Wednesday, August 13, 2014

ஒரு காபி குடிக்கலாமா?

 பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய சிறுகதைகளின்  தொகுப்பு


      என் வாசிப்பு ஆர்வத்துக்கு ஆரம்ப காலத்தில் வித்திட்டவர்களில் ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் தமிழ்வாணன் ஆகியோர் முக்கியமானவர்கள். அதிலும் முதலிரண்டு பேர்களின் நாவல்கள் வெளியாகும் தினம் எல்லாம் எனக்கு தீபாவளி தான். இருவர் எழுத்திலும் இருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை எனக்கு பிடிக்கும். விவேக்-ரூபலாவை பிடித்த அளவுக்கு பரத்-சுசீலாவையும் பிடிக்கும். (கூடவே பட்டுக்கோட்டையாரின் நாவல்களில் இடம்பெறும் பெண்களின் டீ-ஷர்ட் வாசகங்கள் பிடிக்கும்..) பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் நாவல்கள் மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன். 'வாத்தியார்' பாலகணேஷ் அவர்கள் ஒருமுறை 'பட்டுக்கோட்டை' பிரபாகர் அவர்களிடம் அழைத்துச் சென்று மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துவிட்டார். அவரிடம் என் 'ஆவிப்பாவை' கொடுத்து ஆசிகள் பெற்றுக்கொண்ட போது முதல் முறை வந்தததற்கு ஞாபகார்த்தமாய் அவர் எழுதிய இந்த சிறுகதை தொகுப்பை கையெழுத்திட்டுக் கொடுத்தார்.     இந்த தொகுப்பில் மொத்தம் பதிமூன்று சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கையில் மனதிற்குள் ஒருவித ஆர்வமும், 'க்ரைம் கதை வல்லுநர்' சிறுகதையில் எப்படிப்பட்ட விஷயங்களை எடுத்தாளப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது. ஒவ்வொரு கதையை படித்து முடித்த போதும் மனதிற்குள் ஒரு நிறைவு. பெரும்பாலான கதைகளில் முடிவு எதிர்பாரா ஒரு திருப்பத்தை கொண்டிருந்தது. இத்துணை வருட எழுத்து அனுபவம் காட்சியை வாசகர் மனதில் ஓட வைக்கும் விவரணைகளில் தெரிந்தது. இலக்கிய பாணியில் அல்லாமல் தெளிந்த நீரோட்டமாய் கடைநிலை வாசகனுக்கும் இனிமையான வாசிப்பனுபவம் கிட்டும் வண்ணம் எழுதியிருந்தது சிறப்பு.

     இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது 'ஹலோ நண்பா' என்னும் சிறுகதை. குடித்துவிட்டு தன் நண்பனுக்கு போன் செய்ய நினைத்து தவறுதலாக வேறொருவருக்கு அழைத்து விட, அந்த ராங் காலை எடுத்தவர் வேலை இழந்து மனைவியும் கோபித்துக் கொண்டு அவர் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்ட கோபத்தில் "மகாதியானத்தில்" ஈடுபட்டிருக்க, இவர்கள் இருவருக்குள்ளும் நிகழும் சம்பாஷணைகள் தான் கதை. உரையாடலின் முடிவில் நிகழும் திருப்பம் நிச்சயம் விறுவிறுப்பானது மட்டுமல்ல சிரித்தபடியே நாம் படித்து ரசிக்க கூடியதும் கூட. ஒரு சிறு சாம்பிள் இங்கே..    தொகுப்பின் முதல் கதையே இன்றைய தலைமுறையின் அவலங்களை குறிப்பாக "லிவ்விங் டுகெதர் பண்ணலாமா" என்பதை கூட  "ஒரு காபி குடிக்கலாமா" என்பது போல் கேட்கும் அளவிற்கு வளர்ந்திருக்கும் (?!) நாகரீகத்தை சாடும் கதை. "ஆனந்தவல்லியின் காதல்" ஒரு சரித்திர குறுங்கதை. ஆங்காங்கே திருப்பங்களுடன் நம்மை புருவம் உயர்த்த செய்யும். "சிறப்பு விருந்தினர்" கதை நிச்சயம் பல பேர்களுக்கு பொருந்தும் வண்ணம் அமைந்திருக்கிறது. "சிடுமூஞ்சிகள்" என்னும் சிறுகதை கொஞ்சம் ஆழமாக சிந்திக்க வைக்கிறது. அதில் வரும் அம்மாவின் கதாப்பாத்திரம் கடைசி வரியில் மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறது. அதேபோல் "இரண்டு கடிதங்கள்" படித்து முடிக்கும் போது குடித்துவிட்டு அட்ராசிட்டி செய்யும் "குடிமகன்களின்" மேல் காறி உமிழத் தோன்றுகிறது. "அவன் பெயர் கேகே" மனதோரம் கொஞ்சம் சோகத்தை அப்பிவிட்டு செல்கிறது.


       ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாய் ரசிக்கும்படி இருந்தது. எந்த ஒரு கதையும் கொஞ்சமும் தொய்வை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. மொத்தத்தில் இந்தக் காபியை எந்த சுவையை ரசிப்பவர்களும் குடிக்கலாம்..!
நூலின் பெயர்         :    ஒரு காபி குடிக்கலாமா? 
ஆசிரியர்                 :    பட்டுக்கோட்டை பிரபாகர்   
பக்கங்கள்                :    152
 விலை                   :    ரூ. 100
நூல் வடிவமைப்பு :     திரு.பாலகணேஷ் 
பதிப்பாளர்              :   பி.சாந்தி, ரம்யா பிரியா கிரியேஷன்ஸ்,
                                     37/1, கெனால் பேங்க் ரோடு, அடையாறு,
                                     சென்னை - 600 020
                                     தொலைபேசி - 044-24415709
                            


18 comments:

 1. விமர்சனமும் காபி கோப்பையைப் போல் :-) எனக்கு காப்பி பிடிக்கும் என்பதால் நானும் காபி குடிக்கலாமா :-)

  ReplyDelete
  Replies
  1. ஒரு காப்பி விலை நூறு ரூபாய்!

   Delete
  2. இதோ பதிலை யோகராசண்ணன் சொல்லிட்டார்.. காபி ஓசில வேணும்னா கொஞ்ச நாள் வெயிட் பண்ணனும்.. ஹிஹிஹி

   Delete
 2. கொடுத்தால் ஒருதரம் படிச்சுட்டுக் கொடுத்துடாமே..!!! :)))

  ReplyDelete
 3. அவரின் இத்தனை ஆண்டுகால எழுத்துலக வாழ்வில் முதன்முறையாக பிராமண பாஷையில் எழுதிய ‘டைகர் மாமா’ கதையும், கல்யாணம் பண்ணிக்கறது அவசியமான்னு திங்க் பண்ணற இளம் பெண்ணோட உணர்வுகளைச் சொல்ற ‘ஆராதனாவும் அலங்கார விளக்கும்’ கதையும் இந்தத் தொகுப்பில எனக்குப் பிடிச்ச கதைகள்.

  பட்.... வயசான ஒருத்தர் ப்ளாக் எழுதறவரா மாறினது எப்படின்னு ஒரு கதை எழுதியிருப்பாரே... அதை நீ ஸ்பெஷலா குறிப்பிடுவேன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்...

  எல்லாக் கதைகளும் ரசிக்க வெச்சது என்பதில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. அச்சோ, அந்த வயசானவர் கதையை தனி பத்தில எழுதணும்னு நினைச்சு மறந்துட்டேன்.. ஆனா டைகர் மாமா எனக்கு கொஞ்சம் போர் அடிச்சது.. ஏன்னு தெரியலை. ஆராதனாவும் பிடிச்சது ஆனா பதிவின் நீளம் கருதி வெட்டிவிட்டேன்.. :)

   Delete
 4. வணக்கம்
  புத்தக விமர்சனத்தை படித்த போதுவேண்டி படிக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டும் வகையில் உள்ளது

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. அந்த சாம்பிள படிக்கும்போதே , புத்தகத்த வாங்கி படிக்கனும்னு தோணுதுணா!! கண்டிப்பா, இந்த வாரத்துல வாங்கி படிச்சிடுவேன்

  ReplyDelete
  Replies
  1. நல்ல புத்தகம்.. படிச்சுட்டு உன் கருத்தை சொல்லுப்பா!!

   Delete
 6. புதிய புத்தக அறிமுகத்திற்கு நன்றி! சீக்கிரம் வாங்கிப் படிக்கிறேன்!!

  ReplyDelete
 7. சூப்பர் தல ... சீக்கிரம் இங்கிட்டு பார்சல் பண்ணவும் ..

  ReplyDelete
 8. விமர்சனம் நல்ல ஒரு காப்பி குடித்ததைப் போல........காப்பி குடிக்கணும் போல ...சாரி.....வாசிக்க வேண்டும்....

  ReplyDelete
 9. பட்டுக்கோட்டை பிரபாகர் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்....

  ReplyDelete
 10. திரு. சுபா அவர்களையும் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களையும் பல்லாண்டுகளுக்கு முன்பே சந்தித்துள்ளேன்.
  (கலந்துரையாடல் நிகழ்ச்சி.)

  என் அபிமான எழுத்தாளர் ப்பீ கே ப்பீ அவர்களின் சிறுகதைத் தொகுப்பு பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி. சுவையான சுருக்கமான விமர்சனம்.

  ReplyDelete
 11. பட்டுக்கோட்டையார் கதைகள் சிறுவயதில் என்னை ஆட்டிபடைத்தது என்பது உண்மை ... அதன்பின் பாதை மாற பயணமும் மாற ஏனோ நீண்ட இடைவெளி ... இப்போது புதிய புத்தக அறிமுகத்திற்கு உங்களுக்கு நன்றி! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!