Monday, December 22, 2014

எம்.ஜி.ஆர்.

‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி’ அப்படின்னு கவிஞர் பொன்னடியான் அவர்கள் ஒரு பாட்டுல எழுதியிருந்தாரு. புகழோடு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் புத்தகமாகப் படிக்கையில் நிச்சயம் அதிலிருந்து நமக்கு கற்றுக் கொள்ள நிறையப் பாடங்கள் கிடைக்கும் என்பது நான் அனுபவத்தில் கண்ட விஷயம்.  அதிலும் ‘வாத்யார்’ என்றே அழைக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் பாடங்கள் இல்லாமல் போய்விடுமா என்ன...?

எம்ஜிஆரைப் பற்றி இதுவரை நிறையப் புத்தகங்கள் வந்திருக்கின்றன. அவரோடு பழகியவர்கள், மெய்க்காப்பாளர்கள், அவரை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர்கள், உடன் நடித்தவர்கள் என்று பலர் தங்கள் பார்வையில் எழுதிய புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். இந்த நூல் அனைத்தையும் தொகுத்தது போல, இதைப் படித்தால் வாத்யாரைப் பற்றித் தெரிந்து கொள்ள இன்னொரு புத்தகத்தைத் தேட வேண்டாம் என்பது போல முழுமையான வரலாறாக அமைந்திருக்கிறது.

சிறு வயதிலேயே நாடகங்களில் நடக்கத் தொடங்கி, தன் பத்தொன்பதாவது வயதில் ‘சதி லீலாவதி’ படத்தில் சினிமாவில் சிறு வேடமொன்றில் அறிமுகமான வாத்யார் கதாநாயகனாக முதல் படத்தில் நடித்தபோது அவருக்கு வயது முப்பது. அப்போது அவரைப் பற்றிக் கொண்ட வெற்றி தேவதையை கடைசிவரை அவர் தன்னை விட்டு விலக விடவில்லை. நூலாசிரியர் தீனதயாளனின் விவரிப்பில் வாத்யாரின் திரையுலக வாழ்க்கையும் அவர் சந்தித்த வெற்றிகளும், தோல்விகளும், சாதனைகளும் சோதனைகளும் நம் மனக்கண்ணில் படமாக விரிகின்றன. நல்லதொரு சினிமாப் புத்தகமாக அமைகிறது அதுவரையிலான பகுதி.

 தன் அரசியலை வலிமைப்படுத்தும் ஆயுதமாக சினிமாவை வைத்திருந்த வாத்யார் தமிழக முதல்வராகி அரசியல் வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட காலகட்டத்திலிருந்து நூல் சினிமாவைத் துறந்து அரசியல் நூலாகப் பரிணாமம் பெற்று விடுகிறது.  அவர் எதிர்கொண்ட தேர்தல்கள், ஆட்சி கலைப்பு, அரசியலில் அவர் எடுத்த முக்கிய முடிவுகள், சந்தித்த வழக்குகள் என தெளிவான வரலாற்றுப் பதிவாகத் தொடர்ந்து அவர் மறைவில் முடிகிறது புத்தகம்.

இந்தப் புத்தகத்தை இங்கே நான் குறிப்பிடுவதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. சினிமாவிலும், அரசியலிலும் சில அதிரடி முடிவுகளை எடுக்க நேர்ந்த சமயத்தில் அவர் மனநிலை எப்படி இருந்திருக்கும்..? துப்பாக்கிக் குண்டுத் தாக்குதலுக்கு ஆளாகி மீண்டபின் இன்னொரு முறை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று மரணத்தை வென்று வந்த சமயம் அவரின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் அவரைச் சுற்றியிருந்தவர்களின் நிறங்களை அறிந்திருப்பார். அப்போது அவர் எப்படி உணர்ந்திருப்பார்...? இப்படியெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததுண்டு. புத்தகத்தில் அவற்றுக்கும் விடை இருக்கிறது. வாத்யாரின் மன உணர்வுகளும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. (ஆதாரம் உண்டான்னு கேட்டா எனக்குத் தெரியாது... படிச்சப்ப சரியா இருக்கும்னுதான் தோணுச்சு). அந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகிறது இந்தப் புத்தகம்.

வாத்யாரோட கேரியர்ல அவர் நடிச்சு வெற்றி பெற்ற படங்களை மாதிரி அவரால ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட ப்ராஜக்ட்டுகள் பத்தி விரிவா யாராச்சும் எழுதினா அதுவே தனி புத்தகமாயிடும். அப்படி கைவிடப்பட்ட படங்களின் லிஸ்ட்டோட அவர் நடிச்ச அத்தனை படங்களின் லிஸ்ட்டும் பின்னிணைப்பா தரப்பட்டிருக்கறதும், புத்தகம் நெடுகிலும் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கும் சினிமா ஸ்டில்கள், வாத்யார் ஸ்டில்களும் ரசனையோ ரசனை. 

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பா. தீனதயாளன். பால்ய காலம் தொட்டு தமிழ் சினிமாவையும் எம்.ஜி.ஆரையும் உன்னிப்பாகக் கவனித்து வருபவர். எம்.ஜி.ஆரின் படங்களை தியேட்டரின் ஒரு ரசிகராகப் பார்த்து மகிழ்ந்தவர்.  எம்.ஜி.ஆரின் எந்தப் படம், எந்தத் தியேட்டரில், எத்தனை நாள்கள் ஓடின என்பதை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரை நேசிப்பவர். எம்.ஜி.ஆரின் படங்களைப் போலவே அவருடைய அரசியலையும் அவதானித்தவர். குறிப்பாக, அந்தக் காலத்துப் பத்திரிகைகளின் வெளியான அரசியல் தலைப்புச் செய்தி தொடங்கி சர்ச்சைக்குரிய கார்ட்டூன்கள் வரை அவரிடம் இருக்கும் நுணுக்கமான செய்திகள் அநேகம். அந்த வகையில், எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் வாழ்க்கையைப் பதிவுசெய்ய பா. தீனதயாளனே பொருத்தமானவர் என்று முடிவுசெய்தோம். அவரிடமே ஒப்படைத்தோம்.  - இப்படிக் கூறுகிறது சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள குறிப்பு. அந்த நம்பிக்கை மிகச் சரி என்பதை நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர் பா.தீனதயாளன்.

456 பக்கங்கள்ல 300 ரூபாய் விலையில இந்தப் புத்தகத்தை புதிய எண் : 10/2, போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தி நகர், சென்னை - 600017 (போன் : +91 44 2434 2771)ல இருக்கற சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கு. வாத்யாரை உங்களுக்குப் பிடிக்கும்னா உங்க கைல தவறாம இருக்க வேண்டிய புத்தகம் இது.

Thursday, December 18, 2014

ருத்ர வீணை - மர்மத் தொடர்

எனக்கு மிகவும் பிடித்த அன்று-இன்று பாணியில் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதப்பட்டு தொலைகாட்சி தொடராக வெளிவந்து மிகவும் பிரபலமான ஒரு மர்மத் தொடர் என்பதை அறிந்த உடனே இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் தோன்றியது. எனது வட்டாரத்தில் இருக்கும் அரசு நூலகத்தில் வலை வீசியதில் முதல் பகுதி மட்டும் சிக்கியது. அடுத்த இரண்டாவது மற்றும் இறுதிப் பகுதியை தேடி வைப்பதாக நூலகர் சொன்ன வாக்குறுதியை ஏற்று முதல் பகுதியை படிக்கத் தொடங்கினேன்.  முதல் பகுதி முடிந்தவுடன் அடுத்த பகுதியை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவல் கூட, மறுதினமே நூலகம் சென்று இரண்டாவது பகுதியை எடுத்து வந்தேன். அதுதான் இறுதிப் பகுதி என்று நூலகர் வாக்கை நம்பி படிக்கத் தொடங்கினால், அதுவோ அடுத்த பகுதியில் தொடரும் என்று முடிந்தது. 

கதையின் போக்கில் பிணைக்கப் பட்ட மர்மங்கள் எப்படி அவிழ்கின்றன என்பதை அறிய எனக்குள் ஒரு போராட்டமே நடந்தது. கடைகள், ஆன்லைன் என்று எங்கு தேடியும் அடுத்த பகுதி கிடைக்கவில்லை. புத்தகச் சந்தை வரை காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்ட நிலையில், 'மின்னல் வரிகள்' பால கணேஷ் சார் தன்னிடம் அனைத்து பகுதிகளும் இருப்பதாக கூறி எனது ஏக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அவரிடம் இருந்ததோ நான்கு பகுதிகள் கொண்ட பதிப்பு. சமீபத்திய பதிப்புகள் இரண்டு பகுதிகளாக வருவதாகவும் அவை அதிகம் புழக்கத்தில் இல்லை என்றும் என் நண்பன் பின் ஒரு நாள் விளக்க அறிந்தேன். 



அன்று 
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன், நவாப்களின் ஆளுமைக்கு உட்பட்டு, பல வித இசைக்கலைஞர்கள் கலைகளை வளர்த்து வாழ்ந்த தோடீஸ்வரம் என்ற ஊருக்கு, வடக்கில் இருந்து நவாப்ஜான் பாபா என்பவர் ருத்ர வீணையுடன் வருகிறார். அந்த ருத்ர வீணையானது அந்த சிவனே பார்வதியைக் கொண்டு செய்த பல சக்திகள்  கொண்ட ஒரு அரிய இசைக் கருவி. அதில் இசைக்கப்படும் ராகத்திற்கு ஏற்ப பல அற்புதங்கள் நிகழ்த்த கூடியது. அதை வாசிப்பதற்கே தனி அருள் வேண்டும், தீய எண்ணங்களுடன் நெருங்கினால் அதை தீண்ட முடியாது. பெண்களாலும் அதை வாசிக்க முடியாது. சிவ அம்சம் கொண்ட ருத்ரர்களால் மட்டும் தான் அதை வாசிக்க முடியும். அத்தகைய ருத்ர வீணையை தன் குருவின் ஆணைப் படி அந்த தோடீஷ்வர ஆலயத்தில் சேர்க்க வருகிறார் பாபா. 

ஒரு இஸ்லாமியர் வீணையுடன் கோவிலில் நுழைவதைக் கண்டு, அங்கு இருப்பவர்கள் பதறி அவரை வெளியேற்றி விடுகின்றனர். அந்த ஊரின் தாசி குடும்பத்தில் தோன்றி கற்பு நிலை தவறாது வாழும் அபராஜித வைஜெயந்தி பாபாவிற்கு தன் இல்லத்தில் அடைக்களம் தந்து அவரை போற்றி வழிபடுகிறாள். வரட்சியில் இருக்கும் அந்த ஊரை ருத்ர வீணையின் இசை செழிப்பாக மாற்றுவதோடு மட்டுமின்றி, ஊரில் சில அற்புதங்களை நிகழ்த்துகின்றது. 

அந்த ருத்ர வீணையின் சக்தி பற்றிய செய்திகள் நான்கு புறமும் பரவ, அதை அபகரிக்க எண்ணி சில தீய சக்திகள் அந்த ஊருக்குள் நுழைகின்றன. பல தடைகளையும் தாண்டி பாபா எப்படி தன் குருவின் கட்டளையை நிறைவேற்றுகிறார், எப்படி அந்த வீணை பாதுகாக்கப் படுகின்றது என்பதே மீதி கதை.

இன்று         

பாபா வருகைக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு தோடீஷ்வர ஆலயத்தில் பாபா ருத்ர வீணையுடன் சிலையாக காட்சி தருகின்றார். தஞ்சையை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் வரட்சியில் இருக்க, தோடீஷ்வரம் மற்றும் செழிப்புடன் விளங்குகின்றது. தினமும் கேட்கும் ருத்ர வீணையின் நாதம் தான் அந்த செழிப்புக்கு காரணம் என்றாலும், அது எங்கு உள்ளது என்பதும் அதை வாசிப்பது யார் என்பதும் மர்மமாகவே இது நாள் வரை உள்ளது. 

நரசிம்ம பாரதி என்னும் சக்தி உபாசகர் அந்த ருத்ர வீணையை தேடி ஊருக்குள் வருவதில் இருந்து மாற்றங்கள் நடக்கத் தொடங்குகின்றன. ஒரு பக்கம் மனைப் பாம்பு ஒன்று பாதுகாக்கும் பாபா கைப்பட எழுதிய ராக மந்திர ஏடு, மறு புறம் கோவில் தாசியான சுந்தராம்பாள் தினமும் சென்று பூஜை செய்யும் யாராலும் நுழைய முடியாத தாசி பங்களா, ஊர் முழுவதும் ஒரே சம அளவில் தினமும் ஒலிக்கும் ருத்ர வீணையின் இசை என்று பல மர்மங்கள். ரகசியங்களை பாதுகாக்கும் சுந்தராம்பாள், ருத்ர வீணையை தன் வசமாக்க துடிக்கும் உபாசகர், இந்த மர்மங்களை கண்டுபிடிக்க துடிக்கும் இளவட்ட நண்பர்கள் சுவாமிநாதனும் சங்கரனும் என்று கதை சூடு பிடிக்கின்றது.  

இறுதியில் நல்ல சக்திக்கும் கெட்ட சக்திக்கும் இடையில் அந்த வீணைக்காக பெரும் போராட்டம் வெடிக்கின்றது. நல்ல சக்தியே வென்றாலும், ருத்ரன் யார் என்ற ரகசியம் இறுதிவரை வாசகர்களை சுவாரசியம் குறையாமல் இழுக்கின்றது.                   

இந்தக் கதை தொலைகாட்சி வடிவத்தில் சற்று வேறுபட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று பகுதியில் நடக்கும் ஒரு சம்பவம் இன்று பகுதியில் கண்டியறிப் படுவது போல் காட்சிகள் ஒரு சேர அமைத்தது கதைக்கு பலம். சில இடங்களில் திகட்டும் அளவு ஆன்மீகமும், இறுதியில் தேவைக்கு அதிகமாக கதாப்பாத்திரங்களும் சேர்வது கதையில் சற்று தொய்வை ஏற்படுத்தினாலும், 'ருத்ர வீணை' விறுவிறுப்பு குறையாத ஒரு மர்மத் தொடர்.

************************************************************************************************************
வெளியீடு : ஜீயே பப்ளிகேஷன்ஸ்
ஆண்டு :  2004
பகுதிகள் : நான்கு
***********************************************************************************************************

இந்திரா சௌந்தர்ராஜன்



இந்திரா சௌந்தர்ராஜன் என்ற புனைப்பெயர் கொண்ட பி. சௌந்தர்ராஜன் அவர்கள் தமிழில் ஆன்மீகம் மற்றும் அமானுஷ்யம் சார்ந்த பல மர்ம நாவல்களை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்து மக்கள் மனதைக் கவர்ந்தவை. 'மர்ம தேசம்' விடாது கருப்பு இவரது படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது. மதுரையில் வசிக்கும் இவர் இந்த ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

காதலுடன்
ரூபக்

Thursday, December 4, 2014

திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்


பெரிய மெனக்கெடல் இல்லாமல் வந்து விழும் வார்த்தைகளைக் கொண்டு எழுதப் பட்ட குறுநாவல் தான் இந்த "திசையெல்லாம் நெருஞ்சி". தலைப்பே கவிதை பேசியமையால் தான் இந்நூலை வாங்கினேன். சமீபத்தில் நான் வாங்கியப் புத்தகங்களில் சிறந்தது என்று இந்நூலைச் சொல்வேன். இந்நூலை வாசிக்க ஐந்து மணிநேரம் போதுமென்று நினைக்கிறேன், நான் ஒரே இரவில் வாசித்து முடித்தேன். 

இந்நூலில் மூன்று கதைகள் அடங்கியிருக்கிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை தாங்கியிருக்கின்றன. இலக்கியமென்று வார்த்தைகளை தேடித் தேடி பிடித்து எழுதி வாசர்களை அயற்சியடைய முயற்சி செய்து கொண்டிருக்கும் இன்றைய சில எழுத்தாளர்களுக்கு மத்தியில், பேசுமொழியில் எழுதியிருப்பது வாசிப்பதற்கு எளிதாக இருக்கிறது, இதுதான் அவரின் பலமென்று கருதுகிறேன்.





1) இரட்சணியம்:


தொடங்குவது என்னவோ ஒருமாதிரி இழுவையாக இருந்தாலும் சில பக்கங்கள் சென்றதும் நம்மை வேறெங்கும் சிதறாமல் விறுவிறுவென ஜெட் வேகத்தில் நகர்த்திச் செல்கிறது. ஆல்பர்ட் எனும் சிறுவன் காமத்தின் வேட்கையை கட்டுப்படுத்த முடியாமல் எப்படி தணித்து கொள்கிறான் என்பது தான் மையக் கரு. கரண்டு போன சாயந்திரத்தில் அக்கா முறை பெண்ணொருத்தி செய்யும் சேட்டையும், பின் மாலினி டீச்சர், சித்தி காடில்யா மற்றும் பக்கத்து வீட்டு ஜெயராணி வரை நீளும் மன்மத லீலைகளை சுமந்து நிற்கிறது இந்த இரட்சணியம். நேர்த்தியான நடையில் விறுவிறு கதை. பதின்ம வயதில் காமத்தின் மீதான தெளிவு இல்லாத சிறுவனின் மன நிலையை அவ்வளவு நேர்த்தியாக சொல்வதோடு மட்டுமில்லாமல், இந்த சமூகத்தின் முன்பு மிகப்பெரிய கேள்விக்குறியை ஆல்பர்ட் என்ற பாத்திரத்தின் வாயிலாக நம்முன் வைத்திருக்கிறார் ஆசிரியர். பதின்ம வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.  



2) உருமால் கட்டு:


கிராமத்திலிருந்து நகரத்திற்கு பெயர்ந்து சென்ற குடும்பமொன்று திருமணத்திற்கு முந்திய உருமால் கட்டு என்னும் வைபவத்திற்கு தனது சொந்தங்களை கூப்பிட வந்திருக்கும் நிலையை எளிமையாக விவரித்திருப்பது அழகு. குபேந்திரன் (மண மகன்)  பார்வையில் சொல்லப்படும் கதையில் கிராம சூழல்களையும், அதை சார்ந்த மனிதர்களையும், உறவினர்களையும், அவர்களின் மனப்பாங்கையும் அத்தோடு உறவினர்களை உதறித்தள்ளும் மன நிலையிலிருக்கும் திடீர் நகரவாசிகளான முன்னாள் கிராமவாசிகளான குபேந்திரனின் குடும்பத்தாரின் மன நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது இந்த "உருமால் கட்டு". யதார்த்த நடை.

3) திசையெல்லாம் நெருஞ்சி: 

பல வருடங்களுக்குப் பிறகு வேறொரு ஊரிலிருந்து, இன்னொரு ஊருக்கு பிழைப்பு தேடி வந்த பழநி எனும் சவரத்தொழிலாளி தனது மனைவி குருவம்மா மற்றும் குழந்தைகளோடு படும் அல்லல்களை வலியுடன் பதிவு செய்திருக்கிறார். சிறுக சிறுக சேமித்து, அந்த ஊரின் பெரிய மனுஷன் ஒருவனுக்கு வட்டிக்கு கடனாக கொடுத்துவிட்டு திருப்பி கேட்க போய் படும் அவமானத்தையும், கோவம் வந்து அந்த மேல் சாதி மனுசனை? அடித்துவிட்டு அதனால் ஊரை காலி செய்ய சொல்லி ஊர்ப் பஞ்சாயத்து சொல்வதையும் வலிகளோடு மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் திரு. சு.வே. பாவப்பட்ட மனிதர்களின் கண்ணீரை நீங்களும் உணரலாம் இக்கதையை வாசித்தால். 

திசையெல்லாம் நெருஞ்சி என்ற தலைப்பை தவிர இந்த நூலுக்கு வேறந்த தலைப்பும் பொருந்தாது என்பதை இக்கதை உங்களுக்கு சொல்லும். 

பலம்:

1) கொஞ்சம் பிசகி இருந்தாலும் "இரட்சணியம்"  கதை பிட்டுக் கதைகள் வரிசையில் அடங்கிவிடும் அபாயமிருந்தும் நேர்த்தியாக எழுதியிருப்பது.

2) புனைவுகளை தவிர்த்து மனிதர்களை மனிதர்களாகவே உலவ விட்டிருப்பது.

 இம்மூன்று கதைகளும் எங்கோ நடந்த நிஜமாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது, அந்த அளவுக்கு மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. புத்தகத்திற்கு கொடுக்கும் காசுக்கு நிச்சயமாக நீங்கள் மன நிறைவைடையலாம்.

=================================================================

தமிழினி பதிப்பகம் 

முதல் பதிப்பு : 2007, இரண்டாம் பதிப்பு : 2012.

மொத்தப் பக்கங்கள் : 112

விலை : ரூபாய் 80/-

==================================================================

படித்துச் சொன்னது 

அரசன்