Tuesday, May 26, 2015

எட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்


ஒரு எழுத்து எல்லா வகையான வாசகர்களையும் திருப்தி படுத்தாது என்பதை தீவிரமாக நம்புகிறவன் நான், சமீபகாலமாக, கலவையான எழுத்துக்களை பெரிதும் விரும்ப துவங்கியிருக்கிறேன் அதுவும் வட்டார வழக்கு என்றால் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க விழைகிறேன். நண்பர்களின் மூலமாக இதுவரை அறிந்திருந்த திரு. நாஞ்சில் நாடனை அவரின் எழுத்தின் வாயிலாக அறிய முற்பட்டு, இந்த எட்டு திக்கும் மதயானை நூலை வாங்கினேன். இவரைப் பற்றி எவ்வாறெல்லாம் அறிமுகப் படுத்தி வைத்திருந்தார்களோ, அதற்கும் சற்று கூடுதலாக அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. 



வெறும் புனைவுதானென்று கடந்து விட இயலவில்லை, அதனுள் அறிந்து, புரிந்துகொள்ள ஏகப்பட்ட செய்திகளை, வழக்குகளை, மக்களை, அவர்களின் வாழ்வியலை எதார்த்தம் பிறழாமல் பதிவு செய்திருக்கிறார். கற்பனைகளை கட்டவிழ்த்து விடாமல், தினந்தோறும் சந்திக்கும் எளிய மனிதர்களை, அவர்களின் இன்னல்களை அதன் இயல்பு மீறாமல் அப்படியே எழுத்துக்களாக்கி இருக்கிறார். கட்டுபாடுகளற்ற சுதந்திரம் ஒரு மனிதனை எப்படில்லாம் உருமாற்றுகிறது, அவன் எவ்வாறெல்லாம் திசை மாறி சிதைந்து போகும் அபாயம் இருக்கிறது என்று பேசுகிறது நாவல்!

திக்கற்ற பயணம், அதனுள் நிறைந்திருக்கும் புதிர்கள், புரட்டு மனிதர்களின் சீரற்ற வாழ்வியல், அதனை எதிர்கொள்ளும் மனவுறுதி, காமம், காமம் சார்ந்த மனிதர்கள், காமத்தினால் வரும் படிப்பினைகள், களவு, நயவஞ்சகம், கொலை, வன்மம், பிரிவு, மூரக்கமான குடி, நட்பு, ஏமாற்றம், துணிச்சல், சிறை, ஏற்றம், இறக்கம், யாருமற்ற பரிதவிப்பு, துக்கம், வன்புணர்ச்சி, வழக்கு, அடைக்கலம், கையில் சல்லிக்காசு இல்லாவிடினும் பிடிமானமுள்ள நகர்வு, கடின உழைப்பு, குற்ற உணர்ச்சி, உறக்கமற்ற இரவொன்றில் சுய புரிதலுக்கான தேடல் இப்படி இத்தனையையும் பேசியிருக்கிறார், இடையிடையே நாட்டின் நிலை பற்றிய தன் வேதனையை பதிவு செய்த விதம் நறுக்கென்று விழும் சவுக்கடி!   
வாசிக்க எடுத்துக்கொண்ட பத்து நாட்களும் ஒரு உணர்வுச் சுழலில் சிக்குண்ட மாதிரி தான் இருந்தேன்!

நாடோடி போல் திரியும் ஒருவனின் வாழ்வை, அவன் எதிர்கொள்ளும் சூனியமான காலங்களை இவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்ததை இப்போது தான் படிக்கிறேன், அதுவும் இரவு நேர இரயில் பயணங்களை விவரித்திருக்கும் அழகே தனி, அதன் தாக்கம் எனக்குள்ளும் இப்படியொரு நீண்ட ரயில் பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசையை முன்னிறுத்துகிறது. பார்ப்போம் காலங்கள் அனுமதிக்க வேண்டுமே?

கதைச்சுருக்கம்:

பூலிங்கம் எனும் குயவ குடும்பத்து பையன், படித்து வருகிறான், தான் செய்யாத குற்றத்திற்காக அந்த ஊரின் பெருந்தனத்துக்காரரின் ஆட்களிடம் அடிவாங்கி, அதனால் ஏற்பட்ட அவமானத்தில் அவரின் வைக்கோல் போருக்கு தீ வைத்து விட்டு, அதன் காரணமாக ஊரை விட்டு ஓடுகிறான்! ஓடியவன் பல இடங்களில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறான். முதலில் ராய்ச்சூரில் தங்கி ஐஸ் கிரீம் விற்கிறான் அங்கு ஏற்பட்ட ஒரு மோதலில் ஒருவனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து வருகையில் தமிழ் லாரிக்காரனின் சிநேகம் கிடைத்து, அந்த லாரி டிரைவர் கோவாவில் ஒரு சேட்டிடம் வேலைக்கு சேர்த்துவிட்டு செல்ல, அங்கு சில நாட்கள் தங்கி இருக்கிறான் பூலிங்கம். சேட் ஊரில்லாத சமயம் பார்த்து வீட்டினுள் நுழைந்து பீரோவை துழாவி மாட்டிக்கொண்டு, அங்கிருந்து லோண்டா விற்கு ஓடுகிறான். அங்குதான் அவனுக்கு கெட்டசகவாசம் ஆரம்பிக்கிறது. கோவாவிலிருந்து கம்மியான விலைக்கு சரக்கு வாங்கிவந்து கொடுப்பதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நாட்களை கழித்துக் கொண்டிருக்க, ஒருநாள் போலீசிடம் மாட்டிக்கொள்ள ஜெயிலினுள் போலிஸ் ஒருவர் வெளிய வந்து என்னைப் பார் உன்னை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறேன் என்று வாக்குறுதி அளிக்க, அதன்படி அவரை சந்திக்கிறான், அந்த காவல் அவனுக்கு கஞ்சா, பிரவுன் சுகர் கைமாற்றும் தொழிலை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதில் கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி கொண்டிருக்கையில் வெளியூர் பயணத்தில் ஒருவன் கூல்ரிங்க்கில் மயக்க மருந்து கலந்து கொடுத்து "சரக்கை" அபகரித்துக் கொள்ள, வருத்ததுடன் சென்று முதலாளியிடம் சொல்ல, அவனை நம்பாமல் நாயை அடிப்பது மாதிரி அடித்து துரத்தி விட மும்பையில் தஞ்சமடைகிறான். அங்குதான் அவனுக்கு சாராய தொழில் செய்யும் தமிழ் அண்ணாச்சி அறிமுகம், பிறகு தொழிலில் சிறந்து விளங்குகிறான். யாரால் ஊரைவிட்டு ஓடிவந்தானோ அதே பெண்ணை அவன் மும்பையில் சந்திக்கிறான் பிறகு அவளின் நிலையை விவரித்து அவளையே அழைத்துக் கொண்டு சென்று புதிய வாழ்க்கையை துவங்குவது போல் முடிகிறது நாவல். நான் சொன்னது சுருக்கத்திலும் சுருக்கமான கதை தான், இதில் ஏகப்பட்ட கதை மாந்தர்கள் உலவுகிறார்கள், அவர்கள் கதைக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியது.  

ஆசிரியரைப் பற்றி:



சுப்ரமணியம் என்ற இயற்பெயரை கொண்ட திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் இதுவரை ஆறு நாவல்களும், நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 5 கட்டுரை தொகுப்புக்களும், 2 கவிதை நூல்களும் வெளியிட்டிருக்கிறார். இவரின் "தலைகீழ் விகிதங்கள்" என்ற நாவல் தான் "சொல்ல மறந்த கதை" என்ற பெயரில் இயக்குனர் தங்கர்பச்சான் அவர்களால் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. சூடிய பூ சூடற்க என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறார். "எட்டு திக்கும் மதயானை" நாவலையும் "படித்துறை" என்ற பெயரில் சினிமாவாக எடுத்து வருகின்றனரவாம்!

வட்டார வழக்கு சில இடங்களில் தொய்வை ஏற்படுத்துவதை தவிர்த்து இதில் குறையாக சொல்லிக்கொள்ள எனக்கு எதுவும் தோன்றவில்லை! பலதரப்பட்ட எழுத்துக்களை விரும்புவர்களுக்கு இந்த நூல் மிகச்சிறந்த தீனி யாக இருக்குமென்று நிச்சயமாக நம்புகிறேன்!

===========================================================

மொத்த பக்கங்கள் : 270

மூன்றாம் பதிப்பு : 2012

வெளியீடு : விஜயா பதிப்பகம், கோவை. 0422-2382614.

விலை : 140/-

===========================================================


படித்துச் சொன்னது 

அரசன் 
http://www.karaiseraaalai.com/

2 comments:

  1. நல்ல விமர்சனம் தலைவரே... படித்துறை படத்தை எழுத்தாளர் சுகா ஆர்யா தயாரிப்பில் ஆர்யா தம்பியை வைத்து இயக்கினார். இப்போது எந்த கட்டத்தில் இருக்கிறது எனத் தெரியவில்லை. இசி இளையராஜா என நினைகிறேன்...

    ReplyDelete
  2. உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

    ReplyDelete

இது... உங்க ஏரியா!