Tuesday, January 28, 2014

பரபரப்பின் பெயர் துளசிதளம்!

‘துளசிதளம்' எண்டமூரி வீரேந்திரநாத்தின் மாஸ்டர் பீஸ்களில் தலையாயது. சுமார் 20 ஆண்டுகள் முன் ‘சாவி' இதழில் எ.மூ.வீ.நாத்தின் ஆந்திர மூலத்தை சுசீலா கனகதர்கா என்பவரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்தபோது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் அந்தத் தொடர்கதையின் இறுதிப்பகுதி அப்ரப்டாக முடிந்தது போலத் தோன்றியது. ஸ்ரீனிவாச பிள்ளை என்பவன்தான் குற்றவாளி என்று ஒரு வரி வரும். யார் அந்த ஸ்ரீனிவாச பிள்ளை துளசி பிழைத்தபின் என்ன நடந்தது என்கிற விடைதெரியாத கேள்விகள் இருந்தன. பின்னர் புத்தகமாக்கப்பட்ட போதும் அப்படியே. 

இப்போது கௌரி கிருபாநந்தன் என்பவர் எ.மூ.வீ.நாத்தின் நாவல்களை மொழிபெயர்த்து வருகிறார். அவருடன் பழக்கம் உண்டு என என் வாசகி சமீரா சொன்னபோது சமீராவிடம், அந்தப் பரபர நாவலின் க்ளைமாக்ஸைப் படிக்காத வருத்தத்தை வெளியிட்டேன். இப்போது கௌரி கிருபாநந்தன் முழுமையாக மொழிபெயர்த்து அல்லயன்ஸ் வெளியீடாக வந்திருக்கும் துளசிதளம் என் குறையை நீக்கியது. ஒரு நாவல் குறையுடனேயே வெளிவந்து 20 ஆண்டுகளுக்குப் பின் திருத்தப்பட்ட பதிப்பு இப்போது வந்துள்ளது என்பது வெகு வியப்பான விஷயம்!

‘துளசிதளம்' என்ன மாதிரியான கதை? ஸ்ரீதர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவன். தன் மேலதிகாரியின் பேத்தியை ஒரு பிரச்னையின் போது தொழிலாளி ஒருவனிடமிருந்து காப்பாற்றுகிறான். அதில் ஐம்பதடி உயரத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்டதில் அவனுக்கு குழந்தை பாக்கியம் இனி இல்லை என்கிறார் டாக்டர். வெகுநாட்களாக குழந்தை இல்லாமலிருந்து அப்போது கர்ப்பமாகி இருக்கும் அவன் மனைவி சாரதாவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. துளசி எனகிற அந்தக் குழந்தையின் பேரில், அவள் 10வது வயதில் கிடைக்குமாறு இருபது லட்சம் ரூபாய் சொத்தை எழுதி வைத்துவிட்டு தன் நாட்டிற்கு (இங்கிலாந்து) சென்று விடுகிறார் மேலதிகாரி. துளசி 10ம் வயதை எட்டுவதற்கு முன் இறந்தால் சொத்துக்கள் ஸ்ரீகிருஷ்ணா அநாதைப் பெண்கள் ஆசிரமத்திற்குப் போய்ச் சேரும் என்கிறது உயில்.

அந்த ஆசிரமத்தை நடத்தும் (போலி) சுவாமி காத்ரா என்கிற மந்திரவாதியின் உதவியை நாடுகிறார் துளசியைக் கொல்ல. அவன் குழந்தைகளுக்கெதிராகச் செய்ய மாட்டேன் என மறுக்க, அவனுக்குத் தெரியாமல் அவன் சிஷ்யன் செய்கிறான் அதை. குழந்தை துளசிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட, ஸ்ரீதரின் நண்பன் நம்பூதிரி அது பில்லி சூனித்தால் வந்தது என்கிறான். அதுபோன்ற விஷயங்களில் நம்பிக்கையற்ற ஸ்ரீதரைக் கேட்காமலேயே வேறொருவன் மூலம் சூனியத்தைத் திருப்பியடிக்க, காத்ராவின் சிஷ்யனை அது பலி கொள்கிறது. விளைவாக, காத்ராவே களத்தில் இறங்கி, காஷ்மோரா என்கிற மிக்க் கொடிய சாத்தானை துளசியின் மேல் ஏவுகிறான். அது தினம் ஒரு வியாதியைத் தந்து 22ம் நாள கொல்லவல்லது. விளைவாக... துளசிக்கு தினம் ஒரு வியாதி ஏற்பட்டு துடிதுடிக்கிறாள். அவளுக்கு சிகிச்சை தரும் டாக்டர் பார்த்தசாரதி என்ன பிரச்னை என்றே கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்.

ஸ்ரீதரின் வீட்டில் அவன் தூரத்து உறவு என்று சொல்லி ஒட்டிக் கொள்ளும் சரஸ்வதி என்கிற நடுத்தர வயது நபரும், அவன் மகன் என்று சொல்லிக்கொண்டு மாரி என்கிற இளைஞனும் ஒட்டிக் கொள்கின்றனர். அவர்கள் சுவாமியின் கையாட்கள். தினம் நள்ளிரவு மூன்று சொட்டு ரத்தம் துளசியினுள்ளிருக்கும் காஷ்மோராவுக்கு படைக்க வேண்டும் என்பதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றனர். ஸ்ரீதரின் தங்கை அனிதாவின் அழகைக் கண்ட மாரி, அவள் அப்பாவித்தனத்தை பயன்படுத்திக் கொண்டு அவளை அடைந்து விடுகிறான். அவள் தற்கொலை செய்து கொள்ள, சாரதாவின் தம்பியான நாராயணன் (பிறவி ஊமை) அதற்குக் காரணம் மாரி என்பதை தெரிந்து கொண்டு, அவனை துடிதுடிக்க வைத்துக் கொல்வேன் என்று சபதமிட்டு அதற்கான வேலைகளில் இறங்குகிறான்.

ஜெயதேவ் என்கிற புகழ்பெற்ற ஹிப்னாடிக் டாக்டரின் உதவியை நாடுகிறாள் சாரதா. அவர் தன் திறமையின் மூலம் சற்றே துளசிக்கு ஆறுதல் தந்தாலும் நாளுக்கு நாள் குழந்தை கிழிந்த நாராய் மாறிக் கொண்டிருப்பதை தடுக்க முடியவில்லை. இப்படியே 20 நாட்கள் கடந்துவிட, 21ம் நாளன்று பேய், பிசாசு, பில்லிசூனியங்களில் நம்பிக்கையற்ற ஸ்ரீதருக்கு அதை நம்பும் வண்ணம் ஒரு சம்பவம் அவன் கண்முன் நடக்கிறது. தன் நண்பன் நம்பூதிரி மற்றும் லாயர் வித்யாபதியுடன் சேர்ந்து ஒரே நாளில் அந்த சாத்தானை முறியடித்தே தீர வேண்டும் என்று போராடுகிறான். இன்னொருபுறம் நடக்கிற விஷயங்களுக்கு விஞ்ஞான ரீதியாக விடை கண்டுபிடிக்க முயலும் ஜெயதேவுக்கு அதற்கான விடை கிடைக்கிறது. துளசியின் உடலில் தாயத்து வடிவில் கட்டப்பட்ட எலக்ட்ரானிக் டிவைஸ்தான் காரணம் என்று அறியும் அவர் அதன் மூலம் செயல்படுபவனை கண்டுபிடித்து அழிக்க முற்படுகிறார். இந்த இருவழிப் போராட்டத்தின் முடிவில் குழந்தை துளசி பிழைத்தாளா, நடந்தவை அனைத்தும் விஞ்ஞானமா, பைசாசமா? என்கிற (சுவாரஸ்ய) புதிர்களுக்கு விடையை புத்தகம் தரும்.

நூலாசிரியர் பற்றிய தகவல்கள் :


நூலாசிரியர் எண்டமூரி வீரேந்திரநாத் அடிப்படையில் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். ஆந்திரா வங்கியில் உயரதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர் ஒரு கட்டத்தில் (நம்ம ராஜேஷ்குமார் போல) முழுநேர எழுத்தாளராகி விட்டார். பைசாசம், விஞ்ஞானம், சமூகம், த்ரில்லர், ஜேம்ஸ்பாண்ட் கதை, சுயமுன்னேற்றக் கட்டுரைகள் என்று எழுத்தில் எந்த ஏரியாவையும் விட்டு வைக்காதவர் இவர். ஒரு சமயம் என்.டி.ராமராவுக்குப் பிறகு இரண்டாவது பிரபலம் என்று (1982)ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜனரஞ்சகமாக எழுத்தைக் கைக்கொணடிருபபவர் என்றாலும் சாகித்திய அகாடமி விருதும் பெற்ற வல்லமையுடையது இவர் எழுத்து. இவர் சினிமாவும் இயக்கியிருக்கிறார். சினிமா வசனத்திற்கான ஜனாதிபதி விருதும், தொலைக்காட்சித் தொடருக்கான கோல்டன் நந்தி விருதையும் வென்றிருக்கிறார். இவரின் ‘வெற்றிக்கு ஐந்து படிகள்’ என்ற சுயமுன்னேற்ற நூல் தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான சாதனை படைத்துள்ளது.

விஞ்ஞானமா, பைசாசமா என்கிற கேள்வியை எழுப்பிய ஒரு பரபரப்பு த்ரில்லரை நம்ம சுஜாதா ‘கொலையுதிர் காலம்’ ஆக எழுதியிருக்கிறார். தமிழில் சுஜாதா கையாண்ட விஷயம் ஒருவிதமான சுவாரஸ்யம் என்றால் இந்த ஆந்திர சுஜாதா வேறு ஒரு கோணத்தில் அதைக் கையாண்டு அசத்துகிறார். ஆயின் இரு எழுத்தாளர்களுமே கடைசியில் எதனால் குற்றம் நிகழ்ந்தது என்பதற்கான விளக்கத்தை வாசகர்கள் அவரவர் மனப்போக்கின்படி தீர்மானிக்கட்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக செயல்பட்டிருக்கிறார்கள்.

‘துளசிதளம்’ கதையில் ஒருபுறம் 1ம் நாள், 2ம் நாள் என்று துவங்கி 21ம் நாள் வரவும் ஸ்ரீதர் மகளுக்காகப் போராடுவதை மணிக் கணக்காக நம் முன் விவரித்து, இங்கே அதேபோல ஜெயதேவ் போராடுவதையும் மணி, நிமிட சுத்தமக விவரித்து, மூன்றாவது ட்ராக்காக எப்படி புத்திசாலித்தனமாக மாரியை நாராயணன் கொல்கிறான் என்பதை விவரித்து, மும்முனை சுவாரஸ்யத்தில் டோட்டலாக படிப்பவருக்கு பி.பி.யை எகிற வைத்து விடுகிறார் எ.மூ.வீ.நாத். ‘கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத நாவல்’ என்கிற வாசகத்தை பெயரளவுக்குச் சொல்லாமல் அசலாக மெய்ப்பிக்கும் புத்தகம்.

இதில் என்னைக் கவர்ந்த அம்சம் என்னவெனில்... நூலாசிரியர் தரும் தகவல்கள். பூத, பைசாச வித்தைகள் மூலம் சிறுமியை அழிக்க முற்படுகிறார்கள் எனில், அதற்காக மந்திரவாதிகள் மேற்கொள்ள வேண்டிய நியமங்கள், கஷ்டங்கள் போன்ற விவரங்களை ஏதோ மந்திரவாதிகளுடன் பலஆண்டு பழகியவர் போல அள்ளித் தந்திருக்கிறார். அதேசமயம், விஞ்ஞான ரீதியாக வேறொரு இடத்திலிருந்து குழந்தையை மெஸ்மெரிசம் செய்து எப்படி அட்டாக் பண்ண முடியும் என்பதற்கான விளக்கம் (படமே போட்டு) தெளிவாகத் தந்திருக்கிறார். அசத்துகிறது அந்த உழைப்பு!

இந்தக் கதை தொடராக வெளிவந்த காலத்தில் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டதாம். எந்த அளவுக்கு என்றால்... யாராவது சாதாரணமாக உடம்பு முடியாமல் படுத்தால் கூட ‘எனக்கு சூனியம் வெச்சுட்டாங்க’ என்று பயந்து நடுங்கும் அளவுக்கு. ஆசிரியருக்கு நிறைய மிரட்டல்களும், வினோத பார்சல்களும் வந்தனவாம். இத்தனைக்கும் பின்னர் ‘பதினோரு ஆண்டுகளுக்குப் பின் காஷ்மோரா மீண்டும் விழித்துக் கொள்வதோடு அடுத்த நாவலான மீண்டும் துளசி துவங்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். (நல்லவேளை... அந்த இரண்டாம் பாகத்தையும் வாங்கிவந்து விட்டேன்.) அதைப் படிக்க நான் புறப்படுகிறேன். இதுவரை துளசிதளம் படிக்காதவர் நீங்கள் எனில், உடனே அதைத் தேடிப் பிடித்துப் படிக்கப் புறப்படுங்கள்!

நூலின் பெயர் : துளசிதளம், பக்கங்கள் : 368, விலை : ரூ.160, வெளியிட்டோர்: அல்லயன்ஸ் கம்பெனி, ப.எண்.244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை&14, தொ.பே: 24641314, இணையம்: www.alliancebook.com