Sunday, July 5, 2015

கால்புழுதி - கனக தூரிகா


சென்ற புத்தக சந்தையில்  சந்தியா பதிப்பகத்தின் ஸ்டாலில் நுழைந்து மேய்ந்து கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது இந்த கால் புழுதி. தலைப்பின் வசீகரம் தான் வாங்க தூண்டியது, இருந்தும் ரெண்டொரு பக்கம் புரட்டுகையில் மனதுக்கு நிறைவாக இருந்தமையால் வாங்கினேன்! விறு விறுவென நகர்த்திச் செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி இருக்கிறார் கனகதூரிகா. ஆணை விட பெண்ணின் பார்வையில் ஒரு அழுத்தமும் அதனுள் விவரிக்க முடியாத நேசமும் பொதிந்திருக்கும் என்பதை தீவிரவாக நம்புகிறவன், ஆனால் நானறிந்தவரை சமகாலத்திய பெண் படைப்பாளிகள் என்று எடுத்துக்கொண்டால் அவர்களின் எழுத்து கடும் மூர்க்கத் தனமாக இருக்கிறது. சில கவிதாயினிகளை படித்து, வாழ்வினை நொந்த காலமெல்லாம் உண்டு. கடுமையான சொற்களின் குவியலாகவே இருக்கும் அவர்களின் கவிதைகளும், கதைகளும், எங்கு தேடி பிடிப்பார்களோ தெரியவில்லை வார்த்தைகளில் அவ்வளவு உக்கிரம் இருக்கும், துவேசம் இருக்கும். இப்படியான பலருக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் தனது எண்ணங்களை எளிதான வார்த்தைகளின் மூலம் மிகவும் நேர்த்தியாக பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறான விதிவிலக்குகளின் வரிசையில் திருமதி. கனக தூரிகாவும் வருகிறார் என்பதே நிம்மதி!



கதைச் சுருக்கம்:

பூப்பெய்துமுன்னே கோமளவேணியை வயதில் மூத்த சென்னப்பாவிற்கு திருமணம் செய்து வைத்து விடுகிறாள் அந்த கொடூரனின் அம்மா. அவனோ இரவில் வேறொருத்தியை அழைத்துக் கொண்டு வந்து திரை மறைவில் சுகம் அனுபவிப்பதும், விடிந்ததும் அவளை அனுப்பி வைத்துவிடுவது தான் அவனின் தினசரி வாடிக்கை, இப்படியிருக்க ஒருநாள் கோமளம் சமைந்து விடுகிறாள், அவனோ வேறொருத்தியை அழைத்து வருவதை நிறுத்தி விட்டு கோமளத்துடன் குடும்பத்தை செலுத்துகிறான். திடிரென ஒருநாள் இவனின் அம்மாவும் இறந்து போக, இவர்கள் இருவருமாக குடும்பம் நகர்கிறது. அடுத்த தெருவிலிருக்கும் ஒரு திருட்டு சாமியாரின் சகவாசம் இவனுக்கு கிட்ட வேலைக்கு போவதை விட்டுவிட்டு சாமியாரே கதியென்று கிடக்க, பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு கீரை அறுத்து விற்கும் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள் கோமளவேணி.

கோமளத்தின் சம்பாத்தியத்தில் கணவனை உட்கார வைத்து சோறு போடுவதில்லாமல், மூன்று பிள்ளைகளையும் பெற்று விடுகிறாள். முதல் குழந்தை பிறக்கும் நிலை, கொடுமையிலும் கொடுமை! இப்படியொரு அவலம் வேறு எவருக்கும் நேரக்கூடாது என்று மனது வேண்டுவதை தவிர்க்க முடியவில்லை! இரண்டாவது பிள்ளை ரங்கன் காதல் தோல்வியில் இறந்து விட, மூன்றாவது பையனான கண்ணனை படிக்க வைத்து, தன்னோட முதலாளி சந்திரண்ணா விடமே சம்பந்தம் பண்ணுகிறாள். அதன் பிறகு கோவை குண்டு வெடிப்பினால் கண்ணனின் பட்டறை பிழைப்பில் மண் விழ, மகனையும், மருமகளையும் வீட்டில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் கீரைக் கூடையை தலையில் சுமக்க துவங்குகிறாள் கோமளவேணி. பேத்தி புவனாவிற்கு வேலை கிடைத்து அவள் குடும்பத்தை நிமிர்த்தி திருமணம் செய்து கொள்வது போல் முடிகிறது.

நான் சொன்னது சுருக்கத்திலும் சுருக்கம் தான்! கதையின் நகர்வு அவ்வளவு அழகாக இருக்கிறது, குண்டு வெடிப்பு வரை கதை நகர்வதில் தொய்வில்லை, குண்டு வெடிப்பை வலிந்து திணித்த உணர்வை தந்தாலும் அதில்லாமலும் இந்த கதை நகர்வை யோசித்து பார்க்க முடியவில்லை. கோவை குண்டு வெடிப்பை மையப்படுத்தி தனியொரு நாவலாகவே எழுதி இருக்கலாம் என்ற உணர்வை தந்தது சிற்சிறு விசயங்களை சொல்லி சென்றபோது. எவ்வளவு பெரிய வலி, அதனால் பலரின் வாழ்வியலின் திசை பிறழ்வு இப்படி சொல்ல ஏராளம் இருந்தும் சொல்லாமல் சென்றது ஏமாற்றத்தை தருகிறது. சில விசயங்களை புறந்தள்ளி விட்டு, ஒட்டு மொத்தமாக "கால் புழுதி" நல்லதொரு உணர்வை தரக் கூடிய நூல் என்று சொல்லலாம்!

ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பார்வையில் இந்தக் கதை சொல்லப் பட்டிருக்கிறது, ஒருவகையில் வாசிப்பதற்கு ஏதுவாக இருந்தாலும் வாசிக்கிற நமக்கு கதையோடு பயணிக்கிற உணர்வை ஏனோ தரவில்லை. இன்னொன்று எல்லா கதாப்பாத்திரங்களும் முடிந்த வரை தங்களை நியாயப்படுத்த பார்க்கின்றன! கோமளவேணி தந்த அழுத்தம் வேறு எந்த கதாப்பாத்திரமும் தரவில்லை, ஒருவேளை கோமளத்தை மனதில் வைத்து தான் மற்றவைகளை உருவாக்கினாரோ என்னவோ?

சட சடவென்று நகர்கிறது, உணர்வுகளிலும் குறைவின்றி சொல்லப் பட்டிருக்கும் இந்நாவலை வாய்ப்பு கிடைக்கையில் வாசித்து விடுங்கள்!

==============================================================



சந்தியா பதிப்பகம்

புதிய எண் 77, 53 வது தெரு


9 வது அவென்யு, அசோக் நகர்


சென்னை 600 083


044.24896979

மொத்த பக்கங்கள்- 120

விலை: Rs. 75/-
===============================================================


படித்துச் சொன்னது 

அரசன் 
karaiseraaalai.com

4 comments:

  1. நல்லதொரு புத்தகம் என்று தெரிகிறது.

    பகிர்வுகு நன்றி அரசன்.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு கிடைக்கையில் வாசியுங்கள் ஸார், அட்டகாசமான நூல்

      Delete
  2. மிக்க நன்றி. கனக தூரிகா

    ReplyDelete
  3. அழகான கிராமத்து கதையம்சம் என்றே தெரிகிறது ... அறிமுகத்திற்கு நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!