Sunday, April 27, 2014

நழுவும் நேரங்கள்-- வாசந்தியின் கதை விமரிசனம்

படைப்பாக்கம் : கீதா சாம்பசிவம்


 வழக்கமான வாசந்தியின் கதைகளில் இதுவும் ஒன்று என்ற கணக்கில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.  புத்தகம் முதல் பதிப்பு கண்ட வருடம் 1984.  அதன் பின்னர் 20 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பதிப்புக் கண்டிருக்கிறது.  இப்போது மேலும் பத்து வருடங்கள் ஆகிவிட்டன.  ஆனாலும் கதையின் சூழ்நிலையிலோ, கருக்களத்திலோ மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

 குடும்ப வாழ்க்கையில் கணவன் - மனைவிக்கிடையே உள்ள ஒற்றுமையின்மை குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைச் சொல்லும் கதை. இதைப் பல எழுத்தாளர்களும் கையாண்டிருக்கிறார்கள்.  வாசந்தியின் கதைக்களம் அவரது வழக்கம்போல் பணக்காரக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களையே கொண்டிருக்கிறது. பணம் மட்டும் இருந்தால் போதாது என்பதை உணர்த்தும் கதாநாயகி ஷீலா!  தாய், தந்தைக்கு இடையே உள்ள மாபெரும் இடைவெளியைத் தன் முயற்சியால் அகற்ற முயல்கிறாள்.

 வழக்கமான முக்கோணக் காதல் தான் அடிப்படையும் கூட. கதாநாயகியின் அம்மா மெத்தப் படித்தவளாக இருந்தும், தன் கணவனின் மாறுபட்ட நடத்தைக்குக் காரணம் என்ன என்பதைக் கணவனோடு விவாதிக்கக் கூட இல்லாமல்  தன் மனதைப் பூட்டுப் போட்டு இறுக மூடிவிடுகிறாள்.  நாளடைவில் அது பாறையைப் போல் இறுகிவிட, அவள் குழந்தைகளின் மேல் வைத்திருக்கும் அன்பும், பாசமும் கூட வெளிப்பட வழியின்றி ஒரு மோசமான தாயாகத் தெரிகிறாள் அவள் குழந்தைகளுக்கு.  தந்தை மேல் எந்தத் தவறும் இருக்காது என உறுதியாக நம்பும் கதாநாயகி ஷீலா, தாயின் இந்த குணத்தால் மிகவும் பாதிக்கப்படுகிறாள்.  என்றாலும் அவள் மன உறுதி அவளை முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வைக்கிறது.  அதே சமயம் தன் தம்பியின் சகவாசம் சரியில்லை என்பதை உணர்ந்ததும், அதைத் திருத்தவும் முயல்கிறாள்.  வெற்றியும் அடைகிறாள்.  அவளுக்கு அதிர்ச்சி அளிப்பது தந்தையின் முன்னாள் காதலியோடு அவருக்கு இப்போதும் தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்தது தான்.  ஆனாலும் அவள் மனம் ஒப்பவில்லை.  

தந்தையின் காதலியோடு தந்தைக்கு உடல் உறவு உண்டா?  அவளை அவர் ஏன் மணக்கவில்லை?  அவள் ஏன் இப்போதும் தந்தையோடும் உறவு வைத்திருக்கிறாள்?  அவளால் தான் தங்கள் குடும்பம் இந்த நிலைக்கு வந்திருப்பது அவளுக்குத் தெரியாமலா இருக்கும்?  இதற்கு எப்படி முடிவு கட்டுவது?  ஷீலா யோசித்து யோசித்து மூளை குழம்புகிறாள். இதற்கிடையில் ஷீலாவின் வீட்டு அவுட்ஹவுசில் குடி இருக்க வரும் டாக்டர் அவள் மனதில் மெல்ல மெல்ல இடம் பிடிக்கிறான்.  ஆனால் அவர்கள் நடுத்தரக் குடும்பம் என்பதால் தாய் ஒப்பமாட்டாள் என ஷீலாவுக்குக் கவலையாகவும் இருக்கிறது.  அதே சமயம் அந்த டாக்டரும் தன்னை விரும்புகிறானா என்பதில் சந்தேகமும் வருகிறது.  ஏனெனில் அவன் சென்னைக்குப் பெண் பார்க்கவும் போகிறான்.

 ஷீலாவின் கவலைகள் தீர்ந்தனவா?  அவள் தாயும், தந்தையும் ஒன்று சேர்ந்தனரா?  ஷீலாவின் காதல் நிறைவேறியதா?  இவை அனைத்தும் தெரிந்து கொள்ளப் படியுங்கள்.  சில இடங்களில் கொஞ்சம் மிகையான நிகழ்வுகளாகவும், சினிமாத்தனமாகத் தெரிந்தாலும் ஒருமுறை படிக்கலாம்.


நூலின் பெயர்   :    நழுவும் நேரங்கள் 
ஆசிரியர்           :    வாஸந்தி  
விலை              :    ரூ. 65 ( பத்து வருடங்களுக்கு முன்பு, இப்போ நிச்சயம் விலை ஏறியிருக்கும்) 
வெளியிட்டோர் :   வானதி பதிப்பகம் 


8 comments:

 1. நீங்க தந்திருக்கற கதையோட சுருக்கம் நல்லா இருககு கீதா மேம். ஷீலாங்கற பேர் வாஸந்தி மேடத்துக்கு ரொம்பப் புடிக்கும் போல... நான் படிச்ச ஜனனம தொகுப்புலயும் ஒரு கதாநாயகி பேர் அதுதான். வானதியில் இப்ப ப்ரிண்ட் இருக்குமான்னு தெரியல. பாக்கறேன். டாங்ஸு,

  ReplyDelete
  Replies
  1. பாருங்க கிடைக்குதானு, எனக்கு லென்டிங் லைப்ரரியில் கிடைச்சது. அநேகமாய் லென்டிங் லைப்ரரியில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அடுத்து இன்னும் சில கதைகளின் விமரிசனமும் இருக்கே! வரிசையா பயமுறுத்துவேனே! :))))

   Delete
 2. வாஸந்தி கதைகளில் நான் என்னென்ன படித்திருக்கிறேன் என்று நினைவில்லை. ஜனனம் படித்திருக்கிறேன். இந்தக் கதை நிச்சயம் படித்ததில்லை. ம்... பார்ப்போம்.

  ReplyDelete
 3. வாஸந்தியின் இந்த கதை படித்த நினைவு.... ஜனனம் படித்தில்லை.....

  ReplyDelete
 4. பெயரே படிக்கத் தூண்டுவதாய் உள்ளது.. இருபது ஆண்டுகள் தாண்டியும் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய இதுபோன்ற கதைகள் நிச்சயம் மக்கள் விரும்பி படித்தவைகளுள் ஒன்றாய் தான் இருக்க முடியும்.. உங்க விமர்சனம் அருமை..! நன்றி கீதா மேடம்!

  ReplyDelete
 5. இந்த எழுத்தாளர் புத்தகம் இதுவரை படித்ததில்லை ... நூலகத்தில் புத்தகம் இருக்கும்... படித்து பார்கிறேன்...

  நன்றி கீதா மேடம்!

  ReplyDelete
 6. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
 7. வாசந்தி படித்துள்ளேன் ... இந்த நாவலையும் விரைவில் படிக்க வேண்டும் !! .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!