளுடன் கூடிய இந்த உரை நூல் ஆசிரியரின் அரிய முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. 

உதாரணமாக இல்வாழ்க்கை  - அதிகாரத்தில் வரும் குறளான...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது          குறள் 45

தெளிவுரை : பண்பான இல்வாழ்க்கை என்றால் அதில் அன்பும், நல்ல செயல்களும் இருக்க வேண்டும்.  

தொகுப்பு : அறநெறிகளுடன் கூடிய இல்லற வாழ்க்கை நடத்துபவர் அன்பு கொண்டும், பெற்றோர், வாழ்க்கைத்துணை, மக்கள், உறவினர், துறவிகள், பசியால் வாடுவோர் இவர்களுக்கு துணையாகவும் நிற்க வேண்டும். செல்வத்தை பிறருடன் பகிர்ந்துண்டு, பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் வாழ்ந்தால் அவர்கள் தெய்வமாக மதிக்கப் படுவார்கள்

அதிகாரச் சுருக்கம் :  இல்வாழ்க்கை சிறக்க அன்பும் அறநெறியும் தேவை,

வள்ளுவன் நீதி :  அன்பு செய்!

ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பொருத்தமான கோட்டு ஓவியங்களும் ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது, (ஓவியம் : தமிழ்). திருக்குறளை புரிந்து கொள்ள ஒரு எளிமையான தெளிவுரை.

=====================================================
வடிவமைத்தவன் (பாலகணேஷ்) தரும் சிறுகுறிப்பு : “நம்மில் பெரும்பாலானவர்கள் பள்ளிப் பாடங்களில் வரும் திருக்குறள்களை மட்டுமே மனப்பாடம் செய்து பொருள் அறிந்திருக்கிறோம். எல்லாக் குறள்களையும் படிச்சு ரசிக்கணும்கறது என் ஆசை. அதை முன்னிட்டே குறளுக்கு உரை எழுதும் பணியை நான் மேற்கொண்டேன். ஒரு உழவனாக, விஞ்ஞானியாக,. ஆசிரியராக. இன்னும் இன்னும் பல பரிமாணங்களில் வள்ளுவர் வியக்க வைக்கிறார். மிகுந்த சிரத்தையுடன், மனநிறைவுடன் இந்தப் பணியைச் செய்திருக்கிறேன். இது எனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும நிச்சயம்” என்று குறிப்பிட்டார் திரு.பி.கே.பி. இந்தப் பணியை என்னிடம் தரும்போது! அது  எத்தனை நிஜம் என்பதைப் படிக்கையில் உணர்வீர்கள். எழுத்துப் பிழை நெருடலாக இருக்கக் கூடாது என்பதற்காக நான்கு முறை படித்து பிழை திருத்தம் செய்யப்பட்டது என்றால் புத்தகத் தயாரிப்பில் அவரது அக்கறையை என்ன சொல்ல? இரண்டே பக்கங்களில் குறள் விளக்கம். அதிகாரச் சுருக்கம். வள்ளுவரின் நீதி, தவிர படமும் இடம்பெற வேண்டும் என்கிற சவாலான பணியை மேற்கொண்டு நிறைவாக முடித்த திருப்தி நூலைப் பார்க்கையில் எல்லாம் என்னுள்.
=====================================================


ஆசிரியர் : பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியீடு : ரம்யா பிரியா கிரியேஷன்ஸ், 37/1, கெனால் போங்க் ரோடு, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை – 600 020. போன்  : 044- 24415709 விலை : ரூ.150/- பக்கங்கள் : 280

Wednesday, May 7, 2014

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் (நாவல்)
தனக்கென்று ஒரு நடையை தேர்ந்தெடுத்து அதன்படியே எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவர் திரு. கண்மணி குணசேகரன். விருத்தாசலம், அதனை சுற்றி இருக்கும் கிராமங்களின் மண் மனம் மாறாமல் நிகழ்வுகளை பதிவு செய்து வரும் வலிமையான மனிதர். தான் காணும் நிகழ்வினை அனைவரும் இரசிக்கும் படி, படைப்பாக மாற்றுவது அவ்வளவு எளிதல்ல, அதை மிக நேர்த்தியாக செய்து வருகிறார் திரு. கண்மணி. இவரின் பெரிய பலமே ஆடம்பரமின்றி இயல்பான மக்களின் மொழியில் எழுதுவது. 

 அரசு போக்குவரத்து கழக தற்காலிக ஊழியர்கள் மூன்று பேரின்  வாழ்வியலை வலியோடு வலிமையாக பேசுகிறது நெடுஞ்சாலை நாவல். பணிமனையில் நடைபெறும் அன்றாட வேலைகளின் அறிமுகத்தோடு தொடங்குகிறது. முதலில் கொஞ்சம் சீரற்ற வேகத்தில் அங்குமிங்கும் அலைபாய்வதாய் தெரியும் பயணம் சில பக்கங்களிலே தனது சீரான நடையை தொட்டு மின்னல் வேகத்தில் நகர்த்த தொடங்கிவிடுகிறார் திரு. கண்மணி குணசேகரன்.

ஏழை முத்து, தமிழரசன், ஐய்யனார் இந்த மூன்று இளைஞர்களை பிரதானப்படுத்தினாலும் படைப்பில் வரும் சின்ன சின்ன பாத்திரங்கள் கூட மனதில் பதிந்து விடும் அளவுக்கு பாத்திர படைப்பில் நேர்த்தி இருக்கிறது. உதாரணத்துக்கு "ஏழையின் அப்பா", சென்னை பயணத்தில் வரும் இளம்பெண்ணும் அவரின் போதை மிலிட்டரி அப்பாவும். அப்புறம் குட்டி பையனின் சேட்டைகள்! சில நுணுக்கமான விசயங்களையும் கூட அவ்வளவு அழகாக சொல்வது பெரும் வியப்பு!

குடும்பம், காதல், மோகம், நட்பு, பணியிடச் சூழல், கோபம், இயலாமையின் பரிதவிப்பு இப்படி மனிதர்களின் உணர்வுகளை வெளிக்கொணரும் அதே நேரத்தில் மண்வாசனையையும் சொல்ல தவறவில்லை. அனைத்து இரசனைகளும் கொண்ட கலவையான படைப்பு ... பேருந்து, பேருந்து நிலைய நிகழ்வுகள், பயணிகளின் சேட்டைகள், பேருந்தை பராமரிக்கும் திறமை, ஊழியர்களின் மனநிலை, அவர்களின் குடும்ப பிண்ணனி இவற்றை பேசும் இந்நாவலில் அறிந்து கொள்ள எண்ணற்ற விசயங்கள் பொதிந்து கிடக்கின்றது. எளிய எழுத்தை விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு தரமான நூல் இந்த "நெடுஞ்சாலை"

குண்டு குழி சாலைகளில் கடகடத்து ஓடும் பேருந்துகளை காண்கையில், வேர்வையில் நனைந்து உயிரை பிழிந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு வணக்கம் போட வைக்கும் ஆற்றல் மிகுந்த புத்தகம். 

வெளியீடு : தமிழினி பதிப்பகம் 
நூலின் விலை : 290/-
டிஸ்கவரி புக் பேலஸில் வாங்க இங்கு கிளிக்கவும் ...