Showing posts with label கல்லுக்குள் ஈரம். Show all posts
Showing posts with label கல்லுக்குள் ஈரம். Show all posts

Wednesday, June 11, 2014

கல்லுக்குள் ஈரம் --ர.சு.நல்லபெருமாள்

படைப்பாக்கம் : கீதா சாம்பசிவம்

                    திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திரு நல்லபெருமாளின் நாவல்கள் அநேகமாய்ப் படித்திருக்கிறேன்.  இவற்றிலே 'போராட்டங்கள்'  நாவலும், 'கல்லுக்குள் ஈரம்' நாவலும் மிகவும் பெயர் பெற்றவை.  போராட்டங்கள் கம்யூனிஸ்ட்கள் குறித்த ஒரு அலசல் என்றால் கல்லுக்குள் ஈரம் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் குறித்த ஒரு கதை.  இது அறுபதுகளில் கல்கி வெள்ளிவிழா நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருந்தது.  முதல் பரிசுக்கே தகுதி வாய்ந்தது தான் என்றாலும் இரண்டாம் பரிசு தான் கொடுத்திருந்தார்கள்.  மூன்றாம் பரிசு மணக்கோலம் என்னும் பிவிஆர் நாவலுக்குக் கிடைத்திருந்தது.  முதல் பரிசு உமாசந்திரனின் முள்ளும் மலரும் கதைக்குக் கிடைத்திருந்தது.  வேடிக்கை என்னவெனில் மூன்றிலுமே கதாநாயகி தான் தியாகங்கள் செய்திருப்பாள்.

                     இந்த நாவல் சுதந்திரப்போராட்ட வீரனான ரங்கமணி என்னும் இளைஞனைக் குறித்தது. அவன் தந்தையை வெள்ளையர்கள் ரங்கமணியின் கண்ணெதிரேயே அடித்துக் கொல்கின்றனர்.  அதைப்பார்க்கும் ரங்கமணியின் இதயம் கல்லாக மாறி விடுகிறது.  வ.உ.சி.யின் நெருங்கிய நண்பராக இருந்த ரங்கமணியின் தந்தை கொல்லப்பட்டதும் பழிவாங்க வேண்டும் என்னும் வெறி அவனிடம் அதிகமாக ஆகிறது.  சிறுவனான அவன் மனதை மாற்ற குடும்ப நண்பர் தீக்ஷிதர் காந்தியிடம் அழைத்துச் செல்கிறார்.  ஆனாலும் ரங்கமணி மனம் மாறவில்லை.  காந்தி அவனுக்குப் பரிசாகக் கொடுத்த ஏசுபிரான் சிலுவையில் இருக்கும் விக்ரஹத்தை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறான். சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரங்கமணி விடுதலைப்போரில் தீவிரமாகக் கலந்து கொள்ள வேண்டி படிப்பை விட்டுவிட்டு தீவிரவாதக் கும்பலில் சேர்கிறான்.  ரங்கமணியின் கல்லான இதயத்தில் எப்படி ஈரம் கசிந்தது என்பதே கதை. 

                        ஏற்கெனவே தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்தக் கும்பலின் சதிவேலைகள் ஆறுதலைத் தந்தன.  ஆனால் யார் தலைமையில் அவன் இந்தக் கும்பலின் உறுப்பினராக ஆனானோ அந்தத் தலைவரின் மகள் ஒரு அஹிம்சாவாதி.  திரிவேணி என்னும் பெயருள்ள அந்தப் பெண் சத்தியாகிரகியும் கூட. அவள் பேச்சுக்குத் திருநெல்வேலியே கட்டுப்படும். போலீஸாரைக் கூடத் தன் அஹிம்சாப் பேச்சால் தன் வயப்படுத்தி இருந்த திரிவேணி, ரங்கமணியிடம் மட்டும் தோற்றுத் தான் போனாள்.  அவனுள் ஏதோ இனம் புரியாத சோகமும், தீவிரவாதப் பற்றையும் கண்டு அவனை காந்தியைச் சந்திக்கும்படி வற்புறுத்துகிறாள்.  ஆனால் ரங்கமணிக்கோ தன் மேலேயே சந்தேகம்.  திரிவேணியின் அஹிம்சாவாதம் எங்கே தன்னையும் மாற்றிவிடுமோ எனக் கலங்குகிறான்.  மெல்ல மெல்ல திரிவேணி அவனை ஈர்க்கிறாள். ஆனால் ரங்கமணியின் மனமோ!!!  ஏற்கெனவே காதலில் ஈடுபட்டு அதில் தோல்வி கண்டு, பிரிவு ஏற்பட்டு மீண்டும் காதலியைக் காணமாட்டோமா என ஏங்கும் ரங்கமணி.  ஆனால் இப்போதோ காதலியை நினைக்கையிலேயே திரிவேணியும் கூடவே வருகிறாள். ஏற்கெனவே அஹிம்சாவாதத்திலும், தீவிரவாதத்திலும் சிக்கிக் கொண்டு தவிக்கும் ரங்கமணிக்கு இந்தப் போராட்டமும் புதுமையாக இருக்கிறது.  தன் காதலியை விட திரிவேணி தன் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டதை உணர்கிறான்.

                 கதையில் வரும் கமலவாசகியின் திமிரும், ஆங்காரமும், பழி வாங்கும் உணர்ச்சியும் திகைக்க வைத்தாலும் போகப் போகக் காரணம் புரிகிறது. ஆனாலும் அவள் பழிவாங்கும் உணர்வு கடைசி வரை அடங்கவே இல்லை.. ஒரு உயிர் போயும் அதிலும் மகிழ்ச்சியைக் காட்டுபவள் பின்னர் மனம் மாறுகிறாள். இந்தக் கமலவாசகி யார் என்பதைத் தெரிந்தால் நமக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது.  இவளால் ரங்கமணியின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் அவனைத் தீவிரவாதத்தில் இருந்து சிறிதும் விலக்கவில்லை. திரிவேணியின் தியாகமே அவனை மனம் மாற வைக்கிறது.   திரிவேணியின் அஹிம்சாவாதத்தில் உள்ளூர மனம் ஈர்க்கப்பட்ட ரங்கமணி தீவிரவாதத்துக்கும், அஹிம்சாவாதத்துக்கும் இடையில் போராடுகிறான்.  

                  காந்தியைச் சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவ விடுகிறான்.  கடைசியில் மனம்மாறி காந்தியைச் சந்திக்கச் சென்றபோது அதுவே கடைசி சந்திப்பாக ஆகிறது.  ரங்கமணியின் கண்ணெதிரே காந்தி சுடப்படுகிறார். காந்தி சிறுவயதில் தனக்கு அளித்த சிலுவை விக்ரஹத்தைக் கையில் வைத்திருந்த ரங்கமணி காந்தியைத் தாங்கும்போது அந்தச் சிலுவையும் ரத்தத்தால் குளிப்பாட்டப்படுகிறது.  கல்லான ரங்கமணியின் இதயமும் நெகிழ்ந்து மெல்ல மெல்ல ஈரத்தைக் கசிய விடுகிறது. 

                  கிட்டத்தட்ட 720 பக்கங்கள்! கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வராது.  ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மீண்டும் படிக்கையில் கூட ஒவ்வொரு சமயமும் புதுப்புது உணர்வுகள்.  சுதந்திரப் போராட்ட வரலாற்றை வரலாற்றில் இடம் பெற்ற மனிதர்களும் நடமாடிய காலத்தோடு பின்னிப் பிணைந்து எழுதுவது கடினம்.  ர.சு.நல்லபெருமாள் அதைச் சாதித்திருக்கிறார்.  சுதந்திரப் போராட்டம் குறித்து அதிகம் அறியாத இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். முதல் பதிப்பு கதை வெளிவந்த சில ஆண்டுகளீலேயே 1969 ஆம் ஆண்டே வந்திருக்கிறது.  என்னிடம் இருப்பது ஐந்தாம் பதிப்பு 2005 ஆம் ஆண்டு வந்தது.

வானதி பதிப்பகம் வெளியிடு.
விலை 230ரூபாய் (2005-ஆம் ஆண்டில்)