Sunday, October 2, 2016

நல்ல தமிழில் எழுத வாருங்கள்..!!

முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால் கூட பிழை திருத்தப்பட்டு, கச்சிதமாக பத்திரிகைகளில் வெளிவரும். இன்றைய தினத்தில் இணையம் கட்டிக் கொண்ட புண்ணியத்தால் அனைவரும் எழுத்தாளர்களே. அனைவரும் எடிட்டர்களே. இந்த மட்டற்ற ‘அவிழ்த்துவிட்ட’ சுதந்திரத்தின் விளைவு... இணையத்தில் எழுதுபவர்கள் ஒன்று தப்பும் தவறுமாக, எழுத்துப் பிழைகள் மலிய எழுதிக் கொள்(ல்)கிறார்கள், அல்லது நன்றாக தமிழ் எழுதுகிறேன் பேர்வழி என்று ‘பேட்டிக் கண்டேன்’, ‘செய்துக் கொண்டிருந்தேன்’ என்று கண்ட கண்ட இடங்களில் ஒற்றுக்களைப் பெய்து தமிழை வாழ(?) வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான ஒரு சூழ்நிலையில் தான் ‘நல்ல தமிழில் எழுதுவோம்’ என்கிற என்.சொக்கன் எழுதிய நூல் இன்றியமையாததாகிறது.


இவன். அவன், இது, அது என்று அருகில் தொலைவில் உள்ளவற்றைக் குறிப்பிடுவது போல இடையிலுள்ளதை உவன், உது என்று அழைக்கிற அழகிய தமிழ் வார்த்தையை இன்று நாம் இழந்திருக்கிறோம். இது ஈழத் தமிழில் இப்போதும் உண்டு. அதேபோல அங்காடி என்கிற வார்த்தையைத் தொலைத்து மார்க்கெட் என்பதையே தமிழ் வார்த்தையாக்கியாயிற்று இன்று. மலையாளத்தில் அங்காடியை பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.

பள்ளிகளில் தமிழ் இலக்கணம் கற்றுத் தரப்படும்போது அது மதிப்பெண் பெறுதலுக்கான அவசியம் என்பதாலேயே படித்து வைக்கிறோம். இயந்திரத் தனமாக கல்வி நிலையங்களில் சொல்லித் தரப்படும் நம் மொழியை என்.சொக்கன் விளக்குவதுபோல தோளில் கை போட்டுப் பேசுகிற பாணியில் ஆசிரியர்கள் நடத்தியிருந்தால் தமிழ் படிப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கும்.

எடுத்துக்காட்டாக, வினா எழுத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. ‘ஏ’ என்ற வினா எழுத்து மட்டும் சொல்லுக்கு முன்பாகவும் வரும் (உதா : ஏன்?), சொல்லுக்குப் பின்பாகவும் வரும் (உதா : ஆரே?). கொஞ்சம் பொறுங்கள். ஆரே என்பது எப்படிக் கேள்வியாகும்? இந்தச் சந்தேகம் நியாயமானதுதான். காரணம் ஆரே என்ற சொல் இப்போது வினாவாகப் புழக்கத்தில் இல்லை. ஆனால் பழைய பாடல்கள், உரைநடைகளில் நிறையப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரபலமான உதாரணம் வேண்டுமா? ஒரு நல்ல கண்ணதாசன் பாடல் இருக்கிறது. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா? இங்கே ஆடாதாரே என்பதில் ஏ என்ற எழுத்து சொல்லின் பின்பகுதியில் வந்து, கேள்வியாக நிற்கிறது இல்லையா?

இதேபோல பகுதி, விகுதி ஆகியவற்றை விளக்குகிற பகுதியில் பெரிய உணவகங்களில் அமைந்திருக்கும் பலப்பல பகுதிகளை உதாரணம் காட்டி விளக்கியது மிகவே ரசிக்க வைக்கிறது. போலவே மனதிலும் எளிதில் பதிந்து விடுகிறது.

எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் ஆகியவை பற்றிய வகுப்பில் நான் சற்றே கண்ணயர்ந்துவிட, தமிழய்யா என்னைப் பார்த்து, “நீ எழுவாய். இங்கிருப்பதால் பயனிலை, நீ வெளியேறுவதே செயப்படு பொருள்” என்று தலையில் தட்டி வெளியேற்றினார். புத்தகத்தில் கூறியிருப்பது போல காரையும், இன்ஜினையும் உதாரணம் காட்டி விளக்கி பாடம் நடத்தியிருந்தாரானால்  அன்று அப்படியொரு துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டிராது. அப்போது இப்படியொரு புத்தகம் எழுத என்.சொக்கரும், படிக்க இன்றைய நானும் இல்லாமல் போய் விட்டோமே..  என்னத்தைச் சொல்ல..? 

இப்படி புத்தகம் முழுவதிலும் நடைமுறை வாழ்வில் கேட்கிற, பார்க்கிற விஷயங்களைக் கொண்டு  எளிமையாக தமிழ் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. சினிமா வசனங்களை உபயோகப்படுத்தி அளபெடையை விவரித்துள்ளது போல எளிமையான விஷயங்கள் இருந்தாலும், ஆங்காங்கே இலக்கியங்களிலிருந்தும் உதாரணங்கள் காட்டப்பட்டிருப்பது சிறப்பான ஒன்று. இலக்கியமும் மெல்ல நம்மிடம் புகுத்தப்படுகிறது.

முதல் 134 பக்கங்கள் இப்படி எளிமையான இலக்கணப் பாடங்களாக அமைந்துள்ளது. அடுத்த 120 பக்கங்களில் இணையத்தில் தான் எழுதிய குறுங்கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். இந்த பின்பகுதிக் கட்டுரைகள் தமிழ் வார்த்தைகள் பற்றிய சுவையான அலசலாக அமைந்துள்ளன. ஒவ்வொரு குறுங்கட்டுரையும் ஏதோ கதை படிப்பது போன்ற சுவாரஸ்யத்துடன் ஒரு புதிய விஷயத்தை உங்கள் மனதில் ஏற்ற முடிகிறது என்பது ஒரு கூடுதல் சிறப்பு.

போகிற போக்கில் படிப்பது போல் இந்தப் புத்தகத்தைப் படிக்காமல், ஒவ்வொரு அத்தியாயத்தையும் மனதில் உள்வாங்கி படித்தாரென்றால் அந்த நபர் தமிழைத் தப்பும் தவறுமாக எழுத மாட்டாரென்பது நிச்சயமான ஒன்று. தினம் ஒரு அத்தியாயம் என்ற ரீதியில் படித்தாலும் நல்லதே. எது எப்படியாயினும் நம் மொழியைச் சிறப்புற, பிழையின்றி எழுத வேண்டும் என்பது உங்கள் விருப்பமெனில் நீங்கள் தவறவிடக் கூடாத ஒன்று இந்தப் புத்தகம்.

நூல் பெயர் ; நல்ல தமிழில் எழுதுவோம்
நூலாசிரியர் : என்.சொக்கன்
பக்கங்கள்   : 256
விலை      : ரூ.200/-
வெளியீடு   : கிழக்குப் பதிப்பகம்,
              177.103, முதல் தளம், அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு,
               சென்னை - 600 014.
தொடர்பெண் : 91-44-4200-9603

Tuesday, August 9, 2016

பங்களா கொட்டா - ஆரூர் பாஸ்கர்

மண்ணையும் அதன் சார் மனிதர்களையும் பற்றிய படைப்புகள் என்றால் எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பு தட்டாது எனக்கு. அந்த மாதிரியான களத்தினை உள்ளடக்கி வெளிவந்துள்ளது இந்த பங்களா கொட்டா நாவல். புகழ் மிகுதி கொண்ட மனிதர்களைத் தான் இந்த உலகம் படைப்பாளிகள் என்று நம்பிக் கொண்டிருக்கிறது. புதிதாய் வருபவர்களை கண்டுகொள்ளாமல் அவர்களது முயற்சிகளுக்கு செவி சாய்க்காமல் வெற்றி பெற்றவனின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிற சம காலத்தில், புதிதாய் ஒரு நபர் புத்தகம் வெளியிட்டு அதை சந்தைப் படுத்துவதில் உள்ள சிரமத்தை சமீபத்தில் உணர்ந்தவன் நான்.




பங்களா கொட்டா மூலம் மண்ணை மோதிப் பிளந்து கொண்டு வந்திருக்கும் புதிய விருட்சம் தான் நண்பர் ஆரூர் பாஸ்கர். படைப்பு வெற்றியடைந்து உலகம் கொண்டாடுதோ இல்லையோ? இம்மாதிரியான முயற்சியினை ஆரத்தழுவி வரவேற்க வேண்டியது சக படைப்பாளிகளின் கடமை. அதற்கான சூழல் தமிழிலக்கிய உலகில் சாத்தியமில்லை. சரி வாருங்கள் பங்களா கொட்டா நாவலைப் பற்றி காண்போம்.

ஒரு கிராமத்திற்கு அடையாளமாக இருக்கும் பரந்து விரிந்த பண்ணை, பண்ணையின் பெரியவர், அவரின் மூன்று வாரிசுகள், மற்றும் பண்ணையினை நம்பி பிழைக்கும் அவ்வூர் மக்கள் சிலர். இவர்களின் வாழ்வியலைத்தான் பேசுகிறது பங்களா கொட்டா. மேலோட்டமாக பார்த்தால் எளிமையிலும் மிக எளிமையான புனைவைப் போன்று தான் தெரியும். ஆனால் வாசித்தால் மட்டுமே அதன் அடர்த்தியை உணர முடியும். விவசாயத்தினையும், அதனை செய்யும் மாந்தர்களின் மன நிலைக் கூறுகளையும் முடிந்த வரை பதிவு செய்ய முயன்றிருக்கிறார் நண்பர் ஆரூர் பாஸ்கர்.

பண்ணைக்கு மூன்று ஆண் வாரிசுகள். மூத்தவன் நகரத்தில் வழக்கறிஞர் பணி, அவ்வப்போது கிராமத்திற்கு வந்து தலை காட்டிவிட்டு போகும் மனிதர். அடுத்து, ஞானி இவர்தான் தனது படிப்பினை மேலும் தொடர விருப்பமின்றி விவசாயத்தின் மீது தீவிர பற்று கொண்டு, வயசான பண்ணை முதலாளிக்கு துணையாக இருந்துகொண்டு விவசாயம் தடை பட்டு போகாமல் பார்த்துக்கொண்டு வருகிறார். கடைக்குட்டி இராசு அதீத பாசத்தினால் சீர்கெட்டு திரியும் இளம் மைனர். இம்மூவர்களின் நிலப் பங்கீடும், அதன் வழி கிளம்பும் சில சிக்கல்களும், இடையே ஞானியின் காதலும் என்று கலவையான படைப்பு. மற்ற இருவரும் நிலத்தினை பங்கிட்டு காசு பார்க்க துடிக்கையில் ஞானி மட்டும் ஒரு கல்லூரி கட்டி இலவச படிப்பினை வழங்கும் நோக்கில் தனது செயலினை முன்னெடுக்கிறான். கிட்டத்தட்ட ஞானியினை மையப்படுத்தியே கதை நகர்கிறது. விவசாயம் செழித்தோங்கிய மண்ணில் தற்போது நிலவி வரும் வறட்சியில் துவங்கி, வாரிசுகளினால் துண்டாடப்படும் நிலக்கூறுகள் உருவாக்கும் அதிர்வுகள் வரை எளிமையாக பதிவு செய்திருக்கிறார்.

எல்லா இடத்திலும் நல்லார்க்கு உள்ள எதிரிகளைப் போன்று இக்கதையிலும் சில நயவஞ்சக மனிதர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி அதன் கதகதப்பில் சுகம் தேட முயன்று தோற்றுப் போகிறார்கள், அவர்களின் வஞ்சகத்தன்மையை அழுத்தமாக சொல்ல முடியாமல் சற்று தடுமாறியிருக்கிறார் நாவலாசிரியர் திரு ஆரூர் பாஸ்கர். கிராமத்திலே பிறந்து வளர்ந்த என்னால் நிலப் பிரச்சினைகளினால் ஏற்படும் சர்ச்சைகளோடு எளிதில் ஒன்றிப் போக முடிந்தது, ஆனால் தற்போதைய இளம் வாசிப்பாளர்களால் இயலுமா என்பது கேள்விக்குறி, அவர்களுக்கும் புரியும் வண்ணம் கொஞ்சம் விலாவாரியாக பதிவு செய்திருக்கலாம்.

எழுத்து என்பது வெறும் நிகழ்வினை கடத்துபவையாக இல்லாமல் அந்நிகழ்வினை மிகுந்த அழுத்தமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருப்பவன் நான், இக்கதையினுள் நிறைய விசயங்களை அழுத்தமாக பதிவு செய்ய வாய்ப்புகள் நிறைய இருந்தும் அதை சற்று மேலோட்டமாகவே கடந்து போயிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஞானி கல்லூரி எதற்காக கட்ட வேண்டும் என்று துடிக்கிறார் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய தவறி இருக்கிறார். முக்கிய பாத்திரங்களுக்கு கொடுக்க வேண்டிய உருவ/உடல் விவரிப்பினை கிட்டத்தட்ட நாவலில் வரும் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார். சில பக்கங்களே வந்து போகும் சாமியாருக்கு கூட தீர்க்கமான பார்வை, நீளமான முடி என்று விவரணை அந்த இடத்தில் தேவையற்றது என் கருத்து.

இன்னொரு மிக முக்கிய பிரச்சினை நிறைய ஒற்றுப் பிழைகள் இருக்கின்றன. குறிப்பாக "ஒ" விற்கு பதிலாக "ஓ"தான் இருக்கிறது. இப்படியான பிழைகளை கொஞ்சம் தவிர்த்து இருக்க வேண்டும். இன்னொன்று பேச்சு வழக்கில் தொடங்கிய எழுத்து வழக்கில் கரைந்து மீண்டும் பேச்சு வழக்கில் வந்து நிற்கிறது. முதல் படைப்பு அதுவும் வட்டார வழக்கினை மையப்படுத்தி புனையப்பட்டதினால் பெரும் குறையாக தனித்து தெரியவில்லை என்றாலும் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இப்படியான சில குறைகளை கலைந்துவிட்டுப்  பார்த்தால் தனக்கான தனித்துவ அடையாளத்தைப் பெறுகிறது இந்த "பங்களா கொட்டா".      

அமெரிக்காவில் வசித்தாலும் தனது மண்ணையும், அதனுள் வாழ்ந்து மரித்த/வாழ்ந்து கொண்டிருக்கும் எளிய மனிதர்களையும் நேசித்து அவர்களின் வாழ்வியல் முறையினை எழுத்தில் பதிவு செய்து வரும் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் முயற்சிக்கு வலு சேர்க்க வேண்டியது அவசியம். மனிதர்கள் மறந்தாலும், என்றாவது உங்கள் படைப்புகளை காலம் நினைவு கூறும் நண்பா, தொடர்ந்து எழுதுங்கள்... பெரு வாழ்த்துக்கள்....


================================================================

ஆசிரியர் வலைதளம் : https://aarurbass.blogspot.in/

பதிப்பகம் : அகநாழிகை

விலை : 130/- 

=================================================================

- அரசன்
http://karaiseraaalai.com/


Wednesday, July 20, 2016

மயக்குறு மகள்- தமிழில் ஒரு தேவதைக் கதை!

னக்கு நன்றாக நினைவிருக்கிறது, சிறு வயதில் பள்ளியில் ஆஷா மிஸ் கூறிய "ஸ்னோ ஒயிட்" கதைதான் நான் முதன்முதலில் கேட்ட ஒரு தேவதைக் கதை. அதற்குப் பிறகு நண்பரின் மகளுடன் உரையாடுவதற்காக "டிஸ்னி ஃபிரின்சஸ்" எல்லோரைப் பற்றியும் படிக்கத் துவங்கினேன். தமிழில் இதுபோல் ஒரு தேவதைக் கதை உண்டா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு 'எல்லாம் தெரிந்த' நண்பன் கூகிளிடம் கேட்டேன். அவனோ ஆசானின் "ஸ்ரீரங்கத்துத் தேவதைகளை" கொண்டு வந்து கண் முன்னே நிறுத்தினான். அதுசரி, நாம்தான் தேவதைகளை பருவ மங்கைகளாக உருவகப்படுத்தியே பழகியவர்கள் ஆயிற்றே.



புத்தகத் திருவிழா சென்ற போது நண்பர் டின் என்கிற தினேஷ் 'மயக்குறு மகள்' என்ற புத்தகத்தை வாங்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றார். நானும் புத்தகத்தை எடுத்து முன்னுரை வாசித்தேன். அங்கே எழுத்தில் சரித்திரம் படைக்கும் நாயகன் ஒருவர் புத்தகத்தை சிலாகித்து எழுதியிருந்தார். அதிலும் அவர் அதை 'பாபநாசம்' படத்தோடு ஒப்பிட்டு ஒரு வரி எழுதியிருந்தார். ஜெமோவின் அந்த வரிகள் ஒவ்வொன்றும் நான் தேடிக் கொண்டிருந்த தேவதைக் கதை இதுதான் என்பதை எனக்கு உணர்த்தியது.


வீட்டிற்குச் சென்றதும் புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகங்களை அடுக்கி வைத்த போது 'அன்சைஸ்' இல் இருந்த இந்த புத்தகம் கொஞ்சம் தலையை எட்டி நோக்கி என்னை வாசித்துப் பார் என்பதுபோல எனைப் பார்த்தது. அச்சமயத்தில் நான் வைரமுத்துவின் 'கவிராஜன் கதையை' சுவாசித்துக் கொண்டிருந்தேன். Random ஆக ஒரு பக்கத்தை தேர்வு செய்து 'அம்மு பள்ளிக்குச் சென்ற முதல் நாளை' வாசிக்கத் துவங்கினேன்.


என் வாழ்நாளில் நான் புத்தகங்கள் பலவற்றை வாசித்துச் சிரித்திருக்கிறேன், காதல் வயப்பட்டிருக்கிறேன், கோபம் கொண்டிருக்கிறேன், அச்சமடைந்து ஹாலைக் கடந்து சமையலறை சென்று தண்ணீர் எடுத்துக் குடிக்கவே பயந்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாய் ஒரு புத்தகத்தை வாசித்து கண்ணீர் விட்ட நிகழ்வு அன்றுதான் அரங்கேறியது. அப்போதே முடிவு செய்துவிட்டேன் அமுதினிக்காக கவிராஜன் கொஞ்ச காலம் காத்திருக்கலாம் என்று.


இந்தப் புத்தகம் எழுதிய காயத்ரி சித்தார்த் அவர் வீட்டுக் குட்டித் தேவதை பிறந்தது முதல் பேசிய பிள்ளை மொழிப்பேச்சுகள், சின்னச் சின்ன சேட்டைகள், புத்திசாலித்தனமான கேள்விகள், அசரவைக்கும் பதில்கள் என நம்மையும் அமுதினியின் குட்டி நண்பரகளாய்ப் பாவித்துக் கதை சொல்கிறார். தினமும் ஒரு அத்தியாயமாவது படித்துச் செல்லவில்லை என்றால் அன்றைய பொழுது நிறைவடையாத உணர்வாக மாறத் துவங்கியது. சில நாட்களில் படித்த அமுதினியின் லூட்டியை நினைத்து அலுவலகத்தில் வெடித்துச் சிரித்ததும் நடந்தது.


இந்தப் புத்தகத்தை ஒரு பிள்ளை வளர்கையில் எழுதிய நாட்குறிப்பு போல அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது. உதாரணத்திற்கு, இதில் காயத்ரியும் அமுதினியும் விளையாடும் விளையாட்டு ஒன்று, ஆங்கிலத்தில் Role-Playing என்று கூறுவர். மகள் தாயாகவும், தாய் சேயாகவும் மாறி விளையாடும் ஒரு விளையாட்டு. இது ஒரு சிறப்பான Parenting ஆக எனக்குத் தோன்றியது, காரணம் இந்த விளையாட்டில் ஒரு தாயாக தன்னை பாவிக்கையில் பிள்ளைக்குத் தான் செய்யும் தவறுகள் எளிதாகவும், அதே சமயம் மனம் கோணாத வகையிலும் புரிந்து விடுகிறது. அதுமட்டுமல்ல. பிள்ளை தாயிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை ஒரு தாயும் அங்கே உணர்ந்து கொள்கிறார்.


மற்றொரு விஷயம், குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு கூடுமானவரை நிஜத்தை கூற முயற்சிக்க வேண்டும். நற்பண்புகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்றும் அவர் வாசித்து அனுபவித்த இலக்கியங்களுடன் ஒப்பிட்டு நம்முடன் பகிர்கிறார் காயத்ரி. ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் ரசித்து மகிழ்ந்தேன் என்ற போதும் என்னை மிகவும் ரசிக்க வைத்த  ஒரு விஷயம் அவர் பிள்ளைக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த பாங்கு. சம்மணம் போட்டு அமர்வது 'க்' எனவும் ஒற்றைக் காலைத் தொங்க விடுவது 'த்' எனவும் அந்தக் குட்டிப் பெண் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லிக் கொடுத்து சிறப்பு.


இன்னுமொரு விஷயம் நான் உணர்ந்தது, இது பிள்ளையைப் பற்றிய புத்தகம்தான் என்றபோதும் அதன் இடையே கணவன் மனைவியிடம் இழையோடிய பாசத்தையும், அன்பினையும் உணர முடிந்தது. குறிப்பாய் முதல் நாள் மகளை பள்ளியில் விட்டுவிட்டு கனத்த மனதுடன் கணவருக்கு அழைத்துப் பேசிவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் எதிரில் தெரிந்த அங்காடி ஒன்றில் நேரம் போக்கிவிட்டு சொல்ல முடியாத ஒரு சங்கடமான ஒரு உணர்வுடன் அந்தத் தாய் வெளியே வந்த போது, அலுவலக வேலைகளை விட்டுவிட்டு மனைவிக்கு ஆதரவாய் தோள் தந்த அந்தக் கணவரின் காதல். பணி நிமித்தம் குடும்பத்தை குறிப்பாக பிள்ளைக் கனியமுதை விட்டுவிட்டு அயல்நாட்டிலிருந்து ஸ்கைப் மூலம் அந்த தேவதையின் முகம் ரசித்த ஒரு தந்தையின் அன்பு.  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


தான் தாயான தருணத்தில் தான் தன்னுடைய தாய்பட்ட சிரமங்களை உணர முடியும் என்பதையும் ஒரு உட்பொருளாக சொல்லி இருநூற்றுச் சொச்சம் பக்கங்களும் அதற்குள் முடிந்துவிட்டதா என்றெண்ணும் வண்ணம் காயத்ரியின் எழுத்து வாசிப்பவர்க்கு எளிமையாய் இருக்கிறது. படித்து முடித்து பல நாட்கள் ஆனபோதும் அமுதினியின் பிள்ளைத் தமிழ் காதுகளில் இன்னும் ரீங்காரமிடுகிறது. இவள் காணும் பிள்ளைக் கனவுகள் நமக்கு வராதா என ஏங்க வைக்கிறது. கோச்சடையானுக்கே துள்ளிக் குதித்த இந்தக் குட்டிப் பெண் 'கபாலி'யைக் கண்டு எங்ஙனம் ஆர்ப்பரிக்கப் போகிறாள் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது. என்றேனும் வாய்ப்பு கிடைத்தால் இந்த அழகான குடும்பத்தை சந்தித்து உரையாட வேண்டும் என்றும் ஆவல் பொங்குகிறது.


 -கோவை ஆவி.






நூலின் பெயர்   :    மயக்குறு மகள்
ஆசிரியர்             :    காயத்ரி சித்தார்த் 
பக்கங்கள்           :    207
 விலை                  :    ரூ. 140
வெளியிட்டோர் :   விகடன் பிரசுரம்.
                            757, அண்ணாசாலை,
                                     சென்னை-2


Thursday, May 5, 2016

முனியாண்டி விலாஸ் - யுகபாரதி


கவிதை என்ற சொல்லின் மீதிருந்த மரியாதையை, சம காலத்திய இளம்படைப்பாளிகள் கொத்துக்கறி போட்டு வைத்திருப்பதினால், கவிதை நூல்கள் வாங்குவதையும், கவிதைகள் வாசிப்பதையும் கூட வெகுவாய் குறைத்து விட்டேன், காரணம் சொல்ல நிறைய இருந்தாலும், பொதுவாக சொல்ல வேண்டுமெனில் சமூக வலைத்தளப் பெருக்கத்தினால் எல்லோரும் கவிதை எழுத கிளம்பியது தான். ஆரம்ப கால எழுத்துக்கள் சல்லையாக இருந்தாலும் போக போக தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டு எழுதப் பழகாமல், மொன்னையிலும் மொன்னையாக தொடர்ந்து எழுதி, காசு வாங்கிக்கொண்டு அதையும் புத்தகமாக்கி தரும் சில அயோக்கிய பதிப்பகங்களும் செவ்வனே செய்து கொண்டிருப்பமையால் கவிதை என்றாலே கண்டுக்காத மாதிரி கழண்டு விடுவேன். இப்படியான குப்பைகளுக்கு மத்தியில் யுகபாரதியின் 'முனியாண்டி விலாஸ்' எனும் தரமான கவிதை நூல் வந்திருக்கிறது.



ஒரு கவிதை, வாசிப்பவனை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும், அவன் எண்ண ஓட்டங்களை செழுமை படுத்தி, சிந்தனைகளை சீர் செய்யத் தூண்ட வேண்டும், அப்படியான கவிதைகள் தான் காலம் கடந்தும் பெயர் சொல்லும். அப்படியான கவிதைகள் நிறைந்த புத்தகம் தான் இந்த 'முனியாண்டி விலாஸ்'. தனது கோபங்களை, சமூகம் பற்றிய பார்வைகளை, அரசியல் கோமாளித்தனங்களை, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை, மக்களின் அறியாமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் யுகபாரதி.

இதுவரை தனது மென்மையான வரிகளினால் தமிழ் பாடல்களுக்கு பெருமை சேர்த்த யுகபாரதியின் கவிதைகள் கடுமையான காரமாக இருக்கிறது, அது தேவையாவும் இருக்கிறது என்பது காலத்தின் கட்டாயம்!

'மினி ஸ்கர்ட் நடிகை' எனும் கவிதையில் அவளின் அழகினை வர்ணித்து விட்டு இறுதியாக
"வேண்டுமானால் பாருங்கள்,
நாளை அவளுக்காக நீங்கள்
ஓட்டுப் போடுவீர்கள்" என தமிழக நிலைமையைக் கூறி செவிட்டில் அறைந்துச் செல்கிறார் கவிஞர்.

"வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்." என 'மனைவியிடம் சொன்னவை' என்ற கவிதையில் யாதார்த்த வறுமையை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்.

"நம்முடைய தலைவருக்கு இது போதாத காலம்" என்ற கவிதையில் கருணாநிதியை கிழி கிழியென்று கிழித்து தொங்கப்  போட்டிருக்கிறார். இக்கவிதையின் ஒவ்வொரு வரிகளும் கருணாநிதியின் மனசாட்சி போல் பேசி மிரள வைக்கிறது. இன்ன பிற கவிதைகளில் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

"வேதாளத் தேவதை" எனும் கவிதையில் ஜெயலலிதாவின் சுய ரூபத்தை சமரசமில்லாமல் காட்சிப் படுத்தியிருக்கிறார். அவரின் முரட்டுக் குணத்தை செவ்வனே பதிவு செய்திருக்கிறார்.

தனது பாடல்களில் மெல்லினத்தைக் கையாளும் யுகபாரதி, கவிதைகளில் வல்லினத்தைக் கையாண்டிருக்கிறார். சாதாரணக் குடிகளின் வாழ்வியல் அவலங்களை உலகுக்கு உரக்க சொல்லும் கவிதைகளால் நூலை கட்டமைத்திருக்கிறார்.

'முனியாண்டி விலாஸ்' எனும் கவிதைக்காகவே இந்நூலை காசு கொடுத்து வாங்கலாம், அவ்வளவு நெகிழ்வான கவிதை.
"முனியாண்டிகளாய்த் தங்களை 
உணராதவர்கள் அக்கடைக்கு வருவதில்லை
முனியாண்டிகளை உணராதவர்களும்" 
இப்படி முடித்திருக்கும் இக்கவிதை பேசும் உண்மை வலியது. நாகரீக பெருக்கத்தினால் தனது அடையாளத்தை இழந்து வரும் நமது சமூகத்தை என்ன சொல்லி திருத்துவது, எல்லாத்தையும் இழந்த பின்பு சிறிய அனுதாபத்தில் கடந்து போகும் தலைமுறையிடம் என்ன சொல்லி கெஞ்சினாலும் செவியிலேறப் போவதில்லை.

இம்மாதிரியான கவிஞர்களின் பங்களிப்பு இன்றைய சூழலில் அவசியம் தேவை, இருந்தும் மக்கள் ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் சோரம் போகையில் விழலுக்கு இறைத்த நீராக போகையில் மனம் கவலை கொள்கிறது. மக்கள் சுயத்தை புரிந்து தவறை கலையட்டும், அதற்கு இக்கவிதைகள் சிறு தூண்டுகோலாக அமையட்டும்... வாழ்த்துகள் யுகபாரதி ...

========================================================================
பதிப்பு: 2014

மொத்தப் பக்கங்கள்: 176

வெளியீடு: நேர்நிரை

விலை: 160/-

தொடர்புக்கு : 98411 57958
27A, S1, கிருஷ்ணா நகர் அனெக்ஸ்
மதுரவாயில், சென்னை - 95.

========================================================================

வாசித்துச் சொன்னது

அரசன்
http://www.karaiseraaalai.com/

Friday, March 25, 2016

ஆரஞ்சு முட்டாய் - கார்த்திக் புகழேந்தி


கார்த்திக் புகழேந்தியின் முதல் தொகுப்பான 'வற்றாநதி' ஏற்படுத்திய தாக்கத்தினால் இவரின் எழுத்துக்களை தீவிரமாக பின்தொடர ஆரம்பித்தேன். குறிப்பாக இவரின் வழக்குச் சொல் நிறைந்த எழுத்துக்கு ரசிகன். வற்றா நதிக்குப் பின் இவரின் எழுத்துலக செயற்பாடுகள் பிரமிக்கத்தக்கவை. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில், "கதை சொல்லி"யை மீண்டும் வெளிவரச் செய்தது. கடந்த டிசம்பரில் சென்னை வாசிகளுக்கு மரண பயத்தைக் காட்டிச் சென்ற தொடர் மழையில் இவரின் நேரடி களச் செயற்பாடுகளை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. வெறும் எழுத்தோடு மட்டும் நின்றுவிடாமல் இம்மாதிரியான மனித நேயமிக்க செயற்பாடுகள் காலம் கடந்தும் பெயர் சொல்லும். உனது ஈரமிக்க செயற்பாடுகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் நண்பா.



வற்றா நதியை வாசித்துவிட்டு கா. பு. விடம் அரை மணி நேரத்துக்கு மேலாக அந்நூலைப் பற்றி உரையாடினேன். பெரும்பாலும் எழுத்தாளர்களோடு உரையாடுவதை விட அவர்களின் எழுத்துக்களோடு சிநேகம் கொள்வதைத் தான் விரும்புவேன், ஆனால் மனிதர், தன் எழுத்துக்களைப் போன்றே பழகவும் எளிமையாக இருக்கிறார். வாருங்கள் ஆரஞ்சு முட்டாயைப் பற்றி பார்ப்போம்.

'வெட்டும் பெருமாள்' கதையில், ஆரம்ப சொல்லாடல்களே நம்மை கதைக்குள் இயல்பாக ஒன்றவைத்துவிடுகிறது. கொஞ்சம் கவனம் சிதறினாலும் மீண்டும் வாசிக்க வேண்டிய கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் வாசித்து முடிக்கையில் 'வெட்டும் பெருமாள்' நெஞ்சின் ஆழத்தில் குடி கொள்கிறான்.

'தேனடை' கதையில் சிறுவர்களின் இயல்பான உரையாடலோடு, தோட்டத்துக்காரனுக்கும், வாத்துக்காரிக்கும் உள்ள வரம்பு மீறிய உறவை துள்ளலாக சொல்லியிருக்கிறார், வாத்துக்காரியின் நிறத்தை வர்ணிக்கும் இடம் பட்டாசு. ஒரு நிகழ்வினை ஆழமான உள்வாங்குதல் இல்லையெனில் இம்மாதிரியான கதைகளை புனைவது வெகு சிரமம்.

அடுத்து, 'சிந்து பூந்துறை'யில் கணவனின் முன்னாள் காதலியைப் பற்றி தமது பிள்ளைகளுக்கு கூறிவிட்டு வெளியூருக்கு கிளம்பியதும் சுரீரென ஒரு திருப்பத்தைக் கொடுத்து திக்குமுக்காட வைக்கிறார் கா. பு. போகிற போக்கில் கதை நிகழும் இடங்களின் மனிதர்களின் வாழ்வியல் கூறுகளை எழுத்தில் மிக நுணுக்கமாக பதிவு செய்யவும் தவறவில்லை.

'இரயிலுக்கு நேரமாச்சி' கதையில் தமிழகத்தின் இண்டிடுக்கில் ஒரு தடகள வீராங்கனை படும் இன்னல்களையும், அவளை வார்த்தெடுக்க அருணாவின் தந்தை படும் அவமானங்களையும், அதன் வலிகளையும் மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார். நிறைவான பதிவு.

அதே போல் 'தெம்மாங்கு பாட்டக் கேட்டு' கதையில் கொஞ்சம் கொஞ்சமாய் நவீனத்துக்கு மாறிக்கொண்டிருக்கும் நிகழ்வுதனை பதிவு செய்துகொண்டே ஊடாக ஒரு காதலை பதிவு செய்வதும் ஆசிரியரின் நுணுக்கமான எழுத்துக்கு சான்று. லதா - மணிகண்டன் தம்பதிகளுக்கு வாழ்த்து சொல்வதா இல்லை கண்டனம் கூறுவதா என்பதை வாசகனிடமே விட்டுவிட்டு ஒதுங்கி கொள்கிறார்.

'தோழியென்றோருத்தி" கதையில் வரும் சுஹா போன்ற தோழி நமக்கும் வாய்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது வாசித்து முடிக்கையில்.

இப்படியாக கவனம் ஈர்க்கும் கதைகள் நிறைய இத்தொகுப்பில் இருக்கிறது, சட்டென்று கவனம் ஈர்த்த கதைகளை மட்டும் இங்கு குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன்.

கார்த்திக் புகழேந்தியின் கதைகள் அனைத்தும் நாம் எளிய மனிதர்களின் வாழ்வியல் கூறுகள் தான், அவற்றை மிக நேர்த்தியாய் கதையாக்கியிருக்கிறார், அதற்கு பெரிய பூங்கொத்து.

சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் இடறும் சிறு கல் போல, இவரின் பேச்சு வழக்கு எழுத்துக்கு இடையிடையே வரும் எழுத்து வழக்கு நடை. விறுவென விறுவென நகருகையில் வேகத்தடையை போட்டது போன்ற உணர்வைத் தருகிறது. வற்றா நதியோடு தொடர்பு படுத்தி பார்க்க கூடாது என்று நினைத்தாலும் தவிர்க்க முடியவில்லை. 'வற்றாநதி' நூலை வாசித்து முடிக்கையில் ஏற்படும் பூரிப்பில் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது இந்த 'ஆரஞ்சு முட்டாய்'.

தொடர்ந்து ஆக்கமுடன் இயங்கும் நண்பன் கார்த்திக் புகழேந்தியிடம், விரைவில் துள்ளலும், எள்ளலும் நிறைந்த ஒரு நாவலைத் தருமாறு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

நட்புடன்

அரசன்




  

Thursday, January 7, 2016

சு. தமிழ்ச்செல்வி சிறுகதைகள் - சு. தமிழ்ச்செல்வி


சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஆண் வர்க்கத்தினை திட்டித் தீர்க்கவும், வசை மொழிகளின் குவியலை தங்களது படைப்பென்று அடையாளப் படுத்திக்கொண்டிருக்கும் பல பெண் படைப்பாளிகளுக்கு மத்தியில், எவ்விதச் சத்தமுமின்றி மிக நேர்த்தியான, காலந்தாண்டியும் பேசக் கூடிய எழுத்துக்களை படைத்துக் கொண்டு வருகிறார் சு. தமிழ்ச்செல்வி. இவரின் அடையாளமாய் 'கீதாரி' நாவலைச் சொல்லலாம். 'கீதாரி' நாவலைப் படித்த பின்பு, இவரைப்பற்றி இணையத்தில் தேடினேன் சொல்லிக் கொள்ளும்படியான தரவுகள் இல்லை என்பது காலத்தின் சோகம். 

கீதாரி நாவலை வாசித்த பின், அது தந்த உந்துதலில் இவரின் இன்னொரு படைப்பான 'பொன்னாரம்' நாவலை வாங்கி வைத்திருக்கிறேன் நேரமின்மையால் வாசிக்க முடியாமல் கிடப்பில் இருக்கிறது. விரைவில் வாசித்து விட வேண்டும். 



சென்ற மாதத்தில் 'டிஸ்கவரி' புக் பேலஸில் உயிரெழுத்து பதிப்பக புத்தகங்களை ஐம்பது சதவிகிதத் தள்ளுபடியில் விற்பனை செய்கிறோம் என்ற தகவலைப் பார்த்ததும் கடைக்குச் சென்றேன். ஆச்சர்யமாக அந்தத் தொகுப்பில் சு. தமிழ்ச்செல்வி அவர்களின் சில நூல்களும் இருந்தன. அதில் இந்த நூலை வாங்கினேன். வாங்கிய கையோடு வாசித்தும் முடித்துவிட்டேன். 

கூலி வேலைக்குச் சென்று, அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சிகளை முன் வைத்தே தனது கதைகளை கூறுகிறார். எந்தக் கஷ்டத்திலும் மனம் சோர்ந்து முடங்கி விடாமல் தங்களது கடின உழைப்பை முன்வைத்து வாழத் துடிக்கும் கடைநிலைப் பெண்மணிகளின் வியர்வை நிரம்பிய உவர் சுவைகளை கதையின் மூலம் சுவைக்கத் தருகிறார். அவர்களின் வலி நிரம்பிய, கண்ணீரை ஆவணப் படுத்தியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. 

"தொம்பா" எனும் கதையில் கட்டிவந்த கணவனும் ஊதாரித் தனமாக குடித்துத் திரிகையில், அதே ஊரிலிருக்கும் அப்பனும் ஆத்தாளும் இவளை சுமையென்று கருத, சுயமரியாதையை இழக்காமல் தனக்குச் சீதனமாய் வந்த மாடுகளை மேய்த்து, அதனைப் பெருக்கி அதன் மூலம் கிடைக்கும் கணிச வருவாயில் கடைக்குழியில் கிடக்கும் குடும்பத்தினை உயர்த்த நினைக்கையில், அவள் கணவன், மேய்ச்சலுக்குப் போயிருந்த மாடுகளை தொம்பாவிற்கு தெரியாமல் ஒட்டிக்கொண்டு போய் விற்று விட்டு அதை வைத்து சாராயக் கடையை துவக்க போவதாய் முடித்திருப்பார். தொம்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழும் காட்சி கண் முன் விரிவது போலிருக்கும் அவ்வளவு ஈரமான எழுத்து. 

இது இப்படியென்றால், "யதார்த்தம்" என்றக் கதையில் வேலைக்கு போனாத்தான் சோறு என்ற குடும்ப நிலையில் காய்ச்சல் வந்த மகனுக்கு வைத்தியம் பாக்க நேரமில்லாமல் ஊர்க்கடையில் மாத்திர வாங்கி கொடுத்து படுக்க வைத்துவிட்டு,  புருசனும் பொஞ்சாதியும் வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பினால், காய்ச்சல் அதிகமாகி ஜன்னி வந்து கிடக்கும் மகனைத் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போயி வைத்தியம் பார்த்தும் பலனில்லாமல் இறந்து போகிறான். இறந்த புள்ளையை வூட்டுக்கு எடுத்து வர காசில்லாமல் புருசனும் பொஞ்சாதியும் யாருக்கும் தெரியாமல் இறந்த மகனை பேருந்தில் உட்கார வைத்துக்கொண்டு வருகையில் தன்னிலை தாளாமல் வெடித்து அழுவாள் மகனைப் பறிக்கொடுத்த தாய். அந்த ஏழைத்தாயின் பரித்தவிப்பை, கண்ணீரின் பிசுபிசுப்பை நமக்கும் உணர்த்துகிறது அந்தக் கதை.

அடுத்து கொடும்பாவி கதையில், பக்கவாதம் வந்த கணவனை வைத்துக் கொண்டு, மகன் வீட்டுப் பேரப்பிள்ளைகளை வளர்த்துக்கொண்டு வரும் அம்மணி, எங்காவது வேலை கிடைக்காதா? என்று காடு காடா, ஊரு ஊரா அலைகையில் வறட்சியினால் எங்கும் வேலையில்லை என்று எல்லோரும் கைவிரிக்கையில், மனம் நொந்து எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைச்சு கொடும்பாவி இழுத்தால் மழை வருமென்று ஒப்பாரி வைக்கும் நிகழ்வைப் பேசுகிறது. 

ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு வலியை கூறியிருக்கிறார். ஓடாய் தேய்ந்து தமது குடும்பங்களை, முதுகில் சுமக்கும் பெண்களின் வாழ்வியல் துயரங்களை, அவர்களின் இன்னல் மொழியினை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். எங்கும் எதிலும் பசப்பு வார்த்தைகளில்லை. வலிகளை வலிகளாகவே பதிவு செய்திருக்கிறார். 

இவரின் எழுத்துக்களின் சிறப்பம்சம் என்று நான் கருதுவது, மொழியாளுமை தான். எந்தக் கதையிலும் சோகத்தைப் பிழிந்து வாசிப்பவர்களை பாரிதாபம் கொள்ள வைக்காமல் கடை நிலை மாந்தர்களின் கண்ணீரை அப்படியே காட்சி படுத்தியிருக்கிறார். சொல்லாமல் கிடக்கும் இன்னும் இன்னும் எத்தனையோ கதைகளை அவர் எழுதித் தீர்க்க வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறெந்த வேண்டுதலுமில்லை அவரிடத்தில்.



========================================================================

பதிப்பகம் : உயிர் எழுத்து 

வெளியான ஆண்டு : 2010

பக்கங்கள் : 149

விலை : 95/-

========================================================================

கீதாரி நாவல் பற்றி அறிந்து கொள்ள: இங்கு கிளிக்குங்கள்