Wednesday, February 25, 2015

பிறவாத குழந்தைக்கு ஒரு கடிதம் - திலகவதி


   பிறக்காத குழந்தைக்கு இவள் எதற்காக கடிதம் எழுத வேண்டும் !!, அதுவும் நாவல் நீளத்திற்கு பெரிய கடிதம் !!. மேற்கத்தியக் கலாச்சார வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பே இணை சேர்தல் என்பது மிகச்சாதாரணமாகிவிட்டது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தின் வசத்தால், அசந்தர்ப்பவசமாக அவள் கர்ப்பமாகிறாள், அவளது கர்ப்பத்திற்கு காரணமானவன் அவளை கண்டுகொள்ளாமல்,அவளை கவனித்துக்கொள்ளாமல் அந்த எதிர்பாரா கருவை கலைக்கச் சொல்கிறான், அந்த கரு ஒரு அவசியமற்றது , அவமானகரமானது என்று சொல்லி காணாத இடத்திற்கு மறைகிறான்.

               அவளது வாழ்வுக்கு பொருள் சேர்க்க அவள் பார்க்கும் வேலைக்கு அந்த கரு தேவையற்றது எனவும், இப்போது அவளிருக்கும் நிலையில் அந்த கரு தேவையில்லை எனவும் அலுவலக முதலாளியும் கலைக்கச்சொல்கிறார். கலைக்காமல் காத்து அந்த கருவை குழந்தையாக்கி உலகத்திற்கு தர வேண்டும் , “ஏதுமறியா கருவை நான் ஏன் கொலை செய்ய வேண்டும்” என்று அதை குற்றவுணர்வு சிறிதுமின்றி “ஒரு தாயாக இருக்கறதுங்கறது ஒரு வியாபாரமில்லை, ஒரு கடமை கூட இல்லை, அது பல உரிமைகள்ள ஒண்ணு...” என தன் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையாக மாறக் காத்திருக்கும் அந்த கருவுக்கு தத்துவம் சொல்லியபடி அதை சுமக்க ஆயத்தமாகிறாள்,சுமந்து கொண்டும் திரிகிறாள்.

           அந்த கருவின் வளர்ச்சியோடு சேர்ந்தே கதையும் வளர்கிறது.அவள் டாக்டரிடம் செல்கிறாள், ஸ்கேனிங்க் செய்து கொள்கிறாள், வேலைக்குச் செல்கிறாள் , அவளது மணமாகாத கனவன் அவளோடு பேசுகிறான், ... கதையில் நிகழ்கிற எல்லாவற்றையும் தனது கருவுக்கு கடிதமாக சொல்வது மாதிரியே கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு டயரிக்குறிப்பு மாதிரி அவ்வப்போது தனக்கு தோன்றுவதையெல்லாம் தனக்குள் உருவாகிக்கொண்டிருக்கும் அந்த குழந்தையோடு வார்த்தைகளால் ஊடாடிக்கொண்டே செல்கிறாள். அந்த கரு ஆணா, பெண்ணா என்று தெரிவதற்கு முன்பே , உலகம் எவ்வளவு மோசமானது என்றும்,  பெண்ணாக பிறந்தால் உலகை எவ்விதமாக எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் பயமுறுத்துகிறாள், அல்லது அது ஆணாகப் பிறந்தால் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று கூறி, பெற்றுக்கொள்வதற்கு முன்பே அதை வளர்க்க ஆரம்பிக்கிறாள்.

          “ஒரு ஆணாக இருக்குறதுங்கறது முன்னால ஒரு வாலோட இருக்குறது மட்டுமில்லனு உனக்குச் சொல்ல நான் முயற்சி செய்யறேன்,அது நீ ஒரு ‘நபரா’ இருக்கறதுல இருக்கு என்னைப் பொறுத்த அளவுல நீ ஒரு நபரா இருக்கறதுங்கறது எல்லாத்தையும்விட முக்கியமானது நபர்ங்கறது ஒரு அற்புதமான வார்த்தை, ஏன்னா அதுக்கு ஆண்,பெண் ங்கிற வரையறை இல்ல, வால் இருக்குறவங்களுக்கும், இல்லாதவங்களுக்கும் அது எல்லையை வகுக்கிறதில்ல. இதயத்துக்கும், மூளைக்கும் பாலியல் வேறுபாடு கிடையாது, இதயமும், மூளையும் கொண்ட நபரா நீ இருக்கனும்னா ஆணுன்னும் பொண்ணுன்னும் இருக்கறதால ஒருத்தர் இப்படியிப்படித்தான் இருக்கனும்னு வற்புறுத்துறவங்கள்ள ஒருத்தனா நிச்சயம் நீ இருக்கக் கூடாது...

               என்னை நிராகரித்து விட்டுச்சென்றுவிட்டு உன்னைக் கலைக்கச்சொல்லும் உன் அப்பனை போல அல்லாமல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்கிறாள்.  உலகத்தின் சாலைகள் எப்படிப்பட்ட கரடுமுரடான கற்களாலும், முற்களாலும் ஆனது, அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்கிறாள், பயமுறுதலோடு நின்று கொள்ளாமல் எதற்கும் அஞ்சாமல் தைரியமாக உலகை எதிர்கொள்ள வேண்டும் என தைரியமூட்டுகிறாள். “எனது பேச்சை வேறு யாராவது கேட்டால், எனக்கு கிறுக்கென்று குற்றஞ்சாட்டுவாங்களா” என உங்களுக்குள் அந்தக் கேள்வி தோன்றுவதற்கு முன்பே முந்திக்கொள்கிறாள். தத்துவங்கள் சொல்கிறாள், தன் வாழ்வை கதையாக்கி, அந்த கருவுக்கு சில கதைகள் சொல்கிறாள்.. பேசிக்கொண்டே இருக்கிறாள்.

       இந்த புத்தகத்தில் கடைசி சில பக்கங்களில் வாழ்வின் எதார்ததத்தை, கற்பனைக்கும் நிதர்சனத்திற்குமான வேறுபாட்டை தன் கண்களுக்குத் தெரியும் அந்த குழந்தையிடம் அந்த தாய் பேசுகிறாள், இந்த உரையாடலை இந்த புத்தகத்தின் இதயம் என்று சொல்வேன் நான்., அந்த இதயத்தின் துடிப்புகளை கேட்டவன் என்ற முறையில் சொல்கிறேன், நீங்களும் கூட அந்த துடிப்புகளை கேட்க முடியும். அவள் அந்த குழந்தையைப் பெற்றுக்கொள்வாளா?  அந்த குழந்தை எப்போது பிறக்கும் ?, அதன் அப்பா அவளோடு சேர்வானா ? , என வினாக்களின் விரட்டல்கள் கதையோடு சேர்த்து  நம்மை ஓடச் செய்கின்றன.

        இந்த படைப்பு ஒரு சமூக நாவலா, தத்துவ விளக்க நாவலா, கடிதமா, திரில்லரா, என வகைகளுக்குள் . யோசிக்கிற போது இது ஒரு புதுவித படைப்பாக்கம். இந்நாவல் இத்தாலியப் பெண் எழுத்தாளர் ஓரியானா ஃபெல்லாசி எழுதிய “Lettera a un bambino mai nato” என்ற புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம். பிற பயமுறுத்தும் வார்த்தைக்கோர்வை மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் போலன்றி , இந்நாவலை திலகவதி பேச்சுத்தமிழ் வழக்கில் மிக அழகாக மொழியாக்கம் செய்துள்ளார்.  திருமணத்திற்கு முன்பே கிடைத்துவிட்ட எதிர்பாராத கர்ப்பத்தை சுமந்து திரியும் , பெண்ணிய சிந்தனையுள்ள, வேலைக்குச்செல்லும் ஒரு  பெண் தன் கருவோடு புலம்பும் புலம்பல்கள்.  வலி, வேதனை, ஆழ்மன அலைகளின் ஆழமான பதிவு.

-விஜயன் துரைராஜ் 


சில குறிப்புகள்:

இத்தாலிய மூலம் :              Lettera a un bambino mai nato
படைப்பு:                              Oriana Fallaci (இத்தாலிய எழுத்தாளர்)
இத்தாலிய மூலம் 
பதிப்பிக்கப்பட்ட வருடம்:   1975
தமிழ் மொழியாக்கம் :        திலகவதி 
பதிப்பகம்:                           அம்ருதா, சென்னை

Wednesday, February 18, 2015

மஞ்சள் வெயில் - யூமா.வாசுகிக்கு ஒரு கடிதம்

படைப்பாக்கம் : சீனு 


அன்புள்ள யூமா.வாசுகி 

நலமா? தயவுசெய்து இந்த நலம் விசாரிப்பை மிக மிக மிக எளிதான சம்பிரதாயமான நலம் விசாரிப்பாகக் கருதிவிட வேண்டாம். பொழுது சாய்ந்த கடற்கரையில் அவ்வப்போது நம் கால்களை வருடிச் செல்லும் அலைகளுக்கு மத்தியில் நீங்களும் நானும் நெடுநேரம் கதை பேசிக் கொண்டிருந்தோமே, அப்போது நிகழ்ந்த நட்பின்பால், பாசத்தால் ஆன நலம் விசாரிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். 

யூமா.வாசுகி என்ற உங்கள் பெயரைக் கேள்விப்பட்டபோது, சுஜாதாவை எப்படி ஒரு பெண்ணாக யூகித்திருந்தேனோ அப்படியே உங்களையும் நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் புத்தகத்தின் பின் அட்டையில் ஒரு ஆண்மகனின் படத்தைப் பார்த்ததும் லேசான அதிர்ச்சி. அந்த புகைப்படத்தில் உங்களை எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஒரு ஆணாக.

சென்னையின் வெயில் நிறைந்த ஒரு காலைப் பொழுதில் அரசனின் அறையில் இருந்து கிளம்பும் போதுதான் தற்செயலாக அது நிகழ்ந்தது. நான் தற்செயலை பெரிதும் நம்புபவன். சமயங்களில் தற்செயலினுள் இறைவன் ஒளிந்து கொண்டுள்ளாரோ என்றெல்லாம் கூட யோசிப்பேன். அன்றைக்கு அரசனின் அறைக்கு நான் வண்டியில் சென்றிருக்கவில்லை. அங்கிருந்து மேடவாக்கம் செல்ல எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அந்த நூற்றி இருபது நிமிடங்களையும் வெறுமனே சென்னை மாநகர நெரிசலை வேடிக்கைப் பார்த்தபடி கடப்பதில் உசிதம் இல்லை. அரசனின் அலமாரியில் எதாவாது புத்தகம் சிக்காதா என்று நெடுநேரம் தேடிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட மூன்று நான்கு முறை அலசியிருப்பேன், என்னுடைய அப்போதைய மனநிலைக்குத் தகுந்த எந்தவொரு புத்தகத்தையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இங்கு தான் தற்செயல் உள்ளே நுழைகிறது. மஞ்சள் வெயில் என் கையில் சிக்கியது. அதுவரையிலும் பேசாமல் இருந்த அரசனும் கூட 'தலைவரே செம புக்கு, அவசியம் படிங்க' என்றார். 

மறந்தே போனேன். கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர் இந்தப் புத்தகத்தை வாங்கியபோது நான் உடன் இருந்தேன். அவர் கூறிய வார்த்தைகள் நன்றாக நினைவில் இருக்கின்றன 'இந்த புக்கு எப்படியோ என் கைக்கு வந்தது. படிச்சிட்டு குடுத்துட்டேன். இதெல்லாம் பாதுகாக்க வேண்டிய ரகம் தலைவரே' என்றபடி வாங்கினார். அப்போது கூட அவரிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளவில்லை. அல்லது வேறொரு பொழுதில் அவரோ இல்லை யாரேனுமோ என்னிடம் திணித்திருந்தாலும் கூட வாங்கியிருக்க மாட்டேன். காரணம் எனக்கான இவ்வருட வாசிப்புப் பட்டியல் நிரம்பி வழிகிறது. அதில் புதிய புத்தகங்களுக்கு நிச்சயமாய் இடமில்லை. அதனால் என்னளவில் மஞ்சள் வெயில் தற்செயலே. அந்த தற்செயலுக்கு அநேக நமஸ்காரங்கள். 

பேருந்தில் நமக்காக ஒரு இடம் கிடைத்த போதுதான் மெல்ல என் தோள்களில் கைபோட்டபடி கதை சொல்லத் தொடங்கினீர்கள். சில இடங்களில் நீங்கள் கூறுவது கதையா இல்லை கவிதையா என புரியாமல் விழித்தேன். ஒருவேளை கவிதையைத்தான் கதை போல் மாற்றிவிட்டீர்களோ என்ற ஐயம் கூட எழுந்தது. கேட்கலாம் என்றால் நீங்கள் கதை சொல்வதில் மும்மரமாய் இருந்தீர்கள். நானும் கேட்கும் ஆர்வத்தில் எல்லாவற்றையும் மறந்தேன். உங்கள் அருகில் அமர்ந்தபடி உங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியாய் என்னை பாவித்துக் கொண்டேன். பேருந்து நகர நகர கதையும் நகர்ந்தது.

உண்மையைச் சொல்வதென்றால் மஞ்சள் வெயிலின் ஆரம்பப் பக்கங்கள் எனக்கு பிடிக்கவில்லை. மிக முக்கியமாக உங்கள் கதையின் நாயகனான பிரபாகரை எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குத் தெரிந்த சில பிரபாகர்கள் இருக்கிறார்கள். மனதுக்கு மிக நெருக்கமானவர்கள், அவர்களோடு ஒப்பிடும் போது இந்த பிரபா ஒரு கோழை. வாழத்தெரியாதவன். ஒரு பெண்ணிடம் பேசத் தெரியாதவன். தன் காதலை வெளிபடுத்த தைரியமில்லாதவன். எதற்கெடுத்தாலும் பயந்து சாகிறவன். அவனிடம் இருக்கும் அந்த அதீத கற்பனை என்னை மூச்சு முட்டச் செய்கிறது. எனக்கே இப்படியென்றால் பிரபாவுக்கு எப்படி இருக்கும். ஆனால் பிரபா ஒரு தேர்ந்த எழுத்தாளன். பிரபாவின் வித்து நீங்கள் என்பதால் உங்களை சிலாகித்தால் என்ன பிரபாவைக் கொண்டாடினால் என்ன. 

பிரபா ஒரு தேர்ந்த எழுத்தாளன். இயல்பில் அவன் ஓவியன் என்றாலும் என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு தேர்ந்த எழுத்தாளன். தனக்கு ஏற்படும் உணர்ச்சிகளை இம்மி பிசகாமல் என்னுள் கடத்தியவன். அந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே பிரபா கூறிய கதையை கேட்கத் தொடங்கியிருந்தேன். பிரபாவுக்கு இன்னொன்றும் தெரிந்திருக்கிறது. அது கடிதம் எழுதுவது. அதனால் தானோ என்னவோ ஜீவிதாவின் மீது தான் கொண்ட பெருங்காதலை முழுக்க முழுக்க கடிதமாகவே எழுதிவிட்டான். 

அந்தக் கடிதம் ஜீவிதா கைகளில் கிடைத்ததா இல்லையா என்பது இல்லை என் கவலை. இப்போது பிரபா எப்படி இருக்கிறான். தொடர்ந்து ஓவியம் வரைகிறானா. தன்னை மறந்து போன தன்னுடைய ஜீவிதாவை மறந்துவிட்டு அவளுக்கு எழுதிய கடிதத்தைத் எரித்துவிட்டு வேறு துணையைத் தேடிக் கொண்டானா. இல்லை வழக்கம் போல கடற்கரை மணலில் புகையை ஊதிக் கொண்டு கடலோடு பேசிக்கொண்டு தனிமையில் போதையில் உழல்கிறானா. 

சில சமயங்களில் பிரபாகர் மீது பொறாமை வருகிறது. அவன் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் அந்த வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் அதி அற்புதமான உவமைகள் ஒவ்வொன்றும் என்னை பொறாமை கொள்ளச் செய்கின்றன. எங்கிருந்து பிடிக்கிறான் இந்த உவமைகளை. சில சமயங்களில் அந்த உவமைகள் குமட்டலை ஏற்படுத்தினாலும் பல தருணங்களில் அந்த அதீத கற்பனையின் புள்ளிகளில் நானும் பிரபாவாகிப் போகிறேன். நான் பிரபாவகிப் போவதால் ஜீவிதாவின் வெறுமையை, அவள் இல்லாததால் ஏற்படும் தனிமையை உணர்கிறேன். இப்பொது பிரபா மீதான கோபம் குறைந்து என்னுடைய வேகம் முழுவதும் ஜீவிதாவை நோக்கிச் செலுத்தப்படுகிறது. 

பிரபா ஜீவிதாவுக்கு தொலைபேசச் செல்லும் தருணங்கள் அத்தனையும் ஒரு தேர்ந்த துப்பறிவாளன் கொலையாளியை கண்டுபிடித்தானா இல்லையா என்ற கோணத்திலேயே யோசிக்கச் சொல்கின்றன. என்னையும் அறியாமல் என்னுள் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. ஜீவிதா தைரியசாலி. பிரபாவை எளிதாக எதிர்கொள்வாள். ஆனால் இந்த பிரபா. சுத்தக் கோழை. ஐயோ எப்படியாவது தைரியத்தை வரவழைத்து ஜீவிதாவோடு பேசிவிடுடா என்று நாலு அறை அறைய வேண்டும் போல் இருக்கிறது. அவன் கையில் இருக்கும் தொலைபேசி ரிசிவரைப் பிடுங்கி தலையிலேயே அடிக்க வேண்டும் போல் இருக்கிறது. ஆனாலும் எப்போதும் நானும் பிரபாவின் பிரதிநியாகவே இருக்க விரும்புகிறேன். ஜீவிதாவோடு சேர்ந்துகொண்டு பிரபாவை காயப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. ஏனென்றால் பிரபா ஒரு அப்பாவி. சந்தர்ப்பங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளாத் தெரியாமல் எண்ணங்களின் மூலம் பகடையாடப்படுபவன். ஆம் பகடையாடப்படுபவன். என்ன தன்னையே பகடையாக்கிக் கொண்டு முன்னும் பின்னும் உருண்டு கொண்டிருக்கிறான். எல்லாம் ஜீவிதாவுக்காக. கருணையே இல்லாத,வேண்டாம் நான் ஜீவிதாவை திட்டவில்லை. அவளைத்  திட்டுவது பிரபாவுக்குப் பிடிக்காது. 

நல்லவேளை வாட்ச்மேன் பாலகிருஷ்ணன் பிரபாவுக்கு துணையாக இருக்கிறாரே என்ற ஆறுதல் பெறுத்த நிம்மதி தருகிறது. அவர் அவனோடு இல்லாவிட்டால் நான் இங்கு நிம்மதியாக இருக்க முடியாது. பிரபாவுக்கு உதவி செய்ய எல்லாருமே தயாராக இருக்கிறார்கள். டேனியல் மகேந்திரன் சந்திரன் என எல்லாருமே இந்த பிரபாவைத் தவிர. தன்னைப் பற்றி எதையுமே வாட்ச்மேனிடம் பிரபா பகிர்ந்துகொள்ளவில்லை என்றாலும் கூட பிரபாவுக்காக ஓடி ஓடி உதவுகிறார். அந்த நல்ல மனிதன் எப்படி இருக்கிறார் யூமா. கேட்டதாகச் சொல்லுங்கள். அந்த எஸ்டிடி பூத் பெண், பிரவுசிங் செண்டர் சிறுவன் எல்லாரையும். 



உங்களிடம் நிறைய பேச வேண்டும் யூமா. இல்லை நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும். பிரபாவையும் ஜீவிதாவையும் வாட்ச்மேனையும் மறக்கமுடியாதபடி ஒரு கதை கூறினீர்களே. யாராலும் எழுத முடியாத கதை அது. அதைப் போல வேறொரு கதை நீங்கள் கூறி நான் கேட்க வேண்டும் யூமா. அதுவரைக்கும் மீண்டும் ஒருமுறை பிரபாவின் கடிதத்தைப் படித்துவிட்டு வருகிறேன். 

அன்புடன்
சீனு 

புத்தகம் : மஞ்சள் வெயில்
ஆசிரியர் : யூமா.வாசுகி
பதிப்பகம் : அகல்
விலை : 85

பின்குறிப்பு : இந்தப் பதிவை எழுத்து முடித்ததும் யூமா வாசுகி பற்றி தேடியபொழுது தற்செயலாக அண்ணன் கே.ஆர்.பியின் இந்தப் பதிவு சிக்கியது. ஆச்சரியம் அல்லது தற்செயல் அவரும் மடலாகவே இருக்கிறார். அதிலும் அவருடைய பாணியில் அட்டகாசமாக. நம்புங்கள் இதுவும் தற்செயலே.

ஜீவிதா...


Sunday, February 15, 2015

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்

படைப்பாக்கம் : சீனு 


இந்தப் புத்தகத்தை வாங்கியதற்கான மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது ஜெயமோகன் என்பதையும் கடந்து புத்தகத்தின் தலைப்பு தான். ஆன்மீகக் கதைகள், சாமிக் கதைகளை விடவும் பேய்க்கதைகளின் மீது இயல்பாகவே நமக்கொரு ஈர்ப்பு இருக்கிறது. ஒன்று 'பேய் இருக்கிறதோ' என்ற பயமாக இருக்கலாம். இல்லையேல் 'பேய் இருந்துவிடுமோ' என்ற அச்சமாகவும் இருக்கலாம். ஆனால் பேய் என்றால் உள்ளுக்குள் எங்கோ ஓர் மூலையில் நம்மையும் அறியாமல் ஏதோ ஒன்று எட்டி உதைக்கத் தான் செய்கிறது. அதுவும் பனி சூழ்ந்த நள்ளிரவுகளில் என்றால் கேட்கவே வேண்டாம். நம்முடைய முதுக்குப் பின்னால் யாரோ ஒருவர் அமர்ந்து கொண்டு நம்மையே வெறித்து நோக்குவது போல வெகு எளிதாக கற்பனை செய்ய முடிகிறது. அது பொய் என்பது பகுத்தறிவுக்குத் தெரிந்தாலும் ஆழ்மனம் நம்ப மறுக்கிறது. எதிர்பாராத ஒரு அச்சத்தை, புகை போன்ற உருவத்தை வெகு இயல்பாக எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. 

அந்த திகிலை இன்னொருவரின் அனுபவங்களின் வாயிலாக, கதைகளின் மூலமாகப் படிக்கும் போது ஒன்று இவன் என் இனம் என்று தோன்ற வைக்கிறது. இல்லையேல் பேய் பயம் நமக்கு மட்டும் இல்லை அது ஒரு பொதுச்சொத்து என அகமகிழத் தோன்றுகிறது. 'பேய் இருக்கு இல்ல' என்ற தர்க்க ரீதியான ஆராய்ச்சிகளையும் தாண்டி பேய்க்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கவர்ச்சி அது. 

பேய்க்கதைகளைப் படித்து வெகுநாட்கள் ஆகிறது. சிறுவர்மலரிலும், தங்கமலரிலும் அம்புலி மாமாவிலும் படித்த கதைகள் வளர்ந்து பெரியவனானதும் எங்குமே படிக்கக் கிடைக்கவில்லை. அதையும் மீறி பேய்க்கதை போன்ற ஒன்றைப் படித்தேன் என்றால் அது கொலையுதிர்க் காலம். சிற்சில இடங்களில் சுஜாதா மிரட்டியிருப்பார். அவ்வளவுதான் பேய்க்கதைகளுக்கும் எனக்குமான தொடர்பு. 

ஆனால் பேய் குறித்த அனுபவக் கதைகள் இன்னும் அலாதியானது. பள்ளிகாலங்களில் தொடங்கி இன்று வரைக்கும் என்னோடு பயணிப்பது. மாதத்தில் ஒருவராவது பேயைப் பற்றி பேசிவிடுகிறார்கள். ஆட்டோவில் பேய், இரவுக் கட்சி முடிந்து வீடு திரும்பும் போது வழி கேட்கும் பேய், வெள்ளிகிழமை எ,.ஆர். கிணத்துப் பேய் என்று பேய் சார்ந்த அனுபவங்கள் கதைகளை விட மிக சுவாரசியமானவை. எங்கே இந்த வரியை என்னோடு சேர்ந்து கூடவே ஒரு பேயும் வாசித்துக் கொண்டிருக்கிறதோ என்று நினைத்துப் பார்த்தால் அது கூட சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு பேய்க்கதைகளின் பின்னணியிலும் ஒரு அநீதி ஒரு துரோகம் ஒரு அடங்காத மோகம் இருக்கும் என்கிறார் ஜெமோ. பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் சிறுகதைத் தொகுதி கூட அப்படியாகப் பின்னப்பட்ட ஒன்று தான். இத்தொகுதியில் மொத்தம் பத்து கதைகளை இருக்கின்றன. அவற்றில் சில உயிர்மை இதழிலும் இன்னும் சில வேறு இதழ்களிலும் வெளிவந்தவை. நிழல்வெளிக் கதைகள் என்ற தலைப்பில் உயிரமைப் பதிப்பகம் மூலம் வெளிவந்த புத்தகம் தற்போது மறுபதிப்பாக 'பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்' என்ற தலைப்பில் கிழக்கு வெளியீடாக பதிப்பிக்கப்பட்டுள்ளது.



இமையோன் - விடுமுறை தினத்தை மேற்குத் தொடர்ச்சி மலையில் களிக்கச் செல்லும் நாயகன், திடிரென அடித்துப் பெய்யும் பெரு மழையில் வழி தவறி ஒரு பாழடைந்த வீட்டினுள் தஞ்சம் புகுகிறான். அங்கு நடப்பது எல்லாமே இயல்பாக இருந்தாலும். 'என்ன இயல்பாகவே முடியப் போகிறது' என்று யோசிக்கும் நொடியில் கதையின் போக்கை மாற்றுகிறார் ஜெமோ. அகம் சார்ந்த வர்ணனைகள் ஜெமொவிடம் எப்போதும் இயல்பாகவும் ரசனை மிக்கதாகவும் வெளிப்படும். அவ்வகையில் இத்தொகுதியின் சிறந்த கதையாக இக்கதை முக்கியமானது. மலைகள், மலைகளில் நிகழும் கணங்கள் பற்றிய ஜெமோவின் விவரணை அழகானது.

பாதைகள் - பேய் நடமாட்டம் உள்ளதாக அஞ்சப்படும் வீட்டிற்கு ஒரு ஓவியர் குடி வருகிறார். அந்த வீடு முழுவதும் தன் ஓவியத் திறமையின் மூலமும் வெறும் கதவுகளையும் ஜன்னல்களையும் தத்ரூபமாக வரைகிறார். அவை மாயக்கதவுகள். எங்கு நுழைந்தால் எங்கு வெளிப்படுவோம் என்பதை அறியமுடியாத மாயச் சுழலை உருவாக்கக் கூடியவை. அந்தச் சுழலினுள் நாயகன் சிக்கிக் கொள்கிறான். அந்த வீட்டில் பேயாக நடமாடுபவர்களை அச்சுழலினுள் சந்திக்க நேர்கிறது. அங்கிருந்து அவன் வெளிப்பட்டானா இல்லையா என்பது தான் கதை. இந்தத் தொகுதியை நள்ளிரவில் படித்தேன் என்பதால் பேய்க் கதைகளின் அதீத்தை இக்கைதையின் மூலம் உணர முடிந்தது.  

அறைகள் - கொஞ்சம் வித்தியாசமான கதை. வஞ்சம் தீர்த்துக் கொள்ள அவசியம் இல்லாமல், அடங்கா பாசத்தினை வெளிபடுத்தக் கூடிய கதை. ஆனால் இதன் முடிவு பின்நவீனத்துவத்தின் பாணி என்பதால். முடிவு அவரவர் அவதானிப்பில். 

யட்சி, ஏழுநிலைப் பந்தல் சுவாரசியமான வாசுப்பனுபவத்தைத் தரக்கூடியவை. தம்பி, ஐந்தாவது நபர் வழக்கமான பழிவாங்கும் கதைகள் என்றாலும் சுவாரசியமானவை. இவையல்லாமல் குரல், ரூபி இந்த இரு கதைகளும் மனிதர்கள் விலங்குகளின் மூலம் வேட்டையாடப்படுதலாக அமைந்த கதைகள். 

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பத்து கதைகளுமே ஆசிரியர் கதை கூறுவது போல் அல்லாமல் கதையின் நாயகன் தன்னிலையில் இருந்து கதையை விவரிப்பது போல் கூறப்பட்டவை. அதுவே இந்தக் கதைகளுக்கு கூடதல் சுவராசியத்தை அளிப்பதாக உணர்கிறேன். மேலும் ஒவ்வொரு கதையிலும் ஒரு கடந்தகாலம் இருக்கிறது. கடந்தகாலம் நிகழ்காலத்தோடு தொடர்பு கொள்ளும் போது அந்த ஒரு அநீதி ஒரு துரோகம் ஒரு அடங்காத மோகம் என்ற புள்ளியில் வந்து தன்னை இணைத்துக் கொள்கிறது. அங்கு பேய்களும் தேவதைகளும் உயிர்பெற்று உச்சம் அடைகிறார்கள்.,

பெரியவர்களுக்கு சிறப்பான வாசிப்பனுவத்தையும் குழந்தைகளுக்கு அட்டகாசமான பேய்க்கதைகளை கூற உகந்த கதைகளையும் கொண்ட தொகுதியாக இத்தொகுப்பைப் பார்க்கிறேன். மேலும் வெறும் பேய்கதைத் தொகுதியாக அல்லாமல், ஒவ்வொரு சிறுகதையிலும் ஜெமோ முன்வைக்கும் நுணுக்கமான விளக்கங்கள் விவரணைகள் ஒரு சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக்கூறுவதையும் உணர முடிகிறது. நேரத்தை வஞ்சம் தீர்க்காத புத்தகம் என்பதால் நிச்சயம் படிக்கலாம்.  

பெயர் : பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்
ஆசிரியர் : ஜெயமோகன்
பதிப்பகம் : கிழக்கு
விலை : 100



Wednesday, February 4, 2015

இரவு - ஜெயமோகன்

படைப்பாக்கம் : சீனு 

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஜெமோவை வாசித்து வந்தாலும் அவர் எழுதியதில் முழுமையாகப் படித்து முடித்த முதல் நாவல் - இரவு. ரப்பரும், அனல் காற்றும், உலோகமும் தொங்கிக் கொண்டிருகின்றன, சீக்கிரம் முடிக்க வேண்டும். 

அவருடைய இணைய எழுத்துக்கள் மற்றும் ஒருசில சிறுகதைகள் தவிர்த்து முழுமையாகப் படித்த சிலாகித்த சிறுகதைத் தொகுதி உண்டென்றால் அது அறம். அதில் இடம்பெற்ற யானை டாக்டர் கதையை நினைக்கும் போதெல்லாம் மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தோன்றுகிறது. 'ஒவ்வொரு யானைக்குள்ளும் ஒரு காடு உறங்குகிறது' என்று குறிப்பிடுவார் ஜெமோ. ஜெமொவுக்குள் ஒரு காடும் யானையும் உறங்காது இயங்கிக் கொண்டுள்ளன. இவ்விரண்டைப் பற்றி எழுதும் போதெல்லாம் அவருக்குள் அவர் இரண்டு மடங்கு வீரியம் மிக்கவராகி விடுகிறாரோ என்று தோன்றும். இப்போது கூடவே இரவையும் சேர்த்துக் கொள்ளலாம். 

காடும் யானையும் இயல்பிலேயே கரிய நிறம். கருமை இரவை ஒத்தது. இரவு தேவையான அளவு ஒளியை மட்டுமே அனுமதிப்பது. அந்த தேவையான ஒளி ஒன்றன் மீது படும்போது அது அப்பொருளை மேலும் அழகாக்கிறது. உதாரணத்திற்கு இரவில் எரியும் தீபத்தையும் அந்த தீபத்தை தாங்கி நிற்கும் விளக்கையும் குறிப்பிடுகிறார் ஜெமோ. 

கதையின் நாயகன் சரவணன் பணி நிமித்தமாக கொச்சியின் அருகில் இருக்கும் காயல் சூழ்ந்த ஒரு சிறிய கிராமத்திற்கு வருகிறான். அங்கு இரவுகளில் மட்டுமே விழித்திருந்து பகல் முழுவதும் தூங்கிக் கழிக்கும் ஒரு இரவுச் சமூகத்தை சந்திக்க நேர்கிறது. ஒருகட்டத்தில் அவனும் அவர்களுடன் ஒருவராக தன்னை இணைத்துக் கொள்கிறான். மெல்ல அவனுக்குள் இருக்கும் பகல் வாழ்க்கை அழிகிறது. அந்த இரவு வாழ்க்கை என்ன மாதிரியான மாற்றங்களை உண்டாக்குகிறது, எந்தவிதமான உளச்சிக்கல்களுக்கு ஆட்படுத்துகிறது, அதில் இருந்து அவனால் வெளிவர முடிந்ததா என்பதே இரவு நாவலின் மையச்சரடு.

சரவணன் தங்கி இருக்கும் வீட்டின் அருகில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேனனும் அவருடைய மனைவி கமலாவும் வாழ்கிறார்கள். பரம்பிக்குளம் காட்டில் ஓரிரவு தங்கியிருக்கும் மேனனுக்கு ஒரு வித்தியாசமான தரிசனம் கிடைக்கிறது, அதிலிருந்து இரவு வாழ்க்கை வாழத் தொடங்குகிறார். தான் இவ்விதம் இரவில் வாழ்வதாகவும் தன்னுடன் யாரேனும் இணைந்து கொள்வதாய் இருந்தால் தொடர்பு கொள்ளவும் என்று அளிக்கும் விளம்பரம் மூலம் தன்னைச் சுற்றி ஒரு இரவு சமூகத்தை உருவாக்குகிறார். இந்த இரவு சமூகத்தில் வாழ்பவர்கள் ஒவ்வொருவருமே பகல்ப் பொழுதில் தங்களுக்கு நடைபெற்ற ஏதோ ஒரு அசந்தர்ப்பமான சூழலால் உளச்சிக்கல்களுக்கு ஆளானவர்கள். பகலை வெறுப்பவர்கள். அதிலிருந்து தங்களை மீட்டெடுக்க இரவு வாழ்க்கைக்கு பழக்கி இருப்பவர்கள்.

நாயரும், நாயரின் மகள் நீலிமா(கதாநாயகி)வும் இந்த சமூகத்தில் ஓர் அங்கத்தினர். நீலிமா ஒரு கொடிய விபத்தால் தன் கண்ணெதிரே தான் மணக்க இருக்கும் கணவனை இழந்தவள். அதனால் கடுமையான மனபாதிப்புக்கு ஆளானவள். சரவணனுக்கும் நீலிமாவிற்கும் கண்டதும் காதல் ஏற்படுகிறது. இதனை மேனன் புரிந்து கொள்கிறார். ஏற்கனவே தீரா மனவியாதியில் இருக்கும் நீலிமாவிற்கு சரவணனின் அருகாமை மற்றும் துணை நிச்சயம் நல்லது பயக்கும் என்ற எண்ணத்தில் இருவரையும் காதலிக்கும்படி தூண்டுகிறார். 

இந்த சமயத்தில் கேரளத்தின் மற்றொரு பகுதியில், பிரஸண்டானந்தா என்னும் சுவாமிஜி நடத்தி வரும் இரவு நேர ஆஸ்ரமதிற்கு மேனனுடன் சரவணன் செல்ல நேர்கிறது. அங்கே பல வெளிநாட்டினரும் தங்கி இரவு சமூகத்தில் வாழ்க்கை நடத்துவது சரவணனுக்கு வியப்பளிக்கிறது. 

இந்த நேரத்தில் ஆஸ்ரமத்தில் சந்திக்கும் சுவாமி பிரஸண்டானந்தாவின் உதவியாளர் 'இந்த இரவுச் சமூகம் உனக்கு சரிபட்டு வராது, எப்படியேனும் தப்பி ஓடிப் போய்க்கோ' என்று மிரட்டுகிறார். இதுவரைக்கும் எல்லாமே நல்ல விதமாய் போய்க் கொண்டிருப்பதாய் தோன்றிய சரவணன் மனதில் முதல்முறை அச்சம் ஏற்படுகிறது. மெல்ல தன்னால் இரவு சமூகத்தில் இருந்து வெளிவர முடிகிறதா என்று பார்க்கிறான். பகல் அவனுக்கு இப்போது அருவருப்பாய் இருக்கிறது. எதிலுமே அழகு இன்றி கவித்துவமின்றி அத்தனையும் வெளிப்படையாய் இருப்பது போல் தோன்றுகிறது. போதாகுறைக்கு அவனால் வெளிச்சத்தையே பார்க்க முடிவதில்லை. இது எல்லாவற்றிற்கும் மேலாக நீலிமா இல்லாமல் அவனது நாட்கள் நரகம் போல் நகர்கிறது. வேறுவழியே இல்லாமல் மீண்டும் இரவு சமூகத்தின் அண்மையை நாடுகிறான். இடையில் இரண்டு கொலைகள் நடக்கின்றன. இதன் பின் நடந்தது என்ன என்பது தான் மீதிக் கதை. 

மேலும் இந்நாவலின் மூலம் சாக்தம் என்னும் மதம் சார்ந்த கருத்துக்களை தீவிரமாக பேசுகிறார். சைவம் வைணவதிற்குப் பின் மிகபெரிய மதமாக விளங்கிய சாக்தம் யட்சிகளின் மதம். இரவு நாவலில் வரும் ஒவ்வொரு பெண்களுமே யட்சிகள். பகல்ப்பொழுதில் பெண்களாக உலவுபவர்கள் இரவில் முழு யட்சிகளாக மாறிவிடுகிறார்கள். ஒவ்வொரு பெண் யட்சியும் பலமடங்கு சக்தி நிறைந்தவள். அந்த யட்சிகள் எவ்வளவு மனவலிமை வாய்ந்தவர்கள் என்பது பற்றியும் கேரளம் எவ்வாறு யட்சிகளின் தேசமாக நம்பபடுகிறது என்பது குறித்தும் கூறுகிறார்.

ஜெயமோகனின் கதை சொல்லல் என்பது மிகவும் நிதானமானது. ஒவ்வொன்றையும் நிறுத்தி நிதானமாக, ஒவ்வொன்றின் தர்க்கங்களையும் வாதிட்டபடி நகரக்கூடியது. மனிதர்களின் உணர்வு சார்ந்த விசயங்களையும், அவர்களைக் சுற்றி நிகழும் காட்சிகளையும் விவரித்தபடியே செல்பவர். அதனால் இவருடைய கதைகளில் வேகமான வாசிப்பு என்பது கொஞ்சம் கடினமே. இன்னும் கொஞ்சம் எளிமையாக சொல்வதென்றால்.ஒரு நீண்ட மலைப்பாதையின் மெதுவாக நகரும் ரயில் வண்டியைப் போன்றது ஜெமோவின் எழுத்து. அந்த ரயில்வண்டி மெதுவாக நகர நகரத்தான் நம்மால் காட்சிகளை இன்னும் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள முடியும். நகரங்களுக்கு இடையே பயணிக்கும் மின்தொடர் வண்டிக்கும் மலைப்பாதை வண்டிக்கும் இடையேயான வித்தியாசங்கள் நிறைந்தது ஜெமோவின் எழுத்துக்கள் என்பது என் எண்ணம். 

இரவு நாவல் ஆங்காங்கு கொஞ்சம் தொய்வாக நகர்ந்தாலும், சில இடங்களில் மனிதர்களின் உளவியல் சார்ந்த விசயங்களை அதிகம் பேசினாலும், மலையாள வாடை கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது என்பது நிஜம். இரவை, இரவின் தனிமையை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நாவல் இரவின் மீதான காதலை அதிகமாக்கும் என்பது நிச்சயம் உண்மை. 

நாவல்       : இரவு
ஆசிரியர்   : ஜெயமோகன்
பதிப்பகம்  : தமிழினி
விலை       : 160
குறிப்பு       : ஜெமோவின் தளத்திலும் இலவசமாகக் கிடைக்கிறது