Monday, December 22, 2014

எம்.ஜி.ஆர்.

‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி’ அப்படின்னு கவிஞர் பொன்னடியான் அவர்கள் ஒரு பாட்டுல எழுதியிருந்தாரு. புகழோடு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் புத்தகமாகப் படிக்கையில் நிச்சயம் அதிலிருந்து நமக்கு கற்றுக் கொள்ள நிறையப் பாடங்கள் கிடைக்கும் என்பது நான் அனுபவத்தில் கண்ட விஷயம்.  அதிலும் ‘வாத்யார்’ என்றே அழைக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் பாடங்கள் இல்லாமல் போய்விடுமா என்ன...?

எம்ஜிஆரைப் பற்றி இதுவரை நிறையப் புத்தகங்கள் வந்திருக்கின்றன. அவரோடு பழகியவர்கள், மெய்க்காப்பாளர்கள், அவரை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர்கள், உடன் நடித்தவர்கள் என்று பலர் தங்கள் பார்வையில் எழுதிய புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். இந்த நூல் அனைத்தையும் தொகுத்தது போல, இதைப் படித்தால் வாத்யாரைப் பற்றித் தெரிந்து கொள்ள இன்னொரு புத்தகத்தைத் தேட வேண்டாம் என்பது போல முழுமையான வரலாறாக அமைந்திருக்கிறது.

சிறு வயதிலேயே நாடகங்களில் நடக்கத் தொடங்கி, தன் பத்தொன்பதாவது வயதில் ‘சதி லீலாவதி’ படத்தில் சினிமாவில் சிறு வேடமொன்றில் அறிமுகமான வாத்யார் கதாநாயகனாக முதல் படத்தில் நடித்தபோது அவருக்கு வயது முப்பது. அப்போது அவரைப் பற்றிக் கொண்ட வெற்றி தேவதையை கடைசிவரை அவர் தன்னை விட்டு விலக விடவில்லை. நூலாசிரியர் தீனதயாளனின் விவரிப்பில் வாத்யாரின் திரையுலக வாழ்க்கையும் அவர் சந்தித்த வெற்றிகளும், தோல்விகளும், சாதனைகளும் சோதனைகளும் நம் மனக்கண்ணில் படமாக விரிகின்றன. நல்லதொரு சினிமாப் புத்தகமாக அமைகிறது அதுவரையிலான பகுதி.

 தன் அரசியலை வலிமைப்படுத்தும் ஆயுதமாக சினிமாவை வைத்திருந்த வாத்யார் தமிழக முதல்வராகி அரசியல் வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட காலகட்டத்திலிருந்து நூல் சினிமாவைத் துறந்து அரசியல் நூலாகப் பரிணாமம் பெற்று விடுகிறது.  அவர் எதிர்கொண்ட தேர்தல்கள், ஆட்சி கலைப்பு, அரசியலில் அவர் எடுத்த முக்கிய முடிவுகள், சந்தித்த வழக்குகள் என தெளிவான வரலாற்றுப் பதிவாகத் தொடர்ந்து அவர் மறைவில் முடிகிறது புத்தகம்.

இந்தப் புத்தகத்தை இங்கே நான் குறிப்பிடுவதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. சினிமாவிலும், அரசியலிலும் சில அதிரடி முடிவுகளை எடுக்க நேர்ந்த சமயத்தில் அவர் மனநிலை எப்படி இருந்திருக்கும்..? துப்பாக்கிக் குண்டுத் தாக்குதலுக்கு ஆளாகி மீண்டபின் இன்னொரு முறை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று மரணத்தை வென்று வந்த சமயம் அவரின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் அவரைச் சுற்றியிருந்தவர்களின் நிறங்களை அறிந்திருப்பார். அப்போது அவர் எப்படி உணர்ந்திருப்பார்...? இப்படியெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததுண்டு. புத்தகத்தில் அவற்றுக்கும் விடை இருக்கிறது. வாத்யாரின் மன உணர்வுகளும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. (ஆதாரம் உண்டான்னு கேட்டா எனக்குத் தெரியாது... படிச்சப்ப சரியா இருக்கும்னுதான் தோணுச்சு). அந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகிறது இந்தப் புத்தகம்.

வாத்யாரோட கேரியர்ல அவர் நடிச்சு வெற்றி பெற்ற படங்களை மாதிரி அவரால ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட ப்ராஜக்ட்டுகள் பத்தி விரிவா யாராச்சும் எழுதினா அதுவே தனி புத்தகமாயிடும். அப்படி கைவிடப்பட்ட படங்களின் லிஸ்ட்டோட அவர் நடிச்ச அத்தனை படங்களின் லிஸ்ட்டும் பின்னிணைப்பா தரப்பட்டிருக்கறதும், புத்தகம் நெடுகிலும் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கும் சினிமா ஸ்டில்கள், வாத்யார் ஸ்டில்களும் ரசனையோ ரசனை. 

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பா. தீனதயாளன். பால்ய காலம் தொட்டு தமிழ் சினிமாவையும் எம்.ஜி.ஆரையும் உன்னிப்பாகக் கவனித்து வருபவர். எம்.ஜி.ஆரின் படங்களை தியேட்டரின் ஒரு ரசிகராகப் பார்த்து மகிழ்ந்தவர்.  எம்.ஜி.ஆரின் எந்தப் படம், எந்தத் தியேட்டரில், எத்தனை நாள்கள் ஓடின என்பதை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரை நேசிப்பவர். எம்.ஜி.ஆரின் படங்களைப் போலவே அவருடைய அரசியலையும் அவதானித்தவர். குறிப்பாக, அந்தக் காலத்துப் பத்திரிகைகளின் வெளியான அரசியல் தலைப்புச் செய்தி தொடங்கி சர்ச்சைக்குரிய கார்ட்டூன்கள் வரை அவரிடம் இருக்கும் நுணுக்கமான செய்திகள் அநேகம். அந்த வகையில், எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் வாழ்க்கையைப் பதிவுசெய்ய பா. தீனதயாளனே பொருத்தமானவர் என்று முடிவுசெய்தோம். அவரிடமே ஒப்படைத்தோம்.  - இப்படிக் கூறுகிறது சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள குறிப்பு. அந்த நம்பிக்கை மிகச் சரி என்பதை நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர் பா.தீனதயாளன்.

456 பக்கங்கள்ல 300 ரூபாய் விலையில இந்தப் புத்தகத்தை புதிய எண் : 10/2, போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தி நகர், சென்னை - 600017 (போன் : +91 44 2434 2771)ல இருக்கற சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கு. வாத்யாரை உங்களுக்குப் பிடிக்கும்னா உங்க கைல தவறாம இருக்க வேண்டிய புத்தகம் இது.

Thursday, December 18, 2014

ருத்ர வீணை - மர்மத் தொடர்

எனக்கு மிகவும் பிடித்த அன்று-இன்று பாணியில் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதப்பட்டு தொலைகாட்சி தொடராக வெளிவந்து மிகவும் பிரபலமான ஒரு மர்மத் தொடர் என்பதை அறிந்த உடனே இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் தோன்றியது. எனது வட்டாரத்தில் இருக்கும் அரசு நூலகத்தில் வலை வீசியதில் முதல் பகுதி மட்டும் சிக்கியது. அடுத்த இரண்டாவது மற்றும் இறுதிப் பகுதியை தேடி வைப்பதாக நூலகர் சொன்ன வாக்குறுதியை ஏற்று முதல் பகுதியை படிக்கத் தொடங்கினேன்.  முதல் பகுதி முடிந்தவுடன் அடுத்த பகுதியை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவல் கூட, மறுதினமே நூலகம் சென்று இரண்டாவது பகுதியை எடுத்து வந்தேன். அதுதான் இறுதிப் பகுதி என்று நூலகர் வாக்கை நம்பி படிக்கத் தொடங்கினால், அதுவோ அடுத்த பகுதியில் தொடரும் என்று முடிந்தது. 

கதையின் போக்கில் பிணைக்கப் பட்ட மர்மங்கள் எப்படி அவிழ்கின்றன என்பதை அறிய எனக்குள் ஒரு போராட்டமே நடந்தது. கடைகள், ஆன்லைன் என்று எங்கு தேடியும் அடுத்த பகுதி கிடைக்கவில்லை. புத்தகச் சந்தை வரை காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்ட நிலையில், 'மின்னல் வரிகள்' பால கணேஷ் சார் தன்னிடம் அனைத்து பகுதிகளும் இருப்பதாக கூறி எனது ஏக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அவரிடம் இருந்ததோ நான்கு பகுதிகள் கொண்ட பதிப்பு. சமீபத்திய பதிப்புகள் இரண்டு பகுதிகளாக வருவதாகவும் அவை அதிகம் புழக்கத்தில் இல்லை என்றும் என் நண்பன் பின் ஒரு நாள் விளக்க அறிந்தேன். 



அன்று 
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன், நவாப்களின் ஆளுமைக்கு உட்பட்டு, பல வித இசைக்கலைஞர்கள் கலைகளை வளர்த்து வாழ்ந்த தோடீஸ்வரம் என்ற ஊருக்கு, வடக்கில் இருந்து நவாப்ஜான் பாபா என்பவர் ருத்ர வீணையுடன் வருகிறார். அந்த ருத்ர வீணையானது அந்த சிவனே பார்வதியைக் கொண்டு செய்த பல சக்திகள்  கொண்ட ஒரு அரிய இசைக் கருவி. அதில் இசைக்கப்படும் ராகத்திற்கு ஏற்ப பல அற்புதங்கள் நிகழ்த்த கூடியது. அதை வாசிப்பதற்கே தனி அருள் வேண்டும், தீய எண்ணங்களுடன் நெருங்கினால் அதை தீண்ட முடியாது. பெண்களாலும் அதை வாசிக்க முடியாது. சிவ அம்சம் கொண்ட ருத்ரர்களால் மட்டும் தான் அதை வாசிக்க முடியும். அத்தகைய ருத்ர வீணையை தன் குருவின் ஆணைப் படி அந்த தோடீஷ்வர ஆலயத்தில் சேர்க்க வருகிறார் பாபா. 

ஒரு இஸ்லாமியர் வீணையுடன் கோவிலில் நுழைவதைக் கண்டு, அங்கு இருப்பவர்கள் பதறி அவரை வெளியேற்றி விடுகின்றனர். அந்த ஊரின் தாசி குடும்பத்தில் தோன்றி கற்பு நிலை தவறாது வாழும் அபராஜித வைஜெயந்தி பாபாவிற்கு தன் இல்லத்தில் அடைக்களம் தந்து அவரை போற்றி வழிபடுகிறாள். வரட்சியில் இருக்கும் அந்த ஊரை ருத்ர வீணையின் இசை செழிப்பாக மாற்றுவதோடு மட்டுமின்றி, ஊரில் சில அற்புதங்களை நிகழ்த்துகின்றது. 

அந்த ருத்ர வீணையின் சக்தி பற்றிய செய்திகள் நான்கு புறமும் பரவ, அதை அபகரிக்க எண்ணி சில தீய சக்திகள் அந்த ஊருக்குள் நுழைகின்றன. பல தடைகளையும் தாண்டி பாபா எப்படி தன் குருவின் கட்டளையை நிறைவேற்றுகிறார், எப்படி அந்த வீணை பாதுகாக்கப் படுகின்றது என்பதே மீதி கதை.

இன்று         

பாபா வருகைக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு தோடீஷ்வர ஆலயத்தில் பாபா ருத்ர வீணையுடன் சிலையாக காட்சி தருகின்றார். தஞ்சையை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் வரட்சியில் இருக்க, தோடீஷ்வரம் மற்றும் செழிப்புடன் விளங்குகின்றது. தினமும் கேட்கும் ருத்ர வீணையின் நாதம் தான் அந்த செழிப்புக்கு காரணம் என்றாலும், அது எங்கு உள்ளது என்பதும் அதை வாசிப்பது யார் என்பதும் மர்மமாகவே இது நாள் வரை உள்ளது. 

நரசிம்ம பாரதி என்னும் சக்தி உபாசகர் அந்த ருத்ர வீணையை தேடி ஊருக்குள் வருவதில் இருந்து மாற்றங்கள் நடக்கத் தொடங்குகின்றன. ஒரு பக்கம் மனைப் பாம்பு ஒன்று பாதுகாக்கும் பாபா கைப்பட எழுதிய ராக மந்திர ஏடு, மறு புறம் கோவில் தாசியான சுந்தராம்பாள் தினமும் சென்று பூஜை செய்யும் யாராலும் நுழைய முடியாத தாசி பங்களா, ஊர் முழுவதும் ஒரே சம அளவில் தினமும் ஒலிக்கும் ருத்ர வீணையின் இசை என்று பல மர்மங்கள். ரகசியங்களை பாதுகாக்கும் சுந்தராம்பாள், ருத்ர வீணையை தன் வசமாக்க துடிக்கும் உபாசகர், இந்த மர்மங்களை கண்டுபிடிக்க துடிக்கும் இளவட்ட நண்பர்கள் சுவாமிநாதனும் சங்கரனும் என்று கதை சூடு பிடிக்கின்றது.  

இறுதியில் நல்ல சக்திக்கும் கெட்ட சக்திக்கும் இடையில் அந்த வீணைக்காக பெரும் போராட்டம் வெடிக்கின்றது. நல்ல சக்தியே வென்றாலும், ருத்ரன் யார் என்ற ரகசியம் இறுதிவரை வாசகர்களை சுவாரசியம் குறையாமல் இழுக்கின்றது.                   

இந்தக் கதை தொலைகாட்சி வடிவத்தில் சற்று வேறுபட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று பகுதியில் நடக்கும் ஒரு சம்பவம் இன்று பகுதியில் கண்டியறிப் படுவது போல் காட்சிகள் ஒரு சேர அமைத்தது கதைக்கு பலம். சில இடங்களில் திகட்டும் அளவு ஆன்மீகமும், இறுதியில் தேவைக்கு அதிகமாக கதாப்பாத்திரங்களும் சேர்வது கதையில் சற்று தொய்வை ஏற்படுத்தினாலும், 'ருத்ர வீணை' விறுவிறுப்பு குறையாத ஒரு மர்மத் தொடர்.

************************************************************************************************************
வெளியீடு : ஜீயே பப்ளிகேஷன்ஸ்
ஆண்டு :  2004
பகுதிகள் : நான்கு
***********************************************************************************************************

இந்திரா சௌந்தர்ராஜன்



இந்திரா சௌந்தர்ராஜன் என்ற புனைப்பெயர் கொண்ட பி. சௌந்தர்ராஜன் அவர்கள் தமிழில் ஆன்மீகம் மற்றும் அமானுஷ்யம் சார்ந்த பல மர்ம நாவல்களை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்து மக்கள் மனதைக் கவர்ந்தவை. 'மர்ம தேசம்' விடாது கருப்பு இவரது படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது. மதுரையில் வசிக்கும் இவர் இந்த ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

காதலுடன்
ரூபக்

Thursday, December 4, 2014

திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்


பெரிய மெனக்கெடல் இல்லாமல் வந்து விழும் வார்த்தைகளைக் கொண்டு எழுதப் பட்ட குறுநாவல் தான் இந்த "திசையெல்லாம் நெருஞ்சி". தலைப்பே கவிதை பேசியமையால் தான் இந்நூலை வாங்கினேன். சமீபத்தில் நான் வாங்கியப் புத்தகங்களில் சிறந்தது என்று இந்நூலைச் சொல்வேன். இந்நூலை வாசிக்க ஐந்து மணிநேரம் போதுமென்று நினைக்கிறேன், நான் ஒரே இரவில் வாசித்து முடித்தேன். 

இந்நூலில் மூன்று கதைகள் அடங்கியிருக்கிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை தாங்கியிருக்கின்றன. இலக்கியமென்று வார்த்தைகளை தேடித் தேடி பிடித்து எழுதி வாசர்களை அயற்சியடைய முயற்சி செய்து கொண்டிருக்கும் இன்றைய சில எழுத்தாளர்களுக்கு மத்தியில், பேசுமொழியில் எழுதியிருப்பது வாசிப்பதற்கு எளிதாக இருக்கிறது, இதுதான் அவரின் பலமென்று கருதுகிறேன்.





1) இரட்சணியம்:


தொடங்குவது என்னவோ ஒருமாதிரி இழுவையாக இருந்தாலும் சில பக்கங்கள் சென்றதும் நம்மை வேறெங்கும் சிதறாமல் விறுவிறுவென ஜெட் வேகத்தில் நகர்த்திச் செல்கிறது. ஆல்பர்ட் எனும் சிறுவன் காமத்தின் வேட்கையை கட்டுப்படுத்த முடியாமல் எப்படி தணித்து கொள்கிறான் என்பது தான் மையக் கரு. கரண்டு போன சாயந்திரத்தில் அக்கா முறை பெண்ணொருத்தி செய்யும் சேட்டையும், பின் மாலினி டீச்சர், சித்தி காடில்யா மற்றும் பக்கத்து வீட்டு ஜெயராணி வரை நீளும் மன்மத லீலைகளை சுமந்து நிற்கிறது இந்த இரட்சணியம். நேர்த்தியான நடையில் விறுவிறு கதை. பதின்ம வயதில் காமத்தின் மீதான தெளிவு இல்லாத சிறுவனின் மன நிலையை அவ்வளவு நேர்த்தியாக சொல்வதோடு மட்டுமில்லாமல், இந்த சமூகத்தின் முன்பு மிகப்பெரிய கேள்விக்குறியை ஆல்பர்ட் என்ற பாத்திரத்தின் வாயிலாக நம்முன் வைத்திருக்கிறார் ஆசிரியர். பதின்ம வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.  



2) உருமால் கட்டு:


கிராமத்திலிருந்து நகரத்திற்கு பெயர்ந்து சென்ற குடும்பமொன்று திருமணத்திற்கு முந்திய உருமால் கட்டு என்னும் வைபவத்திற்கு தனது சொந்தங்களை கூப்பிட வந்திருக்கும் நிலையை எளிமையாக விவரித்திருப்பது அழகு. குபேந்திரன் (மண மகன்)  பார்வையில் சொல்லப்படும் கதையில் கிராம சூழல்களையும், அதை சார்ந்த மனிதர்களையும், உறவினர்களையும், அவர்களின் மனப்பாங்கையும் அத்தோடு உறவினர்களை உதறித்தள்ளும் மன நிலையிலிருக்கும் திடீர் நகரவாசிகளான முன்னாள் கிராமவாசிகளான குபேந்திரனின் குடும்பத்தாரின் மன நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது இந்த "உருமால் கட்டு". யதார்த்த நடை.

3) திசையெல்லாம் நெருஞ்சி: 

பல வருடங்களுக்குப் பிறகு வேறொரு ஊரிலிருந்து, இன்னொரு ஊருக்கு பிழைப்பு தேடி வந்த பழநி எனும் சவரத்தொழிலாளி தனது மனைவி குருவம்மா மற்றும் குழந்தைகளோடு படும் அல்லல்களை வலியுடன் பதிவு செய்திருக்கிறார். சிறுக சிறுக சேமித்து, அந்த ஊரின் பெரிய மனுஷன் ஒருவனுக்கு வட்டிக்கு கடனாக கொடுத்துவிட்டு திருப்பி கேட்க போய் படும் அவமானத்தையும், கோவம் வந்து அந்த மேல் சாதி மனுசனை? அடித்துவிட்டு அதனால் ஊரை காலி செய்ய சொல்லி ஊர்ப் பஞ்சாயத்து சொல்வதையும் வலிகளோடு மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் திரு. சு.வே. பாவப்பட்ட மனிதர்களின் கண்ணீரை நீங்களும் உணரலாம் இக்கதையை வாசித்தால். 

திசையெல்லாம் நெருஞ்சி என்ற தலைப்பை தவிர இந்த நூலுக்கு வேறந்த தலைப்பும் பொருந்தாது என்பதை இக்கதை உங்களுக்கு சொல்லும். 

பலம்:

1) கொஞ்சம் பிசகி இருந்தாலும் "இரட்சணியம்"  கதை பிட்டுக் கதைகள் வரிசையில் அடங்கிவிடும் அபாயமிருந்தும் நேர்த்தியாக எழுதியிருப்பது.

2) புனைவுகளை தவிர்த்து மனிதர்களை மனிதர்களாகவே உலவ விட்டிருப்பது.

 இம்மூன்று கதைகளும் எங்கோ நடந்த நிஜமாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது, அந்த அளவுக்கு மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. புத்தகத்திற்கு கொடுக்கும் காசுக்கு நிச்சயமாக நீங்கள் மன நிறைவைடையலாம்.

=================================================================

தமிழினி பதிப்பகம் 

முதல் பதிப்பு : 2007, இரண்டாம் பதிப்பு : 2012.

மொத்தப் பக்கங்கள் : 112

விலை : ரூபாய் 80/-

==================================================================

படித்துச் சொன்னது 

அரசன் 

Thursday, November 20, 2014

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - திரு. மாரி செல்வராஜ்


சொல்ல வந்த விசயத்தை வாசகர்களுக்கு புரியும் வண்ணம் அதே நேரத்தில் ரொம்ப இழுக்காமல் சொல்வதில் இருக்கிறது படைப்பாளியின் வெற்றி இரகசியம், அதை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார் திரு. மாரி செல்வராஜ். கொஞ்சமும் ஒப்பனைகளற்ற எழுத்துக்களின் குவியல் தான் இந்த "தாமிர பரணியில் கொல்லப் படாதவர்கள்". கடினமான வார்த்தைகளை கொண்டு தான் இலக்கியம் படைக்கவேண்டுமென்ற நெறியை தனது இலகுவான வார்த்தைகளினால் உடைத்தெரிந்திருக்கிறார். 



சற்றும் தொய்வில்லாமல் நகர்கிறது ஒவ்வொரு கதையும், முடிவுகள் மனதை பிசைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையின் முடிவும் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வலியை இறக்கி வைக்க முடியாமல் போனாலும், மறந்து போகவேணும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. 

இந்நூல் பேசப்படுவதற்கு முக்கிய காரணம், கதைகளையும், அதன் மாந்தர்களையும் கற்பனையில் புனையாமல், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் கருப்பொருளாக்கி படைத்திருக்கிறார் என்பது வாசித்து கொண்டிருக்கும்போதே விளங்கி விடுகிறது. அதுதான் வலிமையான படைப்பாக காரணமாயிருக்கிறது. 

நூலாசிரியரைப் பற்றி:




இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக தனது பணியை துவங்கி தனது பயணத்தை செலுத்திக் கொண்டிருக்கும் திரு. மாரி செல்வராஜ் விரைவில் இயக்குனர் அவதாரம் எடுப்பதற்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம்.

"காட்சி" இணைய தளத்தில் வந்தவைகளை சின்ன சின்ன மாற்றங்கள் செய்து "தாமிர பரணியில் கொல்லப் படாதவர்கள்" என்ற நூலாய் நமக்கு வழங்கியிருப்பதாக ஆசிரியரே முன்னுரையில் சொல்லியிருக்கிறார். 

தற்பொழுது பிரபல வாரப் பத்திரிக்கைகளில் இவரின் பெயரை அதிகம் காண முடிகிறது, நல்ல படிப்பாளி தான் தரமான படைப்பை கொடுக்க முடியும்.

நூலைப் பற்றி:

இதிலிருக்கும் மூன்று கதைகளைப் பற்றி மட்டும் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். 

1) அடுக்கு செம்பருத்தி:

பால்ய வயதில் சக மாணவியின் மீது நண்பன் கொண்ட காதல் தோல்வியினால் தற்கொலை செய்து கொண்டதையும், பின்னர் அந்த மாணவியை பழி வாங்கிய நிகழ்வையும் பளிச்சென்று சொன்ன விதம் சிறப்பு. கடைசியில் அப்பெண்ணை சந்திப்பதும், அதன் சூழலையும் சொன்னது "நறுக்". 


2) இரயில் எனக்கு பிடிக்காது:

இக்கதை அவ்வளவு எளிதில் மனதை விட்டு அகலாது, அப்படியொரு பாரமான கதை. ஒருவன் வெறுப்பாய் மாடு மேய்க்க சென்று அம்மாட்டின் மீது பரிவும் பாசமும் வருகையில், அம்மாடு இறந்து போவதை விவரித்த விதத்தில் நெஞ்சம் கனத்துப் போகிறது. வாழ்க்கையில் ஒரு முறையேனும் வாசித்து விடுங்கள்.


3) நின்றெரியும் பிணம்: 

கதிரேசன், தன்னைவிட தாழ்த்த பட்ட ? ஒரு குடும்பத்தார் மீது கொண்ட அன்பினால், சொந்த அத்தை, மாமாவே அவனுக்கு என் பெண் கிடையாது என்று சொல்வதோடு மட்டுமில்லாமல் பெரும் பழியொன்றை சுமத்த, தற்கொலை செய்து கொள்கிறான். எவ்வித பூச்சுமின்றி இயல்பான விவரணைகள். 

இன்னும் சொல்ல நிறைய கதைகள் இருந்தாலும் இந்த மூன்றும் போதுமென்று நினைக்கிறேன். வாசிப்பவனை எளிதில் வசீகரிக்க கூடிய திறமை கொண்ட எழுத்து. இறுதியாக "தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" கதையல்ல அது வாழ்க்கை. அதை வாசித்து உணர்ந்து கொள்ளுங்கள்.

தாழ்த்தப்பட்டவன் என்று அனுதாபம் தேடும் "சில" படைப்பாளிகளுக்கு மத்தியில் தன்னுடைய வலியை அழுத்தமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் பதிவு செய்த திரு. மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

========================================================================

வெளியீடு : வம்சி புக்ஸ் 

விலை : 150/-

மொத்தப் பக்கங்கள்: 200

========================================================================

படித்துச் சொன்னது:

அரசன் 
  
  

Friday, November 7, 2014

பதவிக்காக - சுஜாதா


குங்குமத்தில் தொடராக இந்த நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகிறது, இருந்தாலும் இன்றைய காலக்கட்டத்திற்கும் கச்சிதமாக பொருந்திப் போவது தான் ஆச்சர்யம். நாவலின் மையக்கரு போல்,  தமிழக அரசியலும், அதன் காட்சிகளும் இன்றளவும் தொடர்வது கொடுமையிலும் கொடுமை. இன்னும் முப்பது வருடங்கள் கழித்து பார்த்தாலும் காட்சி மாறாமல் அப்படியே இருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. 

சுஜாதா அவர்கள் எந்த அரசியல்வாதியையும் பார்த்து எழுதி இருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன், ஒரு கணிப்பில் எழுதியிருக்க வேண்டும், அவரது கணிப்பை பொய்த்துப் போகாமல் போற்றிப் பாதுகாத்து வரும் அரசியல் வாதிகளையும், அவர்களை தாங்கிப் பிடித்து வரும் மக்களையும் கண்டு மனம் கொதிக்கத்தான் செய்கிறது. சரி விடுங்கள் இதற்கு மேல் இன்னும் உள்ளே சென்றால் பல சங்கடங்களை சொல்ல வேண்டி வருமென்பதால் இத்தோடு இதற்கு (.)


கதைச்சுருக்கம்:

அரசியல்வாதி சின்னப்பனை எதிர்த்து இடைத்தேர்தல் ஒன்றில் சுயேச்சையாக நின்று வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினராகிறார் தன்ராஜ். அதற்கு அணிலாக உதவி புரிகிறான் உதவியாளர் நாகு.

சுயேச்சையாக ஜெயித்த உறுப்பினரை தத்தமது பக்கமிழுக்க முதல்வர் தரப்பும், அதிருப்தி தரப்பும் போட்டி போடுகின்றன. முதல்வர் ஆறுமுகத்தை எதிர்த்துக் கொண்டு அதிருப்தி தரப்பான அரங்கனார் பக்கம் சென்று ஆட்சியை கலைக்க டெல்லி வரை சென்று உதவுகிறார் தன்ராஜ். படித்தவன், அதுவும் சாதூர்யமான பேச்சிருப்பதால் அரங்கரா இவனை விடாமல் இழுத்துக்கொண்டு செல்கிறார்.   

இன்னொருபக்கம் ஜமுனா, அவளுடைய கணவன் கோவிந்தராவ் பற்றி செல்கிறது கதை . ஜமுனா விற்கும் , தன்ராஜ்க்கும் இடையே இருக்கும் காதல் என்கிற காம விளையாட்டை நெருடலின்றி எழுதி இருக்கிறார். கோவிந்தராவ் போன்றதொரு அப்பாவியை எங்கேயும் பார்த்திராத அளவிற்கு புனைந்திருப்பது அவ்வளவு சுவாரசியம். 

இன்னொன்று கவர்னர் வர்மா பற்றி சுருக்கமாக சொன்னதே தலை சுற்றவைக்கிறது. குழப்படி வேலை செய்வதும் அதை பாதுகாக்க கோர்த்து விடுவதுமாக கவர்னரின் வேலையை கச்சிதமாக சொல்லியிருப்பது சிறப்பு. 

ஆட்சியை கவிழ்ப்பதற்கு என்னன்ன வேலைகளை செய்ய முடியுமோ அம்புட்டு வேலைகளையும் செய்வது அட்டகாசம். முதல்வருக்கும், முதல்வராக ஆசைப்படும் அதே கட்சியின் சீனியருக்கும் இடையே நடைபெறும் மோதல்களும் தில்லாலங்கடி வேலைகளையும் எழுத்தில் வெகு சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். 

தன்ராஜ் தெரிந்தே ஜமுனாவின் வாழ்க்கையை சீரழிப்பதும், அதை தெரிந்துகொண்ட தன்ராஜின் மனைவி திலகவதி பேசும் பேச்சுக்கள் இயல்பு. ஜமுனாவின் வயிற்றில் தன்னோட கருதான் வளர்கிறது என்று அதை உரிமை கொண்டாடும் தன்ராஜ் பண்ணும் வேலைகள் கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தாலும் உறுத்தவில்லை. 

அரங்கராவின் லீலையை கேசட் பண்ணும் சேட்டைகளிருக்கே செம செம ... படிச்சி பாருங்கள் உங்களுக்கே புரியும்...

தன்ராஜை தேடி முதல்வர் பதவியே வரும் அளவிற்கு குறுகிய காலத்திற்கு வளர்வது தான் உச்சம். முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டானா ? ஜமுனாவும் அவளது குழந்தையும் என்ன ஆனது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

ப்ளஸ்:

ஜமுனாவிற்கும், தன்ராஜ் க்கும் இடையே இளம்வயதில் நடந்த காதல் முறிவை சொல்லாமல் இடையிடையே கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லியிருப்பது நச்...

திலகவதிக்கும், தன்ராஜ்க்கும் தாலி கட்டாமல் இணைந்து வாழும் இல்லறத்தை போகிற போக்கில் சொல்லிச்சென்றது கூடுதல் அழகு ...


========================================================================

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்

மொத்த பக்கங்கள் : 384

விலை : 230/-

========================================================================

படித்துச் சொன்னது

அரசன்
http://www.karaiseraaalai.com/ 


Thursday, October 30, 2014

சகுந்தலா வந்தாள் - வாமுகோமு

படைப்பாக்கம் : சீனு 

பல கூறுகளாக பிரிந்து கிடக்கும் சமூகத்தில், சமூகம் உங்களை எந்த அடுக்கில் வைத்து அழகு பார்க்கிறது என்பதைப் பொறுத்தே ஒரு புத்தகம் உங்களினுள் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஏற்படுத்தாமல் போவதற்குமான சாத்தியங்களைக் கொண்டுள்ளன. நீங்கள் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றால் ஒரு மத்திய குடும்ப சூழலை, நீங்கள் தினசரி அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி எழுதப்பட்ட ஒரு நாவல் உங்களினுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உறுதியில்லை அதற்கான அவசியமும் இல்லை. இதுவே இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு உலகத்தை அதில் நடமாடும் மக்களைப் பற்றிய வாழ்வியலை அந்த எழுத்தாளர் அறிமுகப்படுத்துகிறார் என்றால் அதனால் ஏற்படும் தாக்கம் வேறுவிதமாய் இருக்கும். கிட்டத்தட்ட இந்த சகுந்தலா வந்தாள் கூட அப்படியான ஒரு நாவல் தான். 



கல்பனா என்னும் சிறுமி தன் இரண்டாவது அப்பாவால் சீரழிக்கப்பட அவளை விபச்சார விடுதியில் கொண்டு சேர்க்கிறாள் ஏற்கனவே பாலியல் தொழிலாளியாக இருக்கும் அவள் அம்மா. பருவம் அடைந்த சில நாட்களிலேயே விபச்சார விடுதில் சேர்க்கப்படும் கல்பனா, அங்கே தன் நாட்கள் எப்படி நகருகிறது, என்ன மாதிரியான மனிதர்களைச் சந்திக்கிறாள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதில் இருந்து வளர்கிறது கதை. கதையில் மொத்தமும் நான்கே நான்கு மையக் கதாப்பாத்திரங்கள்தான். கல்பனா, ஜானி, சகுந்தலா பின் கமலக்கண்ணன். இதில் கிட்டத்தட்ட கதாநாயக அந்தஸ்து கொண்ட நபர் திருவாளார் கமலக்கண்ணன்.

கல்பனா பாலியல் தொழிலாளியாவதற்கு முன்பே அவளுக்கு ஜானி என்றொரு காதலன் இருந்துள்ளான், தன்னை ஒருதலையாய்க் காதலித்தவன்தான் என்றபோதிலும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தான் வசிக்கக்கூடிய விபச்சார விடுதியில் வைத்தே ஜானியை சந்தித்து விடுகிறாள் கல்பனா. தான் உருகி உருகி காதலித்த பெண், பாலியல் தொழிலாளியாக இருக்கிறாள் என்பதை ஏற்றுகொள்ள முடியாமல் தவிக்கிறான் ஜானி. அவளுக்காக காத்திருந்த நாட்களையும் காதலித்த நாட்களையும் அவளிடம் கூறி தன்னோடு வந்து மணமுடித்துக் கொள்ளும்படி கேட்கிறான். இவளோ தான் ஒரு பாலியல் தொழிலாளியாகவே மாறிவிட்டதாகவும் தனக்கு குடும்பம் நடத்தத் தெரியாது என்றும் கூறுகிறாள். அதாவது இத்தனை நாட்களில் அவள் இருக்கும் நான்கு சுவற்றைத் தாண்டி என்ன இருக்கிறது என்பதையே அவள் அறிந்திருக்கவில்லை. அல்லது அதற்கான அவசியமும் ஏற்பட்டிருக்கவில்லை. கல்பனாவின் பார்வையில் அவள் கூறுவது மிகச்சரியே, இருந்தும் அதனை ஜானியால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

இந்தக் காதல் தோல்வியில் இருந்து மீள ஜானுக்கு உடனே வேறொரு பெண் தேவையை இருக்கிறாள். இந்நேரத்தில் தற்செயலாக ஜெராக்ஸ் கடையில் பார்க்கும் ஒரு பெண்ணின் மீது மையல் கொள்கிறான். அந்தப் பெண்தான் சகுந்தலா. இவர்களுக்கு இடையேயான காதல் என்பது இதுநாள் வரை நா(ம்)ன் அறிந்திராத கொச்சை மொழியில் எழுதப்பட்ட காதல். ஜான் எடுத்த உடனேயே அவளிடம் கொச்சை மொழியில் பேசத்தொடங்குகிறான், மெல்ல சகுந்தலாவும் அதை விரும்பத் தொடங்குகிறாள். மொபைல் போன் மூலம் மெல்ல வளருகிறது இவர்கள் காதல். ஒரு கட்டத்தில் தனது பிறந்தநாள் பரிசாக தன்னையே ஜானுக்கு அளிக்கிறாள் சகுந்தலா.. ஜானிக்கும் சகுந்தலாவிற்கும் இடையே நடக்கும் காதலையும் ஊடலையும் காமத்தையும் கொங்கு மொழியில் ரசிக்கும்படி எழுதியுள்ளார் வாமுகோமு. 

இனி கமலக்கண்ணன். இவர் தன்னுடைய புலம்பல்களின் ஊடாகவே நம்மிடம் அறிமுகமாகிறார். முதலில் அவர் என்ன பேசுகிறார் ஏன் இப்படி பிணாத்துகிறார் என்பது புரியாவிட்டாலும் மெல்ல ஒவ்வொரு முடிச்சாக அவிழ அவிழ அனைத்தும் புரியத் தொடங்குகிறது. தற்சமயம் கமலக்கண்ணன் ஒரு நல்ல முதலாளியிடம் நல்லா விசுவாசியாக இருந்து வேலையை இழந்தவர். மனைவி தன்னுடன் சண்டையிட்டு இரு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அப்பன் வீட்டுக்குப் போய்விட்ட மன வருத்தத்தில் இருப்பவர். போதாக்குறைக்கு சகுந்தலா என்னும் தன்னுடைய அத்தைப் பெண்ணின் மூலம் வந்த தேவையில்லாத பிரச்சனைகள்.

அல்லது சகுந்தலா எப்போது கமலக்கண்ணனின் வாழ்க்கைக்குள் குறுக்கிட்டாளோ அப்போதிருந்தே பிரச்சனைக்குள் தள்ளப்படுகிறான் கமலக்கண்ணன். சகுந்தாலவிற்கு ஒரு கறுப்புப் பக்கம் இருக்கிறது, அதில் இருந்து அவளை மீட்பதற்காக உதவி செய்கிறார் கமலக்கண்ணன், சகுந்தலாவிற்கு உதவக் கூடாது என்று அவன் மனைவியும் அம்மாவும் எவ்வளவோ மறுத்தும் கூட கேட்காமல் சகுந்தலா என்னும் அந்த குழிக்குள் போய் விழுகிறான் கமலக்கண்ணன். இங்கே கமலக்கண்ணனுக்கும் அவன் மனைவிக்கும், கமலக்கண்ணனுக்கும் சகுந்தலாவிற்கும் இடையே நடக்கும் காட்சி நகர்வுகளை அற்புதமாக நகர்த்தியிருப்பார் வாமுகோமு. கமலக்கண்ணனின் மனைவி கணவனை தன்னுள் வைத்து ஆள நினைக்கும் ஒரு பெண், சாதாரணமாகத் திட்டுவது என்றாள் கூட பச்சை பச்சையாகத்தான் திட்டுகிறாள். 

ஆனால் சகுந்தலாவோ சரியான காரியக்காரி. தன்னுடைய அந்த நிமிட உல்லாசத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவள். கற்பிலிருந்து கருவறை வரை அனைத்தையும் விற்கத் துணிந்தவள். இவர்கள் இடையேயும் மாட்டிக் கொண்டு கமலக்கண்ணன் புலம்புவதைப் பார்க்க நமக்கே பாவமாய் இருக்கும். சில சமயம் சகுந்தலா மீது கோபம் வருவதற்குப் பதிலாக கமலக்கண்ணன் மீது கோவம் வருகிறது. தன் இயலாமையால் தன்னைத்தானே நொந்து கொள்பவனை யாருக்குத்தான் பிடிக்கும். ஆனால் இது ஒன்றும் எதார்த்தத்தை மீறிய நிகழ்வு இல்லையே. நிகழ்வாழ்வில் உங்களுக்குத் தெரிந்தவராகவோ அல்லது உங்களில் ஒருவராகவோ கூட அந்தக் கமலக்கண்ணன் உலவக்கூடும். மொத்தத்தில் 'சகுந்தலா வந்தாள்' வாழ்வில் ஏதோ ஒர் இடத்தில் நாம் சந்திக்கக் கூடிய நான்கு மனிதர்களின் மிக அருகில் சென்று அவர்களுக்குள் இருக்கும் அந்தரங்கத்தைப் படம் பிடித்துக் காட்டி இன்னார் இப்படித்தான் இருப்பார்கள் என்பதோடு முடிகிறது.   

வாமுகோமு எழுதியவற்றில் நான் படிக்கும் முதல் நாவல் இதுதான். கொங்கு மொழியில் எழுதப்பட்ட நாவல் என்பதால் சில இடங்களில் சில வார்த்தைகளின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை, சிலவற்றை வாக்கியத்தின் கட்டமைப்பின் மூலம் இதுவாக இருக்குமோ என்று அவதானிக்க வேண்டியிருக்கிறது. மேலும் கமலக்கண்ணன் புலம்பும் மிக சில இடங்களைத் தவிர்த்து நாவல் மொத்தத்தையும் அலுப்பு தட்டாமல் நகர்த்தியிருக்கிறார் வாமுகோமு. 

சிறிய எச்சரிக்கை. ஒருவேளை நீங்கள் பாலியல் சம்மந்தமான வார்த்தைகளைக் கொண்ட ஒரு புத்தகம் படிப்பதை உங்கள் வீட்டில் இருக்கும் யாரேனும் விரும்பாது போனாலோ அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாரேனும் படிப்பதை நீங்கள் விரும்பாது போனாலோ அதற்கான முன்னெச்சரிக்கை தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் சகுந்தலாவை வரவழைக்கவும், ஏனெனில் இவளும் இவளோடு பழகுபவர்களும் கொஞ்சம் மோசமானவர்கள். 

பாலியல் சார்ந்த வார்த்தைகள் சம்பவங்கள் அனைத்தும் அப்படிக்கு அப்படியே எழுதப்பட்டுள்ளதால் உங்களில் எத்தனை பேருக்கு இந்தப் புத்தகம் பிடிக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை வாசிக்கத் தொடங்கினீர்கள் என்றால் புத்தகம் முழுவதையும் முழுமூச்சில் வாசித்து முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம், காரணத்தை விளக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறன். வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம். 

ஒன்று முழுக்க முழுக்க காமரசம் சொட்டும் ஓரளவிற்கு ஆபாச வார்த்தைகள் குறைந்த சில பாலியல் சம்பவங்கள் அடங்கிய புத்தகம். இரண்டாவது உளவியல் ரீதியாக பாதிகப்பட்ட ஒருவன் அல்லது எதையுமே எதிர்த்துக் கேட்கத் துணிவில்லாத நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளகூடிய ஒருவனின் மன ஓட்டங்களின் உளவியல் சார்ந்த புத்தகமாகவும் இதனைக் கொள்ளலாம். இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றாக உருவெடுத்திருப்பது தான் சகுந்தலா வந்தாள். இதில் எந்தப் பகுதியை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளபோகிறீர்கள் என்பது உங்களுக்கு விடப்பட்ட சவால். ஆனால் கதை முடியும் போது நிச்சயமாய் இரண்டின் தாக்கமும் உங்களிடம் இருக்கும் என்பதே சகுந்தலா வந்தாளின் வெற்றி. மணவாழ்க்கையில் நுழைந்தவர்கள் நுழைய இருப்பவர்கள் என்று இரு தரப்பினரும் படிக்க வேண்டிய புத்தகம். 

ஆசிரிய பற்றி:

வா.மு.கோமு தன்னுடைய வித்தியாசமான, துணிச்சலான சிறுகதை மற்றும் கவிதை முயற்சிகளுக்காகப் பெரிதும் கவனம் பெற்று வருபவர். திருப்பூரைச் சேர்ந்தவர், பெரும்பாலும் தான் கையாளும் படைப்புகளில் கொங்கு மொழியைப் பிராதனமாகக் கொண்டு எழுதி வருகிறார். கலாச்சாரரீதியான மனத் தடைகளை, மொழியின் குதூகலமும் அங்கதமும் கொண்ட இவரது மொழி வெகு இயல்பாகத் தாண்டிச் சென்றுவிடுகிறது. எதார்த்த உலகின் அழுத்தமான காட்சிப்படுத்தல்கள் சட்டென அதீதப் புனைவுகளுக்குள் கரைந்து ஒரு புதிய அனுபவத்தை உருவாக்குகின்றன.


*****

நடுகல் வெளியீடு புத்தகங்கள் 

1.வாமுகோமுவின் வழக்கமான நடையில் இல்லாமல் வித்தியாசமான முறையில் உள்ள வயது வந்தோருக்கான நாவல் - சகுந்தலா வந்தாள் - வாமு கோமு - ரூ 150

2.தஞ்சை ஓவியத்தின் மறுபக்கத்தை சொல்கின்ற தமிழின் முக்கியமான நாவல், கள்ளம்-தஞ்சை ப்ரகாஷ் -ரூ210

3.கொங்கு வட்டார கிராம மக்களின் வாழ்வியல் கலந்த பலரின் பாராட்டுகளைப் பெற்ற நாவல் குருத்தோலை-செல்லமுத்து குப்புசாமி - ரூ150

4.சாதாரண மொழியில் புனையப்பட்ட சிறு குறிப்புகள் அடங்கிய சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்ற அழகான தொகுப்பு அப்புச்சி வழி - வாமு கோமு(நினைவோடைக் குறிப்புகள்

மூன்று நாவல்கள் மற்றும் ஒரு நினைவோடைக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் மொத்தம் 610ரூபாய் வருகின்றது நான்கும் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம் ஒன்று, இரண்டு, வாங்குபவர்களுக்கு 30 ரூபாய் மட்டும் கூரியர் செலவு சேர்த்து அனுப்ப வேண்டும் தேவைப் படுபவர்கள் வீடு சுரேஷ் குமார் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். அழைக்க : 98439 41916

பணம் அனுப்ப வேண்டிய விவரம்

Sureshkumar.K
A/NO :622302010009565,
IFSE CODE : UBIN0562238,
PN ROAD BRANGE, 
TIRUPUR-2.
BANK : UNION BANK OF INDIA

Monday, October 20, 2014

காந்தியோடு பேசுவேன் - எஸ்.ராமகிருஷ்ணன்



             'சொல் ஆளுமை' என்பதை நண்பர்கள் பேசுகையில் சில நேரம் கட்டுண்டு கேட்டுக் கொண்டிருந்த சமயங்களில் உணர்ந்ததுண்டு. இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டே இருக்க மாட்டார்களா என்ற எண்ணிய தருணங்கள் அவை. நேரில் பாவனைகளுடன் நம்மை ஈர்ப்பது கடினமான பணியென்றால் சிறுகதைகளின் வாயிலாய் நம்மை கட்டிப்போட்டு இடம், காலம் இவற்றையெல்லாம் மறந்து நம்மை கதைகளினூடே பயணிக்க செய்யும் எஸ்.ரா வின் ஆளுமையை இந்த சிறுகதை தொகுப்பின் முதல் கதையான "காந்தியோடு பேசுவேன்" எனும் கதையிலிருந்தே உணர முடிந்தது.

              பால்ய வயதிலேயே ஒரு 'முரட்டு' கணவனுடன் திருமணமான ஒரு பெண், பெரும்பாலும் தனிமையிலியே காலத்தை கடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு சூழ்நிலையில் கைக்குழந்தையை கூட விட்டுவிட்டு காந்திஜியை காணக் கிளம்பிவிடுகிறாள். அவளுடைய உணர்வை புரிந்து கொள்ள முயற்சிக்கும் அவள் பிள்ளை கதை சொல்வதாக பின்னப்பட்டிருக்கும் உணர்வுப் பூர்வமான பதிவு இது. காந்தியைப் பின்புலமாக கொண்ட கதைகள் எல்லாவற்றிலும் இது தனித்தே நிற்கிறது.

              'கடக்க முடியாத பாலம்' என்னும் சிறுகதை சாதி, மதத்தின் பெயரால் வன்முறை விளைவிப்போரை சாடும் கதை. கதை சொல்ல எடுத்தாண்ட சொற்கள்  ஒவ்வொன்றும் காட்சிகளை நம் கண்முன் நிறுத்துகிறது. ஒரு கட்டத்தில் படிப்பதை மறந்து நாம் பாத்திரமாகவே மாறி வன்முறையாளர்களின் வெறிச்செயலுக்கு பலியாவது நாம்தான் என்ற மாயபிம்பத்தை தோற்றுவிப்பதே எழுத்தாளரின் தேர்ந்த எழுத்துக்கு சாட்சி. இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை 'பாதியில் முடிந்த படம்' . நிருபமா என்ற பெண்ணை திரைப்பட விழா ஒன்றில்  சந்திக்கும் ஒரு பத்திரிக்கையாளன், அவளுடன் நட்பாகி பின் அவளிடம் தன் மனதை தவணை முறையில் கொடுத்துவிட்டு தவிக்கும் தவிப்பை கதையின் கடைசி வாக்கியங்கள் அழகாய் எடுத்தியம்பும்,

           எழுத்தாளர் 'லியோ டால்ஸ்டாய்' அவர்களின் வாழ்க்கை சம்பவம் ஒன்றை சுவைபட சொல்லியிருக்கும் கதை 'அஸ்தபோவில் இருவர்'. முதுமையில் தன் காதல் மனைவி சோபியாவிடம் சொல்லாமல் வீட்டை விட்டு புறப்படும் டால்ஸ்டாய் அதற்கான காரணங்களையும், பின் குடியானவன் ஒருவனின் பேச்சில் தன் தவறை உணர்ந்த போதும் தான் இறக்கும் வரை தன் மனைவியிடம் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமலே போகுமிடத்தில் மனம் கொஞ்சம் நெகிழ்ந்துதான் போகிறது.

              'அருவிக்கு தெரியும்', 'பிடாரனின் மகள்', 'ஷெர்லி அப்படித்தான்' 'இடைப்பட்ட நாட்கள்' ஆகிய கதைகள் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது. 'நிகழ்காலத்தின் சுவர்கள்' என்ன நடக்கப்போகிறதோ என்ற பதைபதைப்பை மூன்று பக்கங்கள் முடியும் வரை நீட்டிச் செல்கிறது. 'பசித்தவன்' என்ற கதையில் திடியனின் வாழ்கையோடு நம்மை ஒன்றச் செய்துவிடுகிறார் ஆசிரியர். 'ஒற்றை முள்' எனும் கதையில் கண்டிப்பான தந்தையை வெறுக்கும் தனயன் கடைசியில் தன் தந்தையின் நேசத்தை உணரும் கதையில் அந்த உடைந்த இசைத்தட்டுக்கு பின்னால் இருக்கும் இரகசியத்தை படிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள நினைக்கும்படி சுவாரஸ்யமாய் சொல்லியிருப்பது அருமை.


               எஸ்.ரா அவர்களின் சிறுகதைகள் பல வாசித்திருக்கிறேன் என்ற போதும் அவருடைய நாவல்கள் இதுவரை வாசித்ததே இல்லை. இந்த 'காந்தியோடு பேசுவேன்' என்ற தொகுப்பை படித்தவுடன் உடனே அவருடைய நாவல் ஏதாவது ஒன்றை படித்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. வாசகர்கூட நண்பர்களிடம் என்ன இருக்கிறது என்று பார்த்து உடனே ஆரம்பிக்க வேண்டும்.





நூலின் பெயர்         :   காந்தியோடு பேசுவேன் 
ஆசிரியர்                 :     எஸ்.ராமகிருஷ்ணன் 
பக்கங்கள்                :    152
 விலை                   :    ரூ. 120

பதிப்பாளர்              :   உயிர்மை பதிப்பகம்,
                                     11/29,சுப்பிரமணியம் தெரு,
                                     அபிராமபுரம்,
                                     சென்னை - 600 018
                                     தொலைபேசி - 044-24993448
                            

Wednesday, October 8, 2014

காலச் சக்கரம் - நரசிம்மா

படைப்பாக்கம் : சீனு 

கதை

காலச் சக்கரத்தின் சுழற்ச்சியில் எங்கோ ஒரு மூலையில் எப்படியோ பாதிக்கபட்ட சிலர் அதற்குப் பழிவாங்குவதற்காக தங்கள் வேட்டையைத் தொடங்கினால் அதில் அவர்களின் சுழற்சியும் காலச் சக்கரத்தின் சுழற்சியும் எவ்வாறு இருக்கும் என்பதை நமக்கு அறிமுகம் செய்வதே இந்த காலச் சக்கரத்தின் கதை. 
நான்கு வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறுவதாக நகர்கிறது இக்கதை. 

அழகிய காஷ்மீரகத்தின் ஒரு பகுதியான ரஸ்கம் என்ற பகுதியை எதிரிகள் கைப்பற்ற முயல, அதனால் அங்கு வசிக்கும் பண்டிதர்கள் அனைவரும் தங்கள் சொத்து சுகங்களை இழந்து இந்தியப் பகுதிக்குள் அகதிகளாக நுழைகிறார்கள். இவர்களில் ஷ்ரத்தா என்ற சிறுமி மட்டும் தன் தந்தையின் ஆலோசனையின் படி ஸ்ரீசக்கரம் என்ற சக்கரத்தைத் தேடி புறப்படுகிறாள். நிகும்பலை என்ற காளி இலங்கையின் காவல் தெய்வம், அவள் அங்கு இருக்கும் வரை யாராலும் ராவணனை வெல்ல முடியாது. ஆகவே விபீடணன் நிகும்பலையை ஹனுமனின் உதவியுடன் தமிழகத்தில் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்கிறான். இயல்பாகவே நிகும்பலை மிகவும் மூர்க்கமான காளி என்பதால் அவளின் கோபத்தை மக்களால் தாங்க முடியவில்லை. அதனால் ஆதிசங்கரர் காஸ்மீரின் ரஸ்கத்தில் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தை எடுத்துக் கொண்டு தமிழகம் வருகிறார். அந்த ஸ்ரீசக்கரத்தின் உதவியுடன் நிகும்பலையை அடக்கி யாருமறியா பாதுகாப்பான இடத்திலும் வைக்கிறார். அந்த ஸ்ரீசக்கரம் காஷ்மீரகத்தில் இருந்து வெளியில் சென்றதனால் தான் காஷ்மீருக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படுகிறது, பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது என நம்பி அந்த ஸ்ரீசக்கரத்தை மீண்டும் காஷ்மீருக்கே கொண்டு வருவது என்ற சபதத்துடன் ரஸ்கத்தில் இருந்து கிளம்புகிறாள் ஷ்ரத்தா. 

டெல்லியில் வசித்துவரும் மிக முக்கியமான மகாராணியின் குடும்பம் வசுந்தராவின் உடையது. அவளுக்கு இரண்டு மகன்கள். சமீப காலமாக ஒரு பயங்கரமான வடிவம் கொண்ட ஒரு பெண் அவளை கொல்லப் போவதாக மிரட்டுகிறாள். இதனால் குழப்பமும் பயமும் அடையும் வசுந்தரா தன் குடும்ப நண்பர்களான ஒரு தீட்சிதரையும் சுவாமிஜியையும் நாடுகிறாள். மேலும் வசுந்த்ராவிற்கு உதவுவதற்காக ஒரு தாந்த்ரீகரும் கேரளத்தில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்படுகிறார். அவரது தலைமையில் பிரசன்னம் பார்க்கபடுகிறது. அதில் கிடைக்கும் சில புதிரான பதில்கள் அவர்களுக்கு ஏதோ ஒரு எச்சரிக்கையைத் தருகிறதே தவிர இன்னதென்று தெளிவாக கூறமறுக்கிறது. மேலும் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க வேண்டுமாயின் அவருக்கு ஸ்ரீசக்கரம் தேவைப்படும் என்றும் கூறுகிறது எப்படியேனும் ஸ்ரீசக்கரத்தைக் கண்டுபிடித்து அந்த மர்மப் பெண்ணை கண்டுபிடிப்பதாக சபதம் செய்கிறார் தாந்த்ரீகர். ஆனால் அதிலிருந்து சில தினங்களில் யானை மிதித்து மரணம் அடைகிறார் தாந்த்ரீகர்.   

கும்பகோணத்தின் அருகில் இருக்கும் கும்பை என்ற கிராமத்தில் ஆஸ்டானமான பிராமணக் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. பட்டப்பாவிற்கு மூன்று மகள் ஒரு மகன் மற்றும் இறந்து போன தன் தம்பியின் மகனான சங்குவையும் வளர்த்து வருகிறான். சங்கு முறையாக சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றவன் என்ற போதிலும் அவனுடைய நாட்டமெல்லாம் தாந்த்ரீகத்திலும் பில்லி சூனியம் கற்பதிலுமே இருக்கிறது. இந்நிலையில் லாடன் என்ற இளைஞன் சங்குவுக்கு தாந்த்ரீகம் கற்றுத் தருகிறான். அதைக் கொண்டு கும்பேஷ்வரரின் அருளைப் பெறுகிறான் சங்கு. மேலும் அந்த கிராமத்தில் தன்னுடைய பெரியப்பாவால் பில்லி சூனியத்திற்கு ஆட்பட்ட ஒரு பெரியவரை அதிலிருந்து விடுவிக்கிறான். அவர் மூலம் அதுநாள் வரை தான் அறியப்படாத தகவல்களை எல்லாம் அறிந்து கொள்கிறான். 

சங்குவின் அப்பா வாரணாசி சென்றபோது ஸ்ரத்தா என்ற பெண்ணை சந்தித்ததாகவும், ஸ்ரீசக்கரத்தைக் கண்டுபிடிக்க தனக்கு உதவும்படி கேட்டதாகவும், பின் இருவரும் காதலில் விழுந்து பலத்த எதிர்ப்புக்குப் பின் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கூறுகிறார். சங்கு பத்து மாத சிறுவனாக இருந்த போது சங்குவும் அவனது அப்பா அம்மாவும் டெல்லி செல்கிறார்கள். அங்கு ஷ்ரத்தா தொலைந்து போக, அதனால் பித்துப்பிடித்த சங்குவின் அப்பா அவனை அவனது பெரியப்பாவிடம் ஒப்படைத்துவிட்டு தூக்கில் தொங்கிவிடுகிறார். ஆனால் தொலைந்து போன அவன் அம்மா மட்டும் திரும்ப வரவேயில்லை. அதற்குப் பின் உலகை ஆளும் தாந்த்ரீகன் ஆக ஆசைப்படுகிறான். அப்படி ஆக வேண்டுமானால் அதற்கு அந்த ஸ்ரீசக்கரம் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டவன் அதனைத் தேடத் துவங்குகிறான். 

இதற்கிடையில் ஜாங்கிரி சுற்றி பிழைப்பு நடத்தும் ஜாங்கிரி ஜம்பு என்பவரின் குடும்பத்தை அவர்கள் தற்கொலை செய்து கொள்வதில் இருந்து காப்பாற்றுகிறாள் ஒரு மர்மப்பெண், பின்னர் அவளே அந்தக் குடும்பத்தை வழிநடத்துவும் தொடங்குகிறாள். அந்தப் பெண் வேறு யாரும் இல்லை, ஷ்ரத்தாதான். பின்னர் சில காலங்களில் ஷ்ரத்தா தன் மகனான சங்குவையும் கண்டுபிடித்து அவர்கள் இருவருமாக ஸ்ரீசக்கரத்தைத் தேடத் துவங்குகிறார்கள். இதில் அவர்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்கிறார்கள். இறந்து போனவனின் உதரத்தில் இருந்து பிறந்த ஒருவனாலேயே அந்த ஸ்ரீசக்கரத்தை அடைய முடியும் என்று கண்டுபிடித்து, தங்கள் காய்களை அதன்பொருட்டு நகரத்துகிறார்கள். 

இந்நிலையில் மகாராணி வசுந்தராவின் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவராக மரணிக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்த மர்மப் பெண் தான் என்று அஞ்சுகிறாள் வசுந்தரா. பின் வசுந்தரா என்ன ஆனாள். எதற்காக அவளுடைய குடும்பம் பழிவாங்கப்படுகிறது. இறந்து போனவனின் உதிரத்தில் இருந்து குழந்தை பிறந்ததா, அந்த ஸ்ரீசக்கரம் கிடைத்ததா என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை கூறியபடி நிறைவடைகிறது காலச்சக்கரம்.  

விமர்சனம் 

படிப்பவர் யாராயினும் அவர்கள் அனைவருக்கும் புரியவேண்டும் என்ற எண்ணத்தில் மிக எளிய நடையில் எழுதப்பட்ட நாவல். மேலும் பல்வேறு தளங்களிலும் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்தாலும் என கதை எந்த வருடத்தில் நடக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை குழப்பம் ஏற்பட்டாலும் அத்தியாங்களின் தலைப்பைப் பார்த்தால் அந்தக் குழப்பங்களைப் போக்கிக் கொள்ளலாம். காரணம் ஒவ்வொரு அத்தியாயங்களும் அவை நடக்கும் வருடங்களுடன் தான் தொடங்குகிறது. அதனால் இந்த நாவலில் இடம்பெறும் வருடங்கள் அவ்வளவு முக்கியமானவை. இருந்தும் வருடங்களைக் குறிப்பதில் ஒரேஒரு இடத்தில் மட்டும் பிழை ஏற்பட்டுள்ளது. பதினான்காவது அத்தியாயத்தில் 1974 என்று இருக்கவேண்டிய வருடம் 1984 என்று இருக்கிறது.

இந்த நாவல் முழுக்க முழுக்க பில்லி சூனியம் ஏவல் மாந்த்ரீகம் தாந்த்ரீகம் யோகம் என்று வருவதால் உங்களிடம் இருக்கும் பகுத்தறிவு வாதங்களைக் கழற்றி ஒரு ஓரமாக வைத்திவிட்டு இந்த நாவலைத் தொடவும், இல்லையென்றால் உங்களுக்கும் நாவலுக்கும் இடையே ஏதோ ஒரு பெரிய இடைவெளி இருந்து இருந்து கொண்டே இருக்கும். நாவலின் முதல் சில அத்தியாயங்கள் கதையை நமக்கு அறிமுகம் செய்வதற்காக நகர்வதால் அவற்றைப் படிக்க மிகபெரிய பொறுமை வேண்டும், அதற்குப் பின் நாவல் நல்ல வேகம் எடுத்து தன்போக்கில் பறக்கத் தொடங்குகிறது. இது இலக்கிய வாசகர்களுக்கான நாவல் அல்ல. அனைத்து தரப்பிலும் இருக்கும் வாசகர்களுக்கானது. பில்லி சூனியம் ஏவலில் நம்பிக்கை இருந்தாலோ அல்லது அதை சார்ந்த விசயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலோ தவறாது படிக்கலாம்.

ஆசிரியர் குறிப்பு 

எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் மூத்த பத்திரிக்கையாளர் டி.ஏ.நரசிம்மன். தற்போது தி இந்து ஆங்கில தினசரியில் தமிழ்நாட்டு பிரிவின் செய்தி ஆசிரியராகவும், சீனியர் அசிஸ்டென்ட் எடிட்டராகவும் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை திரைப்பட இயக்குனர் சித்ராலயா கோபு. தாய் நாவலாசிரியை திருமதி கமலா சடகோபன்.

ஆசிரியர் : நரசிம்மமா
புத்தகம் : காலச்சக்கரம்
விலை : 120
பதிப்பகம் : வானதி 

Tuesday, September 30, 2014

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்




சில மாதங்களுக்கு முன் நண்பர்கள் குழாமுடன், டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைக்க , எஸ். ரா. அவர்கள் நடத்திய ஒரு நாள் இலக்கிய முகாமில் தான் ஜி. நா வை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எஸ். ரா சொன்ன துக்க விசாரணை சிறுகதை பற்றியே அன்றைய நாள் முழுவதும் என் சிந்தனைகள் சுழலத் தொடங்கின என்று சொன்னால் மிகையல்ல! சில வாரங்கள் கழித்து ஒரு மதிய வேளையில், காலச்சுவட்டின் நவீன தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசையான இந்த "டெர்லின் ஷர்ட்டை" வாங்கி வந்தேன்!

பதினேழு குறுங்கதைகளால் நிரம்பிய இப்புத்தகத்தில் அறிந்து கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் பொதிந்துள்ளன. போகிற போக்கில் காட்சிகளை அறிமுகப்படுத்திச் செல்லும் வல்லமை கண்டு வியக்கும் அதே வேளையில் குறுங்கதைகளாக இருந்தாலும் ஒன்றை கூட முன்கூட்டியே யூகித்து விட முடியாத அளவிற்கு கதையும் அதன் திருப்பங்களும், முடிவும் இருப்பது ஆசிரியரின் எழுத்தாளுமையை பறைசாற்றுகிறது! 

பெரும்பாலான கதைகள் பாலியலை மையமாய் வைத்தே துவங்கி முடிகிறது, இருந்தும் அதிலிருக்கும் விரசமற்ற எழுத்து நடை வாசிப்பவர்களை நிச்சயம் முகம் சுழிக்க வைக்காது. பாலியலையும், அதைச் சார்ந்த எளிய மனிதர்களையும் மட்டுமே மையப் படுத்துகிறது இவரின் படைப்பு. அவர்களின் உணர்வுகளை நீங்களும் உணரலாம்!

"தீராக்குறை"யில் மரணப் படுக்கையிலிருக்கும் குடும்பத் தலைவனைப் பற்றிய சிந்தனைகளும், அந்த வீட்டின் சூழல்களையும் மிக கவனமாக பதிவு செய்திருப்பார். சூழலை விவரித்திருக்கும் முறைக்காகவே இரண்டு முறை வாசிக்கத் தோன்றும்!

"நான் புரிந்த நற்செயல்கள்" இந்தக் கதையில் எவ்வித சாயப்பூச்சுமின்றி உள்ளதை உள்ளபடி போட்டு உடைத்திருப்பார். அந்த துணிச்சல் வசிகரீக்க கூடியவை. எதிர்பாராத திருப்பம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்!

"பூர்வாசிரம"த்தில் வரும் ஒரு பெண்ணைப் பற்றிய வர்ணிப்பில் மனம் இலயித்து கிடக்கும். பாலியல் தொழில் புரியும் அம்மா, மகளை சுற்றி சுழலும் கதையில் அவ்வளவு நேர்த்தி இருக்கும். தேவையற்ற பீடிகைகளை தவிர்த்து நறுக்கென்று சொல்லியிருப்பார் ஆசிரியர் ஜி. நா. 

"துக்கவிசாரணை" இதுக்காகவே இந்த நூலை வாங்கிய என்னை துளியும் ஏமாற்றவில்லை. இந்த சிந்தனைக்கே ஆசிரியருக்கு பெரிய வணக்கம் வைக்க வேண்டும், என்ன நாம் வாழும் காலத்தில் இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டம். 

இறந்து போன பாலியல் தொழிலாளி வீட்டிற்கு துக்கம் விசாரிக்க செல்வதைப் பற்றி சொல்வது தான் துக்க விசாரணை என்னும் கதை. 

பலமும் - பலவீனமும்.

ஜி. நாகராஜனின் பலமென்று நான் வாசித்து உணர்ந்தது என்னவெனில் 

1) எளிதில் கதையின் முடிவை யூகிக்க முடியாது.

2) எளிய மனிதர்களின் வாழ்வியலை அவர்களின் உணர்வுகளோடு அப்படியே பதிவு செய்திருப்பது.

3) எழுதுவது பாலியல், எந்த இடத்திலும் விரசமில்லை.

4) இலக்கியத் திணிப்பில்லாமல் சாதரணமாக வந்து விழும் வார்த்தைகள்.

பலவீனம்:

1) சில இடங்களில் மறுமுறை வாசித்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

2)  ஒரு கதைக்குள் பல கிளைக்கதைகளால் பிண்ணியிருப்பது.

3) புதிதாய் வாசிக்க துவங்கியிருக்கும் வாசகர்களை எளிதில் சலிப்படைய செய்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது.

பதிப்பகம் : காலச்சுவடு 
தொகுப்பாளர்: திரு. சுரேஷ்குமார் இந்திரஜித்.
மொத்த பக்கங்கள்: 152, விலை : 120/-


படித்துச் சொன்னது 
அரசன் 

Wednesday, August 13, 2014

ஒரு காபி குடிக்கலாமா?

 பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய சிறுகதைகளின்  தொகுப்பு


      என் வாசிப்பு ஆர்வத்துக்கு ஆரம்ப காலத்தில் வித்திட்டவர்களில் ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் தமிழ்வாணன் ஆகியோர் முக்கியமானவர்கள். அதிலும் முதலிரண்டு பேர்களின் நாவல்கள் வெளியாகும் தினம் எல்லாம் எனக்கு தீபாவளி தான். இருவர் எழுத்திலும் இருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை எனக்கு பிடிக்கும். விவேக்-ரூபலாவை பிடித்த அளவுக்கு பரத்-சுசீலாவையும் பிடிக்கும். (கூடவே பட்டுக்கோட்டையாரின் நாவல்களில் இடம்பெறும் பெண்களின் டீ-ஷர்ட் வாசகங்கள் பிடிக்கும்..) பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் நாவல்கள் மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன். 'வாத்தியார்' பாலகணேஷ் அவர்கள் ஒருமுறை 'பட்டுக்கோட்டை' பிரபாகர் அவர்களிடம் அழைத்துச் சென்று மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துவிட்டார். அவரிடம் என் 'ஆவிப்பாவை' கொடுத்து ஆசிகள் பெற்றுக்கொண்ட போது முதல் முறை வந்தததற்கு ஞாபகார்த்தமாய் அவர் எழுதிய இந்த சிறுகதை தொகுப்பை கையெழுத்திட்டுக் கொடுத்தார்.



     இந்த தொகுப்பில் மொத்தம் பதிமூன்று சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கையில் மனதிற்குள் ஒருவித ஆர்வமும், 'க்ரைம் கதை வல்லுநர்' சிறுகதையில் எப்படிப்பட்ட விஷயங்களை எடுத்தாளப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது. ஒவ்வொரு கதையை படித்து முடித்த போதும் மனதிற்குள் ஒரு நிறைவு. பெரும்பாலான கதைகளில் முடிவு எதிர்பாரா ஒரு திருப்பத்தை கொண்டிருந்தது. இத்துணை வருட எழுத்து அனுபவம் காட்சியை வாசகர் மனதில் ஓட வைக்கும் விவரணைகளில் தெரிந்தது. இலக்கிய பாணியில் அல்லாமல் தெளிந்த நீரோட்டமாய் கடைநிலை வாசகனுக்கும் இனிமையான வாசிப்பனுபவம் கிட்டும் வண்ணம் எழுதியிருந்தது சிறப்பு.

     இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது 'ஹலோ நண்பா' என்னும் சிறுகதை. குடித்துவிட்டு தன் நண்பனுக்கு போன் செய்ய நினைத்து தவறுதலாக வேறொருவருக்கு அழைத்து விட, அந்த ராங் காலை எடுத்தவர் வேலை இழந்து மனைவியும் கோபித்துக் கொண்டு அவர் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்ட கோபத்தில் "மகாதியானத்தில்" ஈடுபட்டிருக்க, இவர்கள் இருவருக்குள்ளும் நிகழும் சம்பாஷணைகள் தான் கதை. உரையாடலின் முடிவில் நிகழும் திருப்பம் நிச்சயம் விறுவிறுப்பானது மட்டுமல்ல சிரித்தபடியே நாம் படித்து ரசிக்க கூடியதும் கூட. ஒரு சிறு சாம்பிள் இங்கே..



    தொகுப்பின் முதல் கதையே இன்றைய தலைமுறையின் அவலங்களை குறிப்பாக "லிவ்விங் டுகெதர் பண்ணலாமா" என்பதை கூட  "ஒரு காபி குடிக்கலாமா" என்பது போல் கேட்கும் அளவிற்கு வளர்ந்திருக்கும் (?!) நாகரீகத்தை சாடும் கதை. "ஆனந்தவல்லியின் காதல்" ஒரு சரித்திர குறுங்கதை. ஆங்காங்கே திருப்பங்களுடன் நம்மை புருவம் உயர்த்த செய்யும். "சிறப்பு விருந்தினர்" கதை நிச்சயம் பல பேர்களுக்கு பொருந்தும் வண்ணம் அமைந்திருக்கிறது. "சிடுமூஞ்சிகள்" என்னும் சிறுகதை கொஞ்சம் ஆழமாக சிந்திக்க வைக்கிறது. அதில் வரும் அம்மாவின் கதாப்பாத்திரம் கடைசி வரியில் மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறது. அதேபோல் "இரண்டு கடிதங்கள்" படித்து முடிக்கும் போது குடித்துவிட்டு அட்ராசிட்டி செய்யும் "குடிமகன்களின்" மேல் காறி உமிழத் தோன்றுகிறது. "அவன் பெயர் கேகே" மனதோரம் கொஞ்சம் சோகத்தை அப்பிவிட்டு செல்கிறது.


       ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாய் ரசிக்கும்படி இருந்தது. எந்த ஒரு கதையும் கொஞ்சமும் தொய்வை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. மொத்தத்தில் இந்தக் காபியை எந்த சுவையை ரசிப்பவர்களும் குடிக்கலாம்..!




நூலின் பெயர்         :    ஒரு காபி குடிக்கலாமா? 
ஆசிரியர்                 :    பட்டுக்கோட்டை பிரபாகர்   
பக்கங்கள்                :    152
 விலை                   :    ரூ. 100
நூல் வடிவமைப்பு :     திரு.பாலகணேஷ் 
பதிப்பாளர்              :   பி.சாந்தி, ரம்யா பிரியா கிரியேஷன்ஸ்,
                                     37/1, கெனால் பேங்க் ரோடு, அடையாறு,
                                     சென்னை - 600 020
                                     தொலைபேசி - 044-24415709