Wednesday, July 20, 2016
Posted by
aavee
at
11:16 AM
Labels:
Gayathri Siddharth,
Mayakkuru Magal. மயக்குறு மகள்,
அமுதினி,
காயத்ரி சித்தார்த்,
விகடன் பிரசுரம்.
7
comments
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது,
சிறு வயதில் பள்ளியில் ஆஷா மிஸ் கூறிய "ஸ்னோ ஒயிட்" கதைதான் நான்
முதன்முதலில் கேட்ட ஒரு தேவதைக் கதை. அதற்குப் பிறகு நண்பரின் மகளுடன்
உரையாடுவதற்காக "டிஸ்னி ஃபிரின்சஸ்" எல்லோரைப் பற்றியும் படிக்கத்
துவங்கினேன். தமிழில் இதுபோல் ஒரு தேவதைக் கதை உண்டா எனத் தெரிந்து கொள்ளும்
பொருட்டு 'எல்லாம் தெரிந்த' நண்பன் கூகிளிடம் கேட்டேன். அவனோ ஆசானின்
"ஸ்ரீரங்கத்துத் தேவதைகளை" கொண்டு வந்து கண் முன்னே நிறுத்தினான்.
அதுசரி, நாம்தான் தேவதைகளை பருவ மங்கைகளாக உருவகப்படுத்தியே பழகியவர்கள் ஆயிற்றே.
புத்தகத் திருவிழா சென்ற போது நண்பர் டின் என்கிற தினேஷ் 'மயக்குறு
மகள்' என்ற புத்தகத்தை வாங்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றார். நானும்
புத்தகத்தை எடுத்து முன்னுரை வாசித்தேன். அங்கே எழுத்தில் சரித்திரம் படைக்கும்
நாயகன் ஒருவர் புத்தகத்தை சிலாகித்து எழுதியிருந்தார். அதிலும் அவர் அதை
'பாபநாசம்' படத்தோடு ஒப்பிட்டு ஒரு வரி எழுதியிருந்தார். ஜெமோவின் அந்த வரிகள்
ஒவ்வொன்றும் நான் தேடிக் கொண்டிருந்த தேவதைக் கதை இதுதான் என்பதை எனக்கு
உணர்த்தியது.
வீட்டிற்குச் சென்றதும் புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகங்களை அடுக்கி
வைத்த போது 'அன்சைஸ்' இல் இருந்த இந்த புத்தகம் கொஞ்சம் தலையை எட்டி நோக்கி என்னை
வாசித்துப் பார் என்பதுபோல எனைப் பார்த்தது. அச்சமயத்தில் நான் வைரமுத்துவின்
'கவிராஜன் கதையை' சுவாசித்துக் கொண்டிருந்தேன். Random ஆக ஒரு பக்கத்தை தேர்வு
செய்து 'அம்மு பள்ளிக்குச் சென்ற முதல் நாளை' வாசிக்கத் துவங்கினேன்.
என் வாழ்நாளில் நான் புத்தகங்கள் பலவற்றை வாசித்துச்
சிரித்திருக்கிறேன், காதல் வயப்பட்டிருக்கிறேன், கோபம் கொண்டிருக்கிறேன்,
அச்சமடைந்து ஹாலைக் கடந்து சமையலறை சென்று தண்ணீர் எடுத்துக் குடிக்கவே
பயந்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாய் ஒரு புத்தகத்தை வாசித்து கண்ணீர் விட்ட
நிகழ்வு அன்றுதான் அரங்கேறியது. அப்போதே முடிவு செய்துவிட்டேன் அமுதினிக்காக
கவிராஜன் கொஞ்ச காலம் காத்திருக்கலாம் என்று.
இந்தப் புத்தகம் எழுதிய காயத்ரி சித்தார்த் அவர் வீட்டுக் குட்டித்
தேவதை பிறந்தது முதல் பேசிய பிள்ளை மொழிப்பேச்சுகள், சின்னச் சின்ன சேட்டைகள், புத்திசாலித்தனமான
கேள்விகள், அசரவைக்கும் பதில்கள் என நம்மையும் அமுதினியின் குட்டி நண்பரகளாய்ப்
பாவித்துக் கதை சொல்கிறார். தினமும் ஒரு அத்தியாயமாவது படித்துச் செல்லவில்லை
என்றால் அன்றைய பொழுது நிறைவடையாத உணர்வாக மாறத் துவங்கியது. சில நாட்களில் படித்த
அமுதினியின் லூட்டியை நினைத்து அலுவலகத்தில் வெடித்துச் சிரித்ததும் நடந்தது.
இந்தப் புத்தகத்தை ஒரு பிள்ளை வளர்கையில் எழுதிய நாட்குறிப்பு போல
அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது. உதாரணத்திற்கு, இதில் காயத்ரியும்
அமுதினியும் விளையாடும் விளையாட்டு ஒன்று, ஆங்கிலத்தில் Role-Playing என்று
கூறுவர். மகள் தாயாகவும், தாய் சேயாகவும் மாறி விளையாடும் ஒரு விளையாட்டு. இது ஒரு
சிறப்பான Parenting ஆக எனக்குத் தோன்றியது, காரணம் இந்த விளையாட்டில் ஒரு தாயாக
தன்னை பாவிக்கையில் பிள்ளைக்குத் தான் செய்யும் தவறுகள் எளிதாகவும், அதே சமயம் மனம்
கோணாத வகையிலும் புரிந்து விடுகிறது. அதுமட்டுமல்ல. பிள்ளை தாயிடம் என்ன
எதிர்பார்க்கிறாள் என்பதை ஒரு தாயும் அங்கே உணர்ந்து கொள்கிறார்.
மற்றொரு விஷயம், குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு கூடுமானவரை
நிஜத்தை கூற முயற்சிக்க வேண்டும். நற்பண்புகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்றும் அவர்
வாசித்து அனுபவித்த இலக்கியங்களுடன் ஒப்பிட்டு நம்முடன் பகிர்கிறார் காயத்ரி.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் ரசித்து மகிழ்ந்தேன் என்ற போதும் என்னை மிகவும்
ரசிக்க வைத்த ஒரு விஷயம் அவர்
பிள்ளைக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த பாங்கு. சம்மணம் போட்டு அமர்வது 'க்' எனவும்
ஒற்றைக் காலைத் தொங்க விடுவது 'த்' எனவும் அந்தக் குட்டிப் பெண் எளிதில் புரிந்து
கொள்ளும் வகையில் சொல்லிக் கொடுத்து சிறப்பு.
இன்னுமொரு விஷயம் நான் உணர்ந்தது, இது பிள்ளையைப் பற்றிய புத்தகம்தான்
என்றபோதும் அதன் இடையே கணவன் மனைவியிடம் இழையோடிய பாசத்தையும், அன்பினையும் உணர
முடிந்தது. குறிப்பாய் முதல் நாள் மகளை பள்ளியில் விட்டுவிட்டு கனத்த மனதுடன்
கணவருக்கு அழைத்துப் பேசிவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் எதிரில்
தெரிந்த அங்காடி ஒன்றில் நேரம் போக்கிவிட்டு சொல்ல முடியாத ஒரு சங்கடமான ஒரு
உணர்வுடன் அந்தத் தாய் வெளியே வந்த போது, அலுவலக வேலைகளை விட்டுவிட்டு மனைவிக்கு ஆதரவாய் தோள்
தந்த அந்தக் கணவரின் காதல். பணி நிமித்தம் குடும்பத்தை குறிப்பாக பிள்ளைக்
கனியமுதை விட்டுவிட்டு அயல்நாட்டிலிருந்து ஸ்கைப் மூலம் அந்த தேவதையின் முகம்
ரசித்த ஒரு தந்தையின் அன்பு. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
தான் தாயான தருணத்தில் தான் தன்னுடைய தாய்பட்ட சிரமங்களை உணர முடியும்
என்பதையும் ஒரு உட்பொருளாக சொல்லி இருநூற்றுச் சொச்சம் பக்கங்களும் அதற்குள் முடிந்துவிட்டதா
என்றெண்ணும் வண்ணம் காயத்ரியின் எழுத்து வாசிப்பவர்க்கு எளிமையாய் இருக்கிறது. படித்து
முடித்து பல நாட்கள் ஆனபோதும் அமுதினியின் பிள்ளைத் தமிழ் காதுகளில் இன்னும்
ரீங்காரமிடுகிறது. இவள் காணும் பிள்ளைக் கனவுகள் நமக்கு வராதா என ஏங்க வைக்கிறது.
கோச்சடையானுக்கே துள்ளிக் குதித்த இந்தக் குட்டிப் பெண் 'கபாலி'யைக் கண்டு எங்ஙனம்
ஆர்ப்பரிக்கப் போகிறாள் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது. என்றேனும் வாய்ப்பு
கிடைத்தால் இந்த அழகான குடும்பத்தை சந்தித்து உரையாட வேண்டும் என்றும் ஆவல்
பொங்குகிறது.
நூலின் பெயர் : மயக்குறு மகள்
ஆசிரியர் : காயத்ரி சித்தார்த்
பக்கங்கள் : 207
விலை : ரூ. 140
வெளியிட்டோர் : விகடன் பிரசுரம்.
757, அண்ணாசாலை,
சென்னை-2
757, அண்ணாசாலை,
சென்னை-2
Subscribe to:
Posts (Atom)