Showing posts with label இந்திரா சௌந்தர்ராஜன். Show all posts
Showing posts with label இந்திரா சௌந்தர்ராஜன். Show all posts
Sunday, June 29, 2014
படைப்பாக்கம் : ஆதி வெங்கட்
சமீபத்தில் வந்த எங்களின் 12வது திருமணநாளுக்கு என்னவரிடம் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் சில புத்தகங்களை வாங்கித் தர சொன்னேன். அவரும் உடனேயே ஆன்லைன் புக்கிங் மூலம் புத்தகங்களை தருவித்து பரிசளித்தார். அதில் ஒன்று தான் இந்த மரகதலிங்கம்.
இது ஒரு ஆன்மீக மர்ம நாவல். ”என்னுரையில்” திரு இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள் தனக்கு மிக மிக திருப்தி தந்த நாவல் என்று குறிப்பிடுகிறார். மேலும் ”ஆன்மீகம் சார்ந்த இறை நம்பிக்கை நமக்குள் பலகேள்விகளை உடையது. எனக்குத் தெரிந்து தெளிவான ஆன்மீக எண்ணம் உடையவர்கள் மிகமிகமிகக் குறைவு. குழப்பமான கேள்விகளோடு, அரைகுறை நம்பிக்கையோடு தான் நமது ஆன்மீகம் உள்ளது. சான்றோர் உலகமும் தெளிவாய், பொட்டில் அடித்த மாதிரி பதில் கூறியதில்லை. பல ஆன்மீக விளக்கங்கள் பாதிபுரியும், பாதிபுரியாது. இதுதான் இன்றைய ஆன்மீக நிலை. நான் என் நாவல்களில் இந்த நிலையை மாற்ற முயல்பவன்” என்கிறார்.
”லிங்கங்களில் இருவிதம் உண்டு. ஒன்று சுயம்பு, இன்னொன்று மானுடர்கள், தேவர்கள் உருவாக்கியவை. சுயம்பு என்றால் தானாக தோன்றியவை. மற்றவை உருவாக்கப்பட்டவை. இதில் மரகதலிங்கம் நவரத்ன லிங்கங்களின் தொகுப்பில் வருவது. இதை வழிபட்டால் தீராத நோயும் தீரும்.”
சிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது. புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை தொடர்ந்து ஒரு மண்டல காலம் உச்சி வேளையின் போது அதன்மேல் சூரியஒளிபடும்போது வணங்கியவர்கள் எல்லோருமே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் இன்று அந்த மரகதலிங்கம்……?
இப்படித்தான் இந்த கதை துவங்குகிறது. ஒருகாலத்தில் பசுமையாக இருந்த சிவன்குடி கிராமம், இன்று வறட்சியுடன் மொத்தமே பத்து மனிதர்களுடன் சுடுகாடாக காணப்படுகிறது. அந்த ஊருக்கு பாண்டியராஜன் என்பவன் வெளிநாட்டிலிருந்து வருகிறான். கோயிலுக்கு சென்று புதர் மண்டிக் கிடக்கும் அவலநிலையைக் காண்கிறான். குருக்களை கண்டு தன் தந்தையின் விருப்பமாக இடிபடும் நிலையில் உள்ள சிவன் கோயிலை புனரமைக்கும் எண்ணத்தை வெளியிடுகிறான். ஆனால் குருக்களோ இப்படி வந்தவர்கள் எவரும் உயிரோடு ஊர் திரும்பியதில்லை, என்று லிங்கம் களவு போனதோ, அதோடு ஊரும் சுடுகாடாகி போய்விட்டது. கடவுளின் கோபம் குறையவில்லை. அதனால் உடனேயே இங்கிருந்து கிளம்பி விடு என்கிறார். ஆனால்… பாண்டியராஜனோ பிடிவாதம் பிடிக்க, அவனை ஒரு கருநாகம் தீண்டி விடுகிறது…….
பல வருடங்களுக்கு முன்னால் கஜேந்திர பாண்டியன் என்பவனும், கோட்டை முத்துவும் சிவன்குடி மரகதலிங்கத்தின் மேல் கண் வைத்து பத்து கோடிக்கு வெளிநாட்டில் விற்க ஏற்பாடு செய்து களவாடி விடுகின்றனர். இதற்கிடையே இவர்கள் இருவருக்கும் பண விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு, லிங்கம் பாம்பு புற்றில் தஞ்சமடைகிறது. திருடிய கஜேந்திர பாண்டியன் கருநாகம் தீண்டி லிங்கம் புற்றில் இருக்கும் உண்மையை கோட்டைமுத்துவிடம் சொல்லாமலே இறந்து விடுகிறான். திருடச் சொன்ன கோட்டை முத்துவுக்கு தொழுநோய் வந்து அது அவனது மகனுக்கும் தொடர்கிறது.
மரகதலிங்கம் புற்றில் இருந்து மீண்டதா? பாண்டியராஜன் கோவிலை சீரமைத்தானா? சிவன்குடி சுடுகாடாகி போனதற்கு கடவுளின் கோபம் தான் காரணமா? அல்லது மனிதர்களின் சதி வேலையாக இருக்குமா? போன்ற உங்கள் எல்லாம் கேள்விகளுக்குமான விடை மரகதலிங்கம் புத்தகத்தில்…
இந்த புத்தகத்திலேயே ”உச்சியிலே” என்ற மர்ம நாவலும், ஓசைப்படாமல் ஒரு கொலை என்று ஒரு குறுநாவலும் இருக்கிறது.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த புத்தகத்தை எடுத்தால் முடிக்கும் வரை கீழே வைக்க தோன்றவில்லை.
இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-
திருமகள் நிலையம், சுகான்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்,பழைய எண்: 28 புது எண்: 13, சிவப்பிரகாசம் சாலை, தி.நகர், சென்னை – 600017. தொலைபேசி: 24342899, 24327696.
நான்காம் பதிப்பான டிசம்பர் 2011 படி இதன் விலை – ரூ 70.
மொத்த பக்கங்கள் - 152.
Friday, February 14, 2014
படைப்பாக்கம் : ஆதி வெங்கட்
சமீபத்தில் தான் இந்த புத்தகத்தை வாசித்தேன். தில்லி தமிழ்ச் சங்கத்தின் நூலகத்திலிருந்து என்னவர் எடுத்து வந்திருந்தார். இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் நாவல் என்றால் விறுவிறுப்புக்கும் மர்மங்களுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் அவர் தான் ஆத்மார்த்தமாக எழுதிய நாவல் என இந்த நூலை குறிப்பிடுகிறார். தினமணி கதிரில் 36 வாரங்களுக்கு தொடராகவும், பின்பு தொலைக்காட்சியில் இந்த நாவல் நெடுந்தொடராகவும் வந்துள்ளது.
சரி! கதைக்குள் செல்வோமா! ஆச்சாரமான வைஷ்ணவ குடும்பத்தை சுற்றித் தான் இந்த கதை உள்ளது. அனந்தபத்மநாபன் என்கிற தொழில் அதிபரின் குடும்பத்துக்கு ரங்கநாயகி அறிமுகமாகிறாள். மனைவி காலமாகிவிட்ட நிலையில் மூன்று பெண் குழந்தைகள், மற்றும் அவரது தாயார், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் அனந்தபத்மநாபன் என்கிற ஏ.பி.என். இந்த நிலையில் தான் ரங்கநாயகி ஒரு குறிக்கோளுடன் அந்த குடும்பத்திற்கு அறிமுகமாகிறாள். அது என்ன குறிக்கோள்?
நீண்ட நாட்களாக திருமணம் கூடி வராத ஏ.பி.என் னின் தங்கைக்கு ரங்கநாயகி குடும்பத்தில் நுழைந்த வேளை நிச்சயமாகிறது. அதை தொடர்ந்து பல விபரீதங்களும் வீட்டில் நடைபெறுகிறது. மடிசார் கட்டுடன் கணவர் துபாயில் வேலைபார்ப்பதாக அறிமுகமாகும் ரங்கநாயகி ஒரு தாசியாக வெளியுலகுக்கு வேஷம் போடுகிறாள். ஆனால் அவள் ஒரு நெருப்பு என்பது உடன் பழகுபவர்களுக்கு புரிந்து விடுகிறது.
ரங்கநாயகி என்னும் புரியாத புதிருக்கான விடைகள் கதை முழுதும் தொடர்கிறது. உண்மையில் ரங்கநாயகியின் கணவர் யார்? எதற்காக இந்த வேஷம்? ஏ.பி.என் குடும்பத்தில் ரங்கநாயகி நுழைந்த காரணம் தான் என்ன? ரங்கநாயகியின் கதை என்ன? என்பது போன்ற உங்கள் கேள்விகளுக்கான விடை – புத்தகத்தில்.
இந்த புத்தகம் முழுவதும் லா.ச.ரா, ஜெயகாந்தன், பாலகுமாரன், கண்ணதாசன், தி.ஜானகிராமன்,
அசோகமித்திரன், மாலன், அமரர் கல்கி போன்ற மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களில் உள்ள
தனக்கு பிடித்த வரிகளை ஒவ்வொரு பகுதிக்கு முன்னும் பகிர்ந்து கொண்டுள்ளார் இந்திரா
செளந்தர்ராஜன் அவர்கள். தன்னுடைய நூலில் மற்றவர்களுக்கும் ஒரு இடம் கொடுத்த்து மிகவும்
சிறப்பான விஷயம் அல்லவா! அதுவும் அந்தந்த பகுதிக்கு ஏற்ற வரிகளாக!
விறுவிறுப்புக்கு பஞ்சமேயில்லாத இந்த நாவல் நடுவில் சற்று கொஞ்சம் இழுத்தடிப்பது போன்று தோன்றியது. ரங்கநாயகியின்
குறிக்கோள் என்னன்னு உடனே சொல்லிட மாட்டாரா? என்று தோன்றியது. அதே போல் ரங்கநாயகி எடுத்த முடிவும், செய்த வேள்வியும் எந்த சராசரி பெண்ணாலும் செய்ய முடியாத, ஏற்க முடியாத ஒன்று எனவும் தோன்றியது. சற்றே பிசகியிருந்தாலும்
வாழ்க்கையே சூன்யம் தான்.
இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த சில வரிகள்:-
ஸ்ரீ உன்னை விட மாட்டேன். எதைச் சொல்லி நீ என்னை விலக்க முயல்வாயோ அதுவே இனி
என் ஆடை. நீ கண்டிராத ஒரு பெண்ணை என்னில் காண்பாய். உன் மனத்தடியில் தேங்கிக் கிடக்கும்
அந்த தாபம் மிகுந்த சோரப் படிமங்களை நான் வழித்தெடுப்பேன்.
நடுவில் உன் இந்திர – தந்திரங்களையும் தாங்கிச் செயலாற்றுவேன். இதற்காக யார்
உதவியையும் கோர மாட்டேன். எவர் அனுதாபத்தையும் பெற முயல மாட்டேன். இது சத்தியம். இதை யதார்த்தமாகச் சொல்கிறேன். காலம் எனக்கு நிச்சயம் கருணை செய்யும். செய்தே
தீரும்!
“கடவுள் பக்தி – அதன் மேலே நாம வைக்கிற நம்பிக்கை எல்லாமே அந்த க்ஷணம் பகுத்தறிவுக்காரா
சொல்ற மாதிரி ஒரு பெரிய பலவீனமான விஷயமாத்தான் தோணித்து. மனுஷன் மட்டுமல்ல, தெய்வமும்
சேர்ந்து ஏமாத்திடுத்துன்னு நினைச்சு அழுதப்போ ஏமார்றவா இருக்கறவரை ஏமாத்தறவாளும் இருப்பான்னு
ஒரு குரல் விழுந்தது. யாரோ யார்கிட்டேயோ சொல்லிண்டு போயிண்டிருந்தா. ஆனா, எனக்குச்
சொன்ன மாதிரியே பட்டுது. அந்த நிமிஷம் ஒரு சின்ன மாற்றம் மனசுல…….”
“வாழ்க்கைங்கறது எழுத்தாளர்கள் கற்பனைல உருவாக்கற நாவலோ, இல்லை பூதாகாரப் பொய்
வடிவமான சினிமாவோ இல்லை. அது யாருமே நினைச்சுப் பார்க்காத திசையிலும் மேடு பள்ளங்களிலும்
நம்மை இழுத்துகிட்டுப் போற ஒண்ணு. நாமளும் அது இழுப்புக்கு போய்த்தான் தீரணும். நாவல்லயும்,
சினிமாவுலையும் தான் நாம விரும்புற முடிவுகள் நமக்குக் கிடைக்கும். வாழ்க்கைல அப்படிக்
கிடையாது.”
“வாழ்க்கைங்கறது எழுத்தாளர்கள் கற்பனைல உருவாக்கற நாவலோ, இல்லை பூதாகாரப் பொய்
வடிவமான சினிமாவோ இல்லை. அது யாருமே நினைச்சுப் பார்க்காத திசையிலும் மேடு பள்ளங்களிலும்
நம்மை இழுத்துகிட்டுப் போற ஒண்ணு. நாமளும் அது இழுப்புக்கு போய்த்தான் தீரணும். நாவல்லயும்,
சினிமாவுலையும் தான் நாம விரும்புற முடிவுகள் நமக்குக் கிடைக்கும். வாழ்க்கைல அப்படிக்
கிடையாது.”
இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:- திருவரசு புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 17. ஏப்ரல் 2001 ஆண்டு பதிப்பின் படி 248 பககங்கள் கொண்ட இதன் விலை – ரூ 65.
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட், திருவரங்கம்.
Subscribe to:
Posts (Atom)