Sunday, June 15, 2014

கோபல்ல கிராமம்- இனிமையான மனிதர்களின் இருப்பிடம்!
நான் நிச்சயம் புத்தகங்களை மெதுவாக வாசிப்பவன் அல்ல. முன்னூறு பக்க நாவல்களை இரண்டு அல்லது மூன்று நாட்களில் முழுதும் படிக்கக் கூடும் என்னால். ஆயினும் இந்தப் புத்தகத்தை கடந்த இரண்டரை மாதங்களாய் படித்த்த்த்த்த்த்துக் கொண்டே இருந்தேன். காரணம் இதில் ஆசிரியர் கி.ரா சுத்தத் தமிழையும் சுந்தரத் தெலுங்கையும் கையாண்டிருக்கும் அழகு, ஒவ்வொரு பக்கத்தையும் இரண்டு மூன்று முறை மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டியது. பொதுவாக கதையில் அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ளவே நமக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் இதில் நமக்கு படித்தவற்றை திரும்பப் படித்து அசை போட மனம் ஏங்கும். ஒரு சின்ன எடுத்துக் காட்டு இங்கே..          "அவள் அபூர்வமாகத் தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொருதரம் அப்படிச் சிரிக்கமாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பிலே தான் எத்தனை விதம்?

            கண்களால் மட்டும் சிரித்துக் காட்டுவது. 

            கண்கள் சிரிப்பதற்கு புருவங்கள் அப்படி ஒத்துழைக்கும்! கடைக்கண்ணால் சிரிப்பது.

            முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் நேர்பார்வையில் சிரிப்பது. தரையை பார்த்து சிரிப்பது. (அவளுடைய சிரிப்பிலேயே இதுதான் அழகு.) கண்களை சுற்றி பறவையாடவிட்டு - ஒரு சிரிப்பைக் காட்டுவாள். (அப்போது கண்கள் ஜொலிக்கும்) சில சமயம், சற்றே மூக்கை மட்டும் விரித்து மூக்கிலும் ஒரு சிரிப்பை  வரவழைப்பாள் !

             அவளுடைய மூக்கில் தொங்கும் புல்லாக்கின் கீழ் ஒரு முத்து தொங்கும். பற்கள் மின்ன அவள் சிரிக்கும் போதெல்லாம் அந்த முத்துக்கும் பற்களுக்கும் போட்டிதான்! புல்லக்கில் அப்படி ஒரு முத்தைக் கோர்த்து, பற்களுக்கு நேராய்த் தொங்க விடணும் என்று ஒரு ஆசாரிக்குத் தோணிருக்கே, அது எப்பேர்ப்பட்ட ரசனை !
                           

             இப்படி கதையில் வரும் கோபல்ல கிராமத்து கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் விவரிக்கும் பாங்கே தனி. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களைப் பற்றிய விவரணைகள் இருந்த போதும் சிறிதும் சலிக்காமல் நமக்கு படிக்கத் தோன்றும். மேலே சொன்னது சென்னா தேவி எனும் அழகு தேவதையை பற்றியது. அதேபோல்  அந்த கோட்டையார் குடும்பத்தின் ஒவ்வொரு நபரும் நமக்கு பரிச்சையமானவர் ஆகின்றனர். வாசிக்கும் யாவர்க்கும் ஒரு இனிமையான அனுபவத்தை கொடுத்த இந்த கதையை எழுதிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் படித்தது வெறும் எட்டாம் வகுப்பே என்பதை அறிந்த போது ஆசிரியரின் ஞானமும், 'அந்தக்கால' எட்டாம் கிளாஸின் மகத்துவமும் புரிந்தது. 

             ஆந்திராவில் வாழ்ந்து வந்த மக்களில் ஒரு பிரிவினருக்கு அவர்கள் வீட்டுப் பெண்டிருக்கு  சிலரால் (துலுக்க ராஜா என்று குறிப்பிடப் படுகிறது, எந்த மன்னர் என்று குறிப்பிடப்படவில்லை.) தொல்லைகள் வருகிறது.. அவரின் படைகளிடமிருந்து தப்பிக்க குடும்பத்தோடு புலம்பெயர்கிறார்கள். அப்போது அவர்கள் வாழ ஏதுவாய் தோன்றும் ஒரு பள்ளத்தில் அமைகிறார்கள். அருகே இருக்கும் காட்டை அழித்து வசிப்பதற்கு ஏற்ற இடமாய் மாற்றி பசுக்கள் நிறைந்த ஊராதலால் அதை கோபல்லபுரம் என்றே பெயரிடுகிறார்கள். ஊரின் வசதியான குடும்பமாய் பார்க்கப் படும் கோட்டையார் குடும்பம் மற்ற மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவ்வூரில் ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கின்றனர். நன்றாக வாழ்ந்து வரும் அவ்வூருக்கு இயற்கையால் சில சீற்றங்களும், ஆங்கிலேயரால் சில மாற்றங்களும் ஏற்படுகிறது. அவற்றை அம்மக்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே கோபல்ல கிராமத்தின் கதை.

              கோபல்ல கிராமம் என்னைப் பொறுத்தவரை ஒரு கதையின் ஆரம்பம் போலவே இருந்தது.. அறிமுகங்களே முக்கால் பகுதி புத்தகத்தை ஆக்கிரமித்துவிட விறுவிறுப்பாய் செல்லும் கதைக்கு தொடரும் போட்டு விட்டது போன்ற ஒரு உணர்வு. இதன் தொடர்ச்சி கோபல்லபுர மக்களில் சொல்லப் பட்டிருக்கலாம். மொத்தத்தில் சிவாஜி நடித்த ஒரு நல்ல குடும்பப் படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது. ஆயினும் நமக்கு அடுத்து வரும் தலைமுறையினர் இதுபோன்ற வரலாற்றை பதிவு செய்யும் கதைகளை ஆர்வத்துடன் படிப்பார்களா என்பது ஐயத்துக்குரிய கேள்வியே..!


பி.கு:  எனக்கு முதல் முறை படித்தவுடன் பிடித்து போன பல கதைகளில் இதுவும் ஒன்று. தவிர இதைப் படித்து முடித்தவுடன் சில எழுத்தாளர்கள் ஏன் சுஜாதா அவர்களை "இலக்கியவாதி" என்ற வகையில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் புரிவது போல் இருந்தது..
நூலின் பெயர்   :    கோபல்ல கிராமம் 
ஆசிரியர்           :    கி.ராஜநாராயணன்  
பக்கங்கள்          :    200
 விலை              :    ரூ. 150
வெளியிட்டோர் :   காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
                                 669 கே.பி. சாலை,
                                 நாகர்கோவில்  - 629 001
                                 91-4652 278525
18 comments:

 1. இந்நாளில் இது போன்ற புத்தகங்களை எடுக்கவும் படிக்கவும் துணிச்சலும் பொறுமையும் வேண்டும். ரசிக்க வேறு செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  (நான் இந்தப் புத்தகத்தைப் படித்ததில்லை)

  ReplyDelete
  Replies
  1. உண்மையிலேயே ரசித்து படித்தேன் சார்.. :)

   Delete
 2. கி,ரா. வின் கிராமிய நடை சார்ந்த கதை சொல்லல் வெகு அழகுதான். இவரைப் போலத்தான் லா.ச.ரா.வும் கதையின் விறுவிறுப்பை நினைக்காமல் ரசித்து ருசித்துப் படிக்க வைக்கிற ரகம். கோபல்லபுரத்து மக்கள் நான் படித்து ரசித்த ஒரு புத்தகம். அதற்கு முந்தைய இந்தப் புத்தகத்தை நான் படித்ததில்லை. அவசியம் படிக்கணும்.

  ReplyDelete
  Replies
  1. நீங்களே படிச்சதில்லையா? ஆச்சர்யமா இருக்கு.. :)

   Delete
 3. //மொத்தத்தில் சிவாஜி நடித்த ஒரு நல்ல குடும்பப் படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது. //

  நல்ல விமரிசனத்தில் பானகத்துரும்பு எதுக்கு? :)) கோபல்ல கிராமமும் விகடனில்(?) வரச்சேயே படிச்சேன். கோபல்ல மக்களும் படிச்சிருக்கேன். கரிசல் காட்டுக் கடிதாசி படிச்சீங்களா? அதுவும் படிங்க. அருமையான விமரிசனம். பகிர்வுக்கு நன்றி. உண்மையிலேயே பலமுறை ரசிக்கக் கூடியது தான்.

  ReplyDelete
  Replies
  1. //நல்ல விமரிசனத்தில் பானகத்துரும்பு எதுக்கு?// உங்களுக்கு உலக நாயகன் பிடிக்காதுன்னு தெரியும். சிவாஜியுமா?? :) :)

   Delete
  2. //கரிசல் காட்டுக் கடிதாசி படிச்சீங்களா? //

   இல்ல மேடம், முதல்ல கோபல்லபுர மக்கள் படிச்சுட்டு அடுத்து இதை படித்து விடுகிறேன்.. :)

   Delete
  3. ஹிஹிஹி, பத்துப் பனிரண்டு வயசு வரைக்கும் ஜிவாஜியைப் பிடிச்சது. பாவமன்னிப்பு(?) தெரியலை, படத்துக்கு அழுதிருக்கேன். ஆனால் கொஞ்சம் விபரம் புரிய ஆரம்பிச்சதும் அங்கே அவர் கண்ணும் உதடும் துடிக்க எனக்குள் இங்கே சிரிப்புப் பொத்துக்கும். :))))) அதிலே பாருங்க ஒரு விஷயம், இந்தப் பாலும் பழமும் படமும் பாசமலர் படமும் இன்னும் பார்க்கலை. பார்த்துட்டு விமரிசனம் எழுதணும்னு ஒரு ஆசை வைச்சிருக்கேன். :)))) நிஜம்மாவே இரண்டு படமும் பார்த்தது இல்லைங்க!

   Delete
  4. //ண்ணும் உதடும் துடிக்க எனக்குள் இங்கே சிரிப்புப் பொத்துக்கும்// ஹஹஹா.. பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு பீல் பண்ணியிருக்கீங்க.. நான் அவர் நடிச்ச கௌரவம், வியட்நாம் வீடு படங்கள் பார்த்த போது இவர் ஏன் இப்படி ஓவர் ஆக்ட் செய்திருக்கிறார் என்று தோன்றியது.. பாசமலர் நல்லா நடிச்சிருப்பார்.. பார்த்துட்டு விமரிசனம் எழுதுங்க..:) :)

   Delete
 4. கோபல்லபுரத்து மக்கள்'ம் படிங்க. முழுவாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும். நாவலின் முழுமை தெரியவரும்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்.. அடுத்தது அதுதான் பாஸ்!

   Delete
 5. கடந்த ஒரு வருடமாக இந்தப் புத்தகத்தைப் படிக்க முயன்று கொண்டிருக்கிறேன்... இன்னும் முடியவில்லை... சீக்கிரம் படிக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக படிங்க சீனு.. உங்க பார்வையில இந்த புத்தகம் எப்படி இருந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படறேன்..

   Delete
 6. கி.ரா புத்தகம் படிக்கும் தைரியம் அல்லது பொறுமை வந்ததில்லை!

  ReplyDelete
  Replies
  1. நான் இதை படிக்கிறேன் என்று சொன்னதும் என் நண்பர்களில் சிலரும் கூட இதை எப்படி பொறுமையுடன் இதெல்லாம் படிக்கிறாய் என்று தான் கேட்டனர். ஆனால் எனக்கு அப்படியொன்றும் பொறுமை தேவைப்பட்டதாய் தெரியலையே ஸார்.. :)

   Delete
 7. மிகச் சிறப்பான ஒரு புத்தகம். நானும் படித்து வியந்த புத்தகம். கோபல்ல கிராமத்டினை நம் கண் முன்னே கொண்டு வரும் அவரது எழுத்து....

  நல்ல விமர்சனம் ஆவி. பாராட்டுகள்.

  ReplyDelete
 8. நல்ல விமர்சன்ம் வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 9. அட தேவுடா .... ஒரு சிரிப்புக்கு போய் இவ்வளவு வருணனையா? .. ம் .. ம் .. நடக்கட்டும்... நடக்கட்டும் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!