Thursday, July 31, 2014

தாயார் சன்னதி - திரு. சு.கா.


சில புத்தகங்களை முடிக்கும் வரை கீழே வைக்க மனம் இடம் கொடுக்காது, ஆனால் சில புத்தகங்களை இடைவெளி விட்டுத்தான்  வாசித்தாக வேண்டுமென மனம் கூப்பாடு போடும். அந்த வரிசையில் இரண்டாம் இரகத்தை சேர்ந்தது இந்த தாயார் சன்னதி. அதற்காக புத்தகம் வேறு மாதிரியோ என்ற ஐயம் வேண்டாம். மழைக்கால சாயந்திர வேளைகளில் நொறுக்குத் தீனியோடு கிடைக்கும் வெது வெதுப்பான தேநீர் போல சுவையான புத்தகம்! வளர்ந்து வரும் எழுத்தாளர் திரு. சீனு அவர்கள், உச்சி வெயில் மண்டையை பதம் பார்க்கும் ஒரு மதிய வேளையில், "தலைவரே இது உங்கள் இரசனைக்குரிய புத்தகம், தொடர்ந்து வாசிக்க வேண்டாம், இடைவெளி விட்டு வாசித்தால் உங்களுக்கே காரணம் புரியும்" என்று சொல்லி கொடுத்தார்! அவர் சொன்னது போல் சின்ன சின்ன இடைவெளி விட்டே வாசித்தேன்!  அழகான புத்தகம்!


ஆசிரியரைப்பற்றி....

சுகா எனும் பெயரில் எழுதி வரும் திரு. சுரேஷ், திருநெல்வேலியை சார்ந்தவர். விகடனின் "மூங்கில் மூச்சு" என்ற தொடரின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர்! அமரர். பாலு மகேந்திராவின் வளர்ப்புகளில் இவரும் ஒருவர். விரைவில் திரைப்படங்களில் இயக்குநர் என்ற இடங்களில் இவரின் பெயரை பார்க்கலாம் என்று நம்புகிறேன்! மேலும் திரு. சுகாவை பற்றி அறிய வேணுவனம் செல்லுங்கள். நூலைப்பற்றி ...

முதலில் இவரின் எழுத்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும், ரொம்பவும் மெனக்கெடாமல் தானாக வந்து விழும் வார்த்தைகள் இவரின் நடை. திருநவேலி மீது இவரிருக்கும் காதலை நுணுக்கமாக சொல்லியிருக்கிறார் என்பதை இந்நூலை வாசித்தவர்களுக்கு விளங்கும்! தேர்ந்த இசை ஞானம் உள்ளவர் என்பதற்கு இந்நூலின் உள்ள சில கதைகளே சாட்சி! இரண்டு பதிப்புகளை கடந்து மூன்றாம் பதிப்பாக வந்திருக்கும் இந்நூல் 45 குறுங்கதைகளால் நிரம்பியிருக்கின்றது! ஒவ்வொன்றும் திருநவேலியை மட்டுமே சுழன்றாலும் இடையிடையே இவரின் வாத்தியார் பற்றியும், மற்றும் சினிமா உலக நண்பர்கள் பற்றியும் பேசுவது படிக்க சுவையாக இருக்கிறது.

உச்சிமாளி, சொக்கப்பனை, கோட்டி, தாயார் சன்னதி, பிரமனாயகத் தாத்தாவும் விஜயலலிதாவும், க்ளோ, இடுக்கண் களைவதாம், சந்திராவின் சிரிப்பு, பாம்பு என்ற பூச்சி, சின்னப்பையன், யுகசந்தி இவைகள் படித்தவுடன் மனதில் பதிந்துவிடும் தன்மை கொண்டவைகள்...       

இசையைப் பற்றி வரும் சில இடங்களில் என் போன்ற இசை ஞானம் அறவே இல்லாதவர்கள் கொஞ்சம் பொறுமை இழக்க கூடிய அபாயமும் இருக்கிறது! மற்றபடி வாசிப்பவர்களை நிச்சயம் இந்நூல் ஏமாற்றாது என்பது கருத்து... 

பதிப்பகம் : சொல்வனம் 
வெளியீடு : கிழக்கு பதிப்பகம் 
மொத்தப் பக்கங்கள் : 280.
விலை : 200/- 

படித்து சொன்னது: அரசன் 
http://karaiseraaalai.blogspot.in/

5 comments:

 1. அரசரே, புத்தகத்தை பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறியிருக்கலாம்!

  ReplyDelete
 2. சுகாவின் ப்ளஸ் பாயிண்ட்டே அவரது பெரும்பாலான படைப்புகள் படிப்பவர்களின் நினைவலைகளை தங்கள் வாழ்வின் கடந்த பக்கங்களை திருப்பிப் பார்க்க வைப்பது (நோஸ்டால்ஜியா) மற்றும் கடைசிப் பாராவில் ஒரு ஸ்பெஷல் டச்சுடன் முடிப்பது. இதையும் சொல்லிருக்கலாம் அரசா. இசை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கும் அந்த ரசனையை ஊட்டுவது புத்தகத்தின் விசேஷம். இதில் பாதிக் கதைகளை சொல்வனத்தில் படித்து ரசித்திருக்கிறேன். மீதி....? கவனியும் அரசரே...!

  ReplyDelete
 3. மூங்கில் மூச்சு தொடராக வந்தபோது படித்து இருக்கிறேன்! இவரது எழுத்து நடை எனக்கு பிடிக்கும்! வாங்க வேண்டிய நூல் பட்டியலில் இடம்பிடித்துவிட்டது இந்த நூலும்! நன்றி!

  ReplyDelete
 4. இரண்டு புத்தகங்களிலும் அவர் சொல்லி இருக்கும் இடங்கள்,தியேட்டர்கள் அவர் பார்த்த படங்கள் என அனைத்தும் என் வாழ்க்கையிலும் அந்த காலத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த புத்தகத்தை அடிக்கடி வாசிக்கும் வழக்கம் உண்டு.

  ReplyDelete
 5. நம்ம திருநெல்வேலி அண்ணாச்சியோட புள்ளையா !!! ... அப்போ நல்லாதான்யா எழுதியிருப்பாரு ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!