Sunday, June 29, 2014

மரகதலிங்கம்!

படைப்பாக்கம் : ஆதி வெங்கட்

மீபத்தில் வந்த எங்களின் 12வது திருமணநாளுக்கு என்னவரிடம் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் சில புத்தகங்களை வாங்கித் தர சொன்னேன். அவரும் உடனேயே ஆன்லைன் புக்கிங் மூலம் புத்தகங்களை தருவித்து பரிசளித்தார். அதில் ஒன்று தான் இந்த மரகதலிங்கம்.

து ஒரு ஆன்மீக மர்ம நாவல். ”என்னுரையில்” திரு இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள் தனக்கு மிக மிக திருப்தி தந்த நாவல் என்று குறிப்பிடுகிறார். மேலும் ”ஆன்மீகம் சார்ந்த இறை நம்பிக்கை நமக்குள் பலகேள்விகளை உடையது. எனக்குத் தெரிந்து  தெளிவான ஆன்மீக எண்ணம் உடையவர்கள் மிகமிகமிகக் குறைவு. குழப்பமான கேள்விகளோடு, அரைகுறை நம்பிக்கையோடு தான் நமது ஆன்மீகம் உள்ளது. சான்றோர் உலகமும் தெளிவாய், பொட்டில் அடித்த மாதிரி பதில் கூறியதில்லை. பல ஆன்மீக விளக்கங்கள் பாதிபுரியும், பாதிபுரியாது. இதுதான் இன்றைய ஆன்மீக நிலை. நான் என் நாவல்களில் இந்த நிலையை மாற்ற முயல்பவன்” என்கிறார்.


”லிங்கங்களில் இருவிதம் உண்டு. ஒன்று சுயம்பு, இன்னொன்று மானுடர்கள், தேவர்கள் உருவாக்கியவை. சுயம்பு என்றால் தானாக தோன்றியவை. மற்றவை உருவாக்கப்பட்டவை. இதில் மரகதலிங்கம் நவரத்ன லிங்கங்களின் தொகுப்பில் வருவது. இதை வழிபட்டால் தீராத நோயும் தீரும்.”

சிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது. புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை தொடர்ந்து ஒரு மண்டல காலம் உச்சி வேளையின் போது அதன்மேல் சூரியஒளிபடும்போது வணங்கியவர்கள் எல்லோருமே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் இன்று அந்த மரகதலிங்கம்……?

இப்படித்தான் இந்த கதை துவங்குகிறது. ஒருகாலத்தில் பசுமையாக இருந்த சிவன்குடி கிராமம், இன்று வறட்சியுடன் மொத்தமே பத்து மனிதர்களுடன் சுடுகாடாக காணப்படுகிறது. அந்த ஊருக்கு பாண்டியராஜன் என்பவன் வெளிநாட்டிலிருந்து வருகிறான். கோயிலுக்கு சென்று புதர் மண்டிக் கிடக்கும் அவலநிலையைக் காண்கிறான். குருக்களை கண்டு தன் தந்தையின் விருப்பமாக இடிபடும் நிலையில் உள்ள சிவன் கோயிலை புனரமைக்கும் எண்ணத்தை வெளியிடுகிறான். ஆனால் குருக்களோ இப்படி வந்தவர்கள் எவரும் உயிரோடு ஊர் திரும்பியதில்லை, என்று லிங்கம் களவு போனதோ, அதோடு ஊரும் சுடுகாடாகி போய்விட்டது. கடவுளின் கோபம் குறையவில்லை. அதனால் உடனேயே இங்கிருந்து கிளம்பி விடு என்கிறார். ஆனால்… பாண்டியராஜனோ பிடிவாதம் பிடிக்க, அவனை ஒரு கருநாகம் தீண்டி விடுகிறது…….

பல வருடங்களுக்கு முன்னால் கஜேந்திர பாண்டியன் என்பவனும், கோட்டை முத்துவும் சிவன்குடி மரகதலிங்கத்தின் மேல் கண் வைத்து பத்து கோடிக்கு வெளிநாட்டில் விற்க ஏற்பாடு செய்து களவாடி விடுகின்றனர். இதற்கிடையே இவர்கள் இருவருக்கும் பண விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு, லிங்கம் பாம்பு புற்றில் தஞ்சமடைகிறது. திருடிய கஜேந்திர பாண்டியன் கருநாகம் தீண்டி லிங்கம் புற்றில் இருக்கும் உண்மையை கோட்டைமுத்துவிடம் சொல்லாமலே இறந்து விடுகிறான். திருடச் சொன்ன கோட்டை முத்துவுக்கு தொழுநோய் வந்து அது அவனது மகனுக்கும் தொடர்கிறது.

மரகதலிங்கம் புற்றில் இருந்து மீண்டதா? பாண்டியராஜன் கோவிலை சீரமைத்தானா? சிவன்குடி சுடுகாடாகி போனதற்கு கடவுளின் கோபம் தான் காரணமா? அல்லது மனிதர்களின் சதி வேலையாக இருக்குமா? போன்ற உங்கள் எல்லாம் கேள்விகளுக்குமான விடை மரகதலிங்கம் புத்தகத்தில்…

இந்த புத்தகத்திலேயே ”உச்சியிலே” என்ற மர்ம நாவலும், ஓசைப்படாமல் ஒரு கொலை என்று ஒரு குறுநாவலும் இருக்கிறது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த புத்தகத்தை எடுத்தால் முடிக்கும் வரை கீழே வைக்க தோன்றவில்லை.

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

திருமகள் நிலையம், சுகான்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்,பழைய எண்: 28 புது எண்: 13, சிவப்பிரகாசம் சாலை, தி.நகர், சென்னை – 600017. தொலைபேசி: 24342899, 24327696.
நான்காம் பதிப்பான டிசம்பர் 2011 படி இதன் விலை – ரூ 70.
மொத்த பக்கங்கள் - 152.

Tuesday, June 17, 2014

புறாக்கள் மறைந்த இரவு - பழநி பாரதி


பேஸ் புக்கின் மூலமாக அனைவரும் கவிஞர்களாக உருமாறி வரும் வேளையில் ஒரு நல்ல கவிதை நூலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். சிறந்த படைப்பாளியும், திரைப்பட பாடல் ஆசிரியருமான திரு. பழநி பாரதி அவர்களின் "புறாக்கள் மறைந்த இரவு" எனும் கவிதை தொகுப்பில் புதைந்திருக்கும் அழுத்தமான, ஆவேசமான சமூக கோபத்தை நூலை வாசிக்கையில் நீங்களும் உணரலாம்!மாய கோவ்ஸ்கி அவர்களின் சிறந்த கருத்தோடு முதல் பக்கம் வரவேற்கிறது, 

"அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் 
அப்போது சாவுமங்கே அழிந்து போகும் 
மிச்சத்தைப் பின் சொல்வேன்"  என்று இரண்டாம் பக்கத்தில் முண்டாசு கவிஞன் நம்மை மிரட்டலுடன் வரவேற்கிறார்!

கீழ்த தட்டு மக்களின் நியாயமான கோபங்களில் தொடங்கி, சுனாமியின் நீ(ள)ல நாக்கையும், கோத்ரா படுகொலையையும், ஈராக் மக்களின் அவல வாழ்வையும் நடு மண்டையில் இறக்குகிறார் எழுத்தாணி கொண்டு. 

"உருகிய தார்ச்சாலையில் 
பதிந்து கிடக்கிறது 
தலைச் சுமையைத் 
தாங்க முடியாமல் நடந்த 
யாரோ ஒருத்தியின் 
பாதச் சுவடு"

இப்படி வெயிலை பற்றி எழுதியிருக்கும் எட்டுக் கவிதைகளும் நம்மை சுய பரிசோதனை செய்ய வைக்கும் வல்லமையை தாங்கி நிற்கிறது!

"வெளியிலிருந்து 
வந்த கிளியை 
வீட்டுக்குள் 
வளர்க்கத் தொடங்கினோம்

அது எங்கள் மொழியைப் 
பேசுவது 
இனியமையாக இருந்தாலும் 
வருத்தம் தான் 
தாய் மொழியை மறந்தது"


"குழந்தை இல்லாதவளின் 
இரவை 
மேலும் இருட்டாக்குகிறது 
நடுநிசிப் பூனைகளின் 
குழந்தைக் குரல்"

இப்படி சின்ன சின்ன கவிதைகள் சொல்லும் வலிகளும், வாழ்க்கையின் இரணங்களும் ஏராளமாக இருக்கிறது. புத்தகத்தை திறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக வாசித்து முடித்துவிடலாம். ஆனால் இப்புத்தகம் தரும் சுமையை இறக்கி வைப்பது என்பது கடினம் தான், அந்த அளவுக்கு அழுத்தமான கருத்துக்கள் நிரம்பிய இந்த "புறாக்கள் மறைந்த இரவை" வாய்ப்பு கிடைக்கும் போது வாங்கி வாசித்து விடுங்கள்.

குமரன் பதிப்பகம் 
19, கண்ணதாசன் தெரு, தி. நகர் ,
சென்னை - 17. 
இரண்டாம் பதிப்பு : 2008 டிசம்பர் 

பக்கங்கள் - 72
விலை : ரூ. 50/-

படைப்பாக்கம்: அரசன் 
http://karaiseraaalai.blogspot.in/

  

Sunday, June 15, 2014

கோபல்ல கிராமம்- இனிமையான மனிதர்களின் இருப்பிடம்!
நான் நிச்சயம் புத்தகங்களை மெதுவாக வாசிப்பவன் அல்ல. முன்னூறு பக்க நாவல்களை இரண்டு அல்லது மூன்று நாட்களில் முழுதும் படிக்கக் கூடும் என்னால். ஆயினும் இந்தப் புத்தகத்தை கடந்த இரண்டரை மாதங்களாய் படித்த்த்த்த்த்த்துக் கொண்டே இருந்தேன். காரணம் இதில் ஆசிரியர் கி.ரா சுத்தத் தமிழையும் சுந்தரத் தெலுங்கையும் கையாண்டிருக்கும் அழகு, ஒவ்வொரு பக்கத்தையும் இரண்டு மூன்று முறை மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டியது. பொதுவாக கதையில் அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ளவே நமக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் இதில் நமக்கு படித்தவற்றை திரும்பப் படித்து அசை போட மனம் ஏங்கும். ஒரு சின்ன எடுத்துக் காட்டு இங்கே..          "அவள் அபூர்வமாகத் தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொருதரம் அப்படிச் சிரிக்கமாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பிலே தான் எத்தனை விதம்?

            கண்களால் மட்டும் சிரித்துக் காட்டுவது. 

            கண்கள் சிரிப்பதற்கு புருவங்கள் அப்படி ஒத்துழைக்கும்! கடைக்கண்ணால் சிரிப்பது.

            முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் நேர்பார்வையில் சிரிப்பது. தரையை பார்த்து சிரிப்பது. (அவளுடைய சிரிப்பிலேயே இதுதான் அழகு.) கண்களை சுற்றி பறவையாடவிட்டு - ஒரு சிரிப்பைக் காட்டுவாள். (அப்போது கண்கள் ஜொலிக்கும்) சில சமயம், சற்றே மூக்கை மட்டும் விரித்து மூக்கிலும் ஒரு சிரிப்பை  வரவழைப்பாள் !

             அவளுடைய மூக்கில் தொங்கும் புல்லாக்கின் கீழ் ஒரு முத்து தொங்கும். பற்கள் மின்ன அவள் சிரிக்கும் போதெல்லாம் அந்த முத்துக்கும் பற்களுக்கும் போட்டிதான்! புல்லக்கில் அப்படி ஒரு முத்தைக் கோர்த்து, பற்களுக்கு நேராய்த் தொங்க விடணும் என்று ஒரு ஆசாரிக்குத் தோணிருக்கே, அது எப்பேர்ப்பட்ட ரசனை !
                           

             இப்படி கதையில் வரும் கோபல்ல கிராமத்து கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் விவரிக்கும் பாங்கே தனி. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களைப் பற்றிய விவரணைகள் இருந்த போதும் சிறிதும் சலிக்காமல் நமக்கு படிக்கத் தோன்றும். மேலே சொன்னது சென்னா தேவி எனும் அழகு தேவதையை பற்றியது. அதேபோல்  அந்த கோட்டையார் குடும்பத்தின் ஒவ்வொரு நபரும் நமக்கு பரிச்சையமானவர் ஆகின்றனர். வாசிக்கும் யாவர்க்கும் ஒரு இனிமையான அனுபவத்தை கொடுத்த இந்த கதையை எழுதிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் படித்தது வெறும் எட்டாம் வகுப்பே என்பதை அறிந்த போது ஆசிரியரின் ஞானமும், 'அந்தக்கால' எட்டாம் கிளாஸின் மகத்துவமும் புரிந்தது. 

             ஆந்திராவில் வாழ்ந்து வந்த மக்களில் ஒரு பிரிவினருக்கு அவர்கள் வீட்டுப் பெண்டிருக்கு  சிலரால் (துலுக்க ராஜா என்று குறிப்பிடப் படுகிறது, எந்த மன்னர் என்று குறிப்பிடப்படவில்லை.) தொல்லைகள் வருகிறது.. அவரின் படைகளிடமிருந்து தப்பிக்க குடும்பத்தோடு புலம்பெயர்கிறார்கள். அப்போது அவர்கள் வாழ ஏதுவாய் தோன்றும் ஒரு பள்ளத்தில் அமைகிறார்கள். அருகே இருக்கும் காட்டை அழித்து வசிப்பதற்கு ஏற்ற இடமாய் மாற்றி பசுக்கள் நிறைந்த ஊராதலால் அதை கோபல்லபுரம் என்றே பெயரிடுகிறார்கள். ஊரின் வசதியான குடும்பமாய் பார்க்கப் படும் கோட்டையார் குடும்பம் மற்ற மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவ்வூரில் ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கின்றனர். நன்றாக வாழ்ந்து வரும் அவ்வூருக்கு இயற்கையால் சில சீற்றங்களும், ஆங்கிலேயரால் சில மாற்றங்களும் ஏற்படுகிறது. அவற்றை அம்மக்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே கோபல்ல கிராமத்தின் கதை.

              கோபல்ல கிராமம் என்னைப் பொறுத்தவரை ஒரு கதையின் ஆரம்பம் போலவே இருந்தது.. அறிமுகங்களே முக்கால் பகுதி புத்தகத்தை ஆக்கிரமித்துவிட விறுவிறுப்பாய் செல்லும் கதைக்கு தொடரும் போட்டு விட்டது போன்ற ஒரு உணர்வு. இதன் தொடர்ச்சி கோபல்லபுர மக்களில் சொல்லப் பட்டிருக்கலாம். மொத்தத்தில் சிவாஜி நடித்த ஒரு நல்ல குடும்பப் படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது. ஆயினும் நமக்கு அடுத்து வரும் தலைமுறையினர் இதுபோன்ற வரலாற்றை பதிவு செய்யும் கதைகளை ஆர்வத்துடன் படிப்பார்களா என்பது ஐயத்துக்குரிய கேள்வியே..!


பி.கு:  எனக்கு முதல் முறை படித்தவுடன் பிடித்து போன பல கதைகளில் இதுவும் ஒன்று. தவிர இதைப் படித்து முடித்தவுடன் சில எழுத்தாளர்கள் ஏன் சுஜாதா அவர்களை "இலக்கியவாதி" என்ற வகையில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் புரிவது போல் இருந்தது..
நூலின் பெயர்   :    கோபல்ல கிராமம் 
ஆசிரியர்           :    கி.ராஜநாராயணன்  
பக்கங்கள்          :    200
 விலை              :    ரூ. 150
வெளியிட்டோர் :   காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
                                 669 கே.பி. சாலை,
                                 நாகர்கோவில்  - 629 001
                                 91-4652 278525
Wednesday, June 11, 2014

கல்லுக்குள் ஈரம் --ர.சு.நல்லபெருமாள்

படைப்பாக்கம் : கீதா சாம்பசிவம்

                    திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திரு நல்லபெருமாளின் நாவல்கள் அநேகமாய்ப் படித்திருக்கிறேன்.  இவற்றிலே 'போராட்டங்கள்'  நாவலும், 'கல்லுக்குள் ஈரம்' நாவலும் மிகவும் பெயர் பெற்றவை.  போராட்டங்கள் கம்யூனிஸ்ட்கள் குறித்த ஒரு அலசல் என்றால் கல்லுக்குள் ஈரம் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் குறித்த ஒரு கதை.  இது அறுபதுகளில் கல்கி வெள்ளிவிழா நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருந்தது.  முதல் பரிசுக்கே தகுதி வாய்ந்தது தான் என்றாலும் இரண்டாம் பரிசு தான் கொடுத்திருந்தார்கள்.  மூன்றாம் பரிசு மணக்கோலம் என்னும் பிவிஆர் நாவலுக்குக் கிடைத்திருந்தது.  முதல் பரிசு உமாசந்திரனின் முள்ளும் மலரும் கதைக்குக் கிடைத்திருந்தது.  வேடிக்கை என்னவெனில் மூன்றிலுமே கதாநாயகி தான் தியாகங்கள் செய்திருப்பாள்.

                     இந்த நாவல் சுதந்திரப்போராட்ட வீரனான ரங்கமணி என்னும் இளைஞனைக் குறித்தது. அவன் தந்தையை வெள்ளையர்கள் ரங்கமணியின் கண்ணெதிரேயே அடித்துக் கொல்கின்றனர்.  அதைப்பார்க்கும் ரங்கமணியின் இதயம் கல்லாக மாறி விடுகிறது.  வ.உ.சி.யின் நெருங்கிய நண்பராக இருந்த ரங்கமணியின் தந்தை கொல்லப்பட்டதும் பழிவாங்க வேண்டும் என்னும் வெறி அவனிடம் அதிகமாக ஆகிறது.  சிறுவனான அவன் மனதை மாற்ற குடும்ப நண்பர் தீக்ஷிதர் காந்தியிடம் அழைத்துச் செல்கிறார்.  ஆனாலும் ரங்கமணி மனம் மாறவில்லை.  காந்தி அவனுக்குப் பரிசாகக் கொடுத்த ஏசுபிரான் சிலுவையில் இருக்கும் விக்ரஹத்தை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறான். சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரங்கமணி விடுதலைப்போரில் தீவிரமாகக் கலந்து கொள்ள வேண்டி படிப்பை விட்டுவிட்டு தீவிரவாதக் கும்பலில் சேர்கிறான்.  ரங்கமணியின் கல்லான இதயத்தில் எப்படி ஈரம் கசிந்தது என்பதே கதை. 

                        ஏற்கெனவே தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்தக் கும்பலின் சதிவேலைகள் ஆறுதலைத் தந்தன.  ஆனால் யார் தலைமையில் அவன் இந்தக் கும்பலின் உறுப்பினராக ஆனானோ அந்தத் தலைவரின் மகள் ஒரு அஹிம்சாவாதி.  திரிவேணி என்னும் பெயருள்ள அந்தப் பெண் சத்தியாகிரகியும் கூட. அவள் பேச்சுக்குத் திருநெல்வேலியே கட்டுப்படும். போலீஸாரைக் கூடத் தன் அஹிம்சாப் பேச்சால் தன் வயப்படுத்தி இருந்த திரிவேணி, ரங்கமணியிடம் மட்டும் தோற்றுத் தான் போனாள்.  அவனுள் ஏதோ இனம் புரியாத சோகமும், தீவிரவாதப் பற்றையும் கண்டு அவனை காந்தியைச் சந்திக்கும்படி வற்புறுத்துகிறாள்.  ஆனால் ரங்கமணிக்கோ தன் மேலேயே சந்தேகம்.  திரிவேணியின் அஹிம்சாவாதம் எங்கே தன்னையும் மாற்றிவிடுமோ எனக் கலங்குகிறான்.  மெல்ல மெல்ல திரிவேணி அவனை ஈர்க்கிறாள். ஆனால் ரங்கமணியின் மனமோ!!!  ஏற்கெனவே காதலில் ஈடுபட்டு அதில் தோல்வி கண்டு, பிரிவு ஏற்பட்டு மீண்டும் காதலியைக் காணமாட்டோமா என ஏங்கும் ரங்கமணி.  ஆனால் இப்போதோ காதலியை நினைக்கையிலேயே திரிவேணியும் கூடவே வருகிறாள். ஏற்கெனவே அஹிம்சாவாதத்திலும், தீவிரவாதத்திலும் சிக்கிக் கொண்டு தவிக்கும் ரங்கமணிக்கு இந்தப் போராட்டமும் புதுமையாக இருக்கிறது.  தன் காதலியை விட திரிவேணி தன் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டதை உணர்கிறான்.

                 கதையில் வரும் கமலவாசகியின் திமிரும், ஆங்காரமும், பழி வாங்கும் உணர்ச்சியும் திகைக்க வைத்தாலும் போகப் போகக் காரணம் புரிகிறது. ஆனாலும் அவள் பழிவாங்கும் உணர்வு கடைசி வரை அடங்கவே இல்லை.. ஒரு உயிர் போயும் அதிலும் மகிழ்ச்சியைக் காட்டுபவள் பின்னர் மனம் மாறுகிறாள். இந்தக் கமலவாசகி யார் என்பதைத் தெரிந்தால் நமக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது.  இவளால் ரங்கமணியின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் அவனைத் தீவிரவாதத்தில் இருந்து சிறிதும் விலக்கவில்லை. திரிவேணியின் தியாகமே அவனை மனம் மாற வைக்கிறது.   திரிவேணியின் அஹிம்சாவாதத்தில் உள்ளூர மனம் ஈர்க்கப்பட்ட ரங்கமணி தீவிரவாதத்துக்கும், அஹிம்சாவாதத்துக்கும் இடையில் போராடுகிறான்.  

                  காந்தியைச் சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவ விடுகிறான்.  கடைசியில் மனம்மாறி காந்தியைச் சந்திக்கச் சென்றபோது அதுவே கடைசி சந்திப்பாக ஆகிறது.  ரங்கமணியின் கண்ணெதிரே காந்தி சுடப்படுகிறார். காந்தி சிறுவயதில் தனக்கு அளித்த சிலுவை விக்ரஹத்தைக் கையில் வைத்திருந்த ரங்கமணி காந்தியைத் தாங்கும்போது அந்தச் சிலுவையும் ரத்தத்தால் குளிப்பாட்டப்படுகிறது.  கல்லான ரங்கமணியின் இதயமும் நெகிழ்ந்து மெல்ல மெல்ல ஈரத்தைக் கசிய விடுகிறது. 

                  கிட்டத்தட்ட 720 பக்கங்கள்! கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வராது.  ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மீண்டும் படிக்கையில் கூட ஒவ்வொரு சமயமும் புதுப்புது உணர்வுகள்.  சுதந்திரப் போராட்ட வரலாற்றை வரலாற்றில் இடம் பெற்ற மனிதர்களும் நடமாடிய காலத்தோடு பின்னிப் பிணைந்து எழுதுவது கடினம்.  ர.சு.நல்லபெருமாள் அதைச் சாதித்திருக்கிறார்.  சுதந்திரப் போராட்டம் குறித்து அதிகம் அறியாத இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். முதல் பதிப்பு கதை வெளிவந்த சில ஆண்டுகளீலேயே 1969 ஆம் ஆண்டே வந்திருக்கிறது.  என்னிடம் இருப்பது ஐந்தாம் பதிப்பு 2005 ஆம் ஆண்டு வந்தது.

வானதி பதிப்பகம் வெளியிடு.
விலை 230ரூபாய் (2005-ஆம் ஆண்டில்)

Sunday, June 8, 2014

இன்னும் பிறக்காத தலைமுறைக்கு - தியோடார் பாஸ்கரன்

படைப்பாக்கம் : சசிகுமார் 


வன உயிரியலாளரும் திரைப்பட ஆராய்ச்சியாளருமான திரு. தியோடார் பாஸ்கரன் எழுதிய இன்னும் பிறக்காத தலைமுறைக்கு எனும் அரிய புத்தகத்தை வாசித்தேன். காட்டுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.முதலில் காட்டுயிர்களை பேண வேண்டிய அவசியம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. உணவு சங்கிலியில் வன விலங்குகளின் பங்களிப்பு மற்றும் அவை அழிக்கப்படுவதால் ஏற்ப்படும் விளைவுகள் பற்றியும் அறிய முடிந்தது. இன்று அழிவின் விளிம்பில் உள்ள சிங்கவால் குரங்கு ,கருமந்தி ,வரையாடு ,வெளிமான் , இருவாசி மற்றும் கானாங்கோழி போன்ற உயிர்களை பற்றியும் அவற்றை அழிவிலிருந்து காக்கவேண்டிய அவசியத்தையும் அறிய முடிந்தது

சாம்பல் தலை ஈப்பிடிப்பன்

வனங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதாலும் , உணவு மற்றும் பிற தேவைக்காக வேட்டையாடப்படுவதாலும் இன்று தமிழகத்தில் சிவிங்கி புலி ,வரகுக் கோழி ,உப்பு நீர் முதலை போன்ற உயிரினங்கள் இருந்த சுவடே தெரியாமல் அழிந்து விட்டன. வேட்டையாடுதல் வீரத்தில் அடையாளமாக கருதப்பட்டதால் அதிகப்படியான அழிவை சந்தித்த புலிகள் பற்றியும் அதன் குணநலன்கள் பற்றியும் உல்லாஸ் கரந்த் கள ஆய்வு செய்து எழுதிய பல அரிய தகவல்களை அறிய முடிந்தது.புலிகளின் எண்ணிக்கையை அதன் கால்தடங்களை வைத்து கணக்கிடுவதால் துல்லியமாக கணிக்க முடியாது என கரந்த்இன் ஆய்வு சொல்கிறது. இன்று புலிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் எத்தனை உயிரோடு இன்னுமும் இருக்கின்றன என்பது தெரியவில்லை . இன்னும் புலிகள் பல்வேறு விதமாக கொல்லப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன .

சிங்கங்களின் நிலை இன்னுமும் பரிதாபகரமானது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் இருந்த சிங்கங்கள் இன்று குஜராத் மாநிலத்தின் கிர் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. ஒருவேளை நோய்தொற்று ஏற்பட்டால் மொத்த சிங்க இனமும் இந்தியாவில் அழிந்தே போய்விடும் அதேபோல் பல்வேறு வகையான காண்டாமிருகங்கள் வாழ்ந்த காடுகளில் இன்று ஒற்றை கொம்பன் காண்டாமிருகம் மட்டும் வாழ்கிறது (அஸ்ஸாம் மாநிலத்தில் காசிரங்கா சரணாலயம் காண்டாமிருகத்துக்கு பெயர்போனது )

அலங்கு

தமிழக சரணாலயங்களில் காணப்படும் பல்வேறு வகையான உயிரினங்கள் பற்றி அறிய முடிந்தது . இந்திய எறும்புதின்னி(Ant Eater ) என அழைக்கப்படும் உயிரினத்தின் பெயர் 'அலங்கு ' என்பதை அறிய முடிந்தது . மேலும் டால்பினின் தமிழ் பெயர் ஓங்கில் என்றும் தெரிந்து கொண்டேன் தமிழகத்தில் கிராமப்புற மக்களிடம் இருந்த உயிரினங்கள் சார்ந்த அறிவு சரியாக பதியப்படவில்லை. இதனால் நம் பாரம்பரிய உயிரினங்களின் பெயர்கள் மற்றும் அது சார்ந்த தகவல்கள் கிடைக்க பெறாமல் போய்விட்டது . தமிழில் உயிரியல் துறைசார்ந்த வார்த்தைகள் உருவாக்கப்படாததால் பல அரிய நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில்லை. மேலும் நம்மிடம் முறையான வகைப்பாட்டியல் (Taxonomy ) இல்லாததால் உயினங்களை இன ரீதியாக புரிந்து கொள்ள முடிவதில்லை போன்ற பல்வேறு இடர்ப்பாடுகளையும் பாஸ்கரன் தெளிவாக கூறுகிறார் தமிழகத்தில் வனஉயிரியல் குறித்து கள ஆய்வு செய்பவர்கள் பற்றியும் அரிய முடிகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் பல்வேறு வகையான ஆமைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பற்றி அறிய முடிந்தது . மேலும் இரலை ,கானமயில் போன்ற பல உயிரினங்களை அரிய முடிந்தது. 

இருவாசி

சுற்றுசூழியல் என்பது வன உயிரினங்களின் வாழ்க்கையை பெருமளவு பாதிக்கிறது. இன்றைய காடுகள் அழிப்பு தான் யானைகள் விளைநிலங்களை நாசப்படுத்துவதர்க்கும் மற்ற உயிரினங்கள் உணவு தேடி ஊருக்குள் புகவும் காரணமாகிறது . தமிழகத்தில் மலைபகுதிகளில் காணப்பட்ட அலையாத்தி காடுகள்(மாங்குரோவ் காடுகள் ) அழிக்கப்பட்டதன் காரணமாக மழைநீர் பிடிப்பு குறைந்து, இன்று ஆறுகளும் ஓடைகளும் வெற்று மணலுடன் காட்சி அளிக்கின்றன.சுற்றுசூழியல் சமன்பாடு நிலைபெற நாட்டில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் வேண்டும். ஆனால் நம் நாட்டில் இப்பொழுது இருப்பது வெறும் 17% காடுகள் தான்.

காடுகள் அழிப்பை வெள்ளையர்கள் தங்கள் நாட்டின் தேவைக்காக துவங்கி வைத்தனர். விடுதலை அடைந்த பின்னரும் காடுகள் அழிப்பு பெருமளவில் நடைபெற்றது . பெரிய கட்டிடங்கள் கட்டவும் காகித தொழிற்சாலைகள் அமைக்க ,தேயிலை தோட்டங்கள் அமைக்க என பல்வேறு விதங்களில் காடுகள் அழிக்கப்பட்டன பசுமை மாறா காடுகள் மற்றும் அலையாத்தி காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டு இன்று மிக குறைந்த அளவில் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டில் காட்டுயிர் குறித்த விழிப்புணர்வும் ,காட்டுயிர் குறித்த அக்கறையில் ஊடகங்களின் பங்கும் மிக சொற்பம் .மரம் வளர்ப்பு எனும் பெயரில் தோல் பதனிடும் தொழிற்சாலைக்காக நடப்படும் சீகை மரங்களும் செயற்கை நூலிழைக்காக நடப்படும் தைல மரங்களும் சுற்றுசூழலை பாதிப்பதோடு மற்ற மரங்களின் வளர்ச்சியையும் தடுக்கின்றன வேட்டையாடிகளால் புனையப்பட்ட வேட்டை இலக்கியம் எனும் வாசிப்பையும் தெரிந்து கொள்ள முடிந்தது . இந்தியாவில் ஜிம் கார்பெட் எனும் ஆங்கிலேயர் தான் வேட்டை இலக்கியத்தின் தந்தையாக போற்றப்படுகிறார் . இந்தியாவில் அவர் கொன்று குவித்த மிருகங்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவரது நூல்கள் இங்கிலாந்தில் பெரிய வரவேற்ப்பை பெற்றவையாம்.

கடைசி பகுதி இந்திய காட்டுயிர் ஆய்வு மற்றும் களப்பணி செய்து தங்கள்
பங்களிப்பை கொடுத்தவர்கள் பற்றி இருந்தது அதில் ஆலன் அக்டேவியன் ஹியும் (இந்த பேரு எங்கயோ கேட்ட மாறி இருக்க ?? யோசிச்சு சொல்லுங்க பாப்போம் ) இந்திய வரலாற்றில் முக்கியமானவர் என தெரியும் ஆனால் இந்திய காட்டுயிர் ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. இந்தியா முழுவதும் சுற்றுபயணம் செய்து பல்வேறு உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் பற்றிய அரிய செய்திகளை உலகிற்கு சொன்னவர் 

வேட்டையாடிகளால் உயிரினங்கள் அறியப்பட்ட காலகட்டத்தில் வேட்டையாடுதலை எதிர்த்து களப்பணி மூலம் பல்வேறு வகையான உயிரினங்கள் பற்றி சொன்னவர் திரு மா. கிருஷ்ணன் . இந்திய வனவியல் ஆராய்ச்சியின் முன்னோடியாக கருதப்படுகிறார் அருள்தந்தை பி.கே. மாத்யூ அவர்களின் பங்கு மகத்தானது . பல்வேறு வகையான உயிரினங்கள் மற்றும் தாவரங்களை வகைப்படுத்தி அதன் தமிழ் மூலப்பெயர்கள் குறித்தும் உரிய வகையில் ஆய்வு செய்து இன்னும் பிறக்காத தலைமுறைக்கு பல தகவல்களை விட்டு சென்றவர்.

மிகச்சிறந்த புத்தகம் . பொதுவாக கதை படிக்கும் போது வரும் ஒரு ஆர்வம் கட்டுரை சார்ந்த நூல்களில் வராது . ஆனால் படித்த இரு தினங்களும் ஒரு அபரிவிதமான ஆர்வத்தை ஏற்ப்படுத்திவிட்டது. சமீப காலத்தில் நான் படித்ததில் மிக சிறந்த புத்தகம்

நூல் : இன்னும் பிறக்காத தலைமுறைக்கு 

வகை : காட்டுயிர் மற்றும் சுற்றுசூழியல் சார்ந்த கட்டுரைகள் 

ஆசிரியர் : தியோடார் பாஸ்கரன் 

பதிப்பகம் : உயிர்மை விலை : 120

நன்றி வணக்கம்

வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!

Monday, June 2, 2014

உருமாற்றம் - பிரான்ஸ் காப்கா

படைப்பாக்கம் : டினேஷ்சாந்த்

“நல்ல நூல்கள் நல்ல நண்பர்களுக்கு ஒப்பானவை” என்பார்கள்.உண்மை தான் நல்ல நூல்கள் சுகமான வாசிப்பனுபவத்தைத் தருவதுடன் நாம் அவற்றுடன் செலவழித்த ஒவ்வொரு மணித்துளிக்கும் அர்த்தம் தந்து எம்மை மகிழ்விக்கின்றன. அந்த வகையில் எனக்கு நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தந்த “உருமாற்றம்” என்ற நூலைப் பற்றிய எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.   


   
சில நேரங்களில் காலத்தின் கட்டாயத்தாலோ இல்லை வேறு சில நிர்ப்பந்தங்களாலோ எம் விருப்பத்துக்கு மாறாக செயற்படவேண்டிய ஒருநிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்.எதுவும் செய்ய முடியாத அந்த நிலையில் நாம் ஒரு தத்தி போல் உணர்ந்திருப்போம் அல்லவா? ஆனால் இந்நூலிலோ கதாநாயகனான கிரகர் சேம்சா உண்மையிலேயே அருவருக்கத்தக்க ஒரு பூச்சியாக மாறிவிடுகின்றான்.சேம்சா பூச்சியாக மாறிய பின்னர் அவனது வீட்டில் நடக்கும் சம்பவங்களைத் அவனால் அவனது குடும்பத்தார் படும் கஷ்டங்களையும் சிறப்பாக எடுத்துக் காட்டியிருந்தார் காப்கா.பூச்சியாக மாறிய பின்னர் கிரகர் சேம்சா அனுபவிக்கும் கஷ்டங்களையும் இதன் காரணமாக அவனும் அவனது குடும்பத்தாரும் எதிர்நோக்கும் பிரச்சனைகளை யதார்த்தமான முறையில் நாவலூடாக வெளிப்படுத்துகின்றார் பிரான்ஸ் காப்கா.

உண்மையில் இந்நாவலில் வரும் பூச்சி என்பது ஓர் குறியீடே ஆகும்.தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக பிறரில் தங்கி வாழும் ஒருவரை குறிப்பதாகவே இந்த "பூச்சி" கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் குடும்ப நிலையை எண்ணியே அதிகம் கவலைப்படும் சேம்சாவின் எண்ணங்களை அவன் வாழ்வின் தனிமையும் வெறுமையும் எப்படி மாற்றியமைக்கின்றது என்பதையும் அவன் மீதான குடும்பத்தினரின் அக்கறை குறிப்பாக அவனது தங்கையின் அக்கறை காலத்தோடு மாற்றமடையும் விதத்தையும் காப்கா மிக அழகாக எடுத்துக்காட்டியிருந்தார்.குறிப்பாக நாவலின் முதல் அத்தியாயத்தில் கதவைத் திறப்பதற்கு முதல் சேம்சாவின் எண்ண ஓட்டங்களையும் கதவைத் திறப்பதற்கு அவன் படும் கஷ்டங்களையும் விவரித்த விதம் கலக்கல்.பூச்சி என்ற ஒரு குறியீட்டினூடாக மனித வாழ்வின் ஒரு படிநிலையை,அப் படிநிலையின்  உண்மையான முகத்தை மிகைப்படுத்தலின்றி எமக்கு எடுத்துக்காட்டுகின்றது இந்த “உருமாற்றம்” நாவல்.  
   
கொஞ்சம் சுவாரசியம் குறைந்த நாவலாக இருப்பினும் கதை சொல்லப்பட்ட விதமும் அதனுள் பொதிந்து கிடக்கும் கருத்துகளுக்காகவும் பொட்டில் அறைந்தது போல் சொல்லப்படும் சில உண்மைகளுக்காகவும் இந்த நாவலை இன்னொருமுறை வாசித்தால் என்ன என்றே எனக்கு தோன்றுகின்றது. நாவலின் ஜீவனைச் சிதைக்காமல் மொழிபெயர்த்தமைக்கு மொழிபெயர்ப்பாளர் சிவகுமாரை பாராட்டலாம்.இலக்கிய ரசிகர்களுக்கு இந்நாவல் ஒரு நல்விருந்தாக அமையும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.நாவலை வாசிப்பவர்கள் நாவலுடன் இணைக்கப்பட்டுள்ள பிரம்மராஜனின் “பிரான்ஸ் காப்கா-ஒரு அறிமுகம்” மற்றும் க.நா.சு அவர்கள் எழுதிய “காப்காவும் ஒரு தமிழ் எழுத்தாளரும்” ஆகிய கட்டுரைகளையும் வாசிக்கத் தவறாதீர்கள்.   
  
எனது ரேட்டிங் 4.5/5