Sunday, March 30, 2014

தேவதைகளின் மூதாய் - த. விஜயராஜ்புத்தகம் வாங்குவது என்பதும் ஒரு கலை தான். ஒரு புத்தகத்துக்கு உயிர் கொடுப்பது முகப்பு பக்க வடிவைமப்பும், தலைப்பும் தான். வெறும் தலைப்பை வைத்தே புத்தகம் வாங்கும் ஆட்களும் நிறைய இருக்கிறார்கள். ஈர்ப்பான தலைப்பும், கவர்ச்சியான அட்டைப்படமும் கொண்டு ஒன்றுக்கும் உதவாத குப்பைகளும் புத்தகமாய் சமயங்களில் வெளிவருவதுமுண்டு. வழக்கமாக பெரிய படைப்பாளிகளின் படைப்புகளை தவிர்த்து வெளிச்சம் பெறாத எண்ணற்ற படைப்பாளிகளின் புத்தகங்களை தலைப்பை பார்ப்பேன், கவர்ந்திழுத்தால் வாங்கிடுவேன், அப்படி வாங்கிய ஒன்று தான் இந்த "தேவதைகளின் மூதாய்"

வண்ணத்துப் பூச்சி அழகு, அதோடு கவிதை சேர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை உங்களின் இரசனைக்கே விட்டுவிடுகிறேன். அதன் சிறகுகளை போன்ற மென்மையான கவிதைகளை கொண்டது தான் இந்நூல்.

தேவதைகளின் மூதாய் யாராக? இருக்குமென்ற பெருத்த ஆவலில் இருந்த என்னை ஏமாற்றவில்லை இந்நூலின் ஆசிரியர் விஜயராஜ் . நல்ல படிப்பாளியால் தான் இப்படி ஒரு படைப்பை வழங்க முடியும் என்பது என் நம்பிக்கை. 

"கடவுளர்கள் ஒளித்துவைத்த இரகசியங்களை 
குழந்தைகள் திருடி 
ஊருக்குச் சொல்லினர் 
வண்ணத்துப் பூச்சிகள் பிறந்தன"  

வண்ணத்துப் பூச்சிகள் பிறந்ததாய் சொல்லும் கற்பனை கவர்ந்திழுக்கிறது  நம்மை அடுத்தடுத்த பக்கங்களுக்கு...

"மரங்களின் மேலே பறக்கிறாய் 
உன் நுகர் குழல்களில் 
வனங்களின் வேர்கள்"  

"சலுகைகள் அதிகம் தான் 
நீ கடவுளின் கள்ளக்காதலி"

"திருவிழா சுற்றி ஓய்ந்த ராட்டினம் 
நீ அமர்கிறாய் 
மீண்டும் திருவிழா"  

"வலிக்க வலிக்க 
மனம் தின்னும் கழுகும் நீ 
சில போது"

 இப்படி எண்ணற்ற குறுங் கவிதைகளாக நிரம்பி வழிகின்றன, குறுங்கவிதைகள் என்றாலும் கூர்மையான ஊசி முனைகள் போன்று மனதை தைக்கின்றன, அந்த அளவில் இது பேசப்படவேண்டிய தொகுப்பு தான்!

"கடவுள் 
கவிஞன் ஆனபோது 
பூக்கள் படைத்தான் 
பைத்தியமான போது 
வண்ணத்துப் பூச்சிகள் படைத்தான்"

இதுதான் இவரின் உச்சமாக கருதுகிறேன், இந்த நான்கு வரிகளில் எவ்வளவு விசயங்களை அடக்கி சொல்லியிருக்கிறார்.

"புறா இறகில் 
காது குடைகிற புளகிப்பை 
கண்களும் உணர்கின்றன 
நீ நெருங்கி பறக்கையில்"

இப்படி ஒரு வர்ணிப்பை கண்டு வண்ணம் கொள்கின்றன மனது. இப்படி வெறும் வண்ணத்துப் பூச்சிகளாகவே பிரசவித்து இருக்கும்  கவிஞரை பாராட்ட வண்ணத்துப் பூச்சியினையே தான் அழைக்கணும். 

இப்புத்தகத்தை வாசிக்க அரைமணி நேரங்கூட தேவையில்லை, ஆனால் உணர்ந்து இரசிக்க ஓராண்டு கூட போதாது என்பது என் எண்ணம். 

இப்படியொரு மூர்க்கமான காதலை வண்ணத்துப் பூச்சியிடம் வைத்திருப்பார் என்று நம்ப முடியாத அளவுக்கு சொற்களின் பிரயோகம். பார்க்கும் ஒவ்வொன்றையும் வண்ணத்துப் பூச்சியாகவே பார்த்திருப்பதாக தோன்றுகிறது வாசித்து முடிக்கையில். 

ஒரே கவிதை பல வடிவங்களில் இருப்பதாக தோன்றுகிறது. நூலின் அளவு அருமையாக இருந்தாலும், உள் பக்கங்களில் நிறைய இடங்கள் வெற்றிடங்களாக இருக்கின்றன. இப்படி சின்ன சின்ன குறைகளை தவிர்த்து பார்த்தால் தரமான புதுக்கவிதை நூல்.

நெடு நேரம் வாசித்துவிட்டு புத்தகத்தை மூடுகையில் வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணங்கள் விரல்களில் ஒட்டியிருக்கிறதா? என்று பார்க்கும் அளவிற்கு மனதை நிறைக்கின்றன வண்ணத்துப் பூச்சிகளின் அழகிய கவிதைகள்! வண்ணத்துப் பூச்சியினை வாங்குங்கள் உங்களை திருப்தி படுத்தும் என்று நம்புகிறேன்.   மொத்த பக்கங்கள் : 112                               வெளியீடு :2011 நவம்பரில்


பதிப்பகம  :                  அகரம்                             பேச :       04362-239289
                                        1, நிர்மலா நகர்,
                                        தஞ்சாவூர் - 613007

விலை :                       ரூபாய் 70/-


படித்து சொன்னது ...

அரசன்
karaiseraaalai.blogspot.in

Wednesday, March 26, 2014

எஸ்கேப் - சுரேகா

படைப்பாக்கம் : மெட்ராஸ்பவன் சிவகுமார்  

க்ரிக்கெட்டில் 'ஆல் ரவுண்டர்என்று சிலரை குறிப்பிடுவார்கள். பேட்டிங்பௌலிங் மற்றும் பீல்டிங் என எல்லா தளத்திலும் இயங்குபவர்களை அல்ல. அவையனைத்திலும் சிறப்பாகஇயங்குபவர்களுக்குத்தான் அப்பட்டம் பொருந்தும். அப்படி 'பன்முகத்திறமை எனும் சொல்லுக்கு பொருத்தமானவர் சுரேகா சுந்தர். நிகழ்ச்சி தொகுப்புதொலைக்காட்சி பேட்டிதன்னம்பிக்கை பேச்சுகள்,பதிவர்நூலாசிரியர் என பல்வேறு தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருபவர். அவருடைய படைப்புகளில் ஒன்றுதான் எஸ்கேப் எனும் நூல். 'தலைவா வாவிற்கு பிறகு களம் கண்டிருக்கும் இந்நூல் பற்றிய பார்வை இனி.


பெரும் கட்டுமான நிறுவனம் ஒன்றில் எட்டு ஆண்டுகள் கடும் உழைப்பை கொட்டியும் ஒற்றை பதவி உயர்வைத்தவிர வேறெதையும் பெறாதவன் நரேந்திரன். வேலைக்கு சேர்ந்த மூன்றே வருடங்களில் அடுக்கடுக்காக ப்ரமோஷன் வாங்கி தன்னை பின்னுக்கு தள்ளிய சத்யா எனும் பெண்ணைக்கண்டு குமுறுகிறான். சரியான அங்கீகாரம் கிடைக்காத மன உளைச்சலில் ராஜினாமா செய்ய எத்தனிக்கும் நரேந்திரனின் வாழ்வில் ஏற்படும் திருப்பம் அவனை எப்படி மேம்படுத்துகிறது என்பதுதான்எஸ்கேப்பின் லான்ட் ஸ்கேப்.

சுரேகாவின் 'தலைவா வாமீது ஒரு சில மாற்றுக்கருத்துகள் எனக்கிருந்தன. அதனை செவிமடுத்து கேட்ட பிறகு 'எஸ்கேப் நீங்கள் நினைக்கும் குறைகளை பூர்த்தி செய்த படைப்பாக இருக்கும்என்றார். எனினும் வழக்கம்போல் சுய முன்னேற்ற புத்தகங்களின் பால் ஏற்படும் கிலியுடனே வாசிப்பு துவங்கியது. நரேந்திரனின் ஆற்றொண்ணா கோபத்தை சரசரவென வாசகன் மீது திணிக்காமல் அவனது இல்ல சூழலில் நடக்கும் விஷயங்களை இயல்பாக வர்ணித்து இருப்பது நல்ல தொடக்கம். புரிதலுடன் பேசும் மனைவிதெளிவான பார்வையுடன் கருத்துகளை பரிமாறும் சக ஊழியர் சத்யாஎன முதல் சில பக்கங்கள் வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன. அடுத்தடுத்த பக்கங்களை புரட்ட வேண்டும் எனும் ஆவலை தூண்டுவதும் இத்துவக்க கட்டங்களே. 

விக்னேஷ் எனும் இளைஞரிடம் சுய முன்னேற்ற பயிற்சி எடுக்க நரேந்திரன் செல்வதுதான் நூலின் பிரதான பகுதி. ஆண்டுக்கணக்கில் மாங்கு மாங்கென்று உழைத்தும் பதவி/சம்பள உயர்வு இல்லையே என்று சீனியர் அசோசியேட்கள் சிலர் அப்ரைசல் நேரத்தில் முகாரி ராகம் பாடி கேட்ட அனுபவம் எனக்குண்டு. அவர்களை பொறுத்தவரை கடிவாளம் போட்டது போல் நிர்வாகம் சொல்லும் வேலைகளை முடிப்பதுமேலதிகாரி மீட்டிங் போட்டு எது சொன்னாலும் ஆமாம் போடுவதுவீட்டுக்கு செல்வதுவார இறுதியில் டி.வி.சினிமாபார் என ஏதேனும் ஒன்றில் லயித்துவிட்டு திங்களன்று மீண்டும் வேலைக்கு வந்துவிடுவார்கள். கண்ணை மூடி திறப்பதற்குள் அப்ரைசல் காலம் வந்துவிடும். சொற்பமான சம்பள உயர்வு அல்லது அதுவும் இல்லாமலும் போகும். இனி அடுத்த ஒரு வருசத்துக்கு புகாரி பக்கம் தல வச்சி படுக்க கூடாதுமுகாரி மீண்டும் நம் காதுகளை குடைந்து கண்ணாடி கதவுகளை அதிர வைத்து விட்டு மாற்று வழி தெரியாமல் அறையையே சுற்றும். அந்த ஊழியரைப்போல. 

இதுபோல எத்தனையோ பேர். பணிக்கப்பட்ட வேலை தாண்டி தனது நிறுவனம் எப்படிசெயல்படுகிறதுதேச/சர்வதேச சந்தையில் அதன் மதிப்பென்ன.....எதைப்பற்றிய எண்ணமும் இருக்காது. குறைந்தபட்சம் நாளேடுஊடகங்களில் தனது நிறுவனம் அல்லது தான் செய்யும் பணி குறித்து வரும் செய்திகளைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சினிமாசீரியல், 'ஆட்டோ அப்பளம் போலநொறுங்கியது'...அவ்வளவுதான் அவர்களது சமூகம்(!) சார்ந்த விருப்பங்கள். அந்த காலகட்டத்தில் சில வருடங்கள்/மாதங்களுக்கு முன்பு வந்த புத்திசாலி ஊழியர் (அதாவது கல் உடைத்து/பொட்டி தட்டிசோர்வடையாமல் 'ஸ்மார்ட் வொர்க்செய்யும் நபர்) வேகமாக முன்னேறி விடுவார். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் நடக்கும் இந்த முக்கியமான நடைமுறை யதார்த்தத்தை வார்த்தைஅலங்காரமின்றி இயல்பாக கையாண்டதன் மூலம் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறது எஸ்கேப்.   

பொதுவாக மற்ற தன்னம்பிக்கை நூல்களில் இருப்பது போல 'அண்ணாமலை ரஜினிபாணியில் அதிரடி முன்னேற்றங்கள் இந்நூலில் இல்லாதது பெரிய ஆறுதல். பயிற்சிக்கு பிறகு நரேந்திரன் அலுவகத்தில்பயன்படுத்தும் அணுகுமுறைகள் நம்பும்படி இருப்பது சிறப்பு. மின்னஞ்சல் மூலம் உள் அலுவலக தொடர்புவாடிக்கையாளர்களிடம் தொடர் தகவல் பரிமாற்றம் என எளிதில் நடைமுறை படுத்தத்தக்கவிஷயங்களை பகிர்ந்திருக்கிறார் ஆசிரியர்.   

ரஜினி படம் சிலவற்றில் அவரே தன்னுடைய முந்தைய பட கேரக்டரை சில நொடிகள் உலவ விட்டு கைதட்டலை பெறுவார். உதாரணம்: பாட்ஷா 'நீ நடந்தால் நடையழகுபாடலில் வரும் முந்தைய பட ரஜினிகள்பாபாவில் வரும் நீலாம்பரி. என்னதான் விளம்பர யுக்தியாக இருந்தாலும் குறிப்பிட்ட நடிகரின் விசிறியாக இல்லாமல் படைப்பை மட்டுமே ரசிப்பவர்களுக்கு 'அதான பாத்தேன்என நாக்கை சற்று கடிக்க தோன்றும். அதை நினைவுபடுத்துகின்றன 40 ஆம் பக்க வரிகள்: 'சார் நான் அந்த'தலைவா வாபுத்தகத்தை படிச்சிருக்கேன். ஆனா அந்த விக்னேஷ் நீங்கதான்னு தெரியாது'. 

'பொன்னான வாழ்வு மண்ணாகி போனால் துயரம் நிலைதானாஉலகம் இதுதானா?' என்று புலம்பிதீர்க்கும் சீனியர் அசோசியேட் உள்ளிட்ட இதர அலுவலக வாழ் மக்களே. பதவி உயர்வுக்கான மேஜிக்கை லாஜிக்குடன் சொல்லும் எஸ்கேப் உங்களுக்கானதுதான். அடுத்த அப்ரைசலுக்குள் வெற்றிக்கான கதவு திறக்கட்டும். பொது நூலகங்கள் மற்றும் அலுவலக படிப்பறைகளில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் கம்பீரமாக முன் வரிசையில் அமரும் தகுதியை கொண்டிருக்கும் வெகு சில சுய முன்னேற்ற நூல்களில் எஸ்கேப்பும் ஒன்று.  

தரமான தாள்கள்கண்களை உறுத்தாத எழுத்தளவுகள்படங்களை போட்டு பக்கங்களை நிரப்பாதது,சரியான இடைவெளியில் துவங்கும் பத்திகள் என தேவையான நிறைகளை கொண்டிருப்பது நூலின் ப்ளஸ். விலை 90 ரூபாய்.

 சுய முன்னேற்ற நூல்கள் எனும் பெயரில் நடுத்தர அப்பிராணிகளின் பர்ஸை சுரண்டி பிழைக்கும் எழுத்தாளர் கூட்டம் சந்தையில் தொடர்ந்து நடமாடுவதைக்கண்டு நான் எரிச்சல் அடைந்ததுண்டு. இவர்களுக்கு மரத்தடி ஜோசியன்போலி வாக்குறுதி தந்து ஏமாற்றும் அரசியல்வாதிகள் மேல் என எண்ணி இருக்கிறேன். 'எதைத்தின்றால் பித்தம் தெளியும்என்பது போல் ஏதேனும் ஒரு தன்னம்பிக்கைபுத்தகம் தன்னை மாற்றி விடாதாநாளை காலையே இந்த அம்பாசமுத்திரம் ஆறுமுகம் அம்பானி ஆகி விட மாட்டேனா என ஏங்கும் அப்பாவிகள் ஆயிரம். அவர்களை மற்ற மோடிமஸ்தான் எழுத்தாளர்களை போல ஏமாற்றாமல் நேர்மையான படைப்பை தந்திருக்கும் சுரேகா சார்....ஹாட்ஸ் ஆஃப்.

தங்கள் சுய முன்னேற்ற நூல்களில் எஸ்கேப் ஒரு பெஞ்ச் மார்க் என்பது எனது அசைக்க முடியாத கருத்து. இனி தங்கள் வசமிருந்து வரவுள்ள தன்னம்பிக்கை  நூல்கள் எஸ்கேப்பில் உள்ளது போன்ற நேர்மையான அம்சங்களை தாங்கி வந்தால் சிறப்பாக இருக்கும். விக்னேஷை நம்பிய நரேந்திரன் போல நம்பிக்கையுடன் காத்திருக்கும் வாசகர்களில் ஒருவன். நன்றி.

மெட்ராஸ்பவன் சிவகுமார் 

Wednesday, March 19, 2014

காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவின் தோல்வியடைந்த முயற்சி

'ரத்தம் ஒரே நிறம்' என்பது சுஜாதா எழுதிய முதல் சரித்திர நாவல் என்பதை சீனுவின் பதிவின் மூலம் அறிந்தேன். பின் சுஜாதா எழுதிய மற்றொரு சரித்திர நாவல் 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' என்பது தெரியவந்தது. இது ராஜ ராஜ சோழன் காலத்தில் நடப்பது போன்ற கதை என்றும், இதில் கணேஷ்-வசந்த் சரித்திர நாயகர்களாக தொன்றிகின்றனர் என்ற தகவல் எனது எதிர்பார்ப்பை கூட்டியது. பொன்னியின் செல்வன் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்துடன், 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' படிக்கத் தொடங்கினேன்.வசந்தகுமாரன் மது, மாது மற்றும் சூது இவை மூன்றில் முழுகித் தத்தளிக்கும் இளைஞன். அவனது குரு கணேசபட்டர் என்னும் பிரம்மதேயத்துக்காரர். குருவின் அறிவுரை கேட்டு திருந்தி வாழ விரும்பும் வசந்தகுமாரன், துறைமுகம் சென்ற பொழுது ஒரு கிரேக்க நாட்டுக் காரனுடன் குதிரை வியாபாரம் செய்ய முற்படுகிறான். இருவருக்கும் பொதுவாக சோழ நாட்டுப் பெண்கள் மீது இருக்கும் மோகம் காரணமாக அவர்களுக்குள் நட்பு மலர்கிறது. அந்த கிரேக்க நட்டானின் காமப் பசிக்கு தீனி போட அவனை ஆட்டசாலைக்கு அழைத்துச் செல்கிறான் வசந்தகுமாரன். அங்கு அந்த கிரேக்க நாட்டான் மர்மமான முறையில் கொலை செய்யப்பட அவனுடன் வந்த வசந்தகுமாரன் மீது கொலைப் பழி விழுகிறது.

சோழ ராஜ்ஜியத்திற்கு எதிராக சதி செய்யும் பாண்டிய ஒற்றர்கள் தான் அந்த கொலைக்கு காரணம் என்று வசந்தகுமாரன் அறியும் பொழுது, விஷம் பொருந்திய சிற்றம்பால் அவனும் தாக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை செல்கிறான். கணேஷபட்டரின் உதவியுடன் உயிர் பிழைத்து, அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து தப்பித்து செல்லும் சமயம், சாலையில் அவன் அபிமதி என்னும் இளவரசியை சந்திக்கின்றான். காவலர்கள் 'நீ எந்த ஊர்?' என்று இவனை கேட்க, இவன் விளையாட்டாக 'காந்தளூர்' என்று சொல்ல, காந்தளூர் சேர நாட்டில் இருப்பதால், இவன் சேர நாட்டு ஒற்றன் என்ற செய்தி சோழ நாடெங்கும் பரவுகின்றது. இளவரசி அபிமதி இவனை காவலர்களிடம் இருந்து காக்க, இருவருக்கிடையிலும் காதல் மலர்கின்றது.

இளவரசி அபிமதியை சாளுக்கிய மன்னன் விக்ரமனுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்வது பிடிக்காமல், அவள் வசந்தகுமாரனுடன் அரண்மனையை விட்டு தப்பிச் செல்ல, வசந்தகுமாரன் தேச துரோகியாக மாறிவிடுகிறான். இளவரசியை மணக்க இருக்கும் விக்ரமன் இவன் மீது கடுங்கோபம் கொள்கின்றான். கணேஷபட்டருக்கு அரசாங்கத்திலும் ராஜராஜ சோழனிடமும் இருக்கும் செல்வாக்கின் மூலம், வசந்தகுமாரன் நிரபராதி என்று போராடுகிறார். கணேஷபட்டர் வசந்தகுமாரனை தண்டனையில் இருந்து காப்பதும், அவனது காதல் வேல்வதுமே மீதிக் கதை.

புத்தகத்தில் நான் நொந்தவை:

முதல் அத்தியாத்தில் வசந்தகுமாரனும், அந்த கிரேக்க நாட்டானும் சோழ நாட்டுப் பெண்களைப் பற்றி பேசுவது சற்று கொச்சையாகவே இருந்தது.

ஒரு சில காட்சிகளில், ஒன்றுக்கு மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் உறையாடும் பொழுது, எந்த வசனத்தை யார் பேசுகின்றனர் என்றத் தெளிவு சரியாக இல்லை.

இழுக்கப்படவேண்டிய காட்சிகள் சுருக்கப்பட்டதும், சுருக்க வேண்டிய சில காட்சிகள் இழுத்ததும் , கதையின் சுவாரசியத்தை குறைக்கின்றன

சரித்திர நாவல் எழுதவேண்டும் என்பதற்காக, இயல்பான கதையில் சரித்திர தடையங்களைப் புதைத்தது போன்ற ஓர் உணர்வு தான் இந்தப் புத்தகத்தை படித்த பொழுது தோன்றியது. உதாரணத்திற்கு காரில் செல்லும் வசந்திற்கு பதிலாக குதிரையில் செல்லும் வசந்தகுமாரனை இதில் காண முடிகின்றது.

'பொன்னியின் செல்வனில்' மிகவும் கம்பீரமாக பார்த்த ராஜராஜ சோழன், இதில் மிக சாதரணமாக காட்சியளிப்பதை ஏனோ மனம் ஏற்க மறுக்கின்றது. ராஜ ராஜ சோழன் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் 'குந்தவை' இதில் அதே சிறப்புடன் தோன்றுவது ஆறுதல் தருகின்றது.

எல்லாமே குறை என்று சொல்ல முடியாது. சில இடங்களில் பயன்படுத்தப் பட்ட சரித்திரச் சொற்களுக்கு, பக்கத்தின் முடிவில் விளக்கம் தந்தது, பொருள் அறிந்து படிக்க உதவியது.

'ஆணல்ல பெண்ணல்ல' என்று பெண் வேடம் பூண்டு வசந்தகுமாரன் அரண்மனைக்குள் செல்லும் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தன.

தஞ்சை பெரிய கோயில் கட்டியதால் பொது மக்களுக்கு எவ்வளவு துன்பங்கள் நேர்ந்தன என்று பொது மக்கள் வாயிலாக கணேஷபட்டர் அறிவது பாராட்டத்தக்க சுஜாதாவின் டச்.

கல்கியின் சரித்திர நாவல்களை படித்து முடித்த பொழுது தோன்றிய ஒரு வித புத்துணர்ச்சி, இந்த நாவலை முடிக்கும் பொழுது கிடைக்க வில்லை. இவ்வளவு ஏன், சுஜாதாவின் மற்ற படைப்புகளில் இருக்கும் சிறப்புகளில் ஒன்றுகூட இதில் இல்லை என்பது வருத்தம் தான். இந்தக் கதையை முடித்த பின் சுஜாதாவிற்கு அடுத்த பகுதியை தொடர எண்ணங்கள் இருந்த போதும், இந்த முயற்சியை மேலும் தொடராமல் கைவிட்டது உத்தமம் என்றே தோன்றுகிறது.

Monday, March 17, 2014

வாடிவாசல் - வாழ்க்கையில் தவறவே விடக்கூடாத நாவல்

வாடிவாசல் :

ஒவ்வொருமுறை தமிழகம் பொங்கலை நெருங்கும் போதும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் 'இந்த வருஷம் ஜல்லிக்கட்டு உண்டா இல்லையா' என்பதுவாகத்தான் இருக்கும். ஒரு சாராருக்கு அது வீர விளையாட்டு. இன்னும் சிலருக்கு அது மிருகவதை, இன்னும் சிலருக்கு அது மனிதவதை. தமிழன் கேவலம் தன் வீரத்தை ஒரு மிருகத்திடமா காண்பிக்க வேண்டும்? என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பும் நிலையில் நம்மில் எத்தனை பேர் தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்புடன் காட்டப்படும் ஜல்லிக்கட்டை நிதானமாக பார்த்திருப்போம் என்று தெரியவில்லை. நம்மில் எத்தனை பேருக்கு வாடிவாசல் என்றாலென்ன, திட்டிவாசல் என்றால் என்ன, வாடிவாசல் மைதானம் ஏறுதழுவதலின் போது எப்படியிருக்கும் என்பதெல்லாம் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. கதைச்சுருக்கம் 

உசிலனூர் சாட்டில் காரி என்னும் காளை தன் அப்பாவின் உயிரைக் குடிக்க, அப்பன் எடுத்துக்கொண்ட சபதத்தை நிறைவேற்றுவதற்காக காரியை அடக்க உசிலனூர்க்கார்களான பிச்சியும் அவனுக்கு துணையாளாக மருதனும் செல்லாயி சாட்டிற்கு வருகிறார்கள். வந்த இடத்தில் பெயர் தெரியாத பாட்டையா ஒருவன் அறிமுகமாகி நாவல் முழுவதும் பிச்சி மற்றும் மருதனுடன் பயணிக்கிறான். ஜமீன்தாருடைய காளையான காரியை யாருக்கும் தொடக்கூட தைரியம் கிடையாது. முதல் காரணம் காரியின் மீதான பயம் என்றாலும் ஒருவேளை காரியை அடக்கிவிட்டால் ஜமீனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சம் அவர்களை காரியை நெருங்கவிடாமல் தடுக்கிறது. யாரும் அடக்க பயப்படும் காரியை அடக்கியே தீருவது என வந்திருக்கும் பிச்சியிடம் ஜமீன் நேரடியாகவே காரியை தொட்டுவிடுவாயா என்று கேட்கிறார். 'நோக்கம் பாத்ரனும்' என்கிறான் பிச்சி. 

பிச்சி காரியை அடக்க வாடியினுள் குதித்த நொடியில் முருகு என்பவன் மூலமாக காரியை அடக்குவதில் தொல்லை ஏற்படுகிறது. இந்நிலையில் பிச்சியின் தொடை கிழிபட, பிச்சி காரியை அடக்கினானா இல்லையா என்பது தான் வாடிவாசலின் பரபரப்பான இறுதிக்கட்டம்.

நாவல் கட்டமைப்பு :

வெறும் அறுபத்து மூன்று பக்கங்களே இருக்கும் இந்த நாவலில் மிக அதிகமான கதாபாத்திரங்களை இணைக்காமல் மின்னல் வேகத்தில் கதையை நகர்த்தியிருப்பார் சிசு.செல்லப்பா. கதாநாயகன் பிச்சி. அவனுக்கு துணையாள் மருதன். சிறுவயதில் இருந்து ஒவ்வொரு சல்லிக்கட்டையும் விடாது பார்த்துவரும் பாட்டையா. தன் அப்பனின் உயிரைக் குடித்த காரி. இவர்கள் நால்வரும் தான் வாடிவாசலின் மிக முக்கியக் கதாபாத்திரங்கள். இவர்களைத் தவிர்த்து காளையை அடக்குகையில் தொல்லைதரும் முருகுவும், காரியின் சொந்தக்காரன் ஜமீனும்.  

வாடிவாசலுக்கு மாடணைய வருபவர்களால் மாடணைவதின் தந்திரங்கள் அனைத்தையும் அவ்வளவு சுளுவாக அறிந்துகொள்ள முடியாத நிலையில், ஜல்லிகட்டுக்கு காளைகளை அழைத்துவரும் நொடிபொழுதில் ஒவ்வொரு காளையின் உடல் அசைவையும் அதனை அணைவது எப்படி என்பதை கணிக்க வேண்டும். இந்த இடத்தில் தான் பாட்டையாவின் ஜல்லிக்கட்டு அனுபவம் கைகொடுகிறது. தான் தவறாது பார்த்துவரும் ஜல்லிக்கட்டுகள் மூலம் ஒவ்வொரு காளைகளைப் பற்றியும் அதை அணையை வேண்டிய வழிமுறைகளையும் பிச்சிக்கும் மருதனுக்கும் கூறிக்கொண்டே இருக்கிறார்.  

தேர்ந்த தீரமான மாடணைபவர்கள் ஜல்லிக்கட்டுக்கு வரும் அத்தனை மாடுகளையும் அணைவதில்லை. அவரவர் வீரத்திற்கு நிகரான மாடுகளையே அணைகின்றனர். அதேநேரம் பிச்சியும் எடுத்தவுடன் காரியுடன் மோதவில்லை. காரியுடன் மோத பிச்சி ஒருவனுக்கு தான் வீரம் இருக்கிறது என்பதை ஊராருக்கு புரிய வைப்பதற்காக முதலில் பில்லைகாளையுடனும் பின்பு கொராலுடனும் மோதுகிறான். பில்லைகாளை முரடு என்றால் கொரால் தந்திரக்காளை. காரியோ இரண்டும் சேர்ந்தது.         

இறுதியாக திட்டிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும் காரியை அடக்க தயாராகிறான் பிச்சி. மாடணைக்க வந்த இடத்தில் மற்றொரு மாடணைபவனான முருகுவுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு எப்படி கதையின் போக்கை மாற்றுகிறது என்பதை கொஞ்சமும் பரபரப்பு குறையாமல் வளர்த்திருப்பார் சி.சு.செல்லப்பா.

1959-ல் முழுக்கமுழுக்க ஜல்லிகட்டை மட்டுமே மையமாக வைத்து வாடிவாசலை எழுதிய சி.சு.செல்லப்பா அவர்களுக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை தான் செய்தது மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு என்று. வாடிவாசலை நாவல் என்று கூறுவதை விட குறுநாவல் அல்லது ஒரு மிகப்பெரிய கதை என்ற வட்டத்திற்குள் அடைக்கலாம். ஒரு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடிய மின்னல் வேக நாவல்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தவறவே விடக்கூடாத நாவல் வாடிவாசல்.

காலச்சுவடு பதிப்பகம் 
விலை ரூபாய் 60

Wednesday, March 12, 2014

லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன்

வா.மணிகண்டன். துள்ளலான அதே சமயம் எளிமையான எழுத்துநடைக்கு சொந்தக்காரர். கடந்த ஒன்றரை வருடங்களாகத் தான் அவரது பதிவுகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். கருத்திட்டதில்லை. காரணம் அனைவரும் அறிந்ததே. இந்த வருட புத்தகத் திருவிழாவின்போது இந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட அன்றே மாலை - டிஸ்கவரி புக்பேலஸ் - ஸ்டாலுக்கு வெளியே தன்னந்தனியாக நின்றிருந்த அவரை நானும் சீனுவும் அறிமுகப்படுத்திக் கொண்டோம். "நான் சரவணன், ஸ்கூல் பையன் என்ற பெயரில் எழுதுறேன்" என்று சொல்லவும், "ஓ, தெரியுமே" என்றார். கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் "எப்படி?" என்றேன். "பாலகணேஷ் சொல்லியிருக்கார், நீங்க என்னோட பதிவுகளை நிறைய பேருக்கு ஷேர் பண்ணுவீங்களாம்" என்றார். சீனு அவரிடம், "எப்படி தினம் ஒரு பதிவு எழுத முடிகிறது?" என்று கேட்க, "தினமும் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் பைக்கில் போகிறேன். ஏதாவது content கிடைக்கும். பயணத்தினூடே மனதில் வார்த்தை வடிவம் கொடுத்துவிடுகிறேன். வீட்டுக்கு வந்ததும் எழுதிவிடுகிறேன்" என்றார்.இது புத்தக விமர்சனம் என்பதால் ஆசிரியரைப் பற்றிய வளவளாக்களை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இனி புத்தகம் பற்றி:

லிண்ட்சே லோஹன் என்பவர் யாரென்று தெரியாமல் தான் இருந்தேன். இந்தப் புத்தகம் பற்றிய பதிவுகளைப் படித்ததும் யாரென்று தெரிந்துகொள்ள கூகிளிடம் கேட்டேன். அவர் நடிகையாம். அப்படியென்றால் மாரியப்பனுக்கு எப்படி மனைவியாக முடியும் என்று பல நாள் கேள்விகளுடன் இருந்த எனக்கு விடை தந்தது இப்புத்தகத்தின் கடைசிக்கதை. இந்தப் புத்தகத்திலேயே என் மனம் கவர்ந்த கதையும் இதுவே.

முதல் கதையான "சாவதும் ஒரு கலை"யிலேயே ஆசிரியரின் துள்ளலான நடை தெரிந்துவிடுகிறது. ஏனோ கதையின் முடிவைப் படித்ததும் - ஹெல்மெட் போடாமல் போகும் ஜான் எனும் சிறுவன் போகும் வழியில் விபத்தில் இறந்து, அதே சமயம் வீட்டிலிருப்பவர்கள் ஆவிகளுடன் பேச முயலும்போது முதல் ஆவியாகத் தோன்றி தன பெயர் ஜான் என்றும் தனக்கு ஹெல்மெட் வேண்டுமென்றும் சொல்லும் - எப்போதோ படித்த கதை ஞாபகத்துக்கு வந்தது.

"சரோஜா தேவி" என்ற கதை கொஞ்சம் சுமாராகவே தொடங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும் கதை முடிவில் மனதைத் தைக்கிறது. சரோஜா தேவி என்பவள் ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும் நாட்டில் சில பெண்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்ற உண்மை வேதனைப்பட வைக்கிறது.

"காமத்துளி" கதையின் கடைசி பத்தியில் சஸ்பென்ஸ் உடைகிறது. "நந்தினியின் வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது" - கொஞ்சம் அனுபவங்களும் கலந்து எழுதியிருப்பார் போல. ஆரம்பத்தில் கொஞ்சம் புன்முறுவல் பூக்க வைக்கும் கதை கடைசியில் அழவைக்கிறது. இந்த இடத்தில் ஆசிரியரிடம் ஒரு கேள்வி: கதையை விவரிக்கும் மனிதர் புத்தகம் படிக்க இருளடைந்த கோவிலுக்குத்தான் போவாரா? அதிலும் நாடு ராத்திரியில் - வீட்டில்தான் அனைவரும் உறங்கிவிடுகிறார்களே! வீட்டிலேயே படிக்கலாமே!

பெரும்பாலான கதைகள் அசுபமாகவே முடிகின்றன. Tragedy. ஒரு மணி நேரத்திலோ ஒன்றரை மணி நேரத்திலோ படித்துவிட்டு புத்தகத்தைத் தூக்கிப் போட்டுவிடலாம் என்றால் முடியாது. சில கதைகளின் முடிவுகள் நெஞ்சைப் பிசைகின்றன. ஜீரணித்துக்கொண்டு அடுத்த கதையைப் படிக்க ஆயத்தமாவதற்கே அரை மணி நேரம் ஆகிறது. அவ்வளவு மோசமான Tragedy. மேலும் மிகப்பெரிய மைனஸ் - எந்தக்கதையிலும் மருந்துக்குக்கூட நகைச்சுவை இல்லை. "எனக்கு பிரம்மச்சாரி ராசி", :மழையில் முளைத்த காமம்" மற்றும் "காசுக்கு வாங்கிய காதல்" போன்ற கதைகளை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கலாம். ஆசிரியரின் எழுத்துநடையே அப்படித்தான் என்கிறபோது வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

எனக்குப் பிடித்த கதைகள்: 

சாவதும் ஒரு கலை
போலி'ஸ் என்கவுண்டர்
சில்க் ஸ்மிதா
எனக்கு பிரம்மச்சாரி ராசி
அசைவுறாக் காலம்
ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்
லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன்

மற்ற கதைகள் பிடிக்காது என்பதில்லை. ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப மாறுபடலாம். "சூனியக்காரனின் முதலிரவு", "நடுப்பாளையம் ஜமீனின் சேட்டைகள்", "பறவளவு" போன்ற கதைகளில் ஏனோ மனம் லயிக்கவில்லை.

மொத்தத்தில் நீங்கள் புத்தகம் படித்தீர்கள் என்பதைவிட வா.மணிகண்டன் எனும் நபர் உங்கள் முன்னால் அமர்ந்து கதை சொன்னார் என்று சொல்லலாம். எழுத்துக்களால் நம்மைக் கட்டிப்போடும் வித்தை தெரிந்த ஆசிரியருக்கு ஒரு சபாஷ். நிச்சயம் படிக்கத் தகுந்த புத்தகம்.

Sunday, March 9, 2014

தம்பதிகள் படிக்க தரமான நூல்!

ஆண்கள் செவ்வாய்; பெண்கள் வெள்ளி!
- ரா.கி.ரங்கராஜன் -


புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் என்ற இரண்டு மந்திரச் சொற்கள் மனதில் நுழையாதபட்சத்தில் உறவுகளில் சிக்கல் வருகிறது. புரிந்து கொள்ளுதல் இருந்துவிட்டால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். குறிப்பாக, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக் கூடிய உரசல்கள் ஒழிந்து விடும். தனக்கு அடங்கியவளாக மனைவி இருக்க வேண்டும் என்று கணவன் எதிர்பார்ப்பதும், தன் பேச்சைக் கேட்டு நடப்பவனாக கணவன் இருக்க வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பதும் மிகத் தவறான போக்கு என்பதை சுமார் 282 பக்கங்களில் விரிவாக எடுத்துக் கூறிய ஆங்கில நூல் Men Are from Mars, Women Are from Venus என்பது. இதை எழுதியவர் ஜான் க்ரே (John Gray) என்கிற அமெரிக்க எழுத்தாளர். 50 மில்லியன் காப்பிகளுக்கும் மேலாக விற்ற சாதனைப் புத்தகம் அது.


அந்த நூலின் முக்கிய அம்சங்களை மூலத்தின் ஜீவன் கெடாமல் தமிழில் மொழிபெயர்த்து சுருக்கமாக 88 பக்கங்களில் ‘ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி' என்கிற நூலாக வழங்கியிருக்கிறார் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள்! பிரபல ‘குமுதம்' வாரஇதழின் முக்கியத் தூணாக பல்லாண்டுகள் ஜொலித்த ரா.கி.ர.வுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆங்கில நூல்களைத் தமிழில் அப்படியே வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் தமிழுக்கு ஏற்ப அழகுற மொழிபெயர்ப்பதில் வல்லவர் அவர் என்பதால் இந்த நூலைப் படித்தாலும் வேற்றுமொழி புத்தகம் படிக்கும் உணர்வே உங்களிடம் எழாது.


செவ்வாய்க் கிரகத்தில இருந்த ஆண்கள் டெலஸ்கோப் வைத்து வெள்ளிக் கிரகத்தைப் பார்த்தார்கள். அழகழகான பெண்களைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு விண்வெளிக் கப்பலைத் தயார் செய்து வெள்ளிக் கிரகத்தை அடைந்தார்கள். அங்கே கூடி மகிழ்ந்தவர்கள் பூமி என்கிற புதிய கிரகத்துக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் எல்லாமே அற்புதமாயிருந்தது; அழகாயிருந்தது. ஆனால் பூமியின் சுற்றுச்சூழல் அவர்களைப் பாதித்தது. ஒருநாள் காலை விழிக்கையில் ‘அம்னீஷியா' என்ற விசித்திரமான மறதி நோய் அவர்களைப் பற்றிக் கொண்டது. செவ்வாய் ஆண்களுக்கும் சரி, வெள்ளிப் பெண்களுக்கும் சரி தாங்கள் வெவ்வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்பது மறந்து விட்டது. தங்களுடைய வேறுவேறு தன்மைகளை மீறி நேசித்துக் கொண்டிருந்தது மொத்தமும் ஒரே இரவில் மறந்துவிட்டதில் அன்றுதொட்டு செவ்வாய் ஆண்களும், வெள்ளிப் பெண்களும் மோதிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.

இப்படி ஒரு தத்துவத்துடன் ஆரம்பிக்கிற புத்தகம் கணவன் மனைவி உறவின் கூறுகளை விரிவாக அலசுகிறது. சண்டை ஏன் வருகிறது என்பதற்கான காரணங்கள், மன்னிப்புக் கேட்டலின் மகத்துவம், மனைவியின் பிரியத்தைக் கணவன் சம்பாதித்துக் கொள்ள சுலபமான 40 வழிமுறைகள், மனைவி கோபமாக இருந்தால் (என்ன காரணத்துக்காக கோபம் வருகிறது என்கிற அலசலுடன்) எப்படிச் சமாதானப்படுத்த வேண்டும் என்கிற அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை விரிவாக அலசும் இந்நூல் இறுதியில் கணவன் மனைவி இருவருக்குமான அறிவுரைகளைத் தந்து, புரிந்து கொள்ளும் வாழ்வின் தத்துவத்தை படிப்பவருக்குள் ஆழமாக இறக்குகிறது. (எவ்ளோ பெரிய வாக்கியம்டா சாமீ!)


அவள் கோபப்படுகிறாள் என்பதால் நானும கோபப்படுவது என்ற பழக்கத்தை மாற்றிக் கொண்டேன். மாறாக, எதனால் அவளுக்குக் கோபம் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முயன்றேன். எனக்கு அவள் மீது பிரியம் உண்டு என்பதை வெளிப்படுத்தினேன். அவள் என்னைத் தப்பாகப் புரிந்து கொண்டு கோபப்பட்டிருந்தால்கூட ‘ஸாரி’ சொன்னேன். ஆண்களைப் பொறுத்தமட்டில் ‘ஸாரி’ என்று சொன்னால் ஏதோ தவறு செய்து விட்டதை ஒப்புக் கொள்வது போலவும், அதற்காக மன்னிப்புக் கேட்பது போலவும் எண்ணுகிறார்கள். பெண்கள் அப்படி அல்ல. ‘ஸாரி’ என்று சொன்னால் உங்கள் மீது எனக்கு கொள்ளைப் பிரியம் என்பதை அப்படி மனப்பூர்வமாகக் குறிப்பிடுகிறார்கள். தப்புப் பண்ணிவிட்டு மன்னிப்புக் கேட்பதாக நினைப்பதில்லை. இதைப் படிக்கும் ஆண்கள் அடுத்த முறை வாக்குவாதம் ஏற்படும் போது ‘ஸாரி’ என்று சொல்லிப் பாருங்கள். அற்புதங்கள் விளையும்!

இது ஒரு ஸாம்பிள்தான்! புத்தகம் முழுவதும் கோர்வையாக கொட்டிக் கிடக்கும் கருத்துக்கள் ஒவ்வொரு கணவனும், ஒவ்வொரு மனைவியும் படித்தறிய வேண்டியவை. புதுமணத் தம்பதிகளுக்கு பரிசாக புத்தகங்களைத் தரும பழக்கம் உங்களுக்கு உண்டு எனில் சென்னை தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெருவான நானா தெருவில் 10ம் இலக்கத்தில் இருக்கும் நர்மதா பதிப்பகம் 35 ரூபாய்க்கு வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்பது என் பலமான சிபாரிசு!

Wednesday, March 5, 2014

முகில் கண்ணா அசத்திட்டடா நீ!

சந்திரபாபு - கண்ணீரும் புன்னகையும் 

பதிவர் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடந்த சமயங்களில் டிஸ்கவரி புக் பேலஸில் மற்றவர்கள் வருவதற்காக காத்திருக்கும் சமயம், உள்ளிருக்கும் புத்தகங்களை நோட்டமிடுவது வழக்கம். அப்படி ஒரு நாள் புத்தகங்களை வலம் வருகையில் ஒரு படத்தின் அட்டையில் சந்திரபாபு இருக்க அதை நான் கையில் எடுத்து பார்த்த பொழுது அருகில் இருந்த 'மின்னல் வரிகள்' பால கணேஷ் சார் 'இந்தப் புத்தகம் நல்லா இருக்கும். முகில் அருமையா எழுதி இருப்பார்' என்றார். சந்திரபாபு ரசிகன் என்று சொல்லிக்கொண்டு திரியும் எனக்கு அவரது வாழ்கை கதையை அறியும் ஆவல் இருந்ததால், ஒரு கணமும் யோசிக்காமல் அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.        

தூத்துக்குடியில் பிறந்த சந்திரபாபுவின் தந்தை சுகந்திர போராட்டத்தில் வெள்ளையருக்கு எதிராய் கொடி பிடிக்க அவர் இலங்கைக்கு நாடு கடத்தப் படுகிறார். சிறு வயது முதல் நடிப்பதில் பாபுவிற்கு ஆர்வம் அதிகம், தன் நண்பர்கள் முன் நடித்து அவர்களை மகிழ்விப்பது அவர் வழக்கம். தந்தை மீண்டும் தாய் நாடு திரும்புகையில், சினிமாக் கனவுகளுடன் சென்னையில் கால் வைக்கிறார் பாபு. பெரும் போராட்டத்திற்குப் பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்து, தன் அசாத்திய திறமையினால் விரைவில் புகழின் உச்சத்திற்குச் செல்லும் பாபு, அதே வேகத்தில் சரிந்த வரலாறை சொல்லும் புத்தகம் தான் முகிலின் 'சந்திரபாபு - கண்ணீரும் புன்னகையும்'.        

முகில் கதையை தொடங்குவது ஜெமினி ஸ்டுடியோ கேண்டீனில், சந்திரபாபு தற்கொலை முயற்சி செய்ய முயல்வதில் இருந்து. அந்தத் தற்கொலை முயற்சிக்குப் பின் தான் பாபுவின் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது.  சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து படிப்படியாக முன்னேறி, பின் ஒரு காலத்தில் 'சந்திரபாபு இருந்தால் தான் படம் ஓடும்' என்ற உச்சக்கட்ட நிலையை அடைகிறார். இந்த நிகழ்வுகளை அழகிய நடையிலும் பத்திரிக்கை செய்திகளுடன் சுவாரசியத்துடன் தொகுத்து உள்ளார் முகில். 

சந்திரபாபு நேர்பட பேசிய பத்திரிக்கை பேட்டிகளை இன்று படிக்கும் பொழுது, யாருக்கும் எதுக்கும் அஞ்சாத ஒரு தன்னிகரற்ற கலைஞன் சந்திரபாபு என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. எந்தத் திலகத்திற்கும் சந்திரபாபு எப்போதும் பணிந்தது இல்லை என்பதை பாபுவின் பேட்டிகள் மூலம் நமக்கு உணர்த்துகிறார் முகில்.

மிகக் குறுகிய காலத்தில் யாராலும் இன்றளவும் நெருங்க முடியாத சாதனைகளை செய்தவர் சந்திரபாபு. ஹாசியம் மட்டுமல்லாமல் இவர் பாடும் பாடல்களுக்கு என்று ஒரு தனி வரவேற்பு இருந்துள்ளது. இவர் பாடல்களால் ஹிட் ஆன படங்களும் உண்டு என்ற. இன்றளவும் இவர் பாடல்களுக்கு என்று தனி சிறப்பு இருந்துதான் வருகிறது. ஆங்கில வார்த்தைகளுடன் பாடல்களை பாடும் பாணியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் பாபு தான்.       


இவரது மண வாழ்வு தோல்வியில்  முடிந்தாலும், அவரது திருமணக் கதையை பற்றி படிக்கும் பொழுது, நம் கண்களுக்கு, ஆங்கிலத்தில் சொல்வது போல்,சந்திரபாபு ஒரு ஜென்டில்மேனாகவே  காட்சியளிக்கிறார். தனது மனைவி பிரிந்த வேதனையில் குடி பழக்கத்திற்கு அடிமையானது, பிற்காலத்தில் அவர் சரிவுக்கு (இந்தப் பழக்கம்) பெரும் பங்காகியது.   

புகழின் உச்சத்தில் இருந்தாலும் மற்றவர்களை பாபு என்றுமே பாராட்டத் தவறியதில்லை. அவரிடம் பொறாமை என்பது அறவே கிடையாது. அவருக்கு ஒருவரின் செயல் பிடித்து விட்டால் அவரிடம் பாய்ந்து சென்று, கட்டிபிடித்து, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, 'கண்ணா அசதிட்டடா நீ!' என்று பாராட்டும் வெள்ளை மனம் கொண்டவர்.     

என் சிறு வயதில் இருந்து  சந்திரபாபு பற்றி பேச்சு எடுத்தால் அது கடைசியில் எம்.ஜி.ஆர் இடம் தான் வந்து முடிவது வழக்கம். இவர்கள் இருவருக்கும் என்னதான் தொடர்பு என்று எனக்கிருந்து பல நாள் சந்தேகத்தை முகில் தெளிவாக தீர்த்து வைத்துள்ளார். எம்.ஜி.ஆர்  என்ற நடிகர் மற்றும் தலைவரை போற்றும் குடும்பத்தில் எம்.ஜி.ஆர் ரசிகனாகவே வளர்ந்த எனக்கு, சந்திரபாபுவிற்கு எம்.ஜி.ஆரால் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி படித்தப் பிறகு, எம்.ஜி.ஆர் ரசிகன் என்று சொல்லி பெருமைப்பட மனம் சற்று யோசிக்கின்றது.         ​


'மாடி வீட்டு ஏழை' என்ற படத்தை ம்.ஜி.ஆரை வைத்து தயாரிக்க முயன்றார் பாபு. இந்த படத்தை உருவாக்குவதில் சில சிக்கல்கள் தோன்ற இந்த முயற்சியில் தோல்வி அடைந்து பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி, தனது கனவு வீட்டை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டார். ம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் பாபுவின் பெயர் கேட்டுப் போனது. அவர் மேலும் குடிக்கத் தொடங்கினார். கடன் அதிகமானது. நடிப்பில் கவனம் செலுத்தத் தவறி, படப் பிடிப்புகளுக்கும் அவர் சரிவர போகததால், அவரது வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அவரது தேய்பிறைக் காலமும் தொடங்கியது.
         
***********************************************************************
ஆசிரியர் குறிப்பு:
முகில் 
ம்.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் பயின்று எழுத்தின் மேல் இருந்த ஆர்வத்தால் மென்பொருளை கைவிட்டு எழுத்துத்துறைக்குள் வந்தவர் முகில். விகடன் மாணவ நிருபராக தன் பயணத்தை தொடங்கி, பின் கல்கி இதழில் பணியாற்றினார். கிழக்கு பதிப்பகத்தின் மூலம் புத்தகம் எழுதும் வாய்ப்பு பெற்றார். வரலாறுகளைத் தெரிந்து கொள்வதிலும், பிறருக்குப் பயன்படும் வகையில் எளிமையான, சுவாரசியமான நூல்களாக எழுதுவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவருகின்றார்.   

இவர்  இதுவரை எழுதிய புத்தகங்கள்: 

சரித்திரம்
1. வெளிச்சத்தின் நிறம் கருப்பு – மர்மங்களின் சரித்திரம் (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)
2. கிளியோபாட்ரா – உலகம் வியக்கும் பேரழகியின் சர்ச்சைக்குரிய சரித்திரம்
3. அகம் புறம் அந்தப்புரம் – இந்திய சமஸ்தானங்களின் வரலாறு
4. முகலாயர்கள் – பாபர் முதல் பகதூர் ஷா வரை – முழுமையான 330 ஆண்டு வரலாறு
5. மைசூர் மகாராஜா – மைசூர் சமஸ்தானத்தின் 550 ஆண்டுகால ராஜ வரலாறு.
6. செங்கிஸ்கான் – பேரரசர் செங்கிஸ்கான் வாழ்க்கையின் ஊடாக மங்கோலியாவின் வரலாறு
7. யூதர்கள் – இன வரலாறும் வாழ்க்கையும்
8. அண்டார்டிகா – உறைபனிக் கண்டத்தின் வரலாறு
சினிமா வாழ்க்கை வரலாறு
1. சந்திரபாபு – கண்ணீரும் புன்னகையும் – நடிகர் ஜே.பி. சந்திரபாபுவின் வாழ்க்கை (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)
2. எம். ஆர். ராதாயணம் – நடிகர் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை
(சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)
நகைச்சுவை
1. லொள்ளு தர்பார் – சமூக அங்கத கட்டுரைகள்
2. லொள் காப்பியம் – நம்மைச் சுற்றி வாழும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் பற்றிய கட்டுரைகள்
அரசியல்
1. துப்பாக்கி மொழி – இந்தியாவிலுள்ள தீவிரவாத இயக்கங்கள் குறித்த ஓர் ஆய்வு
2. மும்பை : குற்றத் தலைநகரம்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் கிழக்கு பதிப்பகம வெளியீடு
மாணவர் நூல்கள்
1. அக்பர்
2. ஔரங்கசீப்
3. யூத மதம்
4. மெகல்லன்
5. அண்டார்டிகா
6. துருவங்கள்
மேற்கண்ட நூல்கள் ப்ராடிஜி வெளியீடு.
கவிதைகள்
1. ஆ…
2. …ம்

சந்திரபாபு பற்றி முகில் தன் உரையில்: 

திங்கள்கிழமை கிடைத்த தகவல்கள் படி சந்திரபாபு 'செம ஜாலி ஆளுப்பா' என எண்ணத் தோன்றும். செவ்வாய்க் கிழமை, 'மனுஷனுக்கு லொள்ளு ஜாஸ்தி' என்று நினைப்பேன். புதன் கிழமை யாரிடமாவது பேசிட்டு வரும்பொழுது 'ச்சே, சந்திரபாபு கெட்ட பையன்' என்று மனம் நினைக்கும்.  வெள்ளிக்கிழமை 'அட இந்த ஆளு இவ்வளவு நேர்மையா வாழ்ந்திருக்காரே' என்று நினைப்பேன். சனிக்கிழமை, பழைய பத்திரிக்கைகளை புரட்டும் பொழுது 'என்ன தைரியம் இருந்தா மனுஷன் இப்படி சொல்வாரு' என்று தோன்றும். ஞாயிற்றுக் கிழமையோ, எல்லாவற்றையும் சேர்த்து வைத்து யோசிக்கும் பொழுது நாயகன் ஸ்டைலில் 'சந்திரபாபு நல்லவரா? கெட்டவரா?' என எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்.         

***************************************************************************
முகிலின் எழுத்து நடை மட்டுமல்லாமல், இந்தப் புத்தகத்தில் இருக்கும் சந்திரபாபுவின் புகைப்படங்களும் என்னைக் கவர்ந்தன. மொத்தத்தில் நிஜம் மட்டுமே பேசத் தெரிந்த நிஜக் கலைஞனின் வாழ்கை வரலாற்றை பல அரியப் புகைப்படங்களுடன் கொண்ட  புத்தகம் இது.  

சந்திரபாபு இந்தப் புத்தகத்தை இன்று படித்தால், முகில் மீது பாய்ந்து கட்டிபிடித்து, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, 'கண்ணா அசதிட்டடா நீ!' என்று மனமாரப் பாராட்டுவார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.  

வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
விலை : 125 ரூபாய்      ​
-------------------------------------------------------------------------------------------------------------------------
காதலுடன் 
ரூபக் 

Sunday, March 2, 2014

தூப்புக்காரி (சாகித்ய அகாடமி விருது பெற்றது)

                சிறு வயதில் பள்ளிக்கு செல்லும்போது  எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டே செல்வது வழக்கம். அப்படி செல்லும் வழியில் ஏதோ ஒரு நாற்றம் குடலை புரட்டுவது போல் தோன்ற தின்பண்டத்தை விட்டுவிட்டு மூக்கை பொத்திக் கொள்வேன். சாலையின்  நடுவே தூர் வாரிக்கொண்டிருந்த  மக்களை பார்த்து அந்த கழிவின் நாற்றம் இந்த தூரத்திலேயே இவ்வளவு மோசமாக இருக்கிறதே, இதை எப்படித்தான் இவ்வளவு அருகில் நின்று சுத்தம் செய்கிறார்களோ என்று வியந்தபடியே வேகமாக அந்த இடத்தை விட்டு கடந்து விடுவேன். நம்மில் பலரும் இந்த கடைநிலை தொழிலாளர்களை பலமுறை கடந்து வந்திருப்போம். ஆனால் அவர்கள் வாழ்க்கை நிலை என்ன? அந்த ஜீவன்களின் மனசுக்குள் தோன்றும் அன்பு, பாசம், காதல், சோகம்  போன்ற பல உணர்வுகளையும், அவர்கள் செய்யும் தொழிலின் காரணமாய் அவர்கள் இழந்துவிட்ட பொக்கிஷங்கள் என்ன என்பதை மலையாளக் கலப்போடு கூடிய நாகர்கோவில் தமிழில் அழகுற வடித்திருக்கும் ஓர் புதினம் இது.

          ஒரு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணிபுரியும் கனகம் தன் கணவனால் கைவிடப்பட்டு ஒற்றை ஆளாக தன் மகள் பூவரசியை வளர்த்து வருகிறார். தன் மகள் தன்னை போல் கழிவுகளுக்கு நடுவே நிற்காமல் அந்தஸ்தாக இருக்கவேண்டுமென நினைத்து  நன்றாக படிக்க வைக்கிறாள். பூவரசியும் தாயின் சிரமம் புரிந்து நடக்கிறாள். பூவரசிக்கு மாரி என்ற தூப்புக்காரனின் சம்பந்தத்தோடு வரும் ப்ரோக்கரை நிராகரிக்கிறாள் கனகம். அவ்வூரில் வாடகை டாக்ஸி கம்பெனி வைத்து நடத்தும் பெரிய குடும்பத்து மனோவை பூவரசிக்கு பிடித்திருக்கிறது. இருவரும் காதலிக்கின்றனர், ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலே. ஒரு சந்தர்ப்பத்தில் மனோவின் குடும்பத்தால் அவமானப்படுத்தப்பட்டு கூனிக் குறுகி உடல்நலம் குன்றிப் போகிறாள் கனகம். தாயின் உதவிக்கு மனோவை அழைக்கும் பூவரசி அவனிடம் மனதையும் உடலையும் தாரை வார்க்கிறாள். தாயின் உடல்நலம் மோசமாக, உடன் பணிபுரியும் ரோஸ்லியின் கட்டாயத்தின் பேரில் தாயின் பணிக்கு தள்ளப் படுகிறாள் பூவரசி.

                       தன்னுடைய தூப்புக்காரி அவதாரத்தை பார்த்து தன்னை மனோ வெறுத்துவிடக் கூடாது என்று ஏங்குகிறாள். ஆனால் மனோவோ தன் தந்தையின் வாக்கை தட்ட முடியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்கிறான். முன்பு கனகம் நிராகரித்த மாரி பூவரசியின் பாதுகாவலனாகிறான். தன் மகளின் காதலை நிறைவேற்ற முடியாத கனகம் இறந்து போக, நிராதரவாய் நிற்கும் பூவரசி கர்ப்பம் தரிக்கிறாள். மனோவின் அந்த குழந்தையையும், பூவரசியையும் ஏற்றுக் கொள்கிறான் மாரி. ஒரு விபத்தில் மாரியும் இறந்து போக தான் தூப்புக்காரியாய் வேலை செய்யும் மருத்துவமனையின் மூலம் தன் பெண் குழந்தையை தத்துக் கொடுக்க முடிவு செய்கிறாள்.. தன் மகள் தன்னுடைய இந்த தூப்பு பணியை செய்யாமல் நன்றாக வளர வேண்டுமென ஆசைப்படுகிறாள். அவள் ஆசை நிறைவேறியதா? பிள்ளையை பிரிந்து பூவரசியால் இருக்க முடிந்ததா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
                   
                        ஒரு மதிய வேளையில் பொழுது போகாமல் போகவே இந்த தூப்புக்காரி புத்தகம் வாசிக்க தொடங்கினேன். ஆனால் வாசிக்க தொடங்கிய சில பக்கங்களிலேயே எழுத்தாளர் மலர்வதியின் வசீகரிக்கும் எழுத்தாலும், பொட்டில் அறைந்தாற் போல் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லிய விதத்திலும் ஈர்க்கப்பட்டு ஒரே மூச்சில் படித்துவிட்டு தான் புத்தகத்தை கீழே வைத்தேன். மலர்வதி அவர்களுக்கு இது இரண்டாவது  நாவல் தான்  என்பதை மனம் நம்ப மறுக்கிறது. வட்டார மொழியின் ஆளுமை, வாசகர்களின் ஆர்வத்தை கட்டிப் போடும் எழுத்து நடை இப்படி ஒவ்வொன்றிலும் அனுபவ எழுத்தாளரின் முத்திரை தெரிகிறது. இந்த கதைக்கு சாகித்ய அகாடமி கிடைத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. கதைக்கு இடையிடையே இவர் எழுதியிருக்கும் சிறுசிறு கவிதைகளும் அழகான கிரீடத்தில் வைத்த வைரக்கல் போன்றிருந்தது.

                         மலம் அள்ளுதல், சாக்கடை துப்புரவு, மருத்துவமனை கழிவுகள் அகற்றுதல் போன்றவற்றை எல்லாம் இதுவரை அருவருப்பாய் பார்த்திருப்போம். அந்த தொழிலாளர்களையும் நமக்கு சமமாக எண்ண மறுத்திருப்போம். அவர்கள் செய்யும் இந்த தூப்புப் பணிதான் நம்மையும் நம் சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைக்கிறது என்பதை இந்த நாவல் நமக்கு உணர்த்துகிறது. நமக்கு சரிசமமாய் நடத்த மனம் ஒப்பாவிட்டாலும் அவர்களை இழிந்து பேசாமலாவது இருக்கலாமே!! என்று சில சாதி வெறியர்கள் கன்னத்தில் அறைந்து சொல்வது போல் இருந்தது. எழுத்தாளர் மலர்வதியின் பார்வையில் கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் நல்லவர்களே.. சூழ்நிலையால் கட்டுண்டு சில நேரம் தவறிழைப்பது போன்று சித்தரித்திருக்கும் அழகை நான் ரசித்தது போலவே நீங்களும் படித்து மகிழுங்கள்!


*******************