Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts
Sunday, October 2, 2016
முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால் கூட பிழை திருத்தப்பட்டு, கச்சிதமாக பத்திரிகைகளில் வெளிவரும். இன்றைய தினத்தில் இணையம் கட்டிக் கொண்ட புண்ணியத்தால் அனைவரும் எழுத்தாளர்களே. அனைவரும் எடிட்டர்களே. இந்த மட்டற்ற ‘அவிழ்த்துவிட்ட’ சுதந்திரத்தின் விளைவு... இணையத்தில் எழுதுபவர்கள் ஒன்று தப்பும் தவறுமாக, எழுத்துப் பிழைகள் மலிய எழுதிக் கொள்(ல்)கிறார்கள், அல்லது நன்றாக தமிழ் எழுதுகிறேன் பேர்வழி என்று ‘பேட்டிக் கண்டேன்’, ‘செய்துக் கொண்டிருந்தேன்’ என்று கண்ட கண்ட இடங்களில் ஒற்றுக்களைப் பெய்து தமிழை வாழ(?) வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான ஒரு சூழ்நிலையில் தான் ‘நல்ல தமிழில் எழுதுவோம்’ என்கிற என்.சொக்கன் எழுதிய நூல் இன்றியமையாததாகிறது.
இவன். அவன், இது, அது என்று அருகில் தொலைவில் உள்ளவற்றைக் குறிப்பிடுவது போல இடையிலுள்ளதை உவன், உது என்று அழைக்கிற அழகிய தமிழ் வார்த்தையை இன்று நாம் இழந்திருக்கிறோம். இது ஈழத் தமிழில் இப்போதும் உண்டு. அதேபோல அங்காடி என்கிற வார்த்தையைத் தொலைத்து மார்க்கெட் என்பதையே தமிழ் வார்த்தையாக்கியாயிற்று இன்று. மலையாளத்தில் அங்காடியை பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.
பள்ளிகளில் தமிழ் இலக்கணம் கற்றுத் தரப்படும்போது அது மதிப்பெண் பெறுதலுக்கான அவசியம் என்பதாலேயே படித்து வைக்கிறோம். இயந்திரத் தனமாக கல்வி நிலையங்களில் சொல்லித் தரப்படும் நம் மொழியை என்.சொக்கன் விளக்குவதுபோல தோளில் கை போட்டுப் பேசுகிற பாணியில் ஆசிரியர்கள் நடத்தியிருந்தால் தமிழ் படிப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கும்.
எடுத்துக்காட்டாக, வினா எழுத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. ‘ஏ’ என்ற வினா எழுத்து மட்டும் சொல்லுக்கு முன்பாகவும் வரும் (உதா : ஏன்?), சொல்லுக்குப் பின்பாகவும் வரும் (உதா : ஆரே?). கொஞ்சம் பொறுங்கள். ஆரே என்பது எப்படிக் கேள்வியாகும்? இந்தச் சந்தேகம் நியாயமானதுதான். காரணம் ஆரே என்ற சொல் இப்போது வினாவாகப் புழக்கத்தில் இல்லை. ஆனால் பழைய பாடல்கள், உரைநடைகளில் நிறையப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரபலமான உதாரணம் வேண்டுமா? ஒரு நல்ல கண்ணதாசன் பாடல் இருக்கிறது. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா? இங்கே ஆடாதாரே என்பதில் ஏ என்ற எழுத்து சொல்லின் பின்பகுதியில் வந்து, கேள்வியாக நிற்கிறது இல்லையா?
இதேபோல பகுதி, விகுதி ஆகியவற்றை விளக்குகிற பகுதியில் பெரிய உணவகங்களில் அமைந்திருக்கும் பலப்பல பகுதிகளை உதாரணம் காட்டி விளக்கியது மிகவே ரசிக்க வைக்கிறது. போலவே மனதிலும் எளிதில் பதிந்து விடுகிறது.
எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் ஆகியவை பற்றிய வகுப்பில் நான் சற்றே கண்ணயர்ந்துவிட, தமிழய்யா என்னைப் பார்த்து, “நீ எழுவாய். இங்கிருப்பதால் பயனிலை, நீ வெளியேறுவதே செயப்படு பொருள்” என்று தலையில் தட்டி வெளியேற்றினார். புத்தகத்தில் கூறியிருப்பது போல காரையும், இன்ஜினையும் உதாரணம் காட்டி விளக்கி பாடம் நடத்தியிருந்தாரானால் அன்று அப்படியொரு துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டிராது. அப்போது இப்படியொரு புத்தகம் எழுத என்.சொக்கரும், படிக்க இன்றைய நானும் இல்லாமல் போய் விட்டோமே.. என்னத்தைச் சொல்ல..?
இப்படி புத்தகம் முழுவதிலும் நடைமுறை வாழ்வில் கேட்கிற, பார்க்கிற விஷயங்களைக் கொண்டு எளிமையாக தமிழ் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. சினிமா வசனங்களை உபயோகப்படுத்தி அளபெடையை விவரித்துள்ளது போல எளிமையான விஷயங்கள் இருந்தாலும், ஆங்காங்கே இலக்கியங்களிலிருந்தும் உதாரணங்கள் காட்டப்பட்டிருப்பது சிறப்பான ஒன்று. இலக்கியமும் மெல்ல நம்மிடம் புகுத்தப்படுகிறது.
முதல் 134 பக்கங்கள் இப்படி எளிமையான இலக்கணப் பாடங்களாக அமைந்துள்ளது. அடுத்த 120 பக்கங்களில் இணையத்தில் தான் எழுதிய குறுங்கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். இந்த பின்பகுதிக் கட்டுரைகள் தமிழ் வார்த்தைகள் பற்றிய சுவையான அலசலாக அமைந்துள்ளன. ஒவ்வொரு குறுங்கட்டுரையும் ஏதோ கதை படிப்பது போன்ற சுவாரஸ்யத்துடன் ஒரு புதிய விஷயத்தை உங்கள் மனதில் ஏற்ற முடிகிறது என்பது ஒரு கூடுதல் சிறப்பு.
போகிற போக்கில் படிப்பது போல் இந்தப் புத்தகத்தைப் படிக்காமல், ஒவ்வொரு அத்தியாயத்தையும் மனதில் உள்வாங்கி படித்தாரென்றால் அந்த நபர் தமிழைத் தப்பும் தவறுமாக எழுத மாட்டாரென்பது நிச்சயமான ஒன்று. தினம் ஒரு அத்தியாயம் என்ற ரீதியில் படித்தாலும் நல்லதே. எது எப்படியாயினும் நம் மொழியைச் சிறப்புற, பிழையின்றி எழுத வேண்டும் என்பது உங்கள் விருப்பமெனில் நீங்கள் தவறவிடக் கூடாத ஒன்று இந்தப் புத்தகம்.
நூல் பெயர் ; நல்ல தமிழில் எழுதுவோம்
நூலாசிரியர் : என்.சொக்கன்
பக்கங்கள் : 256
விலை : ரூ.200/-
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்,
177.103, முதல் தளம், அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு,
சென்னை - 600 014.
தொடர்பெண் : 91-44-4200-9603
Wednesday, July 2, 2014
Posted by
சீனு
at
12:51 PM
Labels:
இலக்கியம்,
கள்ளர் சமுதாயம்,
குற்றப்பரம்பரை,
வேலராம மூர்த்தி
23
comments
படைப்பாக்கம் : சீனு
அரசன் அறம் புத்தகத்தை என்னிடம் கொடுக்கும் போதேமற்றுமொரு இலவச இணைப்பாக 'வேலராம மூர்த்தியின் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பையும் கொடுத்து 'அறம் படிக்கையோ இல்லையோ இத மொதல்ல படி' என்று கூறியிருந்தார். வேலராம மூர்த்தியின் கதைகளை முதலில் வாசிக்கத் தொடங்கினேன். அப்படி ஒன்றும் பிரமாதமாய் இல்லை. அல்லது அந்த எழுத்து எனக்குப் புரியவில்லை. சரி அப்புறம் வாசித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ஒரு ஓரமாய் வைத்துவிட்டேன். புத்தகம் கொடுத்ததில் இருந்து சிலநாட்களுக்கு அரசன் 'யோவ் படிச்சியா படிச்சியா' கேட்டுக் கொண்டே இருந்தார். 'வாசிக்கப் பொறுமையில்லை' என்றேன். 'பரவாயில்ல, பொறுமையா படி ஒன்னும் அவசரம் இல்ல' என்றார். பதிலுக்கு புன்னகையைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை.
சிறிது நாட்கள் கழித்து 'தலைவரே குற்றப்பரம்பரைன்னு ஒரு நாவல் நம்மாளு வேலராம மூர்த்தி எழுதினது. பட்டாசா இருக்கும் படி' என்று கொடுத்தார். திணித்தார் என்பது கூட ஒருவகையில் சரிதான். 'தலைவரே மொத கொடுத்த புக்கே இன்னும் முடிக்கல அதுக்குள்ள இதுவா, வேணாம்யா நமக்கு செட் ஆகாது' என்றேன். 'இல்ல தலைவரே நீ படிச்சே ஆகனும். தவறவிடக் கூடாத புத்தகம்' என்றார்.
'அரவான் படம் கூடகுற்றபரம்பரை நாவலின் சில பகுதிகள் தான். அட மதயானைக் கூட்டம் படத்துல வில்லனா நடிச்சவர் கூட இவர் தான்' என்று என்னவெல்லாமோ கூறினார். மீண்டும் மறுத்தேன். 'சரி நீ படிக்க வேணாம். ஆனா புத்தகம் உன்கிட்டயே இருக்கட்டும் அப்ப தான் நீ என்னிகாது படிப்ப' என்றபடி திணித்தார். படிக்கக் கூடாது என்றில்லை. படிக்க வேண்டும் என்று வாங்கிய புத்தகங்களே க்யூவில் நிற்க இதையும் வாங்கி என்ன பண்ணவது என்ற தயக்கம்தான். போதாக்குறைக்கு இது இலக்கிய வகையறாப் புத்தகம். நாலு வெங்கயாத்தை கண்ணில் பிழியாமல் விடமாட்டார்கள். இலக்கியம் என்ற பெயரில் வந்த ரா.கா சாலையின் தாக்கமே இன்னும் என்னில் இருந்து விலகவில்லை அதற்குள் இதுவேறா. புத்தகத்தின் பக்கங்களைப் பார்த்தேன். மிகக் குறைவு தான் வெறும் நானூறு. வேறுவழியில்லை வாங்கிக் கொண்டேன். வேலராம மூர்த்தியின் கதைகள் புத்தகத்தின் அருகில் குற்றபரம்பரைக்கும் ஒரு இடம் இருந்தது.
வாரங்கள் ஓடின. ஒவ்வொரு வாரமும் அரசன் தவறாமல் 'தலைவரே படிச்சியா' என்று கேட்பதும் நான் 'ஹிஹிஹி' என்று கூறுவதுமே வழக்கமாய் இருந்தது. சமீபகாலங்களில் கேட்பதை நிறுத்தியிருந்தார். அல்லது 'இவன்ட்ட கேட்டு பிரயோசனம் இல்ல, கழுத படிக்கும் போது படிக்கட்டும்' என்று விட்டுவிட்டார். அவ்வபோது கண்ணில் படும். எடுத்துப்பார்ப்பேன். மீண்டும் எடுத்த இடத்திலேயே பத்திரமாய் வைத்து விடுவேன்.
சமீபத்தில் கொடைக்கானல் சென்றபோது எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துக் கொண்டேன். எடுத்துச்சென்றது வீண் போகவில்லை. கொடைக்கானல் மலையேறும் போது மெல்ல குற்றபரம்பரையினுள் காலடி எடுத்துவைத்தேன். இது போன்ற இலக்கியப் புத்தகங்கள் படிக்கும் சில முன் தயாரிப்புகள் அவசியம். அதில் ஒன்று எவ்வளவு கொடூரமான சம்பவங்கள் வந்தாலும் மனம் தளரக்கூடாது, தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற மன உறுதி தான். எளிமையாய்ச் சொல்வதென்றால் இந்தப் புத்தகங்களை பாலா படங்களோடு ஒப்பிடலாம். ஆங்காங்கு சிரிப்பு நையாண்டி சந்தோசம் போன்ற விஷயங்கள் வந்தாலும் கதை நெடுக ஒரு மெல்லிய சோகமும் நம்மோடு பயணிக்கும். (கிட்டத்தட்ட நம் வாழ்க்கையே அப்படித்தான் இருக்கிறது என்பது வேறு விஷயம்). இலக்கிய நாவல்களில் எடுத்தாளப்படும் எளிய மனிதர்களின் வாழ்வியல் அப்படித்தான் இருக்கும். அதைத் தவிர்க்க முடியாது. தவிர்க்க நினைத்தால் இலக்கியம் பிறக்காது என்பது இலக்கிய விமர்சகர்களின் கருத்து. சரி அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். இதற்குமேலும் குற்றப்பரம்பரையினுள் நுழையவில்லை எனில் நீங்கள் தம் அடிக்கப் போய் விடக்கூடும்.
கள்ளர் இன மக்களின் வாழ்வை, அவர்களின் சமுதாய நிலைபாட்டை, அந்த சமுதாயத்தோடு இணக்கமாக வாழ்ந்தவர்கள் எதிர்த்து நின்றவர்கள் என வெவ்வேறு தளங்களில் வாழும் மக்களின் வாழ்வியலை குற்றபரம்பரை என்னும் நாவல் மூலமாக பதிவு செய்ய முற்பட்டுள்ளார் வேல ராமமூர்த்தி. அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா என்றால்? தொடர்ந்து வாசியுங்கள்!
யாரும் கண்டறிய முடியாத காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் கள்ளர் கூட்டத்தை சுற்றி வளைத்துப் பிடிக்க முயலுகிறது சர்கார். சில பல உயிர்களைப் பலிகொடுத்து சர்காரின் தாக்குதலில் இருந்து தப்பி ஓடுகிறது கள்ளர் கூட்டம். தப்பியோட வழியில்லாமல் ஆர்பரித்து ஓடும் சம்பங்கி நதியில் விழுந்து எங்கோ கண்காணாத ஓரிடத்தில் குத்துயிரும் குலையுயிருமாக கரை ஒதுங்குகிறார்கள் கள்ளர் இன மக்கள். இவர்களை பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் வில்லுத்துரை காப்பாற்றுகிறான் என்றபடி ஆரம்பமாகிறது கதை. இதுவரை கொஞ்சம் மெதுவாகப் பயணிக்கும் கதை இங்கிருந்து சுவாரசியத்தின் அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
கொம்பூதி என்னும் மலைக்கிராமத்தில் தங்கள் மறுவாழ்வைத் தொடங்குகிறார்கள் கள்ளர் இன மக்கள். இவர்களை தலைவனாக நின்று வழி நடத்துகிறார் மிஸ்டர் வேயன்னா. கொம்பூதி கிராமத்தின் அருகில் இருக்கும் பெரும்பச்சேரி மக்கள் அனைவரும் பெருநாழி கிராமத்து மக்களுக்கு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் தலித் மக்கள். கிட்டத்தட்ட கள்ளர் இன மக்களும் தலித்துக்களாகவே பார்க்கப்படுகின்றனர். இருந்தாலும் கள்ளர்கள் அனைவரும் பார்ப்பதற்கும் செயலில் இறங்குவதிலும் முரடர்களாக இருப்பதால் அவர்களிடம் யாரும் நெருங்கிப் பழகுவதில்லை. அவர்கள் விசயத்தில் தலையிடுவதும் இல்லை. ஆனால் பெரும்பச்சேரி மக்களை கிட்டத்தட்ட அடிமைகளைப் போலவே நடத்துகின்றனர் பெருநாழி மக்கள்.
சுற்றுவட்டாரத்தில் எங்குமே இல்லாத நல்ல தண்ணீர்க் கிணறு பெருநாழி கிராமத்தில் மட்டுமே இருக்கிறது. இங்கு தலித் மக்கள் நீர் இறைக்கத் தடை. வேண்டுமானால் பெருநாழி மக்கள் ஆளுகொரு வாளி இறைத்து பெரும்பச்சேரி மக்களின் பாத்திரத்தில் ஊற்றலாம். இப்படி ஒவ்வொரு வாளியாக நிறைவதற்கு எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் ஆகலாம். இந்தக் கிணற்றில் இருந்துதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.
பத்துநாள் கைக்குழந்தை வைத்திருக்கும் பச்ச உடம்புகாரி ராக்கு ஒரு இக்கட்டான சூழலில் தன்னுடைய வாளிபோட்டு பெருநாழிக் கிணற்றில் இருந்து நீர்ந இறைத்து விடுகிறாள். இதை பார்த்த பெருநாழி கிராம மக்கள் ராக்கின் கணவன் துருவனுக்கு மிகக் கொடூரமான தண்டனையை வழங்குகிறார்கள். அதாவது துருவனின் உடல் முழுக்க சர்க்கரைப் பாகை ஊற்றி அவனை எறும்புகள் நிறைந்திருக்கும் மரத்தில் கட்டி வைத்து விடுகிறார்கள்.
பெருநாழிக்கு வேலைக்குப் போன புருஷன் வீட்டிற்கு வராததை நினைத்து பதறும் ராக்கு கொம்பூதி வேயன்னாவிடம் சென்று முறையிடுருகிறாள். விஷயமறிந்த வேயன்னா பெருநாழி நோக்கிக் கிளம்புகிறார். அங்கே இரண்டு நாட்களாக எறும்புகளுக்கு மத்தியில் கட்டிவைக்கப்பட்டு துன்புறுத்தபட்ட துருவன் சாகக்கிடக்கிறான். இதைப் பார்த்து கொதித்தெழும் வேயன்னா இன்றிலிருந்து பெரும்பச்சேரி மக்கள் பெருநாழி கிணத்தில் தன் வாளி போட்டுத்தான் நீர் இரைப்பார்கள் உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள் என்று சவால் விட்டுச் செல்கிறார். அடுத்தநாளே வேயன்னா தலைமையில் பெரும்பச்சேரி கிராமமே நீர் இரைக்க வருகிறது. இந்நேரத்தில் பெருநாழி வேறு ஒரு கணக்கு போடுகிறது.
ஆவலோடு நீர் இரைக்க வந்த பெரும்பச்சேரி மக்களுக்கு மிகபெரிய அதிர்ச்சி காத்துள்ளது. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் தன் கிணற்றில் நீர் எடுப்பதா, இதைவிட பெரிய அசிங்கம் வேறு இல்லை என்று பொருமி, நல்ல தண்ணீர்க் கிணறு முழுக்க மனித மலத்தால் நிரப்புகிறது பெருநாழி. இதைப் பார்த்த வேயன்னாவின் கோபம் இன்னும் பல மடங்கு அதிகரிக்க, தனது கூட்டத்தோடு சேர்ந்து ஒட்டு மொத்த பெருநாழியையும் அடித்து நாசமாக்குறார்.
வேயன்னாவை அடக்க ஒரே வழி ஆங்கிலேய சர்க்காரை தன் ஊரில் போலீஸ் கச்சேரி தொடங்க அனுமதியளிப்பது தான் என்று பெருநாழி முடிவு செய்கிறது. வேயன்னாவைப் பற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருந்த போலீஸ் கச்சேரி வேயன்னா கையில் விலங்கு மாட்டியே தீருவது என்ற சூளுரையுடன் பெருநாழியில் காலடி எடுத்துவைக்கிறது. அப்படி நுழைந்த முதல் போலீஸ் அதிகாரியை வேயன்னாவின் கூட்டம் ஊரைவிட்டே துரத்துகிறது. இரண்டாவது உயரதிகாரியை உலகத்தை விட்டே துரத்துகிறது. மூன்றாவதாக சேது என்னும் இளைஞன் வருகிறான். பல வருடங்களுக்கு முன் சர்கார் துரத்திய போது காட்டுபகுதியில் இருந்து வேயன்னா மற்றும் அவர் கூட்டத்தார் தப்பிப் பிழைக்கும் போது தனது ஒரு மகனை தொலைத்திருந்தார். அந்த மகன் தான் தற்போது தன் கூட்டத்தை வேரறுக்க போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கும் சேது.
இந்தவிசயம் சேதுவிற்க்கும் தெரியும். சேதுவின் வளர்ப்புப் பெற்றோர்கள் ஆங்கிலேயர்கள். கள்ளர்களை திருத்தி நல்வழிபடுத்த வேண்டும் என்ற அக்கறையுள்ளவர் சேதுவின் வளர்ப்புத் தந்தை. அதற்காகவே சேதுவை போலீஸ் அதிகாரியாக மாற்றியிருப்பவர். இந்நேரத்தில் சேது பதவி ஏற்றதும் கள்ளர் கூட்டம் திருந்தியதா இல்லை வேரோடு அழிந்ததா? வேயன்னா என்ன ஆனார்? என்பதே மீதிக் கதை. இக்கதையில் வைரப் புதையல் தேடும் நாகமுனி, அதற்காக அவன் பலி கொடுக்க வேண்டும் என்றே வளர்க்கும் கன்னி கழியா அழகுப் பதுமை வஜ்ராயினி. அந்த வஜ்ராயினி மேல் மையல் கொள்ளும் வேயன்னாவின் புதல்வன் வில்லாயுதம். இந்தக் காதலை அறிந்த நாகமுனி வில்லாயுதத்தை சொக்கபனையினுள் வைத்து கொளுத்தி பலியாக்கும் கொடூர சம்பவம் என்று மற்றொரு கிளைக்கதையும் உண்டு.
குற்றப்பரம்பரை நாவலானது கள்ளர்களை மையமாக வைத்து பல கிளைக் கதைகளுடன் பின்னப்பட்ட சற்றே சிக்கலான கதை. இருந்தும் கதையின் மையக் கருவை மட்டும் கூற முயன்றுள்ளேன். மையக்கருவே இவ்வளவு பெரிதா என நினைக்க வேண்டும். இது நாவலின் மையக்கருவின் ஒரு சதவீதத்தின் ஒரு சதவீதம் அவ்வளவே.
நாவலை வாசிக்கத் தொடங்கும் போது முதல் ஐம்பது பக்கங்கள் மிக மெதுவாக சென்றபோதிலும் அதற்கு அடுத்த பக்கங்கள் மிக மிக விறுவிறுப்பாக நகர்ந்தன. நாவலின் கடைசி இருநூறு பக்கங்களை அலுவலகம் முடித்து வந்த ஒரு நள்ளிரவில் ஆரம்பித்து அடுத்தநாள் அதிகாலையில் முழுவதுமாக வாசித்து முடித்த பின்பே தூங்கச் சென்றேன். அத்தனை விறுவிறுப்பான நாவல்.
ஒருவேளை பிடிவாதமாக குற்றபரம்பரை நாவலை நான் வாங்காது போயிருந்தாலோ இல்லை அரசன் பிடிவாதமாக இந்த நாவலை என்னிடம் கொடுக்காமல் இருந்தாலோ தமிழின் மிக முக்கியமான நாவலை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பை இழந்திருப்பேன். நல்லவேளை அப்படியெல்லாம் நடந்து விடவில்லை. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் தவற விடக்கூடாத நாவலில் ஒன்று குற்றபப்ரம்பரை. கதை கிட்டத்தட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடப்பது போல் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் பார்க்காத ஒரு நூற்றாண்டை, நாம் பார்க்காத ஒரு சமுதாயத்தை கற்பனை செய்து பார்ப்பதென்பதே கொஞ்சம் சுவாரசியம் தரக்கூடிய சவால் தான். அந்த சுவாரசியத்திற்காகவே இந்த நாவலை நிச்சயம் படிக்கலாம்.
ஜூனியர் விகடனில் கூட்டாஞ்சோறு என்ற பெயரில் தொடர்கதையாக வந்து பின் குற்றபரம்பரை என்ற நாவல் வடிவம் பெற்றுள்ளது.
பதிப்பகம் காவ்யா
விலை 200
Subscribe to:
Posts (Atom)


