Wednesday, August 13, 2014

ஒரு காபி குடிக்கலாமா?

 பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய சிறுகதைகளின்  தொகுப்பு


      என் வாசிப்பு ஆர்வத்துக்கு ஆரம்ப காலத்தில் வித்திட்டவர்களில் ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் தமிழ்வாணன் ஆகியோர் முக்கியமானவர்கள். அதிலும் முதலிரண்டு பேர்களின் நாவல்கள் வெளியாகும் தினம் எல்லாம் எனக்கு தீபாவளி தான். இருவர் எழுத்திலும் இருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை எனக்கு பிடிக்கும். விவேக்-ரூபலாவை பிடித்த அளவுக்கு பரத்-சுசீலாவையும் பிடிக்கும். (கூடவே பட்டுக்கோட்டையாரின் நாவல்களில் இடம்பெறும் பெண்களின் டீ-ஷர்ட் வாசகங்கள் பிடிக்கும்..) பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் நாவல்கள் மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன். 'வாத்தியார்' பாலகணேஷ் அவர்கள் ஒருமுறை 'பட்டுக்கோட்டை' பிரபாகர் அவர்களிடம் அழைத்துச் சென்று மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துவிட்டார். அவரிடம் என் 'ஆவிப்பாவை' கொடுத்து ஆசிகள் பெற்றுக்கொண்ட போது முதல் முறை வந்தததற்கு ஞாபகார்த்தமாய் அவர் எழுதிய இந்த சிறுகதை தொகுப்பை கையெழுத்திட்டுக் கொடுத்தார்.



     இந்த தொகுப்பில் மொத்தம் பதிமூன்று சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கையில் மனதிற்குள் ஒருவித ஆர்வமும், 'க்ரைம் கதை வல்லுநர்' சிறுகதையில் எப்படிப்பட்ட விஷயங்களை எடுத்தாளப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது. ஒவ்வொரு கதையை படித்து முடித்த போதும் மனதிற்குள் ஒரு நிறைவு. பெரும்பாலான கதைகளில் முடிவு எதிர்பாரா ஒரு திருப்பத்தை கொண்டிருந்தது. இத்துணை வருட எழுத்து அனுபவம் காட்சியை வாசகர் மனதில் ஓட வைக்கும் விவரணைகளில் தெரிந்தது. இலக்கிய பாணியில் அல்லாமல் தெளிந்த நீரோட்டமாய் கடைநிலை வாசகனுக்கும் இனிமையான வாசிப்பனுபவம் கிட்டும் வண்ணம் எழுதியிருந்தது சிறப்பு.

     இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது 'ஹலோ நண்பா' என்னும் சிறுகதை. குடித்துவிட்டு தன் நண்பனுக்கு போன் செய்ய நினைத்து தவறுதலாக வேறொருவருக்கு அழைத்து விட, அந்த ராங் காலை எடுத்தவர் வேலை இழந்து மனைவியும் கோபித்துக் கொண்டு அவர் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்ட கோபத்தில் "மகாதியானத்தில்" ஈடுபட்டிருக்க, இவர்கள் இருவருக்குள்ளும் நிகழும் சம்பாஷணைகள் தான் கதை. உரையாடலின் முடிவில் நிகழும் திருப்பம் நிச்சயம் விறுவிறுப்பானது மட்டுமல்ல சிரித்தபடியே நாம் படித்து ரசிக்க கூடியதும் கூட. ஒரு சிறு சாம்பிள் இங்கே..



    தொகுப்பின் முதல் கதையே இன்றைய தலைமுறையின் அவலங்களை குறிப்பாக "லிவ்விங் டுகெதர் பண்ணலாமா" என்பதை கூட  "ஒரு காபி குடிக்கலாமா" என்பது போல் கேட்கும் அளவிற்கு வளர்ந்திருக்கும் (?!) நாகரீகத்தை சாடும் கதை. "ஆனந்தவல்லியின் காதல்" ஒரு சரித்திர குறுங்கதை. ஆங்காங்கே திருப்பங்களுடன் நம்மை புருவம் உயர்த்த செய்யும். "சிறப்பு விருந்தினர்" கதை நிச்சயம் பல பேர்களுக்கு பொருந்தும் வண்ணம் அமைந்திருக்கிறது. "சிடுமூஞ்சிகள்" என்னும் சிறுகதை கொஞ்சம் ஆழமாக சிந்திக்க வைக்கிறது. அதில் வரும் அம்மாவின் கதாப்பாத்திரம் கடைசி வரியில் மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறது. அதேபோல் "இரண்டு கடிதங்கள்" படித்து முடிக்கும் போது குடித்துவிட்டு அட்ராசிட்டி செய்யும் "குடிமகன்களின்" மேல் காறி உமிழத் தோன்றுகிறது. "அவன் பெயர் கேகே" மனதோரம் கொஞ்சம் சோகத்தை அப்பிவிட்டு செல்கிறது.


       ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாய் ரசிக்கும்படி இருந்தது. எந்த ஒரு கதையும் கொஞ்சமும் தொய்வை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. மொத்தத்தில் இந்தக் காபியை எந்த சுவையை ரசிப்பவர்களும் குடிக்கலாம்..!




நூலின் பெயர்         :    ஒரு காபி குடிக்கலாமா? 
ஆசிரியர்                 :    பட்டுக்கோட்டை பிரபாகர்   
பக்கங்கள்                :    152
 விலை                   :    ரூ. 100
நூல் வடிவமைப்பு :     திரு.பாலகணேஷ் 
பதிப்பாளர்              :   பி.சாந்தி, ரம்யா பிரியா கிரியேஷன்ஸ்,
                                     37/1, கெனால் பேங்க் ரோடு, அடையாறு,
                                     சென்னை - 600 020
                                     தொலைபேசி - 044-24415709
                            


Sunday, August 10, 2014

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ‘பதவியில் இருப்பவர்கள் தங்கள் சொத்துக் கணக்குகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என்று சொன்னதன் காரணமாக தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டிருந்த காலகட்டம் அது. அவரைச் சேர்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் எல்லோரும் அவரிடம் தனிக் கட்சி ஒன்று தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். அவர் அந்த முடிவுக்குச் சட்டென்று வந்து விடவில்லை. அதே காலகட்டத்தில் மற்றொரு பெரும் பொறுப்பும் அவரைச் சூழ்ந்து அழுத்திக் கொண்டிருந்தது. தன் சொந்த நிறுவனமான எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்க்காக அவர் பெரும் பொருட்செலவில் தயாரித்து இயக்கிக் கொண்டிருந்த பிரம்மாண்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் முக்கால்வாசி உருவாகி முடிந்திருந்த நிலையில் அதன் வெளியீடு என்பதே அந்தப் பொறுப்பு.

கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க. அரசு படத்தை ஓடவிடாமல் தடுக்க எல்லாவற்றையும் செய்தது. போஸ்டர்கள் ஒட்டுவதற்குத் தடை விதித்தது. மதுரை முத்து ‘படம் மதுரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவிட்டால் நான் புடவை கட்டிக் கொள்கிறேன்’ என்று சவால் விட்டார். வாத்யார் ஸ்டிக்கர்களை அச்சடித்து அவைகளை பஸ்களில் ஒட்டி (அதுவரை இல்லாத புதுமை இது அந்நாளில்) விளம்பரம் செய்து, படம் ஓடும் தியேட்டர்களில் தனிப்படை அமைத்து ரசிகர்களுக்கு பாதுகாப்பளித்து படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கினார். அதுவரையிலான தமிழ் சினிமா வசூல் ரெகார்டுகளை முறியடித்தது அந்தப் படம் என்பதுடன் மதுரை முத்துவுக்குப் புடவைகள் வந்து குவிந்தன. (அவர் தனியா புடவைக் கடை வெச்சாரான்னு தெரியல).

இப்படி படத்தின் வெற்றிக்குப் பின்னிணியில் பல சுவாரஸ்யங்கள் இருக்க. படம் உருவான விதத்திலும் நிறைய சுவாரஸ்யங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை படம் வெளியான பின் வாத்யாரே ‘பொம்மை’ சினிமா இதழில் தொடராக எழுதினார்.  அவற்றைத் தொகுத்து விஜயா பதிப்பகத்தினர் (கோவை அல்ல, சென்னை) ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ என்று நூலாக வெளியிட்டுள்ளனர். வாத்யாரின் விவரிப்பில் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் பரபரவென்று நகர்கிறது. புத்தகத்தில் நிறையத் தூவப்பட்டுள்ள புகைப்படங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

வாத்யாரின் படங்களில் திரைக்கதை மிகக் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கும். கதை விஷயத்தில் அத்தனை தேர்ந்த ஞானம் அவரிடம் உண்டு. இந்தப் படத்தைப் பொறுத்தவரை படத்தின் வசனகர்த்தா சொர்ணத்துக்கும், இயக்குனர் மேற்பார்வையாளரான ப.நீலகண்டனுக்கும்கூட முழுக்கதை தெரியாமலேயே பயணப்பட்டிருக்கிறார்கள். கதை என்பது வாத்யார் ஒருவரின் மனதில் மட்டுமே இருந்திருக்கிறது என்பது எத்தனை வியப்பான தகவல். அது வாத்யாரின் வார்த்தைகளில்....

அவரிடம் (ப.நீலகண்டன்) ‘உலகம் சுற்றும் வாலிபன்’ கதையின் ஆரம்பத்தைச் சொல்லி இருந்தேன். அதாவது விஞ்ஞானி ஒருவன் தான் கண்டுபிடித்திருந்த புதிய விஞ்ஞான யுக்தியை தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் மத்தியில் செயல்படுத்திக் காண்பிக்கிறான். தன் உழைப்பின் விளைவாக உருவான புதிய சாதனை உலகை அழிக்கும் அழிவு சக்தியாக மலர்ந்திருப்பதை மற்றவர்கட்குச் செயல்படுத்திக் காண்பிக்கிறான். அந்த ஆராய்ச்சிக் குறிப்புகளையெல்லாம் அந்த விஞ்ஞானிகளின் எதிரிலேயே தீயிட்டுக் கொளுத்தி விடுகிறான். ஆனால் ஒரு விஞ்ஞானி இந்தக் கூற்றை நம்புவதில்லை. அதன் நகல் எங்காவரு இருந்தே தீரும் என்ற எண்ணத்தில் முன்னவனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிட்டு அவன் செத்துவிட்டதாக உலகத்தை நம்பச் செய்து விடுகிறான். இளம் விஞ்ஞானியின் தம்பி இதை நம்பாமல் அண்ணனைத் தேடிப் புறப்படுகிறான். -இவ்வளவுதான் நான் அவருக்குச் சொல்லியிருந்தேன். அதுவும் குறிப்பாகத்தான். இவ்வளவு விளக்கமாகக் கூட அல்ல. நான் என்ன எடுக்கப் போகிறேன், எப்படிப்பட்ட காட்சிகளை உருவாக்க இவ்விதப் பெரிய பயணத்தைத் துவங்கி இருக்கிறேன்... இந்த விவரம் எல்லாம் அப்போது அவரிடம் இல்லை. ஆகவே அவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததற்குக் காரணம் ‘இத்தனை பேருடன் புறப்பட்டுச்  செல்கிறோமே, பிறர் நம்மைக் கேலி செய்யாத அளவுக்காவது ஏதாவது காரியம் ஆற்றிவிட்டு வரவேண்டும் என்ற அச்சம்தான் என்பது உண்மையாகத் தானிருக்கும்!

இப்படி தீர்மானமான திரைக்கதை இல்லாமலேயே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு இன்றளவும் பார்த்தால் விறுவிறுப்பான திரைக்கதை அமைந்த படமாக ‘உ.சு.வா.’வை உருவாக்கணும்னா வாத்யாரால மட்டும்தான் சாத்யம். எப்படி வந்துச்சு வாத்யாருக்கு இந்த தைரியம்...? சொல்றாரு....

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளிநாடுகளில் படமெடுக்கும் துணிவை எனக்கு ஏற்படுத்தியவை ஜெய்ப்பூரில் நான் ‘அடிமைப்பெண்’ எடுத்ததால் ஏற்பட்ட அனுபவமும், நண்பர்களின், கலைஞர்களின் திறமையும். ஒத்துழைப்பும்தான் என்பதை நிறை மனதோடு நான் சொல்லியே தீர வேண்டும்’

க்ளைமாக்ஸைப் படமாக்க அப்போது ஜப்பானில் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்த ‘எக்ஸ்போ 70’ தொழிற்பொருட் காட்சியை தேர்வு செய்திருந்தார்கள். ஜப்பான் செல்ல விசா, அன்னியச் செலாவணி கிடைக்க பட்ட கஷ்டங்கள். அங்கே பொருட்காட்சிக்கு உள்ளே செல்ல அதிக நபர்களுக்கு அனுமதி கிடைக்காமல், கேமராவையும் மற்ற தளவாடங்களையும் அவர்களே சுமந்து சென்று உடை. கெட்டப் மாற்றி நடிக்க வேண்டி இருந்த சிரமங்கள் என்று ஒவ்வொன்றையும் வாத்யாரின் விவரிப்பில் படிக்கப் படிக்க படமாக மனதினுள் விரிகிறது. கூடவே போனஸாக அவர் சொல்லும் வெளிநாட்டுத் தகவல்கள், அசோகன், நாகேஷ், மஞ்சுளா தொடங்கி அவரது உழைப்பில் பங்கெடுத்த ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்வது என்று முதல் பக்கத்தில் துவங்கிய என் கண்ணின் ஓட்டம் கடைசிப் பக்கத்தில்தான் ஓய்ந்தது.

=================================================
‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’, வெளியீடு : விஜயா பப்ளிகேஷன்ஸ், 23/9, நேதாஜி நகர் முதல் தெரு, அசோக் நகர், சென்னை - 600 083.  பக்கங்கள் : 176. விலை : ரூ.120
=================================================

Sunday, August 3, 2014

தமிழ் பேசுகிறார் ஹாரிபாட்டர்!

ஹாரிபாட்டர்..! தன்னை உருவாக்கிய ஜே.கே.ரோலிங் என்ற பெண்மணியை உலகப்புகழ் பெற வைத்த கதாபாத்திரம்! 7 நாவல்கள் அடங்கிய ஹாரிபாட்டர் கதைகள் பல விமர்சனங்களுக்கு உள்ளானாலும்கூட முதல் நாவல் வெளியான 1997ம் ஆண்டிலிருந்து கடந்த 2013 வரை 450 மில்லியன் பிரதிகளுக்கு மேல் ஹாரிபாட்டர் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஹாரிபாட்டரின் கடைசி 7வது புத்தகம் வெளியான 24 மணி நேரத்திற்குள் 11 மில்லியன் காப்பிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது. உலகெங்கிலும் இதுவரை 73 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  (இப்போது  தமிழுடன் சேர்த்து 74)

பிரிட்டிஷ் பெண்மணியான ஜே.கே.ரோலிங் ஒரு ரயில் பயணத்தின் போது அவர் மனதில் தோன்றிய ஹாரிபாட்டர் கதைக்கான கருவைக் கதையாக வளர்க்க இந்த 7 நாவல்களும் உலகப் புகழ் பெற்று விற்பனையில் சாதனை படைத்து ரோலிங்கை கோடீஸ்வரியாக்கி விட்டன. (நானும் ரயில் பயணம் பண்றப்பல்லாம் மண்டையக் குலுக்கி புரட்டித்தான் பாக்குறேன்.. ஒண்ணும் தோண மாட்டிங்குது..... அவ்வ்வ்வ்வ்). இப்படி ஒரே கதாபாத்திரத்தை வைத்து தொடர் நாவல்களாக தமிழில் எழுதினால் அந்த எழுத்தாளர் கோடீஸ்வரர் இல்லை... லட்சாதிபதியாகக் கூட சாத்தியமில்லை. ஆங்கில மொழியின் வீச்சு அத்தகையது.

அப்படி என்னதான்யா இருக்குது இந்தக் கதைங்கள்லன்னு படிக்கறதுக்கு நிறையவே ஆசை இருந்தாலும் இங்கிலீசுல படிச்சு அதை மனசுல தமிழாக்கிப் புரிஞ்சுக்கற அளவுக்கு நமக்கு ‘சமாசாரம்’ இல்லங்கறதால அந்த ஆசைய விட்டுட்டேன். சமீபத்துல ஹாரிபாட்டர் முதல் இரண்டு பாகங்கள் தமிழ்ல பெயர்க்கப்பட்டு வந்திருக்குன்னு பார்த்ததுமே வாங்கிட்டு வந்துட்டேன்.  முதல் புத்தகத்துல கேரக்டர்களை அறிமுகப்படுத்தி பேஸ்மெண்ட் போட்ருக்கறதால மெதுவாத்தான் படிக்க முடிஞ்சது. ரெண்டாம் பாகத்தை ஜெட் வேகத்துல படிச்சு முடிச்சுட்டேன்.

நம்ம நாட்ல விக்கிரமாதித்தன் கதைகள்னு ஒண்ணு இருக்கு. விக்ரமாதித்தன் தன் தம்பி பட்டி, வேதாளம் துணையுடன் மந்திரக் கம்பளத்தில் பறப்பார். நினைத்த உருவத்துக்கு மாறுவார். தன் மந்திர வாளால எப்பேர்ப்பட்டவனையும் வெட்டி வீழ்த்துவார் (கூடவே பாக்கற பொண்ணையெல்லாம் கல்யாணமும் செஞ்சுப்பார், ஹி... ஹி.. ஹி...) இப்படிப் பல சாகசங்கள் நிரம்பியதாயும் கதைக்குள் கதைக்குள் கதை என்று அவை எழுதப்பட்ட விதமும் பிரமிப்பைத் தரும் விஷயம். அத்தோட ஒப்பிட்டா ஹாரிபாட்டர் பொடியன்னுதான் சொல்லணும். ஆனாலும் இந்த மந்திர மாய விஷயங்கள் மேல்நாட்டினருக்குப் புதுசுன்றதாலயோ என்னவோ உலகப்புகழ் அடைஞ்சுட்டான் ஹாரிபாட்டர்.

ஹாரிபாட்டரை உரிச்சா... முதல் பாகமான ‘ஹாரிபாட்டரும் ரசவாதக்கல்லும்’ நாவல். வோல்டமார்ட் என்கிற தீய மந்திரவாதியுடன் மோதியதில் ஹாரியின் தாய் தந்தையர் இறந்துவிட. அதற்குப்பின் வோல்டமார்ட்டும் மறைந்துவிட, கைக்குழந்தையான ஹாரியை மந்திர மாயாஜாலங்கள் கற்றுத்தரும் ‘ஹாக்வர்ட்ஸ்’ பன்ளியின் தலைமையாசிரியரான டம்பிள்டோர் அவன் பெரியப்பா மற்றும் பெரியம்மாவிடம் சேர்ப்பிக்கிறார்.  ஹாரியின் பெற்றோர் மந்திரவாதிகளான காரணத்தால் அவர்களை வெறுக்கும் அந்தக் குடும்பத்தில் கஷ்டங்களை அனுபவித்து வளரும் ஹாரி. வளர்ந்ததும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக ஹாக்வர்ட்ஸ் பள்ளியில் சேர்கிறான். 

அங்கே அவனுக்கு ரான் என்கிற தோழனும் ஹெர்மயனி என்கிற தோழியும் கிடைக்கிறார்கள். மால்பாய் என்கிற எதிரியும் உருவாகிறான். மந்திரத் துடைப்பத்தால் விண்ணில் பறந்து விளையாடும் ‘குவிடிச்’ என்ற விளையாட்டில் சாம்பியனாகும் ஹாரி. அவ்விளையாட்டின் போது யாரோ தன்னை அழிக்க முற்படுவதை உணர்கிறான். தன் நண்பர்கள் உதவியுடனும் அவனுக்குக் கிடைக்கும் தந்தையின் சொத்தான மறைய வைக்கும் கம்பளத்தின் உதவியுடனும் துப்பறிதலில் ஈடுபடுகிறான். டம்பிள்டோரின் நண்பர் உருவாக்கிய ரசவாதக் கல்லைக் கைப்பற்றுவதற்காகத்தான் இவ்வளவும் நடைபெறுகிறது என்பதையும் வோல்டமார்ட்தான் அங்கிருக்கும் நபர் ஒருவரைக் கைப்பற்றி இதில் ஈடுபட்டதையும் அறிகிறான். ஹாரி அண்ட் ப்ரண்ட்ஸ் ஊகித்த நபராக அல்லாமல் வேறொருவர்தான் வோல்டமார்ட்டின் புகலிடம் என்பதைத்  தெரிந்து திடுக்கிட்டலும் துணிவாக மோதும் ஹாரி. வோல்டமார்ட்டை அழிக்கிறான்.

இரண்டாம் பாகமான ‘ஹாரிபாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்’ நாவலில் இரண்டாமாண்டு மாணவனாக இருக்கும் ஹாரி, ரான் குடும்பத்தினருடன் மிக நெருக்கமாகிறான்.  சாதாரணமாகத் துவங்கும் அப்பள்ளியாண்டில் அசாதாரண சம்பவங்கள் நிகழத் துவங்குகின்றன. ஒரு மாணவியும், பேராசிரியரின் பூனையும் கல்லாக்கப்படுகின்றனர். அந்த இடத்தின் சுவரில் பாதாள அறை திறக்கப்பட்டு விட்டதாகவும், அதிலிருக்கும் ரகசிய விலங்கு வெளிப்பட்டு விட்டதால் எச்சரிக்கை என்றும் எழுத்துகள் மின்னிக் கொண்டிருக்கின்றன. அந்த மர்ம விலங்கின் குரல் அவ்வப்போது ஹாரிக்கு மட்டும் கேட்கிறது. நிஜமாகவே பாதாள அறை இருக்கிறதா? அதிலிருக்கும் ரகசிய விலங்கு என்ன? எப்படி அதன் குரல் ஹாரிக்கு மட்டும் கேட்கிறது என்கிற கேள்விகளுக்கு விடை தேடி துப்பறிய முற்படுகின்றனர் ஹாரி அண்ட் பிரண்ட்ஸ்.

பரபரப்பான சில திருப்பங்களுக்குப் பின் அந்த விடையை நெருங்கிக் கண்டறிகிற சமயத்தில் ஹெர்மயனியும் சிலையாக கண்டெடுக்கப்படுகிறாள். அவள் கையிலிருக்கும் ஒரு துண்டுச்சீட்டின் துப்பு மூலம் ரகசியத்தின் திறவுகோலை அறியும் ரானும் ஹாரியும் பாதாள அறையினுள் நுழைகின்றனர். அங்கே ரானைப் பிரிந்து ஹாரி தனியாக எதிரியுடனும் அந்த விலங்குடனும் மோத நேரிடுகிறது. இம்முறையும் அந்த விலங்கையும் எதிரியான வோல்டமார்ட்டையும் அழித்து ஜெயிக்கிறான் ஹாரி. கல்லாக்கப்பட்டவர்கள் மீண்டும் மனிதர்களாக்கப்படுகிறார்கள்.

மந்திரத் துடைப்பத்தில் பறப்பது, மாய அங்கியால் மறைவது. பேசும் குதிரை மனிதர்கள். கல்லூரியில் வசிக்கும் கெட்ட. நல்ல ஆவிகள், பறக்கும் கார், ராட்சத சிலந்திகள் என்று சகல மாயமந்திர மசாலா சமாச்சாரங்களும் தூவப்பட்டு விறுவிறுப்பாகத்தான் இருக்கின்றன ஹாரிபாட்டர் கதைகள். வர்ணணைகள் அப்படி இப்படி என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் சிம்பிளான எழுத்துநடை ஜே.கே.ரோலிங்கினுடையது. அதனால் படிப்பதற்கு சுவாரஸ்யம் என்பது என் கருத்து. அதேபோல அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயமாக அவர்கள் துப்பறிந்து கண்டுபிடிப்பதும், க்ளைமாக்ஸில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் மர்மக் கதைக்கான இலக்கணக் கட்டுக்கோப்பையும் கொண்டிருப்பதால்தான் இந்தத் தொகுதிகள் இப்படி உலகளாவிய வெற்றியைக் கண்டிருக்கின்றன.

முதல் பாகம் 299 ரூபாய் விலையிலும் இரண்டாம் பாகம் 350 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. பி.எஸ்.வி.குமாரசாமி என்பவர் தமிழாக்கம் செய்திருக்கிறார். குறை சொல்ல முடியாதபடி எளிமையாகவே இருக்கிறது தமிழாக்கம். மஞ்சுள் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட்னு போபால்ல இருக்கற கம்பெனி வெளியிட்டிருக்குது.