Monday, May 4, 2015

"ஆண்பால் பெண்பால்" - தமிழ் மகன்




இந்த நூலை வாங்கி சுமார் பதினைந்து மாதங்கள் ஆனதினால் படித்தே தீர வேண்டிய நெருக்கடி வரிசையில் சேர்த்து ஒருவழியாக வாசித்தும் முடித்து விட்டேன். நெடுநாட்களுக்குப் பிறகு ஒரு சவ சவ வகையறாவை படித்த உணர்வைத் தருகிறது இந்த "ஆண்பால் பெண்பால்". சின்ன சின்ன சுவராசியத்தை தவிர்த்து இந்த நூலில் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக ஒன்றுமில்லை. எழுத்து நடையும் மேலோட்டமான புனைவுகள் தான். அங்கங்கு தூவிய ஆண்/பெண் உறவுகள் சார்ந்த விவரிப்புகள் சில இடங்களில் சிந்திக்க வைப்பதை தவிர்த்து வேறு எந்தவித சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

கதைச் சுருக்கம்:

மொத்தம் நாற்பது அத்தியாயங்கள் கொண்ட இந்நூலில் முதல் இருவது அத்தியாயங்களை பிரியா சொல்வதாக டாக்டர் பிரமிளா எழுதுவதாகவும், அடுத்த இருபது அத்தியாயங்களை அருண் சொல்வதாக ரகு எழுதியதாகவும் எழுதியிருக்கிறார் திரு. தமிழ் மகன்!

பழைய செய்திகளை ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தில் ஒரு உயரிய பொறுப்பிலிருக்கும் பெண்ணை, அவளுக்கு வெண் புள்ளி துவங்கியதை மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியப் படுத்தாமல் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். மாப்பிள்ளை ஒரு எஞ்சினீயர்! அவருக்கு ஒரு அக்கா, அவளுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. சரி மகனுக்காவது விரைவில் குழந்தை பிறக்கவேண்டும் என்று தவிப்பில் இருக்கிறார்கள் மாப்பிள்ளையின் குடும்பம். 

திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கோ MGR ன் ஆவி புகுந்து கொண்டு பாடாய் படுத்தி எடுக்கிறது, எப்போதும் MGR நினைவாகவே கடத்தி கொண்டிருக்கிறாள், மனைவியின் பார்வையில் கணவன் ஒரு காம வெறி கொண்ட மிருகம் போலவும், கணவனின் பார்வையில், மனைவிக்கு உறவில் தீராத மோகமிருந்தும் அவ்வளவு எளிதில் உடன்படாமல் கணவன் தொடர்ந்து வற்புறுத்தினால் மட்டுமே உடன்படுவது போல நடிப்பதாகவும் அதனால் தானொரு தியாகி போல அவளிடம் மன்றாடுவதாக சொல்லியிருக்கிறார் திரு. தமிழ் மகன்!

இறுதியில் அந்த பெண்ணுக்கு முற்றிலும் மனநலம் பாதிக்கப் பட்ட பைத்தியம் போல காண்பித்து, அதனால் இருவருக்கும் மிக எளிதில் விவகாரத்து வாங்குவது போல சொல்லி முடித்திருக்கிறார் இந்த நாவலை! இறுதியாக அந்த நாவலில் சில திருப்பங்களை வைத்து சுபம் போட்டிருக்கிறார் திருவாளர் தமிழ் மகன்! எதைச் சொன்னாலும் ஆடியன்ஸ் கைத்தட்டி விசிலடிப்பான் என்று நம்பி பேரரசு வைக்கும் கோமாளித்தனமான காட்சிகளுக்கும், இந்த திருப்பங்களுக்கும் நூலிழை வித்தியாசம் கூட இல்லை என்பது தான் சிறப்பு!


பாராட்டப்பட வேண்டிய இடங்கள்:

இந்த நூலை அப்படியே ஒதுக்கியும் வைத்து விடமுடியாது, அதனுள்ளும் சில தகவல்களை இன்றைய தலைமுறையினருக்கு சொல்லியிருக்கிறார். 

1) மனைவியென்பவள் வெறும் படுக்கையறை தோழியல்ல, அவளிடம் விவாதிக்க நிறைய இருக்கிறது என்பதையும், பெண்ணென்பவள் எந்த மன நிலையில் இருப்பாள் என்பதை ஓரளவேனும் சொல்லியிருப்பதும், 

2) ஒரு ஆணுடன் பெண் எவ்வாறு மாறுபட்டு சிந்திக்கிறாள், தான் அடைய விரும்பியதை அடைய எப்படியெல்லாம் முயலுகிறார்கள் என்று நிறுவ முயன்றிருக்கிறார்.

3) உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு காரணத்தின் துவக்கம் படுக்கையறை என்பதை மிக அழுத்தமாக உணர்த்த முயன்றிருக்கிறார்!

அதே போல்,

4) கணவனை வெறும் காம இச்சை கொண்ட படுக்கையறை வெறியனாக பார்ப்பதை தவிர்க்க வேண்டுமென்றும்,

5) கணவனின் முழுக்கவனமும் நம்மில் இருக்கவேண்டுமென்று மனைவி ஆசைப்படுவதும் அது கிடைக்காத பட்சத்தில் அதை மனதில் வைத்துக் கொண்டு படுக்கறையை பழி தீர்த்துக் கொள்ளும் களமாக பயன்படுத்த கூடாது என்பதையும்,

6) சின்ன சின்ன தவிர்ப்புகள் எவ்வளவு பெரிய பிரச்சினைகளில் முடியுமென்று சொல்ல முயன்றிருக்கிறார்! 

இந்நூலின் பிரச்சினைகளாக எனக்கு தோன்றியவைகள்:

உளவியல் ரீதியான பிரச்சினைகளை தொடுகையில் அதீத கவனம் தேவை, அது இந்த நூலில் மிஸ்ஸிங். வெறும் MGR ன் ஆவியை வைத்து நகர்த்துவது ஆரம்பத்தில் ஈர்ப்பாக இருந்தாலும் அதுதான் கடைசியில் செம தொய்வு.

பொதுவான விசயங்களைப் பற்றி இந்நூலில் அதிகம் பேசவே இல்லை. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நடந்த பிரிவனை நிகழ்வுகளை மட்டுமே பேசி இருந்தாலும், இது பொதுவான ஆண்/பெண் மனநிலையை சித்தரிக்குமோ என்ற ஐயத்தை தருகிறது.  

போகிற போக்கில் சொன்ன உணர்வை மட்டுமே தருகிறது, கொஞ்சம் அழுத்தமாக அதே நேரத்தில் சுவராசியமாக சொல்லியிருந்தால் இன்றைய அவசரக் குடுக்கை இளசுகளுக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும், அந்த வகையில் இதில் தோல்வியை தழுவியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்! 

இப்படியொரு மொன்னையான முன்னுரையை இதுவரை படித்ததே இல்லை, யாரிடமாவது இந்தப் புத்தகத்தை வாசிக்க கொடுக்க நேர்ந்தால் தமிழ் மகனின் முன்னுரையை  நிச்சயமாய் கிழித்து விட்டுத்தான் கொடுக்கலாமென்ற எண்ணத்தில் இருக்கிறேன்.

இந்தப் புத்தகத்திற்கு ரூபாய் 200/- என்பது மிக அதிகம் தான்! 

===============================================================

ஆசிரியர்: தமிழ்மகன் 

வெளியீடு: உயிர்மை 

ஆண்டு: 2011

மொத்தப் பக்கங்கள்: 255

விலை: 200/-

===============================================================

2 comments:

  1. வணக்கம்
    புத்தகம் பற்றி தங்களின்பார்வையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா அட்டகாசமான விமர்சனம்......

    ReplyDelete

இது... உங்க ஏரியா!