Tuesday, January 28, 2014

பரபரப்பின் பெயர் துளசிதளம்!

‘துளசிதளம்' எண்டமூரி வீரேந்திரநாத்தின் மாஸ்டர் பீஸ்களில் தலையாயது. சுமார் 20 ஆண்டுகள் முன் ‘சாவி' இதழில் எ.மூ.வீ.நாத்தின் ஆந்திர மூலத்தை சுசீலா கனகதர்கா என்பவரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்தபோது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் அந்தத் தொடர்கதையின் இறுதிப்பகுதி அப்ரப்டாக முடிந்தது போலத் தோன்றியது. ஸ்ரீனிவாச பிள்ளை என்பவன்தான் குற்றவாளி என்று ஒரு வரி வரும். யார் அந்த ஸ்ரீனிவாச பிள்ளை துளசி பிழைத்தபின் என்ன நடந்தது என்கிற விடைதெரியாத கேள்விகள் இருந்தன. பின்னர் புத்தகமாக்கப்பட்ட போதும் அப்படியே. 

இப்போது கௌரி கிருபாநந்தன் என்பவர் எ.மூ.வீ.நாத்தின் நாவல்களை மொழிபெயர்த்து வருகிறார். அவருடன் பழக்கம் உண்டு என என் வாசகி சமீரா சொன்னபோது சமீராவிடம், அந்தப் பரபர நாவலின் க்ளைமாக்ஸைப் படிக்காத வருத்தத்தை வெளியிட்டேன். இப்போது கௌரி கிருபாநந்தன் முழுமையாக மொழிபெயர்த்து அல்லயன்ஸ் வெளியீடாக வந்திருக்கும் துளசிதளம் என் குறையை நீக்கியது. ஒரு நாவல் குறையுடனேயே வெளிவந்து 20 ஆண்டுகளுக்குப் பின் திருத்தப்பட்ட பதிப்பு இப்போது வந்துள்ளது என்பது வெகு வியப்பான விஷயம்!

‘துளசிதளம்' என்ன மாதிரியான கதை? ஸ்ரீதர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவன். தன் மேலதிகாரியின் பேத்தியை ஒரு பிரச்னையின் போது தொழிலாளி ஒருவனிடமிருந்து காப்பாற்றுகிறான். அதில் ஐம்பதடி உயரத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்டதில் அவனுக்கு குழந்தை பாக்கியம் இனி இல்லை என்கிறார் டாக்டர். வெகுநாட்களாக குழந்தை இல்லாமலிருந்து அப்போது கர்ப்பமாகி இருக்கும் அவன் மனைவி சாரதாவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. துளசி எனகிற அந்தக் குழந்தையின் பேரில், அவள் 10வது வயதில் கிடைக்குமாறு இருபது லட்சம் ரூபாய் சொத்தை எழுதி வைத்துவிட்டு தன் நாட்டிற்கு (இங்கிலாந்து) சென்று விடுகிறார் மேலதிகாரி. துளசி 10ம் வயதை எட்டுவதற்கு முன் இறந்தால் சொத்துக்கள் ஸ்ரீகிருஷ்ணா அநாதைப் பெண்கள் ஆசிரமத்திற்குப் போய்ச் சேரும் என்கிறது உயில்.

அந்த ஆசிரமத்தை நடத்தும் (போலி) சுவாமி காத்ரா என்கிற மந்திரவாதியின் உதவியை நாடுகிறார் துளசியைக் கொல்ல. அவன் குழந்தைகளுக்கெதிராகச் செய்ய மாட்டேன் என மறுக்க, அவனுக்குத் தெரியாமல் அவன் சிஷ்யன் செய்கிறான் அதை. குழந்தை துளசிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட, ஸ்ரீதரின் நண்பன் நம்பூதிரி அது பில்லி சூனித்தால் வந்தது என்கிறான். அதுபோன்ற விஷயங்களில் நம்பிக்கையற்ற ஸ்ரீதரைக் கேட்காமலேயே வேறொருவன் மூலம் சூனியத்தைத் திருப்பியடிக்க, காத்ராவின் சிஷ்யனை அது பலி கொள்கிறது. விளைவாக, காத்ராவே களத்தில் இறங்கி, காஷ்மோரா என்கிற மிக்க் கொடிய சாத்தானை துளசியின் மேல் ஏவுகிறான். அது தினம் ஒரு வியாதியைத் தந்து 22ம் நாள கொல்லவல்லது. விளைவாக... துளசிக்கு தினம் ஒரு வியாதி ஏற்பட்டு துடிதுடிக்கிறாள். அவளுக்கு சிகிச்சை தரும் டாக்டர் பார்த்தசாரதி என்ன பிரச்னை என்றே கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்.

ஸ்ரீதரின் வீட்டில் அவன் தூரத்து உறவு என்று சொல்லி ஒட்டிக் கொள்ளும் சரஸ்வதி என்கிற நடுத்தர வயது நபரும், அவன் மகன் என்று சொல்லிக்கொண்டு மாரி என்கிற இளைஞனும் ஒட்டிக் கொள்கின்றனர். அவர்கள் சுவாமியின் கையாட்கள். தினம் நள்ளிரவு மூன்று சொட்டு ரத்தம் துளசியினுள்ளிருக்கும் காஷ்மோராவுக்கு படைக்க வேண்டும் என்பதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றனர். ஸ்ரீதரின் தங்கை அனிதாவின் அழகைக் கண்ட மாரி, அவள் அப்பாவித்தனத்தை பயன்படுத்திக் கொண்டு அவளை அடைந்து விடுகிறான். அவள் தற்கொலை செய்து கொள்ள, சாரதாவின் தம்பியான நாராயணன் (பிறவி ஊமை) அதற்குக் காரணம் மாரி என்பதை தெரிந்து கொண்டு, அவனை துடிதுடிக்க வைத்துக் கொல்வேன் என்று சபதமிட்டு அதற்கான வேலைகளில் இறங்குகிறான்.

ஜெயதேவ் என்கிற புகழ்பெற்ற ஹிப்னாடிக் டாக்டரின் உதவியை நாடுகிறாள் சாரதா. அவர் தன் திறமையின் மூலம் சற்றே துளசிக்கு ஆறுதல் தந்தாலும் நாளுக்கு நாள் குழந்தை கிழிந்த நாராய் மாறிக் கொண்டிருப்பதை தடுக்க முடியவில்லை. இப்படியே 20 நாட்கள் கடந்துவிட, 21ம் நாளன்று பேய், பிசாசு, பில்லிசூனியங்களில் நம்பிக்கையற்ற ஸ்ரீதருக்கு அதை நம்பும் வண்ணம் ஒரு சம்பவம் அவன் கண்முன் நடக்கிறது. தன் நண்பன் நம்பூதிரி மற்றும் லாயர் வித்யாபதியுடன் சேர்ந்து ஒரே நாளில் அந்த சாத்தானை முறியடித்தே தீர வேண்டும் என்று போராடுகிறான். இன்னொருபுறம் நடக்கிற விஷயங்களுக்கு விஞ்ஞான ரீதியாக விடை கண்டுபிடிக்க முயலும் ஜெயதேவுக்கு அதற்கான விடை கிடைக்கிறது. துளசியின் உடலில் தாயத்து வடிவில் கட்டப்பட்ட எலக்ட்ரானிக் டிவைஸ்தான் காரணம் என்று அறியும் அவர் அதன் மூலம் செயல்படுபவனை கண்டுபிடித்து அழிக்க முற்படுகிறார். இந்த இருவழிப் போராட்டத்தின் முடிவில் குழந்தை துளசி பிழைத்தாளா, நடந்தவை அனைத்தும் விஞ்ஞானமா, பைசாசமா? என்கிற (சுவாரஸ்ய) புதிர்களுக்கு விடையை புத்தகம் தரும்.

நூலாசிரியர் பற்றிய தகவல்கள் :


நூலாசிரியர் எண்டமூரி வீரேந்திரநாத் அடிப்படையில் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். ஆந்திரா வங்கியில் உயரதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர் ஒரு கட்டத்தில் (நம்ம ராஜேஷ்குமார் போல) முழுநேர எழுத்தாளராகி விட்டார். பைசாசம், விஞ்ஞானம், சமூகம், த்ரில்லர், ஜேம்ஸ்பாண்ட் கதை, சுயமுன்னேற்றக் கட்டுரைகள் என்று எழுத்தில் எந்த ஏரியாவையும் விட்டு வைக்காதவர் இவர். ஒரு சமயம் என்.டி.ராமராவுக்குப் பிறகு இரண்டாவது பிரபலம் என்று (1982)ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜனரஞ்சகமாக எழுத்தைக் கைக்கொணடிருபபவர் என்றாலும் சாகித்திய அகாடமி விருதும் பெற்ற வல்லமையுடையது இவர் எழுத்து. இவர் சினிமாவும் இயக்கியிருக்கிறார். சினிமா வசனத்திற்கான ஜனாதிபதி விருதும், தொலைக்காட்சித் தொடருக்கான கோல்டன் நந்தி விருதையும் வென்றிருக்கிறார். இவரின் ‘வெற்றிக்கு ஐந்து படிகள்’ என்ற சுயமுன்னேற்ற நூல் தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான சாதனை படைத்துள்ளது.

விஞ்ஞானமா, பைசாசமா என்கிற கேள்வியை எழுப்பிய ஒரு பரபரப்பு த்ரில்லரை நம்ம சுஜாதா ‘கொலையுதிர் காலம்’ ஆக எழுதியிருக்கிறார். தமிழில் சுஜாதா கையாண்ட விஷயம் ஒருவிதமான சுவாரஸ்யம் என்றால் இந்த ஆந்திர சுஜாதா வேறு ஒரு கோணத்தில் அதைக் கையாண்டு அசத்துகிறார். ஆயின் இரு எழுத்தாளர்களுமே கடைசியில் எதனால் குற்றம் நிகழ்ந்தது என்பதற்கான விளக்கத்தை வாசகர்கள் அவரவர் மனப்போக்கின்படி தீர்மானிக்கட்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக செயல்பட்டிருக்கிறார்கள்.

‘துளசிதளம்’ கதையில் ஒருபுறம் 1ம் நாள், 2ம் நாள் என்று துவங்கி 21ம் நாள் வரவும் ஸ்ரீதர் மகளுக்காகப் போராடுவதை மணிக் கணக்காக நம் முன் விவரித்து, இங்கே அதேபோல ஜெயதேவ் போராடுவதையும் மணி, நிமிட சுத்தமக விவரித்து, மூன்றாவது ட்ராக்காக எப்படி புத்திசாலித்தனமாக மாரியை நாராயணன் கொல்கிறான் என்பதை விவரித்து, மும்முனை சுவாரஸ்யத்தில் டோட்டலாக படிப்பவருக்கு பி.பி.யை எகிற வைத்து விடுகிறார் எ.மூ.வீ.நாத். ‘கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத நாவல்’ என்கிற வாசகத்தை பெயரளவுக்குச் சொல்லாமல் அசலாக மெய்ப்பிக்கும் புத்தகம்.

இதில் என்னைக் கவர்ந்த அம்சம் என்னவெனில்... நூலாசிரியர் தரும் தகவல்கள். பூத, பைசாச வித்தைகள் மூலம் சிறுமியை அழிக்க முற்படுகிறார்கள் எனில், அதற்காக மந்திரவாதிகள் மேற்கொள்ள வேண்டிய நியமங்கள், கஷ்டங்கள் போன்ற விவரங்களை ஏதோ மந்திரவாதிகளுடன் பலஆண்டு பழகியவர் போல அள்ளித் தந்திருக்கிறார். அதேசமயம், விஞ்ஞான ரீதியாக வேறொரு இடத்திலிருந்து குழந்தையை மெஸ்மெரிசம் செய்து எப்படி அட்டாக் பண்ண முடியும் என்பதற்கான விளக்கம் (படமே போட்டு) தெளிவாகத் தந்திருக்கிறார். அசத்துகிறது அந்த உழைப்பு!

இந்தக் கதை தொடராக வெளிவந்த காலத்தில் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டதாம். எந்த அளவுக்கு என்றால்... யாராவது சாதாரணமாக உடம்பு முடியாமல் படுத்தால் கூட ‘எனக்கு சூனியம் வெச்சுட்டாங்க’ என்று பயந்து நடுங்கும் அளவுக்கு. ஆசிரியருக்கு நிறைய மிரட்டல்களும், வினோத பார்சல்களும் வந்தனவாம். இத்தனைக்கும் பின்னர் ‘பதினோரு ஆண்டுகளுக்குப் பின் காஷ்மோரா மீண்டும் விழித்துக் கொள்வதோடு அடுத்த நாவலான மீண்டும் துளசி துவங்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். (நல்லவேளை... அந்த இரண்டாம் பாகத்தையும் வாங்கிவந்து விட்டேன்.) அதைப் படிக்க நான் புறப்படுகிறேன். இதுவரை துளசிதளம் படிக்காதவர் நீங்கள் எனில், உடனே அதைத் தேடிப் பிடித்துப் படிக்கப் புறப்படுங்கள்!

நூலின் பெயர் : துளசிதளம், பக்கங்கள் : 368, விலை : ரூ.160, வெளியிட்டோர்: அல்லயன்ஸ் கம்பெனி, ப.எண்.244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை&14, தொ.பே: 24641314, இணையம்: www.alliancebook.com

56 comments:

 1. புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்... தலைப்பைப் பார்த்து "மின்னல் வரிகள்" தளம் என்று வந்தால்... புத்தகம் மின்னல் அடித்தது... புத்தகக் காதலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  புதிர்கள் உள்ள புத்தக அறிமுகத்திற்கு நன்றி... நூலாசிரியர் பற்றிய தகவல்கள் உட்பட சிறப்பான அறிமுக பகிர்வு... தொடர... சிறக்க வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
  Replies
  1. முதல் கருத்தாளராக வந்து புத்தககக் காதலர்களை வாழ்த்திய, தளத்தை வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் எங்களின் நன்றி! உங்களைப் போன்றோரின் ஆதரவில் அறிமுகங்கள் தொடரும், சிறக்கும் நிச்சயம்!

   Delete
 2. 368 பக்கமும் பரபரப்பா போகும் போலிருக்கே... அடுத்து நாம் சந்திக்கும்போது எனக்கு பார்சல்....

  ReplyDelete
  Replies
  1. தகவலா சொல்லும் போதுதான் 368 பக்கம்னு தெரியுது ஸ்.பை. ஒரே நாளில் 368ஐயும் கடக்க வெச்சது என்னை! எப்ப வேணா வந்து வாங்கிக்கப்பா1 டாங்ஸு!

   Delete
 3. போன வருடச் சந்தையில் வாங்கியது. பத்து பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. உங்கள் விமரிசனம் புத்தகத்தை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. முதல் ஐம்பது பக்கங்களாவது நான் படிப்பேன் எந்த புத்தகமாக இருந்தாலும். இந்த நாவலைப் பொறுத்தவரை அவர் பேஸ்மெண்ட்டை ஸ்ட்ராங்காகப் போட்டுவிட்டுத்தான் மெயின் மேட்டருக்குள் நுழைகிறார். 150 முதல் முடிவுரை பக்கங்கள் தானாகப் புரள்கின்றன அப்பா ஸார்...! படித்துப் பாருங்கள்... தெரியும்! மிக்க நன்றி!

   Delete
 4. புதிய தளம் மின்னுகிறது அண்ணா.....

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வ தந்த உங்களின் பாராட்டுக்கு மனம் நிறைய நன்றி பிரதர்!

   Delete
 5. பில்லி சூனியமா . நிச்சயம் படிக்க வேண்டும் .

  ReplyDelete
  Replies
  1. பில்லி சூனியத்துடன் விஞ்ஞானமும் கைகோர்த்து ஆதிக்கம் செய்வதால்தான் இத்தனை சுவாரஸ்யம் ரூபக்! அவசியம் படியுங்கள்...! மிக்க நன்றி!

   Delete
 6. ‘சாவி' இதழில் தொடராக வந்தபோது பரபரப்பாக படித்தோம்..

  ReplyDelete
  Replies
  1. நானும் அப்போது படித்திருக்கிறேன்மா. ஆனால் அதில் முழுமை இல்லை. பிற்பகுதியில் ஸ்ரீனிவாச பிள்ளை குறித்த பகுதிகள் வெட்டப்பட்துடன், துளசி பிழைத்தபின் குற்றமிழைத்தவர்கள் எப்படி தண்டனை பெற்றார்கள் என்கிற விவரமும் வெட்டப்பட்டு விட்டது. இந்தப் புத்தகத்தில் முழுமையாகப் படிக்கையில்தான் கதையின் முழுப் பரிமாணமும் தெரிகிறது. இன்னும் ரசிக்க முடிகிறது. அதனால்தான் மீண்டும் படிக்க சிபாரிசு செய்கிறேன். உங்களுக்கு மனநிறைவுடன் என் நன்றி!

   Delete
 7. விமர்சனம் தூள் வாத்தியாரே.. முக்கியமான புத்தகங்கள் படித்த பின் இதனை லிஸ்டில் சேர்த்து கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. இதை லிஸ்டில் சேர்த்துக் கொண்டு எப்ப வேணும்னாலும் என்ட்ட இருந்து வாங்கிக்கலாம் சீனு! விமர்சனத்தை ரசிச்சதுக்கு மகிழ்வான என் நன்றி!

   Delete
 8. இந்த புத்தகம் படித்துவிட்டேன் சார்... ரொம்ப விறுவிறுப்பான கதை... ஆனாலும் காஷ்மோரா பத்தி சொல்லும்போது ரொம்ப பயமா இருந்தது..... மீண்டும் துளசி தளம் படிக்காமல் விட்டதே.. காஷ்மொராக்கு பயந்து தான்...

  எத்தன பூடி சுலசனா ராணி அவங்க கதைகளால ஈர்க்கப்பட்டு, தெலுங்கு எழுத்தாளர்கள் புத்தகங்கள தேடி பிடிச்சப்ப படித்த புத்தகம் இது.....

  புதிய தளத்துக்கு வாழ்த்துக்கள் சார்... நிறைய எழுதுங்க.....
  ஆரம்பமே டெரர்-ஆ இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. ‘மீண்டும் துளசிதளம்’ பாதிவரை படிச்சுட்டேன். அதுவும் செம ஸ்பீட்! ஆறு பேர் சேர்ந்து எழுதப் போறதால நிறைய எழுத முடியும்மா சமீரா. தொடர்ந்து தவறாம வந்துடு. ரைட்டா? மிக்க நன்றிம்மா!

   Delete
 9. "ஸ்ரீனிவாச பிள்ளை என்பவன்தான் குற்றவாளி என்று ஒரு வரி வரும். யார் அந்த ஸ்ரீனிவாச பிள்ளை துளசி பிழைத்தபின் என்ன நடந்தது என்கிற விடைதெரியாத கேள்விகள் இருந்தன. பின்னர் புத்தகமாக்கப்பட்ட போதும் அப்படியே. "- இதே கேள்வி தான் எனக்கு வந்தது...

  ReplyDelete
  Replies
  1. இப்ப கௌரி கிருபாநந்தன் அம்மா மொழி பெயர்த்த இந்தப் பதிப்புல குழப்பமே இல்லாம தெளிவாக இருக்குதேம்மா...!

   Delete
 10. என்னையும் சேர்த்துக்கோங்க ப்ளீஸ்

  ReplyDelete
  Replies
  1. நீ இல்லாமயா தங்கச்சி...! சந்தோஷமா சேத்துக்கறோம்...! மிக்க நன்றி!

   Delete
 11. புதிய தளங் கண்டேன்! வளர வாழ்த்து!

  ReplyDelete
  Replies
  1. புதிய தளத்துக்கு உங்களின் ஆசியும், வாழ்த்தும் கிடைத்ததில் நாங்களனைவரும் மிக மகிழ்கிறோம். மிக்க நன்றி ஐயா!

   Delete
 12. மிகவும் நல்ல நாவல் நானும் முன்பு வாசித்திருக்கிறேன். மீண்டும் வாசிக்கும் ஆவலை ஏற்படுத்திவிட்டீங்க.
  புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்து, எங்களை வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 13. எண்டமூரியின் ஒரே ஒரு நாவலை மட்டும் படித்துள்ளேன் அதன் பெயர் பதியன் ரோஜா... முழுமையான கமர்ஷியல் வகை நாவல்.. இடையில் அங்கு அங்கு தூவியிருக்கும் செய்திகள் நற்றாக இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. எ.மூ.வீ.நாத்தின் எழுத்துக்களை இலக்கிய வகையில் சேர்க்க யோசிப்பார்கள். ஆனால் எல்லாவற்றிலும் நமக்கென்று ஏதாவது ஒரு விஷயமும், விறுவிறுப்புக் குன்றாமல் படிக்க வைக்கிற சாமர்த்தியமும் இருக்கும். அதான் அவர் ஸ்பெஷாலிட்டி!

   Delete
 14. இன்னும் நிறைய நல்ல புத்தகங்களை இங்கே காண ஆவல்... முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. கூட்டு முயற்சி இது என்பதால் நிறையப் படிக்கலாம் ப்ரியா. வெற்றிக்கு வாழ்த்திய உனக்கு அன்புடன் என் நன்றி!

   Delete
 15. புதிய வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள்!!!

  இதில் சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி!

  அப்புறம்...
  இந்த 'குளசிதளம்' தொடர்கதை, சாவியில் ஆரம்பமாகும்போது முதல் 5 வாரங்களுக்கு (மட்டும்) சாவியின் உள்ளே வராமல்
  தனி இலவச இணைப்பாக வந்ததே... ஞாபகம் வருகிறதா சார்?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு சல்யூட் நிஜாம்! மாருதியின் ஓவியத்துடன் அழகான இணைப்பாக வந்தது. பிகினிங் நல்லாத்தான் இருந்துச்சு... ஃபினிஷிங் தான்...

   Delete
 16. //உடனே அதைத் தேடிப் பிடித்துப் படிக்கப் புறப்படுங்கள்! //

  இப்படி போட்டால், அப்புறம் யாரும் கருத்து சொல்லாமல் புறப்பட்டுறப் போறாங்க???

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... ஹா... கருத்துப் போட்டுட்டு.... அப்படின்னு ஒரு வரி சேர்த்திருக்கணும் போலயே... என்னமா யோசிக்கிறீங்கப்பு...! வலையில் இணைந்து எங்களை வாழ்த்திய உங்களுக்கு மகிழவுடன் என் நன்றி!

   Delete
 17. இந்த கூட்டு வலைத்தளம் ஒரு நல்ல ஐடியா! அதில் முதல் பதிவாக உங்கள் புத்தக விமரிசனம் மிகவும் நன்று. சுசிலா கனகதுர்கா வின் மொழி பெயர்ப்புக்கும் இந்த புதிய மொழி பெயர்ப்புக்கும் வித்தியாசம் ஏதாவது தெரிந்ததா? சுசிலா வின் மொழி பெயர்ப்பு உயிர்ப்போடு ஒரிஜினல் எழுத்து மாதிரியான உணர்வைத் தந்தது. மீண்டும் நாவலைப் படிக்கும் சையைத் தூண்டிவிட்டது உங்கள் விமரிசனம் / கதை சுருக்கத்தின் வெற்றி! பதிவுக்கு பாராட்டுக்கள். - ஜெ.

  ReplyDelete
  Replies
  1. டியர் ஜெ... சுசீலா கனகதுர்கா மிக அழகாக மொழி பெயர்த்திருப்பார் என்பது நிஜம்தான். ஆனால் தெலுங்கு மூலத்திலிருந்து பெயர்க்கப்பட்டது என்ற உணர்வு படிக்கையில் ஏற்படும். கௌரி மேடத்தின் மொழிபெயர்ப்பில் இப்போ படிக்கும் போது அசல் தமிழ் நாவல் படிப்பது போன்ற உணர்வுதான் என்னுள் ஏற்பட்டது. எங்கும் உறுத்தல் எதுவும் தட்டவேயில்லை. எனில் எது சிறந்த மொழிபெயர்ப்பென்று தனியாகச் சொல்ல வேண்டுமா...? என் எழுத்தை ரசித்துப் பாராட்டின உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 18. புதிய தளத்திற்கு வாழ்த்துகள் கணேஷ்......

  சிறப்பான வடிவமைப்பு. தொடரும் புத்தக அறிமுகங்களைப் படிக்க ஆவலுடன்.....

  ReplyDelete
  Replies
  1. தளத்தை வாழ்த்தி, ஆவலுடன் எங்கள் உடன்வரும் உங்களுக்கு மிகமிக மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 19. எ.மூ.வீரெந்ரனாத், இந்திரா சௌந்தரராஜன் இவர்களை ஒப்பிட்டு எழுத முடியுமா? - ஜெ.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் விருப்பம் அதுவானால் மகிழ்வுடன் நிறைவேற்றுகிறேன் ஜெ. ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்கள்... சீரியஸ் நடையில் ஒப்பிட்டு எழுதணுமா? இல்ல... கொஞ்சம் ஹ்யூமர் கோட்டிங்கோட எழுதினா பரவாயில்லையா?

   Delete
  2. உங்கள் ஸ்பெக்ஷல் நடைதான் பெஸ்ட்! - ஜெ.

   Delete
 20. புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள், இனி வாசிப்பு தீனிக்கு பஞ்சமே இருக்காது எனக்கு மிக்க நன்றி...!

  ReplyDelete
 21. நல்ல முயற்சி,பாராட்டுகள்

  ReplyDelete
 22. பயந்து பயந்து படித்தது நினைவிற்கு வருகிறது. இப்போ இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும்.

  ReplyDelete
 23. முதலில் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  தனித்தனியாக எல்லோரும் புத்தக விமர்சனங்களை எழுதினால், சில நேரங்களில், படிக்காமல் போய் விடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆனால் இப்படி, புத்தக விமர்சனங்களுக்காக ஒரு வலைப்பூவை ஏற்படுத்தியதால், எல்லா விமர்சனங்களையும் ஒரே இடத்தில் படிக்க முடியும்.

  இந்த எண்ணம் தோன்றி, பிறகு அதனை செயல் படுத்தியமைக்கு மிக்க நன்றி.

  என்னை மாதிரி புத்தக பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். எல்லா விமர்சங்களையும் படித்துவிட்டு, பிடித்திருந்தால் வாங்கி வீட்டு நூலகத்தில் சேர்த்து விடலாம்.

  நான் இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்களில் பெரும்பாலானவற்றை படித்திருக்கிறேன். வீட்டு நூலகத்திலும் அவருடைய நாவல்கள் தான் அதிகம். அதனால், நானும் இந்த தளத்தில் எனக்கு பிடித்த அவருடைய நாவல்களுக்கு விமர்சனம் எழுதலாமா?

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக.. ! வாசகர்களால் வாசகர்களுக்காக வாசகர்கள் கூடும் வாசகர் கூடம்.. அதனால் யார் வேண்டுமானாலும் புத்தக விமர்சனம் எழுதலாம்..

   உங்கள் உற்சாகமான கருத்துகளுக்கு நன்றி

   Delete
 24. வணக்கம்

  ஒவ்வொரு மனிதனின் சிந்தனை ஆழுமை வளர்க்கும் வகையில் புதிய தளத்தை ஆரம்பித்தமைக்கு எனது வாழ்த்துக்கள் தொடந்து பல பதிவுகள் வெளிவரட்டும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 25. புதிய வலைப்ப்பூவிற்கு வாழ்த்துக்கள். தலைப்பு அருமை

  ReplyDelete

 26. புதிய தளம் சிறக்க, மேலும் வளர
  நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. இத்தளம் நல்லதொரு முயற்சி..வாழ்த்துகள்!

  ReplyDelete
 28. ஏதோ லின்ங் பிடித்து உள்ளே வந்தேன். மற்றூமொரு புத்தகக்கடை. பார்க்க சந்தோஷமாக இருக்கின்றது.

  பல வருடம் முன்பு பயந்து பயந்து படித்த கதை. நல்ல த்ரில்லர். அமானுஷ்யத்தையும், விஞ்ஞானத்தையும் குழப்பாமல் முடிவும் இருக்கும். இந்திரா சவுந்திரராஜன் வகையறா. இரண்டாம் பாகமும் விறுவிறுப்பு.

  இதில் வரும் சூனிய முறை காஷ்மோரா, நன்றாக நினைவில் இருக்கின்றது.

  ReplyDelete
 29. ’வாசகர் கூடம்’ - அருமையான முயற்சி. வாழ்க.

  (எண்ட மூரி கதைகளா! எண்ட அம்மே! பேய்த்தனமால்ல இருக்கும்)

  ReplyDelete
 30. யதேச்சையாக இந்த தளத்திற்கு வந்தேன். துளசிதளம் மற்றும் மீண்டும் துளசியைப் பற்றி இவ்வளவு விரிவான கருத்துகளைப் படிக்கும் போது மனம் நிறைந்து விட்டது. அந்த நாவல்களை எண்டமூரியிடம் அனுமதி பெற்று திரும்பவும் மொழிமாற்றம் செய்த முயற்சி வீண் போகவில்லை.
  yandamoori@hotmail.com
  tkgowri@gmail.com

  ReplyDelete
 31. யாரெல்லாம் எண்டமூரி ரசிகர்கள்..?

  ReplyDelete
 32. நண்பர்களே உங்கள் கவனத்துக்கு எனது ஆஸ்தான குருநாதர் மதிப்பிற்குரிய எழுத்தாளர் என்டமூரி வீரேந்திரநாத் எழுதி தமிழில் இதுவரை மொழி பெயர்க்கப்பட்டுள்ள 120 நாவல்களையும் படித்துள்ளேன் என்பதில் பெருமை அடைகிறேன்.. இனி அடுத்தடுத்து அவர் நாவல்கள் மொழிபெயர்க்கப்படவில்லையே என்ற ஏக்கம் தன எண்ணி வாட்டுகிறது. என்னிடம் எண்டமூரி எழுதிய ஒரு சில நாவல்கள் உள்ளன. சென்னையில் உள்ளவர்கள் அணுகலாம்..

  ReplyDelete
 33. கௌரி கிருபானந்தன் மேடம்.. நான் எனது வாழ்நாளில் சந்திக்க விரும்பிய நான்கு நபர்களில் நீங்களும் ஒருவர். உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா..?
  எனது தொலைபேசி.. 9171418819
  email ; vijaynvijay2020@gmail.com

  ReplyDelete
 34. புதிய தளம் வளர வாழ்த்துக்கள்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!