Wednesday, February 18, 2015

மஞ்சள் வெயில் - யூமா.வாசுகிக்கு ஒரு கடிதம்

படைப்பாக்கம் : சீனு 


அன்புள்ள யூமா.வாசுகி 

நலமா? தயவுசெய்து இந்த நலம் விசாரிப்பை மிக மிக மிக எளிதான சம்பிரதாயமான நலம் விசாரிப்பாகக் கருதிவிட வேண்டாம். பொழுது சாய்ந்த கடற்கரையில் அவ்வப்போது நம் கால்களை வருடிச் செல்லும் அலைகளுக்கு மத்தியில் நீங்களும் நானும் நெடுநேரம் கதை பேசிக் கொண்டிருந்தோமே, அப்போது நிகழ்ந்த நட்பின்பால், பாசத்தால் ஆன நலம் விசாரிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். 

யூமா.வாசுகி என்ற உங்கள் பெயரைக் கேள்விப்பட்டபோது, சுஜாதாவை எப்படி ஒரு பெண்ணாக யூகித்திருந்தேனோ அப்படியே உங்களையும் நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் புத்தகத்தின் பின் அட்டையில் ஒரு ஆண்மகனின் படத்தைப் பார்த்ததும் லேசான அதிர்ச்சி. அந்த புகைப்படத்தில் உங்களை எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஒரு ஆணாக.

சென்னையின் வெயில் நிறைந்த ஒரு காலைப் பொழுதில் அரசனின் அறையில் இருந்து கிளம்பும் போதுதான் தற்செயலாக அது நிகழ்ந்தது. நான் தற்செயலை பெரிதும் நம்புபவன். சமயங்களில் தற்செயலினுள் இறைவன் ஒளிந்து கொண்டுள்ளாரோ என்றெல்லாம் கூட யோசிப்பேன். அன்றைக்கு அரசனின் அறைக்கு நான் வண்டியில் சென்றிருக்கவில்லை. அங்கிருந்து மேடவாக்கம் செல்ல எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அந்த நூற்றி இருபது நிமிடங்களையும் வெறுமனே சென்னை மாநகர நெரிசலை வேடிக்கைப் பார்த்தபடி கடப்பதில் உசிதம் இல்லை. அரசனின் அலமாரியில் எதாவாது புத்தகம் சிக்காதா என்று நெடுநேரம் தேடிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட மூன்று நான்கு முறை அலசியிருப்பேன், என்னுடைய அப்போதைய மனநிலைக்குத் தகுந்த எந்தவொரு புத்தகத்தையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இங்கு தான் தற்செயல் உள்ளே நுழைகிறது. மஞ்சள் வெயில் என் கையில் சிக்கியது. அதுவரையிலும் பேசாமல் இருந்த அரசனும் கூட 'தலைவரே செம புக்கு, அவசியம் படிங்க' என்றார். 

மறந்தே போனேன். கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர் இந்தப் புத்தகத்தை வாங்கியபோது நான் உடன் இருந்தேன். அவர் கூறிய வார்த்தைகள் நன்றாக நினைவில் இருக்கின்றன 'இந்த புக்கு எப்படியோ என் கைக்கு வந்தது. படிச்சிட்டு குடுத்துட்டேன். இதெல்லாம் பாதுகாக்க வேண்டிய ரகம் தலைவரே' என்றபடி வாங்கினார். அப்போது கூட அவரிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளவில்லை. அல்லது வேறொரு பொழுதில் அவரோ இல்லை யாரேனுமோ என்னிடம் திணித்திருந்தாலும் கூட வாங்கியிருக்க மாட்டேன். காரணம் எனக்கான இவ்வருட வாசிப்புப் பட்டியல் நிரம்பி வழிகிறது. அதில் புதிய புத்தகங்களுக்கு நிச்சயமாய் இடமில்லை. அதனால் என்னளவில் மஞ்சள் வெயில் தற்செயலே. அந்த தற்செயலுக்கு அநேக நமஸ்காரங்கள். 

பேருந்தில் நமக்காக ஒரு இடம் கிடைத்த போதுதான் மெல்ல என் தோள்களில் கைபோட்டபடி கதை சொல்லத் தொடங்கினீர்கள். சில இடங்களில் நீங்கள் கூறுவது கதையா இல்லை கவிதையா என புரியாமல் விழித்தேன். ஒருவேளை கவிதையைத்தான் கதை போல் மாற்றிவிட்டீர்களோ என்ற ஐயம் கூட எழுந்தது. கேட்கலாம் என்றால் நீங்கள் கதை சொல்வதில் மும்மரமாய் இருந்தீர்கள். நானும் கேட்கும் ஆர்வத்தில் எல்லாவற்றையும் மறந்தேன். உங்கள் அருகில் அமர்ந்தபடி உங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியாய் என்னை பாவித்துக் கொண்டேன். பேருந்து நகர நகர கதையும் நகர்ந்தது.

உண்மையைச் சொல்வதென்றால் மஞ்சள் வெயிலின் ஆரம்பப் பக்கங்கள் எனக்கு பிடிக்கவில்லை. மிக முக்கியமாக உங்கள் கதையின் நாயகனான பிரபாகரை எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குத் தெரிந்த சில பிரபாகர்கள் இருக்கிறார்கள். மனதுக்கு மிக நெருக்கமானவர்கள், அவர்களோடு ஒப்பிடும் போது இந்த பிரபா ஒரு கோழை. வாழத்தெரியாதவன். ஒரு பெண்ணிடம் பேசத் தெரியாதவன். தன் காதலை வெளிபடுத்த தைரியமில்லாதவன். எதற்கெடுத்தாலும் பயந்து சாகிறவன். அவனிடம் இருக்கும் அந்த அதீத கற்பனை என்னை மூச்சு முட்டச் செய்கிறது. எனக்கே இப்படியென்றால் பிரபாவுக்கு எப்படி இருக்கும். ஆனால் பிரபா ஒரு தேர்ந்த எழுத்தாளன். பிரபாவின் வித்து நீங்கள் என்பதால் உங்களை சிலாகித்தால் என்ன பிரபாவைக் கொண்டாடினால் என்ன. 

பிரபா ஒரு தேர்ந்த எழுத்தாளன். இயல்பில் அவன் ஓவியன் என்றாலும் என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு தேர்ந்த எழுத்தாளன். தனக்கு ஏற்படும் உணர்ச்சிகளை இம்மி பிசகாமல் என்னுள் கடத்தியவன். அந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே பிரபா கூறிய கதையை கேட்கத் தொடங்கியிருந்தேன். பிரபாவுக்கு இன்னொன்றும் தெரிந்திருக்கிறது. அது கடிதம் எழுதுவது. அதனால் தானோ என்னவோ ஜீவிதாவின் மீது தான் கொண்ட பெருங்காதலை முழுக்க முழுக்க கடிதமாகவே எழுதிவிட்டான். 

அந்தக் கடிதம் ஜீவிதா கைகளில் கிடைத்ததா இல்லையா என்பது இல்லை என் கவலை. இப்போது பிரபா எப்படி இருக்கிறான். தொடர்ந்து ஓவியம் வரைகிறானா. தன்னை மறந்து போன தன்னுடைய ஜீவிதாவை மறந்துவிட்டு அவளுக்கு எழுதிய கடிதத்தைத் எரித்துவிட்டு வேறு துணையைத் தேடிக் கொண்டானா. இல்லை வழக்கம் போல கடற்கரை மணலில் புகையை ஊதிக் கொண்டு கடலோடு பேசிக்கொண்டு தனிமையில் போதையில் உழல்கிறானா. 

சில சமயங்களில் பிரபாகர் மீது பொறாமை வருகிறது. அவன் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் அந்த வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் அதி அற்புதமான உவமைகள் ஒவ்வொன்றும் என்னை பொறாமை கொள்ளச் செய்கின்றன. எங்கிருந்து பிடிக்கிறான் இந்த உவமைகளை. சில சமயங்களில் அந்த உவமைகள் குமட்டலை ஏற்படுத்தினாலும் பல தருணங்களில் அந்த அதீத கற்பனையின் புள்ளிகளில் நானும் பிரபாவாகிப் போகிறேன். நான் பிரபாவகிப் போவதால் ஜீவிதாவின் வெறுமையை, அவள் இல்லாததால் ஏற்படும் தனிமையை உணர்கிறேன். இப்பொது பிரபா மீதான கோபம் குறைந்து என்னுடைய வேகம் முழுவதும் ஜீவிதாவை நோக்கிச் செலுத்தப்படுகிறது. 

பிரபா ஜீவிதாவுக்கு தொலைபேசச் செல்லும் தருணங்கள் அத்தனையும் ஒரு தேர்ந்த துப்பறிவாளன் கொலையாளியை கண்டுபிடித்தானா இல்லையா என்ற கோணத்திலேயே யோசிக்கச் சொல்கின்றன. என்னையும் அறியாமல் என்னுள் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. ஜீவிதா தைரியசாலி. பிரபாவை எளிதாக எதிர்கொள்வாள். ஆனால் இந்த பிரபா. சுத்தக் கோழை. ஐயோ எப்படியாவது தைரியத்தை வரவழைத்து ஜீவிதாவோடு பேசிவிடுடா என்று நாலு அறை அறைய வேண்டும் போல் இருக்கிறது. அவன் கையில் இருக்கும் தொலைபேசி ரிசிவரைப் பிடுங்கி தலையிலேயே அடிக்க வேண்டும் போல் இருக்கிறது. ஆனாலும் எப்போதும் நானும் பிரபாவின் பிரதிநியாகவே இருக்க விரும்புகிறேன். ஜீவிதாவோடு சேர்ந்துகொண்டு பிரபாவை காயப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. ஏனென்றால் பிரபா ஒரு அப்பாவி. சந்தர்ப்பங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளாத் தெரியாமல் எண்ணங்களின் மூலம் பகடையாடப்படுபவன். ஆம் பகடையாடப்படுபவன். என்ன தன்னையே பகடையாக்கிக் கொண்டு முன்னும் பின்னும் உருண்டு கொண்டிருக்கிறான். எல்லாம் ஜீவிதாவுக்காக. கருணையே இல்லாத,வேண்டாம் நான் ஜீவிதாவை திட்டவில்லை. அவளைத்  திட்டுவது பிரபாவுக்குப் பிடிக்காது. 

நல்லவேளை வாட்ச்மேன் பாலகிருஷ்ணன் பிரபாவுக்கு துணையாக இருக்கிறாரே என்ற ஆறுதல் பெறுத்த நிம்மதி தருகிறது. அவர் அவனோடு இல்லாவிட்டால் நான் இங்கு நிம்மதியாக இருக்க முடியாது. பிரபாவுக்கு உதவி செய்ய எல்லாருமே தயாராக இருக்கிறார்கள். டேனியல் மகேந்திரன் சந்திரன் என எல்லாருமே இந்த பிரபாவைத் தவிர. தன்னைப் பற்றி எதையுமே வாட்ச்மேனிடம் பிரபா பகிர்ந்துகொள்ளவில்லை என்றாலும் கூட பிரபாவுக்காக ஓடி ஓடி உதவுகிறார். அந்த நல்ல மனிதன் எப்படி இருக்கிறார் யூமா. கேட்டதாகச் சொல்லுங்கள். அந்த எஸ்டிடி பூத் பெண், பிரவுசிங் செண்டர் சிறுவன் எல்லாரையும். உங்களிடம் நிறைய பேச வேண்டும் யூமா. இல்லை நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும். பிரபாவையும் ஜீவிதாவையும் வாட்ச்மேனையும் மறக்கமுடியாதபடி ஒரு கதை கூறினீர்களே. யாராலும் எழுத முடியாத கதை அது. அதைப் போல வேறொரு கதை நீங்கள் கூறி நான் கேட்க வேண்டும் யூமா. அதுவரைக்கும் மீண்டும் ஒருமுறை பிரபாவின் கடிதத்தைப் படித்துவிட்டு வருகிறேன். 

அன்புடன்
சீனு 

புத்தகம் : மஞ்சள் வெயில்
ஆசிரியர் : யூமா.வாசுகி
பதிப்பகம் : அகல்
விலை : 85

பின்குறிப்பு : இந்தப் பதிவை எழுத்து முடித்ததும் யூமா வாசுகி பற்றி தேடியபொழுது தற்செயலாக அண்ணன் கே.ஆர்.பியின் இந்தப் பதிவு சிக்கியது. ஆச்சரியம் அல்லது தற்செயல் அவரும் மடலாகவே இருக்கிறார். அதிலும் அவருடைய பாணியில் அட்டகாசமாக. நம்புங்கள் இதுவும் தற்செயலே.

ஜீவிதா...


5 comments:

 1. புத்தகம் எப்படி இருக்கோ? ஆன நீங்க எழுதுற நூல் அனுபவம் அந்த புத்தகத்தை படித்துவிடவேண்டும் என்கிற ஆர்வத்தை ஒவ்வொரு முறையும் விதைக்கிறது:) வாழ்த்துகள் சகா!

  ReplyDelete
 2. தற்செயல் என்ன...? எல்லா செயல்களிலும்...

  ஆழ்ந்த ரசனை...

  ReplyDelete
 3. Lovable Write-up! Keep it up Seenu!

  ReplyDelete
 4. வாசிக்க தூண்டும் எழுத்து! சிறப்பான விமர்சனம்! நன்றி!

  ReplyDelete
 5. சில இடங்களில் நீங்கள் கூறுவது கதையா இல்லை கவிதையா என புரியாமல் விழித்தேன்.... ரியலி ... குட் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!